அன்று இருட்டிய பிறகு பிலிப் யவன சேனாதிபதியை வரவழைத்துக் கேட்டான். “வீரசேனன் வந்து விட்டானா?”
“இல்லை சத்ரப். இது வரை
அவன் வரவில்லை. அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவனை எதிரிகள்
சிறைப்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது.”
“அவனுடன்
காட்டிற்குச் சிறிது தூரம் வரையாவது சென்ற வீரர்கள் என்ன சொல்கிறார்கள்?”
“வீரசேனன்
அவர்களுக்குச் சரியான பதிலடி தர மிக வேகமாக அவர்கள் பின்னால் சென்றதாகச் சொல்கிறார்கள். ஆனால் நம்
படைத்தலைவன் வீரசேனன் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டவன் என்பதால் அவர்களுடன்
சேர்ந்து கொள்ளும் பொருட்டே அப்படிப் போயிருக்க வேண்டும் என்று நம்புகிறான். அதை நம்
யவன வீரர்களிடம் உறுதியாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறான்.”
“நீ என்ன
நினைக்கிறாய்?”
”அவன் சதிகாரனாக
இருப்பான் என்று எனக்குத் தோன்றவில்லை சத்ரப். இது வரை
அப்படியான அறிகுறிகள் எதுவும் அவனிடம் தெரியவில்லை. ஆனால் மாளவ
மக்களும் புரட்சியில் ஈடுபடுவதற்கான அறிகுறிகள் ஆரம்பத்தில் நமக்குத் தெரியவில்லை. ஆனால் அது
இப்போது நடந்திருப்பதால் யாரைப் பற்றியும் நிச்சயமாகச் சொல்ல முடியாமலிருக்கிறது”
பிலிப்புக்கு அவன் சொல்வதும் சரியென்று
தோன்றியது. அவன் சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “அவன் சகோதரன்
என்ன சொல்கிறான்?”
“அவன் அவனுடைய
அண்ணனை மீட்டு வருவதற்கு சிறு படையுடன் காட்டுக்குப் போக அனுமதி கேட்டான். நான் அனுமதி
தரவில்லை. தனியாகவாவது போகிறேன் என்று கேட்டான். “கொஞ்சம்
பொறு. எதையும் யோசித்துச் செய்வோம்” என்று சொல்லியிருக்கிறேன். சூரசேனன்
மட்டுமல்லாமல் வீரசேனனின் படைவீரர்களும் தங்கள் தலைவன் குறித்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்”
“வீரசேனனுக்கு
என்ன ஆகியிருக்கும் என்று நீ நினைக்கிறாய்?”
“அவன் சிறைப்பட்டிருக்கலாம். அல்லது
பலத்த காயப்பட்டிருக்கலாம். அல்லது நம் படைத்தலைவன் சந்தேகப்படுவது போல் அவர்களுடன் சேர்ந்திருக்கலாம்”
பிலிப் சேனாதிபதியைக் கூர்ந்து பார்த்தபடி
கேட்டான். “ஏன் அவன் இறந்திருக்கலாம் என்று நீ நினைக்கவில்லை?”
”இது வரை
எதிரிகள் நம் யவன வீரர்களைக் கொன்றிருக்கிறார்களேயொழிய மற்றவர்களைத் திட்டமிட்டுக்
கொல்லும் வேலையில் ஈடுபட்டதில்லை. மாறாக அவர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும் வேலையைத்
தான் செய்திருக்கிறார்கள். அதனால் வீரசேனனை அவர்கள் கொன்றிருக்கும் வாய்ப்பு மிகவும்
குறைவு.”
சேனாதிபதி சொன்னதை பிலிப் யோசித்துப்
பார்த்தான். எதிரிகள் செயல்படும் விதம் சேனாதிபதி சொன்னது போல் தான் இருக்கிறது. மற்ற பகுதிகளில்
என்ன நடந்திருக்குமோ என்ற கவலை அவன் மனதில் மறுபடி தலையெடுத்தது. அவன் இந்த
நிகழ்வுகளைச் சரியாகக் கையாளவில்லை என்று அலெக்ஸாண்டர் எண்ணி விடுவானோ என்ற அச்சமும்
அதனுடன் சேர்ந்து கொண்டது.
சேனாதிபதி மெல்லச் சொன்னான். “சத்ரப்
நம் வீரர்கள் மத்தியில் பயம் எழ ஆரம்பித்திருக்கிறது. அவர்களைத்
தனிமைப்படுத்தித் தாக்குகிறார்கள் என்று தோன்ற ஆரம்பித்திருக்கிறது. இரண்டு
வீரர்கள் சற்று முன் என்னிடம் நேரடியாகவே வந்து ”மற்ற யவன வீர்ர்கள் அலெக்ஸாண்டருடன்
போகும் போதே நாங்கள் போகாமல் இருந்தது சதிகாரர்களால் கொல்லப்படுவதற்கல்ல, சாவது தான்
எங்கள் விதி என்றால் நாங்கள் தாயகம் போய் சாக விரும்புகிறோம்” என்று சொன்னார்கள். நான்
அவர்களை இப்போதைக்குத் தைரியப்படுத்தி இருக்கிறேன். ஆனால் இப்படி எத்தனை நாட்கள் சமாளிக்க
முடியும் என்று தெரியவில்லை சத்ரப். பிரச்சினை
முற்றுவதற்கு முன் நாம் ஏதாவது செய்தாக வேண்டும். இல்லா விட்டால்
...”
சேனாதிபதி நிறுத்திக் கொண்டான். பிலிப்
அவன் கருத்தைத் தொடர்ந்து சொல்ல வற்புறுத்தவில்லை. இருக்கிற
பிரச்சினைகளே போதும். இவன் புதியதாக ஏதாவது சொல்லிப் பயத்தைக் கூட்டி விடுவதை
பிலிப் விரும்பவில்லை. யவனப்படைத்தலைவன் அவனிடம் சொன்னதை யவன வீரர்கள் சேனாதிபதியிடமும்
சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதிரடியாக
எதாவது செய்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டா விட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும்.
அது மட்டுமல்ல.
யவன வீரர்களுக்கு நம்பிக்கையூட்டுவதுடன் சதி செய்ய நினைப்பவர்களுக்குக் கடுமையான
பயத்தையும் ஏற்படுத்தி விட வேண்டும். அதை இந்த சமயத்திலேயே செய்வது தான்
நிலைமையை மேலும் மோசமாக்காமல் தவிர்க்கும் என்று பிலிப் புரிந்து கொண்டான். அவன் எடுக்கப் போகும் முடிவு அலெக்ஸாண்டரின் உறுதியும், ஆளுமையும் பிலிப்புக்கும்
உள்ளது என்று எல்லோருக்கும் தெரியப்படுத்துவதாக இருக்க வேண்டும்....
பிலிப் அமைதியாகவும்,
உறுதியாகவும் சொன்னான். ”வீரசேனன் விஷயத்திலேயே எல்லாமே நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது
என்பதை நாம் நம்மவர்களுக்கும், மற்றவர்களுக்கும் புரிய வைப்போம். நீ சூரசேனன் மீது
தனிக்கவனம் வைக்க வேண்டும். அவன் சகோதரனைக் கண்டுபிடித்து கூட்டிவரப் போகிறேன் என்றோ,
சகோதரனைக் காப்பாற்றி வரப் போகிறேன் என்றோ சொல்லித் தப்பித்து விடப் போகிறான். அப்படி
அவனையும் போக விட்டால் அது நம் பலவீனத்தைப் பறைசாற்றுவது போலாகி விடும். எச்சரிக்கையோடு இரு. வீரசேனனைத் தேடிக் கண்டுபிடிக்க
நாளையே சில வீரர்களை அனுப்பு. அந்த வீரர்கள் வீரசேனன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாகவோ,
சூரசேனன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாகவோ இல்லாமல் பார்த்துக் கொள். போகிறவர்கள் நம்
முழு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கட்டும். ஒருவேளை அவர்கள் காட்டுக்குள் வீரசேனனின்
பிணத்தைக் கண்டுபிடித்தால் பிரச்சினை இல்லை. ஒருவேளை அவனைக் கண்டுபிடிக்க முடியாமல்
திரும்பி வந்தார்கள் என்றால் அவன் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டிருக்குறான் என்றே
எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியாக இருக்கும் பட்சத்தில் நாம் சூரசேனன் மூலமாக வீரசேனனுக்கும்,
நம் எதிரிகளுடன் இணைய நினைப்பவர்களுக்கும், சதிகாரர்களுக்கும் அனுப்ப வேண்டிய செய்தியொன்று
இருக்கிறது...”
சொல்லி விட்டு பிலிப்
சேனாதிபதியை அர்த்தமுள்ள பார்வை பார்த்தான். சேனாதிபதி அந்தப் பார்வையிலேயே அவன் உத்தேசத்தைப்
புரிந்து கொண்டு திருப்தியுடன் தலையசைத்தான்.
பிலிப் எச்சரிக்கையுடன்
தாழ்ந்த குரலில் சொன்னான். “நாம் எது செய்தாலும் அது வெளிப்படையாகத் தெரியாதபடி சாமர்த்தியமாகவும்,
தந்திரமாகவும் தான் செய்ய வேண்டும். முக்கியமாக வீரசேனன் படையினருக்கும் சூரசேனன் படையினருக்கும்
நாம் தான் செய்தோம் என்பது வெளிப்படையாகத் தெரியக் கூடாது. அதற்கான தடயம்
எதையும் நாம் விட்டு வைக்கக்கூடாது. தவறினால் அவர்களும் நமக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பிருக்கிறது.
அது நமக்கு ஆபத்து.”
சேனாதிபதி
“புரிகிறது சத்ரப்” என்று சொல்லி விட்டு விடைபெற்றான்.
சூரசேனன் உறக்கம் வராமல் தவித்தான். அவன்
சகோதரனுக்கு என்ன ஆகியிருக்கும் என்று அவனுக்குத் தெரியவில்லை. பல விதமான யூகங்கள்
மனதில் வந்து அவனைப் பயமுறுத்தின. அவனுடைய படைவீரன் ஒருவன் சற்று முன் தான் அவனிடம்
வந்து வீரசேனன் எதிரிகளுடன் சேர்ந்து விட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்று யவனப்படைத்தலைவன்
தன் வீரர்களிடம் சொல்வது காதில் விழுந்தது என்று சொல்லி விட்டுப் போனான். அதைக் கேட்டதிலிருந்தே
அவனுக்கு ஆத்திரத்தைத் தாங்க முடியவில்லை. அவன் அண்ணனைக் காப்பாற்றி அழைத்து வருகிறேன்
என்று சொன்ன போது யவன சேனாதிபதி அதற்கு ஏன் அனுமதிக்கவில்லை என்பது இப்போது அவனுக்குப் புரிகிறது.
அவனுடைய
அண்ணன் சதிகாரன் அல்ல என்பதை யவன சேனாதிபதியிடம் கத்தி அறிவிக்க வேண்டும் என்று சூரசேனன்
மனம் துடித்தது. நேர்மையான வீரர்கள் மீது இப்படி
அபாண்டமாகப் பழிசுமத்த அவர்களால் எப்படி முடிகிறது என்பது அவனுக்குப் புரியவில்லை.
யவனர்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல
என்று புரட்சிக்காரர்கள் சொல்வதில் தவறேதும் இல்லை என்று இப்போது அவனுக்குத் தோன்ற
ஆரம்பித்தது. எதிரிகளை விரட்டிக் கொண்டு காட்டுக்குள் வீரமாகச் சென்ற அவன் சகோதரனுக்கு
என்ன ஆயிற்று என்ற கவலை அவனுக்கும், அவன் அண்ணனின் படைப்பிரிவினருக்கும் இருப்பது போல
யவன சேனாதிபதிக்கு இல்லாமல் போனது புரட்சியாளர்களின் கருத்தை நிரூபிப்பது போலிருந்தது.
திரும்பத்
திரும்ப “அண்ணனைக் காப்பாற்ற எதாவது செய்தேயாக வேண்டும்” என்று மனதில் எண்ணம் வந்து
கொண்டிருந்தது. யவனர்கள் வீரசேனனை சதிகாரன் என்று நம்பும் பட்சத்தில் சூரசேனன் எடுக்கும்
முயற்சிகளை அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ மாட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. அவன்
‘என்ன தான் செய்வது’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தான் தூரத்தில்
குதிரை ஒன்றின் குளம்படிச் சத்தம் கேட்டது. அவன் அண்ணனின் குதிரை. அதன் குளம்படிச்
சத்தம் பிரத்தியேகமானது. அவன் உற்சாகத்துடன் எழுந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
ஆனால், பிலிப் வீரசேனனை கொன்று அந்த பழியை ஆச்சாரியார் குழுவினர் மீது போட்டு புரட்சிகாரர்களை திசைத்திருப்ப பார்க்கிறான்...
ReplyDelete