சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 9, 2023

யோகி 17

 


ராகவன் யோசித்து விட்டு சொன்னார். “நீங்க உங்க நண்பர் கிட்ட சொன்ன மாதிரி சட்டபூர்வமான எந்த நடவடிக்கை எடுக்கவும் நம்ம கிட்ட ஆதாரங்கள் எதுவுமில்லை. உங்க நண்பரோட பேத்தியும் அந்த டாக்டரும் அடுத்தடுத்து இறந்ததை சந்தேகப்பட்டு விசாரணை செஞ்சாலும் போஸ்ட்மார்ட்டம் பண்ண அவங்க உடல்கள் இல்லாததால கோர்ட் வரைக்கும் கொண்டு போகற மாதிரி எந்த வலுவான ஆதாரமும் கிடைக்க வழியில்லை...”

 

மெல்லத் தலையசைத்தபடி அருணாச்சலம் சொன்னார். “இன்னொரு பிரச்சனையும் இருக்கு. வெளிப்படையான விசாரணைன்னு வந்துட்டா குற்றவாளிகள் உஷாராயிடுவாங்க. அதனால எதைச் செய்யறதாய் இருந்தாலும் அதை நாம ரகசியமாய் தான் செய்யணும்...”

 

ராகவன் புரிந்தது என்பது போல் தலையசைத்தார். அருணாச்சலம் தொடர்ந்து சொன்னார். “இது வரைக்கும் பிரம்மானந்தாவுக்கும் எனக்கும் இடையே நல்ல நட்பு தான் இருக்கு. அதை நான் வெளிப்படையா இழக்க விரும்பல. பல பேர் அவரைப் பூஜிக்கிறாங்க. குருவாய் ஏற்றுக்கறாங்க. அதனால அவரை வெளிப்படையாக எதிரியாக்கிக்கறது தேவையில்லைன்னும் நான் நினைக்கறேன். நமக்கு எல்லா உண்மைகளும் தெரியணும். அதே நேரத்துல நாம இந்த விசாரணையைக் கையில் எடுத்துருக்கோம்னு அவங்களுக்குத் தெரியவும் கூடாது. அதுக்கு என்ன வழி ராகவன்?”

 

சிறிது ஆலோசித்து விட்டு ராகவன் சொன்னார். “நம்ம ஆள் ஒருத்தன் மாறுவேஷத்துல யோகாலயத்துக்குள்ளே போய் ரகசியமாய் துப்பு துலக்கறது தான் ஒரே வழி சார்...”

 

அருணாச்சலம் சொன்னார். “ஆனா சரியான ஆளாய்ப் பார்த்து நாம அனுப்பலைன்னா நம்ம வேலை ஆகாது. அந்த ஆளையும் ஆபத்துக்குள்ளே அனுப்பிச்ச மாதிரி ஆயிடும்...”

 

ராகவன் சொன்னார். “இதுக்கு கச்சிதமான ஒரு ஆள் இருக்கான் சார். வயசு 29 தான். .பி.எஸ் அதிகாரி. அவன் பெயர் ஷ்ரவன். அவங்கப்பா ஆந்திராக்காரர். அம்மா தமிழச்சி. அவனுக்கு தமிழ் தெலுங்கு ரெண்டும் நல்லாவே தெரியும். இதுக்கு முன்னாடி ஆந்திரா கவர்மெண்ட் சென்ட்ரல்ல கேட்டு வரவழைச்சு அவனை ஆந்திரா ஒரிசா பார்டர்ல பிரச்சினையாய் இருந்த பெரிய நக்சலைட் கும்பலைப் பிடிக்கப் பயன்படுத்தினாங்க. ஒன்றரை வருஷம் அந்த நக்சலைட் கும்பலோட ஒருத்தனா அவன் வாழ்ந்தான். கடைசில அவங்களைப் புடிச்சுக் குடுத்தான். அதெல்லாம் உயிரைப் பணயம் வெச்சு செய்யற வேலை. ஆனா ரொம்ப சிறப்பா செஞ்சான். ஒரு வேஷம் போட்டான்னா அந்த நபராகவே மாறிடுவான். நாம சென்ட்ரல்ல கேட்டா அவனை அனுப்பிக் கொடுப்பாங்க...”

 

அருணாச்சலம் யோசனையுடன் சொன்னார். “சென்ட்ரல்ல விஷயத்தைச் சொல்லிக் கேட்டு அந்தத் தகவல் அங்கேயிருந்து வெளியே கசிஞ்சுதுன்னா பிரச்சனையாயிடுமே ராகவன்.”

 

ராகவன் சொன்னார். “முக்கிய வேலைக்குன்னு கேட்டா போதும் சார். என்ன வேலைன்னு அவங்க கிட்ட நாம விவரிக்க வேண்டியதில்லை. நீங்க ஒரு வார்த்தை பிரதமர் கிட்ட சொன்னா போதும். அவனை அனுப்பிச்சுடுவாங்க. நாங்க டிபார்ட்மெண்ட் மூலமா அவங்க கிட்ட கேட்கறத விட நீங்க பிரதமர் கிட்ட பேசறதுக்கு அதிக மதிப்பிருக்கும். எனக்குத் தெரிஞ்சு இப்ப அவனுக்கு எந்த அசைன்மெண்ட்டும் இல்லை...”

 

அருணாச்சலம் மெல்லக் கேட்டார். “அந்த ஐபிஎஸ் அதிகாரி தனிப்பட்ட முறைல எப்படிப்பட்ட ஆள்? எதுவும் சொதப்பிட மாட்டானே?”

 

ராகவன் சொன்னார். “பையன் பத்தரைமாத்துத் தங்கம். அறிவாளி. துணிச்சல்காரன். அவனோட அம்மா என் சித்தி பொண்ணுங்கறதால அவனை எனக்கு நல்லாவே தெரியும்.”

 

அவன் ராகவனின் உறவுக்காரன், அவருக்கு நன்றாகவே தெரிந்தவன் என்று தெரிந்த பிறகு அருணாச்சலம் திருப்தியடைந்தார். அதற்குப் பிறகு எதுவும் யோசிக்கத் தேவையிருக்கவில்லை.

 

ராகவன் சொன்னார். “ஷ்ரவனுக்கு தத்துவங்கள்லயும் நல்ல ஈடுபாடு உண்டு. ஆதிசங்கரரோட ஆத்மபோதம், உபநிஷத்துக்கள் பத்தியெல்லாம் மணிக் கணக்காய் பேசக்கூடியவன். அதனால யோகாலயத்துக்கு உள்ளே நடிக்க அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது சார்...”

 

அருணாச்சலம் அந்தத் தகவலிலும் திருப்தி அடைந்தாலும் திடீரென்று ஒரு சந்தேகம் அவர் மனதில் எழ, மெல்லக் கேட்டார். “யோகாலயத்துக்குப் போறவங்க கொடுக்கற தகவல்லயே அவங்க திருப்தியடைஞ்சுடுவாங்களா. அதெல்லாம் சரி தானான்னு அவங்க செக் பண்ண மாட்டாங்க?...”

 

அவன் எந்த ஆளாய் போறானோ அந்த ஆளுக்கான அத்தனை ஐடியும் ரெடி பண்ணிட்டு தான் போவான் சார். அவங்க செக் பண்ணாலும் சரியாத் தான் தெரியும்...” 

 

நல்லது ராகவன். நான் இன்னைக்கே பிரதமர் கிட்ட பேசறேன்

 

ஷ்ரவன் வேலை விஷயமாய் சென்னைக்குப் போகிறான் என்றவுடன் அவன் தாய்க்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. என்ன தான் காதலித்து தெலுங்குக்காரரைத் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாதிலேயே வாழ நேர்ந்திருந்தாலும் அவளுக்குத் தமிழகம் மீதும், தமிழ் மீதும் இருந்த பற்று சிறிதும் குறையவில்லை. “அங்கேயே ஒரு நல்ல தமிழ்ப் பொண்ணைப் பார்த்துட்டு வாடா. இனியும் கல்யாணத்தைத் தள்ளிப்போடறது சரியில்ல. 27லிருந்து 29க்குள்ளே பசங்களுக்குக் கல்யாணமாயிடணும். அது தான் சரியான வயசு.”

 

அவன் அப்பா தெலுங்கிலேயே சொன்னார். “அது என்ன தமிழ்ப் பொண்ணு. அவன் தெலுங்குப் பொண்ணைப் பார்த்தால் ஆகாதா?”

 

அம்மா தமிழிலேயே அவருக்குப் பதிலடி தந்தாள். ”நீங்களே தமிழ்ப் பொண்ணைத் தானே கல்யாணம் செய்துகிட்டீங்க. அப்புறம் என்ன மகனுக்கு மட்டும் தெலுங்குப் பொண்ணு?”

 

ஷ்ரவனுக்கு அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது எப்போதுமே வேடிக்கையாக இருக்கும். அவர்களுக்குள் இப்போதும் மிகுந்த அன்பு இருந்ததென்றாலும் மொழி மற்றும் மாநிலப் பற்றை இருவருமே விட்டுக் கொடுத்ததில்லை. இருவரும் அவர்களுக்குள்ளும் அவரவர் மொழியிலேயே தான் பேசிக் கொள்வார்கள். அவர் தெலுங்கில் கேள்வி கேட்டால் அவள் தமிழில் பதில் சொல்வாள். அவள் தமிழில் கேள்வி கேட்டால் அவர் தெலுங்கில் பதில் சொல்வார். ஷ்ரவனிடமும் அவர்கள் அவர்களது தாய்மொழியிலேயே தான் பேசுவார்கள். அதனாலேயே ஷ்ரவன் இரண்டையும் நன்றாகக் கற்றுக் கொண்டிருந்தான்.

 

ஷ்ரவன் அம்மாவிடம் கேட்டான். “நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றப்பவும் இதே மாதிரி உங்க உங்க மொழிகள்லயே தான் பேசிகிட்டீங்களா?”

 

அம்மா கணவனைப் பொய்க் கோபத்தோடு பார்த்து விட்டுச் சொன்னாள். “அப்ப எல்லாம் உங்கப்பா தமிழ்ல தான் பேசினார். கல்யாணமான பிறகு தான் அவருக்குக் கொம்பு முளைச்சுடுச்சு.”

 

அப்பா சிரித்துக் கொண்டே தெலுங்கில் சொன்னார். “காதல் கைகூடணும்னா சில தியாகங்கள் செஞ்சு தான ஆகணும். அப்படி செய்ய வேண்டியதாய் போச்சு ஷ்ரவன்

 

அம்மா அவரைப் பொய்க் கோபத்தோடு முறைத்தாள். ஆனாலும் அவள் உதட்டோரத்தில் புன்னகை தவழ்ந்தது. இருவரும் தாங்கள் காதலித்த நாட்களின் நினைவுகளால் மௌனமாகி அவரவர் வேலையைப் பார்க்க நகர்ந்தார்கள். 

 

ஷ்ரவன் தன் பெற்றோரைப் பாசத்துடன் பார்த்துப் புன்னகைத்தான். அவர்களுக்கு இந்த மொழிச் சண்டை கூட காதலின் ஊடல் தான். அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அன்னியோன்னியம் போல் அவனுக்கும் அவனுக்கு வரப்போகும் மனைவிக்கும் இடையே அன்னியோன்னியம் இருக்க வேண்டும் என்று ஆசையாய் இருந்தது. எங்கே பிறந்திருக்கிறாளோ அவள்? அம்மா சொல்வது போல் தமிழகத்தில் கிடைப்பாளா?

 

அவன் சென்னைக்குக் கிளம்பத் தயாரானான். மூன்று நாட்களுக்கு முன் தான் அவன் மாமா ராகவன் அவனிடம் போனில் பேசியிருந்தார். என்ன வேலை என்பது குறித்து அவர் போனில் எதுவும் சொல்லவில்லை. சீக்கிரமே அதிகார பூர்வ உத்தரவு வரும் என்று சொன்னார். அவன் சிறிதும் எதிர்பார்க்காத விதமாக மறுநாளே, அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழகத்தில் உள்ள ரகசியப் பணிக்காகச் செல்லும் உத்தரவு அவனுக்கு வந்தது. பொதுவாக எந்த வேலையையும் பற்றி செய்தி கிடைத்தவுடனேயே அதிக காலதாமதமில்லாமல் உத்தரவும் வருமானால் அந்த வேலையில் மேலிடம் சம்பந்தப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். வேலை குறித்த விவரங்கள் தமிழகம் சென்ற பிறகு தான் தெரியவரும்.

 

வேலை எதுவாக இருந்தாலும் அது ஆபத்தானதாகத் தான் இருக்கும் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. உண்மையில் அவன் அது போன்ற ஆபத்தான வேலைகளையே விரும்பினான். அவற்றில் மூழ்கி சமாளித்து வெற்றி பெறுகையில் கிடைக்கும் திருப்தியே அலாதி! மூளையும் ஆபத்துக்களைச் சந்திக்கையில் கூர்மையாகி வேலை செய்வது போல மற்ற சமயங்களில் வேலை செய்வதில்லை. எனவே அடுத்தடுத்து திறமைகளை வளர்த்துக் கொண்டே போவதற்கு வேலையில் ஆபத்துகளும், சிக்கல்களும், பிரச்சினைகளும்  தேவையாகவே இருக்கின்றன. இந்த வேலையில் அவை எந்த விதங்களில் இருக்குமோ?


(தொடரும்)

என்.கணேசன்

 


9 comments:

  1. appo akshay illaya

    ReplyDelete
  2. அந்த யோகாலாயத்தில் பெண்களுக்கு தான் ஆபத்து அதிகம்...

    ReplyDelete
  3. ஷர்வன்க்கு தமிழ் தெலுங்கு தெரியும்...ஆத்ம போதம் மற்றும் உபநிடதம் தெரியும் எனில்....எல்லாம் பொருத்தமாகவே உள்ளது....

    ReplyDelete
  4. I am unsure on your name selection for the hero's!!!

    ReplyDelete
  5. "சந்திக்கப்பட்டு விசாரணை^ இது "சந்தேகப்பட்டு விசாரணை" என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மாற்றி விட்டேன்.

      Delete
  6. சைத்ரா - ஷ்ரவன்

    ReplyDelete
  7. Shravan will have probably his future wife within the Yogalaya.

    ReplyDelete
  8. உங்க கதைகள் படிக்கும் போது மட்டும் தான் சார், அன்பு வெளிக்காட்டும் இடங்களை படிக்கும் போது மனசுல அதே அன்பை உணர்ந்து , உதடும் புன்னகைக்குது... Such a magic words sir...

    ReplyDelete