சேனாதிபதியின் பார்வை குளம்படிச் சத்தம்
வரும் திசையில் நிலைத்தாலும் அவ்வப்போது அவன் சூரசேனன் கூடாரத்தையும், சற்று தொலைவில்
இருந்த வீரசேனன் படைப்பிரிவினரின் கூடாரத்தையும் பார்த்துக் கொண்டான். அது சூரசேனனின்
சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அதனால் அவன்
மறைவிலிருந்தபடியே கவனிப்பது என்று முடிவெடுத்தான்.
சிறிது நேரத்தில் யவன சேனாதிபதியின்
கண்கள் தொலைவில் குதிரை மீதமர்ந்து
வந்து கொண்டிருந்த வீரசேனனைக் கண்டன. யவன சேனாதிபதி
கூர்ந்து பார்த்தான். வீரசேனனுடன் யாருமில்லை. யவன சேனாதிபதி
முகாமின் வாயிற்பகுதி நோக்கி நடக்க ஆரம்பிப்பதற்கு முன் மறுபடி சூரசேனன் கூடாரத்தை
ஒரு முறை பார்த்துக் கொண்டான். வாயிற்பகுதியை நோக்கி நடந்த யவன சேனாதிபதியுடன் காவல் வீரனும்
நடக்க மற்ற இரு காவல் வீரர்கள் எதுவுமே வித்தியாசமாக நடக்காதது போல் சுற்றி நடந்து
கொண்டிருந்தார்கள்.
வீரசேனன் முகாமை அடைந்தவுடன் குதிரையை
விட்டிறங்கி வாயிலில் நின்றிருந்த யவன சேனாதிபதியைப் பணிவுடன் வணங்கினான். வணக்கத்தை
ஏற்றுக் கொண்ட சேனாதிபதி கேட்டான். “என்ன ஆயிற்று வீரசேனரே?”
“காயப்பட்டு
எதிரிகளிடம் சிக்கிக் கொண்டேன் சேனாதிபதி. அவர்கள்
என் காயங்களுக்கு மருந்திட்டு, பின் என்னை அவர்களுடன் சேர்ந்து கொள்ள என்னென்னவோ சொல்லி
வற்புறுத்தினார்கள். நான் உறுதியாக மறுத்து விட்டேன். கடைசியில்
என்னை அனுப்பி விட்டார்கள்”
யவன சேனாதிபதி வீரசேனனின் வலது காலிலும் இடது தோளிலும் ஏற்பட்டிருந்த
காயங்களைக் கூர்ந்து பார்த்தான். பச்சிலைகளால்
கட்டு போடப்பட்டிருந்ததால் உள்ளே காயங்கள் உண்மையாகவே இருக்குமா என்று உறுதியாகத் தெரியவில்லை. பார்வைக்காகப்
போடப்பட்டிருந்த கட்டுகளாகக் கூட அவை இருக்கலாம். அவன் சிறிது
யோசித்து விட்டுச் சொன்னான். “சத்ரப் உறங்கிக் கொண்டிருக்கிறார் வீரசேனரே. அவர் அனுமதியில்லாமல்
நான் உங்களை முகாமிற்குள் அனுமதிக்க முடியாது.”
வீரசேனன் தனக்குள் எழுந்த கோபத்தை அடக்கப்
பாடுபட்டான். ஆச்சாரியரும் சந்திரகுப்தனும் சொன்னது போல இந்த யவனர்கள்
சந்தேகப் பேர்வழிகள். இவர்களுக்கு நேர்மையாக இருக்கும் வீரர்களை அடையாளம் கண்டு
கொள்ள முடியாது. கோபத்தை அடக்கிக் கொண்ட வீரசேனன் “ஏன் சேனாதிபதி?” என்று கேட்டான்.
சேனாதிபதி என்ன சொல்வதென்று சிறிது
யோசித்து விட்டுச் சொன்னான். “சத்ரப் உறங்கப் போகும் வரை நீங்கள் வந்து விட்டீர்களா என்று
கேட்டுக் கொண்டிருந்தார். அதனால் அவரைக் கேட்டுக் கொண்டு உங்களை உள்ளே அனுமதிப்பது
சரியென்று நினைக்கிறேன்”
அன்னியர்கள் அன்னியர்களே என்று ஆச்சாரியர்
ஆணித்தரமாகச் சொன்னது மிகச்சரியே என்று நினைத்து மனம் நொந்த வீரசேனன் சொன்னான். “சரி சேனாதிபதி. நீங்கள்
என் சகோதரனை அழைத்து வரச் சொல்லுங்கள். அவனும் மிகவும்
கவலையோடு இருப்பான். என்னைப் பார்த்தால் அவன் நிம்மதியடைவான்”
சேனாதிபதி சொன்னான். “வீரசேனரே. நான் சத்ரப்பின்
அனுமதியில்லாமல் உங்களை முகாமுக்குள் அனுமதிக்க முடியாதது மட்டுமல்ல யாரையும் நீங்கள்
சந்தித்துப் பேசவும் அனுமதிக்க முடியாது.”
“அப்படியானால்
சத்ரப்பிடம் நான் வந்திருக்கும் தகவலைச் சொல்லி அனுமதி கேட்டு வாருங்கள். நான் காத்திருக்கிறேன்.”
வீரசேனன் சொன்னதைக் கேட்டு திகைத்த
சேனாதிபதி சொன்னான். ”வீரசேனரே, இப்போது நள்ளிரவாகி
விட்டது. இந்த நேரத்தில் நான் சென்று சத்ரப்பை எழுப்பினால் அவர் என்னைக்
கடிந்து கொள்வார். அதனால் தாங்கள் அருகில் எங்காவது சென்று இளைப்பாறிவிட்டு
காலையில் வாருங்கள். அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு நீங்கள் உள்ளே வரலாம்.”
சேனாதிபதி இப்படிச் சொல்லி விட்டுத்
தந்திரமாக யோசித்தான். ’இவன் எங்கே
போனாலும் பின்னாலேயே வீரர்களை அனுப்பி இவனைக் கொன்று விட்டால் இவனை புரட்சி வீரர்கள்
கொன்று விட்டு பிணத்தை அங்கே வீசியெறிந்து விட்டுப் போய் விட்டார்கள் என்று சொல்லலாம். எல்லோரும்
கண்டிப்பாக நம்பி விடுவார்கள். பெரிய பிரச்சினை ஒன்று ஓய்ந்து போகும்.’ இந்த எண்ணம்
அவனுக்குத் திருப்தியை அளித்தது.
ஆனால் அவன் சிறிதும் எதிர்பாராதவிதமாக
வீரசேனன் சொன்னான். “நான் அப்படி எங்காவது சென்று இளைப்பாறுவதற்கு முன்பாக சத்தமிட்டு
என் தம்பியையும் என் வீரர்களையும் எழுப்பி என்னை நீங்கள் நடத்தும் விதத்தைத் தெரிவித்து
விட்டுத் தான் போவேன் சேனாதிபதி. உங்களுக்காக எதிரிகளுடன் வீரமாகப் போரிட்டு, காயப்பட்டு, அவர்கள்
தங்களுடன் சேர்ந்து கொள்ள அழைத்த போதும் மறுத்து விட்டு சிறிதும் ஓய்வெடுத்துக் கொள்ளாமல்
நள்ளிரவில் திரும்பியிருக்கும் ஒரு படைத்தலைவனுக்கு நீங்கள் தரும் கௌரவம் என்ன என்பதை
அவர்களுக்குத் தெரிவித்து விட்டுத் தான் போவேன்.”
இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்காத
சேனாதிபதி அதிர்ந்து போனான். அவன் முகத்தில் இருந்த இரத்தம் வடிந்து முகம் வெளுத்தது. ”என்ன வீரசேனரே. இப்படிப்
பேசுகிறீர்கள்?”
வீரசேனன் அமைதியாகச் சொன்னான். “நான் வந்தவுடன்
இந்தத் தொனியில் பேசவில்லை சேனாதிபதி. நீங்கள் இப்படிப்
பேச நிர்ப்பந்தித்ததால் தான் இப்படிப் பேசுகிறேன். சீக்கிரம்
உங்கள் முடிவைச் சொல்லுங்கள்.”
சேனாதிபதிக்கு வந்த கோபத்தில் அங்கேயே
அவனும் அருகில் இருக்கும் வீரனும் சேர்ந்து வீரசேனனைக் கொன்று விட்டால் என்ன என்று
தோன்றியது. ஆனால் வீரசேனனும் மாவீரன். அப்படிக்
கொல்வது சுலபமல்ல. அவன் இவர்கள் கொல்ல முயற்சி செய்கிறார்கள் என்று கத்திச்
சொன்னால் இங்கேயே ஒரு கலவரம் வெடிக்க வாய்ப்பிருக்கிறது....
சேனாதிபதி சிறிது யோசித்து விட்டுச்
சொன்னான். “சரி இங்கேயே அமைதியாக நில்லுங்கள் வீரசேனரே. நான் சத்ரப்பை
எழுப்பி அவரிடம் பேசி அனுமதி வாங்கி விட்டு வருகிறேன். ஆனால் அதற்கும்
முன்பு தாங்கள் இப்போது என்னிடம் சொன்னபடி பைத்தியக்காரத்தனமாக எதுவும் செய்ய மாட்டேன்
என்று வாக்கு அளியுங்கள்.”
“நீங்கள்
சத்ரப்பிடம் கேட்டு வரும் வரை நான் அமைதியாகவே இருப்பேன் சேனாதிபதி. இது நான்
தங்களுக்கு அளிக்கும் வாக்கு” என்று வீரசேனன் உறுதியாகச் சொன்னான்.
காவலனை அவனருகில் நிறுத்தி விட்டு சேனாதிபதி
சத்ரப்பின் கூடாரம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். போகும்
போது சுற்றிக் கொண்டிருந்த இரண்டு காவல் வீரர்களிடமும் வீரசேனன் மீது அவர்கள் பார்வை
இருக்கட்டும் என்று பார்வையாலேயே கட்டளையிட்டுச் சென்றான். அவர்கள்
சுற்றுவதை நிறுத்தி விட்டு வீரசேனனை எட்டும் தொலைவிலேயே நின்று கொண்டார்கள்.
சேனாதிபதி சத்ரப்பின் கூடாரத்திற்குள்
நுழைந்த போது பிலிப் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நீண்ட நேரமாகப் பலவிதமான கவலைகளால் உறக்கம் வராமல் தவித்துக்
கொண்டிருந்த அவன் சற்று முன் தான் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.
சேனாதிபதி அவனை அழைத்தான். “சத்ரப்...
சத்ரப்”
சத்ரப் எழவில்லை. மெல்ல சேனாதிபதி
அவன் காலைத் தொட்டு அழைக்க பிலிப் உறக்கம் கலைந்து மின்னல் வேகத்தில் தன் அருகே வைத்திருந்த
குறுவாளை எடுத்து ஓங்கியபடி எழுந்தான். சேனாதிபதியைப் பார்த்தவுடன்
அச்சம் நீங்கி அமைதியடைந்த அவன் குறுவாளை அருகில் வைத்து விட்டுக் கேட்டான். “என்ன சேனாதிபதி?”
சேனாதிபதி வீரசேனன் வரவையும் அதன் பின்
நடந்ததையும் சொல்ல பிலிப் கடுங்கோபம் அடைந்தான். “என்ன நெஞ்சழுத்தம்
அவனுக்கு. அவனைப் போன்றவனை நாம் நம்முடன் இருக்க விட்டால் நம்மை என்ன
செய்து விட மாட்டான்?”
சேனாதிபதி சொன்னான். “அவன் சொன்னதைக்
கேட்டு எனக்கும் ரத்தம் கொதித்தது சத்ரப். ஆனால் வெட்டவெளியில்
அவனை ஏதாவது செய்வது நமக்கு ஆபத்து என்று தான் விட்டுவிட்டேன்”
பிலிப் கோபத்துடன் சொன்னான். “நீ நினைத்தது
சரி தான். அவனை நீ இங்கழைத்து வா. அவன் சொல்லும்
கதையைக் கேட்டு விட்டுச் செய்ய வேண்டியதை இங்கே செய்து விட்டு பிணத்தை விடியலுக்குள்
ரகசியமாக அப்புறப்படுத்துவோம்.”
(தொடரும்)
என்.கணேசன்
பிலிப் வீரசேனனை ஏதாவது செய்ய திட்டமிட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ளப் போகிறான்.... நடப்பது எல்லாம் சாண்க்கியரின் கணக்குப்படியே நடக்கிறது...
ReplyDelete