சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 2, 2023

யோகி 16

 


டிஜிபி ராகவனுக்கு முதல்வர் ஏதோ முக்கிய விஷயம் பற்றிப் பேசத் தான் அழைக்கிறார் என்று தெரிந்தாலும் அந்த முக்கிய விஷயம் என்னவென்று யூகிக்க முடியவில்லை. இன்று காலையில் முதல்வரின் காரியதரிசி போன் செய்து மாலை ஐந்து மணிக்கு முதல்வரின் இல்லத்தில் வந்து அவரைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தான். அவரே மரியாதை நிமித்தம் போய் முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தாலும் ஓய்விலிருக்கும் முதல்வர் இவ்வளவு சீக்கிரமாக அவரை அழைப்பார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. முதல்வர் இருந்திராத இந்த மூன்று மாத காலத்தில் நடந்திருக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்து அறிய பெரும்பாலும் அழைத்திருக்கலாம் என்று எண்ணி அவசர அவசரமாக முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பெடுத்துக் கொண்ட பின் தான் மாலையில் முதல்வரைச் சந்திக்கக் கிளம்பினார்.

 

முதல்வர் அருணாச்சலத்துக்கும் ராகவனுக்கும் இடையே பரஸ்பர மரியாதை கலந்த நல்லுறவு நீண்டகாலமாக இருந்து வந்தது. எதிர்க்கட்சிகள் அவரை அருணாச்சலத்தின் ஆளாகவே பார்த்தன. ரகசியங்கள் காப்பதில் மிக வல்லவராகவும், திறமைசாலியாகவும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் ராகவன் இருந்ததால் அருணாச்சலத்தின் ஆட்சி காலத்தில் தொடர்ந்து பதவி உயர்வுகள் வேகமாகக் கிடைத்து டிஜிபி பதவி வரை அவர் உயர்ந்திருக்கிறார். 

 

முதல்வரின் வீட்டில் ஆரம்ப நலம் விசாரிப்புகள் முடிந்தவுடன் அருணாச்சலம் ராகவனைக் கேட்டார். “யோகாலயம் பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன ராகவன்?”

 

ராகவன் அந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. யோகி பிரம்மானந்தா முதல்வருக்கு நெருக்கமானவராகவே கருதப்பட்டதால்முதல்வரே நன்றாக அறிந்த ஒன்றைப் பற்றி என்னை ஏன் கேட்கிறார்?’ என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. ஆனால் அதை வாய்விட்டுக் கேட்க முடியாத ராகவன் கவனமாகச் சொன்னார். “இந்தியாவிலிருந்தும், உலக நாடுகளிலிருந்தும் பலரும் ஆர்வமாக வந்து போகிற அளவுக்கு பிரபலமாய் இருக்கு சார். அவங்க யோகா வகுப்புகள் கூட சிறப்பாய் இருக்கிறதா சொல்றாங்க. தமிழகத்தில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்கள்ல மெரினா பீச், மகாபலிபுரம் மாதிரி யோகாலயமும் இருக்கு.”

 

அருணாச்சலம் புன்னகைத்தபடி சொன்னார். “இது தனிப்பட்ட கருத்தாய் எனக்குத் தெரியலையே ராகவன்

 

ராகவனும் தர்மசங்கடத்துடன் புன்னகைத்தார். “அனுபவத்தால் தனிப்பட்ட கருத்து சொல்ல நான் அடிக்கடி அங்கே போய் வர்றவன் அல்லவே சார். நான் ஆன்மீகவாதியும் அல்ல. அங்கே நான் ஏதோ சில நிகழ்ச்சிகளுக்குப் போயிருக்கேன். அந்த அளவில் அது சிறப்பாய் இருக்கிற மாதிரி தான் எனக்குத் தோணுது

 

யோகாலயம் முழுவதுமாய் பிரம்மானந்தா கட்டுப்பாட்டில் தான் இருக்கா, இல்லை வேற யாராவது அதை நடத்தறாங்களா?”   

 

பிரம்மானந்தா கட்டுப்பாட்டில் தான் அது இருக்கறதா தான் தோணுது சார். ஆனால் அவர் அடிக்கடி சுற்றுப்பயணம் போறவர். இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் அதிகமாய் பயணம் செய்துகிட்டே இருக்கறவர். அப்படி அவர் போறப்ப கண்டிப்பாய் வேற யாராவது தான் அதை நிர்வாகம் பண்ண வேண்டியதாயிருக்கும். பிரம்மானந்தா அங்கேயே இருக்கிறப்ப கூட எல்லாத்தையும் அவரே பார்த்துக்க முடியாது. யார் பொறுப்புலயாவது பலசமயங்கள்ல அவர் விட்டுத் தானாகணும். அப்படி அவர் இல்லாதப்பவும், அவருக்கு அடுத்தபடியாகவும் முக்கியமாய் யார் பார்த்துக்கறாங்கன்னு  தெரியலை. வேணும்னா விசாரிச்சு சொல்றேன் சார். ஆனால் இப்போ கொஞ்ச காலமாய், கோவிட் காரணமாக பிரம்மானந்தா அதிகம் சுற்றுப் பயணம் போகாமல் இங்கேயே தான் இருக்கார்...”

 

நான் இங்கே இல்லாத இந்த மூனு மாசத்துல யோகாலயத்துல ஏதாவது பிரச்சினை, சர்ச்சை ஏற்பட்டுச்சா ராகவன்?”

 

ராகவன் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டு வந்திருந்த நிகழ்வுகளில் இது இருக்கவில்லை. இது முதல்வரே அக்கறை எடுத்துக் கொண்டு கேட்கக்கூடிய விஷயமாக ராகவன் நினைத்திருக்கவில்லை. ஆனாலும் ஓரளவு சுதாரித்துக் கொண்டு ராகவன் நினைவுபடுத்திக் கொண்டு சொன்னார். “ஒரு டாக்டரோட பொண்ணு அங்கே சன்னியாசியாக இருந்திருக்கா. மகளுக்கு ஏதோ ஆபத்துன்னு கேள்விப்பட்டு அந்த டாக்டர் பார்க்கப் போனப்ப அவங்க அங்கே பார்க்க அனுமதிக்கலை போல. அவர் கோர்ட்டுல கேஸ் போட்டு அந்தப் பொண்ணு கோர்ட்ல வந்து ஆபத்து எதுவும் தனக்கில்லைன்னும், உறவுக்காரங்க யாரையும் பார்க்க தனக்கு விருப்பமில்லைன்னும் சொல்லிட்டதால கோர்ட்ல கேஸை தள்ளுபடி செஞ்சாங்க. கொஞ்ச காலம் கழிச்சு அந்தப் பொண்ணு கோவிட்ல இறந்துட்டதாயும் கேள்விப்பட்டேன். சமீபத்துல தான் அவங்கப்பாவும் மகள் இறந்த துக்கத்துல தற்கொலை செய்துகிட்டதாய் பத்திரிக்கைகள்ல படிச்சேன்...”   

 

அருணாச்சலம் அமைதியாகச் சொன்னார். “அந்த டாக்டரோட அப்பா சேதுமாதவன் என்னோட நெருங்கிய நண்பர். என் பேருக்குப் பின்னாடி ஒரு டிகிரி இருக்குன்னா அது அவர் உதவியால தான். அவர் தன்னோட பேத்தி கொலை செய்யப்பட்டதா நம்பறார்...”

 

ராகவன் திடுக்கிட்டார். அருணாச்சலம் சேதுமாதவன் தன்னிடம் தெரிவித்த தகவல்களை விரிவாகச் சொல்லி விட்டுத் தொடர்ந்து சொன்னார். “அந்தப் பொண்ணு கோவிட்ல இறந்ததாய் சொன்ன வரைக்கும் எனக்கும் அந்த மரணம் இயற்கையானதாய் இருக்க வாய்ப்பு அதிகம்னு தோணுச்சு. ஏன்னா எந்த ஆபத்துமில்லாம அந்தப் பொண்ணு கோர்ட் வரைக்கும் வந்து தெளிவாய் பேசியிருக்கு. இவங்க தான் அந்தப் பொண்ணு மேல இருக்கற பாசத்துல என்னென்னவோ சந்தேகப்பட்டு, சந்தேகப்பார்வையிலயே எல்லாம் பார்த்ததால இவங்களுக்கு அது கொலை மாதிரி தோணுதுன்னு கூட தோணுச்சு. ஆனால் அந்த ஆஸ்பத்திரி டாக்டர் ஒருத்தர் தன்னோட படிச்சவன்கிற நட்புல சொன்ன விஷயமும், அதற்கடுத்த நாளே அந்த ஆளும் கோவிட்ல இறந்து போனதும் கூட தற்செயலான இயற்கையாய் நினைக்க முடியல... நீங்க என்ன நினைக்கிறீங்க ராகவன்?”

 

ராகவன் யோசனையுடன் சொன்னார். “ஆமா சார். எதுலயுமே இந்த மாதிரி நிறைய தற்செயல்கள் இயல்பாய் நடக்க வழியில்லை. இதுல ஏதோ தில்லுமுல்லு இருக்கு 

 

அருணாச்சலம் சொன்னார். “என்னோட எழுபத்தஞ்சு வருஷ வாழ்க்கைல நான் சந்திச்ச ரொம்ப நல்ல மனுஷங்கள விரல் விட்டு எண்ணிடலாம் ராகவன். அதுல சேதுமாதவன் ஒருத்தர். சின்ன வயசுல இருந்தே எல்லாருக்கும் நல்லது மட்டுமே செய்துட்டு வந்த ஆள் அவர். செஞ்ச நல்லதுக்கும் யார் கிட்டயும் எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்கக் கூடத் தெரியாத ஆள் அவர். என் கூடச் சில மணி நேரம் பழகின பழக்கத்தை வெச்சு கூட நான் முதலமைச்சர் ஆன பிறகு ஏதாவது வேலையாகறதுக்காக என்னை வந்து பார்த்த மனுஷங்க நிறைய பேரு ராகவன். உறவுகள்லயும் சரி, நட்புலயும் சரி என்னைப் பயன்படுத்திக்கப் பார்த்தவங்க தான் கிட்டத்தட்ட எல்லாருமே. ஆனா உரிமையோட என் கிட்ட வந்துஇத நீ செஞ்சேயாகணும்னு கேட்க முடிஞ்ச அளவுக்கு எனக்கு நிறைய உதவிகள் செஞ்ச சேதுமாதவன் ஒரு தடவை கூட மறு உதவி கேட்டு நான் முதலமைச்சராய் இருந்த காலத்துல இது வரைக்கும் வந்ததில்லை. அநியாயமாய் பேத்தியையும், மகனையும் இழந்துட்டு இத்தனை வருஷம் கழிச்சு உதவி கேட்டு நின்னப்ப, உதவின்னு கூடச் சொல்ல முடியாது, நியாயம் கேட்டு என் நண்பர் என் கிட்ட வந்து நின்னப்ப ஒரு மனுஷனா என்னால மறுக்க முடியல...”

 

உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லிய அருணாச்சலம் ஒருகணம் மௌனமாக இருந்து தன்னை சிறிது அமைதிப்படுத்திக் கொண்டார். ராகவன் தன்னுடைய இத்தனை காலப் பழக்கத்தில் முதல்வர் இவ்வளவு ஆழமான உணர்வுகளுடன் யாரையும் பற்றி அவரிடம் பேசிப் பார்த்ததில்லை. ராகவனிடம் அருணாச்சலம் சேதுமாதவனுக்குத் தந்த வாக்குறுதியைச் சொல்லி விட்டுத் தொடர்ந்தார்.   

 

ராகவன், அரசியல் வாழ்க்கை எப்படின்னு உங்களுக்கே தெரியும். நிறைய தப்புகள் தெரிஞ்சே செய்யறோம். அரசியல்ல தாக்குப் பிடிக்க பலதும் நாம விரும்பியோ, விரும்பாமயோ செய்ய வேண்டி வருது. செய்ய வேண்டிய சில நல்லதுகளையும் சில எதிர்ப்புகளுக்காகவும், சில வேண்டியவர்களுக்காகவும் செய்யாமல் தவிர்த்துடறோம். நான் இது வரைக்கும் செஞ்ச தவறுகளுக்காகவும், செய்யாமல் விட்ட நன்மைகளுக்காகவும் சில சமயம் வருத்தப்படறது உண்டு. ஆனாலும் அது சில சொற்ப சமயங்கள் தான். அதிலிருந்து சீக்கிரமா நகர்ந்துடுவேன். ஆனா சேதுமாதவனுக்கு நியாயம் கிடைக்க நான் எதுவும் செய்யாட்டி, பிறகு என்னையே என்னால மன்னிக்கவோ, என்னை மனுஷனா உணரவோ முடியாது. அதனால இது நான் செஞ்சே ஆக வேண்டிய காரியம். எப்படிச் செய்யறதுன்னு ஆலோசிக்க தான் நான் உங்களை வரச்சொன்னேன்.”


(தொடரும்)

என்.கணேசன்





 

4 comments:

  1. I expected Akshay’s intro!

    ReplyDelete
  2. I expected Akshay’s intro this week!

    ReplyDelete
  3. Great start. We can know many true from yogalayam

    ReplyDelete
  4. இவ்வளவு உடல் உபாதைகளிலும் நண்பருக்கு நியாயம் கிடைக்க உடனடியாக செயல்படுவதை பார்க்கையில் முதல்வரின் நட்பு எத்தகையது? என்பதை புரிந்து கொள்ள முடிகிறது....

    ReplyDelete