சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 29, 2023

சாணக்கியன் 63

 

ந்திரகுப்தனும் சின்ஹரனும் மாளவத்தின் முன்னாள் நகரத் தலைவனிடம் நீண்ட நேரம் பேசினார்கள். அவர்கள் பேசப் பேச அவன் நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. இப்போதும் எல்லாம் முடிந்து விடவில்லை என்ற எண்ணம் அவன் மனதில் வலுப்பெற ஆரம்பித்தது. யவனர்களை எதிர்த்து வெல்வது சுலபமல்ல என்ற போதும் முடியாதது அல்ல என்று தோன்ற ஆரம்பித்தது. மாளவத்தில் ரகசியமாக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து தருவதாக அவன் உற்சாகத்துடன் வாக்களித்தான்.

 

சந்திரகுப்தன் சொன்னான். “குடியரசு நாட்டின் தலைவராக இருந்த உங்களுக்குத் தெரியாததல்ல என்றாலும் கூட நான் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். முக்கியஸ்தர்கள் மட்டுமல்லாமல் குடிமக்கள் அனைவரையும் இதில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஆச்சாரியர் நினைக்கிறார். அவர்களைச் சேர்த்துக் கொண்டால் ஒழிய நாம் வெல்வது மிகவும் கஷ்டம் என்று அவர் நம்புகிறார்…”

 

அவர் தீர்க்கதரிசி. அவர் சொல்கின்றபடியே செய்வோம். மாளவத்தைப் பொறுத்த வரை எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அநேகமாக நாம் தாக்குதலை எப்போது எப்படி ஆரம்பிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறீர்கள்?”

 

சின்ஹரன் சொன்னான். “ஏக காலத்தில் பல இடங்களில் தாக்குதலும் கலவரங்களும் நடத்த ஆரம்பித்தால் தான் யவனர்கள் எங்கே என்ன செய்வது என்று புரியாமல் குழம்புவார்கள். அது தான் நமக்கு சாதகமாக இருக்கும். மற்ற பகுதிகளிலும் நம்மை வலுப்படுத்திக் கொண்ட பிறகு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைத் தங்களுக்குத் தெரிவிக்கிறோம். ஷூத்ரகம் நாட்டின் தற்போதைய நிலவரம் என்ன?”

 

ஷூத்ரகம் நாட்டின் நிலவரத்தை மாளவ முன்னாள் நகரத்தலைவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லா விட்டாலும் கூடக் கேட்டதற்குக் காரணம் ஆச்சாரியர் அடிக்கடி சொல்லியிருந்த அறிவுரை தான். ’முக்கியமான விஷயங்கள் குறித்து எல்லாம் தெரியும் என்று தோன்றினாலும் கூட அறிந்த மற்றவர்களிடம் கூடத் தகவல்கள் கேட்பது நல்லது. அவர்கள் சொல்லும் தகவல்களில் ஒன்றிரண்டாவது நமக்குப் புதியதாக இருக்கலாம். அவை முக்கியமானவையாக இருக்கலாம். கேட்காமல் இருந்திருந்தால் அதைத் தெரிந்து கொள்ளாமலேயே அது சம்பந்தமாக நாம் தவறாக முடிவெடுக்கும் அபாயம் இருக்கிறது….’  

 

மாளவத்தின் முன்னாள் நகரத் தலைவன் சொன்னான். “ஷூத்ரகமும் கிட்டத்தட்ட எங்கள் நிலைமையிலேயே இருக்கிறது. எங்கள் அளவு உயிர் இழப்புகளும், பொருள் இழப்புகளும் சந்திக்கா விட்டாலும் அவர்கள் கௌரவமும் பறிபோய் இருக்கிறது என்பது தான் நிலைமை. அவர்களும் ஆரம்பத்தில் போராடத் தயாராகத் தான் இருந்தார்கள், எங்கள் தோல்விக்குப் பின் தான் அவர்கள் வேறு வழியில்லாமல் சரண் அடைந்திருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்திருந்ததால் அவர்களுக்கு அலெக்ஸாண்டர் எந்தத் தனிச் சலுகையும் தராமல் எங்களைப் போலவே தான் வைத்திருக்கிறான்….”

 

சந்திரகுப்தன் கேட்டான். “அங்கே நம் சிந்தனைகள் இருக்கக்கூடிய முக்கிய ஆட்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள்.   யாரைப் போய்ப் பார்த்தால் நல்லது.” மாளவத்தின் முன்னாள் நகரத் தலைவன் சொன்ன பெயர்கள் மூன்றில் இரண்டு பெயர்கள் அவனிடம் ஏற்கெனவே இருந்தன. மூன்றாவது பெயரையும் அவன் மனதில் குறித்துக் கொண்டான்.


நல்லது. அவர்களையும் சென்று சந்திக்கிறோம். நீங்கள் மக்கள் மனநிலையைத் தயார்ப்படுத்துவதற்கு எத்தனை காலம் தேவைப்படும்?” சின்ஹரன் கேட்டான்.

 

என்னை யவன ஒற்றர்கள் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதால் நான் மிகவும் ரகசியமாகவும் கவனமாகவும் தான் செயல்பட வேண்டும். நான் அவர்கள் சந்தேகப்படாத ஓரிரு ஆட்கள் மூலமாகவே எல்லாவற்றையும் செய்வது தான் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் குறைந்த பட்சம் மூன்று மாதங்களாவது வேண்டி வரும் என்று நினைக்கிறேன்.”

 

நல்லது. அப்படியே செய்யுங்கள்

 

இங்கே எங்களது ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன... அதனால் நமக்கு ஆயுதங்கள் தேவை...”

 

அது குறித்த கவலை வேண்டாம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாங்கள் கிளம்புகிறோம். கவனமாகச் செயல்படுங்கள்...”

 

ஆச்சாரியருக்கும் உங்களுக்கும்  நன்றி வீரர்களே. இன்றிலிருந்து நாங்கள் உயிர் வாழ்வதற்கு ஒரு நல்ல அர்த்தத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள். இரண்டாவது முறை பிறந்தது போல் நான் உணர்கிறேன்.” அவன் மானசீகமாக உணர்ச்சிவசப்பட்டு சொன்னான்.

 

சந்திரகுப்தனும், சின்ஹரனும் அங்கிருந்து திருப்தியுடன் கிளம்பினார்கள்.  

 

லெக்ஸாண்டரைச் சந்தித்துப் பேசிய பிலிப் உடனடியாக தட்சசீலம் திரும்பவில்லை. வழியில் யவனர்கள் வென்ற பல பகுதிகளுக்கு விஜயம் செய்து விட்டு மெள்ளத் தான் திரும்பி வந்தான். ஆனால் அவன் அங்கே வருவதற்குள்  அலெக்ஸாண்டர் அவனை யவனர் வென்ற பாரதப் பகுதிகளுக்கெல்லாம் சத்ரப் (கவர்னர்) ஆக நியமித்து விட்டுச் சென்றிருக்கிறான் என்ற செய்தி வந்து சேர்ந்தது. அதனால் அவன், தான் நிர்வகிக்க வேண்டியிருக்கும் பகுதிகளுக்கு எல்லாம் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து ஒழுங்குபடுத்தி விட்டு வரப் போகிறான் என்பதும் ஆம்பி குமாரனுக்குத் தெரிய வந்தது.

 

ஆம்பி குமாரனுக்கு பிலிப்புக்கு வந்த அதிர்ஷ்டத்தை ஜீரணிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் அந்தப் பொறுப்புக்கு அலெக்ஸாண்டர் தன்னை நியமித்து விட்டுப் போவான் என்று முட்டாள்தனமாக நம்பியது ஆம்பி குமாரனுக்கு நினைவுக்கு வந்து கசந்தது. தட்சசீலம் திரும்பி வந்த பிலிப்பை ஆம்பி குமாரன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தான். அவனுடைய வாழ்த்தில் பிலிப் பெரிதாகப் புளங்காகிதம் அடைந்து விடவில்லை என்பது அவனுடைய தோரணையில் தெரிந்தது. அலெக்ஸாண்டர் கூட இந்த அளவு கர்வத்துடன் நடந்து கொள்ளவில்லை என்பதை ஆம்பி குமாரன் நினைவு கூர்ந்தான்.  நீண்ட பயணத்திலிருந்து திரும்பியதால் களைப்பாக இருக்கிறது என்று தெரிவித்து விட்டு நாளை பேசுவோம் என்று சுருக்கமாகச் சொல்லித் தன் மாளிகைக்கு ஓய்வெடுக்கப் போன  பிலிப் பின் அன்றே கட்டிடக் கலைஞர்களை அழைத்துப் பேசியது ஆம்பி குமாரனுக்குத் தெரிய வந்தது. சத்ரப் ஆன அவனைச் சந்திக்க பல பகுதிகளில் இருந்தும் அரசர்கள், அமைச்சர்கள், யவன அதிகாரிகள் முதலானோர் இனி அடிக்கடி அந்த மாளிகைக்கு வருவார்கள் என்றும் அதற்கேற்றபடி வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் சொல்லி ஆணை இட்டதாகவும் தகவல் ஆம்பி குமாரனுக்குக் கிடைத்தது. அதுபற்றி ஆம்பி குமாரனிடம் முன்னதாக ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட பிலிப்புக்கு இருக்கவில்லை என்பது ஆம்பி குமாரனுக்கு வருத்தத்தைத் தந்தாலும் அதை வாய் விட்டு யாரிடமும் தெரிவிப்பது அவனுக்கு இருக்கும் மரியாதை அவ்வளவு தான் என்று பறையறிவிப்பது போல் ஆகி விடும் என்று மௌனமாக இருந்தான்.

 

மறுநாளும் ஆம்பி குமாரனைச் சந்திக்க பிலிப் வரவில்லை. மாறாக பிலிப்பின் காவலன் ஆம்பி குமாரனிடம் வந்து சத்ரப் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தான். ஆம்பி குமாரன் உள்ளே மனம் புழுங்கினாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் பிலிப்பின் மாளிகைக்குப் போனான். அமர்ந்திருந்த பிலிப் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தாலும் பழைய மரியாதை அதில் தென்படாததை ஆம்பி குமாரன் கவனிக்கவே செய்தான். அலெக்ஸாண்டர் சக்கரவர்த்தியாகவே இருந்தாலும் கூட இப்படி அவனிடம் நடந்து கொள்ளவில்லை.

 

வணக்கம் தெரிவித்த ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரின் நலம் குறித்து விசாரித்தபடி இருக்கையில் அமர்ந்தான். மொழிபெயர்ப்பாளன் உதவியோடு அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

 

பிலிப் சொன்னான். “சக்கரவர்த்தி பரிபூரண நலம். இங்கே நிலவரம் எப்படி இருக்கிறது ஆம்பி குமாரரே?”

 

“எல்லாம் சிறப்பாக இருக்கின்றது ... பிலிப்” என்றான் ஆம்பி குமாரன். அலெக்ஸாண்டரையே நண்பா என்று ஒருமையில் அழைத்தவனுக்கு பிலிப்பை சத்ரப் என்று அழைக்க மனம் வரவில்லை. பெயர் சொல்லி அழைப்பது ஆம்பி குமாரனுக்கும், அலெக்ஸாண்டருக்கும் இடையே இருந்த நட்பை  பிலிப்புக்கு நினைவுபடுத்தியது போல இருக்கும் என்று அவன் நம்பினான்.

 

சில காலமாக சத்ரப் என்று மரியாதையுடன் பலராலும் அழைக்கப்பட்டு வந்த பிலிப் தன்னை ஆம்பி குமாரன் பெயரிட்டு அழைத்ததை ரசிக்கவில்லை என்றாலும் அவனும் தனக்குப் பிடிக்கவில்லை என்பதை வாய்விட்டுச் சொல்லத் தயங்கினான். முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு அவன் ஆம்பி குமாரனிடம் கேட்டான். “இங்கே நம் ஆயுதக் கிடங்கில் ஆயுதங்கள் நிறையவே திருட்டுப் போயிருக்கின்றன என்று கேள்விப்பட்டேனே. குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டீர்களா?”

 

“விசாரணை நடந்து வருகிறது பிலிப். கூடிய விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று எதிர்பார்க்கிறேன்.”

 

“இது போன்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து தண்டிக்கா விட்டால் அது குற்றவாளிகளுக்கு மேலும் தைரியம் கொடுப்பது போலவும், அவர்களை ஊக்குவிப்பது போலவும் ஆகி விடுமல்லவா ஆம்பி குமாரரே?”

 

‘இவனெல்லாம் என்னைக் கேள்வி கேட்கும்படி ஆகி விட்டதே என்று மனம் நொந்த  ஆம்பி குமாரன் சொன்னான். “அதை நானும் உணர்ந்திருக்கிறேன் பிலிப். அதனால் தான் கண்காணிப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறேன்.”

 

”சக்கரவர்த்தி எப்போதும் சொல்வார். என்ன செய்திருக்கிறீர்கள் என்று சொல்லாதீர்கள், என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறேன் என்பதைச் சொல்லுங்கள் என்று. குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாகி விட்டதா இல்லையா என்பது தான் இப்போதைய கேள்வி”


(தொடரும்)

என்.கணேசன்




2 comments:

  1. You take us to the course of history very naturally with excellent and believable characterization. Super sir.

    ReplyDelete
  2. யவன வீரர்களை எவ்வளவு சீக்கிரம் விரட்டியடிக்க முடியுமோ... அவ்வளவு சீக்கிரத்தில் விரட்டியடிக்க வேண்டும்....

    ReplyDelete