அலெக்ஸாண்டர் மகதத்தை நோக்கிச் செல்லாமல் தாயகம் செல்லத் தீர்மானித்து விட்டான் என்ற தகவல் வந்த பிறகு தாமதிக்காமல் சாணக்கியர் தீவிரமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக சாரங்கராவ் தலைமையில் சில மாணவர்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். தட்சசீலத்தில் இருக்கும் மாணவர்கள் சந்திரகுப்தன் தலைமையில் சில நாட்களில் நள்ளிரவு நேரங்களில் சுறுசுறுப்பாக ரகசிய வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
அப்படி ஒரு நாள் சந்திரகுப்தனும் மாணவர்களும் தங்கள் வேலைகளை
முடித்துக் கொண்டு நடுநிசி கழிந்து திரும்பி வந்த போது சாணக்கியர் தனது அறையில் இருக்கவில்லை. அது சந்திரகுப்தனுக்கு ஒரு
நெருடலான சந்தேகத்தை ஏற்படுத்தியது. இரண்டு மூன்று நாட்களாக காந்தார
ஒற்றர்கள் அவர்களுடைய கல்விக்கூடத்தின் அருகே அதிகமாக நடமாடுவதை அவன் கவனித்திருந்தான்.
அவனும் மற்ற மாணவர்களும் கவனித்து விட்டார்கள் என்று அறிந்து கொண்டதாலோ
என்னவோ இன்று யாரையும் காணவில்லை. அதனால் தான் சந்திரகுப்தனும்
மற்ற மாணவர்களும் இன்று வெளியே சென்று வேலைகளை முடித்துக் கொண்டு வந்தார்கள்.
இப்போது சாணக்கியர் அறையில் இல்லாமல் இருப்பதற்கும் அந்த ஒற்றர்களுக்கும்
எதாவது சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.
தலைமை ஆசிரியரிடம் விசாரிக்கலாம் என்றால் அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அவனுடன் திரும்பி வந்த மற்ற மாணவர்களும்
உறங்கச் சென்று விட்டார்கள். ஆனால் அவனால் உறங்க முடியவில்லை.
ஆச்சாரியருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்கலாமோ என்ற அச்சம் அவனை வதைத்தது. அவன்
வாசலுக்குச் சென்று அங்கே நின்று கொண்டு வலது பக்கம் போய்ப் பார்க்கலாமா, இடது பக்கம் போய்ப் பார்க்கலாமா
என்று யோசித்த போது போர்வையைப் போர்த்திக் கொண்டு தூரத்தில் ஒரு உருவம் வந்து கொண்டிருப்பது
நிலவொளியில் தெரிந்தது. முகம் தெரியாவிட்டாலும் அந்த நடை ஆச்சாரியருடையது
தான். அவன் மனம் நிம்மதியடைந்தது.
”ஏன் வெளியே நிற்கிறாய் சந்திரகுப்தா? ஏதாவது பிரச்சினையா?”
சாணக்கியர் வாசலை நெருங்கியவுடன் கேட்டார்.
“இல்லை ஆச்சாரியரே? உங்களைக் காணாததால் யோசனையுடன் பார்த்துக்
கொண்டு நிற்கிறேன்” என்றான் சந்திரகுப்தன்.
அவன் அக்கறையில் மனம் நெகிழ்ந்தாலும் சாணக்கியர் அதை வெளியே
காட்டிக் கொள்ளவில்லை. இருவரும் உள்ளே சென்றார்கள். அவர் அறையில் நுழைந்தவுடன்
சந்திரகுப்தன் கேட்டான். “இவ்வேளையில் எங்கே சென்றிருந்தீர்கள்
ஆச்சாரியரே”
“ஆம்பி குமாரனின் ஒற்றன் ஒருவன் நமக்கு வேண்டியவன். அவனிடம்
அலெக்ஸாண்டரின் சமீபத்திய தகவல்கள் பெறப் போயிருந்தேன். இப்போது
நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது சந்திரகுப்தா. மகதத்தை நோக்கிப்
படையெடுப்பதைக் கைவிட்டுத் தாயகம் செல்லத் தீர்மானித்தாலும், அலெக்ஸாண்டர் வந்த வழியே திரும்பிப் போகாமல் வேறு வழியில் திரும்பிப் போய்க்
கொண்டிருக்கிறான். அப்படிப் போகையிலும் போகிற பகுதியை எல்லாம்
வென்று தன் சாம்ராஜ்ஜியத்தை இணைத்துக் கொண்டே போகிறான்.”
சந்திரகுப்தன் புன்னகைத்தான். “அவன் இயல்பு அவ்வளவு சீக்கிரம் மாறாது என்பது
நாம் எதிர்பார்த்தது தானே ஆச்சாரியரே. நாம் இப்படி நடக்க வாய்ப்பு
அதிகம் என்று முன்பே பேசிக் கொண்டிருந்தோமல்லவா?”
சாணக்கியர் வருத்தத்துடன் சொன்னார். “உண்மை. ஆனால் நாம் எதிர்பார்க்காததும் நிறைய நடந்திருக்கிறது சந்திரகுப்தா.
அலெக்ஸாண்டர் வழியில் வென்று
கொண்டே போன பகுதிகளில் முக்கியமானவை மாளவமும், ஷூத்ரகமும்.
அந்த இரண்டு குடியரசுகளும் வலிமையானவை என்றாலும் ஒற்றுமையானவை அல்ல.
காந்தாரமும், கேகயமும் இருப்பது போல அடுத்தடுத்து
இருந்தாலும் நட்புறவில் இல்லை. மாளவ வீரர்கள் அலெக்ஸாண்டரைத்
தீவிரமாக எதிர்த்துப் போரிட்டார்கள். போரில் அலெக்ஸாண்டருக்கு
நெஞ்சில் கத்தி பாய்ந்து இரத்தம் அளவுக்கதிகமாக வெளியேறி அவன் மயங்கி விழுந்து விட்டான்.
அவன் இறந்து விட்டான் என்றே நினைத்த யவன வீரர்கள் கோபம் அதிகமாகி வெறித்தனமாகப்
போர் செய்தார்கள். அவர்களுக்காக தாயகம் திரும்பும் முடிவை மேற்கொண்ட
அலெக்ஸாண்டர் மீது அவர்களுக்கு முன்பை விட இரட்டிப்பாக பக்தி பெருகி இருந்திருக்கும்
என்று நான் அனுமானிக்கிறேன். கோபத்தில் அவர்கள் சில ஊர்களை எரித்திருக்கிறார்கள்.
பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள்
என்று வித்தியாசம் பார்க்காமல் கண்டவர்களை எல்லாம் வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள்.
கொன்றிருக்கிறார்கள். எரித்திருக்கிறார்கள்….”
சந்திரகுப்தன் திகைப்புடன் சாணக்கியரைப் பார்த்தான். பெண்கள், குழந்தைகள், முதியவர்களைக் கொன்றிருப்பதை அவனால் ஏற்றுக்
கொள்ள முடியவில்லை. அவனால் அந்த அநியாயத்தை ஜீரணிக்க முடியவில்லை.
சாணக்கியர் வேதனையுடன் தொடர்ந்தார். “அலெக்ஸாண்டர் இறக்கவில்லை,
இரத்தம் அதிகமாய் வெளியேறியதால் பலவீனமாக இருக்கிறான் என்பது தெரிய வந்த
பிறகு தான் யவன வீரர்கள் அடங்கி இருக்கிறார்கள். அதற்குள் மாளவம்
தோல்வி மட்டுமல்லாமல் பல பேரிழப்புகளையும் சந்தித்து விட்டது. மாளவத்திற்கு நேர்ந்திருக்கும் நிலைமையைப் பார்த்து ஷுத்ரகம் தானாக அவனுக்கு
அடிபணிந்து விட்டது. அலெக்ஸாண்டர் காயமடைந்து விட்ட செய்தி கிடைத்தவுடன்
அவனுடைய பிரதிநிதியாக இங்கே தங்கியிருக்கும் பிலிப் உடனே அலெக்ஸாண்டரைக் காண விரைந்திருக்கிறானாம்…”
சிறிது நேரம் கனத்த மௌனம் அங்கே நிலவியது. சாணக்கியர் தனது பிரியமான
மாணவனிடம் சொன்னார். “அன்னியனை உள்ளே விட்டதற்கான பலனை எங்கேயெல்லாம்
எப்படியெல்லாம் நம் மக்கள் அனுபவிக்க வேண்டி வருகிறது பார்த்தாயா சந்திரகுப்தா?”
சந்திரகுப்தன் வருத்தத்துடன் தலையசைத்தான். பின் மெல்லக் கேட்டான்.
“நேற்றும் அதற்கு முந்தைய நாளும் நம்மை காந்தார ஒற்றர்கள் கண்காணித்துக்
கொண்டிருந்தது பற்றி விசாரித்தீர்களா ஆச்சாரியரே?”
சாணக்கியர் மெள்ளப் புன்னகைத்தார். “காந்தார ஒற்றர்களுக்கு
நம் நடவடிக்கைகள் குறித்து இப்போது தான் சந்தேகம் கிளம்பியிருக்கிறதாம். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது எந்த நேரத்திலும் ஆம்பி குமாரனுக்குத்
தெரிய வரலாம் என்கிறான் நமது ஒற்றன்.”
சந்திரகுப்தன் கேட்டான். “இனி என்ன செய்வது ஆச்சாரியரே?”
அலெக்ஸாண்டர் இப்போதும் உடலில் பலவீனத்தை
உணர்ந்தான். ஓரளவு தேறி விட்ட பின் பயணத்தைத் தொடர்ந்து விட்டான் என்ற போதும் உடலில் பழைய
வலு இல்லாமல் போனது அவனுக்குச் சங்கடமாக இருந்தது. அவனுடைய வீரர்கள்
மகதத்திற்கு எதிராகப் போரிட மறுத்தவுடன் அவன் பலி பூஜைகள் நடத்தி போருக்குச் செல்வது
குறித்து ஆலோசனை கேட்ட போது பாதகம் என்றே சகுனங்கள் தெரிவித்தன. பின்பு திரும்பிப் போகிற வழியில் உள்ள பகுதிகளை வெல்வதில் அவன் வீரர்கள் பழைய
உற்சாகத்தையே காண்பித்தார்கள். தாயகம் போகப் போகிறோம் என்ற உற்சாகத்தில்
ஆரம்பத்து சாகசங்களையே போரில் காட்டினார்கள். அதனால் மறுபடி எந்த
விளக்கத்தையும் மேலான சக்திகளிடம் கேட்டறிய அவனும் முற்படவில்லை.
சிறிய அஜாக்கிரதை காரணமாக மாளவத்தில் காயப்பட்ட பின்னர் யோசிக்கையில்
எல்லாப் போர்களுக்குமே சேர்த்து தான் அந்த பலிபூஜை சகுனங்கள் ஆபத்தைச் சுட்டிக் காட்டியிருக்கின்றன
என்பது அவனுக்குப் புரிந்தது.
ஆனாலும் அதிலும் அவன் தோற்கவில்லை என்பது நிறைவாக இருந்தது. இந்தப் பாரத மண்ணில் அவன் வெற்றியாளனாகத் தான் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறான்….
அவன் மீது யவன வீர்ர்கள் எவ்வளவு அன்பாக இருந்திருக்கிறார்கள் என்பதையும்
மாளவத்தில் நடந்த நிகழ்வுகள் அவனுக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றன. ஆனாலும் பாதியில் திரும்புகிறோம் என்ற வருத்தம் அவனுக்கு மனதின் ஒரு மூலையில்
இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. குறைந்த பட்சம் மகதத்தை வெற்றி
பெற்ற பிறகு திரும்பியிருக்கலாம்….
திடீரென்று வித்தியாசமான ஓசை கேட்க ஆரம்பிக்கவே அலெக்ஸாண்டர்
தன் சிந்தனைகளில் இருந்து மீண்டவனாக ஓசை கேட்ட இடம் நோக்கிப் பார்வையைத் திருப்பினான். சில அடிகள் தூரத்தில்
ஏழு துறவிகள் அவர்களைப்
பார்த்தபடியே குதித்துக் கொண்டிருந்தார்கள்.
இதுவும் ஒருவிதமான பிரார்த்தனையோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.
ஆனால் பெரும்பாலான துறவிகள் தங்களுடைய உள் உலகத்தில் ஆழ்ந்திருப்பார்களே
ஒழிய இப்படி அடுத்தவர்களைப் பார்த்தபடி குதிப்பது அவன் காணும் முதல் அனுபவம் தான்.
அலெக்ஸாண்டர் தன் மொழிபெயர்ப்பாளனான
ஒனெஸ்க்ரீட்டஸிடம் சொன்னான். “ஏனப்படி குதிக்கிறார்கள் என்று கேள்”
ஒனெஸ்க்ரீட்டஸ் ஒரு துறவியை அருகில்
வருமாறு சைகை செய்தான். குதிப்பதை நிறுத்திய அந்தத் துறவி அவர்களை நெருங்கினார். மற்ற துறவிகள்
பழையபடி குதித்துக் கொண்டே இருந்தார்கள்.
ஒனெஸ்க்ரீட்டஸ் அவரிடம் அப்படி குதிப்பதற்கான
காரணம் கேட்டான். துறவி அவனைப் பார்க்காமல் அலெக்ஸாண்டரைப் பார்த்தபடி பதில்
சொன்னார். “என்ன குதித்தாலும் காலடி படும் இடத்தில் மட்டுமே பூமி நம்மைத்
தாங்குவதாக இருக்கிறது. அந்த இடம் மட்டுமே, அதுவும்
அந்த நேரத்தில் மட்டுமே நமக்குப் பயன்படுவதாகவும் இருக்கிறது. இறந்தாலும்
சில அடி பூமி மட்டுமே நம்மை அடக்கம் செய்வதற்கும் போதுமானதாக இருக்கிறது. இந்த உண்மை
புரியாமல் பூமியின் அனைத்து இடங்களையும் உன்னுடையதாக ஆக்கிக் கொள்ளும் முயற்சியில்
இறங்கியிருக்கிறாயே அலெக்ஸாண்டர். நீ சந்திக்கப் போகும் மரணத்தின் போது உனக்கு எத்தனை பூமி
தேவைப்படும் என்று நினைக்கிறாய்?”
ஒனெஸ்க்ரீட்டஸ் மொழி பெயர்த்துச் சொன்ன
போது அலெக்ஸாண்டர் கோபம் கொள்ளவில்லை. மகத்தான தத்துவங்களும், உண்மைகளும்
அவனுக்கு எப்போதுமே புரியாமல் இருந்ததும் இல்லை, கோபமூட்டியதும்
இல்லை. ஆனால் அவை அவனை மாற்றியதுமில்லை. துறவியை வெறித்துப் பார்த்தபடி மெல்லத்
தலையசைத்த அவன் அமைதியாகப் பயணத்தைத் தொடர்ந்தான். துறவிகள்
குதிக்கும் ஓசை அவனுக்கு சிறிது தூரம் வரை கேட்டுக் கொண்டேயிருந்தது.
பாரதம் அவனுக்குக் கடைசியாகவும் பாடம்
நடத்தி விட்டது...
(தொடரும்)
என்.கணேசன்
Bharat's last lesson to Alexander is great. Good update.
ReplyDeleteஆனாலும் மகத நாட்டை மட்டுமாவது வென்றிருக்கலாம்.,
ReplyDeleteசந்திரகுப்தன் கண்டிப்பாக வெல்லுவான், ஆனால் அலெக்சாண்டர் வெல்றத பாக்கனும் னு தோனுது..
அலெக்சாண்டரை பற்றி சாணக்கியர் புரிந்து வைத்திருப்பார்... அவன் வேறு வழியாக திரும்ப சென்றாலும் அதற்கும் ஒரு திட்டத்தை தயார் செய்தே வைத்திருப்பார்....
ReplyDelete