இந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்களும், சம்பவங்களும் முழுவதுமாக என் சொந்தக் கற்பனையே என்றும், எந்த நிஜ மனிதர்களையும், உண்மைச் சம்பவங்களையும் குறிப்பிடுவன அல்ல என்றும் உறுதியாகக் கூறுகிறேன்.
என்.கணேசன்
சேதுமாதவனிடம் தபால்காரர்
தந்து விட்டுப் போன தபால் உறையில் அனுப்பியவரின் முகவரி இருக்கவில்லை. தபால் அவர்
மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பெயருக்கு வந்திருந்தது. முகவரி
கோணல் மாணல் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த உறைக்குள்
ஏதோ சிறிய துண்டுச்சீட்டு தான் இருக்கும் போலிருந்தது. கிருஷ்ணமூர்த்தி
யாருக்காவது நன்கொடை
அனுப்பி, அதைப் பெற்றுக் கொண்டவர்கள் அனுப்பிய ரசீதாக இருக்கலாம்...
அந்தத் தபால் உறையை மகன் அறையில் மேசை
மீது வைத்து விட்டுத் திரும்பவும் ஹாலுக்கு வந்த சேதுமாதவன் சோபாவில் அமர்ந்து, பகவத்கீதையைத் தொடர்ந்து படிக்க
ஆரம்பித்தார். ஆனால் அவருடைய மனம் ஏனோ கீதையில் மறுபடி லயிக்க மறுத்தது. காரணம் புரியாத கலக்கம் அவர் மனதில் மெல்ல எழ ஆரம்பித்தது.
இது போன்ற உணர்வு சேதுமாதவனுக்குப் புதிதல்ல. அபூர்வமாய் அவர் அடிமனதில் இதற்கு முன்பும் இதேபோல் உணர்ந்திருக்கிறார். அப்படி உணர ஆரம்பித்த ஒருசில நாட்களில் ஏதாவது ஒரு துக்ககரமான சம்பவம் அவர் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. முதல் முறை அப்படி உணர ஆரம்பித்து ஒரு வாரத்தில் அவர் மனைவி மாரடைப்பில் காலமானாள். இரண்டாவது முறை அப்படி உணர ஆரம்பித்து ஒரு மாத காலத்தில் அவருடைய மருமகள் ஒரு விபத்தில் காலமானாள்.
இந்தக் கசப்பான முன் அனுபவங்களினால், அவரால் தொடர்ந்து கீதையின்
ஞான யோகத்தில் லயிக்க முடியவில்லை. பகவத்கீதையை மூடி வைத்து விட்டு
அவர் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஒன்று. ‘கிருஷ்ணா க்ளினிக்கில் இருந்து வந்திருக்க
வேண்டிய நேரம் இது. ஆனால் இன்னும் ஏனோ வரவில்லை…’
தொலைக்காட்சி ரிமோட்டை எடுத்து அழுத்தி, அவர் செய்திகள் பார்க்க
ஆரம்பித்தார். செய்தியாளர் சீனாவில் ஆரம்பித்திருக்கும் கொரோனா என்னும்
அபாயகரமான வைரஸ் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். சீனாவைக்
கலங்கடித்துக் கொண்டிருக்கிருக்கும் அந்த வைரஸ், அங்கிருந்து
கேரளாவுக்கு வந்திருக்கும் பயணிகள் மூலம் இந்தியாவுக்கும் வந்திருக்கிறது என்று செய்தியாளர்
பரபரப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார்...
போர்ட்டிகோவில் கிருஷ்ணமூர்த்தியின்
கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சேதுமாதவனின் மனம்
சற்று நிம்மதி அடைந்தது.
தொலைக்காட்சியில் அடுத்ததாக, தமிழக முதலமைச்சர்
அருணாச்சலம் சிக்கலான இருதய அறுவைச் சிகிச்சை ஒன்றுக்காக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப்
போகும் செய்தி வந்தது. முதல்வர் தளர்ச்சியுடன் விமானம் ஏறும் காட்சியையும் காட்டினார்கள். அதைப் பார்க்கையில்
சேதுமாதவனுக்கு வருத்தமாக இருந்தது.
அவர் பின்னாலிருந்து கிருஷ்ணமூர்த்தியின்
குரல் கேட்டது. ”உங்க ஃப்ரண்டு, ட்ரீட்மெண்டுக்காக
அமெரிக்கா போயிட்டாரா?”
“ம்....
ஆமா.... அவனுக்கும் என் வயசு தான். எழுபத்தியஞ்சு
முடியப் போகுதுன்னு நினைக்கிறேன். சுறுசுறுப்பா நல்லா தான் இருந்தான். திடீர்னு
சுகவீனம்னு மூனு நாள் முன்னாடி ந்யூஸ்ல சொன்னாங்க. இப்ப இந்த
ந்யூஸ்”
“நீங்க அவரைக்
கடைசியா நேர்ல எப்ப சந்திச்சீங்க?”
சேதுமாதவன் சிறு குற்றவுணர்ச்சியுடன்
சொன்னார். “அவனைப் பார்த்தே ஐம்பது வருஷமாச்சு....
அவன் கல்யாணத்துல பார்த்தது. அப்ப அவன் எம்.எல்.ஏ கூட இல்லை. ஆனா அப்பவே
கட்சில தீவிரமா இருந்தான்...”
“அதுக்கப்பறம்
நீங்க ஏன் அவரைப் போய் பார்க்கலை.” கிருஷ்ணமூர்த்தி ஆச்சரியத்துடன் கேட்டார். இது அவர்
பல காலமாக, கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த கேள்வி.
”என் உத்தியோகம்
கௌஹாத்தி, பாட்னா, டெல்லி, நாக்பூர், மங்களூர், ஹைதராபாத்னு
பல இடங்கள்ல இருந்துச்சு. ரிடையர் ஆனப்பறம் தான சென்னைக்குத் திரும்பி வந்தேன்...”
“சென்னைக்கு
நீங்க வந்தே பதினஞ்சு வருஷமாச்சு. வேணும்னா நீங்க போய் அவரைப் பார்த்திருக்கலாம்...”
அந்தக் குற்றச்சாட்டுக்கு அவர் பதில்
எதுவும் சொல்லவில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரியில் பட்டப்படிப்பு வரை உடன்
படித்தவர்கள் என்பதற்காக அதிகார உச்சத்திற்குப் போய் விட்ட நண்பனை, சந்திப்பு
என்ற பெயரில் தொந்தரவு செய்வதற்கு சேதுமாதவனுக்கு சங்கோஜமாக இருந்தது. சிறுவயதிலிருந்தே
அவர்கள் நெருக்கமாகத் தான் இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கிடையே
இருக்கும் இடைவெளி மலைக்கும் மடுவுக்குமிடையே உள்ள இடைவெளி. எம்.எல்.ஏ, எதிர்க்கட்சித்
தலைவர், பின் மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சர் என அருணாச்சலம் சமூகத்தில்
உயர்ந்து கொண்டே போயிருக்கிறார். அவருக்கு எத்தனையோ வேலைகள், சிக்கல்கள், பொறுப்புகள், தலைவலிகள், பயணங்கள்
இருக்கும் போது பழைய நட்பின் பெயரில் சென்று பார்த்து இடைஞ்சலாக இருக்கும் என்று சேதுமாதவன்
அப்போதெல்லாம் எண்ணியிருந்தார்.
அருணாச்சலம் விரும்பியிருந்தால் முதல்வரான
அவருக்கும் சேதுமாதவன் விலாசத்தைக் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமல்ல. அவரும் தொடர்பு கொண்டிருக்க முடியும். அவரும்
தொடர்பு கொள்ள முயற்சிக்காததால் சேதுமாதவனும் நண்பனைச் சந்திப்பதில் பெரிதாக ஆர்வம்
காட்டவில்லை..... இப்போது அடிமனதில் ஏற்படும் கலக்கம் அருணாச்சலத்திற்கு ஏற்படவிருக்கும்
ஆபத்து குறித்தாக இருக்குமோ என்று சேதுமாதவனுக்குச் சந்தேகம் மெல்ல எழுந்தது. தொலைக்காட்சியை
அணைத்து விட்டு அவர் யோசனையில் ஆழ்ந்தார்.
தனதறைக்கு உடைமாற்றச் சென்ற கிருஷ்ணமூர்த்தி
மேசையில் இருந்த தபால் உறையை எடுத்துப் பார்த்தார். அனுப்பியவர் முகவரி இல்லாமல் சாதாரணத் தபாலில் வந்திருக்கும்
அந்த உறையில் முக்கியமானது எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்று அவருக்குத் தோன்றியது. உள்ளே எதாவது
விளம்பரச் சீட்டு இருக்கலாம் என்று தோன்றவே, அவர் அதைத்
திறந்து பார்க்கும் சிரமத்தை எடுத்துக் கொள்ளவில்லை. அதை எடுத்துக்
கொண்டு வெளியே வந்த அவர் அதை டீப்பாயில் வைத்து விட்டு, தந்தை அருகே
அமர்ந்து, தன் கைபேசியில் தகவல்களைப் பார்ப்பதில் மூழ்கிப் போனார்.
’வயசு 52
ஆனாலும் இவனும் இந்தக் காலத்துப் பிள்ளைங்க மாதிரி ஓய்வு நேரத்திலெல்லாம் செல்போனே
கதின்னு இருக்கான். க்ளினிக்ல நோயாளிகளைப் பார்த்து களைச்சுப் போய் வர்றவனுக்கு
ஒரு மாற்றம் தேவை தான். ஆனா அதுக்கு இசை, புஸ்தகம்னு
எத்தனையோ நல்ல பொழுதுபோக்குகள் இருக்கு…’ என்று சேதுமாதவன் எண்ணினார்.
.
நீண்ட நேரமாக அந்தத் தபால் பிரிக்கப்படாமலேயே இருந்தது. சிறிது நேரம் பொறுத்துப்
பார்த்த சேதுமாதவன், பின் மகனைக் கடிந்து கொண்டார். “அந்த செல்போனைக் கீழே வெச்சுட்டு அந்த தபால் என்னன்னு தான் பாரேன்.”
தந்தையைப் பார்த்து புன்னகைத்தபடி கிருஷ்ணமூர்த்தி
அந்தத் தபாலை எடுத்துப் பிரித்தார். உள்ளே ஒரு சிறிய
துண்டுச் சீட்டு தான் இருந்தது. பள்ளிப்பிள்ளைகளின் நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழித்த
ஒரு தாளில் பாதி போலத் தெரிந்தது அதில் எழுதியிருந்ததைப் படித்த கிருஷ்ணமூர்த்தியின்
முகம் வெளிறியது.
அந்தத் தாள் அவர் கையிலிருந்து நழுவித்
தரையில் விழ, கிருஷ்ணமூர்த்தி எதோ பிரமை பிடித்தவர் போல அமர்ந்திருந்தார். சேதுமாதவன்
திகைப்புடன் மகனைப் பார்த்தபடி எழுந்தார். “என்ன கிருஷ்ணா?”
கிருஷ்ணமூர்த்தி பதில் எதுவும் சொல்லாமல்
போகவே, சேதுமாதவன் கீழே விழுந்திருந்த அந்தத் தாளை எடுத்துப் படித்தார்.
”உங்கள்
மகள் உயிருக்கு யோகாலயத்தில் பேராபத்து இருக்கிறது. எப்படியாவது
அவளைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.” என்று கோணல் மாணலான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. கையெழுத்தை
வைத்துக் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக யாரோ இடது கையால் எழுதி அனுப்பி இருப்பது
போல் தான் சேதுமாதவனுக்குத் தோன்றியது. அவருடைய உள்ளுணர்வு
உணர்த்திய ஆபத்து இது தானோ?
அவர் குழப்பத்துடனும் கலக்கத்துடனும் மகனைப் பார்த்தார். கிருஷ்ணமூர்த்தி வறண்ட குரலில்
சொன்னார். “யாரோ விளையாடறாங்கன்னு நினைக்கிறேன்” ஆனால், அவர் சொன்னதை
அவருக்கே நம்ப முடியவில்லை என்பதும் சேதுமாதவனுக்குப் புரிந்தது. ’மகளுக்கு
எதாவது ஆபத்து என்றால் இவன் தாங்கவே மாட்டான்.’
யோகாலயம் அவர்கள் வீட்டிலிருந்து சுமார்
இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு ஆசிரமம். அங்கு சில
மாதங்களுக்கு முன் தான் கிருஷ்ணமூர்த்தியின் மகள் துறவியாகச் சேர்ந்திருக்கிறாள். சேதுமாதவனின்
உள்ளுணர்வு இந்த முறையும் பொய்க்கவில்லை என்றால் அங்கு அவளுக்கு ஆபத்து இருப்பதாகச்
சொல்வது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை.
சேதுமாதவன் தன் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தாமல்
அமைதியாகச் சொன்னார். “அப்படி விளையாட்டாவே அது இருக்கட்டும். நீ ஒரு
தடவை போய் அவளைப் பார்த்து, பேசிட்டு வந்துடேன்.”
கிருஷ்ணமூர்த்தி மெல்லத் தலையாட்டினார். தன்னைக்
கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்த அவர் உடனே கிளம்ப முடிவு செய்தார்.
சேதுமாதவன் சொன்னார். “கொஞ்சமாவது
சாப்பிட்டுட்டே போயேன் கிருஷ்ணா”
“வேண்டாம்ப்பா. போய்ட்டு
வந்து சாப்டுக்கறேன்” என்ற கிருஷ்ணமூர்த்தி மீண்டும் உடைமாற்றி, கார் சாவியை எடுத்துக் கொண்டு
கிளம்பினார்.
சேதுமாதவன் கேட்டார். “நானும்
வரட்டுமா, கிருஷ்ணா?”
“வேண்டாம்ப்பா. நானே போய்ப் பார்த்து பேசிட்டு வந்துடறேன். நிஜமாவே பிரச்சனைன்னா அவளை கூட்டிகிட்டே வந்துடறேன்”
“நிதானமா
போ. வேகமாய் போகாதே” என்று சேதுமாதவன்
சொன்னார்.
கிருஷ்ணமூர்த்தி தலையசைத்து விட்டு வேகமாய் வெளியேறினார்.
Super start.
ReplyDeleteInteresting start
ReplyDeleteஉங்களது அனைத்து நாவல்கள் போன்று இந்த நாவலும் ஆரம்பத்திலேயே விறு விறுப்பாகத் தொடங்கி ஆவலை அதிகரித்து விட்டது.
ReplyDeleteYogi endra thalaippum mudhal chapterum kathai payanika pokum thalathai crystal clear aka solliteenga....
ReplyDeleteயோகாலயத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆபத்தா...? ஐயா, அவர்கள் பிரபலமான ஒரு சம்பவத்தை தழுவி எழுதுகிறார்...போல😂😂😂😂
ReplyDeleteநல்ல தொடக்கம். அடுத்தது என்னவாக இருக்கும்? என்ற யோசனை வருகிறது
ReplyDeleteஅருமையான சுவாரஸ்யமான துவக்கம்..தொடர்கிறேன்..
ReplyDelete