சந்திரகுப்தனும் சின்ஹரனும் மாளவத்தை
அடைந்த போது அங்கே ஒருவித மயான அமைதி நிலவியது. தெருக்களில் நடமாடிய மனிதர்கள் முகங்களில் இறுக்கம்
தெரிந்தது. ஆங்காங்கே காவலுக்கு நின்றிருந்த யவன வீரர்கள் மட்டுமே
தங்களுக்குள்ளே கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய
உற்சாகம் அவர்களுடன் காவலுக்கு இருந்த
மற்ற வீரர்களிடம் தெரியவில்லை. பல வெளிப்பகுதிகளின் வீரர்களான அவர்கள் கட்டாயத்துக்கு
நின்றிருப்பவர்களைப் போலத் தெரிந்தார்கள். மாளவத்தினுள் சந்திரகுப்தனும்,
சின்ஹரனும் உள்ளே நுழைந்த போது அவர்களுடைய அடையாள ஆவணங்கள் தீவிரமாகப்
பரிசோதிக்கப்பட்டன. சந்திரகுப்தன் தட்ச சீல கல்விக்கூடத்தின்
மாணவனாகவும், சின்ஹரன் அந்தக் கல்விக்கூடத்தின் வாட்பயிற்சி ஆசிரியராகவும்
அந்த அடையாள ஆவணங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தார்கள்.
நகர வாயிலில் இருந்த பரிசோதனைக் காவலர்கள் மாளவத்திற்கு அவர்கள்
வந்த உத்தேசம் என்ன என்று கேட்ட போது புதிய மாணவர்களின் சேர்க்கை தட்சசீலக்
கல்விக்கூடத்தில் சில மாதங்களில் துவங்கப் போகின்றது என்றும் என்றும், அதுகுறித்த அறிவிப்பையும், சேர்க்கைக்கான
விதிமுறைகளையும் ஒவ்வொரு பெருநகர முக்கியஸ்தர்களையும் கண்டு தெரிவித்து விட்டுச் செல்ல வந்திருப்பதாகவும்
சொன்னார்கள். அதன் பிறகு அவர்களை நகருக்குள் அனுமதித்த காவலர்கள் பின் அவர்களைத் தீவிரமாகக்
கண்காணிக்கவில்லை. ஆனாலும் அலட்சியமாக இருப்பது ஆபத்து என்பதை
உணர்ந்திருந்த சந்திரகுப்தனும், சின்ஹரனும் எச்சரிக்கையுடனேயே
நடந்து கொண்டார்கள்.
மாளவத்தின் முன்னாள் நகரத்தலைவன் இப்போது அந்தப் பொறுப்பை இழந்திருந்தான். அவனும் மாளவத்தின் மற்ற
நிர்வாக உறுப்பினர்களும் அலக்ஸாண்டரிடம் போர் புரியாமல் முன்பே சரணடைந்திருந்தால் இப்போதும்
நிர்வாகத்தின் பொறுப்புகளில் இருந்திருக்கலாம். சரணடையாமல் போரிட்டுத்
தோற்ற பின் சரண் அடைந்ததால் ஆட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இப்போது சாதாரணப்
பிரஜைகளாக மாறியிருந்தார்கள். அந்த முன்னாள் நகரத் தலைவன் வீட்டை
சந்திரகுப்தனும் சின்ஹரனும் சென்றடைந்தார்கள்.
மாளவ முன்னாள் நகரத் தலைவன் அவர்களை சந்தேகத்துடன் பார்த்தான். சந்திரகுப்தன் தன்னை அறிமுகப்படுத்திக்
கொண்டு “ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் எங்களை அனுப்பியிருக்கிறார்”
என்று சொன்னான்.
ஆச்சாரியர் பெயரைக் கேட்டவுடன் மாளவத்தின் முன்னாள் நகரத்தலைவன்
அவர்களை மிகுந்த மரியாதையுடன் உபசரித்து இருக்கைகளில் அமர வைத்தான். ஆச்சாரியர் சுமார் இரண்டு வருடங்களுக்கு
முன்பு அங்கு வந்திருந்தார்.
பாரதம் என்ற புண்ணிய பூமியை அலெக்ஸாண்டர் என்ற யவனச் சக்கரவர்த்தி ஆக்கிரமிக்க
எண்ணியிருப்பதாகவும், அவனுக்கு உதவ சில அரசர்கள் முடிவெடுத்திருப்பதாகவும்
சொன்ன அவர் அலெக்ஸாண்டரை எதிர்த்து நிற்க மற்ற எல்லோரும் சேர்ந்து நின்று போரிட வேண்டும்
என்று அவரிடம் உணர்வுபூர்வமாக வேண்டிக் கொண்டிருந்தார். மாளவத்தின்
படை பலத்தில் முழு நம்பிக்கை வைத்திருந்த நகரத் தலைவன் அலெக்ஸாண்டர் அவர்களை ஒன்றும் செய்து விட முடியாது
என்று திடமாக நம்பியிருந்தான். அதனால் அவர் பேச்சுக்கு அவன் அதிக
முக்கியத்துவம் தரவில்லை. அவர்களது அண்டை நாடும், எதிரி நாடுமான ஷுத்ரகத்தோடு சேர்ந்து எதையும் செய்வதற்கு அவன் மனம் ஒப்பவில்லை.
ஷூத்ரக நாட்டுப் பிரதிநிதிகள் அவனிடம் வந்து கோரிக்கை
வைத்தால் அது வேறு விஷயம்.
அவனாகச் சென்று அவர்களிடம் நட்புக்கரம் நீட்டுவது மாளவத்தின் பலவீனமாக
எடுத்துக் கொள்ளப்படும் என்று நினைத்தவன் ஆச்சாரியரிடம் அப்படியே சொன்னான்.
ஆச்சாரியர் கிட்டத்தட்ட இதே விதமான மனப்போக்கைப் பெரும்பாலான
இடங்களில் கண்டிருந்ததால் மனம் நொந்து அதிலிருக்கும் தவறை நீண்ட நேரம் விளக்கினார். ”அண்டை நாட்டுக்காரன் உங்கள்
சகோதரன். பரதக் கண்டத்தின் பகுதிகளில் வசிப்பவர்கள் எல்லோரும்
நம் சகோதரர்களே. சகோதரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சக்தி வாய்ந்த
எதிரியை எதிர்த்தால் மட்டுமே நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளாலும், வித்தியாசங்களாலும்
நாம் பிரிந்து நின்றால் எதிரிக்கு நம்மை வெல்வது மிகச் சுலபம். தனித்தனியாக நம்மை வீழ்த்த முடிந்த எதிரி பிறகு நம்மை எப்படி நடத்துவான் என்பது
நமக்குத் தெரியாது. அது நமக்கு மிகப் பெரிய வீழ்ச்சியாக இருக்கும்…”
இப்படி ஆச்சாரியர் எத்தனையோ சொல்லிக் கொண்டே போனார். மாளவத்தை அலெக்ஸாண்டர் வெற்றி
கொண்டால் அல்லவா அதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று மாளவ நகரத் தலைவன் நினைத்துக்
கொண்டான். அவனைப் பொருத்த வரை ஆசிரியர்கள் யதார்த்த அரசியலை அறியாதவர்கள்.
எதையும் ஏடுகளில் எழுதுவதும் சொல்லித் தருவதும் வேறு, யதார்த்தம் வேறு. இந்த அபிப்பிராயத்தினால் அவன் அவர்
கருத்தை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அதேசமயம் அவர் பற்றி அவன்
முன்பே உயர்வாகக் கேள்விப்பட்டிருந்ததால் அவரை மிகவும் மரியாதையாகவே நடத்திய அவன்,
சூழல் வரும் போது யோசிப்பதாகச் சொல்லி அனுப்பி வைத்திருந்தான்.
ஆனால் அவர் சொன்ன சூழல் வந்த போது தான் அவர் எப்படிப்பட்ட தீர்க்கதரிசி
என்பது அவனுக்குப் புரிய வந்தது.
மிகவும் தீவிரமாகப் போரிட்டும் சமாளிக்க முடியாமல் மாளவம் தோற்றது மட்டுமல்லாமல்
யவனர்களின் வெறியாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியோர்
எல்லாரும் கூடப் பலியான போது அவன் அடைந்த மன உளைச்சல் சாதாரணமானதல்ல. அவனுடைய மனைவி, மகளைக் கூட அவன் பலி கொடுக்க வேண்டி வந்தது.
காயப்பட்ட அலெக்ஸாண்டர் இறந்து விடவில்லை என்பது உறுதியாகிற வரை யவன
வீரர்களின் வெறியாட்டம் அடங்கவில்லை. சரணடைய வேண்டி வந்த போது
அவன் உணர்ந்த வேதனை, துக்கம் காலப் போக்கிலும் குறையவில்லை.
மாளவத்துக்கு நேர்ந்த கதியைக் கண்டு பயந்து போன ஷூத்ரகம் உடனே சரணடைந்து
தங்கள் வீரர்கள், மக்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டது.
ஆச்சாரியர் அனுப்பி வைத்த ஆட்களைக் காணும் போது மாளவத்தின் முன்னாள்
நகரத் தலைவனுக்கு நடந்ததெல்லாம் நினைவில் வந்து காயங்கள் புதிப்பிக்கப்பட்டன. ஆனால் அதை வெளிக்காட்டிக்
கொள்ளாமல் அவர்களிடம் அங்கு வந்த காரணத்தை மிகுந்த மரியாதையுடன் கேட்டான்.
சந்திரகுப்தன் தாழ்ந்த குரலில் சொல்ல ஆரம்பித்தான். ”நடந்த நிகழ்வுக்கும்,
தங்கள் அனைவருக்கும் ஏற்பட்ட இழப்பு துக்கங்களுக்கும் ஆச்சாரியர் தன்
மனமார்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்திருக்கிறார்.
நடந்து முடிந்ததை மாற்றும் சக்தி நம் யாருக்கும் இல்லையென்றாலும் இனி
நடக்கவிருப்பதைத் தீர்மானிக்கும் சக்தியை நாம் இழந்து விடவில்லை என்பதால் அதைச் சரியாகப்
பயன்படுத்திக் கொள்ளும்படி அவர் தங்களைக் கேட்டுக் கொள்கிறார்.”
மாளவத்தின் முன்னாள் நகரத் தலைவன் மிகுந்த வருத்தத்துடன் சொன்னான். ”எல்லாம் முடிந்த பின் இனி
செய்ய முடிந்தது என்ன இருக்கிறது இளைஞனே. உயிருக்கு உடலே பாரமாகப்
போய் விட்ட நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களை
நம்பி வாழும் ஒருசிலருக்காகவாவது நாங்கள் உயிரோடிருப்பது அவசியமாக இருப்பதால் உயிரை
மாய்த்துக் கொள்ளும் செயலில் ஈடுபட முடியவில்லை. இல்லா விட்டால்
அதையும் செய்து வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்போம்….”
சின்ஹரன் சொன்னான்.
“இனி செய்ய வேண்டியதும், செய்ய முடிந்ததும் நிறையவே
இருக்கின்றது நகரத் தலைவரே. நாம் சேர்ந்து முயன்றால் அன்னியர்
ஆதிக்கத்தில் இருந்து நம்மால் கண்டிப்பாக விடுபட முடியும். அந்தச்
செய்தியைச் சொல்லத் தான் நாங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்.”
மாளவத்தின் முன்னால் நகரத் தலைவன் முகத்தில் வேதனையும், வருத்தமும் தெரிந்தன.
அவன் சோகமாகச் சொன்னான். “ஒரு காலத்தில் இதே செய்தியை
ஆச்சாரியர் நேரில் வந்து சொன்ன போது அதை அலட்சியப்படுத்தியதற்கான பலனை நாங்கள் அனுபவித்து
வருகிறோம். அதற்காக இப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். எங்கள் ஆயுதங்கள் கூடப் பறிக்கப்பட்டு
விட்டன. எங்கள் ரதங்களும், குதிரைகளும்
கூட பறிக்கப்பட்டு விட்டன. சிறையில் எங்களை யவனர்கள் அடைக்காததற்குக்
காரணம் அத்தனை பெரிய சிறைச்சாலை இங்கு இல்லை என்பது தான். நன்றாக
ஆட்சியில் இருந்த காலத்திலேயே எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது உயிர் தவிர அனைத்தையும் இழந்து முடமாக நிற்கின்ற நிலையில் எங்களால்
செய்ய முடிந்ததாய் எதையும் என்னால் காண முடியவில்லை….”
சந்திரகுப்தன் சொன்னான். ”மனவுறுதி
ஒன்றை இழக்காத வரை ஒருவரால் செய்ய முடியாதது எதுவுமில்லை தலைவரே. நீங்கள் பட்ட அவமானத்திற்கும், வேதனைக்கும் பதிலடி தராமல்
இனி என்றுமே நீங்கள் நிம்மதி காண முடியாதல்லவா? நீங்கள் தனியாக
எதையும் செய்ய வேண்டியது இல்லை. யவனர்களைத் துரத்த நீங்கள் எங்களுடன் துணிந்து நின்றால் போதும். வழியை நாங்கள் காட்டுகிறோம். என்ன சொல்கிறீர்கள்?”
மாளவத்தின் முன்னாள் நகரத் தலைவன் நம்ப முடியாமல் திகைப்புடன்
அவர்களிருவரையும் பார்த்தான்.
இதுவும் சாத்தியமா என்று அவன் பிரமித்தான். அவர்கள்
முகத்தில் தெரிந்த உறுதியைப் பார்த்த பிறகு மெல்ல நம்பிக்கை அவன் இதயத்திலும் துளிர்க்க
ஆரம்பித்தது. அவன் உணர்ச்சி வசப்பட்டவனாகச் சொன்னான்.
“என் கடைசி மூச்சு உள்ள வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான்
தயார் வீரனே. தோல்வியாளனாக இறக்காமல் வெற்றிக்கான முயற்சியில்
இறந்து போவதையும் கூட நான் உயர்வாக நினைக்கிறேன். நான் தயார்.
என்னைப் போல் இங்கே பலர் இருக்கிறார்கள். அவர்களும்
தயார் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நாங்கள் என்ன
செய்ய வேண்டும். அதைச் சொல்லுங்கள்.”
(தொடரும்)
என்.கணேசன்
I wish to read such motivating conversations sir. keep writing them please.
ReplyDeleteசாணக்கியர்... 'அலெக்சாண்டரை முன்கூட்டியே துரத்த எவரும் ஒத்துவர மாட்டார்கள்' என தெரிந்தும் அவர்களிடம் பேசியிருக்கிறார்.... அவர்கள் தோற்ற பின் 'என்ன செய்ய வேண்டும்?' என்ற திட்டத்தையும் வைத்திருக்கிறார்.....
ReplyDeleteசாணக்கியரை நினைக்கையில் என்ன மனிதர் இவர் என்று தோன்றுகிறது....