சேதுமாதவனுக்கு மகன் வந்து சேரும் வரை இருப்பு கொள்ளவில்லை. மனம் பல
விதமாய் யோசித்து, பயந்து, பதறியது. எத்தனை தான் ஆன்மீக
நூல்களையும், தத்துவ நூல்களையும் படித்திருந்தாலும், படித்து
மனம் பக்குவப்பட்டு விட்டதாய் நினைத்துக் கொண்டிருந்தாலும், குடும்பத்தில்
ஒருவருக்கு ஆபத்து என்று வரும் போது, மனம் பதறுவதை அவரால்
தடுக்க முடியவில்லை.
அவருடைய குடும்பம் ஆரம்பத்திலிருந்தே
மிகச்சிறியது. மத்திய அரசாங்க வேலையிலிருந்த அவர், பெற்றோருக்கு
ஒற்றைப் பிள்ளை. அவருக்கும் கிருஷ்ணமூர்த்தி ஒரே பிள்ளை. மகன் டாக்டராகும்
வரை வாழ்ந்த சேதுமாதவனின் மனைவி, அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு முன் இறந்து விட்டாள். கிருஷ்ணமூர்த்தியின்
மனைவியும், மகள் சைத்ராவைப் பெற்றுக் கொடுத்து, பதினைந்து
ஆண்டுகள் வாழ்ந்து இறந்து விட்டாள். ஆகவே நான்கு ஆட்களாக
அவர் குடும்பம் இருந்ததே கூட, குறைவான காலம் தான். அதிக காலத்தில்
மூன்று பேர் தான் அவருடைய குடும்பத்தில் இருந்தார்கள். அந்த மூவரிலும்
ஒருவருக்கு ஆபத்து என்றால் மற்ற இருவரும் கவலையும், பயமும்
கொள்வது இயல்பு தானே? சேதுமாதவனுக்கு மகனை நினைக்கையில் கூடுதல் வருத்தமாக இருந்தது...
கிருஷ்ணமூர்த்தி தன் மகள் சைத்ரா மீது உயிரையே வைத்திருந்தார். அவரது மனைவியின் மரணத்திற்குப் பின், மகள் மீது அவர் வைத்திருந்த பாசம் இரட்டிப்பாகியது. தாயில்லாத குறையை மகள் எக்காலத்திலும் உணர்ந்து விடக்கூடாது என்பதில் அவர் ஆரம்பத்திலிருந்தே அதீத அக்கறை எடுத்துக் கொண்டார். அவருக்கு, தன்னைப் போலவே மகள் சைத்ராவும் டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் சைத்ரா டாக்டராக விருப்பமில்லை என்று சொன்ன போது கூடுதலாக ஒரு வார்த்தை கூட அவர் கட்டாயப்படுத்தி பேசவில்லை. அவளுடைய சந்தோஷமே முக்கியம் என்ற நிலையிலேயே அவர் அப்போதும் இருந்தார். மகள் அவள் விருப்பப்படி படிக்க அவர் அனுமதித்தார்.
கல்வியில் மிகவும் சூட்டிகையாக இருந்த சைத்ரா, கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்து
இன்ஜீனியரானாள். கேம்பஸ்
இண்டர்வ்யூவில் மிக நல்ல கம்பெனி ஒன்றில் அவளுக்கு வேலையும் கிடைத்தது. வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடமான போது, அவளுடன் வேலை பார்த்து வந்த இளைஞன் மீது அவளுக்குக்
காதல் ஏற்பட்டது. அவன் வேறு ஜாதி. பொருளாதாரத்திலும் அவர்களை விடத் தாழ்ந்த நிலையில்
தான் அந்த இளைஞன் இருந்தான். ஆனாலும் மகள் ஆசைப்பட்ட பின்
கிருஷ்ணமூர்த்தி மறுப்பு சொல்லவில்லை. அவளுடைய காதல் திருமணத்திற்கும் அவர் சம்மதித்தார்.
அந்த இளைஞனுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளுடைய
திருமணத்திற்குப் பின் தான் திருமணம் செய்து கொள்வது என்பதில் அந்த இளைஞன் உறுதியாக
இருந்தான். சைத்ராவும்
அது வரை காத்திருப்பதாகச் சொன்னாள். ஆனால் சில மாதங்கள் கழித்து புதிதாய்
ஒரு பெண் அந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள். அவள் பார்க்க
சைத்ராவை விட அழகாய் இருந்தாள். பொருளாதாரத்திலும் கூட அந்தப்
பெண்ணின் குடும்பம் மேலாக இருந்தது. அந்த இளைஞன் அந்தப் புதிய
பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்தான். அது சைத்ராவுக்கு பேரதிர்ச்சியாக
இருந்தது. அவள் உலகம் இருண்டு போனது. அதன்
பின் அங்கிருக்க முடியாமல் சைத்ரா அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்து விட்டாள்.
ஆனால் சைத்ராவால், ஏமாற்றப்பட்டதைச் சகிக்க முடியவில்லை. இதயத்தின் ஆழத்தில் காயப்பட்ட அவள் அந்த
நினைவுகளின் ரணத்திலிருந்து மீள முடியாமல் நிறையவே கஷ்டப்பட்டாள். விரக்தி, துக்கம், மன அழுத்தம் முதலானவை சேர்ந்து அவள் உலகம் சூனியமானது. நடைப்பிணம் போல் வாழ்ந்த சைத்ராவை
அந்த சூனிய உலகிலிருந்து மீட்க சேதுமாதவனும், கிருஷ்ணமூர்த்தியும்
பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்கள். தொடர்ந்து கவுன்சலிங் செய்ததன்
விளைவாக சைத்ரா ஓரளவு மனதைத் தேற்றிக் கொண்டு மீண்டாள்.
கவுன்சலிங் செய்த மனோதத்துவ நிபுணர் யோகாவும், தியானமும் அவளுடைய மன அமைதிக்குப்
பேருதவியாக இருக்கும் என்றார். யோகா, தியானம்
இரண்டையும் கற்றுத் தருவதில் யோகாலயம் நல்ல பெயரை எடுத்திருந்தது. அதனால் கிருஷ்ணமூர்த்தி மகளை அங்கே அனுப்பி வைத்தார்.
ஆரம்பத்தில் ஒருவார வகுப்புக்குப் போய்
வந்த சைத்ரா ஒரு புதிய மனுஷியாய் தன்னை உணர ஆரம்பித்திருப்பதாய் சொன்னாள். அவர்கள்
சொல்லித் தந்த பயிற்சிகளை எல்லாம் அவள் மிகவும் சிரத்தையுடன் செய்தாள். பழைய சந்தோஷத்துடன் அவள்
இல்லாவிட்டாலும், அவள் அமைதியடைய ஆரம்பித்திருப்பதை சேதுமாதவனும்,
கிருஷ்ணமூர்த்தியும் உணர்ந்தார்கள்.
அதன் பின் சைத்ரா சேதுமாதவனிடமிருந்த
ஆன்மீக புத்தகங்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்ட ஆரம்பித்தாள். அவள் அவருடன்
ஆன்மீக விஷயங்களை மணிக்கணக்கில் பேசினாள். அவற்றில்
அவருக்கிருந்த ஆழம் அவளை ஆச்சரியப்படுத்தியது.
கிருஷ்ணமூர்த்திக்கு ஆன்மீகத்தில் பெரிதாக நாட்டம் இருக்கவில்லை. ஆனால் அவர் தந்தையிடமிருந்து
மற்ற உயர்ந்த விஷயங்களைக் கற்றுக் கொண்டிருந்தார். நிறைய தான
தர்மங்கள் செய்வதிலும், ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை செய்வதிலுமே
அவர் அதிக ஆர்வம் காட்டினார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற நம்பிக்கை அவரிடம் ஆணித்தரமாய் இருந்தது.
அதை சேதுமாதவனும் ஆதரித்தார். ஆனாலும் மகன் ஆன்மீகத்தில் காட்டாத ஆர்வத்தை, பேத்தி காட்டியது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏதாவது
ஒரு வழியில் அவள் மன அமைதி அடைந்து, ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக்
கொண்டால் போதும் என்று அவர் எண்ணினார்.
ஆனால் விதியின் தீர்மானம் வேறாக இருந்தது. சைத்ரா அடுத்த மாதம் அடுத்த
நிலை வகுப்புக்கு யோகாலயத்துக்கு இரண்டு வாரங்கள் போய் வந்தாள். போய் வந்தவள் சன்னியாசம் வாங்கி யோகாலயத்திலேயே துறவியாக மீதி வாழ்க்கையை வாழ
விரும்புவதாகச் சொன்னாள். அதைக் கேட்ட போது சேதுமாதவன் பேரதிர்ச்சி
அடைந்தார். கிருஷ்ணமூர்த்தியோ உடைந்தே போனார். அவர்கள் உலகம் இருண்டு போனது.
கிருஷ்ணமூர்த்தி மகள் மனதை மாற்ற நிறைய
முயற்சிகள் செய்தார். எதுவும் பலனளிக்கவில்லை. முடிவில்
அவர் கண்கலங்கிச் சொன்னார். “உன்னை விட்டால்
எங்களுக்கு வேற யாருமில்லை சைத்ரா”
சைத்ராவும் அதை உணர்ந்தே இருந்ததால்
அவர் அப்படிச் சொன்னவுடன் கண்கலங்கினாள். ஆனாலும் அவள் தன்
முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. “என்னை மன்னிச்சுடுங்கப்பா. எனக்கு
துறவுல தான் நிம்மதி கிடைக்கும்னு தோணுது..”
சேதுமாதவன் சொன்னார். “சைத்ரா, காதல்ல காயப்பட்டிருக்கிற உன் மனசுக்கு, தியானம், யோகா எல்லாம் ஒரு மருந்தாயிருக்குங்கறதுல எங்களுக்கும் சந்தோஷம் தான். ஆனா மருந்தே உணவாயிட முடியாதும்மா. சின்ன வயசுல இருந்தே உனக்கு துறவுல நாட்டம் இருந்திருந்தால் நான் நிச்சயம் நான் உன்னைத் தடுத்திருக்க மாட்டேன். ஒரு ஆள் ஏமாத்துனதுக்கு உலக வாழ்க்கைல இருந்தே நீ ஒதுங்கிக்கறது சரியான முடிவாய் எனக்குப் படலை ”
சைத்ரா தன் தந்தையை எந்த அளவுக்கு நேசித்தாளோ, அந்த அளவுக்குத் தன் தாத்தாவை
மதித்தாள். ஆழமானவர், அமைதியானவர்,
நேர்மையானவர், மிக நல்ல மனிதர், உண்மையான ஆன்மீகவாதி, என்ற சொற்களுக்கெல்லாம் அடையாளமாக
வாழும் மனிதராகத் தான் அவரைப் பார்த்தாள். அவர் சொன்னதில் அவள் தவறு காணவில்லை. ஆனால் ”இப்போதைக்கு எனக்கு இந்த முடிவு தான் சரியானதா படுது. ஒருவேளை தவறுன்னு பிறகு எனக்குப் புரிஞ்சுதுன்னா, கண்டிப்பா
நான் திரும்பி வர்றேன் தாத்தா.” என்று சொல்லி, தான் எடுத்த முடிவில் அவள் உறுதியாய் இருந்தாள். அவள்
உறுதியாய் இருப்பதைக் கண்டு, வேறு வழியில்லாமல், அவள் துறவியாவதற்கும் அவர்கள் அனுமதியளித்தார்கள்.
சில அமைப்புகளில் செய்வது போல துறவறம்
பூணுபவர்களை மொட்டை அடிக்கும் வழக்கம் யோகாலயத்தில் இருக்கவில்லை. பூ, பொட்டு
முதலான அலங்காரங்களைத் தவிர்ப்பதும், காவியுடை, அணிவதும்
மட்டுமே அங்கு அவசியங்களாக
இருந்தன. எனவே சைத்ரா என்றாவது குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப விரும்பினால்
உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்து விடலாம்...
அப்படி ஒரு நாள் சைத்ரா திரும்பிவரக்கூடும்
என்ற இந்த எதிர்பார்ப்பில் தான் கிருஷ்ணமூர்த்தியும், சேதுமாதவனும்
இருந்தார்கள். அப்படி இருக்கையில் தான், அவள் துறவியாகப்
போய் மூன்று மாதங்கள் கழித்து, இந்த மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது...
எத்தனையோ துக்கங்களையும், இழப்புகளையும்
சந்தித்து சமீப காலமாகத் தான், சேதுமாதவனும், கிருஷ்ணமூர்த்தியும், நடந்ததை
எல்லாம் ஏற்றுக் கொண்டு அமைதியடையப் பழகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனிதன்
அபூர்வமாய் எப்போதாவது உணரும் அமைதிக்கும் கூட அற்பாயுசு தானோ?....
(தொடரும்)
என்.கணேசன்
தற்போது விற்பனையில்
716 பக்க நாவலை வாங்கிப் படிக்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் அழைக்கவும்.
இன்னும் கூடுதல் சுவாரஸ்யமாய்த் தொடர்கிறது..வாழ்த்துகள்..
ReplyDeleteVery interesting sir. I will be waiting every monday for the episodes, till I return to India, to read the novel. Thank you🙏
ReplyDeleteVegu suvarasyam. Thuraviyana pennuku enna abayam.
ReplyDeleteசேதுமாதவனைப் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் எவ்வித சஸ்பென்ஸும் இல்லாமல் இரண்டாம் எபிசோடிலேயே கூறிவிட்டீர்கள்.... அருமை...
ReplyDeleteசைத்ரா கண்டிப்பாக திரும்பி வருவாள்... ஏனெனில் அவள் காதல் தோல்வியால் சென்றிருக்கிறாள்.... மேலும், அவள் சென்ற பாதை மட்டும் தான் ஆன்மீகம் என்பது தவறு...
ReplyDelete