நரேந்திரன் இல்லாத சமயத்தில் அந்த அபார்ட்மெண்ட்ஸில் ரா பாதுகாப்பு
தீவிரமாக இல்லாத காரணத்தால் அஜீம் அகமது அனுப்பிய கொலையாளி அபார்ட்மெண்ட்ஸின் பின்புற
காம்பவுண்டு சுவர் ஏறிக் குதிப்பதில் பிரச்னை இருக்கவில்லை. அவன் நீல
நிற சீருடையில் யாரும் சந்தேகப்பட முடியாத தோற்றத்தில் இருந்தான். நரேந்திரனின்
ஃபளாட் ஏ 7 என்பதும் பொதுவாக இந்த நேரத்தில் அவன் தாய் சமையலறையில் இரவுச்
சமையலில் மும்முரமாக இருப்பாள் என்பதும் அந்தக் கொலையாளி ஏற்கெனவே சேகரித்து வைத்திருந்த தகவல். அஜீம் அகமதின்
போன்கால் வந்து அரை மணி நேரத்தில் அங்கே வந்து சேர்ந்திருந்த அவன் ஏ ப்ளாக் கட்டிடத்துக்குள்
போகாமல் பி ப்ளாக்
கட்டிடத்திற்குள் நுழைந்தான். லிப்ஃடைப் பயன்படுத்தாமல் அவன் மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தான். இரண்டாம்
மாடியைக் கடந்து மூன்றாம் மாடியை நோக்கிப் போகும் படிகளில் ஒரு பக்கத்துச் சுவரைத்
தாவிக் குதித்து எம்பி மேலே இருந்த கண்ணாடி ஜன்னல் கதவைச் சிறிது சிரமப்பட்டு இழுத்தான். அங்கிருந்து
பார்க்கையில் ஏ 7ன் சமையலறையின் பின்னால் இருந்த துணி
உலர வைக்குமிடம் தெரிந்தது. சமையலறையில் விளக்கு
எரிந்து கொண்டிருந்தது. கொலையாளி தான் கொண்டு வந்திருந்த கையெறி வெடிகுண்டைக் குறி
பார்த்து ஏ 7 ன் துணி உலர வைக்கும் இடத்தை நோக்கி வீசினான். அடுத்த
வினாடி வெடிகுண்டு வெடிக்கும் ஓசையில் எல்லாக் கட்டிடங்களும் சில
வினாடிகள் நடுங்கி ஓய்ந்தன. அவன் அமைதியாகப்
படியில் இறங்க ஆரம்பித்தான். லிஃப்ட் இருக்கையில் யாருமே படிகளில் ஏறுவதோ இறங்குவதோ கிடையாது
என்பதால் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.
(அடுத்த வாரம் முடியும்)
வெளியே வந்தவன் ஏ 7லிருந்தும் 8லிருந்தும்
கிளம்பியிருந்த புகைமண்டலங்களைப் பார்த்தான். திகைப்பிலும்
அதிர்ச்சியிலும் அங்கிருந்த எல்லோர் கவனமும் அங்கேயே நிலைத்திருக்க மேலும் பலர் அக்கம்பக்கத்திலிருந்து
ஓடிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் களேபரத்தில் அவன் அமைதியாக வெளியேறினான். கண்டிப்பாக
சிசிடிவி கேமராக்களை ஆராயும் போது அவன் தெரிவான் என்றாலும் பலத்த ஒப்பனையோடு வந்திருந்த
அவன் யாரென்று கண்டுபிடிப்பது அவர்களால் முடியாத காரியம்...
நரேந்திரன் நாகராஜுக்குப் போன் செய்த போது அவன் கைகள் லேசாக
நடுங்கிக் கொண்டிருந்தன. கண்கள் ஈரமாகி இருந்தன. நரேந்திரன்
குரல் தழுதழுக்கச் சொன்னான். “மகராஜ் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, இனி வரும்
ஜென்மங்களிலும் கூட நீங்கள் செய்திருக்கும் உதவிகளுக்கு என்னால் கைம்மாறு செய்ய முடியாது...”
அரை மணி நேரத்திற்கு முன்பு தான் நாகராஜ்
நரேந்திரனுக்குப் போன் செய்திருந்தான். அதிசயமாய் இந்த
மனிதர் ஏன் அழைக்கிறார் என்று யோசித்தபடி பேசிய நரேந்திரனிடம் நாகராஜ் சொன்னான். “உங்கம்மாவை
உடனடியாக சி அல்லது டி ப்ளாகில் ஏதாவது ஒரு வீட்டிற்குப் போய்ப் பேசிக் கொண்டிருக்கச்
சொல். சீக்கிரம்”
இத்தனை மட்டும் சொல்லி விட்டு இணைப்பை
நாகராஜ் துண்டித்து விட்டான். ஆபத்தின் எச்சரிக்கையை உணர்ந்த நரேந்திரன் உடனடியாகத் தாயிற்குப்
போன் செய்தான். “அம்மா உடனடியா வீட்டை விட்டு வெளியே போங்க. சி அல்லது
டி ப்ளாக்ல எதாவது வீட்டுல பேசிகிட்டிருங்க. கேள்வி
எதுவும் கேட்காதீங்க. சீக்கிரம் போங்க ப்ளீஸ்...”
மகன் குரலை வைத்தே நிலைமையை உணர்ந்த
அவன் தாய் சுமித்ராவும் வேறெதுவும் பேசாமல் உடனடியாக அவன் சொன்னபடியே தங்கள் ஃப்ளாட்டை
விட்டு வெளியேறியிருந்தாள். டி ப்ளாகில் இருக்கும் அவளுக்குப் பழக்கமான வயதான தம்பதிகளைப்
பார்த்து நலம் விசாரித்துக் கொண்டிருக்கையில் தான் அந்த வெடிகுண்டு வெடித்த சத்தம்
அவள் காதை அறைந்தது.
நன்றி சொன்ன நரேந்திரனிடம் நாகராஜ்
சொன்னான். “காப்பாற்றுபவன் இறைவன். நான் வெறும்
கருவி தான். ஆனால் கருவிக்கும் நல்லவர்களுக்கு உதவ முடிவதில் ஒரு ஆத்மதிருப்தி
இருக்கிறது...”
அதோடு அவன் இணைப்பைத் துண்டித்து விட்டான். நரேந்திரன்
இருந்த இடத்திலிருந்தே கண்கலங்க இறைவனுக்கும் நாகராஜுக்குமாய் சேர்த்து கைகூப்பினான்.
அஜீம் அகமதுக்கு அந்தக் கொலையாளி போன் செய்தான். ”வேலை முடிந்தது
தலைவா”
அஜீம் அகமது திருப்தியுடன் டிவி ரிமோட்டை
எடுத்தான். டெல்லியில் ”அடுக்குமாடிக் குடியிருப்பில்
வெடிகுண்டு வெடித்தது” என்ற தலைப்பில் அந்தச் செய்தி எல்லா செய்தி சேனல்களிலும்
ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒரு அறிவிப்பாளர் பரபரப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார். “வெடிகுண்டு
வெடித்த ஃப்ளாட் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்குச் சொந்தமானது. அந்த ஃப்ளாட்டும்
அதற்கடுத்த ஃப்ளாட்டும் பாதிக்கும் மேல் எரிந்து சாம்பலாயிருக்கிறது. தீயை அணைக்க
தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே
யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. உயிர்ச்சேதம், பொருட்சேதம்
குறித்த விவரங்கள் தீயணைப்பு முடிந்தவுடன் தான் தெரியவரும்....”
’பாவம் மகேந்திரன்
மகன்.... அப்பனைப் போலவே நிஜமாகவே துரதிர்ஷ்டசாலி தான். அஜீம் அகமதைப்
பகைத்துக் கொண்டவர்கள் யாரும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வழியில்லை’ என்று மனதினுள்
சொல்லிக் கொண்டு டிவியை அணைத்து விட்ட அஜீம் அகமது இங்கிருந்து தப்பித்துப் போகும்
இடத்திலும் ஒரு நாளுக்கு மேல் தங்கப் பிரியப்படவில்லை. கண்டிப்பாக ரா
வீறு கொண்டு எழும். கூடுதல் வேகத்தோடு அவனைத் தேடும். அதனால் நாளை மறுநாள்
காலை இந்தியாவிலிருந்து வெளியேற ஏற்பாடுகள் இப்போதே செய்ய ஆரம்பித்தான். அதை
அவன் இன்னும் ஜனார்தன் த்ரிவேதியிடம் கூடச் சொல்லவில்லை. வெளிநாட்டில் அவன் இருப்பிடத்துக்குப்
போய்ச் சேர்ந்தபின் சொன்னால் போதும்....
அஜீம் அகமதின் சகா ஒருவன் தன் இருப்பிடத்திலிருந்து இரவு 11.26க்குக் கருப்புக் காரில் கிளம்பிய
தகவல் நரேந்திரனுக்கு வந்தது. அந்தத் தகவலை ’ஆபரேஷன் ஏஸ்கொயர்’ செயல்வீரர்களுக்கு
உடனடியாக அவன் அனுப்பி வைத்தான். அந்த சகா நேரடியாக அஜீம் அகமதை அழைத்துப் போக வந்தால் இரவு
12.10க்குள் வந்து விடலாம். வேறெங்காவது போய் வேறெவனையாவது அழைத்து வருவதாய் இருந்தால்
மேலும் தாமதமாகலாம்....
அஜீம் அகமதின் சகா வேறெங்கும் போகாமல்
நேராக அஜீம் அகமது தங்கி இருக்கும் இடத்துக்கே வந்தான் என்றாலும் குறைந்த வேகத்திலேயே
வந்தான். யாராவது பின் தொடர்கிறார்கள என்று அடிக்கடி அவன் பார்த்துக்
கொண்டான். யாரும் அவனைப் பின் தொடரவில்லை. எங்கே போகிறான்
என்பது தெரிந்தவர்கள் பின் தொடரும் அவசியமில்லை என்பதை அறியாத அவன் நிம்மதியாக
12.22 மணிக்கு அஜீம் அகமது இருக்கும் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான்.
தொழிற்சாலையின் அலுவலகத்தில் இருந்து
வேவு பார்த்துக் கொண்டிருப்பவன் பரபரப்புடன் பார்க்க ஆரம்பித்தான். அஜீம் அகமதை ஒரு முறை நேரில் பார்க்கும் ஆர்வம் அவனுக்குள்
இந்த இரண்டு நாட்களில் அதிகமாயிருந்தது. அந்தப் பகுதியின்
மிக முக்கிய பகுதிகளில் ரகசியக் கேமிராக்கள் வைத்து கண்காணிப்பு அறையிலிருந்து கண்காணித்துக்
கொண்டிருந்த நரேந்திரனும் தன் எதிரியை நேரில் பார்க்க மிக ஆர்வமாக இருந்தான். அவர்கள்
மனநிலையிலேயே மற்றவர்களும் இருந்தார்கள்.
அஜீம் அகமதின் சகா வெளியிலேயே காரை
நிறுத்தினான். அவன்
காரின் கண்ணாடிக் கதவுகளை மேலேற்றியே இருந்தான். அவன் காரிலிருந்து கீழே இறங்கவில்லை.
கூர்க்கா எழுந்து வந்து காரின் பின் கதவைத் திறந்து
வைத்தபடி நின்றான். அடுத்த நிமிடம் மின்னல் வேகத்தில் சத்தமில்லாமல்
அஜீம் அகமது ஓடி வருவது தெரிந்தது. அவன் பெரிய தொப்பி
ஒன்றை அணிந்திருந்தான். அவன் தலை குனிந்தபடியே ஓடி வந்ததால் முகம் சரியாகத் தெரியவில்லை.
லாவகமாக அவன் காரின்
பின்சீட்டில் ஏறிக் கொண்டு கதவைச் சாத்திக் கொள்ள கார் வேகமாக அங்கிருந்து கிளம்பியது.
வரும் போது குறைவான வேகத்தில் ஓட்டி வந்த சகா இப்போது மிக வேகமாகக் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
கண்காணிப்பு அறையில்
பரபரப்புடன் அவன் எந்த வழித்தடத்தில் போவான் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது
நேரத்தில் அந்தக் கார் நாலாவது வழித்தடத்தில் இருந்த கேமிராவில் தென்பட்டது.
நாலாவது வழித்தடம்
என்ற தகவல் உடனடியாக எல்லாருக்கும் அனுப்பப்பட்டது. நரேந்திரனுக்கு அன்வரை எண்ணி வியக்காமல்
இருக்க முடியவில்லை. காரணம் அவன் முன்பே அஜீம் அகமது நான்காவது வழித்தடத்தில் தான்
போவான் என்று அனுமானித்து வைத்திருந்தான். அதனால் தான் அவன் தன்னை அந்த வழித்தடத்திலேயே
இருத்தும்படி நரேந்திரனிடம் கோரிக்கையும் வைத்திருந்தான்.
என்.கணேசன்
Even in last moments of your novel, thrilling effect is retained. Super sir.
ReplyDeleteநிச்சயமாக காரில் போவது உண்மையான நபரா அல்லது போலியான நபரை காரில் அனுப்பி விட்டு பின்பக்கமாக ஏறி குதித்துப் போகிறானா
ReplyDeleteஇன்னும் ஒரு வாரம் ஆகுமே தெரிந்து கொள்ள...
அருமை பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஅடுத்தவாரம் அஜீம் அகமதுக்கும் முடிவு இந்த தொடருக்கும் முடிவு....
ReplyDeleteIts going to end today :D
ReplyDelete