சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 28, 2022

யாரோ ஒருவன்? 78



த்தியமங்கலம் நோக்கி மறுபடி ஒருமுறை பயணித்துக் கொண்டிருந்த நரேந்திரன் மனம் கனத்திருந்தது. மதன்லாலிடமிருந்து நேற்றிரவு கறந்த உண்மைகள் ஏற்படுத்தியிருந்த ஆத்திரமும், அதிர்ச்சியும் இன்னமும் அவனுக்குக் குறையவில்லைக்யான்சந்த் எல்லா உண்மைகளையும் கக்கி விட்டான் என்று நம்ப வைத்ததால் மட்டுமே வேறு வழியில்லாமல் மதன்லால் உண்மையைச் சொல்லி ஒரு புதிரை விடுவித்தான். ஆனால் அதிலிருந்து எழுந்த இன்னொரு கேள்விக்குப் பதில் அவனிடமும் இருக்கவில்லை. அது அந்த தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தான் தெரியும் என்றும், அதை விசாரித்துத் தெரிந்து கொள்ளும் சிரமத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவன் சொன்னது உண்மையாகத் தானிருக்க வேண்டும் என்பதை நரேந்திரன் ஊகித்தான்.   

ஆனால் எல்லாமே க்யான்சந்த் தவறு என்றும் வேலைப்பளு காரணமாகவும், விடையில்லாக் கேள்விகள் காரணமாகவும் தான் அந்த வழக்கை அப்படி முடித்துக் கொண்டதாக மதன்லால் சொன்னதை நரேந்திரன் ஒரு சதவீதமும் நம்பவில்லை. க்யான்சந்த் போன்ற ஆட்கள் எந்த அளவு போவார்கள், மதன்லால் போன்ற ஆட்கள் எதுவரை போவார்கள் என்ற வித்தியாசத்தை அறிய முடியாத அளவு நரேந்திரன் முட்டாளல்ல.

மதன்லால் சொன்னதை வைத்து தந்தையின் மரணம் எப்படி நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிந்த நரேந்திரனுக்கு மதன்லாலைச் சித்திரவதை செய்து சிறிது சிறிதாகச் சாகடித்தால் என்ன என்று தான் ஆரம்பத்தில் தோன்றியது.  அது கண்டிப்பாக அநீதியாக இருக்காது என்றாலும் கூட அவன் எதிரிகள் அளவுக்குக் கீழிறங்க அவன் மனதின் ஒரு பகுதி ஒத்துக் கொள்ளவில்லை. மதன்லால், சஞ்சய் இருவரை அவன் கடத்தி சிறைப்படுத்தியதே சட்டப்படியான குற்றம் என்றாலும் உண்மையை அறிய அவனுக்கு வேறு நேர்வழியில்லை என்ற ஒரு ஏற்க முடிந்த காரணம் இருந்தது. ஆனால் கொல்வது என்பது அவன் வேலையில் சேர்ந்தபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கும், அவன் வளர்ந்த வளர்ப்பிற்கும் ஏற்றதாக இப்போதும் இல்லை. கெட்டவர்களைத் தண்டிக்கக்கூட அவர்கள் அளவுக்கு கீழிறங்க ஏனோ நல்லவர்களின் மனசாட்சி இடம் தருவதில்லை. நல்லவர்களின் பிரச்சினையே இது தான் போலிருக்கிறது….

சத்தியமங்கலத்தில் நாதமுனியின் வீடு நடுத்தர வர்க்கத்தின் சாதாரண வசதிகள் கொண்ட வீடாக இருந்தது. நரேந்திரன் தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட போது மிக மரியாதையாக அவனை வரவேற்றார்.

உட்காருங்க சார். நீங்க வந்து பேசிட்டுப் போனதாய் பரந்தாமன் சொன்னார். மறுபடியும் உங்கள மாதிரி பெரிய இடத்துல விசாரிக்க ஆரம்பிச்சதுல ரொம்ப சந்தோஷம். எனக்கு ஆரம்பத்துல இருந்தே மாதவன் மரணத்துல சந்தேகமிருந்துச்சு. ஆனா யார் கிட்ட என்னன்னு சொல்றது? ஏழை சொல் அம்பலம் ஏறுமா? பரந்தாமன் அலமேலு மாதிரி ஒரு தங்கமான தம்பதியைப் பார்க்கறது இந்தக் கலிகாலத்துல ரொம்பவே கஷ்டம். அவங்களுக்கு இப்படி ஒரு சோதனையை அந்தப் பகவான் குடுத்திருக்க வேண்டாம்…. ஆமா…. எதாவது கண்டுபிடிச்சீகளா?

நரேந்திரன் முறுவலித்தான். “விசாரிச்சுகிட்டு தான் இருக்கோம்…. கண்டிப்பா உண்மையைக் கண்டுபிடிச்சுடுவோம்நீங்க அவங்க குடும்பத்தோட ரொம்பவும் நெருக்கமானவர்னு கேள்விப்பட்டேன். மாதவன் இங்கே அடிக்கடி வர்றதுண்டுன்னும், சிலசமயம் அவனோட அவன் நண்பர்கள் கூட இங்கே வர்றதுண்டுன்னும் கேள்விப்பட்டேன்…. உங்களுக்கு நாகராஜ்ங்கற பேர்ல யாராவது அவனுக்கு நண்பன் இருந்ததா நினைவிருக்கா?”

இல்லை…. அவர் முதல்ல அப்படியொருத்தன் வந்ததா சொன்னப்பவே நான் சந்தேகப்பட்டேன். வேற எதோ உத்தேசத்துல நண்பன்னு சொல்லிட்டு ஒருத்தன் வந்துட்டு போனதா நினைச்சேன். ஆனா அவர் அக்கவுண்ட்டுக்கு பதிமூனு லட்சத்து சொச்சம் அனுப்பிச்சிருக்கான்னு கேள்விப்பட்டவுடன என்ன நினைக்கிறதுன்னே தெரியல. யாரோ ஒரு நல்ல ஆத்மா அவங்களுக்கு எதாவது உபகாரம் செய்யணும்னு நினைச்சி செஞ்சிருக்கலாம்னு தோணுச்சு.”

அவன் கார் பின்சீட்ல நாகப்பாம்பைப் பார்த்ததா அவங்க சொன்னாங்களா?”

சொன்னாக…. என்னால நம்ப முடியல…. அவ்வளவு உறுதியா சொன்னதால நம்பாம இருக்கவும் முடியல. அந்த நாகராஜ் ஒரு புதிரா தான் தெரியறான்நான் பாம்புகள் சம்பந்தமா நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினவன்…. ஆனா எனக்கே பாம்பை நேர்ல பார்த்தா நடுக்கமா தான் இருக்கும். அப்படி இருக்கறப்ப அதை கார் பின்சீட்ல வெச்சுகிட்டு ஒருத்தன் பிரயாணம் பண்ணுவானா…. ஒன்னுமே புரியலை….”

மாதவனோட நண்பர்கள்ல கல்யாண், ரஞ்சனி, சரத் இங்கே அதிகம் வந்திருக்காங்களா?”

சரத் ரஞ்சனி இங்கே வந்ததேயில்லை. சில தடவையாவது வந்தவன் கல்யாண்னு ஒருத்தன்…. அவன் இப்ப பெரிய பணக்காரன்…. கோயமுத்தூர்ல இப்ப இருக்கான்அவனுக்கும் மாதவன் மாதிரியே பாம்புகள் மேல ஆர்வம்குறிப்பா நாகரத்தினம் பத்தின விஷயங்கள்ல ரெண்டு பேரும் ஆர்வமா என்கிட்ட பேசிகிட்டிருப்பாககல்யாணோட அப்பா கூட ரெண்டு நாள் முன்னாடி இங்கே வந்திருந்தாரு…”

நரேந்திரன் ஆச்சரியத்துடன் கேட்டான். “அவர் இங்கே அடிக்கடி வர்றதுண்டா?”

இல்லை…. சொல்லப் போனா அவர் நேத்து தான் முதல் முறையா வந்தார்…”

என்ன விஷயமாய் அவர் உங்களைப் பார்க்க வந்தார்?”

ஏதோ வேலையாய் இந்த ஊருக்கு வந்தவர் அப்படியே என்னைப் பார்த்துட்டு போலாம்னு நினைச்சு வந்ததாய் சொன்னார்…. வந்தவர் விசேஷ நாகரத்தினம் பத்தி ஆர்வமா கேட்டுத் தெரிஞ்சுகிட்டு போனார்…”

நரேந்திரனுக்குப் பாம்பாட்டி சொன்ன விவரங்களும் நினைவுக்கு வர கல்யாணின் தந்தை கண்காணிக்கப்படவும், விசாரிக்கப்படவும் வேண்டிய ஆளாகத் தோன்றினார். பாம்பாட்டியிடம் கேட்ட விவரங்களை உடனடியாக விசாரித்துத் தெரிந்து கொள்ள கிழவர் இங்கு வரை வந்திருக்கிறாரே

நரேந்திரன் சந்தேகத்தோடு கேட்டான். “நாகரத்தினம்னு நிஜமாவே ஒன்னு இருக்குங்கறதுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லைன்னு சொல்றாங்களேஅப்படி இருக்கிறதா காண்பிச்சுக்கறதும் கூட ஏமாத்து வேலைன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்…. எங்க டெல்லிக்கு பக்கத்துல ஒரு ஏமாத்துப் பேர்வழி ஒரு செத்த நாகப்பாம்பு தலைல ஏதோ ஒரு கண்ணாடிக்கல்லை உள்ளே வெச்சு தைச்சு பிறகு அதை நிஜ நாகரத்தினம்னு சொல்லி வெளியே எடுத்து வித்து பல லட்சம் மோசடி பண்ணிட்டதா பத்து வருஷங்களுக்கு முன்னாடி பேப்பர்ல படிச்சதா ஞாபகம்…”

நாதமுனி மறுக்கவில்லை… “வாஸ்தவம் தான். அந்த மாதிரி நிறைய நடக்குது. ஒரு நிஜம் இருந்ததுன்னா அதை வெச்சே ஓராயிரம் போலிகள் இந்தக் கலிகாலத்துல உருவாயிடுது. இப்படி ஓராயிரம் போலிகள் இருக்கறதாலயே அந்த நிஜமான ஒன்னு இல்லைன்னு சொல்றது சரியாயிடாதே…. நாகரத்தினம் சாதாரணமா ஒருத்தனுக்கு கிடைச்சுடாது….

நரேந்திரனுக்கு இப்போதும் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. அவன் அவரை சந்தேகத்தோடு பார்த்தான். அவர் விரிவாக சொல்ல ஆரம்பித்தார். ”அந்தக் காலத்துலயே பெரிய பெரிய ஆள்கள் எல்லாம் விவரிச்சிருக்கிற விஷயமிது. வராஹமிஹிரர் பிருஹத் சம்ஹிதைல சில விசேஷ பாம்புகளின் தலையில் ஒரு ரத்தினம் இருக்கிறதா சொல்றார். அது வண்டு, மயிலின் கழுத்து நிறம் போல பளபளக்கும்னும்  ஒரு விளக்கின் தீ ஜ்வாலை போல ஒளியை உமிழும்னும்  அது விலை மதிக்க முடியாததுன்னும் சொல்றார். நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது நாட்டில் இந்திரன் மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் செய்வான்னும் சொல்றார்…. அவர் மட்டுமில்ல காளிதாசன், கம்பன் கூட சொல்லியிருக்கிற விஷயம் இது. நம்ம சங்க இலக்கியப்பாடல்கள்லயும் சீவகசிந்தாமணி, பதினென்கீழ்கணக்கு நூல்கள்ல எல்லாமும் இதைச் சொல்லியிருக்காக…”

அகநானூறுல கூட ரெண்டு இடங்கள்ல இந்த விஷயம் வருதுஒன்னு
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்” 

இன்னொரு இடத்துல இப்படி ஒரு பாட்டு இருக்கு….
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழிபாம்பின்
திருமணி விளக்கிண் பெறுகுவை

இந்த  விஷயம் மற்ற நாடுகளுக்கும் பரவி ஷேக்ஸ்பியர் கூடAs You Like It’ நாடகத்துல சொல்றார்“Sweet are the uses of adversity, Which like the toad, ugly and venomous, Wears yet a precious jewel in his head”

என்ன, பாம்புங்கறதுக்குப் பதிலா தவளைன்னு மாத்தி சொல்லிட்டார். இப்படி இத்தனை பேருமா இல்லாத ஒன்னைப் பத்தி சொல்லிருப்பாக…”

நரேந்திரனுக்குத் தலைசுற்றுவது போலிருந்தது.




(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், சாணக்கியன் உட்பட அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.




2 comments:

  1. So many information sources of nagarathinam given here make the story real interesting. Super.

    ReplyDelete
  2. நாகரத்தினம் பற்றி முழுமையாக தெரியாமல் இருந்தது... நாதமுனி மற்றும் நரேந்திரன் உரையாடல் மூலம் அதை பற்றிய உண்மையை கூறியது...அருமை...ஐயா

    ReplyDelete