சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 14, 2022

யாரோ ஒருவன்? 76

நாகராஜின் வீட்டை நேற்றிரவு வேலாயுதமும், கல்யாணும் கண்காணித்துக் கொண்டிருந்தது தெரிய வந்த போதே ஏதோ ஒன்று நாகராஜ் வீட்டில் நடக்கின்றது என்ற சந்தேகம் நரேந்திரன் மனதில் எழுந்திருந்தது. குறிப்பாக வீட்டின் பின்பகுதியில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்று புரிந்தது. அந்த வீட்டின் பின்புறம் வேறொரு பங்களா இருந்ததால் அவனுடைய ஒற்றனுக்குப் பின்னாலிருந்து பார்த்து என்ன நடந்தது என்று சொல்ல வசதிப்படவில்லை. அதற்கு முன்பாகவே ஒரு பாம்பாட்டியும் அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதையும் அவன் சொல்லியிருந்தது நரேந்திரனின் ஆவலை அதிகப்படுத்தியது. இன்றும் அதே பாம்பாட்டி அந்த வீட்டைக் கண்காணித்து இருந்து விட்டு நாகராஜ் போகும்போது அவனைத் தொடர்ந்து போய் அவனை வணங்கிப் பேச்சுக் கொடுத்ததை அந்த ஒற்றன் சொன்னவுடன் நரேந்திரன் அவனிடம் சொன்னான். “அந்தப் பாம்பாட்டியை நாளைக்குக் காலையில் பத்து மணிக்குக் கூட்டிகிட்டு வா.”

அவனை விசாரித்து விட்டுப் பின் நாதமுனியைச் சந்தித்துப் பேசினால் சில தெளிவுகள் பிறக்கலாம்...


தீபக் வீடு திரும்பிய போது சரத் இருக்கவில்லை. லீவு போட்டு விட்டு வீட்டில் மாலை வரை இருந்த சரத் பிறகு முக்கியமானதொரு வேலை வந்து விட கம்பெனிக்கு மறுபடி போயிருந்தான்.

ரஞ்சனி மகனைக் கேட்டாள். “எப்படிடா இருந்துச்சு கொடிவேரி ஃபால்ஸ்

தீபக் உற்சாகமாகச் சொன்னான். “சூப்பரா இருந்துச்சும்மா. தண்ணி நிறைய இருந்துச்சு.... கூட்டமும் அதிகமிருக்கலை...” அடுத்து இருபது நிமிடங்கள் அவன் அந்த நீர்வீழ்ச்சியின் அழகை உற்சாகமாக விவரித்தான். மகனின் உற்சாகத்தைப் புன்னகையுடன் ரஞ்சனி ரசித்தாள். எதையும் ஆழ்ந்து ரசித்து மகிழ சிலருக்கு மட்டுமே முடிகிறது. மற்ற மனிதர்கள் மேலோட்டமாய் ரசித்து கடந்து போகிற விஷயங்களை இவர்கள் நுணுக்கமாக ரசித்துச் சொல்லி அடுத்தவர்களுக்கும் அந்த ரசனைகளை அறிமுகப்படுத்துவார்கள்...

செமயா ரசிச்சுகிட்டே குளிச்சிட்டிருக்கறப்ப திடீர்னு எல்லாமே மறைஞ்சு போய் அந்த இடத்துல மூனே பேர் குளிச்சிட்டிருக்கற மாதிரி ஒரு காட்சி அம்மா.  தண்ணீர் விழுந்துகிட்டிருந்ததால அவங்க முகம் எனக்குத் தெளிவா தெரியல. எனக்கு நெஜமாவே குப்னு வியர்த்துடுச்சு. ராஜபார்வைல அந்தி மழை பொழிகிறது பாட்டுல வர்றதண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதுன்னு வரிகள் மாதிரியே ஆயிடுச்சு.... யாரு அந்த மூனு பேரு. எனக்கு எதுக்கு அந்த காட்சி தெரியுதுன்னு ஒன்னுமே புரியலை

ரஞ்சனியின் புன்னகை உறைந்தது. தீபக் ஈரத்துணிகளை வாஷிங் மெஷினில் போடப் போனதால் தாயின் முகமாற்றத்தைக் கவனிக்கவில்லை.

அவங்க மூனு பேரும் கூட எங்கள மாதிரியே சந்தோஷமா கத்தி என்ஜாய் பண்ணிட்டே குளிச்சிட்டிருக்கறத பாத்தா அவங்களும் நண்பர்களா தான் இருப்பாங்கன்னு தோனுச்சு. அந்தக் காட்சி தெரிஞ்சது ஒரு நிமிஷமா, அஞ்சு நிமிஷமான்னு ஒன்னுமே புரியல... நாகராஜ் அங்கிள் கிட்ட கேட்டா அதுக்கும் ஏதாவது காரணம் சொல்வாருன்னு நினைக்கிறேன். திரும்பி வர்றப்ப இன்னொரு வினோதம் நடந்துச்சு....”

தீபக் தாய் எதிரில் வந்தமர்ந்தபடி அவனையுமறியாமல் சத்தியமங்கலத்தில் அவன் காரை ஒரு குறுக்குத் தெருவில் திருப்பி விட்டதையும்., கார் ஒரு வீட்டின் முன் தானாக நின்று விட்டதையும் சொல்லி அவன் சந்தித்த அந்த முதிய தம்பதியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். “அவங்கள எங்க எல்லாருக்கும் ரொம்பவே பிடிச்சுடுச்சும்மா. சே நமக்கு இப்படி ஒரு பாட்டி தாத்தா இல்லையேன்னு எனக்குத் தோண ஆரம்பிச்சிடுச்சும்மா…. என்ன மாதிரியான அன்பு தெரியுமாம்மாநாங்க யாருஅவங்க யாரு…. என்ன உறவு எங்களுக்குள்ளே…. ஆனாலும் அந்தப் பாட்டி தண்ணி வேணுமான்னு அன்பா கேட்டு வீட்டுக்குள்ளார கூட்டிகிட்டு போய் கடசில டீ சாப்டறீங்களான்னு கேட்கணும்னா என்ன மாதிரியான மனசு அவங்களுக்குன்னு யோசிச்சுப் பாரேன்இத்தனைக்கும் வசதியானவங்க மாதிரி தெரியலம்மா…. பழைய வீடு. சின்ன வீடுவீட்டுக்கு முன்னாடி நிறைய இடம்…. வெளியே ஒரு கயித்துக்கட்டில்…..”

ரஞ்சனி கண்கள் விரிந்தன. அதிர்ச்சியுடன் அவள் மகனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கே மாதவன் நின்று அவர்களைப் பார்ப்பது போல் மறுபடியும் உணர்ந்தாள்

தீபக் தன் செல்போனை எடுத்து அதில் எடுத்துக் கொண்ட செல்ஃபிகளைத் தாய்க்குக் காட்டினான். அவனும் நண்பர்களும் பரந்தாமன், அலமேலு தம்பதியருடன் நின்றிருந்தார்கள். அந்தப் பாசமான முதிய தம்பதியரைப் பார்த்தவுடன் ரஞ்சனியின் கண்கள் நிரம்பின.

தாயின் கண்கள் ஈரமானதைக் கண்டு திடுக்கிட்ட தீபக் கவலையுடன் கேட்டான். “என்னாச்சும்மா?”

பழைய யோசனைகள்டாஎன்று ரஞ்சனி மெல்லச் சொன்னாள்.

ஓ நீ உங்கப்பா, அம்மாவை நினைச்சுகிட்டியா? அவங்களும் இப்படித் தான் பிரியமாயிருப்பாங்களாம்மா

அவளுடைய பெற்றோர் நல்லவர்கள் என்றாலும் அவர்கள் அன்பு தங்கள் குடும்பத்துடன் முடிவடைந்து விட்ட அன்பு. அவர்களைப் பற்றி அவள் இப்போது நினைக்கவில்லை, ஏற்பட்ட பழைய நினைவுகளும் அவர்களைப் பற்றியதல்ல, அந்தப் படத்தில் இருக்கும் முதிய தம்பதியரைத் தான் நினைத்துக் கண்கலங்கினாள் என்பதை அவளால் அவனிடம் சொல்ல முடியவில்லை. மாதவன் இங்கே இருந்து கவனிப்பது போன்ற உணர்வு ஏன் இப்படி இரண்டாவது தடவையாக வருகிறது என்று அவளுக்குப் புரியவில்லை. அது மட்டுமல்ல அவள் மகனுக்கும் கொடிவேரி நீர்வீழ்ச்சியில் தெரிந்த காட்சி மாதவனுடையதே என்பதும், தீபக் மெயின் ரோட்டிலேயே போயிருப்பானேயானால் கண்டிப்பாக மாதவனுடைய வீட்டிற்குப் போயிருக்கவோ, அவன் பெற்றோரைச் சந்தித்திருக்கவோ முடியாது என்பதும் உறைத்த போது எல்லாமே அவளுக்கு அமானுஷ்யமானதாகத் தோன்றின. ஏன் இத்தனை வருடங்கள் கழித்து இப்படியெல்லாம் நடக்கின்றன என்பது அவளுக்குப் புரியவில்லை.

என்னம்மா பதில் சொல்லாமல் யோசிக்கிறே?” தீபக் அவள் சிந்தனைகளைக் கலைத்தான்.

ஏதேதோ பழைய நினைவுகள்... அத விடு. நீ என்ன கேட்டாய்?”

உங்கம்மா அப்பாவும் இப்படிப் பிரியமாயிருப்பாங்களான்னு கேட்டேன்

ரஞ்சனி உண்மையையே சொன்னாள். “அவங்க இந்த மாதிரி வெளியாள்க கிட்ட பிரியமாயிருந்ததா ஞாபகம் இல்லைடா”  

தீபக் விளையாட்டாகக் கேட்டான். “ஒருவேளை நான் செத்துப் போயிட்டா...”

ரஞ்சனி அவனை அந்த வாக்கியத்தை முடிக்க விடவில்லை. எந்தத் தாயும் கற்பனைக்காகக் கூடக் கேட்க விரும்பாத வாசகத்தை அவளும் தன் காதால் கேட்க விரும்பவில்லை. கண்டிப்போடு மகனைப் பார்த்தபடி மகன் வாயை அவள் பொத்தினாள்.

தீபக் கேட்க விரும்பியது இதைத் தான். “ஒருவேளை நான் செத்துப் போயிட்டா அதுக்குப் பின்னாடியும் உனக்கு அவங்க மாதிரி இருக்க முடியுமா அம்மா”. அதை அவள் சொல்ல விடாமல் தடுத்தவுடன் அவன் தாயை பாசத்தோடு அணைத்துக் கொண்டு சொன்னான். “நெருப்புன்னா நாக்கு வெந்துடாதும்மா. அத்தனை கஷ்டமும் தாண்டி இன்னும் மத்தவங்க கிட்டயும் அன்பு குறையாம அவங்க மாதிரி உன்னால இருக்க முடியுமான்னு தான் கேட்க வந்தேன்

கடவுள் சொர்க்கத்துல அவங்க மாதிரி ஆளுகளுக்கு ஒரு தனியிடம் ஒதுக்கி இருப்பான்னு நினைக்கிறேன். ஆனா எனக்கு அந்த மாதிரி இடம் கூட வேண்டாம். சும்மா வாயை மூடிகிட்டு இருடாசொல்லும் போது அவளுக்குக் குரலடைத்தது.    

அவனுக்குத் தாயின் வேதனையைப் பார்க்கக் கஷ்டமாயிருக்கவே வேறொன்றும் சொல்லாமல் மவுனமாக இருந்தான்.

சிறிது நேரம் கழித்து ரஞ்சனி மெல்லக் கேட்டாள். ”அந்தத் தாத்தா பாட்டி ஆரோக்கியமாய் இருக்காங்களா?”

அம்மா ஒரு மனுஷன் எப்படி நகர்றான்கிறத வச்சே அவனோட பொதுவான ஆரோக்கியத்த நாம கண்டுபிடிச்சுடலாம்... அத வெச்சுப் பாத்தா அவங்க ரெண்டு பேரும் ஆரோக்கியமா தான் இருக்காங்கன்னு தெரியுது... “ என்று ஆரம்பித்த தீபக் மனிதனின் அசைவுகளுக்கும் ஆரோக்கியத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பை விளக்க ஆரம்பித்தான். அந்த முதியவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்ற செய்தி ரஞ்சனிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. அவள் மருத்துவராகப் போகும் மகனின் அறிவுபூர்வமான பேச்சை ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தாள். மாதவன் அங்கு இருப்பது போன்ற உணர்வு சிறிது நேரத்தில் விலகிய கணம் மட்டும் அதை அவளால் மகனின் பேச்சுக்கிடையேயும் உணர முடிந்தது. நாகராஜை சந்தித்துப் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தால் அவரிடம் கண்டிப்பாக இப்படி உணர நேர்வது ஏன் என்று கேட்க வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டாள்.



(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், சாணக்கியன் உட்பட அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.






4 comments:

  1. Is Nagaraj playing game with them using Madhavan's spirit, with some motive? Couldn't guess the friends' and Ranjani's role. And all the connection with Nagarathinam.

    ReplyDelete
  2. வாசகர்களை எப்போதும் குழப்பத்தில் வைத்திருப்பதே என்.கணேசன் ஐயாவுக்கு வேலையா போச்சு😂😂😂😂

    ReplyDelete
  3. கிண்டியில் தங்கள் கதைகளை வெளியிடுவதில்லையா சார்?

    ReplyDelete
    Replies
    1. அமேசான் கிண்டிலில் சில நாவல்கள் வெளியாகியுள்ளன. லிங்க்-
      https://www.amazon.com/N-Ganeshan/e/B07YWCB6B3?ref_=pe_1724030_132998060

      Delete