சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 7, 2022

யாரோ ஒருவன்? 75


டுத்த அரை மணி நேரத்தில் மெக்கானிக் காரில் ஏதோ ஒரு சிறிய பிரச்சினையைக் கண்டுபிடித்து சரி செய்து விட்டுப் போய்விட அந்த வீட்டில் டீ குடித்த தீபக்கும் அவன் நண்பர்களும் அந்த முதியவர்களுடன் மிக நெருக்கமாகி விட்டார்கள். அனைவரும் அந்தப் பாட்டி தாத்தாவுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள். மிகக் குறுகிய காலத்தில் அந்த அளவு நெருக்கமாக அந்த முதியவர்களின் அன்பே காரணம் என்பதையும் உணர்ந்தார்கள்.

கிளம்பும் போது தீபக்கும் அவன் நண்பர்களும், ”கோயமுத்தூர் வந்தா எங்க வீட்டுக்கெல்லாம் கண்டிப்பா வரணும்என்று சொல்ல பரந்தாமன் மெல்லிய சோகத்துடன் சொன்னார். “நாங்க எங்கேயுமே போறதில்லை. நீங்க இந்தப் பக்கம் வந்தா கண்டிப்பா வாங்க.”

கொடிவேரி ஃபால்ஸுக்கு வந்தா கண்டிப்பா உங்களைச் சந்திக்காம போக மாட்டோம் தாத்தாஎன்று தீபக் சொன்னான்.

அலமேலு கண்கள் ஈரமாகச் சொன்னாள். “எங்க மாதவனும் அவன் ஃப்ரண்ட்ஸோட அடிக்கடி கொடிவேரி ஃபால்ஸ் போவான்

மாதவன் அவர்கள் மகன் பெயர் என்று தீபக் யூகித்தான். பாட்டி தாத்தாவிடம் கைகுலுக்கி அன்பான உபசரிப்புக்கு நன்றி தெரிவித்து விட்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.


ந்த நாகம் இறந்து போனாலும் கூட வேறு பாம்புகள் பக்கத்து வீட்டில் இருப்பதை வேலாயுதம் முந்தைய நாளிரவு கேட்ட வேறு மெல்லிய சீறல்களால் தெரிந்து கொண்டார். ’பாம்புப் பண்ணையே வெச்சிருப்பான் போலருக்கு.’

மறுநாள் காலையிலிருந்து நாகராஜ் வெளியே வரவில்லை. அவனைப் பார்க்க காலை பதினோரு மணிக்கு ஒரு பணக்காரப் பெண்மணி ஒருத்தி வந்து விட்டுப் போனாள். அவளை வரவேற்கவும், வழியனுப்பவும், சுதர்ஷன் மட்டுமே வெளியே வந்தான்.

மாலை ஐந்து மணிக்கு தான் நாகராஜ் வெளியே வந்தான் வாக்கிங் கிளம்பி விட்டான் என்று எண்ணியபடியே வேலாயுதம் கூர்ந்து பார்க்க நாகராஜ் அதிசயமாய் அவர் பக்கம் திரும்பி மெலிதாகப் புன்னகைத்தான். வேலாயுதத்திற்குக் காண்பது நிஜம் தானா என்று பலத்த சந்தேகம் வந்து மெல்லத் தன்னை ரகசியமாய் கிள்ளிப் பார்த்துக் கொண்டு கனவல்ல என்பது உறுதிப்படுத்திக் கொண்டு அவர் வாயெல்லாம் பல்லானார். “நமஸ்காரம்என்று இரு கைகளையும் கூப்பிய படி காம்பவுண்டு சுவரை அடைந்தார்.

நாகராஜ்நமஸ்காரம்என்று சொல்லிக் கொண்டே புன்னகையுடன் தலையசைத்து விட்டு மெள்ள வெளியே வந்து சுதர்ஷனுக்காக காத்து நின்றான். வேலாயுதம் வெளியே போய் பேச்சுக் கொடுப்போமா என்று யோசித்து முடிவெடுப்பதற்குள் சுதர்ஷன் வீட்டைப் பூட்டிவிட்டு வந்து சேர்ந்து கொள்ள நாகராஜும் சுதர்ஷனும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

வேலாயுதம் ஏமாற்றமடைந்தாலும் இந்தச் சிறிய புன்னகை முன்னேற்றத்தால் திருப்தி அடைந்தார்.  ஒன்றிரண்டு நாட்களில் மறுபடியும் பேசும் முயற்சியை எடுத்தால் வெற்றி பெறலாம் எனத் தோன்றியது. அந்தத் திருப்தியைக் கெடுக்கும் வகையில் வீட்டின் எதிர்புறத்தில் பாம்பாட்டி தெரிந்தான். அவன் நாகராஜும் சுதர்ஷனும் போகும் திசையிலேயே எதிர்வரிசையில் போக ஆரம்பித்தது தெரிந்தது.

பாவி சுளையா ஐநூறு ஐநூறு ரூபாயா எடுத்துக் கொடுத்தேனேடா. வாங்கிட்டு திரும்பி ஏண்டா வந்து உசிர் எடுக்கறே. ஏண்டா அவன் போற பக்கமே போறே?’ என்று மனதில் புலம்பிய அவருக்கு பாம்பாட்டி நாகராஜை வழியில் இடைமறித்துப் பேச்சுக் கொடுப்பானோ என்ற பயமும் மெல்ல எழுந்தது. அப்படிப் பார்த்துப் பேசினால் அவரிடம் இரண்டு நாள் முன்பு பேசியதை இந்தப் பாம்பாட்டி சொல்லி விடுவானோ, சொன்னால் நாகராஜ் என்ன நினைப்பான். இப்போது செய்த புன்னகையும் எதிர்காலத்தில் செய்யாமல் போய் விடுவானோ, என்ற சிந்தனைகள் தீவிரமாக எழுந்து அவருடைய நிம்மதியைக் குலைத்தன. அதனால் நரேந்திரன் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் ஒரு உளவுத் துறை ஆள் அங்கேயே மறைவில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதையும், இன்னொரு ஆள் பாம்பாட்டியை மறைவாகப் பின் தொடர்வதையும் கவனிக்கத் தவறினார்.

பாம்பாட்டியும் தன்னை ஒருவன் பின் தொடர்வதைக் கவனிக்கவில்லை. அவன் கவனமெல்லாம் எதிர்வரிசையில் போய்க் கொண்டிருக்கும் நாகராஜ் மேலேயே இருந்தது. நாகராஜும், சுதர்ஷனும் வழக்கமான விரைவான நடையில் இருக்காததால் ஓரிடத்தில் வேகமாகத் தெருவைக் கடந்து  நாகராஜ் எதிரில் போய் அவனால் நிற்க முடிந்தது.

தன் முன் பணிவுடன் வந்து நின்ற பாம்பாட்டியைக் கேள்விக்குறியுடன் நாகராஜ் பார்த்தான்.

பாம்பாட்டி இடுப்பு வரை மரியாதையுடன் குனிந்து இரு கைகளையும் கூப்பிச் சொன்னான். “நமஸ்காரம் மகராஜ்

நாகராஜ் தானும் இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தபடி அமைதியாகக் கேட்டான். “என்ன விஷயம்?”

உங்க தயவிருந்தா போதும் மகராஜ்என்று பணிவுடன் பாம்பாட்டி சொன்னான்.

நாகராஜின் பார்வை கூர்மையாகியது. “சுத்தி வளைக்காம சொல்லு. பணம் வேணுமா?” என்று கேட்டான்.

பாம்பாட்டி விசேஷ நாகரத்தினம் கிடைக்கப் பெற்ற மகாசக்தி பெற்ற மனிதனிடம் சில்லறைப் பணம் வாங்கித் திருப்தியடையும் மனநிலையில் இருக்கவில்லை. அவன் பணிவாகச் சொன்னான். “பணம் செலவாயிடும் மகராஜ். செலவாகாமல் என் வாழ்க்கைல தங்கற மாதிரி எதானும் தந்தீங்கன்னா உயிர் இருக்கற வரைக்கும் உங்களை மறக்க மாட்டேன்

நாகராஜ் புன்னகைத்தான். பாம்பாட்டி சாமர்த்தியமாகத் தான் பேசுகிறான் என்று நினைத்தபடி சொன்னான். “எதுவுமே சரியான காலத்துல கிடைச்சா தான் உன் வாழ்க்கைல தங்கும். இல்லாட்டி கஷ்டப்பட்டு வரவழைச்சா கூட கைநழுவிப் போயிடும். இதை அனுபவத்துலயே உணர்ந்தவன் நீ…”

பாம்பாட்டி ஒரு கணம் பேச்சிழந்து நின்றான்.  எத்தனை சரியான வார்த்தைகள் என்று நினைத்தவன் பிறகு வருத்தத்தோடு கேட்டான். ”இந்த ஏழைக்கு வயசு ஐம்பத்தைஞ்சாச்சு. இது வரைக்குமே சரியான காலம் வரலை. ஏழைகள் தலையெழுத்துலயே சரியான காலம்கிறது இல்லையா மகராஜ்

நாகராஜ் முகத்தில் இரக்கம் தெரிந்தது. ஆனால் உறுதியான குரலில் அவன் சொன்னான். “நீ ஏழையாய் பிறந்தது வேணும்னா விதியோட தப்பா இருக்கலாம். ஆனா நீ ஏழையாவே இருக்கறது நீயா தேர்ந்தெடுத்துகிட்டது தான். பணக்காரனாக சுலபமான வழிகளைத் தேடி விரயம் பண்ணின நேரத்துல நீ உன் திறமையையும், உழைப்பையும் நம்பி உழைச்சிருந்தா எத்தனையோ உன் வாழ்க்கைல மாத்தியிருக்கலாம்...”

பாம்பாட்டி பரிதாபமாகச் சொன்னான். “உண்மை தான் மகராஜ். அதனால தான் நான் உங்க கிட்ட இப்ப பணம் கேட்கலை. ஒரு நிரந்தரத் தீர்வுக்கு வழி காட்டுங்கன்னு சொல்றேன்...”

நாகராஜ் சொன்னான். “உன்கிட்ட இன்னும் கொஞ்சம் திருட்டுத்தனமும், ஏமாத்தற புத்தியும் இருக்கு. அதை விட்டுடுடறப்ப உன்னைப் பிடிச்சிருக்கற எல்லா பீடையும் கூட விலகிடும்

சொல்லி விட்டு நாகராஜ் நடக்க ஆரம்பிக்க பாம்பாட்டி சிலை போல சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தான். பின் மெள்ள தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் வாழ்க்கையில் அறிவுரைகளைக் கேட்காதவன் அல்ல. இந்த உலகத்தில் தாராளமாக ஒருவர் இன்னொருவருக்குத் தருவதே அறிவுரைகளைத் தான். அதனால் ஏராளமான அறிவுரைகளை அவன் கேட்டிருக்கிறான். ஆனால் இந்த நாகசக்தி படைத்த மனிதனின் அறிவுரை அவன் ஆன்மாவைத் தொட்டது. அவனை முழுவதுமாக அறிந்த மனிதனின் அறிவுரையாக அதை உணர்ந்தான். இன்னொன்றையும் கூடவே அவன் உணர்ந்தான். அவனுக்கு ஆக வேண்டிய நன்மைகளை அந்த நாகசக்தி படைத்த மகராஜ் சற்று முன் அவனுக்கு அருளி விட்டதாகவும், அவன் தன் திருட்டுத்தனம், ஏமாற்றுக்குணம் இரண்டையும் விட்டுவிட்டபின் அதைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் நம்பினான். ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் விசேஷ நாகரத்தினத்தைப் பெற்ற மனிதன் சொன்னால் அது பொய்க்காது...

இந்தச் சிந்தனைகளுடன் வீடு நோக்கி நடந்த பாம்பாட்டி தன் பின்னால் நரேந்திரனின் ஒற்றன் பின் தொடர்வதை உணரவில்லை. அவன் வீடு போய் சேர்ந்த பிறகு அந்த ஒற்றன் நரேந்திரனுக்குப் போன் செய்து நடந்ததைச் சொன்னான். நாகராஜும் அந்தப் பாம்பாட்டியும் பேசிக் கொண்டது என்ன என்பது மட்டும் அவனுக்குத் தெரியவில்லை. நரேந்திரனுக்கு நாகராஜ் என்னும் புதிர் பெரிதாகிக் கொண்டே போவது போலத் தோன்றியது.




(தொடரும்)
என்.கணேசன்

மே 2023 வரை தொடரவிருக்கும் இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில்  உடனடியாக அமேசானில் வாங்க லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


குறிப்பு: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சாணக்கியன் நாவல் அச்சகம் சந்திக்கும் சில பிரச்சினைகளால் தாமதமாகி வருகிறது. இந்த வார இறுதிக்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கிறேன். 



2 comments:

  1. பாம்பாட்டி மீண்டும் வந்து ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்துவானா?

    ReplyDelete