சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 31, 2022

இல்லுமினாட்டி 148



விஸ்வம் என்ன செய்வதென்று யோசித்தான். க்ரிஷின் பேச்சை விடக் காதில் நாராசமாக விழுவது இப்போதைக்கு அவனுக்கு வேறொன்றுமிருக்க முடியாது. அவனுடைய உபதேசம் கேட்டு விஸ்வம் மாறப் போவதுமில்லை.  ஆனாலும் இந்த முட்டாள் க்ரிஷ் எதோ சொல்ல ஆசைப்படுகிறான்.  கேட்க முடியாது என்றால் அவன் இங்கிருந்து போகவும் மாட்டான். அமானுஷ்யனும் கூடவே இங்கிருப்பான். இருவரும் சாக வேண்டியவர்களே. ஆனால் அதற்கு அவன் முயற்சி செய்ய இது உகந்த நேரமல்ல.

அமானுஷ்யன் விஸ்வத்தை விஸ்வத்தின் வேகத்திலேயே நெருங்க முடிந்தவன், செயல்பட முடிந்தவன் என்று காட்டியும் விட்டான். அவன் நினைத்திருந்தால் அவன் நிபுணனாக இருந்த வர்மக்கலை முடிச்சைப் போட்டு விஸ்வத்தைக் கோமாவிலும் ஆழ்த்தி இருக்க முடியும். தகராறுக்கு நின்றால் அடுத்த முறை அதைச் செய்யத் தயங்க மாட்டான். இத்தனை சக்திகள் பெற்று, செய்ய வேண்டிய வேலைகள் எத்தனையோ இருக்க கோமாவில் ஆழும் ஆபத்தில் சிக்குவது முட்டாள்தனம். அமானுஷ்யனின் சக்திகளை முழுவதுமாக அறிந்தாகி விட்டது. அதற்குத் தேவையானபடி பிற்காலத்தில் தயாராக்கிக் கொண்டு பின் அவனை வீழ்த்தலாம். பேசியே கொல்லும் இந்த எதிரி க்ரிஷையும் இப்போது கொல்வதை விட அவன் குடும்பத்தினரைக் கொன்ற பின் அந்த வேதனையை அனுபவிக்க வைத்த பிறகு கொல்வது தான் அவனுக்குச் சரியான தண்டனை. அதனால் இப்போதைக்கு இந்த முட்டாள் க்ரிஷ் பேச்சைக் கேட்டுத் தொலைப்போம் என்று விஸ்வம் முடிவெடுத்தான்.   

“சரி என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லி விட்டுப் போய்த் தொலை” என்று சொன்ன விஸ்வம் இந்த முட்டாளின் பேச்சைக் கடைசியாக ஒரு முறை சகிக்கத் தயாரானான். ஜிப்ஸி விதி வலிது என்று நினைத்தான்.

க்ரிஷ் ஆரம்பித்தான். “நான் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஏன் அந்த முட்டாள்தனம் செய்கிறார்கள் என்று நிறைய யோசித்திருக்கிறேன். காரணம் என் பள்ளிக்காலத்தில் வித்யாதர் என்ற நண்பன் இருந்தான். அவன் குரலைப் போன்ற இனிமையானதொரு குரலை நான் இன்று வரை கேட்டதில்லை. ஜேசுதாஸ், பி பி ஸ்ரீனிவாஸ் இருவர் குரலையும் கலந்தது மாதிரியான குரல். அற்புதமாகப் பிசிறில்லாமல் பாடுவான். ஒரு காலத்தில் இசையுலகில் அவன் சக்கரவர்த்தியாக வருவான் என்று உறுதியாக நினைத்தேன். ஆனால் அவன் துரதிர்ஷ்டவசமாக போதைப் பழக்கத்தில் சிக்கி மாற்றிக் கொள்ள முடியாமல் கடைசியில் தற்கொலை செய்து கொண்டான். சிகரம் தொட வேண்டிய குரல் வளமும், திறமையும் உள்ளவனைப் போதை இப்படிச் சீரழித்து விட்டதே என்று அவன் இறந்த நாள் முழுவதும் நான் அழுது கொண்டே இருந்தேன். நான் கடவுளிடம் பல நாள் கேட்டிருக்கிறேன். “இப்படியொரு குரல்வளத்தையும், திறமையையும் கொடுத்து அதைச் சிதைக்கிற ஒரு பழக்கத்தையும் ஏன் ஏற்படுத்திக் கொடுத்தாய் கடவுளே”. கடவுள் வழக்கம் போல பதில் சொல்லவில்லை. ஆனால் என் வேற்றுக்கிரகவாசி நண்பன் சில மாதங்களுக்கு முன்பு பதில் சொன்னான். “ஒருவன் என்ன ஆக வேண்டும் என்று அவனே தீர்மானிக்க வேண்டும் க்ரிஷ். உன் வித்யாதருக்கு இசை என்ற வரமும் இருந்தது. போதை என்ற சாபமும் கிடைத்தது. இந்த இரண்டில் ஒன்றைத் தான் வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலைமை வந்த போது அவன் போதையைத் தேர்ந்தெடுத்தான். இசை அவனுக்கு முடிந்தது.” அந்தப் பதில் என்னை நிறைய யோசிக்க வைத்தது நண்பா. இசையை ஒதுக்கி வைத்து அவனால் போதையை எப்படித் தேர்ந்தெடுக்க முடிந்தது என்று எனக்குப் புரியவில்லை. அந்த இசையைப் பிடித்துக் கொண்டு போதையை அல்லவா அவன் மறந்தும் மறுத்துமிருக்கவேண்டும்?”

”அதற்குப் பிறகு நான்  நிறைய அது சம்பந்தமான மனோதத்துவ நூல்களைப் படித்து அந்த அடிமைப்பட்ட மனநிலையை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். அந்த மனிதர்கள் அந்தப் பழக்கத்தின் இறுதி விளைவு வரை என்றுமே சிந்திப்பதில்லை என்று தெரிந்தது. இப்போதைய சந்தோஷம் முக்கியம் அனுபவித்து விடு என்று மட்டும் சொல்லி அதில் திரும்பத் திரும்ப ஈடுபடுத்துகிறது. நாளைய வீழ்ச்சியை அது மறைத்து விடுகிறது. போதை மனிதனும் இதனால் ஒன்றும் பெரிதாக வந்துவிடப்போவதில்லை என்ற பொய்யான நம்பிக்கையில் தொடர்ந்து ஈடுபடுகிறான். ஒரு நாள் விளைவு பூதாகரமாக வருகிறது. அப்போது அதைத் தடுக்க வழியில்லாமல் மடிந்து போகிறான். ஆரம்பத்திலேயே இப்படியே போனால் எதில் கொண்டு போய் முடியும் என்று அவன் கடைசி வரை யோசித்திருந்தால் அந்த விபரீதப் பழக்கத்தை கஷ்டப்பட்டாவது நிறுத்தியிருக்கலாம்...”

இவன் எதற்கு இதைச் சொல்கிறான் என்பது விஸ்வத்துக்கு விளங்கவில்லை. ஆனால் தர்மம், நியாயம், அன்பு, பொதுநலம் என்று சொல்லிச் சித்திரவதை செய்யாதது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. க்ரிஷ் சொன்னதை அவனும் முழுமையாக மனதிற்குள் ஆமோதித்தான். அவனுக்கு நோக்குவர்மம் சொல்லிக் கொடுத்த இமயமலை சாதுவும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர். சிறுவயதிலேயே நோக்குவர்மத்தில் தேர்ச்சி பெற்று விட்டிருந்த அவர் போதைப்பழக்கம் வந்த பின் வேறு எந்த உச்சத்தையும் அடையவில்லை என்பது நினைவுக்கு வந்தது. பின் தேர்ச்சி பெற்ற கலையைத் தக்க வைத்துக்கொள்ளவே அவர் நிறைய பாடுபட்டதைப் பக்கத்திலிருந்து விஸ்வம் பார்த்திருக்கிறான். இப்போதுள்ள இந்த உடலின் சொந்தக்காரன் எவ்வளவு மோசமாக தன்னை வருத்திக் கொண்டு இறந்தான் என்ற கதையை இந்த உடல் மூலம் அவன் அறிந்திருக்கிறான். உயர்வைத் தேர்ந்தெடுப்பவன் தாழ்வை விலக்க வேண்டும் என்பதில் அவனுக்கும் இரு கருத்தில்லை.  


க்ரிஷ் தொடர்ந்தான். “எதிலும் ஆழமாக ஈடுபடுபவன் தன் பழக்க வழக்கங்களின் விளைவுகளை, போக்கின் விளைவுகளைக் கடைசி வரை யோசித்துப் பார்க்க வேண்டும். அந்த முடிவுநிலை அவனுக்கு உயர்வு தானா, நிறைவு தானா, பெருமைப்படும் நிலை தானா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அது உயர்வாக இருந்தால் தொடர வேண்டும், வீழ்ச்சியாக இருந்தால் உடனடியாக அதிலிருந்து விடுபட்டுக் கொள்ள வேண்டும். அது தானே உண்மையான அறிவு நண்பா?”

அவன் சொன்ன விஷயம் சரியாக இருந்தாலும் அவன் பதிலை எதிர்பார்த்தது விஸ்வத்துக்குப் பிடிக்கவில்லை. எதற்கோ வலை விரிக்கிறான் என்று தோன்றியது. ஆனாலும் சீக்கிரம் முடித்துத் தொலையட்டும் என்று நினைத்தவனாக விஸ்வம் “ஆமாம்” என்றான்.

“நீ உன்னுடைய இப்போதைய இலக்கையும் போக்கையும் முடிவு வரை யோசித்துப் பார்த்திருக்கிறாயா நண்பா?” க்ரிஷ் கேட்டான்.

இனி இவனிடம் பதில் சொல்வது ஆபத்து என்று எண்ணிய விஸ்வம் இறுக்கமான முகத்துடன் மௌனமாக நின்றான்.

சில வினாடிகள் பதிலை எதிர்பார்த்து விட்டு க்ரிஷ் தொடர்ந்தான். “இறுதி நிலைக்கு நீ சிந்திக்க அதிகம் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை நண்பா. எர்னெஸ்டோவைப் பார், போதும். ஏனென்றால் நீ ஆசைப்படும் ஒரு பதவியில்  இருபத்தைந்து வருடங்களாக முடிசூடா மன்னராக இருக்கும் அவருக்கு பிதோவனின் இசை சலிக்கவில்லை, ஆனால் அந்தப் பதவி சலித்து விட்டது என்று அவர் சொல்கிறார். ஒருவர் சலிப்புடன் சுமந்து வரும் பதவிக்கா நீ உன் இளமைக்காலத்திலிருந்து தயாராகி வருகிறாய்? இல்லுமினாட்டியின் பழைய தலைவர்களை எத்தனை பேர் நினைவு வைத்திருக்கிறார்கள். இவரையும் உலகம் எத்தனை காலம் நினைவில் வைத்திருக்கும். இனிமேல் வரப்போகிறவர்களுக்கும் அதல்லவா நிலைமை?”

விஸ்வம் இந்தப் பேச்சின் போக்கை ரசிக்கவில்லை. அவன் சொன்னான். “தலைமைப்பதவியை வைத்துக் கொண்டு ஒருவன் என்னவெல்லாம் சாதிக்க முடிகிறது என்பது தான் ஒரு தலைவனை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது க்ரிஷ். நான் அந்தப் பதவியில் இருந்திருந்தால் உலகத்தின் விதியை மிக வலிமையாய் எழுதியிருப்பேன். பதவி சலித்துப் போவது சாதனைகளை நிறுத்தும் போது தான். நான் கடைசி மூச்சு வரை சாதனைகளை நிறுத்தியிருக்க மாட்டேன்...”

க்ரிஷ் வருத்தத்துடன் புன்னகைத்தான். “இப்போதைய போக்கே உன்னிடம் தொடருமானால் வேகமாக நிறைய செய்வாய். ஆனால் அது சாதனையாக இருக்காது. உன்நான்என்ற கர்வத்துக்குத் தீனி போடும் காரியங்களைத் தான் நீ செய்திருப்பாய்பேரழிவுகளை வேகமாகவே கொண்டு வந்திருப்பாய். நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான். இந்தப் பேரழிவுகளைக் கொண்டு வர நீ வேண்டுமா? எந்த ஒரு முட்டாளும் கூட யோசிக்காமல் செய்து முடிக்கலாமே. போதை இப்போதைய சந்தோஷத்தைச் சொல்வது போல் நீயும் இப்போதைய வெற்றியில் பெருமை கொள்கிறாய். முடிவில் என்ன சாதிக்கப்போகிறாய்?  மனதில் தணியாத அக்னியோடு ஆரம்பித்தவன் நீ. ஒரு இலக்கை எடுத்துக் கொண்ட பின் அதை அடையாமல் இருந்தவன் அல்ல நீ. இலக்கை அடையும் வரை நீ இளைப்பாறியதில்லை, அரைகுறைகளில் நீ திருப்தி அடைந்ததில்லை. உதவாத விஷயங்களில் நீ உலாவப் போனதில்லை. ஒவ்வொன்றாக எத்தனையோ அமானுஷ்ய சக்திகளைப் பெற்ற நீ கடைசியாகச் சாதிக்கப் போவது எல்லாவற்றையும் வேகமாக அழிப்பது தானா? அழிப்பதற்கு இத்தனை சிரமங்கள், உழைப்பு வேண்டுமா? எதையும் உருவாக்கி வளர்ப்பதற்கல்லவா இத்தனையும் வேண்டும்!”

மெல்ல அந்தச் சர்ச்சில் இருந்த ஓவியங்களில் மறைந்திருந்த இல்லுமினாட்டி சின்னம் மின்ன ஆரம்பித்தது. அத்தனை ஓவியங்களில் இருந்தும் பிரமிடுக்குள் இருந்த கண் பார்ப்பது போலவே அனைவரும் உணர்ந்தார்கள். இருள் மண்டிக் கிடந்த சர்ச்சில் மெலிதான ஒளி பரவ ஆரம்பித்தது.

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.





5 comments:

  1. கிரிஷ் சொல்வது‌ அனைத்தும் சத்திய வார்த்தைகள்.... அவன் சொல்வதை நாமமும் ஆமோதித்து தான் ஆகவேண்டும்....
    இரண்டுமே நம்மிடம் உள்ளது... அதில் எதை எடுத்துக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்... என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்....

    ReplyDelete
  2. வேற level Sir, பேச்சு எனும் ஆயுதத்தின் Power என்னவென்று கிரிஷ் கதாபாத்திரத்தின் மூலம் தெளிவாக காட்டிவிட்டீர்கள். அருமை

    ReplyDelete
  3. Super a poitu iruku, eagerly waiting for next moves

    ReplyDelete