தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, January 31, 2022
யாரோ ஒருவன்? 70
Saturday, January 29, 2022
Thursday, January 27, 2022
இல்லுமினாட்டி 139
Monday, January 24, 2022
யாரோ ஒருவன்? 69
Saturday, January 22, 2022
Thursday, January 20, 2022
இல்லுமினாட்டி 138
Wednesday, January 19, 2022
நீலக்கல் அற்புதமும், மற்ற அற்புதங்களும்!
ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒன்றை இரட்டிப்பாக்கும் அற்புதத்தையும் நிகழ்த்தி இருக்கிறார் என்று முன்பே சொல்லி இருந்தோம். அவர் ஊட்டியில் தங்கி இருந்த போது அவரிடம் நட்பாய் இருந்த ஒரு அம்மையார் ஒரு நீலக்கல் மோதிரத்தை தனக்கும் உருவாக்கிக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவர் வேண்டுகோளின்படியே இன்னொன்றை உருவாக்கி அவருக்குப் பரிசளித்தார். காலப்போக்கில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கும், அந்த அம்மையாருக்கும் பிணக்கு ஏற்பட்டது. ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு வேண்டாதவர்கள் அவ்வப்போது அவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாகச் சொல்லும் வழக்கம் இருந்தது. ”அவர் ஒரு பொய்யர், அவர் உருவாக்கிக் கொடுக்கும் நகல்கள் அசலின் தரத்தில் இருப்பதில்லை, மலிவானவையும், தரம் குறைந்தவையாகவும் இருக்கின்றன” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இதைக் கேள்விப்பட்ட ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் பழைய தோழி தனக்குத் தரப்பட்ட நீலக்கல் மோதிரம் அது போல இருக்குமோ என்று சந்தேகம் கொண்டார். நட்பு போய் பகை வரும் போது சந்தேகங்கள் விஸ்வரூபம் எடுப்பது சகஜம் அல்லவா? உடனே அவர் தன்னிடம் இருந்த நீலக்கல் மோதிரத்தை எடுத்துக் கொண்டு ஒரு நகைக்கடைக்குச் சென்று பரிசோதித்தார். அந்த நீலக்கல் மோதிரத்தில் தங்கமும், நீலக்கல்லும் தரம் மிக்கவை என்று நகைக்கடைக்காரர் தெரிவித்த பிறகு தான் அந்த அம்மையார் நிம்மதி அடைந்தார். பல சமயங்களில் சித்து வித்தைகளில் வரவழைக்கப்படும் பொருட்கள், வரவழைக்கப்படும் நேரத்தில் உண்மையானது போல் தோன்றினாலும் காலப்போக்கில் தகரமாகவும், கூழாங்கல்லாகவும் கூட மாறி விடுவதுண்டு. இந்த நீலக்கல் மோதிரம் பல வருடங்கள் கழிந்தும் உயர் தரத்திலேயே இருந்திருப்பது எதிரியும் ஒத்துக்கொண்ட உயர் அற்புதமாகவே இருக்கிறது.
ஒரு முறை கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் பாண்டிச்சேரிக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். கர்னல் ஓல்காட் நிறைய நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார் என்று கேள்விப்பட்டு ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பல நோயாளிகள் அவரை வந்து சந்தித்து வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருந்தனர். ரயில்நிலையங்களில் ஐந்து பத்து நிமிடம் தங்கும் சமயத்தில் அற்புதங்கள் நிகழ்த்த முடியாது என்றும், அவர் எங்காவது சில நாட்கள் தங்கியிருக்கும் போது அங்கு வந்து சந்திக்கும்படியும் கர்னல் ஓல்காட் பொறுமையாக அனைவரிடமும் சொல்லி வந்தார்.
ரயில் விழுப்புரம் ரயில்நிலையத்திற்கு வந்த போது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரைத் தூக்கிக் கொண்டு அவருடைய நண்பர்களும், உறவினர்களும் வந்து கர்னல் ஓல்காட்டைச் சந்தித்தார்கள். அவர் வசதியானவர் போலத் தெரிந்தது. அந்த முதியவர் கர்னல் ஓல்காட்டிடம் தன்னைக் குணப்படுத்தும்படிக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.. அது முடியாது என்று கர்னல் ஓல்காட் சொல்லியும் அவர் கேட்பதாயில்லை. அவர் பாண்டிச்சேரி போய்ச் சேரும் முன் தன்னைக் குணப்படுத்தும்படி மிகவும் பணிவாகவும், வணக்கத்துடனும் வேண்டிக் கொண்டார். கர்னல் ஓல்காட் மறுத்தும் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் சென்று விடவில்லை. ரயில் கிளம்பப் போகிறது என்று அறிவிப்பு வந்தும் போகாமல் கர்னல் ஓல்காட் இருக்கும் பெட்டியிலேயே ஏறிக் கொண்டார்கள். அந்த முதியவர் கர்னல் ஓல்காட்டைச் சிறிதும் இளைப்பாற விடவில்லை. கடைசியில் காலில் விழுந்து அந்த முதியவர் கெஞ்சிய போது கர்னல் ஓல்காட் வேறு வழியில்லாமல் சம்மதித்தார்.
வேறு ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்ற போது அங்கு பத்து நிமிடங்கள் ரயில் நிற்கும் என்று தெரிந்தவுடன் அந்த முதியவரைக் குணப்படுத்த கர்னல் ஓல்காட் முயற்சி செய்தார். ப்ளாட்பாரத்தில் இறங்கி அந்த மனிதரை அமர வைத்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த கை மற்றும் காலின் மேற்புறத்தில் தன் கைகளை வைத்து சில சைகைகள் முத்திரைகள் செய்து, கடைசியில் கை மற்றும் காலை கர்னல் ஓல்காட் வருடி விட்டார். ஆச்சரியகரமாக அந்த முதியவரால் கையையும் காலையும் அசைக்க முடிந்தது. இந்த நேரத்தில் ரயில் கிளம்ப ஆரம்பித்தது. அவர்களுக்கு வணக்கம் சொல்லி விட்டு கர்னல் ஓல்காட் ஓடி வந்து ரயிலில் ஏறிக் கொண்டார். அந்த முதியவரும், அவருடைய ஆட்களும் அவர் பக்கம் திரும்பியும் பார்க்காமல் ப்ளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தார்கள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கர்னல் ஓல்காட்டிடம் சொன்னார். “என்ன மனிதர்களிவர்கள். அவர்களுடைய காரியம் ஆகும் வரையில் வணக்கம் என்ன, கெஞ்சல் என்ன, காலில் விழுவதென்ன என்று சகல வழிகளிலும் வேண்டிக் கொண்டார்கள். நீங்கள் குணப்படுத்தி இத்தனை பெரிய உதவி செய்திருக்கிறீர்கள். ஆனால் ஒருவர் கூட நன்றி சொல்லவில்லை. நீங்கள் வணக்கம் தெரிவித்து ஓடி வந்து ரயிலேறும் போது கூட அவர்கள் பதில் வணக்கம் சொல்லவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவர்கள் உங்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் அவர்கள் பாட்டுக்குப் போகிறார்களே!”
கர்னல் ஓல்காட்டுக்கு இதெல்லாம் புதியதல்ல. பல இடங்களில் இந்த நன்றி கெட்ட தன்மையை அவர் பார்த்திருக்கிறார். அவர் சொன்னார். “நான் இது வரை குணப்படுத்தியவர்களில் உண்மையான நன்றி நூறில் ஒருவருக்கு மட்டும் தான் இருந்திருக்கிறது. மனிதர்களிடம் காரியமாகும் வரை ஒரு சுபாவம், காரியம் முடிந்தவுடன் வேறு சுபாவம் பார்த்து எனக்குப் பழகி விட்டது. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ‘உன் கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!” என்று உபதேசித்ததை நான் பின்பற்றி வருகிறேன்”
இந்தச் சம்பவம் நடந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில். பல சமயங்களில் நம்மவர்கள் நன்றியில்லாத தன்மை இக்காலத்திற்கே உரிய சாபம் என்றும், முன்பெல்லாம் மக்கள் உயர்ந்த குணங்களுடனும், நன்றியுடனும் இருந்து வந்தார்கள் என்றும் சொல்லக் கேட்டு இருக்கிறோம். உண்மையில் அக்காலத்திலும் கூட பெரும்பாலான மனிதர்கள் இப்படி இருந்திருக்கிறார்கள் என்பது இந்தச் சம்பவத்திலிருந்து தெரிகிறது. இது காலத்தின் தவறல்ல. மனிதர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் எக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இது மிக நல்ல உதாரணம்.
அடுத்த சம்பவம் அபூர்வ சக்திகள் கொண்டவர்களுடன் பழகுபவர்களுக்கும் அவர்களை அறியாமல் சில சமயங்களில் அபூர்வ சக்திகள் கிடைத்து விடுகின்றன என்பதை விளக்கும் சம்பவம். ஒருமுறை கர்னல் ஓல்காட் மீரட்டில் இருந்து லாகூருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவர்களிடம் நீண்ட காலம் பணி புரிந்த தாமோதர் என்ற வேலையாளும், நாராயணசாமி நாயுடு என்பவரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பயணத்தின் போது ஒரு மாலை நேரத்தில் திடீரென்று தாமோதர் என்ற வேலையாள் தூக்கக்கலக்கத்தில் பேசுவது போல கர்னல் ஓல்காட்டிடம் “நேரம் என்ன?” என்று கேட்க கர்னல் ஓல்காட் கடிகாரத்தைப் பார்த்து விட்டு “மணி ஆறாகப் போகிறது” என்றார்.
தாமோதர் ஒருவித அரை மயக்க நிலையிலேயே இருந்தான். திடீரென்று அவன் அடையாரிலிருந்து அப்போது தான் வருவதாகவும், ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கீழே விழுந்து அவர் காலில் பலத்த அடிபட்டுவிட்டது என்றும் சொன்னான். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களுடன் பல நகரங்களுக்குப் பயணித்து வந்த தாமோதர் இப்படிச் சென்னையிலிருந்து வந்தது போலப் பேசியது கர்னல் ஓல்காட்டுக்கும், நாராயணசாமி நாயுடுவுக்கும் வியப்பை அளித்தது.
சில சந்தர்ப்பங்களில் எங்கோ நடக்கும் சம்பவங்கள் வியப்பளிக்கும் வகையில் நம் கருத்தில் பதிந்து விடுவதுண்டு. தாமோதர் அவர்களிடம் வேலை பார்த்தவன், ஆன்மிகத்தில் உண்மையான ஆர்வம் உள்ளவன். ஆனால் அவன் இது வரையில் எந்த அபூர்வ சக்தியையும் வெளிப்படுத்தியவன் அல்ல. ஆனால் அவன் சொன்ன விதம், பார்த்து விட்டு வந்து சொல்பவன் போலவே இருந்ததால்
அடுத்த ஸ்டேஷன் சஹரான்பூரில்
கர்னல் ஓல்காட் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு ஒரு தந்தி அடித்தார். “இன்று ஆறு மணி அளவில் தலைமையகத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டதா?” மறுநாள் லாகூர் போய்ச் சேர்ந்த போது அடையாரிலிருந்து அவருக்குப் பதில் தந்தி வந்தது. “நேற்று மாலை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் நாற்காலியில் இருந்து எழும் போது வலது பாதம் பிசகி அவர் கீழே விழுந்து வலது முட்டியில் பலத்த அடிபட்டிருக்கிறது”
அதை எப்படி தாமோதர் அறிந்தான் என்பது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி : தினத்தந்தி