சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 20, 2022

இல்லுமினாட்டி 138


வாங் வே பரபரப்புடன் விஸ்வத்துக்குப் போன் செய்து பேசினார். உபதலைவர் போன் செய்து தெரிவித்த தகவலைச் சொல்லி விட்டு பதற்றத்துடன் கேட்டார். “அவர் பிழைத்துக் கொள்ள வழி இருக்கிறதா?”

கிழவர் ஒயினைக் குடித்திருந்தால் கண்டிப்பாக அவர் பிழைத்துக் கொள்ள வழியில்லை. ஆனால் அப்படிக் குடித்திருக்கா விட்டால் அவருக்கு நெஞ்சு வலி வரவும் வாய்ப்பில்லை. மரணச் செய்தி எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த நேரத்தில்  இந்த அரைகுறை நிலைமைச் செய்தி விஸ்வத்துக்கும் திருப்தி அளிக்கவில்லை. வாங் வேயிடம் அவன் கேட்டான். “ஒருவேளை அவர் இறந்திருந்தால் இங்கே சொல்ல வேண்டாம் என்று ம்யூனிக் கொண்டு போய் இருக்க வாய்ப்பு இருக்கிறதா? இதையெல்லாம் தீர்மானிப்பது யார் இம்மானுவலா? இல்லுமினாட்டியா?”

“இல்லுமினாட்டி தான். அதாவது உபதலைவர் தான் தீர்மானிப்பார். ஆனால் அவரிடமே இம்மானுவல் தலைவரின் மரணச் செய்தியைச் சொல்லாமல் இருந்தால் தலைவர் சொன்னதாக அவன் சொல்வது தான் பின்பற்றப்படும்”

“தலைவர் ம்யூனிக் போய் விட்டார் என்பதும் இம்மானுவல் சொல்வது தானா இல்லை அதை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டீர்களா?”

“அவர் போனது உண்மை தான். எனக்கு வேண்டியவன் வாஷிங்டன் விமான நிலையத்தில் வேலை செய்கிறான். அவனிடம் உறுதிப்படுத்திக் கொண்டு விட்டேன்.”

“அவரை ஸ்ட்ரெச்சரில் கொண்டு போனார்களா? இல்லை அவர் நடந்தே விமானம் ஏறினாரா?”

“நானும் அவனிடம் அதைத் தான் கேட்டேன். அவன் அதைக் கவனிக்கவில்லை என்று சொன்னான். அவருடையது தனிவிமானம் என்பதால் அது தனியான வி.ஐ.பி தளத்திலிருந்து தான் கிளம்புகிறது. அவரைச்சுற்றி ஒரு கூட்டமே எப்போதும் இருப்பதால் அவனுக்குச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. ஆனால் அவருடைய தனி விமானம் இங்கிருந்து அதிகாலை மூன்று மணிக்குப் போய் விட்டது என்பது மட்டும் நிச்சயம் என்கிறான். இங்கே அவர் பங்களாவிலும் பாதுகாவல் பழையபடி குறைந்து விட்டிருக்கிறது. அதனால் அவர் போயிருப்பது உறுதி.... ஆனால் உடல்நிலை எப்படி இருந்தது என்பது தான் தெரியவில்லை. நேரில் உபதலைவரைப் பார்க்கும் போது புதியதாக எதாவது தகவல் இருக்கிறதா என்பது தெரியும்”

விஸ்வம் தன் முதல் திட்டத்தின் முடிவு தெரியாமலும், இரண்டாம் திட்டத்திற்கு வாய்ப்பு நழுவியதிலும் ஏமாற்றத்தை உணர்ந்தான். ஜிப்ஸி எங்கேயோ போயிருந்தான். அவன் எங்கே போகிறான் என்ன செய்கிறான் என்று கேட்கச் சில சமயங்களில் விஸ்வத்துக்குத் தோன்றியிருக்கிறது என்றாலும் அவன் கேட்பதைத் தவிர்த்தான்.  அவனிடம் சில மாற்றங்களையும் சமீப காலங்களில் விஸ்வம் கவனித்தான். விஸ்வம் உடல் மிக பலவீனமாக இருந்த போது ஜிப்ஸி தானாக வந்து தேவையான தகவல்களை அவ்வப்போது தருவான். ஆனால் இப்போது விஸ்வம் உடல் ஓரளவு நன்றாகத் தேறி விட்ட பின் அவன் முன் அளவு எதையும் தானாகத் தெரிவிப்பதில்லை. இனி நீயாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவை என்று விட்டு விலகி நிற்கும் தோரணையாகவே அது தெரிந்தது. விஸ்வம் பழைய உடலில் இருந்த போது இரண்டே முறை தான் வந்து அவன் வழி நடத்தியிருக்கிறான் என்பதையும் விஸ்வம் நினைத்துப் பார்த்தான். முதல் முறை இலக்கில்லாத வாழ்க்கை வாழ்ந்த அவனை மகாசக்திகளைத் தேட ஊக்கம் தந்து விட்டுப் போனான். இரண்டாவது முறை இல்லுமினாட்டியின் பக்கம் அவனைத் திருப்பி விட்டுப் போனான்.  இரண்டாவது உடலில் அவன் குடிபுகுந்த பின் தான் அவனுடனேயே ஜிப்ஸி இருக்க ஆரம்பித்தான். அவ்வப்போது காணாமல் போனாலும் தேவையான சமயங்களில் ஆபத்பாந்தவனாக இருக்கிறான்.  ஆனால் சிறிது சிறிதாக அவன் நடவடிக்கைகளில் தலையிடாத போக்கு ஜிப்ஸியிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. எல்லாம் நல்லதற்கே என்று விஸ்வம் இப்போது நினைத்தான். அவனும் அடுத்தவர்களை அண்டி வாழ விரும்பவில்லை. மிகப் பலவீனமான நேரங்களில் மற்றவர் உதவி தேவை தான். ஆனால் அந்தக் கட்டத்தைத் தாண்டிய பிறகு மற்றவர் உதவியை எதிர்பார்த்தே இருப்பது கேவலம். விஸ்வத்தைப் போன்ற ஒரு தன்னிறைவு தேடும் மனிதனுக்கு அது அழகோ, கௌரவமோ அல்ல!


வாங் வே உபதலைவரைப் பார்த்தவுடன் மிகுந்த அக்கறையும் கவலையும் காட்டிக் கேட்டார். “தலைவர் எப்படி இருக்கிறாராம்?” மற்ற இரு தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும் கூட இந்தத் திடீர்ச் செய்தியால் அதிர்ச்சியடைந்திருந்தது தெரிந்தது.

உபதலைவர் சொன்னார். “தெரியவில்லை. இப்போது அவர்கள் இன்னும் விமானத்தில் தான் இருப்பார்கள். ம்யூனிக்கில் இறங்கியவுடன் இம்மானுவலிடம் பேசச் சொல்லியிருக்கிறேன்…”

வாங் வே அங்கலாய்த்தார் “நன்றாகத் தான் இருந்தார். நேற்றைய விருந்தில் கூட அவருக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை என்று சொன்னார்கள். பின் என்ன ஆயிற்றோ?”

“தெரியவில்லை. வயதாகி விட்டால் எப்போது எந்தப் பிரச்சினை வரும் என்று யாரால் சொல்ல முடியும்?”

வாங் வே உபதலைவரைக் கேட்டார். “தலைவர் வரும் புதன்கிழமை அனைத்து உறுப்பினர்க் கூட்டம் ஒன்றை கூட்டச் சொல்லியிருந்தார்.  விஸ்வத்தையும் கலந்து கொண்டு பேச அனுமதித்திருந்தார். அந்தக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டி வருமா?”

உபதலைவர் வழுக்கைத் தலையைத் தடவியபடி சொன்னார். “பொறுங்கள். பார்ப்போம். இரண்டு நாளில் தெரிந்து விடும். பிறகு முடிவு செய்வோம்”


விமானத்தில் சென்று கொண்டிருந்த போது மூவரும் கர்னீலியஸ் டைரியில் எழுதி வைத்திருந்த வாசகங்களைப் பற்றியே யோசித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். கிளம்புவதற்கு முன் இம்மானுவல் அதை க்ரிஷுக்கும் அனுப்பி வைத்திருந்தான். ம்யூனிக் சென்றவுடன் அவன் கருத்தையும் கேட்க முடியும். அந்த வாசகங்களில் அவர்களுக்கு நிறைய புரியவில்லை. ஆனால் இப்போது விஸ்வமும் அவன் கூட்டாளியும் ஏதோ ஒரு தொழும் இடத்தில் மறைந்திருக்கிறார்கள் என்பதும், விஸ்வம் பெரும் சக்தி பெறுவான் என்பதும், தெளிவாகப் புரிந்தது. அவன் கூட்டாளி ஆலோசனை சொல்வான், விஸ்வமும் அவனும் சேர்ந்து விதியை எல்லோருக்குமாய் சேர்ந்து எழுதுவார்கள் என்பதும் தெரிந்தது. எல்லாமே விஸ்வத்துக்குச் சாதகமாக இருப்பதாக எர்னெஸ்டோ நினைத்தார். முக்கியமாக அவன் பெரும் சக்தி பெறுவதும், அவன் உலகத்திற்கும் சேர்த்து விதி எழுதுவதும் அவருக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது.

அவர் சொன்னார். “இதை நான் நம்புவதாக இல்லை. சுவடியில் இருப்பதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தச் சுவடி எப்படி யார் கைக்குக் கிடைத்தது, அதை எழுதியவர் யார், கர்னீலியஸ் மொழி பெயர்த்தாரா இல்லை யாராவது சொல்லச் சொல்ல இதை எழுதினாரா என்றெல்லாம் நமக்குத் தெரியவில்லை… என்னைப் பொறுத்த வரை இல்லுமினாட்டியும் உலகமும் காப்பாற்றப்பட்டு விட்டது. நாம் நம்பிக்கை இழப்பதற்காக யாரோ இட்டுக்கட்டியதாகவும் இது இருக்கலாம்…”   

அக்‌ஷய் புன்னகைத்தான். ’தலைவர்கள் தாங்கள் நம்ப நினைப்பதையே நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையிலேயே எதையும் தீவிரமாகச் செய்கிறார்கள். அதனாலேயே அவர்கள் தலைவர்களாக நீடிக்கிறார்கள்’ என்று தோன்றியது.

எர்னெஸ்டோ இம்மானுவலிடம் கேட்டார். “சாலமன் பற்றித் தெரிந்து கொள்ள நீ அமைத்திருந்த குழு இது வரை எதாவது கண்டுபிடித்திருக்கிறதா?”

“நிறைய கண்டுபிடித்திருக்கிறார்கள். அதையெல்லாம் தயாராக வைத்திருப்பதாக நாம் விமானம் ஏறுவதற்கு முன் தான் எனக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார்கள்”

எர்னெஸ்டோ திருப்தி அடைந்தார்.



ர்னெஸ்டோ வாஷிங்டன் விட்டுப் போன பிறகு விஸ்வத்திற்கு அங்கிருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. காலை உபதலைவரைச் சந்தித்தும் எந்தப் புதிய தகவலும் இல்லை என்று வாங் வே தெரிவித்தவுடன் அவன் ம்யூனிக் திரும்புவது என்று நிச்சயித்தான். அவனுக்கு அங்கே நிறைய வேலைகள் இருந்தன. அந்தச் சுவடியில் சொன்னபடி அவன் சக்திகள் பெற வேண்டும். பழைய விஸ்வமாக விஸ்வரூபம் எடுக்க வேண்டும். விதி எழுத வேண்டும். இத்தனையும் ஆக வேண்டுமானால் அவன் ஒரு சக்தி மையத்தில் நிலைத்து நிற்க வேண்டும். பின் மற்றவற்றை எல்லாம் ஈர்ப்பது சுலபம். அவன் மனம் தெளிவடைந்தது.

அவன் ம்யூனிக் திரும்ப முடிவெடுத்திருப்பதாய் சொன்ன போது ஜிப்ஸி சொன்னான். ”இந்த முறை ஆபத்திருக்கிறது. நீ முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்”

அதற்கு அதிகம் அவன் சொல்லவில்லை. அதை விஸ்வம் எதிர்பார்க்கவும் இல்லை. ஆபத்தை எதிர்நோக்கத் தயாராகவே வாஷிங்டனிலிருந்து புறப்பட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்





6 comments:

  1. Sema tension building episode. Super sir.

    ReplyDelete
  2. கிட்டத்தட்ட இம்மானுவேல் விஸ்வம் இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டான்... இம்முறை விஸ்வத்துக்கு அங்கு தங்கி சக்தியை பெறுவது கடினமான விசயமாக இருக்கும்...

    ReplyDelete
  3. Washington bungalow the most important event expected by vishwam. How come he is not keeping source to gather information on what exactly happened ? Gypsy also missed out this aspect ? Surprised missed out

    ReplyDelete
  4. Vanakkam sir, ungaludaya new book epo release aagum?

    ReplyDelete