சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 17, 2022

யாரோ ஒருவன்? 68



லோ நாகராஜ் மகராஜிடம் தான் பேசுகிறேனா?”

இல்லை. அவருடைய உதவியாளர் சுதர்ஷனிடம் பேசுகிறீர்கள். நீங்கள்?”

நான் நரேந்திரன். ரா, உளவுத்துறை, அதிகாரி. எனக்கு நாகராஜ் மகராஜிடம் சிறிது பேச வேண்டியிருக்கிறது.”

என்ன விஷயமாக?”

பல வருடங்களுக்கு முன்னால் மணாலியில் நடந்த ஒரு வெடிகுண்டு விபத்து சம்பந்தமாக விசாரணை செய்து கொண்டிருக்கிறேன். அது விஷயமாக

அதற்கும், மகராஜுக்கும் என்ன சம்பந்தம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

அவருடைய நண்பன் மாதவன் தான் அதில் மரணம் அடைந்தவர். அதனால் சில தகவல்கள் அவரிடமிருந்து கிடைத்தால் எனக்கு அது உதவியாக இருக்கும்…”

மகராஜ் இப்போது மிக முக்கியமான விரதம் மேற்கொண்டிருக்கிறார். அதனால் அவருடைய தினசரி தர்ஷனைக் கூட மூன்று நாளைக்கு ரத்து செய்திருக்கிறார்.”

அப்படியானால் நான் மூன்று நாள் கழித்து தொடர்பு கொள்ளட்டுமா?”

சரி. ஆனால் நிச்சயமாக அவர் சந்திப்பார் என்று நான் உறுதியளிக்க முடியாது.”

மிக்க நன்றி

எத்தனை பெரிய அதிகாரியிடம் பேசுவதேயானாலும் கறாராகப் பேசுவதில் நாகராஜின் உதவியாளனுக்கே கூட எந்தத் தயக்கமும் இல்லாமல் இருப்பதை நரேந்திரன் கவனித்தான். மாதவனின் நண்பனாக நாகராஜைச் சொன்னதைக் கேட்டும் கூட சுதர்ஷனுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லைஅதை அவன் மறுக்கவும் இல்லை. உண்மையில் நரேந்திரன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஏதோ ஒன்று இதில் இன்னும் பிடிபடாமல் இருக்கின்றது. மாதவனின் இரு நண்பர்களையும் விசாரித்தால் அந்தப் பிடிபடாத ஒன்று விளங்கலாம்.

கல்யாணையும் சரத்தையும் விசாரிக்க நரேந்திரன் கிளம்பினான்.

  

ரேந்திரன் சரத்தையும், கல்யாணையும் தனித்தனியாகத் தான் விசாரித்தான். இருவரும் ஒரே விதமாகத் தான் பதில்களைச் சொன்னார்கள். மாதவன், சரத், கல்யாண் மூவரும் சேர்ந்து தான் மணாலிக்கு ரயிலில் போனார்கள். அங்கே ஒரு விடுதியில் தங்கினார்கள். முதல் இரண்டு நாட்கள் மணாலியைச் சுற்றிப் பார்த்தார்கள். பனிப்பொழிவை ரசித்தார்கள். பின் சற்று தொலைவில் ஒரு மலைக்கு ட்ரெக்கிங் போக முடிவெடுத்தார்கள். போகும் அன்று காலை தான் மாதவன் தன் ஷூ பிய்ந்திருப்பதைக் கவனித்தான். சீக்கிரமாய் போய் ஒரு ட்ரெக்கிங் ஷூ வாங்கிவந்து விடுவதாகச் சொல்லி மாதவன் தனியாகப் போனான். போனவன் வரவேயில்லை. அவன் வராதது அவர்களை கவலைக்குள்ளாக்கியது. அப்போது தான் செய்திகளில் ஒரு காரில் வெடிகுண்டு வெடித்திருக்கிறது என்றும் அடையாளம் தெரியாத ஒரு இளைஞன் பலியாகி இருக்கிறான் என்றும் சொன்னார்கள். இருவரும் பயந்து கொண்டே பார்க்கப் போனால் இறந்து போயிருந்தது மாதவன் தான் என்பது தெரிந்தது. இருவரும் அதிர்ந்து போனார்கள். இது தான் நரேந்திரன் கேள்விகளுக்கு அவர்கள் சொன்ன பதில்களின் சாராம்சம்.

நீங்கள் எந்த லாட்ஜில் தங்கினீர்கள் என்று சொல்ல முடியுமா?”

இருவருக்குமே 22 ஆண்டுகள் ஆகி விட்டபடியால் அது நினைவிருக்கவில்லை. ஆனால் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் அந்த லாட்ஜ் இருந்தது. மலிவான வாடகை என்பதால் அதில் தான் மூவரும் தங்கினார்கள் என்பதை இருவருமே சொன்னார்கள்.

மாதவனுக்கு எதிரிகள் இருக்கிறார்களா?”

இல்லை என்று இருவரும் ஆணித்தரமாகச் சொன்னார்கள்.

உடல் கருகி விட்டிருந்ததே. நீங்கள் எப்படி இறந்தது மாதவன் தான் என்பதைக் கண்டுபிடித்தீர்கள்?”

பாதி கருகியிருந்த டிரைவிங் லைசென்ஸும், டாக்ஸி டிரைவர் பயணியைப் பற்றிச் சொன்ன அடையாளங்களும் மாதவன் தான் இறந்தவன் என்பதை ஊர்ஜிதப்படுத்தியதாக இருவரும் சொன்னார்கள்.

இருவருக்குமே டாக்ஸி டிரைவர் பெயரோ, விசாரணை செய்த போலீஸ் அதிகாரி பெயரோ நினைவிருக்கவில்லை.

எல்லாக் கேள்விகளுக்கும் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தெளிவாக இருவரும் பதில் சொன்ன விதம் நரேந்திரனை யோசிக்க வைத்தது. நூறு சதவீதம் உண்மையைச் சொல்பவர்கள் அல்லது முன்பே ஒத்திகை பார்த்துக் கொண்டு தயாராக இருப்பவர்கள் மட்டுமே இப்படி சிறிதும் யோசிக்காமல் பதில் சொல்ல முடியும்நினைவில்லை, தெரியவில்லை என்றால் இருவருமே அப்படியே சொன்னார்கள். பதில் சொன்னால் ஒரே மாதிரி சொன்னார்கள். நரேந்திரனுக்கு அது இயல்பானதாகத் தெரியவில்லை. சின்னச் சின்ன வித்தியாசங்களாவது பொதுவாக இருக்கும்

நரேந்திரன் மகேந்திரன் புகைப்படத்தையும், அஜீம் அகமது புகைப்படத்தையும் அவர்களிடம் காட்டி அவர்களை மணாலியில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டான்

இருவருமே அந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவர்களைப் பார்க்கும் போதே தெரிந்தது. இருவரும் அந்தப் புகைப்படங்களை முதல் முறையாகப் பார்க்கிறார்கள் என்பதும் தெரிந்தது. யாரிந்த ஆட்கள் என்ற கேள்வி இருவர் பார்வையிலுமே இருந்தது.

நீங்கள் மாதவன் இறப்புக்குப் பின்பு அவர் வீட்டுக்கு எப்போதாவது போவதுண்டா?

இல்லை. அவன் பெற்றோரின் துக்கம் பார்க்கும் தெம்பு எங்களுக்கு இருக்கவில்லைஎன்பது இருவரின் பதிலாகவும் இருந்தது.   

இருவரில் கல்யாண் மிக தந்திரமானவனாகத் தெரிந்தான். அவனிடம் முன்னெச்சரிக்கையும், பதறாத தன்மையும் சரத்தை விடக் கூடுதலாக இருப்பதை நரேந்திரன் உணர்ந்தான்.

சரத்திடம் நரேந்திரன் ரஞ்சனியையும் விசாரிக்க வேண்டும் என்று சொன்ன போது மட்டும் சரத் அமைதியிழந்தது நரேந்திரனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவளை விசாரிப்பது அவசியம் தானா என்பது போல் சரத் நரேந்திரனைப் பார்த்தான். “நாளை வீட்டுக்கு வந்து விசாரிக்கிறேன்என்று நரேந்திரன் சொன்ன போது அவன் பரிதாபமாகப் பார்த்தான். கேள்வி பதில்களை எதிர்பார்த்து ஒத்திகை பார்த்துக் கொண்டது போல் ரஞ்சனியையும் விசாரிக்கக்கூடும் என்பதை சரத் எதிர்பார்த்திருக்கவில்லை போலிருந்தது.

மாதவனின் நண்பன் நாகராஜ் உங்களுக்கும் நண்பன் தானா? என்ற கடைசிக் கேள்வி தான் இருவரையும் அதிர வைத்த கேள்வியாக இருந்தது.

எந்த நாகராஜ்?” என்று சரத் அதிர்ச்சியுடன் கேட்டான். “அந்தப் பெயரில் எங்களுக்கு எந்த நண்பனும் கிடையாதே! யார் அப்படிச் சொன்னார்கள்?”

கல்யாணையும் அந்தக் கேள்வி அமைதியிழக்க வைத்தது. “அப்படி எந்த நண்பனும் மாதவனுக்கோ எங்களுக்கோ கிடையாது. யாரோ உங்களுக்குத் தவறான தகவலைத் தந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்என்று சொன்னவன் யார் அப்படிச் சொன்னார்கள் என்ற தகவலை அவனிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருப்பது தெரிந்தது.

நரேந்திரன் அவர்களுக்கு அதைச் சொல்லாமல் கிளம்பி விட்டான்


ந்தக் காட்டு காளிக் கோயிலில் நள்ளிரவில் உடுக்கைச் சத்தம் இரவின் அமைதியைக் குலைத்துக் கொண்டு அமானுஷ்யமாகக் கேட்டது. சில நரிகளும் ஓநாய்களும் தங்கள் பங்குக்கு விசித்திர ஒலிகளை எழுப்பி அமானுஷ்யத்தைக் கூட்டின. காளிங்க சுவாமி காளி சிலையின் காலடியில் இருந்தார். இருந்த ஒரே அகல் விளக்கும் மிகவும் தள்ளி இருந்ததால் அவர் படுத்திருக்கிறாரா இல்லை அமர்ந்திருக்கிறாரா என்று அவரது சீடர்களுக்குத் தெரியவில்லை. அந்த உக்கிர பூஜை முடிகிற வரை ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தாண்டக்கூடாது என்று அவர் முன்பே உத்தரவிட்டிருந்ததால் அவர்கள் தள்ளி இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பூஜையின் முடிவில் அவர்கள் விதியே மாறப்போகிறது, அதற்கான வழி தெரியப்போகிறது என்று அவர் கடந்த சில நாட்களாகவே சொல்லி வருகிறார். அவர் அனாவசியமாக எதையும் சொல்பவர் அல்ல என்பதை அவர்கள் இருவரும் நன்றாக அறிவார்கள். பணத்தில் குறியாக இருப்பார் என்றாலும் பக்தர்களிடம் கூடப் பணத்திற்காகப் பொய்யாக எதையும் சொல்லி அவர் நம்பிக்கை ஊட்ட முற்பட்டதில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் போன் செய்த ஜனார்தன் த்ரிவேதி ஒரு காலத்தில் காளிங்க சுவாமிக்குப் பரம பக்தராக இருந்தவர். அவருடைய உயர்வுகளை முன்கூட்டியே காளிங்க சுவாமி சொல்லச் சொல்ல அள்ளி அள்ளிக் கொடுத்தவர். கடைசியில் ஒரு முறை இனி வீழ்ச்சி தான் என்று சொன்ன போது அவருக்காக விசேஷ பூஜைகள் செய்து அந்த விதியை மாற்றச் சொன்ன போது எதைச் செய்தாலும் அந்த விதி மாறாது என்று சொன்ன பின் அவர் வருவதையே நிறுத்திக் கொண்டார்.

சீடர்கள் காளிங்க சுவாமியிடம் ஏன் அப்படி கறாராய் சொன்னீர்கள் என்ற போதுஉண்மை அது தான். அதை வேற எப்படி சொல்றது?” என்று அலட்சியமாய் சொன்னவர் அவர். அதனால் வெற்று வார்த்தைகளை வீசுபவர் அல்ல அவர்.

எல்லாவற்றையும் விட்டு விட்டு காளிங்க சுவாமியின் சீடர்களாக வந்திருந்த இருவருக்கும் எதிர்காலக் கனவுகள் நிறைய இருந்தன. அந்தக் கனவுகளை நிறைவேற்ற முடிந்த கற்பக விருட்சமாக அவர்கள் சுவாமியைக் கண்டிருந்தார்கள். இந்தப் பூஜை முடிந்த பிறகு எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும் வழி தெரியப்போகிறது என்று அவர் சொல்லி இருப்பதால் அது என்ன வழி என்று அறிய அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. நரேந்திரனுக்கு நாகராஜ் பற்றி எப்படி தெரியும்? என்று இருவரும் அதிர்ச்சி அடைய போகிறார்கள்...
    காளிங்க சுவாமி மற்றும் நாகராஜ் இருவருக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல தெரிகிறது....

    ReplyDelete