சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 3, 2022

யாரோ ஒருவன்? 66


வேலாயுதம் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்க பாம்பாட்டி அவரைக் கூர்ந்து பார்த்தான். திடீரென்று அதைக் கவனித்த வேலாயுதம் எச்சரிக்கையடைந்தார். அவருடைய எண்ணங்களை அவன் படித்திருப்பானோ?
         
அவர் ஒரு பெருமூச்சு விட்டபடி சொன்னார். “யார் யாருக்கு எவ்வளவு விதிச்சிருக்கோ அதைவிட இம்மியளவும் அதிகம் கிடைக்க வழியில்லை. அவனுக்கு ஏற்கெனவே நாகசக்தி இருக்கறதால மேல மேல கிடைச்சுகிட்டே இருக்கு. நம்மள மாதிரி ஆள்கள் தூரத்துல நின்னு வாயைப்பிளக்க மட்டும் தான் முடியும். நாகரத்தினங்களைப் பத்தி இத்தனை தெரிஞ்சு வச்சிருக்கியே உனக்கு ஏதாவது இதுவரை கிடைச்சிருக்கா?”

பாம்பாட்டி வருத்தத்தோடு சொன்னான். “அதான் சொன்னேனே. ஒரு தடவை எனக்கு கிடைக்க இருந்துச்சுகடைசி நிமிஷத்துல கைநழுவிப் போச்சு. நீங்க சொன்னபடி எனக்கு விதிக்கலை போல...”

வேலாயுதம் நீண்டகாலம் பழகியவர் போல அவனைத் தட்டிக் கொடுத்துக் கேட்டார். “என்ன ஆச்சு?”

பாம்பாட்டி தன் பழைய கசப்பான நினைவுகளைச் சொல்ல விரும்பவில்லை. “பழையதைச் சொல்லி எதுவும் ஆகப்போறதில்லை. அதை விடுங்க

பழையதை நினைத்துப் பார்க்கும் மனநிலையில் கூட அவன் இல்லை என்பது அவருக்கு ஆறுதலாக இருந்தது. அவர் அவனைக் கேட்டார்.  “சரி... நீ இங்கே எங்கே தங்கியிருக்கிறாய்?”

பக்கத்தில் புலியகுளத்தில் தான்.... வந்து ஒரு மாசமாச்சு. எனக்கு எப்பவுமே ஸ்திரமான ஒரு இடம் கிடையாது. நாடோடி மாதிரி சுத்திகிட்டே இருப்பேன். எந்த இடத்திலும் அதிகபட்சம் ஆறு மாசம் தான்....”

புலியகுளம் அங்கிருந்து சுமார் மூன்று கிலோமீட்டருக்குள் தான் இருந்தது. அவன் மிக அருகாமையில் வசிப்பது ஆபத்தாக அவருக்குப் பட்டது. அவ்வப்போது திரும்பவும் அவன் வரக்கூடும். வந்து கல்யாணைப் பார்த்தால் அடையாளம் கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்து விடலாம். இந்த நேரத்தில் அது அதிகப் பிரச்சினைகளை உருவாக்கலாம். இனி இந்தப் பாம்பாட்டியால் ஆக வேண்டியது எதுவும் இல்லை, அறிய வேண்டியதும் எதுவுமில்லை என்பதால் அவன் ஊரைவிட்டுப் போனாலே நல்லது. குறைந்தபட்சம் கண்ணில்படாமல் இருப்பது மிகநல்லது.

குடும்பம்...?” அவர் கேட்டார்.

நான் தனிக்கட்டை தான். பல்லு பிடுங்கின பாம்புகள் தான் இப்போது என் குடும்பம்

வருமானம்?”

வயித்தை நிரப்பற அளவு கிடைக்குது. அதிகமுமில்லை. கம்மியுமில்லை...”

அவன் சொன்னது அவரைச் சிறிதும் பாதிக்கவில்லை. ஆனால் பாதித்தது போல முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டார். அவனிடம் மேலும் இரண்டு ஐநூறு ரூபாய்நோட்டுக்களைத் தந்தார். “வெச்சுக்கோ. எனக்கென்னவோ பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப ஆபத்தான ஆளாய் தெரியறான். அவன் பக்கத்து வீட்டுக்கு வந்து இத்தனை நாளாச்சு. எங்க யார்கிட்டயும் அவன் முகம் கொடுத்து பேசினதில்லை. அத்தனை கர்வம்.  அவன் கிட்ட வேண்டிய அளவு பணமும் இருக்கு. அமானுஷ்ய சக்தியும் இருக்கு. அவன் கண்ணுல நீ படறதும் ஆபத்து. அவனோட நாகரத்தினங்கள் பத்தி நீ யூகிச்சிட்டேன்னு தெரிஞ்சதுன்னா என்ன செய்வானோ தெரியாது. அதனால இனி இந்தப் பக்கம் வராம பாதுகாப்பாய் இருந்துக்கோ

சொல்லி விட்டு அவர் எழுந்தார். அவனும் மெள்ள எழுந்தான்.

அவர் சொன்னார். “நான் என் பையன் வீட்டில் தான் இருக்கேன். அவன் தூங்கிட்டதால தான் தைரியமாய் வெளிய வந்து உன்கிட்ட பேசறேன். அவனுக்கு நான் முன்பின் தெரியாதவங்க கிட்ட பேசறது பிடிக்காது. என்ன பண்றது. குழந்தைகளோட தயவுல வாழ்றப்ப அவங்கள அனுசரிச்சு தான் வாழ வேண்டியிருக்கு. இப்ப நான் கொடுத்த பணமெல்லாம் கூட அவன் என் கைச்செலவுக்கு மூனு மாசமா தந்தது. ஏதோ உன் மேல ஒரு இரக்கம் தோணினதால் அப்படியே உனக்குக் குடுத்துட்டேன். இனி நாம சந்திக்க வாய்ப்பில்லை. சந்திச்சாலும் பேசற நிலைமைலயோ, பணம் கொடுத்து உதவற நிலைமைலயோ நானில்லை. தப்பாய் நினைக்காதே. அது தான் வயசான என்னோட நிலைமை. எங்கேயிருந்தாலும் நல்லா இரு. வரட்டா

அவன் பதில் சொல்லக் காத்திருக்காமல் அவர் கிளம்பி விட்டார். பாம்பாட்டி அவர் போவதையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றுவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

வீட்டின் வெளி கேட்டை எட்டும் போது சந்தேகத்துடன் வேலாயுதம் திரும்பிப் பார்த்தார். நல்ல வேளையாக அவன் பின்தொடர்ந்து வரவில்லை. தூரத்தில் அவன் நடந்து போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.

நிம்மதியுடன் உள்ளே நுழைந்த அவருக்காக கல்யாண் பரபரப்புடன் காத்திருந்தான். அவனைத் தன்னறைக்கு அழைத்துக் கொண்டு போய் கதவைத் தாளிட்டு விட்டு அவனிடம் அவர் நடந்ததையெல்லாம் பரபரப்புடன் சொல்ல ஆரம்பித்தார். கேட்கக் கேட்க கல்யாணின் கண்கள் ஜொலித்தன. முடிவில் மகன் ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்த வேலாயுதம் தானே மெல்லக் கேட்டார். “என்னடா நினைக்கிறே?”

கல்யாண் உடனடியாக எதையும் சொல்லவில்லை. அவன் கவனம் முழுவதும் பழைய நிகழ்வுகளில் இருந்தது. அந்த நாட்களில் நாதமுனி சொன்ன விஷயங்களை நினைவுபடுத்திப் பார்த்தான். நாகரத்தினங்களைப் பற்றி அவர் விவரமாகச் சொல்லியிருந்தாலும் இப்படியோரு விசேஷ நாகரத்தினத்தைப் பற்றி அவர்களிடம் சொல்லியிருக்கவில்லை. அவன் யோசனையுடன் சொன்னான். “மத்ததை எல்லாம் சொன்ன நாதமுனி இதைச் சொல்லலையேன்னு யோசிக்கிறேன்

அந்தக் கிழவனுக்கு சொல்ல விட்டுப் போயிருக்கும். இந்தப் பாம்பாட்டி விஷயம் தெரிஞ்சவன், அனுபவமிருக்கறவன்னு நமக்குத் தெரியும். அதனால் இவன் சொல்றது உண்மையில்லாமல் இருக்காதுடா. இவன் சொல்றதெல்லாம் நாகராஜ் செய்யறதோட ஒத்து தான் போகுதுராத்திரி நேரத்துல அவன் பண்ற பூஜை, வாக்கிங் கூடப் போகாம பண்ற தியானம் அதெல்லாம் சரியாத்தான இருக்கு....”

ஆமாஎன்ற மகன் மேலும் என்ன யோசிக்கிறான் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் முக்கியமான தகவலை இன்னொரு முறை சொன்னார். “அந்த விசேஷ நாகரத்தினம் இருக்கற பாம்பை இப்ப யாரும் நெருங்க முடியாதாம். விஷத்தைக் கக்கிடுமாம். ஆனா அது அந்த ரத்தினத்தை உதிர விட்ட பிறகு அந்த ரத்தினம் யார் கிட்ட இருக்கோ அவன் கடவுள் மாதிரி சக்தி இருக்கிற ஆளாய் மாறிடுவானாம்...”

அதை அவர் இன்னொரு முறை சொல்ல வேண்டியிருக்கவில்லை. முதல் தடவையிலேயே மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்த கல்யாண் மெல்லச் சொன்னான். “அன்னைக்கிருந்த சூழ்நிலை வேறப்பா. அது யாரும் எதிர்பார்க்கல. நடந்ததெல்லாம் நமக்கு சாதகமா இருந்துச்சு. ஆனா இன்னைக்கு அப்பிடியில்ல. நாகராஜ் ஆபத்தானவன். பணம், செல்வாக்கு, நாகசக்தின்னு நெருங்க முடியாத உச்சத்துல இருக்கான்...”

வேலாயுதம் மெல்லச் சொன்னார். “இருக்கலாம். அன்னைக்கும் நம்ம நிலைமை கற்பனைல கூட இப்படியாவோம்னு நினைக்க முடியாதபடி தான் இருந்துச்சு. ஒரு சந்தர்ப்பம் வந்துச்சு. நான் சொல்லி நீ அதைப் பயன்படுத்திகிட்டே. நாம இவ்வளவு உயரத்துக்கு வந்துட்டோம். இன்னைக்கும் சந்தர்ப்பம் அப்படியே தான் வந்திருக்குன்னு எனக்குத் தோணுதுடா. இல்லாட்டி இந்த நாகராஜ் மாதிரியான ஆள் பக்கத்து வீட்டுக்கு வருவானா? ஆயிரம் வருஷத்துக்கு ஒரு தடவை உருவாகிற நாகரத்தினம் இந்தச் சமயத்திலேயே பக்கத்து வீட்டுல உருவாகுமா? அப்படி உருவான நாகரத்தினம் பத்தி நமக்குத் தெரிவிக்கவே வந்த மாதிரி இந்தப் பாம்பாட்டி இப்ப இங்கே வந்திருப்பானா? விதி நமக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பத்தை நமக்கு ஏற்படுத்தித் தர்ற மாதிரியே தோணுதுடா...”


கல்யாணுக்கு அவர் சொன்னதை மறுக்க முடியவில்லை. ஆனால் இப்போது இந்தச் சந்தர்ப்பத்துடன் ஆபத்தும் உச்சத்திலேயே இருக்கிறது என்பதை அவன் அறிவு சுட்டிக்காட்டியது.  அவன் யோசித்து விட்டுச் சொன்னான். “எதுக்கும் இது பத்திக் கூடுதலாய் தெரிஞ்சுக்கிறது நல்லதுன்னு எனக்குப் படுதுப்பா. நீங்க நாளைக்கே சத்தியமங்கலம் போய் நாதமுனியை பார்த்து இந்த விசேஷ நாகரத்தினம் பத்தின முழுவிவரங்களைத் தெரிஞ்சுகிட்டு வந்துடுங்களேன். அப்புறமா நாம முடிவெடுப்போம்…

(தொடரும்)
என்.கணேசன்




5 comments:

  1. Couldn't guess the course of the unfolding of the story. But It is very interesting sir.

    ReplyDelete
  2. திக் திக் நிமிடங்கள்

    ReplyDelete
  3. பேராசை பெரு நஷ்டம்..

    ReplyDelete
  4. ஏற்கெனவே நாகராஜ் ஒரு திட்டத்துடன் தான் இங்கு தங்கியிருக்கிறான்... எனவே இந்தமுறை அவர்களுக்கு... கதவைதட்டுவது அதிஷ்டம் அல்ல... துரதிர்ஷ்டம்....

    ReplyDelete
  5. இதைப் படிக்கும் போது "இப்படிப்பட்ட நாகரத்தினம் ஒன்று இருந்தால்...அதை நாம் ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா...?" என்ற ஏக்கம் ஏற்படுகிறது...

    ReplyDelete