சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 27, 2022

இல்லுமினாட்டி 139



ர்னெஸ்டோவைப் பத்திரமாய் அவர் பங்களாவில் சேர்த்து விட்டு இம்மானுவல் தன்னுடைய ம்யூனிக் அலுவலகத்திற்கு விரைந்தான். அவனுக்காக அவன் ஆட்கள் காத்திருந்தார்கள். சாலமனைப் பற்றி விரிவான துப்புதுலக்கல்கள் செய்திருந்த அவர்கள் ஒரு பெரிய ஃபைலை அவன் மேசையில் வைத்தார்கள். பல வேலைகள் இருக்கும் போது, அதுவும் அவை அனைத்தும் அவசரமாக இருக்கும் போது முழுவதுமாய்ப் படிக்கும் பொறுமை போய்விடுகிறது. அவனுக்கு இப்போது எர்னெஸ்டோ ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பது புரிந்தது. அவன் சொன்னான். “இதில் முக்கிய விஷயங்களைச் சுருக்கமாய்ச் சொன்னால் நன்றாக இருக்கும்.”

சாலமன் அடிக்கடி கடந்த சில நாட்களாக ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பயணம் செய்து வருகிறார், அந்தப் பகுதியில் ஒரு பழங்காலப் பாழடைந்த சர்ச்சும் இருக்கிறது,   இப்போது நூலகங்களாகவும், அருங்காட்சியகங்களாகவும், அரங்குகளாகவும் மாறியிருக்கிற முந்தைய இல்லுமினாட்டி கோயில்களுக்கு அடிக்கடி பயணம் செய்திருக்கிறார், போலி பாஸ்போர்ட், விசாக்கள் தயாரித்துத் தரும் பழைய குற்றவாளி ஒருவனைச் சந்தித்திருக்கிறார், விமானநிலையத்தில் பரிசோதனை அதிகாரியாக இருக்கும் மைக்கேல் விக்டர் என்பவரைச் சந்தித்திருக்கிறார் என்ற தகவல்களை அவர்கள் சொன்னார்கள்.

அதில் கடைசி இரண்டு தகவல்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்த இம்மானுவல் முதலில் மைக்கேல் விக்டர் பற்றிக் கேட்டான். “அந்த ஆள் என்ன சொல்கிறார்?”

“அவர் சாலமன் அவரைச் சந்தித்தது வாஸ்தவம் என்று ஒப்புக் கொள்கிறார். ஆனால் என்ன விஷயமாகச் சந்தித்தார், என்ன சொன்னார் என்பதை எல்லாம் சொல்ல மறுக்கிறார். மிரட்டியும் கேட்டுப் பார்த்தோம். அவர் எதுவாக இருந்தாலும் உங்களிடம் தான் சொல்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். அவர் எங்களிடம் சொல்லத் தயாராக இல்லை.”

இம்மானுவலுக்கு அந்த அதிகாரியின் போக்கு புதிராக இருந்தது. “அந்த அதிகாரியை உடனடியாக இங்கே வரவழையுங்கள்.”

ஒரு அதிகாரி அதைச் செய்ய வேகமாக நகர இம்மானுவல் அடுத்த கேள்வியைக் கேட்டான். “அந்தப் போலி பாஸ்போர்ட் விசா குற்றவாளி என்ன சொல்கிறான்?”

“விஸ்வத்தின் ஃபோட்டோவைக் கொடுத்து ஏதோ ஒரு பெயரையும் கொடுத்து ஒரு போலி பாஸ்போர்ட், வாஷிங்டன் போய் வர சாலமன் ஒரு டூரிஸ்ட் விசா கேட்டிருக்கிறார். சென்ற வெள்ளிக்கிழமை வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்...”

“அந்தப் பாஸ்போர்ட் விசா விவரங்கள்?”

ஒரு அதிகாரி அந்த ஃபைலைத் திறந்து பக்கங்களைப் புரட்டி இரண்டின் விவரங்களையும் காட்டினார். வர வர எர்னெஸ்டாக நானும் மாறிக் கொண்டு இருக்கிறேனா என்று தன்னையே கேட்டுக் கொண்ட இம்மானுவல் அவற்றைப் பார்த்தான். விஸ்வம் டேனியலின் உடலைக் கச்சிதமாக மாற்றி இருப்பது வாஷிங்டனில் எர்னெஸ்டோ பங்களாவின் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தாலும் விஸ்வம் முகமூடி போட்டிருந்ததால் அவனுக்கு முகத்தைப் பார்க்க முடிந்திருக்கவில்லை. இப்போது பாஸ்போர்ட்டில் முகம் தெளிவாகத் தெரிந்தது. மனிதனின் அகம் மாறும்போது முகமும் அதற்கேற்றாற்போல் மாறி விடுகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்று இம்மானுவல் நினைத்தான். பழைய டேனியலின் கண்களில் எப்போதும் வெறுமை தெரியும். முகம் பொலிவிழந்திருக்கும். உயிரோட்டம் இருக்காது.... ஆனால் இப்போதைய முகத்தில் ஒரு கம்பீரம் தெரிந்தது, உறுதி தெரிந்தது, கண்களில் ஒளி தெரிந்தது...

சிறிது நேரத்தில் மைக்கேல் விக்டர் வந்தார்.  அவரிடம் இம்மானுவல் விசாரித்த போது மற்றவர்கள் அங்கிருக்கும் போது பேசவும் அவர் தயங்கினார். இம்மானுவல் தன் ஆட்களை வெளியே போய் காத்திருக்கச் சொன்னான். அவர்கள் சென்றவுடனே  அமெரிக்க சிஐஏ டைரக்டர் முதல், சாலமன் மற்றும் அவர் வரை ஏழு பேருக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசிய மிஷன் பற்றி அவர் சொன்னார். அவர் இப்போதும் கூட சாலமன் சொல்லி இருப்பதை நம்பினது இம்மானுவலை ஆச்சரியப்படுத்தவில்லை. சாலமன் திறமையானவர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இம்மானுவல் சொன்னான். “அதில் ஒரு பிரச்னையாகி விட்டது. சாலமன் இறந்து விட்டார். அந்தப் போலி டேனியலை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அதனால் திரும்ப அவன் ம்யூனிக் வந்தால் நீங்கள் அவனைப் பிடித்து ஒப்படைக்க வேண்டும். உங்கள் மற்ற அதிகாரிகளிடமும் இதைச் சொல்லி வையுங்கள்...”

மைக்கேல் விக்டர் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. இம்மானுவல் சொன்னான். “உங்களைச் சிரமப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். லட்சக் கணக்கான ஆட்களைப் பெரிய பாதிப்பில்லாமல் காப்பாற்றுவதற்கு சில பேரை நாங்கள் தொந்தரவு செய்ய வேண்டியிருக்கிறது. அதை நாங்கள் விரும்பிச் செய்வதில்லை. வேறு வழியில்லாமல் தான் செய்ய வேண்டியிருக்கிறது.”

”புரிகிறது சார்” என்று சொல்லி மைக்கேல் விக்டர் எழுந்தார். ஆனால் அவருக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. சாலமன் நல்லவரா கெட்டவரா என்று தெரியவில்லை. இதற்கு முன் அவர் அந்தப் போலி டேனியலை வாஷிங்டன் போக உதவியிருப்பது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. தெளிவாகப் புரிந்தது அந்தப் போலி டேனியலைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பது தான். அதைக் கண்டிப்பாகச் செய்வார்...


ர்னெஸ்டோ க்ரிஷிடம் கேட்டார். “விஸ்வம் இங்கே திரும்பி வருவானா இல்லை அப்படியே அங்கிருந்து வேறெங்காவது தப்பி விடுவானா? நீ என்ன நினைக்கிறாய்?”

“அவன் கண்டிப்பாகத் திரும்பி வருவான். அவன் இலக்கை அடையும் முயற்சியில் செத்தாவது போவானேயொழிய தற்காலிகமாகக் கூடப் பின்வாங்க மாட்டான்.” க்ரிஷ் உறுதியாகச் சொன்னான்.

அக்‌ஷய் அந்த வார்த்தைகளைப் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் மனக்கண்ணில் இப்போதும் விஸ்வம் வாஷிங்டனில் மின்னல் வேகத்தில் ஓடிய வீடியோ காட்சிகள் ஓடின. அக்‌ஷயும் அதே அளவு வேகமாக ஓடவும் நகரவும் முடிந்தவன் என்றாலும் அவனைப் பிரமிக்க வைத்தது அந்த உடல் போதையால் செத்துப் போன உடல் என்பது தான். வாழ்க்கையில் போதையை ஒரு போதும் அனுபவித்திராத அக்‌ஷய்க்குத் தன் சாதனை பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு பலவீனத்தில் செத்துப் போன அந்த உடலை விஸ்வம் நான்கே மாதங்களில் இந்த அளவு மாற்றியெடுத்தது சாதாரண விஷயமாய்த் தோன்றவில்லை. அப்படி என்றால் பழைய உடலை எந்த அளவுக் கட்டுக்கோப்பில் அவன் வைத்திருப்பான் என்று அக்‌ஷய் வியந்தான்.

எர்னெஸ்டோவுக்கு விஸ்வம் அவரை விஷம் வைத்துக் கொல்ல நினைத்தது கூடப் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனாலும் அவருக்கு அவன்   தீமையின் மொத்த உருவமாகத் தோன்ற ஆரம்பித்திருந்தான். காரணம் சாலமன், வாங் வே போன்ற உறுதியான இல்லுமினாட்டி ஆட்களை அவன் மாற்றித் தன் பக்கம் இழுத்திருந்தது அவருக்கு நிறையவே ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது.

இம்மானுவல் வந்தான். அவர்களிடம் சாலமன் பற்றிக் கிடைத்திருந்த புதிய விவரங்களைச் சொன்னான். எர்னெஸ்டோ கேட்டார். “கர்னீலியஸுக்கும் அவனுக்கும் இருந்த தொடர்பு பற்றி எதுவும் தெரியவில்லையா?”

“இல்லை”

“வாங் வேயிடமிருந்து தான் நாம் அதைப் பெற வேண்டும்” என்று சொல்லி எர்னெஸ்டோ இம்மானுவலை அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். பின் சொன்னார். “வாங் வே அக்கறையுடன் இது வரை இரண்டு முறை என் உதவியாளனிடம் என் உடல்நலம் பற்றி விசாரித்து விட்டார். நாளைக்கே ம்யூனிக் வரப் போகிறாராம்.”

இம்மானுவல் சொன்னான். “அப்படியானால் விஸ்வமும் நாளைக்கே இங்கே வரக்கூடும்”

ஆனால் அவன் எதிர்பார்த்ததை விடச் சீக்கிரமாக அன்றைக்கே அப்போதே விஸ்வம்  ஏறியிருந்த விமானம் ம்யூனிக் விமான நிலையம் வந்து சேர்ந்தது.  

(தொடரும்)
என்.கணேசன்



  

4 comments:

  1. Sir, it is not fair to put thodarum at such a crucial and tense place. What will both sides do? Very tense to know.

    ReplyDelete
  2. அடுத்து விஸ்வம் நடவடிக்கை என்ன? எர்னெஸ்டோ நடவடிக்கை என்ன?? கணிக்க முடியவில்லை... இந்த பகுதிகள் அனைத்தும் விருவிருப்பு....

    ReplyDelete