சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 15, 2021

யாரோ ஒருவன்? 59


பெருங்கஷ்டத்தில் இருப்பவர்கள் ஆறுதலடைவது இரண்டே சமயங்களில் தான். முதலாவது அவர்கள் அந்தக் கஷ்டத்திலிருந்து மீளும் போது. இரண்டாவது தனக்கு வேண்டிய இன்னொருவனும் அந்தக் கஷ்டத்தில் சிக்கிக் கொள்ளும் போது. சஞ்சய் ஷர்மா தன் பெருங்கஷ்டத்திலும் இரண்டாவது வகை ஆறுதலையடைந்தான். காரணம் அவனுக்கு அடுத்த அறையில் இரண்டு நாட்களுக்கு முன்பு எவனையோ கொண்டு வந்து போட்டார்கள். இரண்டு நாள்களாக அரைமயக்கத்தில் அந்த ஆள் அரற்றிக் கொண்டிருந்தான். அது யாராக இருக்கும் என்று சஞ்சய் தன் மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்தும் பதில் கிடைக்கவில்லை. இன்று மாலை தான் அவன் முழு மயக்கம் தெளிந்து கட்டப்பட்டிருந்த இரும்புச் சங்கிலியை நிலத்தில் பலமாகத் தட்டியபடி கடுங்கோபத்துடன் கத்த ஆரம்பித்திருந்தான். “யார்டா என்னை இங்கே அடைச்சி வெச்சிருக்கறது. நான் யார் தெரியுமாடா? மதன்லால்டா. போலீஸ் அதிகாரிடா.”

மதன்லாலும் இங்கே வந்து மாட்டிக் கொண்டானா என்று சஞ்சய் ஷர்மா, ஆறுதலடைந்தான். சத்தம் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்த பிறகு தடியன் அங்கு போய்சும்மா இருக்க மாட்டேஎன்று சொன்னது கேட்டது. அடுத்த கணம்ஆஆவென்று அலறிய மதன்லால்எட்டி உதைக்கிறியாடா நாயே. தைரியம் இருந்தால் என்னை அவிழ்த்து விட்டு எட்டி உதைடாஎன்று ஆக்ரோஷமாய் சொல்வது கேட்டது. அதன் பின் தடியன் என்ன செய்தான் என்று தெரியவில்லை. மதன்லாலின்ஆஆஆஆவென்று இரட்டிப்பு அலறல் கேட்டது. பின் அவன் அமைதியானான்.

ஒப்பிட்டுப் பார்க்கையில் தன்னை தடியன் மரியாதையாகத்தான் நடத்தியிருக்கிறான் என்று சஞ்சய் ஷர்மாவுக்குத் தோன்றியது. தடியன் அவனைக் கையால் தான் அறைந்திருக்கிறான். இப்படிக் காலால் கேவலமாக எட்டி உதைக்கவில்லை.   கொடுத்த அடி பலமாகத் தான் விழுந்திருக்க வேண்டும். மதன்லால் அதன்பிறகு சங்கிலியை ஆட்டிக் கத்தவில்லை. மாறாக தடியன் அங்கே போன போது மட்டும்யார் நீ? உனக்கு என்ன வேணும்? ஏன் என்னைக் கடத்திட்டு வந்திருக்கே?...” என்று மதன்லால்  கேட்டது சஞ்சயின் காதில் விழுந்தது.

சார் வந்து சொல்லுவாருஎன்று தடியன் அலட்சியமாய் சொன்னான்.

மதன்லால் மறுபடியும் ஆக்ரோஷமடைந்தான். “எந்த சார்டா அது. கூப்டு முதல்லஎன்று கத்தினான்.  

அதைக் கேட்டு தடியன் அடித்தானோ, உதைத்தானோ தெரியவில்லை. “என்னங்கடா வேணும் உங்களுக்கு?” என்று மதன்லால் பரிதாபமாகக் கேட்டான். அதற்கு தடியன் பதில் சொல்லவில்லை.

இரவு ஒரு சப்பாத்தி சஞ்சய்க்குத் தந்து விட்டு அடுத்த அறையிலிருக்கும் தடியன் மதன்லாலுக்கும் தந்த போது மதன்லால் உறுமினான். “என்ன இது?”

சப்பாத்தி

இந்த வறண்ட சப்பாத்தியை  என் வீட்டு நாயும் திங்காது

சரி என்று அதையும் தடியன் எடுத்துக் கொண்டு போய் விட்டான் போலிருக்கிறது. மதன்லால்என்ன ஆளுகடா நீங்கஎன்று புலம்பியது சஞ்சயின் காதில் விழுந்தது.

இனி நாளை காலை வரை தடியன் வர மாட்டான். இது இத்தனை நாட்கள் அங்கே தங்கி இருந்த சஞ்சயின் அனுபவக் கணிப்பு. இனி மதன்லாலிடம் பேசுவதற்குத் தடையில்லை என்று எண்ணியசஞ்சய் மெல்ல அழைத்தான். “மதன்லால் அண்ணா

யாரது?” என்று மதன்லால் சந்தேகத்தோடு கேட்டான்.

நான் தான் சஞ்சய் அண்ணா. சஞ்சய் ஷர்மா. உங்களுக்குமா அண்ணா இந்த கதிஎன்று சஞ்சய் உருக்கமாகக் கேட்டான்.

சஞ்சயின் உருக்கத்தை மதன்லால் ரசிக்கவில்லை. ஆனால் மதன்லாலுக்கு அந்த மயான அமைதி நிலவும் பாழடைந்த கட்டிடத்தில் தான் மட்டும் இல்லை  என்பதும், பக்கத்து அறையில் தெரிந்தவன் இருக்கிறான் என்பதும் ஆறுதல் அளித்தது. அவனிடம் நிறைய தெரிந்து கொள்ள முடியும். அவன் கேட்டான். “சஞ்சய் யாரு நம்மள அடைச்சு வெச்சிருக்கிறது

அந்த மகேந்திரன் மகன் நரேந்திரன் தான் அண்ணா.”

ஒரு அதிகாரி இப்படி அராஜகமாய் நடந்துக்கறானா. இருக்கட்டும். வெளிய போனவுடன கவனிச்சுடலாம். சஞ்சய் இங்கே இருந்து எப்படித் தப்பிக்கிறது?”

அது தெரிஞ்சிருந்தா நான் இன்னேரம் தப்பிச்சிருக்க மாட்டேனா அண்ணா. உங்களை மாதிரி என்னையும் இரும்புச் சங்கிலியால கட்டிப் போட்டிருக்காங்கண்ணா.”

என்ன அந்த நாயி எனக்கு ஒரு வறண்ட சப்பாத்தியைத் தர்றான். நம்ம ஜெயில்கள்ல கூட இப்படி மோசமா நடத்தறதில்லை.”

அண்ணா. இன்னமும் உங்களுக்கு முழு நிலவரமும் தெரியல. தெரிஞ்சா அந்தச் சப்பாத்திய வேண்டாம்னு சொல்லியிருக்க மாட்டீங்க. இனி நீங்க கெஞ்சிக் கேட்கற வரைக்கும் அவன் அந்தச் சப்பாத்தியையும் தர மாட்டான் அண்ணா. அந்த மாதிரி சப்பாத்திங்க கூட ஒரு நாளைக்கு மூனே மூனு தான் தருவானுக. காலைல ஒன்னு, மத்தியானம் ஒன்னு, ராத்திரி ஒன்னு. ராத்திரி குளிருக்குப் பாயோ, போர்வையோ கூடத் தரமாட்டானுக. அது மட்டுமல்ல. அவனுகளை அனுசரிச்சுப் போகலைன்னாலும், கேட்கற கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லலைன்னாலும் ஐஸ் தண்ணிய நம்ம மேல கொட்டிடுவானுக. அவனுக நாமளா சாப்பிடாமயும், ஜன்னி வந்தும் செத்துடணும்னு எதிர்பார்க்கிறானுங்கண்ணா. ஜாக்கிரதையா இருங்கண்ணா

மதன்லால் திகைத்தான். சஞ்சய் ஷர்மா அண்ணா அண்ணா என்று அழைத்துச் சொல்வதெல்லாம் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருக்கிறதுஇதற்கெல்லாம் பயந்து தான் இந்தக் கோழை எல்லா உண்மைகளையும் கக்கியிருக்க வேண்டும். அதன் பிறகு தான் நரேந்திரன் விசாரிக்க அவனைத் தேடி வந்திருக்கிறான் என்பது அவனுக்குப் புரிந்தது.

சஞ்சய் மேல் வந்தக் கோபத்தை மதன்லால் சிரமப்பட்டு மறைத்துக் கொண்டு கேட்டான். ”காவலுக்கு எத்தனை ஆட்கள் இருக்காங்க சஞ்சய்

தெரியலை அண்ணா. இந்தத் தடியன் ஒருத்தனைத் தான் நான் இங்கே பார்த்திருக்கேன். வெளியே எத்தனை ஆட்கள் இருப்பாங்களோ தெரியாது. இந்தத் தடியன் மக்கு சப்பாத்தி கொடுக்கற நேரங்கள்ல மட்டும் தான் வருவான்கொஞ்ச நாளா அப்படித் தான் நடக்குது. நரேந்திரன் எப்போதாவது வந்தா மாத்திரம் தான் மத்த நேரங்கள்ல இவனும் கூட வருவான்?”

நரேந்திரன் அடிக்கடி வருவானா?”

வந்து ரொம்ப நாளாச்சு. ஆரம்பத்துல என்னை விசாரிக்க வந்திருக்கான். உங்களையும் விசாரிக்க வரலாம்.”

மதன்லால் குறையாத வன்மத்துடன் சொன்னான். “எப்படியாவது இங்கேயிருந்து தப்பிச்சு இவனுகள லாடம் கட்டணும் சஞ்சய்

ஆரம்பத்துல நானும் அப்படித் தான் நினைச்சுட்டு இருந்தேன் அண்ணா. உங்கள மாதிரி யாராவது வந்து காப்பாத்துவாங்கன்னு காத்திருந்தேன் அண்ணா. ஆனா நீங்களே வந்து மாட்டிகிட்ட பிறகு உசிரோட இருந்தா சரிங்கறத தவிர இப்ப எனக்கு வேற எதையும் நினைக்கத் தோணலை ....”

இப்படியும் கேவலமாக உயிர்பிழைக்க ஆசைப்படுகின்றானே இந்த அல்பன்என்று மதன்லால் மனதில் இகழ்ச்சியாக நினைத்துக் கொண்டான். எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வேண்டுமானால் இந்தக் கோழைக்குத் தைரியமூட்ட வேண்டும். இருவரும் சேர்ந்து முயற்சி செய்தால் தப்பிப்பது முடியாத காரியமல்ல. தப்பிக்கும் முயற்சியில் இறந்தாலும் தப்பில்லை. இப்படி உயிர்பிழைப்பதை விட அது நல்லது... ஆனால் கோழைகளுக்குத் தைரியமூட்டுவது சுலபமான காரியம் அல்லநாலு நாள் தண்ணீரில் மூழ்கியிருந்த விறகுக்குத் தீ மூட்டுவது போன்ற வேலை தான் அது.  

முதலில் இத்தனை நாட்கள் இங்கே இருந்ததில் எத்தனை தெரிந்து வைத்திருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணிய மதன்லால் கேட்டான். “சஞ்சய் நாம இருக்கிற இடம் எங்கேன்னு ஏதாவது தகவல் தெரிஞ்சு வெச்சிருக்கியா?”

சஞ்சய் சொன்னான். “ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடம் இதுன்னு தோணுதுண்ணா. தூரத்துல தான் வாகனங்கள் போற சத்தம் கேட்குது. ஒரு பெரிய காம்பவுண்டுக்குள்ளே இந்த கட்டிடம் ரொம்ப உள்ளே தள்ளி இருக்குன்னு தோணுது. ஒரு காலத்துல இது ஃபேக்ட்ரியாவோ, ஆஸ்பத்திரியாவோ இருந்திருக்கலாம். இல்லைன்னா வேலைக்காரங்க க்வார்ட்டர்ஸா இருந்திருக்கலாம். இப்ப எதனாலயோ மூடியிருக்கலாம்....”

ஏதாவது வாகனங்கள் பக்கத்துல வர்ற சமயத்துல நாம உச்சஸ்தாயியில கத்தினா அது வெளிய கேட்காதா? யாராவது உதவ மாட்டாங்களா? குறைந்தபட்சம் காதுல விழுந்தவன் போலீஸுக்காவது போன் பண்ணி இந்தக் கட்டிடத்துல இருந்து யாரோ கத்தற சத்தம் கேட்குதுன்னு சொல்ல மாட்டானா?”

அதுக்கும் முன்னால தடியனுக்குக் கேட்டு வந்துடுவானே அண்ணா. அடிச்சு உதைப்பானா இல்லை ஐஸ் தண்ணிய மேல ஊத்துவானான்னு தெரியலையே

இவனைத் தைரியப்படுத்துவதற்கு முன் இவன் நமக்கு பீதியை ஏற்படுத்தி விடுவான் போலிருக்கிறதே என்று மதன்லால் நொந்து போனான். ஆனாலும் அங்கிருந்து தப்பிக்கும் வழிகளை அவன் மூளை யோசிக்க ஆரம்பித்து விட்டது.    



(தொடரும்)
என்.கணேசன்


2 comments:

  1. Super humourous. Sanjay rocks!

    ReplyDelete
  2. இந்த வாரத்தின் பதிவு நகைச்சுவை உணர்வு கொண்டதாக அமைந்துள்ளது. அருமை

    ReplyDelete