சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 1, 2021

யாரோ ஒருவன்? 56


தீபக் குளித்து முடித்து உடைமாற்றிக் கொண்டு சாப்பிட வந்த போது அவனுக்கு டிபன் பரிமாறிக் கொண்டே ரஞ்சனி சொன்னாள். “அந்தப் பாம்பு ஆசாமியைப் பார்த்துப் பேசணும்னு எனக்கும் ஆர்வமாய் இருக்குதுடா?”

தீபக் தாயை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டுச் சொன்னான். “அப்ப அஞ்சு லட்சம் ரூபாய் ரெடி பண்ணு. அஞ்சு மாசம் காத்திரு. அவரைப் பார்த்துப் பேசலாம்...”

ரஞ்சனி திடுக்கிட்டாள். ஐந்து லட்சம் ரூபாயும், ஐந்து மாதக் காத்திருப்பும் அதிகப்படியாகத் தோன்றியது. “என்னடா சொல்றே. நீ தினம் தினம் போய் அவர் கிட்ட பேசுகிட்டு வர்றே. அவர் சொன்னதைக் கேட்டுகிட்டும் வர்றே. நான் பேசணும்னா இப்படிச் சொல்றே

தீபக் தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டே சொன்னான். “ஐயா ஸ்பெஷலு. காலைல வாக்கிங் போறப்ப தற்செயலா சந்திக்கற மாதிரி குறுக்கு வழியில நைஸா நுழைஞ்சு அவர்கிட்ட பேச்சுக் கொடுத்து சிநேகிதம் பண்ணி ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தகவல் வாங்கறேன். அவ்வளவு தான். மத்தவங்கல்லாம் அந்த அளவு பணம் கொடுத்து அத்தனை காலம் காக்க வேண்டியிருக்கும்மா. தர்ஷினியோட தாத்தா கூடப் பக்கத்து வீட்டையே பார்த்துத் தவமாயிருக்கார். அந்த ஆள் பார்வைகூட தாத்தா மேல விழலை. அந்த விஷயம் தெரியுமா?”

ரஞ்சனிக்கு வேறு எதுவும் தெரிய வேண்டியதில்லை. அந்த இறந்தவனின் ஆத்மா வேறென்னவெல்லாம் சொல்கிறது என்பதைத் தான் அறிய மிகவும் ஆவலாக இருந்தது. அப்படி அறிவது மட்டுமே அவள் மனதில் இப்போது எழுந்துள்ள புயலைத் தணிக்க முடியும்...  

அப்படின்னா நானும் காலைல உன்கூட வாக்கிங் வரட்டுமா? உன்கூட வந்து பேசினா என்ன?”

தீபக் வாய்விட்டுச் சிரித்தான். “போம்மா. அந்த அங்கிள் அப்பறம் என் கிட்ட பேசறதையும் நிறுத்திடுவார்.”

அதைக் கேட்டதும் ரஞ்சனியின் முகம் வாடியது. அதைப் பார்க்க தீபக்குக்குக் கஷ்டமாய் இருந்தது.  ”கொஞ்சம் பொறும்மா. அவங்க வீட்டுக்கு முன்னாடி வைக்க சில பூச்செடிகள் எல்லாம் வெக்கணும்னு நாகராஜ் அங்கிளோட அசிஸ்டெண்ட் சொல்லியிருந்தார். அத வச்சு ஏதாவது பண்ணி நீ அந்த  அங்கிளை சந்திச்சுப் பேச ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கறேன். இதை எல்லாம் கொஞ்சம் நாசுக்காய் தான் செய்யணும்

அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்த சரத் அதிர்ந்து போனான். அவன் இரண்டு நாளாகத் தக்க வைத்திருந்த நிம்மதி ஒரு கணத்தில் கரைந்து போனது. ரஞ்சனி நாகராஜை சந்திப்பது பேராபத்து என்று அவன் மனம் கடுமையாக எச்சரிக்க, இனி என்ன செய்வதென்று பதற்றத்துடன் யோசிக்க ஆரம்பித்தான்.

ஜீம் அகமது ஜனார்தன் த்ரிவேதிக்கும், நரேந்திரனுக்கும் இடையே நடந்த உரையாடலை மிகவும் கவனமாகக் கேட்டான். ஜனார்தன் த்ரிவேதியை நரேந்திரன் கையாண்டவிதம் மிகவும் கச்சிதமாக இருந்தது. கோபம் கொள்ளாமல், பதற்றமில்லாமல், அமைதி இழக்காமல், குரலை உயர்த்தாமல், உறுதியாகப் பேசின விதம் ஒரு ஆபத்தான மனிதனை அவனுக்கு அடையாளம் காட்டியது.  

மதன்லால் விஷயத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை யூகிப்பது சுலபமாக இல்லை. நரேந்திரன் சொன்னபடியே விசாரணைக்கு வருவதாய் மதன்லாலுக்கு முன்கூட்டியே தெரிவித்திருக்கிறானா என்பதை அறிந்து சொல்லும்படி ஒருவனுக்குப் போன் செய்து சொன்னான். அரை மணி நேரத்தில் சிம்லா போலீஸ் ஸ்டேஷன் மெயில் ஐடியில் மதன்லால் காணாமல் போவதற்கு முன் நரேந்திரன் மெயில் அனுப்பியிருப்பது உண்மை என்பது தெரிய வந்தது. அப்படியானால் அந்த விஷயத்தில் நரேந்திரன் பொய் சொல்லவில்லை.   

அஜீம் அகமது அறிந்த வரை மதன்லால் யாருக்கும் பயந்து ஓடும் ஆசாமி அல்ல. ஆபத்தை அலட்சியம் செய்ய முடிந்தவன் அவன். பணத்திற்காக எதுவும் செய்யத் தயாராக இருப்பானே தவிர, பயத்தில் ஓடி ஒளியும் பழக்கம் அவனிடம் இல்லை. ஆனால் ஓடி ஒளிவது ஒரு பேராபத்திலிருந்து பாதுகாப்பு என்று தோன்றினால் தலைமறைவாகக்கூடியவன் தான் அவன்.

பணத்திற்காக மதன்லால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அஜீம் அகமதுக்கும் நம்ப முடியவில்லைநரேந்திரனும், ஜனார்தன் த்ரிவேதியும், அஜீம் அகமதும் ஒத்துப் போன ஒரே அபிப்பிராயம் அதுவாகத் தான் இருந்தது. ஆனாலும் சிம்லா போலீஸ், கடத்தியவன் ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தொகை கேட்டதை உறுதி செய்திருக்கிறது. வேறு காரணங்களுக்காக அவன் கடத்தப்பட்டிருக்கலாம். அந்தக் காரணம் வெளியே தெரிய வேண்டாம் என்று நினைத்து இப்படிப் பணம் கேட்டு நாடகம் நடத்தியிருக்கலாம். வேறு காரணம் என்றால் பிரதானமாக அது முன்பகையாகத் தானிருக்கவேண்டும். ஹிமாசலப் பிரதேசத்தில் அவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒரு நண்பனுக்கு அஜீம் அகமது போன் செய்து அந்த நண்பனின் அபிப்பிராயத்தைக் கேட்டான்.

அந்த நண்பன் சொன்னான். ”மதன்லாலை யாருக்குமே பிடிக்காது. அவனுக்கு எதிரிகளும் அதிகம் தான். ஆனால் அவனை எந்த எதிரியும் கடத்திக் கொண்டு போவான் என்று நான் நினைக்கவில்லை. எதிரியாய் இருப்பவன் மறைந்திருந்து தாக்கலாம். அவன் மீது வெடிகுண்டை வீசலாம். துப்பாக்கியால் சுடலாம். அதை விட்டு எந்த எதிரியும் அவனைக் கடத்திக் கொண்டு போய் வைத்து சோறு போட்டுக் காப்பாற்றுவான் என்று நினைப்பது முட்டாள்தனமாய் தான் தெரிகிறது... அதைவிட அந்த சைத்தான் தானே எங்கேயாவது ஓடி ஒளிந்து கொண்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று நினைப்பது சரியாகத் தோன்றுகிறது....”

அஜீம் அகமது யோசித்தான். மதன்லால் மட்டும் தலைமறைவாகியிருந்தால் நண்பன் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் சஞ்சய் ஷர்மாவும் கூட தலைமறைவாகியிருக்கிறான். அந்தத் தகவலை அந்த நண்பனிடம் சொல்லவில்லை. எதையும் யாரிடமும் தேவை இருந்தால் மட்டுமே சொல்வது என்ற கொள்கையுடைய அஜீம் அகமது அந்தத் தகவலையும் சொல்லி அபிப்பிராயம் கேட்கத் தேவையில்லை என்று நினைத்தான். மதன்லால் விஷயத்தில் அவன் கேட்டதற்குக் காரணமே ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் சமூக விரோதிகள் அனைவருடனும் அந்த நண்பனுக்குத் தொடர்பு உண்டு. யார் எதைச் செய்தாலும் அவனுக்குத் தெரிந்து விடும். அப்படி ஏதாவது தெரியுமா என்று அறியத்தான் அவன் கேட்டான். அதற்குப் பதில் கிடைத்து விட்டது.

மொத்த நிலவரத்தை இனி தானே அனுமானிக்க வேண்டும் என்று அஜீம் அகமது நிச்சயித்தான். சஞ்சய் ஷர்மா ஏதாவது பெண் விஷயமாக எங்காவது ஒதுங்கி விட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தன் ஆள் மூலமாக அவன் தெரிவித்த போது ஜனார்தன் த்ரிவேதி அப்படி எதுவும் இல்லை என்று உறுதியாகச் சொன்னார். சந்தேகம் இருக்கும் இடங்களை எல்லாம் சென்று பார்த்து விட்டதாகவும் அவன் பெண் விஷயமாய் தலைமறைவாகவில்லை என்பது உறுதி என்றும் சொன்னார். அவர் தன் சந்தேகமெல்லாம் நரேந்திரன் மேல் தான் என்றும் அவன் மகா அழுத்தக்காரனாகத் தெரிகிறான் என்றும் சொன்னார்.

ஆனால்ராவில் இப்போது தான் இணைந்திருக்கும் அந்த இளம் அதிகாரி சட்டத்தைத் தன்கையில் எடுத்துக் கொள்ளும் அளவு துணிச்சலும் அராஜகமும் கொண்ட ஆளாக இருப்பானா என்ற சந்தேகம் அஜீம் அகமதுக்கு வலிமையாகவே வந்தது. சிறிது யோசித்துவிட்டு அவன் ஒரு எண்ணுக்குப் போன் செய்தான்.

போன் எடுக்கப்பட்ட பின்பும் மறுபக்கத்தில் எந்தச் சத்தமும் இல்லை. அஜீம் அகமது சொன்னான். “இப்போது ராவில் சேர்ந்திருக்கும் ஐபிஎஸ் அதிகாரி. நரேந்திரன் ஆள் எப்படிப்பட்டவன் என்பது விரிவாக எனக்குத் தெரிய வேண்டும்

மூன்று வினாடிகள் கழித்து மறுபக்கத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அஜீம் அகமது இப்போது பேசிய நபர் இந்திய உளவுத்துறையில் இருக்கும் அவர்களுடைய ஆள். மிக ரகசியமானவன். திறமையானவன். அவனிடமிருந்து தகவல்கள் வந்த பிறகு நரேந்திரன் பங்கு இதில் இருக்குமா இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும். அதன் பிறகு மேற்கொண்டு செய்ய வேண்டியதைத் தீர்மானிக்கலாம் என்று அஜீம் அகமது முடிவு செய்தான்.


(தொடரும்)
என்.கணேசன்



(தீபாவளி போனஸாக அடுத்த அத்தியாயம் 3.11.2021 அன்று மாலை வெளியாகவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
- என்.கணேசன்)


6 comments:

  1. Nice. thank you sir for Diwali bonus episode :-)

    ReplyDelete
  2. Very interesting. I Blieve Ajeem Ahamed will be one of your super villains. Thanks for the Deepavali bonus sir.

    ReplyDelete
  3. ரஞ்சனி சஸ்பென்ஸ் தான் ரொம்ப குழப்புகிறது....
    அஜீம் அகமது தற்போது பல கோணங்களில் யோசிக்கும் விதத்தை பார்க்கும் போதே புரிகிறது... நரேந்திரனின் திட்டம் எவ்வளவு கச்சிதமானது என்று... நரேந்திரனின் திட்டம் அற்புதம்..

    ReplyDelete