சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 8, 2021

யாரோ ஒருவன்? 58


ன்று அதிகாலை வாக்கிங்கில் நாகராஜ் இல்லாமல் தனியாக சுதர்ஷன் வந்து கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் தீபக்குக்கு ஏமாற்றமாக இருந்தது. ”என்ன அங்கிள் நீங்க மட்டும் வர்றீங்க. நாகராஜ் அங்கிள் வரலையா?”

மகராஜ் இனி மூனு நாள் வர மாட்டார். வீட்டில் விரதமிருந்து ஒரு விசேஷ தியானம் பண்றார்.”

சுதர்ஷனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தபடியே தீபக் சொன்னான். “எனக்கெல்லாம் தியானம் செய்ய உட்கார்ந்தா எத்தனையோ பழைய புதிய ஞாபகங்கள் வர ஆரம்பிச்சுடுது. மனசு அடங்க மாட்டேங்குது. அந்த அங்கிள் கிட்ட தியானம் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு. உங்களுக்கும் தியானம் சரியாய் செய்ய வருதா அங்கிள்..”

சுதர்ஷன் மெல்லச் சிரித்து விட்டுச் சொன்னான். “எனக்கும் உன்னை மாதிரி தான். அது சரிப்பட்டு வர்றதில்லை.”

கூட இருக்கிற உங்களுக்கே வர்றதில்லைன்னா எனக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது போலருக்கே

தியானம், ஞானம் எல்லாம் கூட இருக்கறதால வந்துடாது தீபக். அதெல்லாம் வரணும்னா கொடுப்பினை வேணும். மனப்பக்குவம் வேணும். எங்க குருஜி முக்தானந்தா எப்பவும் சொல்வார். “தண்ணீல மூழ்கியிருக்கறவனுக்கு காத்து எத்தனை முக்கியமாய் இருக்கோ அந்த அளவு முக்கியமாய் இருந்தா தான் அதெல்லாம் கைகூடும்னு சொல்வார்.”

உங்க குருஜின்னா நாகராஜ் அங்கிளுக்கும் குருஜியா?”

ஆமா. மகராஜுக்கும் குரு அவர் தான்.”

ஏன் நாகராஜ் அங்கிளை மகராஜ்னு சொல்றீங்க?”

ஆரம்பத்துல யாரோ சிலர் அப்படிச் சொல்லிக் கூப்பிட்டதால பின்னாடி எல்லாருமே அவரை அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டோம்...”

சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் மவுனமாகவே நடந்தார்கள். பிறகு தீபக் மெல்லச் சொன்னான். “அங்கிள், நீங்க பூச்செடி கேட்டீங்கன்னு அம்மா கிட்ட சொன்னேன். அந்தச் செடிகளை நடறதுக்கும் ஒரு நுணுக்கமான முறை இருக்காம். வேணும்னா அம்மாவே ஒரு நாள் வந்து செடிகள் நட்டுத்தர்றதா சொன்னாங்க

சுதர்ஷன் உடனே சொன்னான். “மகராஜ் கிட்ட கேட்டுட்டு சொல்றேன்...”

நீங்க நாகராஜ் அங்கிள் கிட்ட இருந்து சக்திகளை எல்லாம் கத்துகிட்டிருக்கீங்களா அங்கிள்

சுதர்சன் புன்னகையோடு சொன்னான். “அதெல்லாம் சாதாரண ஆள்களால கத்துக்க முடிஞ்ச விஷயமல்ல.”

நாம ஏன் நம்மள சாதாரண ஆள்களாய் நினைக்கணும்...?”

சுதர்ஷன் ஒரு கணம் திகைத்தான். இது நாள் வரை அவன் மனதில் இப்படி ஒரு கேள்வி எழுந்ததேயில்லைஅதனால் தான் சாதாரண மனிதனாகவே இருக்கிறோமோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. தீபக் அந்தக் கேள்விக்கு அவனிடம் பதிலை எதிர்பார்க்கவில்லை. அவனிடம் மட்டுமல்லாமல் தன்னிடமே கேட்கும் சிந்தனையாக அவன் நினைத்ததால் வேறெதோ அவனிடம் கேட்க ஆரம்பித்தான்.

சுதர்ஷன் அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்க்க அவனிடம் அவன் குடும்பத்தினரைப் பற்றிக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். தீபக் எந்தத் தயக்கமும் இல்லாமல் உற்சாகமாக அதற்கு விரிவான பதில் சொல்ல ஆரம்பித்தான்எல்லாவற்றையும் தீபக் நினைக்கும் விதமும், சொல்லும் விதமும் சுதர்ஷனை நிறையவே கவர்ந்தன. இந்தப் பையனை யாருக்கும் பிடிக்காமல் போகாது என்று தோன்றியது.


ஜீம் அகமது தனக்கு வந்திருந்த ரிப்போர்ட்டைப் படித்தான். நரேந்திரனைப் பற்றிய விவரங்கள் பத்து பக்கங்களில் விரிவாக இருந்தன. அவன் மிகுந்த புத்திசாலி, அதற்கேற்ற மாதிரி துணிச்சலும் அவனுக்கு மிக அதிகம், தாய் மேல் மிகவும் பாசமானவன், மிக நேர்மையானவன், ஒழுக்கமானவன், புதிய விதங்களில் சிந்திக்கக்கூடியவன், அதே போல் வித்தியாசமாகச் செயல்படக்கூடியவன் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தன. அதற்கெல்லாம் உதாரண சம்பவங்களும் கூடவே சொல்லப்பட்டிருந்தனதுணிச்சலுக்கும் வித்தியாசமாகச் செயல்படுவதற்குமாய் சேர்ந்து சொல்லப்பட்ட உதாரணம் அவனை முழுமையாக விவரிப்பதாக அஜீம் அகமதுக்குத் தோன்றியது.

அது நரேந்திரன் கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படித்த போது நடந்த சம்பவம். நரேந்திரனின் விலை உயர்ந்த மொபைல் போன் ஒன்று திருட்டுப் போனது. பக்கத்து அறையில் தங்கியிருந்த பையன் மேல் தான் அவனுக்கு உடனடியாகச் சந்தேகம் வந்தது. ஏனென்றால் இதற்கு முன் வேறுசில ஹாஸ்டல் நண்பர்களின் மொபைல் போன் காணாமல் போன போதும் அந்தப் பையன் அந்தப் பகுதியில் நடமாடியிருந்தது பற்றிப் பலரும் சொல்லி இருக்கிறார்கள். நரேந்திரனின் அறையில் இருக்கும் சகமாணவன் ஒருவன் மொபைல் போனும் பத்து நாட்களுக்கு முன் தான் திருட்டுப் போயிருந்தது. அவனுக்கும் பக்கத்து அறை பையன் மேல் தான் சந்தேகம் இருந்தது. ஜாடை மாடையாக அவன் அந்தப் பையனிடம் கேட்டும் இருந்தான். அந்தப் பையன் மகா உத்தமன் போலவும், சந்தேகப்பட்டதே தவறு என்பது போலவும் கத்திக் கலாட்டா செய்து விட்டிருந்தான். அந்தப் பையன் பெரிய இடத்துப் பிள்ளை என்பதாலும், காலேஜ் கரெஸ்பாண்டண்டுக்கு மிக வேண்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதாலும்அதற்கு மேல் எதுவும் அந்த மாணவனால் செய்ய முடியவில்லை.

நரேந்திரனின் மொபைல் போன் காணாமல் போனவுடன் நரேந்திரன் யாரிடமும் அதைச் சொல்லவில்லை. அவன் அறையில் இருக்கும் சகமாணவனைத் தவிர வேறு யாருக்கும் நரேந்திரனின் மொபைல் திருட்டுப் போனது தெரியவும் தெரியாது. நரேந்திரன் மிக அமைதியாய் மாலை வரை இருந்தான். பின் மாலையில் அந்தப் பக்கத்து அறைப் பையனும் அவனுடன் அறையில் இருக்கும் அவன் நண்பனும் கூடைப்பந்துப் போட்டியில் கலந்து கொள்ளப் போயிருந்த போது அமைதியாக பக்கத்து அறைப் பூட்டைக் கம்பியால் திறந்து உள்ளே போய் அந்தப் பையனின் அலமாரியின் பூட்டையும் அப்படியே திறந்து பரிசோதித்தான். அவனுக்கு உதவியாக வெளியே யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்த அவன் அறை சகமாணவனுக்கு இருந்த பதட்டமும், படபடப்பும் நரேந்திரனுக்குச் சிறிதும் இருக்கவில்லை.

கடைசியில் அவன் உடைகளுக்கு நடுவே ஒளித்து வைத்திருந்த தன் மொபைல் போனை எடுத்துக் கொண்டு நரேந்திரன் அமைதியாக வெளியே வந்தான்.

நரேந்திரா அப்படியே என் மொபைலும் இருக்குதான்னு பாருடாஎன்று சகமாணவன் சொன்னான்

நரேந்திரன் சொன்னான். “பார்த்துட்டேன். இல்லை. அவன் திருடி ஒன்னு ரெண்டு நாள்ல கிடைச்ச விலைக்கு வித்துடற ரகம். இந்த மொபைலையே நான் நாளைக்கு வந்து தேடியிருந்தா கிடைச்சிருக்காது. இன்னைக்கே அவனுக்கு அந்தப் போட்டி இல்லைன்னா இந்த சாயங்காலமே அவன் இதை எடுத்துட்டு போய் வித்திருக்க வாய்ப்பு இருக்கு.”

பக்கத்து அறைப் பையனும் நண்பனும் ஆடி முடித்துத் திரும்பி வந்த போது வராந்தா சுவரில் சாய்ந்தபடி அமைதியாகத் தன் மொபைல் போனில் நரேந்திரன் பேசிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து அதிர்ந்த அந்தப் பையன் தன் அறைப்பூட்டும் திறந்திருப்பதைப் பார்த்துவிட்டு நரேந்திரனிடம் வந்துஎன் ரூம் பூட்டை யாரோ திறந்திருக்கற மாதிரி இருக்கேஎன்று முறைத்தபடி கேட்டான்.

நரேந்திரன் அமைதியாக வந்து பார்த்துவிட்டுஆமாம். ஒரு வேளை நீ சரியாய் பூட்டலையோ என்னவோ? எதுக்கும் உள்ளே எதாவது திருட்டுப் போயிருக்கான்னு பாரு. அப்படித் திருட்டுப் போயிருந்தா வார்டன் கிட்ட புகார் பண்ணலாம்என்று சொன்னான்.

நரேந்திரன் தன்னுடைய மொபைல் போனை வைத்துக் கொண்டு அசராமல் நின்ற விதம் அந்தப் பையனை மேலும் கோபப்படுத்த அவன் உள்ளே போய்ப் பார்த்து விட்டு வந்துநான் வச்சிருந்த பத்தாயிரம் ரூபாயைக் காணோம்என்றான்.

நரேந்திரன் சொன்னான். “சரி வா. நாம போய் புகார் குடுக்கலாம். நம்ம ஹாஸ்டல்ல அடிக்கடி இப்படி எதாவது காணாமல் போயிட்டே இருக்கு. நாம எதாவது நடவடிக்கை எடுத்தே ஆகணும்....”

நரேந்திரன் அதற்கும் தயாராக இருப்பான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. நேற்று தான் மூன்று மாணவர்களிடம் ஐநூறு ரூபாய் கடன் கேட்டு அவர்கள் இல்லையென்று  சொல்லி கடைசியில் நாலாவது பையனிடம் ஐநூறு ரூபாய் வாங்கியிருந்தான். விசாரிக்கையில் அது தெரிய வந்து ’பத்தாயிரம் உன்னிடம் இருக்கையில் ஏன் ஐநூறு ரூபாய் கடன் வாங்கினாய்என்று கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்துஎதுக்கும் இன்னொரு தடவை தேடிப் பாக்கறேன்என்று மெல்லப் பின்வாங்கினான்

இந்த நிகழ்ச்சியை விவரித்த நரேந்திரனின் ஹாஸ்டல் அறை சக மாணவனுக்கு இப்போதும் நரேந்திரன் மேல்ஹீரோ வர்ஷிப்இருப்பதாக அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அஜீம் அகமதுக்கு நரேந்திரனைப் புரிந்து கொள்ள அந்த ஒரு சம்பவமே போதுமானதாக இருந்தது. சஞ்சய் ஷர்மா, மதன்லால் இருவரின் மறைவின் காரணமும் புரிந்து விட்டது.



(தொடரும்)
என்.கணேசன்




3 comments:

  1. Narendran has sema dhil. Super. Super. Ajeem Ahamed and Narendran are going to be great match I think.

    ReplyDelete
  2. அஜீம் அகமது நரேந்திரனை கண்டுபிடித்து விட்டான்... நரேந்திரன் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்?

    ReplyDelete
  3. உங்கள்நாவல்கள் அமாநுஷ்னும் இருவேறுஉலகமும் பலதடவைபடித்துள்ளேன் அதில் அக்ஷ்ய்வார்த்தைகளைகுருவாக்கியகமும் கிரீஷிசெயல்களை சிஷ்யனின்நடவடிக்கையாகவும் என்மனதில்பதிகிறதுஉங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம்

    ReplyDelete