சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 18, 2021

இல்லுமினாட்டி 129ந்த கன்னியாஸ்திரி புத்தகங்கள் நிறைந்த பையைத் தூக்கிக் கொண்டு போக சிரமப்பட்டாள். கர்னீலியஸ் இரக்கப்பட்டு அதை வெளியே வரை எடுத்து வரட்டுமா என்று கேட்டார். வயதான அவரிடம் அவள் உதவி கேட்கத் தயங்குவது போல் காட்டிக் கொண்டாள். பின் இன்னொரு காலிப் பையை எடுத்து அதில் பாதி புத்தகங்களைப் போட்டுக் கொண்டாள். “இந்த இரண்டு பைகளில் சுமப்பது சுலபம்” என்று சொல்லி வெளியே செல்லக் கிளம்பினாள். ஆனால் அவள் அப்படி இரண்டு பைகளில் பிடித்துக் கொண்டு நடந்த போதும் சிறிது தடுமாறியதை கர்னீலியஸ் கவனித்தார்.  

“ஒரு பையை என்னிடம் கொடுங்கள்” என்றார் அவர். அவள் சிறிது யோசித்து “உங்களுக்கு ஏன் சிரமம். வெளியே கார் வரை தானே. கொண்டு போய்க் கொள்கிறேன்” என்றாள். ஆனால் அவர் கட்டாயப்படுத்தவே தயக்கத்துடன் ஒரு பையை அவர் கையில் தந்தாள். இருவரும் வெளியே சென்ற பிறகு அறையில் ஒளிந்து கொண்டிருந்த இளைஞன் மின்னல் வேகத்தில் அறையிலிருந்து வெளியே வந்து சமையலறைக்கு விரைந்தான். சமையலறையில்  ஸ்டவ்வில் ஒரு பாத்திரம் மூடப்பட்டு இருந்தது. அவருடைய இரவு ஆகாரமே ஒரு பெரிய தம்ளரில் பாலும் ஒரு ஆப்பிளும் தான் என்று சொல்லி இருந்தார்கள்.  அவன் கையில் வைத்திருந்த ஒரு சிறிய பாட்டிலின் மூடியைத் திறந்து அந்தப் பால் பாத்திரத்தில் கவிழ்த்தான். நிறமற்ற திரவ வடிவில் இருந்த கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் பாலுடன் கலந்தது. பின் அவன் மறுபடி வேகமாகப் போய் அந்த அறையிலேயே ஒளிந்து கொண்டான்.

வெளியே நின்றிருந்த காரில் அந்தக் கன்னியாஸ்திரி ஏறிக் கொண்டாள்.  அந்தப் புத்தகப்பையை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு பல முறை நன்றி சொன்னாள். பின் அவள் கிளம்பிப் போனாள். அவள் வேறு வீடுகளுக்கு நூல்கள் வாங்கச் செல்லாதது கர்னீலியஸை யோசிக்க வைத்தது. அவரிடம் புத்தகங்கள் நிறைய இருக்கின்றன என்று யாராவது சொல்லியிருக்கக்கூடும், அதனால் தான் அவள் இந்தப் பகுதியில் அவர் வீட்டுக்கு மட்டும் வந்திருக்க வேண்டும் என்று அவரே நினைத்துக் கொண்டபடி வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டுக்குள் அவருக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

அவர் அறைக்குப் பக்கத்து அறைக்கு அவர் அதிகம் போவதில்லை. விருந்தாளிகள் யாராவது எப்போதாவது வந்தால் மட்டும் அதில் தங்குவார்கள். அந்தச் சமயங்களில் தான் அவரும் அங்கு போவார். மற்ற சமயங்களில் எல்லாம் வீடு சுத்தம் செய்யும் பெண்மணி மட்டும் சில நாட்களுக்கு ஒரு முறை வந்து தூசு தட்டிச் சுத்தம் செய்து விட்டுப் போவாள்.

கர்னீலியஸ் வீட்டின் கதவைத் தாளிட்டுக் கொண்டு தனதறைக்குப் போனார். இப்போது கொடுக்க வேண்டித் தேடிய நூல்களில் அவர் படிக்க வேண்டிய ஒரு நாள் கடைசி அலமாரியின் ஒரு மூலையிலிருந்தது தட்டுப்பட்டிருந்தது. அதை எடுத்து அவர் படிக்க உட்கார்ந்தார். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. உறக்கம் வருவது போலிருந்தது. எழுந்து சமைலறைக்குச் சென்று பாலை ஒரு பெரிய தம்ளரில் ஊற்றினார். ஃபிரிட்ஜைத் திறந்து ஒரு ஆப்பிளை எடுத்து அதைக் கத்தியால் நறுக்கிச் சாப்பிட்டார். பின் தம்ளரிலிருந்த பாலைக் குடித்தார்.  பின் தனதறைக்குப் போய் படுக்கையில் சாய்ந்தார். அரை மணி நேரம் கழித்து நெஞ்சை ஏதோ அழுத்துவது போல் இருந்தது. மூச்சு விட சிரமமாயிருந்தது. டாக்டரை அழைத்தால் தேவலை என்று தோன்றியது. ஆனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை…

பக்கத்து அறையில் பதுங்கியிருந்த இளைஞன் தன் கைக்கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அரை மணி நேரத்தில் ஆரம்பித்து நாற்பத்தைந்து நிமிடத்திற்குள் கிழவர் இறந்து விடுவார்…. அவர் மூச்சிறைக்கும் சத்தம் நன்றாகவே அவனுக்கும் கேட்க ஆரம்பித்தது. அவன் அமைதியாக இருந்தான். நாற்பத்தியிரண்டு நிமிடத்தில் சத்தம் குறைய ஆரம்பித்து, நாற்பத்தி நாலாம் நிமிடம் அடங்கியது. ஆனாலும் அவன் தானிருந்த இடத்தை விட்டு எழவில்லை.  நாற்பத்தியேழாவது நிமிடம் மெல்ல எழுந்து அவர் அறையை எட்டிப் பார்த்தான். கர்னீலியஸ் அசையாமல் படுத்திருப்பது போலத் தெரிந்தது. நாளை டாக்டர் வந்து பார்த்து அவர் உறக்கத்திலேயே மாரடைப்பில் காலமாகி விட்டதாய்ச் சொல்வார்… அவன் ஊற்றிய விஷம் போஸ்ட் மார்ட்டம் செய்தால் கூட கண்டுபிடிக்கப்படாது. அந்த விஷத்தை அவர்கள் விட்டமின் ஜீரோ என்று சொல்வார்கள். அது இறப்பை ஏற்படுத்துமேயொழிய இறப்பின் காரணமாகத் தெரியாது.

அந்த இளைஞன் மெல்லக் கையுறைகளை அணிந்தபடியே அவர் அறைக்குள் நுழைந்து அவருடைய அலைபேசியை எடுத்து அதில் சாலமன் மற்றும் வாங் வே அழைத்திருந்த தகவல்களை எல்லாம் அழித்தான்.  இனி டெலிபோன் கம்பெனியிடம் தொடர்பு கொண்டு, வந்த போன்கால்கள், அழைத்த போன்கால்கள் பற்றிய விவரங்கள் வாங்கினால் ஒழிய அந்த விவரங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது. மாரடைப்பில் இறந்து போன முதியவர் பேசிய போன்கால் விவரங்களை இல்லுமினாட்டி உட்பட யாரும் வாங்கிப் பார்க்கப் போவதில்லை.  வெறும் இந்தப் போனை மட்டுமே சோதித்துப் பார்த்தால் அந்தத் தகவல்கள் கிடைக்கப் போவதில்லை.

அந்த அலைபேசியை அவர் வைத்திருந்த இடத்திலேயே வைத்து விட்டு அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். மேசையின் மீது டைரி இருந்தது. மெல்ல அந்த டைரியை எடுத்துப் பார்த்தான். அவர் டைரியில் சில நாட்களை மட்டும் குறித்திருந்தார். அவர் கலந்து கொள்ள வேண்டிய கூட்டங்களின் தினங்கள் குறிக்கப்பட்டிருந்தன. அவர் நண்பர் ஒருவரின் திருமண நாள் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று ஒரு நாளைக் குறித்திருந்தார்.   வரும் வியாழன் நடக்கவிருக்கும் இல்லுமினாட்டி கூட்டம் பற்றியும் குறித்து வைத்திருந்தார். ”மீட்டிங் 11.00 மணி” என்று குறித்திருந்தார். அதற்குப் பிந்தைய பக்கங்கள் காலியாகவே இருந்தன. வாங் வே, சாலமன் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறாரா என்று பார்ப்பதற்காக டைரியைத் திறந்து பார்த்தவன் அவர்களைப் பற்றி மட்டுமல்லாமல் வேறு யாரிடம் இருந்த தொடர்பு பற்றியும் எழுதியிருக்கவில்லை என்பதால் திருப்தி அடைந்து அதே இடத்தில் வைத்தான்.

அந்த டைரியின் கடைசி பக்கத்தில் கர்னீலியஸ் எழுதியிருந்த அந்த ரகசிய ஆவணக் குறிப்பை அந்த இளைஞன் பார்க்கத் தவறியிருந்தான். முதல் முறை நினைவு கூர்ந்து கிடைத்த விஷயத்தை எழுத டைரியை எடுத்த கர்னீலியஸ் அவசரத்தில் டைரியின் கடைசி காலிப்பக்கத்தில் அதை எழுத ஆரம்பித்திருந்தார். அடுத்த முறை தொடரும் போது எழுத அந்தக் கடைசி காலிப்பக்கம் சுலபம் என்று அந்தச் சமயத்தில் அவருக்குத் தோன்றியிருந்தது. அவர் அப்படி கடைசி பக்கத்தில் இந்தத் தகவலை எழுதியிருக்கக்கூடும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

அடுத்தபடியாக அவன் சிசிடிவி காமிராவில் அன்று பதிவாகியிருந்த அனைத்தையும் அழித்து விட்டு அதை அணைத்து வைத்தான். அவர் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டால் ஒழிய அவர்கள் அந்தக் காமிராப் பதிவுகளைப் பார்க்கப் போவதில்லை என்றாலும் கூட அவன் தேவையில்லாமல் எந்தத் தடயத்தையும் விட்டுப் போக விரும்பவில்லை. கடைசியாக சமையலறைக்குப் போய் அந்தப் பால் பாத்திரத்தில் பால் மீதி வைத்திருக்கிறாரா என்று அவன் பார்த்தான். சுமார் அரை தம்ளர் அளவு பால் மீதமிருந்தது. அதைக் கொட்டிக் காலி செய்து பின் பாத்திரத்தைக் கழுவியும் வைத்தான். உடலின் உள்ளே போன பிறகு அது தன் இருப்பை மறைக்குமே ஒழிய பாலிலேயே இருக்கும் போது சோதனையிட்டால் காட்டிக் கொடுத்து விடும். அவர்கள் யாரும் அதைச் சோதனையிடும் வாய்ப்பில்லை என்ற போதும் அப்படிச் செய்தாலும் கண்டுபிடிக்கும் வாய்ப்பிருக்கா வண்ணம் இருக்க வேண்டுமென அவன் நினைத்தான்.

அவருடைய வீட்டுக் கதவு மூடினால் தானாகப் பூட்டிக் கொள்ளக்கூடியது. பிறகு சாவி போட்டுத் திறந்தால் தான் அதைத் திறக்க முடியும். அதுவும் கதவைத் தாளிட்டுக் கொண்டு உறங்கிய அவர் உறக்கத்திலேயே இறந்து போனதாக மற்றவர்கள் நினைக்க உதவும். அவன் அறியாமல் விட்டுப் போன அந்த டைரியின் கடைசி பக்கம் தவிர வேறு எதுவுமே அந்த இரகசிய ஆவணத்தையோ, அது சம்பந்தமாய் அவரைப் பார்க்க வந்த ஆட்களையோ காட்டிக் கொடுப்பதாயில்லை.

இல்லுமினாட்டி அந்த வங்கி லாக்கரை எடுத்து அந்த இரகசிய ஆவணத்தையே எடுத்துப் பார்த்தாலும் கூட அதில் பழங்காலக் கலப்பு மொழியில் இரகசிய சங்கேத முடிச்சுப் போட்டு எழுதி இருப்பதை அறிஞர்கள் உதவியில்லாமல் என்னவென்று அறியக்கூட வாய்ப்பில்லை. அதற்கும் பல மாதங்களாகும். அதற்குள் இங்கே எல்லாம் முடிந்துவிடும்...

(தொடரும்)
என்.கணேசன் 10 comments:

 1. Feeling sad for Cornelius. How Illuminati is going to know about the murder?

  ReplyDelete
 2. கர்னீலியஸ் மரணம் வருந்தத்தக்கது... ஆனால், அது...வலியில்லாமல் எளிமையாக நடந்தது...ஆறுதலாக உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. Aama, athulayaavthu konjam aaruthal pattuklaam..

   Delete
 3. முதிர்ந்த வயதுடையவராயினும்... மரணத்தை எதிர்நோக்கி இருந்தவராயினும் கர்னீலியஸ் என்கிற கர்ம வீரரின் மரணம் மனதிற்கு வருத்தமளிக்கிறது....

  ReplyDelete
 4. நம்முடன் வாழ்ந்தவரை இழந்தது போல் மிகவும் வருத்தமாக உள்ளது.

  ReplyDelete
 5. Already guess pannathu thaan nu sonnaalum avaroda izhappa accept pannikka mudila, தர்மம் வெல்லும் ndra vaarthaiyum, தப்பு பண்றவங்க தடயம் விட்டுட்டு தான் போவாங்க ndrathaiyum nambi thaan next episode laa read pannanum...

  ReplyDelete
 6. மர்ம மற்றும் துப்பறியும் நாவல்களிலும் கணேசன் அவர்கள் சிறக்கலாம் போலிருக்கிறது. வேடமணியும்போதும் மனதாலும் உணர்வாலும் அப்படியே மாறினால் கனகச்சிதமாக இருக்கும் என்பார்கள். கணேசன் அவர்கள் அந்நிலையிலேயே பாத்திரங்களை, சூழல்களை உணர்கிறார். மொழித்திறனும், நல்ல உளப்பாங்கும் இவரின் எழுத்து தனித்துவமாக தெரிவதற்கு காரணம்.. இவரின் சிறு குறு கதைகளிலிருந்து, நாவல்கள் வரை எல்லாவற்றிலும் இந்த மென்மையான, மேன்மையான, ஆழமாக தெளிந்த புரிதல்களை காணலாம்..

  ReplyDelete