சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 25, 2021

இல்லுமினாட்டி 130



சாலமனின் தற்கொலைக்குப் பின் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இம்மானுவல்  குழம்பினான். அவர் மட்டும் தான் விஸ்வத்திடம் விலை போயிருப்பார் என்று அவனால் நம்ப முடியவில்லை.  அவர் தானாக இது போன்ற முடிவை எடுத்திருப்பார் என்று தோன்றவில்லை. யாரோ சிலர் அல்லது ஒருவருடன் சேர்ந்து இந்தச் சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்பதே அவன் அனுமானமாக இருந்தது. ஆனால் அவர் எந்தத் தடயத்தையும் விட்டுப் போயிருக்கவில்லை. அவர் அலைபேசி அழைப்புகளைப் பார்த்தாகி விட்டது. அவர் அழைத்த அழைப்புகள், அவருக்கு வந்த அழைப்புகள் ஏராளமாக இருந்தன. அவருடைய தொழில் அப்படி. அவற்றில் யாரும் அழைக்கக்கூடாதவர்கள், சந்தேகத்திற்குரியவர்கள் என்று உடனே தட்டுப்படவில்லை. மின்னஞ்சல்கள், வீடு, டைரி எல்லாம் பார்த்தாகி விட்டது. எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

எர்னெஸ்டோவிடம் அவன் சொன்னான். “மிக நல்ல மனிதர். ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று தெரியவில்லை”

எர்னெஸ்டோ கடுமையான தொனியில் சொன்னார். “மிக நல்ல மனிதர்கள் எந்தச் சூழ்நிலையிலும் சதி வேலையில் ஈடுபட மாட்டார்கள். அவனுக்குக் கூட்டாளிகள் யார் இருக்கிறார்கள் என்பதை உடனடியாகக் கண்டுபிடி. இது போன்ற களைகளை உடனடியாகப் பிடுங்கி எறியா விட்டால் பெருகி விடுவார்கள்...”

”ஆழமாக விசாரிக்க ஒரு குழு அமைத்திருக்கிறேன். சீக்கிரமே ஒரு விடையுடன் வருவார்கள்... வாஷிங்டனில் நம் மூத்த உறுப்பினர் கர்னீலியஸ் உறக்கத்திலேயே மாரடைப்பால் காலமாகி விட்டார் என்ற செய்தி வந்திருக்கிறது...”

எர்னெஸ்டோவுக்கு கர்னீலியஸ் மீது மிக உயர்ந்த அபிப்பிராயம் இருந்தது. எல்லாரிடமும் இனிமையாகப் பழகக்கூடிய கண்ணியமான மனிதர். இல்லுமினாட்டியின் உபதலைவர் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறார். தலைமைக்குழு உறுப்பினர்கள் யாரையாவது இறுதி மரியாதை செலுத்த அனுப்ப வேண்டும் என்று நினைத்த அவர் உதவியாளரை அழைத்து விஷயத்தைச் சொல்லி, கர்னீலியஸுக்கு இறுதி மரியாதை செலுத்த வாங் வே போகட்டும் என்று சொன்னார்.


ன்னும் இரண்டு மணி நேரத்தில் விஸ்வம் கிளம்ப வேண்டும். இந்தப் பயணம் அவனுக்கு மிக முக்கியமான பயணம். வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக இது அமையப் போகிறது. அவன் இறைவனை நம்புபவன் அல்ல. அதனால் பிரார்த்தித்துக் கிளம்ப அவன் நினைக்கவில்லை. ஆனால் பாதாள அறையில் தியானத்தில் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி உறுதியாக்கிக் கொண்டு கிளம்ப நினைத்தான்.

ஒரு காலத்தில் ஐந்து நிமிடம் பத்மாசனத்தில் அமரப் படாதபாடு பட்ட டேனியலின் உடல் இப்போதெல்லாம் அப்படி அமர எந்த அசௌகரியத்தையும் உணர்வதில்லை. தியானத்திற்கு அமர்ந்தவுடனேயே மனமும் ஓடுகாலியாக இருக்காமல் அமைதியாய் சீக்கிரமே தியானத்திற்கு இசைந்தது. எப்போதும் அவன் கதேயின் கவிதை இருக்கும் சுவரைப் பார்த்தபடி தான் தியானத்தில் அமர்வான். கண்களை மூடினாலும் அந்தக் கவிதையின் கடைசி ஐந்து வரிகளை அவன் மனக்கண்ணால் பார்க்க முடியும். அந்த வரிகள் நெருப்பின் கனலால் மின்னுவது போல மின்னும். அவன்  அதைப் பார்த்தபடியே உள்மன உலகங்களின் சக்தி அலைவரிசையில் இணைவான். அன்றும் அது நடந்தது. காலம் அவன் தியானத்தைக் கலைக்காமல் வேகமாய் ஓடியது. திடீரென்று பெரிய பிரமிடு நெற்றிக் கண் சின்னம் அவன் எதிரில் மின்னியது. கதேயின் கவிதைக்கு நேர் எதிரில் இருந்த சுவரில் பெரிதாக வரையப்பட்டிருக்கும் சின்னத்தை அவன் எப்போதும் லட்சியம் செய்வதில்லை. காரணம் அந்தச் சின்னம் அவன் கையிலும் மின்னி, க்ரிஷின் கையில் அதிகமாக மின்னிச் செய்த சதியை அவன் என்றுமே மறக்க முடியாது. அதனால் தான் அந்த அறையில் முதல் நாளிலேயே அந்தக் கண்ணில் அமானுஷ்ய சக்தி வீச்சை உணர்ந்தும் கூட அலட்சியப்படுத்தியதுடன் அதே பாவனையை இன்று வரை கடைப்பிடித்தும் வருகிறான். இன்று அதிசயமாய் அது அவன் மனத்திரையில் மின்னும் போதும் அலட்சியப்படுத்தி மனதைத் திருப்ப யத்தனிக்கையில் தான் ‘பெருவிழியில் பெரும் சக்தி  பெறுவான்’ என்ற அந்தச் சுவடி வாசகம் அவன் நினைவுக்கு வந்தது. அந்தப் பெருவிழி இது தானா?

ஜிப்ஸி மேலேயிருந்து குரல் கொடுத்தான். “விஸ்வம் கிளம்பலாமா?”

கண்களைத் திறந்த விஸ்வம் மெல்லத் திரும்பி எதிர்ச் சுவரைப் பார்த்தான். சுவரில் வரையப்பட்டு இருந்த பெரிய பிரமிடுக்குள் இருந்த பெரிய கண் இப்போதும் அவனை வசீகரமாய்ப் பார்த்தது. அந்த வசீகரத்தில் அவன் சிந்திக்கும் திறனை இழந்து விடவில்லை.  இல்லுமினாட்டியின் ‘அனைத்தும் பார்க்கும் விழி’ அவனை இன்னொரு முறை ஏமாற்ற முயல்கிறதா என்ற சந்தேகம் வந்தது. இப்போது எதையும் சோதித்துப் பார்க்க அவனுக்கு அவகாசம் இல்லை. வாஷிங்டனிலிருந்து வந்த பிறகு தான் சோதித்துப் பார்க்க வேண்டும். விஸ்வம் திரும்பி கதேயின் கவிதையைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுக் கிளம்பினான்.

ம்யூனிக் விமானநிலையம் போகும் வழிநெடுக இருவரும் பேசிக் கொள்ளவில்லை. விமான நிலையத்திலும் ஜிப்ஸி உள்ளே வரவில்லை. விஸ்வத்திடம் சொன்னான். “இங்கே எதுவும் பிரச்னை இருக்காது என்று நினைக்கிறேன். அப்படி ஏதாவது பிரச்னை இருந்தால் ஓடி வா. தப்பித்து விடலாம். விமானம் கிளம்பாமல் நான் இங்கிருந்து போக மாட்டேன். வாஷிங்டனில் சந்திப்போம்…”

விஸ்வம் தலையசைத்து விட்டுக் காரிலிருந்து இறங்கினான்.  கருப்புக் கண்ணாடி அணிந்த இந்த குறுந்தாடி மனிதன் தான் வலைவீசித் தேடப்படும் டேனியல் என்று மேலோட்டமான பார்வையில் யாரும் சொல்ல முடியாதபடி மாறியிருந்த விஸ்வம் அமைதியாக உள்ளே நுழைந்தான். அரை மணி நேரம் கழித்து மைக்கேல் விக்டரால் அவன் சோதிக்கப்பட்ட போது மைக்கேல் விக்டர் மெலிதாகப் புன்னகைத்தான். விஸ்வமும் அதே அளவில் சிறிய புன்னகையை உதிர்த்தான்.

“இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்” என்று சொல்லி வாழ்த்தி மைக்கேல் விக்டர் அனுப்ப அவன் கையை உறுதியாகக் குலுக்கி நன்றி தெரிவித்து விட்டு அமைதி மாறாமல் விஸ்வம் நடந்தான். ஆனாலும் விமானம் கிளம்பும் வரை சின்னதாய் ஒரு குறுகுறுப்பு அவனுக்குள் இருந்தது. விமானம் பறக்க ஆரம்பித்தவுடன் மனம் நிம்மதியடைந்தது. சீட்டின் எதிரில் இருந்த டிவியில் தமிழகச் செய்திகளைப் பார்த்தான்.

ஒரு தொலைக்காட்சியில் கமலக்கண்ணன் பேசிக் கொண்டிருந்தார். ”உதய்க்குக் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம். வெளிநாட்டுப் பயணத்தைப் பாதியில் முடித்துக் கொண்டு திரும்பியுள்ள என் இளைய மகன் க்ரிஷ், உதய் நலமடைய எங்கள் வீட்டில் சிறப்புத் தியானம் ஒன்றில் ஈடுபட்டிருக்கிறான். இனி எல்லாம் இறைவன் கையில் என்று தான் சொல்ல வேண்டும்…”

தொலைக்காட்சி அடுத்ததாக மருத்துவமனையையும், ஆம்புலன்ஸில் இருந்து ஸ்ட்ரெச்சரில் உதயை இறக்கி உள்ளே எடுத்துக் கொண்டு போவதையும், அடுத்தபடியாக  பத்மாவதி மருமகள்கள் சகிதம் காரிலிருந்து இறங்கி கண்ணீருடன் மருத்துவமனைக்குள் நுழைவதையும் நூறாவது முறையாகக் காண்பித்தது.   விஸ்வம் திருப்தியுடன் தொலைக்காட்சியை அணைத்தான்.

க்ரிஷ் இந்தியா போய் சிறப்புத் தியானத்தில் ஈடுபட்டு எந்தப் பலனும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும்.  காரணம் அந்த விஷம் அப்படிப்பட்டது.

இந்த விஷ ஆராய்ச்சியில் அவன் பதினோரு மாதங்கள் தீவிரமாக இறங்கியிருக்கிறான். காட்டுவாசிகளுடனும், பல ஆராய்ச்சியாளர்களுடனும் ஒரு நாளில் பத்தொன்பது மணி நேரங்கள் கழித்திருக்கிறான். அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறான். ஒவ்வொரு விஷமும் மனித உடலில் எந்த விளைவை எப்போது ஏற்படுத்தும் என்பதெல்லாம் அவனுக்கு அத்துப்படி. சாதாரணமாகப் போஸ்ட் மார்ட்டத்தில் எந்த மாதிரியாய் தெரியும் என்பதையும் அவன் அறிவான். உதய்க்குக் கொடுத்திருக்கும் விஷம் ஏழு நாட்களில் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. அவனுடைய சங்கேத பாஷையில் அதன் பெயர் விட்டமின் வி7. சமீபத்தில் கர்னீலியஸுக்குத் தந்தது விட்டமின் வி ஜீரோ. அதைச் சாப்பிட்ட பின் அதிகபட்சமாய் நாற்பத்தைந்து நிமிடங்கள் தான் ஒருவன் வாழ முடியும். உதய்க்குக் கொடுத்திருக்கும் விஷம் கல்லீரல் சிறுநீரகப் பிரச்னையாய் வெளியே தெரியும். கர்னீலியஸுக்குக் கொடுத்திருந்த விஷம் மாரடைப்பாய் வெளியே தெரியும். கர்னீலியஸ் கதை முடிந்து விட்டது. உதய் மற்றும் எர்னெஸ்டோவின் கதை முடியப் போகிறது. அவன் வாழ்க்கை புதிதாய் ஆரம்பமாகப் போகிறது….

(தொடரும்)
என்.கணேசன்   


6 comments:

  1. Viswam and Amanushyan are going to meet in Washington. Super. Eager to read the meeting of two giants.

    ReplyDelete
  2. அதர்மம் தோற்கும் என்ற தத்துவத்திலேயே மனச தேத்தித்திக்ட்டு படிச்சிட்டு வரேன்..

    Amanushyan part kaaga romba waiting, gypsy ah find out pannathu mattum thaan ippothaiya kandupidippaa iruku, narita expect pandren amanushyan oda part ah..

    Because ithu thaan last la akshai oda role., ithoda entha novel la yum vara maattaar la..

    ReplyDelete
  3. Innum one week wait pannanum.😕

    ReplyDelete
  4. விஸ்வம் திட்டம் தெளிவாக உள்ளது... முதல் அடியில் வெற்றியும் பெற்றுவிட்டான்....
    கிரிஷ் மற்றும் அமானுஷ்யன் அணியின் திட்டம் என்ன எனபது தான் தெரியவில்லை....

    ReplyDelete
  5. Amanushyan many time asked about what Jipsy done in the airport when Amanushyan came to meet the Head of Illuminati. But always that question is skipped...why?

    ReplyDelete
  6. அமானுஷ்யன் ஏர்போர்ட்டில் ஜிப்ஸி வந்ததைப் பற்றி ஏதோ சந்தேகம் இருப்பதாக சொன்னதைப்பற்றி எந்த தகவலும் இல்லையா????

    ReplyDelete