சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 20, 2021

யாரோ ஒருவன்? 50


ஜெய்ராம் படித்தவன். அறிவியல் அறிவு ஓரளவாவது உள்ளவன். அவனுக்குத் தன் காதுகளில் விழுந்த செய்தியை நம்புவது மிகவும் கஷ்டமாக இருந்தது. ”என்னது, நாகரத்தினமா?” என்று அவநம்பிக்கை தொனிக்கும் குரலில் கிழவரை அவன் கேட்டான். நாகராஜிடம் ரத்தினக் கற்கள் இருக்கக் கூடும். அவனிடம் இருந்ததால் இந்தக் கிழவன் அதை நாகரத்தினமாக நினைத்துக் கொண்டிருக்கக்கூடும்....

கிழவர் அந்த அவநம்பிக்கை தொனியை இலட்சியம் செய்யவில்லை. ஆணித்தரமாய் சொன்னார். “ஆமாம் நாகரத்தினம் தான்

பார்த்த காட்சியைத் தெளிவாகச் சொல்லுங்களேன்.” என்று ஜெய்ராம் சொன்னான். அதை வைத்து கிழவன் என்ன பார்த்திருப்பான் என்று முடிவு செய்து கொள்ளலாம் என்பது அவன் எண்ணமாய் இருந்தது.

கிழவர் சொன்னார். “சுவாமிஜி சமாதியடைவதற்குப் பத்து நாட்கள் முன் ஒரு ராத்திரி.... எனக்கு தூக்கம் வரலை.... பொறுப்பில்லாத குழந்தைகள் இருந்தால் ஒரு தகப்பனுக்கு எப்படிச் சரியாய் தூக்கம் வரும்...” கிழவர் தன் மகனைக் கடுமையாக ஒரு முறை பார்த்தார். அந்த இளைஞன் அவரை முறைத்தான். அவர் தொடர்ந்து ஜெய்ராமைப் பார்த்துச் சொன்னார். “தூக்கம் வராததால எழுந்து உட்கார்ந்து கொஞ்சம் நேரம் காலத்தைப் போக்கினேன். போய் ஒரு தம்ளர் தண்ணி சாப்பிட்டு வந்து மறுபடி தூங்க முயற்சிக்கலாம்னு நினைச்சி போறப்ப சுவாமிஜி அறையில் பல நிறங்கள்ல எதோ வெளிச்சம் தெரிஞ்சுது. என்னடா இது இப்படி ஜொலிக்குதுன்னு சொல்லி போய் சுவாமிஜி அறையை எட்டிப் பார்த்தால் சுவாமிஜி நல்ல தூக்கத்தில் இருந்தார். மகராஜ் பாய்ல உட்கார்ந்திட்டிருந்தார். அவர் கைல ரெண்டு மூனு நாகரத்தினக்கல் இருந்துச்சு. அந்த மாதிரியொரு ஜொலிப்பை நான் என் வாழ்நாள்ல பார்த்தது கிடையாது.... அந்த அறையே ஒரு தேவலோகம் மாதிரி அந்த ரத்தினங்களால ஜொலிச்சுது. மகராஜ் எதோ தேவேந்திரன் மாதிரியும் கந்தர்வன் மாதிரியும் தெரிஞ்சார். அது வேறொரு உலகம் மாதிரி ஒரு கணம் தோணுச்சு. மகராஜும் வேற எதோ ஒரு உலகத்துல இருக்கிற மாதிரி இருந்தார். ரெண்டு நிமிஷம் நின்னிருப்பேன். திடீர்னு மகராஜ் பின்னால இருந்து வேக வேகமாய் ஒரு பாம்பு கிளம்பி நான் பார்த்துகிட்டிருந்த ஜன்னல்ல ஏறி சீறுச்சு. நான் ஒரே ஓட்டம் எடுத்து என் அறைக்கு வந்துட்டேன். எங்க அந்தப் பாம்பு என்னைத் துரத்திட்டே என் அறைக்கும் பின்னாலயே வந்துடுமோன்னு பயந்தேன். நல்ல வேளையா அது வரலை. பிறகு எனக்கு நிறைய நேரம் தூக்கம் வரலை....”

ஜெய்ராம் கேட்டான். “நீங்க பார்த்தது நாகரத்தினம்னு தான்னு எப்படிச் சொல்றீங்க.? அது வேற எதோ விலையுயர்ந்த வைரம், மாணிக்கமாய் கூட இருக்கலாமில்லையா?”

இல்லை எனக்குத் தெரியும் அது நாகரத்தினம் தான்னு. ஏன்னா வேற எந்த விலையுயர்ந்த கல்களும் மகராஜ் கைல இருக்க வாய்ப்பே இல்லை. அந்தக் ரத்தினங்கள் அவர் கிட்ட இருக்கிறது தான் அவருக்கு ஐஸ்வர்யத்தைத் தந்துகிட்டிருக்கு. அவருக்கு ஏதோ கூடுதல் சக்திகளைத் தந்திருக்கு. அவருக்கு நாகசக்தி வசப்பட்டிருக்குன்னு பல தடவை சுவாமிஜி சொல்லியிருக்கிறார். அந்தச் சக்தி வசப்பட்டிருப்பது அந்த நாகரத்தினங்களால தான்.”

ஜெய்ராம் நாகரத்தினம் என்பதே கற்பனைன்னு விஞ்ஞானம் சொல்லி இருக்கிறதென்று விளக்க நினைத்தான். ஆனால் கிழவர் ஆணித்தரமாய் நம்பும் விஷயத்தை மாற்ற முடியாதென்று தோன்றியது. ஆனால் கிழவர் அவன் பார்வையிலிருந்தே அவன் அவர் சொன்னதை நம்பவில்லை என்று யூகித்து விட்டிருந்தார்.  

அவர் சொன்னார். “சுவாமிஜிக்கு ஏராளமான சக்திகள் இருந்துச்சு. அதை அவர் அடிக்கடி வெளிப்படுத்திக்கலைன்னாலும் கூட இருந்த எங்களுக்கு அதை எத்தனையோ விதங்கள்ல உணர முடிஞ்சுது.  நாளைக்கு என்ன நடக்கும்னு அவர் முந்தின நாளே சொன்னதிருக்கு. தூரத்துல என்ன நடந்திருக்குன்னு இருந்த இடத்துல இருந்துட்டே சொன்னதிருக்கு. அதுக்குக் காரணம் அவர் ஒரு யோகி. ஞானி. மகராஜ் நல்லவரே ஒழிய அந்த மாதிரி யோக வாழ்க்கை வாழ்ந்தவர் கிடையாது. அப்படி இருந்தும் அவருக்குப் பல சக்திகள் வந்திருந்துச்சுன்னா அது அந்த நாகரத்தினம் வழியா தான்.... அப்புறம் இன்னொரு விஷயம்.... அந்த நாகரத்தினம் ஜொலிச்ச மாதிரி ஒரு ஜொலிப்பை என் வாழ்நாள்ல வேற எங்கயும் பார்த்ததில்லை.... அந்த ரத்தினத்தைப் பார்த்த என்னை அந்த நாகம் அந்த இடத்தில் நிக்க விடலையே அதுக்கு என்ன சொல்றீங்க. நாகங்கள் அன்னியர்கள் அதைப் பார்க்கவும், தொடவும் லேசில் விடாதாம்....”

நீங்க பார்த்த விஷயத்தை சுவாமிஜி கிட்டயோ, மகராஜ் கிட்டயோ பிறகு எப்பவாவது பேசியிருக்கீங்களா?”

இல்லை. பேசறது. ஆபத்துன்னு மனசு சொல்லுச்சு. அதனால தான் அவங்க கிட்ட மட்டுமல்ல வீட்டுலயும் யார் கிட்டயும் சொல்லலை. இப்ப கொஞ்சம் பணக்கஷ்டம்... பசங்க ரெண்டு பேரும் சரியில்லை... சோம்பேறிங்க....” கிழவன் மகனின் முறைப்பை சட்டை செய்யாமல் தொடர்ந்தார். “அதனால தான் மகராஜை மனசுல நினைச்சுட்டு நாற்பதாயிரம் ரூபாய் கிடைச்சால் சொல்றேன்னும், அதுக்குக் கம்மி ஒரு பைசா வந்தாலும் சொல்றதில்லைன்னும் சொல்லிகிட்டேன். அவரோட அனுக்கிரகத்தால நீங்க சம்மதிச்சுப் பணம் கிடைச்சது. அதனால உங்ககிட்ட தான் முதல்ல சொல்றேன்.”

அவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அதை நாகராஜின் அனுக்கிரகம் என்று கிழவர் சொன்னது ஜெய்ராமுக்கு நாகரத்தினம் என்று அவர் சொன்னதை விடக்கூடுதல் வேடிக்கையாக இருந்தது.

இனி சொல்ல கிழவரிடம் எதுவும் இல்லையென்று புரிந்து மெள்ள ஜெய்ராம் எழுந்தான்.


டுத்த நாள் கல்யாணுக்கு துப்பறியும் நிறுவனத்திலிருந்து விரிவான மின்னஞ்சல் வந்திருந்தது. ஜெய்ராம் என்ற பெயரில் விசாரித்து அறிந்ததை எல்லாம் விரிவாக எழுதிக் கடைசியில் அவர்களுடைய கணிப்பை இப்படி எழுதியிருந்தார்கள்:

நாகராஜ் ஆரம்ப காலத்தில் மன அழுத்தங்களால் ஆழமாய்ப் பாதிக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் எப்படியோ பாம்புகளிடம் ஒரு நேசத்தை வளர்த்திருக்கிறான். எப்போது, எப்படி என்பதை அவனும் சுவாமிஜியும் மட்டுமே அறிவார்கள்சுவாமிஜி அதிசய சக்திகள் பெற்றிருந்தார் என்பதால் ஏதோ செய்து அவனைக் குணப்படுத்தி கடைசியில் தன் சக்திகளை நாகராஜுக்குச் சொல்லித் தந்திருக்கவோ, மாற்றி விட்டிருக்கவோ வாய்ப்பிருக்கிறதுஅனைத்தும் சுவாமிஜியும் அவனும் கடைசியாகக் காட்டுக்கு தவம் செய்யப் போன போது நிகழ்ந்திருக்க வேண்டும். அதனால் தான் வரும்போதே நாகராஜ் மாறியவனாகவும், வாய் விட்டு இயல்பாகப் பேசுபவனாகவும் ஆகியிருக்கிறான். அவனிடம் சில விலை உயர்ந்த ரத்தினங்கள் இருக்கின்றன என்பது நிச்சயம். வேலைக்காரக் கிழவர் பார்த்த இரண்டு மூன்று ரத்தினங்கள் தானா மேலும் அதிகமா என்று நிச்சயித்து அறிய வழியில்லை. ஆனால் கிழவர் நம்புவது போல் அது நாகரத்தினக் கல்லாய் இருக்க வழியில்லை. நிபுணர்கள் சிலரையும் கலந்தாலோசித்ததில் நாகரத்தினம் என ஒன்று கதைகளில் மட்டுமே இருக்கும் கற்பனை என்றும் நிஜமல்ல என்றும் ஆணித்தரமாகத் தெரிவிக்கிறார்கள்.  அதனால் அவனிடம் இருக்கும் ஜொலிக்கும் ரத்தினங்கள் வேறெதாகவோ தான் இருக்க வேண்டும்.   

நாகராஜிடம் போய் வந்தவர்கள் எல்லாரும் தங்கள் பிரச்சினை தீர்ந்தவர்களாகவும், பெரும் நிதியைப் பின் எப்படியோ பெற முடிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அதற்கு நாகராஜின் நாகசக்தியே காரணம் என்கிறார்கள். ஒன்றிரண்டு என்றால் அவற்றை எதேச்சையாக என்று எண்ணலாம். ஆனால் எல்லோரும் சொல்லும் ஒன்றை யதேச்சையாக எடுத்துக் கொள்ளவும் வழியில்லை. அதே நேரத்தில் கிழவர் தனக்குக் கிடைத்த தொகையையும் நாகராஜ் அருளில் கிடைத்ததாகவே சொல்கிறார் என்பது வேடிக்கையாகவும் இருக்கிறது. ஆனால் நாகராஜ் நினைத்தால் எத்தனை பணத்தையும் அனாயாசமாகச் சம்பாதித்து விடும் மிக வசதியான நிலையில் இருக்கிறான் என்பது நிச்சயம். அரசியல் செல்வாக்கு கூட அவனிடம் சீக்கிரம் அப்பாயின்மெண்ட் வாங்கப் பயன்படவில்லை என்றும் தெரிகிறது. ஏன் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் அழுத்தம் தருவதில்லை என்று மேல்மட்டங்களில் ரகசியமாய் விசாரித்தோம். அதிர்ஷ்டத்தை வரவழைக்க மட்டுமல்லாமல், துரதிர்ஷ்டத்தையும், பிரச்சினைகளையும் கூட வரவழைக்கும் சக்தி வாய்ந்தவனாக அவனைப் பார்த்துப் பயப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. அதனால் அவனுடைய கோபத்திற்கு ஆளாகும் தைரியம் யாருக்கும் இல்லை.”



(தொடரும்)
என்.கணேசன்




2 comments:

  1. There are three mysteries. Death of RAW officer's father, accidental death of Madhavan and Nagaraj maharaj's serpent powers. Eager to know how you link the three.

    ReplyDelete
  2. மகாராஜ் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது...நன்றி

    ReplyDelete