சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 6, 2021

யாரோ ஒருவன்? 48


ஜெய்ராம் திகைப்புடன் கேட்டான். “என்ன ரேட்?”

கிழவர் சொன்னார். “ஐம்பதாயிரம்

அந்தப் பதிலில் அதிர்ந்தது ஜெய்ராம் மட்டுமல்ல, அந்த இளைஞனும் தான் என்பது அந்த இளைஞனின் முகபாவத்திலிருந்தே தெரிந்தது. கிழவனுக்குப் பேராசை என்று ஜெய்ராம் நினைத்தான். நாகராஜ் பற்றிய தகவல்களைச் சேகரித்துத் தர அவன் கல்யாணிடம் ஒரு லட்சத்து இருபதாயிரம் ஆகும் என்று சொல்லியிருந்தான்அதற்கு கல்யாணும் சம்மதித்திருந்தான். அதில் போக்குவரத்து தங்கும் செலவு எல்லாம் போக ஜெய்ராமுக்கு ஒரு லட்சம் ரூபாய் தான் தங்கும். அதில் பாதியைக் கேட்கிறான் இந்தக் கிழவன். இந்தப் பழைய ஓட்டுவீட்டில் வேலை வெட்டி எதுவும் இல்லாமல் உட்கார்ந்திருக்கும் இந்தக் கிழவனுக்கு அதிகபட்சமாய் ஐயாயிரம் தான் தரலாம். அதுவே கிழவனுக்குப் பெருந்தொகை என்பது அவன் உடையையும் வீட்டையும், சூழலையும் பார்த்தால் தெரிகிறது....

ஜெய்ராம் சொன்னான். “கேட்கும் தொகை மிக அதிகம்... அதிகபட்சம் ஐந்தாயிரம் தரலாம். அதுவும் நாகராஜ் மகராஜ் பற்றிய எல்லா விவரங்களும் சொல்வதானால்...”

ஐந்தாயிரம் ரூபாய் என்றவுடன் அந்த இளைஞனின் முகம் பிரகாசித்தது. ஆனால் கிழவர் அசரவில்லை. அமைதியாகவே அமர்ந்திருந்தார். ஜெய்ராம் எழுந்து விட்டான். இளைஞன் தந்தையிடம் அவசரமாய் சொன்னான். “அப்பா”.

நீ சும்மா இரு முட்டாளேஎன்று கிழவர் மகனிடம் சொன்னார்.  ஜெய்ராம் காரை நோக்கி இரண்டடி வைத்தான். கிழவர் அவனை அழைத்துப் பேரம் பேசுவார், அல்லது மகனாவது அழைப்பான் என்று என்று ஜெய்ராம் எதிர்பார்த்தான்.  கடைசியில் பத்தாயிரம் ரூபாய் என்றாலும் ஒத்துக் கொள்ளலாம்...

கிழவர் அழைக்கவில்லை. மகனும் வேறுவழியில்லாமல் அமைதியாகவே இருந்தான். கல்யாண் போன்ற ஒரு வாடிக்கையாளருக்குத் திருப்தி தருகிற மாதிரி ரிப்போர்ட் அனுப்பி வைக்கா விட்டால் அது தொழில் வட்டாரத்தில் இருக்கிற கவுரவத்தைக் குறைத்து அவப்பெயரை ஏற்படுத்தி விடலாம் என்ற பயம் ஜெய்ராம் மனதில் மெள்ள எழுந்தது. வேறு ஆட்களையும் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம் என்றால் இந்த அளவு நீண்ட காலம் நாகராஜை அறிந்திருக்கிற, அவனைப் பற்றிச் சொல்ல முடிந்த வேறு ஆள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆசிரமத்து ஆட்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.  மற்றவர்களுக்கோ அதிகம் தெரிந்திருக்கிற வாய்ப்பில்லை. இந்தக் கிழவருக்கு இணையாக நாகராஜைப் பற்றித் தெரிந்திருக்கக்கூடிய வேறு ஆள் என்றால் நாகராஜின் உதவியாளன் சுதர்ஷன் தான்அவன் கண்டிப்பாக எத்தனை பெரிய தொகைக்கும் சொல்ல மாட்டான்.  அதனால் இந்தக் கிழவனிடம் பணம் தந்தே கேட்டுக் கொள்வது நல்லது.  இந்த நாகராஜ் பணம் காய்ச்சி மரமாய் த் தெரிகிறான். இந்தத் தகவல்கள் எதிர்காலத்திலும் எத்தனையோ விதங்களில் உதவலாம்....

ஜெய்ராம் திரும்பி நின்றுபத்தாயிரம் தருகிறேன்என்று சொன்னான்.

இளைஞன் தந்தையைக் கெஞ்சும் பாவனையில் பார்த்தான். கிழவர் மகனைச் சுடுபார்வை பார்த்து விட்டு யோசித்தவராகச் சொன்னார். “பத்தாயிரம் வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறேன். நாற்பதாயிரம் தருவதாய் இருந்தால் பேசுவோம். இல்லாவிட்டால் சொன்ன ஆயிரத்தை இவனிடம் தந்து விட்டு நீங்கள் போகலாம்.”

ஜெய்ராம் கேட்டான். “நீங்கள் சொல்லப் போகும் தகவல்கள் அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் எப்படித் தெரிந்து கொள்வது?”

கிழவர் சொன்னார். ”கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் தினமும் மகராஜைப் பார்த்துக் கொண்டிருந்தவன் நான். எனக்குத் தெரிந்த அளவு தகவல்கள் வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  நான் பார்த்த காட்சிகள் வேறு யாரும் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை

ஜெய்ராமின் ஆர்வத்தை அந்தக் கிராமத்துக் கிழவர் அதிகப்படுத்தினார். ஜெய்ராம் சொன்னான். “கடைசியாகச் சொல்கிறேன்... இருபதாயிரம்....”

இளைஞன் தந்தையின்  கையைப் பிடித்துதயவுசெய்து ஒத்துக் கொள்ளுங்கள்என்று சொல்வது போல் பார்த்தான். கிழவர் அவன் கையை உதறிவிட்டு நிர்த்தாட்சண்யமாய் ஜெய்ராமிடம் சொன்னார். “நீங்கள் போய் வாருங்கள்.”

ஜெய்ராம் கிழவரின் பேரம் பேசும் திறமையை மெச்சிப் பெருமூச்சு விட்டு விட்டுசரிஎன்று திரும்ப வந்து நாற்காலியில் அமர்ந்தான்.

கிழவர் சொன்னார். “எனக்கு நாற்பதாயிரம் பணம் முன்கூட்டியே தர வேண்டும்

ஜெய்ராமுக்கு கிழவர் எல்லை மீறிப் போகிறார் என்று தோன்றினாலும் அவரைப் பார்க்கையில் அவர் எத்தனையோ ரகசியங்களை அறிந்து வைத்திருக்கிறார் என்றும் அறிந்த ரகசியங்களுக்கு நாற்பதாயிரம் அதிக விலை அல்ல என்று நினைக்கிறார் என்றும் தோன்றியது.

என் கையில் அவ்வளவு பணமில்லை. .டி.எம்மில் இருந்து தான் எடுக்க வேண்டும்என்று ஜெய்ராம் சொல்ல கிழவர் சொன்னார். “ஒரு மைல் தூரத்தில் தான் ஏ.டி.எம் இருக்கிறது.”

ஜெய்ராம் ஒன்றும் சொல்லாமல் எழுந்து போனான்.

அவன் கார் போவதையே பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் தந்தையைக் கடிந்து கொண்டான்.  “போன ஆள் திரும்பி வருவாராங்கறது நிச்சயமில்லை. நீங்க  தானா வந்த இருபதாயிரத்தை உதறித்தள்ளி விட்ட மாதிரி தான் எனக்குத் தோணுது…”

கிழவர் மகனிடம் சொன்னார். “இந்த ஆள் சுவாமிஜியோட புஸ்தகம் எழுத வந்தவனில்லடா. மகராஜ் பத்தி விசாரிக்க வந்தவன். அதை விவரமா நம்ம கிட்ட இருந்து தெரிஞ்சுக்கப் பார்க்கறான். மகராஜ் பத்தி உன் கிட்டக் கூட நான் சொல்லாதது நிறைய இருக்குடா.  அதை யார் கிட்டயும் இத்தனை நாள் நான் சொல்லாமல் இருந்தேன். அதுக்கு இப்ப ஒரு நல்ல விலை பேசியிருக்கேன். இந்த ஆள் வந்தா வர்றான். வராட்டி போறான்…. இவன் இல்லைன்னா இன்னொரு ஆள் எவனாவது வருவான் விடு…. மகராஜ்னாலே மகாலட்சுமிடா. கண்டிப்பா இந்தத் தகவல்கள் விலை போகும்….”

அவர் நம்பிக்கை அவர் மகனுக்கு இருக்கவில்லை. ஆனால் கால் மணி நேரத்தில் ஜெய்ராமின் கார் மறுபடி அங்கு வந்து நின்ற போது தான் அவனுக்கு நிம்மதியாயிற்று.

ஜெய்ராம் அவரிடம் நாற்பதாயிரம் ரூபாயை நீட்ட அவர் அதை வாங்கி மகனிடம் தந்தார். மகன் சந்தோஷமாய் அதை மெள்ள எண்ணினான். அவன் அந்த நோட்டுக்களை எண்ணும் போதே தானும் மனதளவில் எண்ணி முடித்த கிழவர் திருப்தியடைந்து ஜெய்ராமிடம் சொல்ல ஆரம்பித்தார். இந்த முறை ஜெய்ராம் கேள்விகளுக்குப் பதில் சொல்வதென்றில்லாமல் நாகராஜ் பற்றி அவர் ஆரம்பத்திலிருந்து அறிந்திருந்ததை விரிவாகவே சொல்ல ஆரம்பித்தார்.

பதினெட்டு வருஷங்களுக்கு முன்னாடி இந்த ஆசிரமத்தைக் கட்டக் கட்டிடத் தொழிலாளியாய் தான் போனேன். நான் எப்பவுமே செய்யற வேலையைக் கச்சிதமாய் செய்யறவன். அதனால என் வேலைகளை கவனிச்சுகிட்டிருந்த சுவாமிஜி கட்டிட வேலை முடிஞ்சவுடனஆசிரமத்திலயே வேலை பார்க்கறியான்னு கேட்டார். நானும் நிரந்தரமாய் ஒரு வேலை கிடைக்குதேன்னு சரின்னு சொல்லி சேர்ந்துட்டேன். ஆசிரமத்தைச் சுத்தமா வெச்சுக்கிறது, தோட்டத்தைப் பராமரிக்கிறதுன்னு எல்லா வேலையும் செய்வேன்…”

ஆரம்பத்திலிருந்தே சுவாமிஜியும் மகராஜும் குரு சிஷ்யன் மாதிரி இருக்கல. தகப்பன் பையன் மாதிரி தான் பாசமாய் இருந்தாங்க. மகராஜ் அந்தச் சமயத்துல எல்லாம் வாயே திறக்க மாட்டார். நான் கூட ஆரம்ப சில நாட்கள்ல அவர் ஊமைன்னு நினைச்சிருக்கேன். மகராஜ் கடுமையான உழைப்பாளியும் கூட. ஆசிரமம் கட்டறப்ப கட்டிட வேலையில எங்களுக்கு ஒத்தாசை செய்வார். ஆசிரமம் ஆரம்பிச்சதுக்கப்பறம் சுவாமிஜிக்கு எழுத்து வேலை எதுவானாலும் மகராஜ் தான் செஞ்சு தருவார். வாய் திறந்து பேச மட்டும் மாட்டார்…”

பல நேரங்கள்ல அவர் குழந்தை மாதிரி தான் ரொம்ப வெகுளியாய் இருப்பார். அதனாலயே அவரை சுவாமிஜிக்கு மட்டுமல்ல எங்க எல்லாருக்குமே அவரைப் பிடிக்கும். பிறகு தான் அவரோட சில அபூர்வ சக்திகள் எங்களுக்கெல்லாம் தெரிய ஆரம்பிச்சுது. அவரைச் சுத்தி ஒரு பர்லாங் தூரத்துல எங்கே பாம்பு இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவார். போய் அதை எடுத்து விளையாடுவார். நாங்க தூரத்துல இருந்து ஆச்சரியத்தோட வேடிக்கை பார்ப்போம். எல்லாத்துக்கும் மேல அவர் படுக்கறப்ப கூட அவர்கூட படுக்கைல சில சமயங்கள்ல பாம்புகள் ஒன்னோ ரெண்டோ இருந்ததை நான் என் கண்ணால பார்த்திருக்கேன்….”

ஜெய்ராம் நம்ப முடியாமல் திகைத்தான். ஆனால் சொல்லும் போதே கிழவருக்கு இயல்பாய் உடல் சிலிர்த்ததைப் பார்த்த போது எல்லாமே உண்மை என்பது புரிந்தது.


(தொடரும்)
என்.கணேசன்  

2 comments:

  1. Very very interesting sir. Maharaj's mystery deepens.

    ReplyDelete
  2. கட்டிட வேலை செய்பவர்கள் கூலியை கராராக பேசி வாங்கி விடுவார்கள்.... அதே போல் கிழவரின் கதாபாத்திரத்தை கச்சிதமாக அமைத்துள்ளீர்கள்....

    ReplyDelete