சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 23, 2021

இல்லுமினாட்டி 121



ம்மானுவல் எப்போதும் எதற்கும் மனம் தளர்பவன் அல்ல. அவன் எத்தனையோ சிக்கல்களில் சிக்கி அதிலிருந்து மீண்டிருக்கிறான். எத்தனையோ பெரிய பிரச்சினைகளைச் சந்தித்து அவற்றைத் தீர்த்திருக்கிறான். பிரச்சினைகளை தன் தொழிலின் ஒரு பகுதியாகவே அவன் நினைக்க ஆரம்பித்திருந்ததால் அவற்றை எதிர்பார்த்தே வாழ்ந்தவன் அவன். ஆனால் அப்படிப்பட்ட அவனே தற்போது அதிர்ச்சியில் மன அமைதியைத் தொலைத்திருந்தான். எர்னெஸ்டோவின் வாஷிங்டன் பயணம் விஸ்வத்துக்குத் தெரியும் என்ற அனுமானமும், அவரது பயண விவரம் இல்லுமினாட்டியின் உறுப்பினர்களிடமிருந்தோ, உளவுத்துறையிலிருந்தோ போயிருக்கலாம் என்று அக்‌ஷய் சுட்டிக் காட்டியதும் அவனைக் கவலைப்பட வைத்தது. அதோடு விஸ்வம் ஜெர்மனியை விட்டு வெளியே பயணிக்க முடிந்தவனாகவும் இருக்கிறான் என்பதும் சேர்ந்து கொண்டது அவன் மன அமைதியின் அஸ்திவாரத்தையே தகர்த்திருந்தது. பயணித்துக் கொண்டிருக்கும் கப்பலில் ஓட்டை ஒன்று ஏற்பட்டு விட்டது என்று தெரிந்த பிறகு பயணியால் எப்படி நிம்மதியாக இருக்க முடியாதோ அதே போல் தான் அவனும் இருந்தான்.

யார் அந்தக் கருப்பு ஆடாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தான். சிறிது யோசனைக்குப் பின் சமீப காலமாக வித்தியாசமாக நடந்து கொள்ளும் சாலமன் நினைவுக்கு வந்தார். அவர் அவனை விட வயதிலும், சர்வீசிலும் மூத்தவர், திறமையானவர், மரியாதைக்குரியவர், இதுவரை அவர் மீது குறைகள் சொல்ல ஏதுமில்லை.... ஆனால் தற்போது ம்யூனிக்கில் சற்று அதிகமாகவே தங்கியிருக்கிறார். அதை அவரே அவனை அழைத்துச் சொல்லி இருந்தாலும் சொன்ன காரணம் மிகவும் சப்பையாக இருந்தது. இது வரை அவர் அப்படி நடந்து கொண்டதில்லை. உறுதியாகச் சொல்ல முடியா விட்டாலும் இப்போது அவர் சந்தேகத்தைக் கிளப்பும்படி தான் இருக்கிறார். இதில் அவர் மட்டும் தானா இல்லை அவருடன் வேறு யாராவதும் இருக்க முடியுமா என்று யோசித்த போது அது இன்னும் அவனை அதிகம் கஷ்டப்படுத்தியது.

இந்தச் சந்தேகம் வந்திருப்பதை அவன் வெளியே யாரிடமும் சொல்லவில்லை. மனதிற்குள்ளேயே வைத்து இந்தச் சதியைப் பற்றிய விவரங்களை அவன் கண்டறிய வேண்டும்...


சிந்து  இரவிலேயே சென்னைக்குக் கிளம்பி விட்டாள். அம்மாவிடமும் மற்ற இருவரிடமும் அவசர வேலை வந்து விட்டது, இன்னொரு சமயம் வருகிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள். அவர்கள் மூவரும் அவளை வழியனுப்ப விமானநிலையம் வரை வந்தார்கள். மிருதுளா அவளிடம் ரகசியமாகச் சொன்னாள். “நீ சொன்னால் நாங்கள் வந்து உதயின் வீட்டில் பேசுகிறோம். சீக்கிரம் முடிவெடு...”

சிந்து வேதனையுடன் தலையசைத்தாள். அவளால் தற்போதைய நிலைமையைத் தாயிடம் சொல்ல முடியவில்லை. போய் உதயிடமும் அவளால் ஒன்றும் சொல்ல முடியாது. இப்படி ஒரு சிக்கலான நிலைமையில் அம்மா சம்பந்தம் பேச அவசரப்படுகிறாள். இனி நடக்கவிருக்கும் நாடகமும் அவளைத் தைரியம் இழக்க வைத்தது. ”எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ போ.” என்று க்ரிஷ் தைரியம் சொல்லி இருந்தாலும் விஸ்வத்துக்கு எதிராக இயங்குவது அவளுக்குப் பயமாகவே இருந்தது. அவனுக்கு எதிராக மாறியவர்களை அவன் உயிரோடு விட்டதில்லை...

தாயை அணைத்துப் பிரியா விடை பெற்ற போது சிந்துவின் கண்கள் தானாக ஈரமாயின. இது அவர்களுடைய கடைசி சந்திப்பாகக்கூட இருக்கலாம்...   

மறுநாள் காலை பதினோரு மணிக்கு அவளுக்கு விட்டமின் வி வந்து சேர்ந்தது. கொண்டு வந்து தந்தவன் குரியர்க் காரன் போல் தோன்றினாலும் அவன் குரியர் ஆள் இல்லை என்பது அவன் கண்களிலும் அசைவுகளிலும் சிந்துவுக்குத் தெரிந்தது. ஆனால் ஒல்லியாக இருந்த அவன் குரியர்காரன் கையெழுத்து வாங்குவது போலவே அவளிடம் ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டு போனான்.

க்ரிஷ் சொன்னதைப் போலவே அந்த உறையிலிருந்த சிறிய பாட்டிலை வெளியே எடுத்து குளியலறையில் போய் அதைக் கொட்டிக் காலி செய்தாள். விஸ்வத்திற்கு எதிராக அவள் நடந்து கொண்டாகி விட்டது. இனி எதையும் மாற்ற வழியில்லை. மனதில் ஒரு கனம் கூட ஆரம்பித்தது.   


க்ரிஷ் உதயை அழைத்து ஒரு கதையை நிஜம் போலச் சொல்ல ஆரம்பித்தான். “உதய், நாம் நினைத்ததை விட விஸ்வம் ஆபத்தானவனாக இருக்கிறான். உன்னைக் கொல்ல விஸ்வம் அனுப்பியிருந்த ஒரு ஆளை இல்லுமினாட்டி இன்றைக்கு பிடித்து விட்டிருக்கிறது...”

உதய் திகைப்புடன் கேட்டான். “என்னடா சொல்றே?”

“என்னைப் பழிவாங்கறதுக்கு உன்னைச் சாகடிக்கிறது தான் வழின்னு அவன் நினைச்சிருக்கான் போலிருக்கு. நல்ல வேளையாக ஆளைப் பிடித்து விட்டார்கள். ஆபத்து விலகி விட்டது. ஆனால் அவர்கள்  அந்த ஆளைப் பிடித்தது விஸ்வத்துக்குத் தெரிந்தால் இன்னொரு ஆளை அனுப்பி விடுவான் என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள். அப்படி எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் விஸ்வம் நினைத்தபடியே நடக்கிற மாதிரி காட்டிக் கொள்ள  நம்மை ஒரு நாடகம் நடத்தச் சொல்கிறார்கள்.

“என்ன நாடகம்?”

“செவ்வாய்க்கிழமை ராத்திரி நீ மயக்கம் அடைந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக வேண்டும்...”என்று ஆரம்பித்து யார் யார் என்னென்ன சொல்ல வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எல்லாம் க்ரிஷ் சொன்னான்.

“என்னடா இது. இத்தனை நாள் கழிச்சு இன்னிக்கு காலைல தான் சிந்து வந்திருக்கா. நீ என்னைப் போய் செவ்வாய்க்கிழமை ஆஸ்பத்திரியில் படுக்கச் சொல்கிறாய்”

“சிந்துவையும் ஆஸ்பத்திரிக்கு உன் கூட போகச் சொல்கிறேன்”

“ஆனாலும் ஆஸ்பத்திரில எப்படிடா?...” என்று உதய் இழுத்தான்.

“அம்மா சொல்ற மாதிரி உனக்குக் கொழுப்பு ஜாஸ்தி தான்டா” என்று சொல்லி க்ரிஷ் சிரித்தான்.

“நீ அம்மான்னு சொன்னவுடனே ஞாபகம் வர்றது. கிழவியை வெச்சுட்டு எப்படிடா நாடகம் போடறது? அதுக்குச் சொன்னாலும் விளங்குமாடா? சொதப்பிடாதா?”

“தேவைப்படறப்ப அம்மா ஓரளவு ஒழுங்கா நடந்துக்குவாங்க. நீ சொல்ற அளவுக்கு மோசமில்லை. ஹரிணியும் சிந்துவும் சேர்ந்து ஓரளவு அம்மாவை சமாளிக்க வைப்பாங்க. அப்பா கிட்ட நீயே எவ்வளவு சொல்லலாம்னு நினைக்கறியோ அந்த அளவுக்கு சொல்லு. அவர் சொல்றது பத்திரிக்கைலயும் டிவியிலயும் வரணும் அவ்வளவு தான்...”

உதய் கேட்டான். “அது ஏன் செவ்வாய்க்கிழமை ராத்திரியே நாடகத்தை ஆரம்பிக்கணும்? ரெண்டு நாள் தள்ளி ஆரம்பிச்சா என்ன?”

“அந்தப்பிடிபட்ட ஆள்கிட்ட செவ்வாய்க்கிழமை தான் அந்த வேலையைச் செய்ய  விஸ்வம் சொல்லியிருக்கான். ஏன்னு எனக்கும் தெரியலை...”

உதய் கவலையுடன் சொன்னான். “நீ சீக்கிரம் வாடா. எனக்கென்னவோ நீ அங்கேயே இருக்கறது ஆபத்தாய் தான் படுது...”

“இங்கே எனக்கு முழு பாதுகாப்பு தந்திருக்காங்க... என்னைப் பத்தி நீ கவலைப்படவே வேண்டாம்...”


சாலமனுக்கு வாங் வே போன் செய்து புதிய நிலவரம் கேட்டார். சாலமன் விஸ்வத்தின் புதிய வேண்டுகோளைச் சொன்னார். எர்னெஸ்டோவின் கடந்த இரண்டு வாஷிங்டன் பயணங்களைப் பற்றிய தகவல்களையும் விஸ்வம் கேட்டிருக்கிறான் என்று சாலமன் சொன்னார்.  வாங் வேக்கு விஸ்வம் வாஷிங்டனில் தான் கிழவரின் கதையை முடிக்கப் போகிறான் என்பது தெளிவாகத் தெரிந்தாலும் ஏதாவது குறிப்பிட்ட நேரம், இடம் விஸ்வம் சொல்லியிருக்கிறானா என்று அறிய விரும்பினார்.

சாலமன் சொன்னார். “நாம் கொடுக்கிற தகவல்களை எல்லாம் பார்த்துத் தான் அதை அவன் முடிவு செய்வான் போலிருக்கிறது.”

வாங் வேக்குப் பரபரப்பாக இருந்தது. அவருக்கு அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பது அவன் முடிவெடுத்தவுடனேயே தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவரும் வாஷிங்டன் கிளம்புகிறார். அமெரிக்க ரஷிய ஜனாதிபதிகளுடான விழாவுக்கு அவருக்கு அழைப்பில்லை என்றாலும் வாஷிங்டனில் மறுநாள் காலை நடக்கும் இல்லுமினாட்டி கூட்டத்திற்குத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்ற பொறுப்பில் அவர் போக வேண்டியிருந்தது.   அந்தச் சமயத்தில் அவரும் அங்கேயே இருப்பதால் நேரம் காலம் தெரிந்தால் பரவாயில்லை...

அவர் விஸ்வத்தின் கூட்டாளி பற்றி நினைவு வந்தவராகக் கேட்டார். “அந்தக் கூட்டாளி உங்களுக்குப் பார்க்கக் கிடைத்தானா?”

“இல்லை. வாஷிங்டன் போக அந்தக் கூட்டாளிக்கு டிக்கெட் செய்யவும் சொல்லவில்லை...”

இத்தனை நெருங்கியும் கூட்டாளி பற்றி விஸ்வம் எதையும் சொல்லாதது அவருக்கு வருத்தமாய்த் தான் இருந்தது. அவர் அடுத்ததாகக் கேட்டார் ”ம்யூனிக்கில் அந்த நால்வர் கூட்டணி என்ன ஆலோசனை செய்திருக்கிறது என்று ஏதாவது தகவல் உண்டா?”

“இல்லை.” என்று சாலமன் சொன்னவுடன் எல்லோரும் அவரவர் ரகசியங்களைக் காக்கும் விதம் வாங் வேயை எரிச்சலடைய வைத்தது. கடைசியில் ’எல்லாம் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். அதுவரை தானே’ என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டார்.

(தொடரும்)
என்.கணேசன்



7 comments:

  1. Sema tension in both places. Couldn't wait for next Thursday.

    ReplyDelete
  2. கடைசி பத்தியில் பெயர் சாலமன் என்பதற்கு பதிலாக சாமுவல் என்று கொடுத்திருக்கிறீர்கள். திருத்தம் செய்வீர்களா?

    ReplyDelete
    Replies
    1. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்.

      Delete
  3. சாலமன் கதை முடியும் நேரம் நெருங்கி விட்டது.... ஆஸ்பத்திரியில் நடக்கும் கலாட்டாவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  4. Immanuel super ah Solomon ah guess pannitaar, double side um strength and weakness iruku.. its thrill to read and raising our beats...

    ReplyDelete
  5. 'அப்பவே செத்துருக்கலாம்'-னு விஷ்வம் நினக்கிற மாதிரி முடிவு இருக்கும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. விஸ்வம் திருந்தி நல்லவனாக மாறுவது போல் ஒரு முடிவு எப்படி இருக்கும்

    ReplyDelete