என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, September 13, 2021

யாரோ ஒருவன்? 49


ஜெய்ராம் திகைப்புடன் கேட்டான். ”அந்தப் பாம்புகள் ஆசிரமத்தில் மற்றவர்களை எந்தத் தொந்திரவும் செய்யாதா?”

கிழவர் சொன்னார். “ஆரம்பத்தில் நாங்கள் எல்லாரும் நிறையவே பயந்தோம். பாம்புகளுக்கு அவன் நண்பனாய் இருக்கலாம். ஆனா மத்தவங்களையும் அந்தப் பாம்புகள் அப்படியே பார்க்குமா என்னங்கற சந்தேகம் எங்களுக்கு இருந்துச்சு. ஆனா மகராஜ் சொல்வார். ‘நீங்க அதை ஒன்னும் பண்ணாத வரை அதுவும் உங்களை ஒன்னும் பண்ணாது. அதுக்கு நான் உத்தரவாதம் தர்றேன்.” அவர் சொன்ன மாதிரியே அதெல்லாம் எங்களை ஒன்னும் பண்ணாது. சில சமயங்கள்ல அது எங்க பக்கத்துலயும் வந்துடறதுண்டு. அப்ப எல்லாம் நாங்க அலறுவோம். மகராஜ் ஒரு மாதிரி விசிலடிப்பார். அப்படியே அந்தப் பாம்புக நின்னுடும். திரும்பி அவர் கிட்டயே போயிடும்... அந்த அளவுக்கு அவருக்கு அந்தப் பாம்புக மேல கட்டுப்பாடு இருந்துச்சு.”

சுவாமிஜி கிட்டயும் அந்தப் பாம்புகள் போகுமா? மகராஜ் மாதிரியே சுவாமிஜியும் அந்தப் பாம்புகள் மேல கட்டுப்பாடு வெச்சிருந்தாரா?”

சுவாமிஜி அந்த அளவு கட்டுப்பாடு வெச்சிருந்ததை நாங்க பார்க்கல. ஆனா பாம்பு அவர் பக்கத்துல போனா அவர் எங்க மாதிரி பயப்பட மாட்டார். எந்தப் பயமும் இல்லாமல் அவர் பாட்டுக்கு அவர் வேலையைப் பார்த்துட்டு இருப்பார். அது திரும்பி வந்துடும். மகராஜ் மேலன்னா அது ஏறி விளையாடும். அந்த வேலையை அது சுவாமிஜி கிட்ட செஞ்சதில்லை...”

மகராஜ் ஊமை அல்லங்கறதை நீங்க எப்ப தெரிஞ்சுகிட்டீங்க?”

ராத்திரி தூக்கத்துல பேசற பழக்கம் மகராஜ் கிட்ட இருந்துச்சு. சில நாள் பேச மட்டும் செய்வார். சில நாள் பேசி அழவும் செய்வார். அப்ப தான் அவர் பிறவி ஊமை அல்லன்னு புரிஞ்சுகிட்டோம்...”

ஜெய்ராம் ஆர்வத்துடன் கேட்டான். “தூக்கத்துல என்ன மாதிரியெல்லாம் பேசுவார்?”

கிழவர் இரண்டு கைகளையும் விரித்துச் சொன்னார். “அவர் பேசறதே புரியாது. எங்களுக்குச் சுத்தமா புரியாத பாஷைல பேசுவார்.”

அது எந்த பாஷை தெரியுமா?”

தெரியலை. எனக்கு ஹிந்தியும், பஹாரியும் தான் தெரியும். வேறெந்த பாஷையும் தெரியாது. நேபாளி பாஷையும், பஞ்சாபி பாஷையும் புரியா விட்டாலும் பேசறது அந்த பாஷைகள்னாவது தெரியும். ஆனால் மகராஜ் தூக்கத்துல பேசின பாஷை எந்தப் பாஷைன்னே தெரியலை. அதை நான் கேட்டதே இல்லை.”

அந்தப் பாஷை சுவாமிஜிக்குத் தெரிஞ்சிருந்த பாஷையா?”

அப்படின்னு தான் நினைக்கிறேன். ஆனா ஒன்னு. சுவாமிஜிக்கு பாஷைகள் தெரியணும்கிறதே இல்லை. நீங்க சொல்றத முகத்தைப் பார்த்தே புரிஞ்சுக்கற திவ்ய சக்தி சுவாமிஜி கிட்ட இருந்துச்சு... மகராஜ் சுவாமிஜியோட அறையில தான் படுப்பார். சுவாமிஜி மரக்கட்டில்ல படுத்துக்குவார். மகராஜ் கீழே பாய் போய் போட்டுப் படுத்துக்குவார். சில சமயத்துல மகராஜ் தூக்கத்திலே எழுந்து உட்கார்ந்து எதோ எல்லாம் பேசிட்டிருப்பார். சுவாமி முழிச்சுட்டு அவர் சொல்றதை எல்லாம் கேட்டுகிட்டே இருப்பார். சில சமயம் மகராஜ் சுவாமிஜி மடில தலை வெச்சுட்டு அழறதும் உண்டு. சுவாமி இரக்கத்தோட அவரைக் கனிவாய் பார்ப்பார்....”

ஜெய்ராம் கேட்டான். “அவர் அந்த நேரத்துல ஆறுதல் வார்த்தை எதாவது சொல்வாரா?”

ஊஹூம். சுவாமிஜி வாயே திறக்க மாட்டார். மகராஜ் சொல்றதை எல்லாம் கேட்டுக்கறதோட சரி. கொஞ்ச நேரத்துல மகராஜ் மறுபடியும் பாய்ல படுத்துத் தூங்க ஆரம்பிச்சிடுவார்.... சுவாமிஜி எதோ யோசனையா முழிச்சுகிட்டே கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருப்பார். அவர் மகராஜ் பத்தி தான் யோசிப்பார்னு என்னோட அபிப்பிராயம்..... காலைல எழுந்தபிறகு மகராஜ் சாதாரணமாவே இருப்பார். எதுவும் பேச மாட்டார். எதாவது சொல்ல இருந்தாலும் சைகைல தான் சொல்வார்.”

ஜெய்ராம் கேட்டான். “இது தினமும் நடக்குமா? இல்லை எப்பவாவது சில நாள் தானா?”

ஆரம்பத்துல நாலைஞ்சு மாசத்துக்கு ஒரு தடவையாவது இப்படி நடக்கும். அப்புறம் போகப் போக வருஷத்துக்கு ஒரு தடவை தான் அப்படி ஆகும்....”

இது சுவாமிஜி இறந்த வரைக்கும் தொடர்ந்துதா?”

ஆமா. கடைசியாய் சுவாமிஜி சமாதியடையறதுக்கு ஒரு  மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் மகராஜ் தூக்கத்துல ஏதோ கனவு வந்த மாதிரி எழுந்து என்னென்னவோ சொல்லி அழுதார். எப்பவும் அழுகறதையும் விட அதிகமாய் அழுதார். சுவாமிஜி அன்னைக்கு ராத்திரி தூங்கல. என்னவோ யோசிச்சுகிட்டே இருந்தார். மறுநாள் காலைல மகராஜையும் கூப்பிட்டுகிட்டு பக்கத்துக் காட்டுக்குத் தவம் பண்ணப் போயிட்டார்....”

இந்த மாதிரி தவம் பண்ணப் போறதுன்னா எத்தனை காலம் பண்ணுவார்.?”

பொதுவாய் அவர் தவம்னா 21 நாள், 48 நாள்,  108 நாள்னு ஒரு கணக்கிருக்கும். போக வர நாலஞ்சு நாள் சேர்ந்துக்கும். ஒவ்வொரு தடவை ஒவ்வொரு காலத்தை எடுத்துக்குவார்

கடைசியாய் போனப்ப எவ்வளவு நாள்?”

சரியாய் பதினஞ்சு நாள்ல திரும்பி வந்துட்டார். ஏன்னு தெரியல. திரும்பி வர்றப்ப ரெண்டு பேரு கிட்டயும் நிறைய மாற்றம் தெரிஞ்சுது. சுவாமிஜி தளர்ந்திருந்தார். மகராஜ் சக்தி கூடினவராய் இருந்ததைப் பார்க்க முடிஞ்சுது. முகத்திலயும் தெளிவு கூடியிருந்துச்சு. யாரோ ஒரு புது ஆளைப் பார்க்கற மாதிரி இருந்தது. முகத்தில தெரிஞ்ச குழந்தைத்தனம் காணோம். எல்லார் கிட்டயும் பேசவும் ஆரம்பிச்சார். சுவாமிஜி தன் கடைசி காலம் வந்துட்டதை உணர்ந்து அவரோட எல்லா சக்தியையும் மகராஜுக்கு மாத்திட்ட மாதிரி பிறகு தோணுச்சு. அருள் வாக்கு கேட்க வந்தவங்களுக்குக் கூட சுவாமிஜி அவராய் எதுவும் சொல்லாமல் மகராஜ் கிட்ட சொல்லச் சொல்லிட்டார்....”

மகராஜ் தியானம் தவம் எல்லாம் செய்வாரா?”

ஆரம்பங்கள்ல இல்லை. ஆனால் கடைசியாய் சுவாமிஜி கூடக் காட்டுக்குப் போயிட்டு வந்த பிறகு மாற்றங்கள்னு சொன்னேனே அதுல இதுவும் ஒரு மாற்றம் தான். இரவு நேரங்கள்ல அல்லது அதிகாலை நேரங்கள்ல தியானத்துல அவர் உட்கார்றதைப் பார்த்திருக்கேன். தூரத்துல சுவாமிஜி உட்கார்ந்து அவரையே பார்த்துட்டுருப்பார்.  அந்தப் பார்வையை ஒரு தகப்பனோட பார்வையாய் நான் உணர்ந்தேன். இப்பவும் அந்தக் காட்சி என் கண் முன்னாடி நிக்குது.... அவர் சமாதியாகிறதுக்கு நாலு நாள் முன்னாடி ராத்திரி நிறைய நேரம் அவர் மகராஜ் கிட்ட பேசிகிட்டிருந்தார்... அது தான் அவர் கடைசியாய் பேசினது.”

என்ன பேசினார்னு கவனிச்சீங்களா?”

இல்லை. மெல்ல தான் பேசிகிட்டாங்க. அதுக்கப்பறம் சுவாமிஜி யார் கிட்டயும் பேசல. சாப்பிடல. தண்ணி கூடக் குடிக்கல. தியானத்துல உட்கார்ந்தவர் பிறகு உயிரோட எழுந்திருக்கல. அவர் சமாதியடைஞ்ச அன்னைக்கு மகராஜ் அழுத அழுகையை நான் என் வாழ்க்கைல யார் அழுதும் பார்த்ததில்லை. அதைப் பார்த்து கலங்காத கண் இல்லை...”

சொல்லும் போதே கிழவரின் கண்கள் ஈரமாயின.

அதுக்கப்பறம் நான் வேலையை விட்டுட்டேன். முதல்ல மாதிரி என்னால வேலைகளையும் செய்ய முடியலை. ஆசிரமமும் பெரிசாகி வேலைகளும் அதிகமாயிடுச்சு...” கிழவர் சொன்னார்.

ஜெய்ராம் நினைவாகக் கேட்டான். “நீங்க பார்த்த காட்சிகளை வேற யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லைன்னு சொன்னீங்க. அது மகராஜ் ராத்திரி எழுந்து பேசினதும் அழுததும் மட்டுமல்லன்னு நினைக்கிறேன். நீங்க வேற என்ன அதிசயமாய் பார்த்தீங்கன்னு சொல்ல முடியுமா?”

கிழவர் சில வினாடிகள் கண்களை மூடிக் கொண்டார். பின் சொன்னார். “மகராஜ் கிட்ட நிறைய நாகரத்தினங்கள் இருக்கு. அதை என் கண்ணால ஒரு நாள் ராத்திரி பார்த்தேன்...”(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

 1. ஜெய்ராம் கிழவர்கிட்ட இருக்குற உண்மை எல்லாத்தையும் கிண்டி_கிளராமல் விடமாட்டான்..போல‌...
  கிழவர் கூறிய நிகழ்வுகள் அனைத்தும் சுவாரஸ்மாக இருந்ததது...

  ReplyDelete
 2. பாம்புகளுக்கு செவிப்புலன் இல்லை. பாம்பாட்டி ஊதும் மகுடிக்கு (விசிலுக்கும்) அவை ஆடுவதில்லை. அவன் தட்டும் கால் நில அதிர்வினாலேயே அவை ஆடுவது போல் அசைகின்றன.
  உங்கள் கற்பனையில் கொஞ்சம் விஞ்ஞானத்தையும் கலந்து கொள்ளுங்கள்

  நன்றி

  - தீபன்

  ReplyDelete
 3. கதை எங்கெங்கோ செல்வது போல் தெரிவது எனக்கு மட்டும்தானா?

  கோர்வையாக தெரியவில்லை....

  உளவுதுறை அதிகாரி-கடத்தப்பட்ட அரசியல்வாதி உறவினர்.... இது எல்லாம் துண்டு துண்டா நிக்கறமாதிரி இருக்கு...

  இனிமே லிங்க் ஆகுமோ?

  ReplyDelete
  Replies
  1. I think more importance is given to Maharaj only, other aspects of the novel will come and join as and when required.

   Delete