சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 30, 2021

இல்லுமினாட்டி 122சாலமன் சொன்னபடியே சனிக்கிழமை மதியமே எர்னெஸ்டோவின் கடந்த இரண்டு வாஷிங்டன் பயணத்தில் நடந்ததை எல்லாம் விவரமாக விஸ்வத்துக்கு அனுப்பி இருந்தார். எர்னெஸ்டோ எந்தெந்த நேரத்தில் யார் யாரைச் சந்தித்தார், எங்கெல்லாம் போனார், என்னவெல்லாம் சாப்பிட்டார், எந்த நேரத்தில் தூங்கினார், எழுந்தார் என்ற எல்லா விவரங்களும் அவர் அனுப்பியதில் இருந்தன. அவன் அதையெல்லாம் அவர் செய்து கொண்டிருப்பதை மனக்கண்ணில் தெளிவாகப் பார்க்கும் அளவுக்கு ஆழமாகப் படித்தான்.  ஜிப்ஸி அவன் அந்த விவரங்களில் மூழ்கிப் போனதைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் விஸ்வத்திடம் எந்தக் கேள்வியும் கேட்கவோ, அவனுக்கு ஏதாவது ஆலோசனை கூறவோ அவன் முற்படவில்லை. விஸ்வமும் அந்த விஷயமாக அவனிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. பல யோசனைகளில் மூழ்கிப் பலவிதமாகத் திட்டங்கள் போட்டு அவற்றில் எதை நிறைவேற்றுவது என்று முடிவெடுக்க வேண்டிய கட்டம் வந்த போது மட்டும் அவன் ஜிப்ஸியிடம் கேட்டான்.

“எர்னெஸ்டோ அவர் பங்களாவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் நான் எப்படியாவது அந்த ஆளை நெருங்கி விடுகிறேன் என்று வைத்துக் கொள் நண்பா. என் வேகத்தில் நான் அவரை நெருங்கும் முன் அக்‌ஷய் தடுக்க வழியிருக்கிறதா?”

இப்போது சேர்த்திருக்கும் நரம்பு மண்டல சக்தியை வைத்து விஸ்வம் அக்‌ஷய் மனதையும் அறிவையும் ஊடுருவி அவனையும், அவன் சக்திகளையும் அளவெடுக்க முடியும், இப்போது அவன் ஜிப்ஸியிடம் கேட்ட கேள்விக்கு அவனே பதில் கண்டுபிடித்து விடவும் முடியும் ஆனால் அதில் அவன் இப்போது சேமித்திருக்கும் சக்தியின் ஒரு கணிசமான அளவை இழக்க வேண்டி வரும். அவனுடைய முந்தைய உடல் என்றால் அது அவனுக்குப் பெரிய விஷயமல்ல. மாஸ்டரைப் போன்ற ஆள்களிடமே தேவைப்படும் நேரத்தில் ஊடுருவி அறிய வேண்டியதை அறிந்தவன் அவன். அதைச் செய்யலாம் என்று நினைத்து தான் அக்‌ஷயின் மீது கவனத்தைக் குவிக்க அவன் புகைப்படத்தைக் கூட ஜிப்ஸி மூலம் தருவித்திருந்தான். ஆனால் அக்‌ஷயைப் போன்ற கூடுதல் சக்தியிருக்கும் ஒரு ஆளை அறிய அவன் அதிகமாக சக்தியை விரயம் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அதைத் தவிர்த்து ஜிப்ஸியிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான்.

ஜிப்ஸி சொன்னான். “இருக்கிறது. அது மட்டுமல்ல உன் நரம்புகளைச் சுண்டி விசேஷ முடிச்சுகள் போட்டு உன்னைக் கோமா நிலைக்குப் போக வைக்க முடிந்த அளவு வேகமும், திறமையும் கூட அவனிடம் இருக்கிறது”

ஏற்கெனவே போதையால் முழு நரம்பு மண்டலமும் பலவீனப்பட்டிருக்கும் இந்த உடலில் இப்போது தான் எல்லாவற்றையும் ஓரளவு பலப்படுத்தி வரும் விஸ்வம் அப்படி ஒரு விஷப் பரிட்சையில் இறங்க விரும்பவில்லை. அக்‌ஷய் இருக்கையில் எர்னெஸ்டோவை அவன் நெருங்க விரும்பவில்லை. க்ரிஷை அப்புறப்படுத்தியது போல அக்‌ஷயையும் அப்புறப்படுத்தினால் என்ன என்று தோன்றியது.

உடனே அவன் சாலமனுக்குப் போன் செய்தான். “நண்பரே. எனக்கு அக்‌ஷயின் இந்திய விலாசம் வேண்டும்.”

சாலமன் தர்மசங்கடப்பட்டார். இது வரை எத்தனையோ செய்தாகி விட்டது. இது வரை சொன்ன தகவல்கள் பற்றி வெளியே தகவல் தெரிந்தாலே ஆபத்து. இதில் அக்‌ஷயின் விலாசம் வேறு கேட்கிறான். அக்‌ஷயின் விலாசம் வெளியே தெரிந்தால் கண்டிப்பாக இல்லுமினாட்டியின் உளவுத் துறை மூலமாகத் தான் வெளியாயிருக்கிறது என்பது இம்மானுவலுக்குப் புரிய அதிக நேரமாகாது. அந்த ஒரு சந்தேகம் வந்தால் அதை யார் வெளிப்படுத்தியிருக்கக்கூடும் என்றும் சீக்கிரமே இம்மானுவல் கண்டுபிடித்து விடுவான். அவர் கூடுதலாக இங்கே தங்கியிருப்பதே அவன் மனதில் இன்னேரம் சந்தேகத்தைக் கண்டிப்பாக ஏற்படுத்தியிருக்கும்…

சாலமன் சொன்னார். “இது வெளியானால் என் மேல் கண்டிப்பாக இம்மானுவலுக்குச் சந்தேகம் வரும் சார். ஏனென்றால் உளவுத்துறை தவிர இல்லுமினாட்டி உறுப்பினர்கள் யாருக்கும் கூட அமானுஷ்யன் பற்றித் தெரியாது… நான் இருக்க வேண்டிய காலம் கழிந்து கூட எதோ ஒரு காரணம் சொல்லி இங்கே இருந்து கொண்டு வருகிறேன்….”

விஸ்வம் சொன்னான். “எனக்குப் புரிகிறது நண்பரே. ஆனால் அவன் இருக்கும் வரை கிழவரை நான் நெருங்குவது கஷ்டம் என்று தோன்றுகிறது. இந்த ஒரு உதவியை மட்டும் செய்யுங்கள். இனி கண்டிப்பாக உங்களிடம் வேறு உதவி கேட்க மாட்டேன். நீங்கள் உளவுத்துறை தலைவன் ஆன பிறகு இல்லுமினாட்டியின் தலைவராகத் தான் நான் அடுத்த உதவியைக் கேட்பேன்”

அந்த வார்த்தைகள் இனித்தன. எல்லாம் தலைக்கு மேல் போய் விட்டது, இனி ஜாண் என்ன முழமென்ன என்று சாலமன் நினைத்தார். அக்‌ஷயை இது வரை தேடி வந்த தலிபான் கூட்டம் இப்போது தானாக அவன் இருக்குமிடத்தை  எப்படியோ கண்டுபிடித்து விட்டது என்று கூட நினைக்க வைக்கலாம். இத்தனை உதவிகள் இவனுக்குச் செய்து இது ஒன்றைச் செய்யாமல் விட்டால், இவனால் கிழவனைக் கொல்ல முடியாமல் போனால் அது தான் பேராபத்து…. மெல்ல அக்‌ஷயின் இந்திய விலாசத்தையும் அவர் அனுப்பி வைத்தார்.  இனியும் இங்கிருப்பது ஆபத்து என்று நினைத்தவராக இம்மானுவலைத் தொடர்பு கொண்டு அலுவல்கள் சம்பந்தமாக ஐந்து நிமிடங்கள் பேசி விட்டு இப்போது வாஷிங்டன் செல்லக் கிளம்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

இம்மானுவல் சொன்னான். “நீங்கள் வாஷிங்டன் போக வேண்டாம். நான் எப்படியும் போகிறேன் அல்லவா, அங்கேயுள்ள வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். ஈரானில் ஒரு முக்கிய வேலை இருக்கிறது….”

இம்மானுவல் ஈரான் வேலையை விவரித்தான். முடிவில் சரியென்று சொன்ன சாலமனுக்குப் புரிந்து விட்டது. உறுதியாகத் தெரியா விட்டாலும் இம்மானுவலுக்கு அவர் மேல் சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது…. எர்னெஸ்டோ வாஷிங்டனில் இருக்கும் நேரத்தில் சாலமன் அங்கே இருப்பதை இம்மானுவல் விரும்பவில்லை. இனி சந்தேகம் விலகாமல் முக்கிய இடங்களில் அவர் இருப்பதை அவன் கண்டிப்பாகத் தவிர்ப்பான். இந்த விஷயத்தில் அவர் அவன் மேல் குற்றம் காணவில்லை. அவன் இடத்தில் அவர் இருந்தால் அவரும் இதைத் தான் செய்திருப்பார். ஆனால் அவனுக்கு எப்படிச் சந்தேகம் வந்தது என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் கூடுதலாக இங்கேயே இருந்தார் என்பது மட்டுமே சந்தேகத்திற்குக் காரணமாக இருந்து விட முடியாது. சில நேரங்களில் அது எங்கும் நடப்பது தான். சந்தேகப்பட கூடுதலாக அவனுக்கு ஏதோ கிடைத்திருக்கிறது. அது என்னவாக இருக்கும்?

  
க்‌ஷயின் இந்திய விலாசம் கிடைத்தவுடனேயே விஸ்வம் ஜிப்ஸியிடம் அலைபேசியைக் கேட்டு வாங்கினான். அவன் சாலமன் தந்திருந்த அலைபேசியில் சாலமனையும், வாங் வேயையும் தவிர வேறு யாரையும் அழைப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தான். ஜிப்ஸியின் அலைபேசி பாதுகாப்பானது….

தலிபான் தலைவனின் ரகசிய அலைபேசி எண் அவனிடம் இருந்தது. அவன் பலமுறை அவனுடன் தொடர்பில் இருந்திருக்கிறான். அவனுக்குப் பணம் அனுப்பி உதவியும் புரிந்திருக்கிறான். அவன் பண உதவி செய்திருக்கும் தீவிரவாத அமைப்புகளில் தலிபானும் ஒன்று. பழைய உடலில் இருந்து அவன் பேசியிருந்தால் அவன் குரலை வைத்தே அந்த தலிபான் தலைவன் அவனை அடையாளம் கண்டிருப்பான். அந்த அளவு ஒரு காலத்தில் தொடர்பில் இருந்தவன் அவன். இந்த முறை விஸ்வத்தின் குரல் மாறியிருப்பதால் புதிய குரலில் பழைய ஆளாகப் பேசுவதும், புரிய வைப்பதும் மிகவும் கஷ்டம். அதனால் அவன் விஸ்வத்தின் ஆளாகப் பேசுவது என்று தீர்மானித்தான்.

தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்ததால் தலிபான் தலைவன் மிகவும் எச்சரிக்கையுடனும் சந்தேகத்துடனும்ஹலோ” என்றான்.

விஸ்வம் சொன்னான். “அமானுஷ்யன் என்ற ஆளை நீங்கள் பல காலமாகத் தேடிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா? அவன் இருக்குமிடம் தெரிந்து விட்டது. உங்கள் இந்திய நண்பர் விஸ்வாஸ்ஜீ தான் கண்டுபிடித்தார். அவன் இப்போது வெளிநாட்டில் இருக்கிறான். அவன் குடும்பம் தான் இந்த விலாசத்தில் இருக்கிறது. நீங்கள் குடும்பத்தார் மூலமாக அவனை அங்கே வரவழைத்துவிட முடியும்…. அவர் அவன் விலாசத்தை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார். குறித்துக் கொள்ளுங்கள்….”

(தொடரும்)
என்,கணேசன்   11 comments:

 1. கதையின் நகர்வு அபாரம்...

  ReplyDelete
 2. Sir, this is not fair. You put thodarum at such a tense situation. How can we wait till next Thursday after knowing Amanushyan's family is in danger?

  ReplyDelete
  Replies
  1. Hi if you cant wait till next week then you can buy the book and read remaining chapters

   Delete
 3. விபுலானந்தன்September 30, 2021 at 5:25 PM

  கடைசி வரிகள் படிப்பவர்கள் இதயத்துடிப்பை எகிறச் செய்வதுடன் அதே நிலையில் அவர்களை அடுத்த வாரம் வரை இருக்க வைக்கும் தங்களது எழுத்து வல்லமையை எத்தனை பாராட்டினாலும் தகும்.

  ReplyDelete
 4. அக்‌ஷய்கு Risk எடுப்பது Rusk சாப்பிடுவது மாதிதி

  ReplyDelete
  Replies
  1. புத்தகம் வாங்கி மீதியைப் படித்து விடமுடியும் என்றாலும் காத்திருத்தலின் சுகமே தனிதான் - அதுவும் என் போன்ற வயதானவர்களுக்கு. ஏனென்றால் நாங்கள் எல்லாம் காத்திருந்து வாரா வாரம் படித்தவர்கள். திரு. கணேசனின் எழுத்து எல்லோரையும் கட்டிப் போட்டிருக்கிறது. முடிவு நெருங்க நெருங்க விறுவிறுப்பும் கூடுகிறது. நான் ஆரம்பத்தில் எழுதியது போல் விஸ்வம், அக்ஷய் ஒருவரையொருவர் சமாளிக்கும் காட்சிகள் மிகவும் சிறப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள் திரு. கணேசன்.

   Delete
 5. எதோ மிகப் பெரிய டிவிஸ்ட் நடக்க போகிறது... அதை அறிய காத்திருப்போம்...

  ReplyDelete
 6. Achachoo, Taliban kitaye pottu koduthaachaa?
  Romba ve heart beat raise aaguthu sir..

  ReplyDelete
 7. சாண் அல்லது பேச்சு மொழியில் ஜாண் என்று திருத்தி விடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. திருத்தி விட்டேன். நன்றி.

   Delete