சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 26, 2021

இல்லுமினாட்டி 117



நேரடியாக மனதிலும் மூளையிலும் பதியும் கருத்துப் பரிமாற்றம் என்பது அனுபவமில்லாதவர்களுக்கு நம்பக் கஷ்டமான விஷயம் என்று புரிந்திருந்த க்ரிஷ் புன்னகையுடன் சொன்னான். “ஆரம்பத்தில் எனக்கும் அது அவ்வளவாகப் புரியவில்லை. வேற்றுக்கிரகவாசி நண்பன் என்னிடம் அது சாத்தியமாக என் உணர்வுநிலையின் உள்ளே நுழைய அவனை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அது கம்ப்யூட்டரில் புதிய சாஃப்ட்வேர் சேர்த்துக் கொள்வது போலத் தான் என்றான். அதற்கு என் மன அளவில் சிறிய எதிர்ப்பு இருந்தாலும் அது முடியாது என்றான்.... ஆரம்பத்தில் தயங்கி விட்டுப் பின் தான் அவனுக்கு நான் அனுமதி கொடுத்தேன். அதற்குப் பிறகு அவன் இந்த பூமியில் இருக்கிற வரை எப்போது வேண்டுமானாலும் எங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடிந்தது....”

அவர்கள் மூவரும் பிரமிப்புடன் அவனைப் பார்த்தார்கள். எர்னெஸ்டோ கேட்டார். “அப்படியானால் விஸ்வமும் அவன் கூட்டாளியும் கூட அப்படி ஆரம்பத்திலிருந்தே இணைந்திருப்பார்களோ?”

க்ரிஷ் சொன்னான். “நான் என் வேற்றுக்கிரகவாசி நண்பனுக்குத் தந்த அனுமதியை விஸ்வம் அந்தக் கூட்டாளிக்குத் தந்திருப்பான் என்று தோன்றவில்லை. அவனால் யாரையுமே அந்த அளவுக்கு நம்பவோ, நெருங்கவோ முடியும் என்று தோன்றவில்லை...”

இம்மானுவல் கேட்டான். “ஆரம்பத்தில் அப்படி இல்லாமல் இருக்கலாம். இதெல்லாம் நடந்து முடிந்து போன பிறகு?”

“இப்போது வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அப்படி இருந்தால் ஏன் அந்தக் கூட்டாளி அடிக்கடி ஒரு உருவம் எடுக்க வேண்டி வருகிறது?”

அதற்குப் பதில் அவர்களுக்குத் தெரியவில்லை. எர்னெஸ்டோ யோசனையுடன் சொன்னார். “நீ சொன்னது என்னை யோசிக்க வைக்கிறது. அப்படியானால் நம் மனதுக்குள் ஒருவர் புகுந்து நம்மை ஆக்கிரமிப்பது நாம் அனுமதி தந்தால் தான் முடியும் என்றல்லவா ஆகிறது....”

அக்‌ஷய் சொன்னான். “உண்மை. என் திபெத்திய குரு அடிக்கடி சொல்வார். நாம் மனதிற்குள் தவறான எண்ணங்களையும், ஆட்களையும் உள்ளே அனுமதிப்பதை நிறுத்தினாலே வாழ்க்கையின் முக்கால் வாசிப் பிரச்னைகளை வராமல் தவிர்த்து விடலாம் என்று சொல்வார்... நாம் நம் மனவாசலை அடைத்து வைப்பதில்லை. திறந்தே தான் வைத்திருக்கிறோம். அங்கே காவலுக்கும் நிற்பதில்லை. அதனால் எது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்கிற நிலைமையில் தான் வைத்திருக்கிறோம் என்பார் அவர்...”

எர்னெஸ்டோ அந்த வார்த்தைகளின் பின் இருக்கிற தீர்க்கதரிசனத்தை எண்ணி வியந்தார். பின் அவர் அக்‌ஷயையும், க்ரிஷையும் பார்த்துச் சொன்னார். “எனக்கு உங்கள் இரண்டு பேரையும் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. க்ரிஷ், உனக்கும் மாஸ்டர் போல் ஒரு குருவும், ஏலியன் நண்பன் ஒருவனும் இருக்கிறார்கள். அக்‌ஷய் உன் வாழ்க்கையிலும் ஒரு திபெத்திய குருவும், மைத்ரேயனும் இருந்திருக்கிறார்கள். இதெல்லாம் பெரிய பாக்கியம். எனக்கு உலக நாடுகளிம் தலைவர்கள், பிரபலமானவர்கள் எல்லாரும் நெருக்கம் தான் என்றாலும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் யாராலும் எந்த ஞானமும் பெற வழி இருக்கவில்லை....”

இம்மானுவல் நினைத்துக் கொண்டான். ’உலகமே இவரைப் பார்த்துப் பொறாமைப் படுகிற நிலைமையில் இருக்கும் போது இவர் இவர்கள் இருவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார். எல்லார் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது...’


சாலமன் போலி பாஸ்போர்ட் மற்றும் விசாவுக்கு ஏற்பாடு செய்து விட்டு ம்யூனிக் விமானநிலையத்திற்குப் போனார். அங்கே இருந்த அதிகாரிகள் அவரைப் பார்த்தவுடனேயே டேனியல் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று சொன்னார்கள். முழு எச்சரிக்கையுடன் எல்லாப் பயணிகளையும் பரிசோதித்துத் தான் அனுப்புகிறோம் என்றும் டேனியல் ம்யூனிக் விமானநிலையம் வழியாக எங்கேயும் செல்லவில்லை என்பது உறுதி என்றும் சொன்னார்கள். அந்த அளவு டேனியல் அங்கே பிரபலமாகி இருந்தான் என்று சொல்வதை விட அந்த அளவு டேனியலை இல்லுமினாட்டி பிரபலமாக்கி இருக்கிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

சாலமன் அங்கு போன நோக்கத்தை அவர்களிடம் காட்டிக் கொள்ளாமல் தீவிரமாய் சிந்திப்பது போல நடித்தார். விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இல்லுமினாட்டி உளவுத்துறை மீது மிகுந்த மரியாதையும் பயமும் இருந்தது. மறைமுகமாகத் தங்களை அவர்களால் எதுவும் செய்ய முடியும் என்று  நம்பியதால் அவர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தாதபடி இருக்க நிறைய பாடுபட்டார்கள். க்ரிஷை அழைத்துப் போக வந்த இம்மானுவல் விமானம் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்து அவர்கள் ஏற்பாடுகள் பற்றி விசாரித்து விட்டுப் போயிருந்தான். சாலமனும் அது விஷயமாகத் தான் வந்திருக்கிறார் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.

சாலமன் யோசிப்பது போல் காட்டிக் கொண்டு அவர்களுடைய பாதுகாப்பு அதிகாரிகளின் அலுவல் அட்டவணையை வாங்கிப் பார்த்தார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையிலிருந்து அடுத்த ஞாயிறு வரை யார் யார் எந்தெந்த நேரங்களில் பரிசோதனை வேலையில் ஈடுபடவுள்ளார்கள் என்பது முன்கூட்டியே ஒதுக்கப்பட்டு விடும். அந்த அட்டவணையை மேலோட்டமாய் பார்ப்பது போல பார்த்துக் கொண்டே வந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் போகும் விமானத்தின் நேரத்தில் யார் பரிசோதனை அதிகாரி என்று பார்த்தார்.  மைக்கேல் விக்டர் என்று எழுதப்பட்டிருந்தது. பின் அரை மணி நேரம் பரிசோதனைகள் நடைபெறும் இடத்தில் நின்று கண்காணிப்பது போல் பாவனை காட்டி விட்டு சாலமன் அலுவலகம் வந்தார்.

அலுவலகம் வந்தவுடன் அந்த மைக்கேல் விக்டர் பற்றிய விவரங்களைத் தேடிப் படித்தார்.  மைக்கேல் விக்டர் வயது 52, சமீபத்தில் இரண்டாம் மனைவியை விவாகரத்தானவர், அவருக்கு இரண்டு மகள்கள், அவர் திறமையானவர், நேர்மையானவர்,   பதவி உயர்வுக்காகக் காத்திருப்பவர்,.... எல்லா விவரங்களையும் படித்து விட்டுக் கடைசியில் சாலமன் அவருடைய விலாசத்தைப் பார்த்தார்.

அடுத்த நாற்பதாவது நிமிடம் சாலமன் மைக்கேல் விக்டரின் வீட்டில் இருந்தார். இல்லுமினாட்டியின் உயர் அதிகாரி ஒருவர் தன் வீடு தேடி வந்தது மைக்கேல் விக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. வரவேற்ற மைக்கேல் விக்டரிடம் சாலமன் ஒரு மாபெரும் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் பீடிகையுடன் மிகவும் தாழ்ந்த குரலில் சொல்ல ஆரம்பித்தார்.

“ஒரு மிக முக்கியமான மிஷன், அமெரிக்க சி.ஐ.ஏ டைரக்டர் முதல் என் வரை ஆறே ஆறு பேருக்கு மட்டுமே தெரிந்த மிக ரகசியமான ஒரு மிஷன். அதைத் தெரிந்து கொள்ளூம் ஏழாவது ஆள் நீங்கள்....”

மைக்கேல் விக்டர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
சாலமன் சொன்னார். “ம்யூனிக் விமானநிலைய பரிசோதனை அதிகாரிகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய, திறமையும் இருக்கிற ஆள் என்று பார்த்த போது முதல் பெயராக உங்கள் பெயர் தான் வந்தது. அதனால் தான் உங்களைத் தேர்ந்தெடுத்தோம்....”

மைக்கேல் விக்டர் தனக்குக் கிடைத்திருக்கும் முக்கியத்துவத்தில் உச்சி குளிர்ந்தார். “நன்றி....”

“உங்களுக்குத் தெரியும் கடந்த சில நாட்களாக டேனியலை வலை வீசித் தேடுகிறோம். ஜெர்மனியில் எல்லா விமான நிலையங்களிலும் தீவிரமாகத் தான் தேடுகிறோம். ஆனால் அவன் அகப்படவில்லை. தேடிய ஆள் கிடைக்காததால் ஒரு நகலை உருவாக்கி ஒரு டாப் சீக்ரெட் மிஷனில் ஈடுபடத் தீர்மானித்திருக்கிறோம். சிஐஏ வேண்டுகோளின் பேரில் அந்த நகல் மனிதனை அமெரிக்கா அனுப்பி வைப்பதாக உள்ளோம்....”

மிகத் தாழ்ந்த குரலில் அவர் சொல்வதை எல்லாம் கேட்டுப் பரபரப்படைந்த மைக்கேல் விக்டர் சொன்னார். “சரி... இதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்...”

“வரும் ஞாயிற்றுக் கிழமை அந்தப் போலி டேனியல் ஏதோ ஒரு பெயரில் ம்யூனிக்கிலிருந்து வாஷிங்டன் போகிறான். அவனைப் பரிசோதனை செய்வது போல் நடித்து அவன் வாஷிங்டன் விமானம் ஏற நீங்கள் உதவ வேண்டும். வாஷிங்டன் போனதும் சி.ஐ.ஏ டைரக்டர் மீதியைப் பார்த்துக் கொள்வார். அங்கே அவர்கள் அவனுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திரும்ப இங்கேயே அவனை அனுப்புவார்களா, இல்லை அங்கேயே வைத்துக் கொள்வார்களா என்றெல்லாம் தெரியவில்லை.”

அமெரிக்க சிஐஏ டைரக்டர் நேரடியாக ஈடுபடும் ஒரு ரகசிய மிஷனில் அவருக்கும் ஒரு பங்கு கிடைத்திருப்பது மைக்கேல் விக்டருக்குப் பெருமையாக இருந்தது.

”நீங்கள் சொன்னபடி செய்கிறேன் சார்” என்று கம்பீரமாக மைக்கேல் விக்டர் சொன்னார்.

“இந்த விஷயம் உங்களைத் தவிர இங்கேயே கூட மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது. அது மிக முக்கியம். நாளை என்னையே விமானநிலையத்தில் பார்த்தால் என்னிடமே கூட இது விஷயமாய் நீங்கள் எதுவும் பேசக்கூடாது... அந்த அளவு இது விஷயமாக நீங்கள் மௌனம் காக்க வேண்டும்” என்றார் சாலமன்.

மைக்கேல் விக்டர் தலையசைத்தார். சாலமன் நிம்மதியடைந்தார். ம்யூனிக்கிலேயே இருக்கும் இம்மானுவல் இவருக்குப் பார்க்கக் கிடைத்தால் இவர் அவனிடம் ஏதாவது உளறி வைக்காமல் இருக்க இது உதவும் என்று நினைத்துக் கொண்டார்.

(தொடரும்)
என்.கணேசன்






6 comments:

  1. As usual very interesting. Akshay's Tibetan master's statement is fantastic great truth.

    ReplyDelete
  2. திபெத்திய குரு கூறிய அறிவுரையை அக்ஷய் சொன்னது... அற்புதமான உண்மை...
    சாலமனின் திட்டங்களும் அதை செயல்படுத்திய விதமும் சூப்பர்...

    ReplyDelete
  3. Solomon oda thittam semmma,,, epdi avar viswam Washington porathuku plan pannuvaaroo nu nenachen...

    ReplyDelete
  4. I have a doubt Ganeshan sir. Do you think ordinary security people know all the Illuminati top intelligent officials. To my knowledge no one knows who Illuminates are. Isn't this contradictory?

    ReplyDelete
    Replies
    1. Since Viswam is known to be there in Germany and illuminati top intelligent officials are closely associated with the security people to find Viswam at that time, the security people also happened to know the officials. Otherwise there is no chance for the ordinary security people to know them.

      Delete