சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 2, 2021

யாரோ ஒருவன்? 43


ரவு பத்து மணியானதும் ஒரு தோழி, இரண்டு உறவினர்கள் தவிர மற்றவர்கள் எல்லாரும் இனியும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்து கிளம்பிப் போனார்கள். போலீஸ் மேலதிகாரி போவதற்கு முன் மதன்லாலின் மனைவியிடம் ஒரு தொலைபேசி எண்ணைத் தந்து ஏதாவது பிரச்சினை அல்லது புதிய தகவல் என்றால் அந்த எண்ணுக்கு அழைத்துச் சொல்லச் சொன்னார். “ஒரு வேளை பேசக்கூடிய சூழ்நிலை இல்லாட்டி மிஸ்டு கால் தந்தாலும் போதும். ஆபத்து, அவசரம்னா நாங்க யாராவது உடனடியாய் வருவோம்என்று சொன்னார். அவள் தலையாட்டினாள்.

அவளுக்கு அவர் தைரியம் சொல்லத் தேவையிருக்கவில்லை. ஏனென்றால் அவள் லேசான பதற்றத்தில் இருந்தாளேயொழிய பெருங்கவலையிலோ, துக்கத்திலோ இல்லை. அவள் பிள்ளைகள் போன் செய்து பேசிய போது கூடலட்சக்கணக்கில் எல்லாம் தர வேண்டியது இல்லை, சும்மாயிருங்க. நீங்க அவரைப் பத்திக் கவலைப்படாதீங்க. அவர் எப்படியாவது வந்து சேர்ந்துடுவாருஎன்று அவள்  அவர்களுக்குத் தைரியம் சொன்னது அவர் காதில் விழுந்திருந்தது.

பணமா கணவனா என்ற கேள்வி வருமானால் பெரிதாகக் கவலைப்படாமல் கணவனைத் தியாகம் செய்யக்கூடியவள் என்று அந்த ஒருநாளிலேயே அவர் கண்டுபிடித்து வைத்திருந்தார். இத்தனைக்கும் மதன்லால் லஞ்சம் வாங்கிய பணத்தில் ஏகப்பட்ட சொத்துக்கள், நகைகள் அவளுக்கும், குடும்பத்துக்கும் வாங்கித் தந்திருந்தான். சொத்துக்களில் இரண்டை விற்றால் ஐம்பது லட்சம் தாராளமாய் அவள் திரட்டி விட முடியும் என்றாலும் அவள் அதைப் பற்றியே யோசிக்கவில்லை.

மதன்லால் நண்பர்களை விட எதிரிகளை அதிகம் சம்பாதித்து வைத்திருந்ததால் எதிரி எவனாவது ஒருவனே இதைச் செய்துவிட்டிருக்க வேண்டும் என்று அவருடைய போலீஸ்துறை ஆட்கள் சந்தேகப்பட்டார்கள். இந்தக் கடத்தலைக் கேள்விப்பட்ட அவனுடன் வேலை பார்த்த போலீஸ்காரர்கள் பலரும் சந்தோஷப்பட்டார்கள் என்ற தகவலும் அவருக்கு வந்து சேர்ந்தது. சிலர் அவனுக்குக் கீழ் வேலை பார்த்து மனம் நொந்திருந்த ஆள் எவனாவது இதைச் செய்திருக்கலாம் என்று கூடச் சொன்னார்கள். அந்த அளவு கூட வேலை பார்ப்பவர்களின் நல்லெண்ணத்தை  அவன் சம்பாதித்திருந்தான்.

மதன்லாலின் பைக் சிம்லாவுக்கு வெளியே நாற்பது கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு எஸ்டேட் வாசலில் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்திருந்தார்கள். அதிலிருந்தும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அந்த எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு அவனைத் தெரிந்திருக்கவில்லை. அவன் உள்ளே வரவில்லை, அவனை யாரும் சந்திக்கவில்லை என்று தெரிவித்தார்கள்.

அவன் மனைவிக்கு வந்திருந்த கடத்தல்காரனின் முதல் அழைப்பு எண்ணைப் பரிசோதித்த போது போலி ஆவணங்களைத் தந்து வாங்கப்பட்ட சிம்கார்டு என்பது தெரிய வந்தது. அந்த எண்ணிலிருந்து பேசிய ஒரே கால் மதன்லால் மனைவியிடமாகத் தானிருந்தது. அதை சண்டிகரிலிருந்து அவன் அழைத்துப் பேசியதாகவும் தொழில்நுட்ப உதவியால் கண்டுபிடித்திருந்தார்கள். மதன்லாலின் வீட்டின் முன்னால் வீசியிருந்த கடிதம் கடத்தல்காரனுக்கு உள்ளூரிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்ததை விட அதிகமாக எதையும் தெரிவிக்கவில்லை. சைத்தான் என்று பலராலும் அழைக்கப்பட்ட மதன்லால் இப்போது எங்கே இருக்கிறானோ என்று யோசித்தபடியே அந்த மேலதிகாரியும் கிளம்பிப் போனார்.

இரவு பன்னிரண்டரைக்கு மதன்லாலின் மனைவிக்கு அழைப்பு வந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவள் கஷ்டப்பட்டு கண்விழித்தாள்யாரென்று பார்த்தாள். மதன்லால் பெயர் தெரிந்தது. ‘ஓ தப்பித்து விட்டான் போலிருக்கிறதுஎன்று மகிழ்ந்தவளாய் அலைபேசியை எடுத்துஹலோசொன்னாள்.

கடத்தல்காரன் தான் பேசினான். “அவ்வளவு தூரம் சொல்லியும் போலீஸுக்குச் சொல்லிட்டியேம்மா.”

அதே சனியன் தானா என்று மனதிற்குள் சலித்தவள் குரலைக் குழைத்துச் சொன்னாள். “தப்பா நினைச்சுக்காதீங்க. அவர் ட்யூட்டிக்குப் போகலன்னவுடனே ஸ்டேஷன்ல இருந்தே போன் பண்ணினாங்க. எனக்குச் சொல்ல வேண்டியதாய் போச்சு. ஆனா உங்களுக்கு ஐம்பது லட்சம் தர நான் தயார். ஆனா உடனடியா தர கைவசம் அந்த அளவு ரொக்கம் இல்லை. கொஞ்சம் டைம் குடுங்க ப்ளீஸ்...”

சரி அடுத்த வாரம் வியாழக்கிழமை போன் பண்றேன். அதுக்குள்ளே தயார் பண்ணி வை. ஏமாத்த நினைச்சா அவனோட பிணம் கூட உனக்குக் கிடைக்காது ஜாக்கிரதை.” அதற்கு மேல் பேச்சை வளர்த்தாமல் அவன் இணைப்பைத் துண்டித்தான்.

அவள் உடனடியாக அந்த மேலதிகாரிக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னாள். போலீசார் அந்த அழைப்பு ஹைதராபாத்திலிருந்து வந்திருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதற்கு மேல் எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை.

மேலதிகாரி மறு நாள் அழைத்துச் சொன்னார். “இனி கடத்தல்காரன் வியாழக்கிழமை போன் பண்ணினா பணம் ரெடி, எப்படி எங்கே தரணும்னு கேளுங்க. பணம் கொடுக்கிற மாதிரி நடிச்சு தான் அவனைப் பிடிக்க முடியும். பேசறப்ப நீங்க துக்கத்துல இருக்கற மாதிரியும், கவலைப்படற மாதிரியும் காட்டிக்கோங்க. இல்லாட்டி நம்ப மாட்டான்.” அவளிடம் எந்தக் கவலையையும், துக்கத்தையும் அவரால் காண முடியாததால் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அவள் சரியென்றாள். நிஜமாக துக்கப்பட முடியாவிட்டாலும் துக்கப்படுவது போல் அவளால் நடிக்க முடியும்!


நாகராஜிடம் சுதர்ஷன் தீபக்குடன் பேசியதை எல்லாம் தெரிவித்து விட்டுச் சொன்னான். “அந்தப் பையன் உங்களை விடற மாதிரி இல்லை...”

தீபக்கின் துடிப்பும், கலகலப்பும், சுறுசுறுப்பும் நாகராஜுக்கு இன்னொருவனை நினைவுபடுத்தின. அவன் முகம் மென்மையாகியது. அந்த இன்னொருவனும் எதையும் அரைகுறையாக விட முடிந்தவனல்ல. ஈடுபாடு காட்டிய விஷயங்களை இறுதி வரை அறிந்து கொள்ளும் வரை அவனால் சும்மா இருக்க முடிந்ததில்லை.

நாகராஜ் எதாவது கருத்துத் தெரிவிப்பான் என்று சுதர்ஷன் எதிர்பார்த்தான். ஆனால் தன் மனதில் இருப்பதை என்றுமே அனாவசியமாக வெளிப்படுத்தி இருக்காத நாகராஜ் மவுனமாகவே இருந்தான். முகத்தில் தெரிந்த அந்த மென்மை மட்டும் அவன் மனநிலையைக் காட்டியது.

சுதர்ஷனுக்குத் தெரிந்து நாகராஜிடம் அவனுடைய குரு ஸ்வாமி முக்தானந்தாவைத் தவிர வேறு யாருமே உரிமை எடுத்துக் கொண்டு பழக முடிந்ததில்லை. தலைக்கனமோ, தான் உயர்ந்தவன் என்ற பாவனையோ அவன் என்றும் காட்டியதில்லை என்றாலும் நெருங்கி விட முடிந்தவன் அல்ல அவன். குருவைத் தவிர, மற்ற எல்லோரிடமும் ஒரு இடைவெளியை அவன் தக்க வைத்துக் கொண்டிருந்தான். பல வருடங்களாக அவனுடன் இருக்கும் சுதர்ஷனே கூட அந்த இடைவெளியைக் குறைக்க முடிந்ததில்லை. ஆனால் அந்த இடைவெளியை இரண்டே நாளில் தீபக் தாண்டி விட்டிருந்தான். இன்று காலையில் தீபக் நாகராஜின் விரல்கள் பிடித்து நடந்ததையும், நாகராஜ் அதை அனுமதித்ததையும் சுதர்ஷன் நினைத்துப் பார்க்கிறான். இரண்டே நாட்களில் இது இராட்சசத் தாவல் தான்...

அவன் எத்தனையோ வருடங்களாக நாகராஜைப் பார்த்து வருகிறான். பல பிரமிக்கத் தக்க மாற்றங்களை அவனிடம் ஒவ்வொரு முறையும் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறான். ஒருசில வருடங்களில் அவன் மாறியிருக்கும் விதங்கள் சாதாரணமானவை அல்ல. இனி எப்படி மாறப்போகிறான், தான் இங்கு வந்த வேலையை எப்படி முடிக்கப் போகிறான் என்பது தெரியவில்லை. இதெல்லாம் இன்னும் எத்தனை காலம் நீடிக்கும், அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதையும் சுதர்ஷனால் யூகிக்க முடியவில்லை. தீபக்கை அவனுக்கும் மிகவும் பிடித்திருந்தது. எல்லாம் முடிகையில் அந்த நல்ல இளைஞன் மகிழ்ச்சியோடிருக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை... பாவம் தீபக்! முன்பு நடந்திருப்பதையும் அவன் அறிய மாட்டான். இனி நடக்கப் போவதையும் அவன் அறிய மாட்டான். பல நேரங்களில் எதுவும் அறியாமலிருப்பதே நிம்மதி. எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ளும் போது நிம்மதியும், மகிழ்ச்சியும் மனிதனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு விடுகின்றன. நிஜங்கள் சகிக்க முடிந்தவை அல்ல!


(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. What is the purpose of Nagaraj? A million dollar question. Interesting.

    ReplyDelete
  2. vibulspt211@gmail.comAugust 2, 2021 at 7:33 PM

    "பல நேரங்களில் எதுவும் அறியாமலிருப்பதே நிம்மதி. எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ளும் போது நிம்மதியும், மகிழ்ச்சியும் மனிதனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு விடுகின்றன. நிஜங்கள் சகிக்க முடிந்தவை அல்ல!"

    உண்மை என்று தெரியவரும் சமயம் அதை மனம் ஏற்க மறுக்கிறது. உண்மை கசப்பான ஒன்றாக தெரிகிறது. எனக்கு தங்களிடம் மிகவும் பிடித்த விடயமே இப்படியான தத்துவக் கருத்துகளை தங்களின் பதிவுகளில் கொடுத்து வருவதே. மிகவும் சிறப்பு. நன்றி

    ReplyDelete
  3. மதன்லால் மனைவி போன்றவர்களை நிஜ வாழ்க்கையிலும் கண்டிருக்கிறேன்.....
    மதன்லால் போன்ற தீயவர்களுக்கு மனைவி அல்லது பிள்ளைகள் இது போன்று தான் அமைவார்கள்....

    ReplyDelete