சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 19, 2020

இல்லுமினாட்டி 77



தய் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “சிந்து எங்கள் வீட்டுல எங்களுக்குள்ளே எப்பவுமே ஒளிவு மறைவு இருந்ததில்லை. யாரும் எதையும் வீட்டாளுக கிட்டயே மறைக்கணும்னு நினைச்சதும் இல்லை. நீயும் என் மனைவியாகப் போகிறவங்கறதால சில விஷயங்களை உன் கிட்ட சொல்றேன். இதை நீ யார் கிட்டயும் எந்தக் காலத்துலயுமே சொல்லிடக்கூடாது. எனக்கு சத்தியம் பண்ணி கொடு

சொல்லி விட்டுக் கை நீட்டிய உதயை மனதிற்குள் ஏளனமாக எண்ணினாலும், சிந்து முகத்தில் அதைக் காட்டாமல் அவன் கையில் தன் கையை வைத்து சத்தியம் செய்தாள். அதையே சாக்காக வைத்துக் கையைச் சிறிது நேரம் பிடித்தபடியே இருந்த உதய் மீது அவளுக்கு எரிச்சல் வந்தது. அதையும் அவள் மறைத்துக் கொண்டாள்.

உதய் அவளுக்கும் பின்னால் இருந்த வெட்ட வெளியை ஒரு கணம் பார்த்து விட்டு அவளிடம் சொல்ல ஆரம்பித்தான். “என் தம்பி அவனோட தனிப்பட்ட எந்த விஷயத்தையும் நான் முதல்லயே சொன்ன மாதிரி எங்க கிட்டே மறைச்சதில்லை. மறைக்க வேண்டிய அளவுக்கு அவன் எந்தத் தப்பான விஷயத்திலும் ஈடுபட்டது கிடையாது. ஆனால் ஒரே ஒரு நாளுக்கு அப்புறம் அவன் கொஞ்சம் ரகசியமாய் மாறினதா எனக்குத் தோணுது. அதுக்குக் காரணம் அவன் வெளிப்படையாய் சொன்னால் அது எங்களுக்குப் புரியாது அல்லது எங்களுக்கு கவலையைத் தரும்கிறதா கூட இருக்கலாம்...”

அவள் குழப்பத்தை முகத்தில் காட்டித் தலையசைத்தாள்.

உதய் திடீர் என்று ஒரு நாள் க்ரிஷ் காணாமல் போனதிலிருந்து ஆரம்பித்தான். அவர்கள் பயந்ததையும், துக்கப்பட்டதையும் சொன்னான். “.... பிறகு திடீர்னு ஒரு நாள் வந்தான். இடையில் என்ன ஆச்சுன்னு அவனுக்கே தெரியலைன்னு சொன்னான். ஆனால் அவன் திரும்பி வர்றப்ப ஒரு எதிரியைச் சம்பாதித்திருந்தான். அது மட்டும் தெரியும். அந்த எதிரி பெயர் விஸ்வம்...”

சிந்து அந்தப் பெயரை உதய் வாயிலிருந்து கேட்டதில் திடுக்கிட்டாள் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. உதய் தொடர்ந்தான். “அந்த ஆள் ஒரு ஜகதலப்பிரதாபன். எத்தனையோ அமானுஷ்ய சக்திகளை அவன் வசப்படுத்தியிருக்கிறதாய்ச் சொல்கிறார்கள். அதில் ஒன்று அடுத்தவர் மனதில் இருப்பதை அப்படியே தெரிந்து கொள்வது, அடுத்தவர் மனதில் ஆதிக்கம் செலுத்துவது என்கிறார்கள். அவன் சமீபத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து இருக்கிறான் என்று கூடச் சொல்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால் அதை நான் நம்பவில்லை. ஆனால் க்ரிஷ் உண்மை என்று நம்புகிறான். அந்த எதிரியின் ஆள் தான் அந்த மனோகரன். அவன் க்ரிஷ் மீது இருக்கும் பகை காரணமாக ஹரிணியைக் கடத்திப் போய் விட்டான்...”

சிந்து ஆர்வத்துடன் கேட்டாள். “பின் எப்படி ஹரிணியை மீட்டார்கள். அவளைக் கடத்தி வைத்திருக்கிற இடத்தை போலீஸ் எப்படிக் கண்டுபிடித்தது?

உதய் சொன்னான். “என் தம்பிக்கும் ஏதோ சில சக்திகள் இருக்கின்றன. அதை வைத்துக் கண்டுபிடித்திருக்கிறான். அவன் சொன்ன அடையாளங்களை வைத்து அந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்து விட்டார்கள்...”

உண்மையாகவே சிந்து திகைத்தாள். பின் ஆர்வத்துடன் கேட்டாள். “உங்கள் தம்பியிடம் என்னென்ன சக்தியெல்லாம் இருக்கின்றன?”

அவள் திகைப்பையும் ஆர்வத்தையும் பார்த்த உதய் புன்னகையுடன் சொன்னான். ”அதெல்லாம் எனக்கே தெரியாது. ஆனால் என் தம்பியின் குரு ஒருத்தர் இருந்தார். மாஸ்டர்னு அவரைக் கூப்பிடுவாங்க. அவர் ஒரு தடவை என் கிட்ட சொல்லி இருக்கிறார். எத்தனையோ சக்திகள் இருக்கிற விஸ்வம் கூட க்ரிஷ் மனதை ஊடுருவிப் பார்க்க முடியாதாம். அதை அவர் ஒரு பெருமையாகவே சொன்னார்.”

அந்தத் தகவல் சிந்துவுக்குக் கசந்தது. உதய் அதற்கு மேல் அவளிடம் எதுவும் தெரிவிக்காமல் சொன்னான். “இதில் இதைவிட எனக்கும் அதிகம் தெரியாது. க்ரிஷிடம் அதிகம் துருவிக் கேட்டுக் கொள்ளவும் நான் முயன்றதில்லை. ஏன் என்றால் புரிந்து கொள்ளக்கூடிய அறிவும் எனக்குக் கிடையாது. ஆனால் ஒன்றே ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள். நீயும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் க்ரிஷை வழிக்குக் கொண்டு வர விஸ்வம் யாரை வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. நீ அவன் அண்ணியாகப் போகிறவள் என்பதால் நீயும் கவனமாக இரு.”

அவள் அறிந்து கொள்ள வேண்டியதை விளக்கமாக அவன் சொல்லாதது அவளுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. ஆனால் அவனுக்குத் தெரிந்த வரை சொல்லி இருக்கிறான்... அதற்கு மேல் புரிந்து கொள்ளக்கூடிய அறிவு தனக்குக் கிடையாது என்று ஒப்புக் கொண்டிருக்கிறான்...

அன்று இரவு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பியவளுக்குப் பல சிந்தனைகளால் உறக்கம் வரவில்லை. அவள் நினைத்ததை விடப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதாய் உணர்ந்தாள். விஸ்வத்திடம் ஏதோ சக்தி கூடுதலாக இருக்கிறது என்று முதல் சந்திப்பிலேயே உணர்ந்திருந்தாள் என்றாலும் அது பல அமானுஷ்ய சக்திகளாக இருக்கும் என்று சிறிதும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது போல் கடைசியாக கூடு விட்டுக் கூடு பாய்ந்து கூட அவன் சாதித்திருக்கிறான் என்று கேள்விப்பட்டதில் அவள் ஆடிப் போயிருந்தாள். இதெல்லாம் மனித ரகமே அல்ல என்று தோன்றியது. அவளால் மனிதர்களைச் சமாளிக்க முடியும் இதெல்லாம் அதற்கும் மேல் என்று அவளைப் பயமுறுத்தியது.

ஆனால் அப்படிப்பட்ட மனிதன் கூட க்ரிஷின் மனதை ஊடுருவ முடியாது என்றால் இவன் எப்படிப்பட்ட மனிதன் என்று அவள் திகைத்தாள். இரண்டு மிக சக்தி வாய்ந்த நபர்கள் ஆடும் ஆடுபுலி ஆட்டத்தில் அவள் ஒரு காயாக இருப்பதில் அவளுக்குச் சம்மதம் இருக்கவில்லை. அவர்களில் யார் வென்றாலும் அவள் தப்ப முடிவது கேள்விக்குறியாகவே இருந்தது.

இப்போது புதிய கண்ணோட்டத்தில் பார்க்கையில் முன்பு புரியாத விஷயங்கள் இப்போது புரிந்தன. அன்று விஸ்வம் போன் செய்து பேசிய போது குரல் வேறாக இருந்ததற்குக் காரணம் அவன் வேறு உடலுக்கு மாறியிருந்தது தான் என்பது புரிந்தது. இத்தனை நாள் உதயைக் கவர்ந்தது தன் அழகு தான் என்று நினைத்திருந்தாள். இப்போது அதற்கும் விஸ்வம் ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது. அடுத்தவர் மனதில் ஆதிக்கம் செலுத்த முடிந்த விஸ்வம் உதய் மனதில் ஆதிக்கம் செலுத்தி அவள் மீது அவனுக்கு மையல் வர ஏதாவது செய்திருக்க வேண்டும். அதனால் தான் அவளுக்கு அவன் மனதில் சுலபமாக இடம் பிடிக்க முடிந்திருக்கிறது.

விஸ்வத்தால் எப்போது வேண்டுமானாலும் அவள் மனதையும் ஆக்கிரமித்து எல்லாம் தெரிந்து கொள்ள முடியும். அவளிடம் அதிருப்தி ஏற்பட்டால் மனோகரைக் கொன்றது போல் கொன்று விடவும் முடியும்....

பயத்தால் லேசாக அவள் உடல் நடுங்கியது. ஆழ்ந்து ஆலோசித்து என்னவானாலும் சரி விஸ்வத்தின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது முக்கியம் என்ற முடிவுக்கு வந்தாள். க்ரிஷை எல்லோரும் மிக நல்லவன் என்கிறார்கள். அவன் யாருக்குமே எந்தக் கெடுதலும் செய்தது கிடையாது என்கிறார்கள். நாளைக்கு அவள் நோக்கமும், திட்டமும் தெரிந்தால் கூட அவன் அவளைக் கொல்ல மாட்டான். ஆனால் விஸ்வம் அப்படியல்ல. அவன் சொன்னபடி நடந்து வெற்றிகரமாய் இதிலிருந்து தப்பித்து விட வேண்டும்...  


ர்னீலியஸ் மனம் அன்று முன்பு எப்போதையும் விடத் தெளிவாக இருந்தது. இது நாள் வரை அவர் அந்த ரகசிய ஆவணத்தை நினைவுபடுத்திக் கொள்ள முயன்ற போதெல்லாம் ஒருசில சில்லறை முன்னேற்றங்கள் மட்டுமே அவருக்குக் கிடைத்திருந்தன. அவை புதிய தகவல்கள் தான், அவர் அந்த ஆவணத்தில் முன்பு படித்தது நினைவிருக்காத தகவல்கள் தான் என்றாலும் இப்போது அவற்றில் அவர் அறிய வேண்டிய அதிமுக்கியத் தகவல் பக்கத்தினுடையதாக இருக்கவில்லை.

ஆனால் இன்று ஏனோ பயிற்சியின் முடிவில் மனம் தெளிவாக முன்னேறியது. பல வருடங்களுக்கு முன்பு அன்று படித்த முக்கிய இடத்தை இன்று நினைவு கூர முடிந்தது. அந்த ரகசிய ஆவணத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பது போல் கர்னீலியஸ் இப்போதும் உணர்கிறார். அந்த வாசகங்களைப் பார்த்துப் படிப்பது போல் அவரால் படிக்க முடிந்தது.   

“முன்கூட்டிக் கணக்கிட்டு, காலம் நிர்ணயித்து ஓருடல் விட்டு மறு உடல் போவது யாம் அறிந்ததே, பல முறை கண்டதே! ஓருடல் நஷ்டப்பட்டு அழியும் போது வெளியேறி மறு உடல் கண்டு சேர்ந்து நிரந்தரமாய்த் தங்கும்  புதிய முயற்சி அரங்கேறும் போது ஆபத்துக் காலம் உச்சம் சென்றதென்று அறிக. இது நீங்கள் அறியாது நடக்க வழியில்லை. நடந்த பின் அறிவது உறுதி. மறு உடல் கண்ட மனிதன் மறைய உதவி கிடைக்கும். நீங்கள் தொழுத இடம் போய்ச் சேரும்....”

வெளியே யாரோ கதவை தடதடவென்று தட்டும் ஓசை கேட்டு நிகழ்காலம் வந்தார் கர்னீலியஸ். யாரது?

(தொடரும்)
என்.கணேசன்


3 comments:

  1. சஸ்பென்ஸ் தொடர்கிறது...

    ReplyDelete
  2. Very very interesting and thrilling. That's why people want to buy your novel and read it at a stretch. Super

    ReplyDelete
  3. சிந்துவின் எண்ண ஓட்டம் வேடிக்கையாக உள்ளது... நன்றாக மாட்டிக் கொண்டாள்...

    மறுபடியும் விஸ்வம் அழிவானா? அருமை...

    ReplyDelete