சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, November 14, 2020

இல்லுமினாட்டி 76

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

னோகரைக் கொன்று விட்டு அலட்டிக் கொள்ளாமல் வெளியே வந்த பிசா பாய் மனோகர் வீட்டுக்கு எதிரே இருந்த வர்க் ஷாப்பில் வேலை செய்பவன் கூர்ந்து பார்ப்பதைக் கண்டு கொள்ளாமல் தன் பைக்கைக் கிளப்பிக் கொண்டு போனான். மனோகர் வீட்டிலிருந்து எந்தச் சத்தமும் வராததும், பிசா பாய் வெளியே வந்தவுடன் உள்ளே இருந்த வேலையாள் கதவைத் தாளிட்டுக் கொண்டதையும் கூடக் கவனித்த பின் எதிர் வர்க் ஷாப்பில் வேலை செய்யும் மனோகரின் ஆள் எந்தப் பிரச்சினையுமில்லை என நிம்மதி அடைந்து கடையைச் சாத்துவதற்காகப் பொருட்களை எல்லாம் உள்ளே எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

பிசா பாய் அடுத்த தெருவில் போகும் போது ஆளில்லா இடத்தில் பைக்கை நிறுத்தி ஒரு ரெயின் கோட்டை அணிந்து கொண்டு பயணிக்க ஆரம்பித்தான். அதற்கும் அடுத்த ரோட்டில் ஆளில்லாத இடத்தில் ஒரு கார் அவனுக்காகக் காத்திருந்தது. அங்கு பைக்கை நிறுத்தி விட்டு பிசா பாய் காரில் ஏறிக் கொண்டான். காரில் இருந்து குண்டான ஒருவன் இறங்கி பைக்கில் ஏறிக் கிளம்பினான். காரின் பின் சீட்டில் பிசா பாய் ஏறியவுடன் கார் டிரைவர் காரைக் கிளப்பினான். காரின் பின் சீட்டில் விலையுயர்ந்த கோட்டும் சூட்டும் தயாராக வைக்கப்பட்டிருந்தது. அங்கேயே தன் பிசா பாய் சீருடையைக் கழற்றி அந்தக் கோட் சூட்டை அவன் அணிந்து கொண்டான். அரை மணி நேரத்தில் கார் விமான நிலையம் அடைந்தது. கையில் ஒரு ப்ரீஃப் கேஸுடன் காரிலிருந்து கம்பீரமாக இறங்கிய போது பிசா பாய் ஒரு தொழில் அதிபர் தோற்றத்தில் மாறி இருந்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவன் மும்பை செல்லும் விமானத்தில் உயர் வகுப்பு இருக்கையில் அமர்ந்திருந்தான்.    


றங்கிக் கொண்டிருந்த மனோகர் திடீரென்று எழுந்து உட்கார்ந்தது கம்ப்யூட்டரில் தெரிந்த போதே உஷாரான அதிகாரி அடுத்ததாக மனோகர் என்ன செய்யப் போகிறான் என்று கவனமாகப் பார்த்தான். சிறிது நேரத்தில் மனோகர் படுக்கையில் சரிந்தது தெரிந்த போது தான் விபரீதமாக ஏதோ நடந்து விட்டது என்பது அவனுக்குப் புரிந்து அவசரமாக அவன் செந்தில்நாதனுக்குப் போன் செய்தான்.

செந்தில்நாதன் உடனடியாக மனோகரின் வீடிருக்கும் பகுதியில் தங்க வைத்திருந்த தமிழ்நாட்டு போலீஸ் ஆட்களுக்கும், அப்பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கும் போன் செய்து பேசினார். அடுத்த இருபது நிமிடங்களில் அவர்கள் மனோகர் வீட்டில் இருந்தார்கள். மனோகர் முன்பே இறந்து போயிருந்ததை உறுதி செய்த அவர்கள் வேலையாளைத் தீவிரமாக விசாரித்தார்கள். வேலையாள் திகைப்பிலும் பெருங்குழப்பத்திலும் இருந்தான். நடந்ததை எல்லாம் அவர்களிடம் சொன்னான். அந்த வேலையாள் சொன்ன பிசா பாயைப் பிடிக்க இரு மாநில போலீசாரும் சில குழுக்களாகப் பிரிந்து தேட ஆரம்பித்தார்கள்.

எதிரே வர்க் ஷாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மனோகரின் வேலையாள் போலீசார் போன போது தான் கடையைச் சாத்திக் கொண்டு இருந்தான். அவனைப் பிடித்தும் விசாரித்தார்கள். அவனால் பிசா பாய் போன திசையை மட்டும் தான் சொல்ல முடிந்தது. அவனுக்கும் மனோகர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் திகைப்பைத் தந்திருந்தது என்பது அவனைப் பார்த்த போதே தெரிந்தது.

அவன் காண்பித்த வழியே போய் எல்லோரிடமும் போலீசார் விசாரித்துப் பார்த்தார்கள். யாரும் பிசா பாயைப் பார்த்திருக்கவில்லை. ஒருவர் ரெயின் கோட் போட்டுக் கொண்டு ஒல்லியான ஒரு இளைஞன் போனதாய்ச் சொன்னார். தோற்றம் மற்ற விதத்தில் ஒத்துப் போனதால்  பிசா பாய் வழியிலேயே தன் சீருடை மீது ரெயின் கோட் போட்டுக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்று அனுமானித்துப் பிறகு ரெயின்கோட் இளைஞனைத் தேடினார்கள். அந்த நீண்ட தெருவின்  இடையிடையே குறுக்காகப் பல தெருக்கள் இருந்தன. பிசா பாய் எங்கே வேண்டுமானாலும் திரும்பி இருக்கலாம். ஆனாலும் அந்தப் பகுதியில் உள்ள தெருக்களில் எல்லாம் கிடைத்த ஆட்களிடம் பிசா பாயையோ, ரெயின்கோட் போட்டுக் கொண்டு போன ஒல்லியான ஆளையோ பற்றி விசாரித்தார்கள்.  நள்ளிரவு ஆகியிருந்தது என்பதால் குறைவான ஆட்களே அவர்களுக்கு விசாரிக்கக் கிடைத்தார்கள். விசாரித்த ஆட்கள் யாரும் போலீசார் சொன்ன இரண்டு விதமான ஆட்களையும் பார்த்திருக்கவில்லை. மனோகரின் கொலையாளி மாயமாக மறைந்திருந்தான்.

செந்தில்நாதனுக்குத் தகவல் போனது. செந்தில்நாதன் விஸ்வம் உடனடியாகக் மனோகரைக் கொன்று விடுவான் என்று எதிர்பார்த்திருக்காதது தன் தவறு என்பதை மெல்ல உணர்ந்தார். சிப் வைத்திருப்பதை மனோகர் உணராமல் இருக்கலாம். ஆனால் விஸ்வம் தன் சக்தியால் அவனை அணுக முடியுமானால் அவன் உடலில் சிப் வைத்திருக்கும் தகவலை அறியவும் முடிந்திருக்கும் என்பதையும், அறிந்த பின் போலீசாரிடம் ஏமாந்த, தன்னை ஏதாவது விதத்தில் காட்டிக் கொடுக்க முடிந்த மனோகரைத் தீர்த்துக் கட்டுவது தான் அவன் நிலைமையில் புத்திசாலித்தனம் என்பதும் அவருக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் விஸ்வம் தன் பழைய சக்திகளைப் புதிய உடலில் பயன்படுத்துவதில் சில சிக்கல்களும் தடைகளும் இருக்கும் என்று சொல்லப்பட்டதால் விஸ்வத்திற்கு சிப் விவரம் கூட இப்போதே தெரிய வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆனால் மனோகர் இறந்து விட்டான் என்பது தெரிந்த பிறகு அவனைக் கொன்றவன் அகப்பட வாய்ப்பில்லை என்பதை முன்பே செந்தில்நாதன் முன்பே எதிர்பார்த்திருந்தார்.  விஸ்வம் முட்டாள் அல்ல. அகப்படுகிற மாதிரி ஒரு கொலையாளியை அனுப்பியிருக்க மாட்டான்….

மனோகர் இறந்து விட்டதை செந்தில்நாதன் க்ரிஷுக்குப் போன் செய்து சொன்னார். விஸ்வம் எங்கிருந்தாலும் இருந்த இடத்திலிருந்தே செயல்பட ஆரம்பித்து விட்டான் என்ற செய்தி இல்லுமினாட்டிக்கும் போய்ச் சேர்ந்தது.


னோகர் இறந்து போன செய்தியை சிந்து செய்தித்தாளில் படித்தாள். ஹரிணியை ஒரு காலத்தில் கடத்திச் சென்று போலீசில் சிக்கி, சிறைப்பட்டு, சில நாட்களுக்கு முன் தான் சிறையிலிருந்தும் தப்பித்துச் சென்று பெங்களூரில் ஒளிந்திருந்த அவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்ற செய்தியைப் படிக்கையில் கொன்றவன் யாராக இருக்கும் என்பது அவளுடைய மூளைக்கு எட்டாமல் இல்லை. மனோகர் எதாவது முட்டாள்தனம் செய்திருக்க வேண்டும், அதனால் தான் அவன் கொல்லப்பட்டு இருக்கிறான் என்பதை யாரும் சொல்லாமலேயே அவளால் யூகிக்க முடிந்தது. நாளை அவள் எதாவது முட்டாள்தனம் செய்தால் அவளுடைய நிலைமையும் அதுவாகத்தான் இருக்கும் என்ற உண்மையும் அந்தக் கணத்திலேயே அவளுக்கு உறைத்தது. ஆனால் இனி எதுவும் அவள் செய்வதற்கில்லை. அவள் அந்த வேலையை ஏற்றுக் கொண்டாகி விட்டது. விஸ்வம் ஒரு வேலையைச் சொல்லும் போது அதை யாரும் மறுத்து அதைச் செய்யாமல் இருந்து விடவும் முடியாது என்பது வேறு விஷயம். அவளுடைய அக்கவுண்டில் பெரிய தொகையும் போடப்பட்டிருக்கிறது. புலியின் மீதமர்ந்து சவாரி ஆரம்பித்து விட்டது. இனி பாதியில் இறங்கித் தப்பிக்க வழியில்லை. அவள் தான் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றால் அவளுக்கு இந்த வேலை கொடுத்திருக்கும் விஸ்வத்தைப் பற்றியும், அவளைச் சந்தேகக்கண்ணோடு பார்க்க ஆரம்பித்திருக்கும் க்ரிஷ் பற்றியும் அவள் இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக அவர்களுக்குள் இருக்கும் உறவு அல்லது பகை என்ன என்பது தெளிவாக அவளுக்குத் தெரிய வேண்டும். அது தெரியா விட்டால் அவள் வெறும் பகடைக்காயாகவே இருந்து அவள் விதியை அவர்களிடம் ஒப்படைப்பது போலாகி விடும்...

அன்றிரவு அவளும், உதயும் ஒரு ஓட்டலில் சாப்பிடப்போயிருக்கும் போது அவள் மெல்ல அன்று பத்திரிக்கையில் பார்த்த செய்தியைச் சொன்னாள். “யாரோ மனோகர்னு ஒரு கைதி கொலைன்னு பேப்பர்ல பார்த்தேன். அவன் தான் ஹரிணியைக் கடத்திப் பிறகு கைதானவன்னு போட்டிருந்தாங்க...”

உதய்க்கு அந்த விஷயத்தைப் பேசி அந்த இரவின் இனிமையைக் குறைத்து விட விருப்பமிருக்கவில்லை. அவன் தலையை மட்டும் அசைத்தான்.

சிந்து விடுவதாக இல்லை. “அவங்களுக்குள்ளே எதாவது பகையா, இல்லை பணம் எதாவது எதிர்பார்த்து அந்த ஆள் கடத்தினானா?”

உதய் தர்மசங்கடத்தில் இருந்தான். க்ரிஷ் வெளியாட்கள் யாரிடமும் விஸ்வம் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சொல்லக்கூடாது என்று முன்பே அவனிடம் எச்சரித்திருந்தான். ஆனால் சிந்து வெளியாள் அல்ல, அவள் அவன் மனைவியாகப் போகிறவள். அவளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதால் அவளிடம் சுருக்கமாகவாவது சொல்வது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

(தொடரும்)
என்.கணேசன்




5 comments:

  1. நன்றி அய்யா...
    தீபாவளி வாழ்த்துக்கள்....
    தங்களின் பரம ரசிகன்...

    ReplyDelete
  2. Happy Deepavali ji. Thanks for the bonus. Novel is going jet speed. Vera level.

    ReplyDelete
  3. சிந்து பற்றி இத்தனை தகவல் தெரிந்த இலுமினாட்டி குழு. Account ல் வந்த பெரியத் தொகை தெரிந்திருக்குமே...

    ReplyDelete
  4. பீஸா பாய் தப்பி செல்வது முதல் விமானம் ஏறுவது வரையிலான காட்சி அற்புதம்....
    விஸ்வம் பழைய நிலையை எட்டி விட்டான்...இனி கதை சூடு பிடிக்கும்..

    ReplyDelete