சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 16, 2020

யாரோ ஒருவன்? 6


ரந்தாமன் நாதமுனிக்கு போன் செய்து நாகராஜ் அனுப்பியிருக்கும் தொகையைச் சொன்னார்.

நாதமுனி நாகராஜ் என்ற பெயர் சொல்லிக் கொண்டு வந்த மனிதன் உயிர்பிழைத்தாலும் கண்டிப்பாக பரந்தாமனுக்குப் பணம் அனுப்புவான் என்று சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் அந்தச் செய்தி அவருக்கும் வியப்பாகத் தான் இருந்தது. ஆனால் அவர் நண்பருக்காகச் சந்தோஷப்பட்டார். “பரவாயில்லை ஓய். லட்சுமி உம்மைத் தேடி வந்திருக்கிறாள். சந்தோஷப்படும்

எனக்கென்னவோ அவன் தவறுதலாய் அனுப்பியிருப்பானோன்னு சந்தேகமாய் இருக்கு. 13456-90க்குப் பதிலா தவறுதலாய் 13,45,690ஆ அவன் அனுப்பிச்சுட்டானோ என்னவோ? அவன் கிட்ட போன் நம்பர் வாங்கியிருந்தால் போன் செஞ்சு சொல்லியிருக்கலாம்....”

தவறாய் அனுப்பியிருந்தால் அவனோ அல்லது பேங்க் காரனோ உம்மைக் கூப்பிடுவாங்க ஓய். கவலைப்படாதீரும். எனக்கென்னவோ சரியாய்த் தான் அனுப்பி இருப்பான்னு தோணறது. யோசிச்சுப் பாரும். அவனே பெரிய தொகையாய் அது மாறியிருக்குன்னு உம்ம கிட்ட சொல்லியிருக்கான். பூர்விக சொத்து வித்த பணத்துல இருந்து தான் அவன் அதைத் தர வேண்டியிருந்ததுன்னா அது சின்னத் தொகையாய் இருக்க வாய்ப்பே இல்லை. அதுமட்டுமில்லாமல் ரிலையன்ஸ் ஷேர்ஸ் எல்லாம் இத்தனை வருஷத்தில் இந்த அளவுக்குத் தாராளமாய் உயர்ந்திருக்கலாம் ஓய். அதுமட்டுமில்ல பதிமூனு லட்சமோ, பதிமூனு லட்சத்து நாற்பதாயிரமோ அனுப்பாமல் ஏதோ கணக்குப் போட்டு அறுநூற்றுத் தொன்னூறு ரூபாய் கூட விடாமல் கரெக்டாய் அனுப்பிச்சிருக்கான். எல்லாரும் பணம் போனா பதட்டப்படுவாங்க. நீர் பணம் வந்ததற்குப் பதட்டப்படறீர். பிழைக்கத் தெரியாத ஆளாய் இருக்கீரே.”

அவர்  முன்பு சந்தேகப்பட்டது போல் அல்லாமல் நாகராஜ் என்பவன் உண்மையாகவே பணம் அனுப்பும் உத்தேசத்தில் தான் பரந்தாமனிடம் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டிருக்கிறான்.  ஆனாலும் அவரது மற்ற சந்தேகங்களை இது தீர்த்து வைப்பதாக இல்லை.

அந்த அதிகாலை நேரத்திலும், வீட்டுக்குள்ளே கூட அந்த நாகராஜ் கருப்புக் கண்ணாடியைக் கழற்றாமல் இருந்தது அவருக்கு இன்னும் சந்தேகத்தையே ஏற்படுத்தியது. கண்ணாடியைக் கழற்றினால் இவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று பயந்தே அவன் கருப்புக் கண்ணாடி போட்டிருந்தது போல் இருந்தது. பூனைக்கண் அல்லது கண்ணுக்கு அருகில் எதாவது தழும்பு இருப்பவனாக அவன் இருக்கலாம்பணம் அனுப்பும் உத்தேசத்தோடு அவனுக்கு மாதவனின் சூட்கேஸில் என்னவெல்லாம் இருந்திருக்கிறது என்று பார்க்கும் உத்தேசமும் இருந்திருக்கிறது. எதைத் தேடி அவன் வந்தான்? சூட்கேஸில் இருந்து எதையும் அவன் எடுக்கவில்லை என்று பரந்தாமன் சொல்கிறார். அப்படி எதையும் எடுக்காமலும், கிடைக்காமலும் கூட அவன் அவருக்கு அந்தப் பணம் அனுப்பி இருக்கிறான் என்பது ஆச்சரியமாக இருந்தது. எல்லாவற்றையும் விடக் குழப்பியது அந்தக் காரின் பின் சீட்டில் படம் எடுத்து நின்ற நாகப்பாம்பு. பாம்புகள் குறித்து ஆராய்ந்து எழுதி டாக்டர் பட்டம் வாங்கியிருக்கும் அவருக்கே உண்மை எதுவாக இருக்கும் என்று தெரியவில்லை. ’ஆதிவாசிகள் அல்லது காட்டுவாசிகள் பாம்புடன் பயணம் போகலாம். அவனைப் போன்ற பணக்காரன் அப்படி வந்திருப்பான் என்பதை நம்ப முடியவில்லை. அந்தப்பாம்பு காரிலேயே எங்காவது இருக்கிறதா இல்லை வெளியேறி விட்டதா தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அவனுக்கு ஆயுசு கெட்டி தான். பாவம் மாதவனைப் போல இல்லை…’ நாதமுனி பெருமூச்சு விட்டார். மாதவனை நினைக்கையில் வருத்தமாக இருந்தது. மாதவன் மரணம் இயல்பாய் இருக்கவில்லை. இங்கிருந்து அவனும், அவன் நண்பர்கள் சரத்தும், கல்யாணும் வட இந்தியாவில் மணாலி போனார்கள். அங்கே பனிப்பொழிவை ரசித்து விட்டு அருகில் உள்ள மலைகளில் ட்ரெக்கிங் போவதாகச் சொல்லி விட்டுப் போனார்கள். அங்கிருக்கையில் ஒரு நாள் ட்ரெக்கிங் போகக் கிளம்பும் போது மாதவனின் ஷூ பிய்ந்திருந்ததாகவும் அவன் புதிய ஷூ வாங்கிச் சீக்கிரம் வருவதாகச் சொல்லி ஒரு டாக்சியில் போனதாகவும் சொன்னார்கள். வழியில் திடீரென்று டாக்சி வெடித்துச் சிதறி மாதவன் முழுவதுமாகக் கருகி இறந்து விட்டான். படுகாயங்களுடன் தப்பித்த  டாக்சி டிரைவர் தன் பயணியின் அடையாளங்களைச் சொல்லி இருக்கிறான். அவன் சொன்னதும், இறந்த இடத்தில் கிடந்த பாதி கருகியிருந்த மாதவனின் டிரைவிங் லைசென்ஸும் மாதவனை அடையாளம் காட்டின. அவனோடு டாக்சியில் போகாமல் இருந்த அவன் நண்பர்கள் சரத்தும், கல்யாணும் நாதமுனிக்கு ஏனோ அப்போதே நிறைய சந்தேகத்தைக் கிளப்பினார்கள்….  

இப்போதும் அவருக்கு அவர் வீட்டில் மாதவனும், அவன் நண்பர்களும் ஒரு நாள் நள்ளிரவு வரை அமர்ந்து கொண்டு நாகங்களைப் பற்றியும், நாகரத்தினத்தைப் பற்றியும் அவர் சொல்வதை எல்லாம் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருக்கும் காட்சி நினைவுக்கு வந்தது. எல்லோர் முகத்திலும் பிரமிப்பு தெரியும். அவரவர் மனதில் எழும் சந்தேகங்களை அவர்கள் கேட்டுக் கொண்டிருக்க அவரும் எத்தனையோ நூல்கள், ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி நேரம் போவது தெரியாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்…

அவன் இறந்து இருபத்தியிரண்டு வருடங்கள் கழித்து இப்போது நாகப்பாம்பு பின் சீட்டில் இருக்க, வந்திருக்கும் நாகராஜ் உண்மையில் எதற்கு வந்திருப்பான்?


ரேந்திரனின் தந்தை மகேந்திரன் கடைசியாக ஏற்றுக் கொண்டிருந்த வழக்கு அஜீம் அகமது என்ற ஒரு சர்வதேசத் தீவிரவாதியினுடையதாக இருந்தது. அந்தச் சமயத்தில் அந்தத் தீவிரவாதியின் வயது 23 தான் என்றாலும் அப்போதே அவன் மிகவும் பிரபலமானவனாக இருந்தான்.  அவன் வெடிகுண்டுகள் தயாரிப்பதில் மிக வல்லவனாக இருந்தான். நவீன நுட்பங்களைப் புகுத்திப் பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடிய குண்டுகளைத் தயாரிப்பதில் அவனுக்கு இணை இல்லை என்றுராவின் குறிப்பு தெரிவித்தது.   பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் எல்லையில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த அஜீம் அகமதுக்குத்  தீவிரவாதிகளுடன்  தொடர்பு பன்னிரண்டு வயது முதலே ஏற்பட்டிருந்தது. பதினாறு வயதிற்குள் வெடிகுண்டு தயாரிக்கும் நுட்பங்களை முழுமையாக அவன் கற்றிருந்தான். சாதாரணமாக மனிதர்கள் உபயோகப்படுத்தும் பொருட்களில் மறைத்து வைக்கும்படியான வெடிகுண்டுகளை அவன் மிகவும் கச்சிதமாகத் தயாரிக்க முடிந்தவனாக இருந்த அவன் முதலில் பாகிஸ்தானில் மட்டும் பிரபலமாக இருந்து பிறகு உலகநாடுகளிலும் பிரபலமாக ஆரம்பித்தான்..  இந்தியா, ஆப்கானிஸ்தான், ரஷியா, ஈராக், சிரியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவனுடைய வெடிகுண்டுகள் பெரும் சேதத்தை விளைவித்திருந்தன. இந்தியா, ரஷியா, அமெரிக்கா- இந்த மூன்று நாடுகளும் அவனைப் பிடித்துத் தந்தால் பெருந்தொகையைப் பரிசாக அறிவித்தும் இருந்தன. ஆனால் அவன் இதுவரை பிடிபடவில்லை. அதற்குக் காரணம் அவன் திறமையும், எல்லா நாடுகளிலும் அவனுக்கு முக்கியஸ்தர்களுடன் இருந்த தொடர்புகளும் என்று சொல்லப்பட்டதுஅவனுக்கு வேறு ஐந்து பேர்களில் பாஸ்போர்ட்கள் இருப்பதாகவும் கூடச் சொல்லப்பட்டது.

இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன் அவன் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாகத் தகவல் கிடைத்தவுடன்ராஅவனைக் கண்டுபிடிக்கும் வேலையை மகேந்திரனிடம் தந்தது. அவருக்கு உதவி செய்ய சஞ்சய் ஷர்மா என்ற இளம் அதிகாரியையும் நியமித்திருந்தது.  அந்த வேலையைப் பற்றியோ அந்த உதவி அதிகாரியைப் பற்றியோ மகேந்திரன் மனைவியிடம் கூடத் தெரிவித்திருக்கவில்லை. அதனால் நரேந்திரன் இந்த ஃபைல் மூலமாகத் தான் எல்லாமே இப்போது அறிந்து கொண்டிருக்கிறான். படித்து முடித்த போது தந்தையின் கூர்மையான அறிவுத் திறன் பற்றியும், தெளிவான திட்டங்கள் பற்றியும் அவனால் அறிய முடிந்தது.

மகேந்திரன் அஜீம் அகமது குறித்து ஏராளமான தகவல்களை ஐந்து மாத காலத்தில் சேகரித்திருந்தார். அவனை நேரில் சந்தித்தவர்களிடமிருந்தும், அவன் பற்றிய தகவல்கள் அறிய முடிந்தவர்களிடமிருந்தும் அவர் அவன் வாழ்க்கை வரலாறையும், விசேஷ குணாதிசயங்களையும் அறிந்து அதைத் தொகுத்து வைத்திருந்தார். அவற்றைப் படிக்கையில் அஜீம் அகமது என்ற மனிதனை ஆழமாகவே அறிந்து கொண்ட திருப்தி நரேந்திரனுக்குக் கிடைத்தது.

மகேந்திரன் அஜீம் அகமது இந்தியா வந்த பின்னரான நடவடிக்கைகளை எப்படி அறிந்தார் என்று எழுதி வைத்திருந்தார். ஒவ்வொரு வேலையைச் செய்யப் போகும் முன் ஒரு குறிப்பு, போய் அறிந்து வந்த பின் ஒரு குறிப்பு என்று வழக்கு படிப்படியாக முன்னேறிய விதம் அதில் இருந்ததுஇறுதியில் விசாரணைக்கு மணாலிக்குப் போவதாய் அவர் கையால் எழுதிய ஒரு குறிப்பு அந்த ஃபைலில் இருந்ததுஅதுவே அவருடைய கடைசிக் குறிப்பு. அதன் பிறகு சஞ்சய் ஷர்மா தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்ற ஒற்றைக் குறிப்பை மட்டும் எழுதி இருந்தான். அதன் பின் உயர் அதிகாரிகள் தான் குறிப்பு எழுதி இருந்தார்கள். அஜீம் அகமது இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று விட்டதாக நம்பத் தகுந்த தகவல் கிடைத்திருப்பதால் இந்த வழக்கு மூடப்படுகிறது என்று எழுதி அடிஷனல் செகரட்டரி, ஜாயிண்ட் செகரட்டரி இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டு இருந்தார்கள். அவர்கள் இருவரும் ரா தலைவருக்கு அடுத்த நிலைத் தலைவர்கள். அதில் மகேந்திரன் பற்றியோ, சஞ்சய் ஷர்மா பற்றியோ எந்த ஒரு குறிப்பும் இல்லை.


(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. Mystery deepens. Something fishy happened in Manali. What is that?

    ReplyDelete
  2. மணாலியில் தான் மாதவனும் இறந்திருக்கிறான். இங்கே நரேந்திரன் கேஸைக் கையில் எடுத்தவுடன் எவனோ அவசர அவசரமாக பழைய எதையோ தேடி மாதவன் வீட்டுக்கு வந்திருக்கிறான். சுவாரசியம் கூடுகிறது. சீக்கிரம் நாவல் ரிலீஸ் பண்ணிடுங்க கணேசன் சார். ஒரேயடியாய் படிச்சு முடிக்க ஆர்வமாயிருக்கு.

    ReplyDelete
  3. சார் செம த்ரில்லிங் அசின் மகேந்திரன் மாதவன் இப்ப வந்திருக்கிற நாகராஜ் இவங்க எல்லாருககும் நிச்சயமா தொடர்பிற்கு சரத் கல்யாண் அந்த நாகராஜ் அலைஸ் அஜிம் கிட்ட பணம் வாங்கி பெரிய ஆளா ஆயிட்டாங்க மாதவன் ஏதோ ஒரு தடயம வைத்திருக்கிறான் கட்டாயம் அதை நரேந்திரன் கண்டுபிடித்துவிடுவான் என்பதற்காக நாகராஜா வேஷம் போட்டு அஜிம் வந்திருக்கான்என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  4. அப்போது மாணாலியில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது... இறந்தவன் யார் என்று தெரியவில்லை....

    ReplyDelete
  5. When will you release the book?

    ReplyDelete