சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 17, 2020

சத்ரபதி 112


சிவாஜி வெளியேறிய விதத்தைக் கண்ட ஔரங்கசீப்பின் கண்களில் அனலும் முகத்தில் கடுமையும் தெரிந்ததைப் பார்த்த ராம்சிங் இந்தக் கடுங்கோபம் சிவாஜிக்கு ஆபத்து என்பதைப் புரிந்து கொண்டு சக்கரவர்த்தியைப் பணிவுடன் வணங்கிச் சொன்னான்.

“சக்கரவர்த்தி, மலைவாழ் பகுதியிலேயே பிறந்து வளர்ந்த சிவாஜிக்கு நம் தர்பார் பழக்க வழக்கங்கள், மரியாதைகள் குறித்து தெரியவில்லை. அதனால் தயவு செய்து அவரை மன்னிக்கும்படி தங்களை வேண்டிக் கொள்கிறேன். அதைக் கற்பித்து இங்கே நான் அழைத்து வந்திருக்க வேண்டும். அதைச் செய்யாததால் தவறு என் மீதும் இருக்கிறது. தனியாக சிவாஜிக்கு நான் அனைத்தையும் விளக்கிக் கற்பிக்கிறேன். ஆகவே சிவாஜியின் இன்றைய நடவடிக்கையினை மன்னித்து விடும்படி நான் தங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்….”

ஔரங்கசீப் “யோசிக்கிறேன். அது வரை சிவாஜி தங்கியிருக்கும் மாளிகைக்குப் பலத்த காவல் இருக்கட்டும்” என்று ராம்சிங்கிடம் சொல்லிவிட்டு ”தர்பார் கலைகிறது” என்று அறிவித்தான்.   


சிவாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்த மாளிகை தாஜ்மஹாலுக்கு அருகில் இருந்தது. ஐயாயிரம் வீரர்கள் கொண்ட முகலாயர் காவல் படை அந்த மாளிகையைச் சூழ்ந்திருந்தது. ஆனாலும் கூட ஔரங்கசீப் அந்த மாளிகையில் எந்த வசதிக்கும் குறை வைக்கவில்லை.   ராம்சிங் ஔரங்கசீப்பிடம் சிவாஜிக்காக மன்றாடியபடியே, சிவாஜியிடமும் ஔரங்கசீப்புக்காகப் பரிந்து பேசினான்.

“அரசே. உங்களது சுயமரியாதை எனக்குப் புரிகிறது. அதை நான் பாராட்டவும் செய்கிறேன். ஆனால் முகலாயச் சக்கரவர்த்திக்கும் கௌரவமும், ஆளுமையும் இருக்கிறது என்பதையும், அவர் உதாசீனப்படுத்தப்படுவதை அவரும் ரசிக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய தர்பாரில் அவர் பணிவை எதிர்பார்ப்பது இயற்கையே…”

சிவாஜி சொன்னான். “தரை வரை ஒருவன் பணியலாம் ராம்சிங் அவர்களே. ஆனால் அதற்கு மேலும் பணிவது சுயமரியாதை இருக்கும் எந்த வீரனாலும் முடியாதது……”

ராம்சிங் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தான். இருவர் பக்கமும் அவரவர் நியாயங்கள் இருக்கின்றன. இருவருமே தங்கள் தரப்பு நியாயங்களை மட்டுமே பேசுகிறார்கள். இதில் யாருடைய நியாயம் அதிக நியாயம் என்று யார் தான் தீர்மானிப்பது? முகலாயச் சக்கரவர்த்தியின் முடிவு எப்படி இருக்கும் என்று அவனால் யூகிக்க முடியவில்லை.


ரங்கசீப்புக்கும் ஒரு முடிவை எட்டுவது சுலபமாக இருக்கவில்லை. காரணம் அவனுக்கு மிக நெருக்கமானவர்களிலேயே சிலர் சிவாஜிக்கு ஆதரவாகவும், சிவாஜிக்கு எதிராக சிலரும் அவனிடம் பேசினார்கள்.

அவனுடைய பிரியமான மூத்த மகள் ஜெப் உன்னிசா பேகம் தந்தையிடம் சிவாஜிக்கு ஆதரவாகப் பேசினாள். “தந்தையே. சிவாஜி ஒரு மாவீரன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படியே நடந்து கொண்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. அடிமைகளையே கண்டு பழக்கப்பட்டு விட்டதால் தான் உங்களுக்கு அவனுடைய செயல்கள் அதீதமாகத் தோன்றுகிறது….” கவிதைகளிலும், கதைகளிலும் மிக ஈடுபாடு கொண்டிருந்த அவளுக்கு இலக்கியங்களில் காணும் கதாநாயகனாக சிவாஜி தோன்றியிருந்தான்.

அவள் தன் தங்கை ஜீனத் உன்னிசாவிடம் கேட்டாள். “நீ என்ன நினைக்கிறாய் சகோதரி?”


ஔரங்கசீப்பின் இரண்டாம் மகள் ஜீனத் உன்னிசா அதிகம் பேசுபவள் அல்ல. எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்பாளேயொழிய கருத்து சொல்பவளுமல்ல. அவள் “எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை அக்கா”. இந்த ஒரு பழக்கத்தினாலேயே அவள் மீது யாருக்கும் பகை இருந்ததில்லை


ஔரங்கசீப்பின் அன்புக்குப் பாத்திரமானவளும், தற்போதைய பாதுஷா பேகமுமான ரோஷனாராவுக்கு மற்றவரை அடக்குவது பிடித்த பொழுதுபோக்காக  இருந்தது. அதிலும் அடங்க மறுப்பவரை அடக்கி வெற்றி காண்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சாதித்துக் காட்டுவதில் அலாதி இன்பம் காணக்கூடியவள் அவள். அவள் தம்பியிடம் சொன்னாள். “சிவாஜிக்குக் கடுமையான தண்டனையை நீ வழங்கா விட்டால் இனிப் பலரும் முகலாயச் சக்கரவர்த்திக்குப் பெரிய மரியாதையை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்க ஆரம்பித்து விட வாய்ப்பிருக்கிறது சகோதரா. அதை நீ அனுமதிக்கக் கூடாது. அவனுக்குக் கடும் தண்டனை தந்து மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையையும் பயத்தையும் நீ ஏற்படுத்தி விட வேண்டும். அவனைத் தண்டிக்க நீ காரணங்களைத் தேடிப் போக வேண்டியதில்லை. தர்பாரில் உனக்கு அவமரியாதையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் முன்பே நம் மாமனின் விரல்களையும், மாமன் மகன் உயிரையும் களைந்த குற்றத்தைச் செய்தவன் அவன்… அவனை நீ சிரத்சேதம் செய்தால் கூட தவறில்லை…”


ஔரங்கசீப்பின் மூத்த சகோதரி ஜஹானாரா பேகம் தந்தையின் மறைவிற்குப் பிறகு சகோதரனிடம் ஓரளவு பழைய செல்வாக்கைப் பெற்று இருந்தாள். அவள் ஔரங்கசீப்பிடம் சொன்னாள். “சகோதரனே. ராஜா ஜெய்சிங் சிவாஜியின் பாதுகாப்புக்காகத் தனிப்பட்ட உத்திரவாதம் அளித்து அவனை இங்கே அனுப்பி இருப்பதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. நீ சிவாஜியைத் தண்டித்தால் ராஜா ஜெய்சிங் உனக்கு எதிராக மாற வாய்ப்பு இருக்கிறது. அவன் பின்னால் மற்ற ராஜபுதன அரசர்களும் சேர்ந்து கொள்ளலாம். வேறு யாரெல்லாம் அவன் பின் சேர்கிறார்களோ நமக்குத் தெரியாது. ஒருவனைத் தண்டிக்கப் போய் பலர் எதிர்ப்பை நீ சம்பாதித்துக் கொள்வது புத்திசாலித்தனமாக எனக்குத் தோன்றவில்லை.”

வேறிருவர் ஔரங்கசீப்பிடம் சொன்னார்கள். “சிவாஜி என்ற மலை எலி நம்மிடம் மாட்டி இருக்கிறது. அவனை அழிக்கக் கிடைத்த இந்த ஒரு வாய்ப்பை நாம் நழுவ விட்டால் இனி ஒரு வாய்ப்பு கிடைக்காது. இதைப் பயன்படுத்தி அவனை அழிப்பதே ராஜ தந்திரம்….”

ஔரங்கசீப்பால் உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை. மிக எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய விஷயம் என்பதால் எல்லோர் கருத்தையும் கேட்டுக் கொண்ட அவன் அவசர முடிவை எடுப்பதைத் தவிர்த்தான். நீண்ட நேரம் ஒவ்வொரு முடிவின் பின்னும் இருக்கக்கூடிய லாப நஷ்டங்களைத் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.



றுநாள் சிவாஜியின் அமைச்சர் ரகுநாத் பந்த் அவனிடம் அனுமதி பெற்று அரசவையில் பேச வந்தார். தரை தாழ மூன்று முறை எந்தச் சங்கடமும் இல்லாமல் வணங்கிய அவர் பணிவாகவும் ஆணித்தரமாகவும் பேசினார்.

“ஹிந்துஸ்தானத்தின் மிகச் சிறந்த சக்கரவர்த்தியே. தங்கள் புகழ் திக்கெட்டும் பரவி இருக்கிறது. அந்தப் புகழிற்குக் களங்கம் வந்து விடக்கூடாது என்று அடியேன் ஆசைப்படுகிறேன். தங்களிடம் ஒரு அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு அந்த அமைதி ஒப்பந்தத்தின் ஷரத்துகளை நிறைவேற்ற தாங்கள் கேட்டுக் கொண்டபடி பல கோட்டைகளை ஒப்படைத்து விட்டுக் கடைசியாக தங்கள் அழைப்பின் பேரில் தங்களை நம்பிப் புறப்பட்டு வந்தவர் எங்கள் அரசர் சிவாஜி. தங்கள் விருந்தாளியாக வந்தவருக்கு ஆரம்பத்திலேயே முறையாக, அவர் அந்தஸ்துக்கு இணையான ஒருவர் மூலம் வரவேற்பு அளிக்கப்படவில்லை. ஆனாலும் அவர் அதைப் பெரிதுபடுத்தவில்லை. இங்கும் அவர் அந்தஸ்துக்கு இணையான இருக்கை தரப்படவில்லை. இதை எல்லாம் நான் குற்றமாகக் கூறுகிறேன் என்று தயை கூர்ந்து தாங்கள் நினைத்து விடக்கூடாது. மரியாதை தருவதில் எங்கள் அரசர் தவறியிருக்கிறார் என்று இந்த அரசவை நினைக்கிறது என்றால் தவறு இருபக்கமும் நிகழ்ந்திருக்கிறது என்பதையே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அப்படி இரு பக்கமும் தவறு நிகழ்ந்திருக்குமானால் ஒரு பக்கம் மட்டும் தண்டிக்கப்படுவது என்ன நியாயம். ராஜ்ஜியத்துக்கு மட்டுமல்ல. நீதிக்கும் இங்கே தாங்களே அரசர். நீதியை நிலைநாட்ட வேண்டிய தாங்கள் பிழைத்து விட்டதாகச் சரித்திரம் பதிவு செய்து தங்கள் புகழுக்குக் களங்கம் விளைவித்து விடக்கூடாது என்று ஆதங்கத்தில் தங்களிடம் பேச வந்திருக்கிறேன்….”

”அது மட்டுமல்ல சக்கரவர்த்தி. தெற்கில் தக்காணத்தில் எங்கள் அரசர் அலட்சியப்படுத்தி விட முடியாத சக்தியாக உருவாகி இருக்கிறார் என்பதை பேரறிவாளரான நீங்கள் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட சக்தியைச் சிறைப்படுத்தி நீங்கள் காணப்போகும் பலன் தான் என்ன? உங்களுடன் சேர்ந்து கொள்வதற்காக சமாதான ஒப்பந்தம் செய்து விட்டு வந்த அவரை உங்களைத் தக்காணத்தில் பலப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்துவது அல்லவா தங்களுக்கும் இலாபம். இன்னும் பீஜாப்பூர், கோல்கொண்டா ராஜ்ஜியங்கள் தக்காணத்தில் அவ்வப்போது தங்களுடைய சாம்ராஜ்ஜியத்திற்குத் தலைவலியாகவே இருக்கின்றன. எங்கள் அரசருடன் சேர்ந்து அவர்களை நிரந்தரமாக அடக்கி வைக்கும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்கள் பிரதிநிதியாக எங்கள் அரசர் இனி ஒரு போதும் அவர்கள் மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்வார். உங்கள் ராஜ்ஜியத்தின் வலிமையை அதிகரித்து உறுதிப்படுத்திக் கொள்ளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அவரை விடுவித்து தக்காணத்திற்கே திரும்ப அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்….”


ஔரங்கசீப் அமைதியாக அந்தப் பேச்சை முழுவதுமாகக் கேட்டான்.  பின் அமைதி மாறாமல் பதில் அளித்தான். “அமைச்சரே. நீதி உணர்ச்சி இந்த அரசவையில் உறுதியாக இருக்கும் ஒரே காரணத்தினால் தான் உங்கள் அரசர் எங்கள் சிறைச்சாலையில் இல்லாமல் இன்று மாளிகைக் காவலில் இருக்கின்றார். எங்களுக்கு எதிராக எத்தனையோ முறை நடந்து கொண்ட உங்கள் அரசரின் செயல்களை நான் பட்டியல் இட வேண்டியதில்லை. அதை நீங்களும், நாங்களும், இந்த உலகமுமே நன்றாக அறியும். அத்தனை இருந்தும் உங்கள் அரசர் சமாதானத்தை நாடிய போது நாங்கள் பழையவற்றை மறந்து நட்புக்கரம் நீட்டினோம். இந்த ராஜ்ஜியத்தின் வலிமையை உறுதிப்படுத்திக் கொள்ள அவரை விடுவித்து தக்காணத்திற்குத் திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டீர்கள். இந்த ராஜ்ஜியத்தின் வலிமைப்படுத்துவது தங்களுடைய உண்மையான நோக்கமானால் நான் உங்கள் அரசரை இன்றே விடுவிக்கத் தயார். அவர் தக்காணத்திற்குத் திரும்புவதை விட வடக்கே கந்தஹார் பகுதிக்கு எங்கள் பிரதிநிதியாகச் செல்லட்டும். அங்கே எங்கள் எதிரிகளை அடக்கி இந்த ராஜ்ஜியத்தின் வலிமை காத்துத் தங்கட்டும். தெற்கே தக்காணத்திற்கு உங்கள் இளவரசன் சாம்பாஜி திரும்பட்டும். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களுக்குத் தெற்கில் உங்கள் பகுதிகளும் எங்கள் எதிர்ப்பில்லாமல் மிஞ்சும். வடக்கில் எங்கள் ராஜ்ஜியத்தை பலப்படுத்தும் சேவகத்தில் அளவில்லாத செல்வமும் கிடைக்கும். இருவருக்கும் இலாபமான இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டால் எல்லாவற்றையும், மறந்து மன்னித்து உங்கள் அரசரை இந்தக் கணமே விடு்விக்கிறேன். உங்கள் அரசரிடம் கலந்தாலோசித்து பதில் அளியுங்கள்”

(தொடரும்)
என்.கணேசன் 

3 comments:

  1. Feel sad for Sivaji. You have brought out the political drama of those times very well in this novel.

    ReplyDelete
  2. ஔரங்கசீப் ஒரு முடிவோடு தான் இருக்கிறான்...போல....
    சிவாஜியை ஏதேனும் ஒரு வழியில் தண்டிப்பது இல்லையெனில் சிவாஜியின் பலத்தை பயன்படுத்தி தன் செல்வாக்கை உயர்த்திக் கொள்வது....

    இதில் சிவாஜியின் முடிவு என்னவோ🤔...?

    ReplyDelete
  3. https://www.youtube.com/watch?v=knEIw1QPlJ4

    ReplyDelete