சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, February 19, 2020

தவம் என்றால் என்ன?


கவத்கீதை இந்த உலக மானிடர்களுக்குச் சொல்லப்பட்டது. கேள்விகளைக் கேட்டது அர்ஜுனன் என்றாலும் அவன் மானிட இனத்தின் பிரதிநிதியாகவே மனதில் எழும் சந்தேகங்களை எல்லாம் கேட்கின்றான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவை எல்லாம் சிந்திக்க முடிந்த மனிதன் மனதில் எழும் குழப்பங்களின் வெளிப்பாடுகள். அதே போல ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் பதில்களும் அர்ஜுனன் என்ற தனிமனிதனுக்குத் தரும் பதில்கள் அல்ல. நம் அனைவருக்கும் சொல்கிற உபதேசம் தான். நம் மனதில் எழும் குழப்பங்களை நீக்கி ஞானத்தையும், வெற்றியையும், அமைதியையும் நோக்கி நம் வாழ்க்கையை நடத்திச் செல்ல உதவும் விதமாக அமைந்துள்ள பதில்கள் அவை.

அந்த வகையில் தவம் என்றால் என்ன என்று ஸ்ரீகிருஷ்ணர் அடுத்தபடியாக விளக்குகிறார்.    

தேவர்கள், அந்தணர்கள், ஆச்சாரியர்கள், ஞானிகள் ஆகியோரைப் பூஜித்தல், தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியம், அஹிம்சை ஆகியவை உடலால் செய்யும் தவமாகும்.

பிறர் மனத்தைத் துன்புறுத்தாத, இனிமையும், பயன்படுவதும், உண்மையானதுமான - பேச்சும், வேதமோதுவதும் வாக்கினால் செய்யப்படும் தவமாகும்.

மனமகிழ்ச்சி, அமைதியான இயல்பு, மௌனம், ஆத்மாவைத் தவிர வேறொன்றும் நினைக்காமை, உள்ளத் தூய்மை- இவையெல்லாம் மனத்தால் ஆற்றும் தவமாகும்.

தவ வாழ்க்கை என்றாலே காட்டிலும், மலையிலும் தனியாகச் சென்றமர்ந்து செய்யும் சாதகமாகத் தான் நம்மில் பலரும் விளங்கிக் கொண்டிருக்கிறோம். அது துறவிகளுக்கும், முனிவர்களுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் விஷயமாக நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் தவம் என்பது உடல், பேச்சு, மனம் இந்த மூன்றிலும் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய உயர் ரக வாழ்க்கை முறையாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

தேவர்கள், அந்தணர்கள், ஆச்சாரியர்கள், ஞானிகள்இந்த நான்கு வகையினரையும் பூஜித்தல் என்பதில் அந்தணர்களைச் சேர்த்திருப்பதை ஒரு குறிப்பிட்ட ஜாதியை உயர்த்துவதாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு முறையான, சாத்வீகமான வாழ்க்கையை வாழும் பெரியோகளைப் பூஜிக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும். யாரும் பிறப்பால் உயர்வதில்லை. ஒவ்வொருவரும் வாழும் முறையாலேயே தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே மேலே சொன்ன  நான்கு வகை மனிதர்களையும் சேர்த்து, நமக்கு வழிகாட்டக்காட்டக் கூடிய உயர்ந்த நிலையில் இருப்பவர்களையும், வாழ்பவர்களையும் பூஜிக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்வது தான் சரி. அதோடு தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியம், அஹிம்சை இந்த நான்குமே உடலால் கடைப்பிடிக்கப்படும் தவத்தில் சேர்கின்றன.

பேச்சினால் மனிதன் செய்ய முடிந்த கொடுமைகளும் ஏராளம், நன்மைகளும் ஏராளம். அது ஒன்று சரியாக இருந்தாலே மனிதன் எத்தனையோ பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். அதனால் தான் அதை இங்கே தவத்தின் நிபந்தனையாகவே ஸ்ரீகிருஷ்ணர்  சொல்கிறார். சொல்லும் சொல்லில் இனிமை, பயன், உண்மை மூன்றும் இருக்க வேண்டும். அதே வேளையில் அது அடுத்தவரைத் துன்புறுத்தாதபடி இருக்க வேண்டும்.  உண்மையைச் சொல்கிறோம் என்ற பெயரில் அடுத்தவரை மனம் நோகச் செய்வது நம் உத்தேசமாக இருந்தால் அந்த உண்மையையும் நாம் தவறுக்கே பயன்படுத்துகிற மாதிரி ஆகி விடும். அதனால் உண்மையை இன்னொருவர் மனம் நோகப் பயன்படுத்துவதும் தவத்திற்கு எதிரானதே.

மனதால் செய்யும் தவத்திற்கு முதல் அவசியமாக ஸ்ரீகிருஷ்ணர் மகிழ்ச்சியைச் சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். மகிழ்ச்சியாக இரு என்கிறார். மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கின்ற சமயங்களில் மனிதன் அடுத்தவர்களைத் துன்புறுத்துவதில்லை. அடுத்தவர்களைத் துன்புறுத்துவதே மனதில் மகிழ்ச்சியில்லை என்பதன் வெளிப்பாடு தான். மகிழ்ச்சி என்பது நாம் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. பெரும்பாலான நேரங்களில் நாம் எதையும் எப்படிப் பார்க்கிறோம் என்பதை வைத்தே அது அமைகிறது.

அடுத்ததாக அமைதியான இயல்பையும் மௌனத்தையும் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். மௌனத்தை வாக்கினால் செய்யப்படும் தவத்தோடு சொல்லாமல் மனதினால் செய்யப்படும் தவமாகச் சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். மௌனம் மனதில் ஆரம்பிக்கப்பட வேண்டிய விஷயம். மனம் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்து உதடுகள் பிரியாமல் இருந்தால் அது மௌனமல்ல, வெறும் சத்தமில்லாமை மட்டுமே.

அந்த உள் மௌனம் எப்படி வரும்? ஆத்ம சிந்தனைகளிலேயே மனம் லயித்திருக்குமானால் தானாக மனம் மௌனமாகி விடும்.  அதனால் தான் அடுத்த நிபந்தனையாக ஸ்ரீகிருஷ்ணர் அதைச் சொல்கிறார். ஆத்மசிந்தனைகளிலேயே லயிப்பது எப்போது சாத்தியம்? மனம் தூய்மையாக இருந்தால் தான், அந்தச் சுத்தமான மனச்சூழலில் தான், ஆத்மசிந்தனைகளில் மனம் லயிப்பது சாத்தியம். இப்படி ஒன்றை ஒன்று ஒட்டியும், ஒன்றின் வெளிப்பாடாக இன்னொன்றும் இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

உடல், வாக்கு, மனம்  என்னும் இந்த மூன்று வகையிலும் மேலே சொன்ன அம்சங்கள் கடைப்பிடித்தால் மட்டுமே தவ வாழ்க்கை வாழ்வதாக அர்த்தம். அதற்குப் புறத் தோற்றங்களும், இருக்கின்ற இடங்களும் முக்கியமல்ல. காவி கட்ட வேண்டியதில்லை. தாடி வளர்க்க வேண்டியதில்லை.  மலையேற வேண்டும், காடுபுக வேண்டும் என்று எல்லாம் நிபந்தனை இல்லை. இருக்கின்ற இடத்திலேயே மேலே சொன்னவற்றைக் கடைப்பிடிக்க முயன்றால் அதுவே தவம்.  

பாதை நீளும்….
என்.கணேசன்

  

2 comments:

  1. காடுகளில் சுற்றி திரிந்து கஷ்டபடுவதை விட... உடல்,வாக்கு,மனம் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருப்பதே தவம்.... என்ற உண்மையை கிருஷ்ணர் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு👌👌👌👌....

    ReplyDelete
  2. Retnasamy Thankaiyan
    தவம் என்பது லட்சியத்தில் செலுத்தும் சிந்தனை. கலக்கமற்ற நிலை. ஆன்மீக தவம் இறைநிலையை அடையும் லட்சியம். ஆசையைத் துறந்து தூய நிலை அடைந்தால் இறை நிலை அடைய முடியும். வியாச முனிவர் இறை நிலைக்கு உதாரணம். அவர் கடவுளை மனிதனாகச் சித்தரித்து காட்டினார். கொடுக்கும் நிலையே கடவுள் நிலை. அதற்கு பக்குவப் படுத்துவதே ஆன்மீக தவம். வியாசர். வெற்றியடைந்தார். முஹம்மது தோல்வி அடைந்தார். அரபியில் பிறர் எழுதியதை கடவுளே எழுதியதாக நம்ப வைத்தார். என்னுடைய மின்னூல்கள் அமசானில் உள்ளன. வாழ்க்கை வீதியில் ஒரு நிலவு படியுங்கள்

    ReplyDelete