சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 10, 2020

சத்ரபதி 111


சிவாஜியை அழைத்து வரச் சொல்லி முக்லிஷ்கான் மூலமாக ராம்சிங்குக்கு ஔரங்கசிப் ஆணை பிறப்பித்த செய்தி கிடைத்தவுடன் தர்பாரில் பங்கு கொள்ள முடிந்த முக்கியஸ்தர்கள் தர்பாருக்கு விரைந்தார்கள். மற்றவர்கள் வெளியே வந்து குவிந்தார்கள். அந்தப்புரப் பெண்கள் ஆர்வத்துடன் திரைமறைவில் கூடினார்கள். ஔரங்கசீப்பின் அரியணை அருகே உருவிய வாள்களுடன் கூடுதல் காவலர்கள் நிறுத்தப்பட்டார்கள். அரியணை அருகில் ஔரங்கசீப் உடனடியாக உபயோகப்படுத்தும்படியாக ஐந்து விதமான ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஔரங்கசீப் இரும்புக் கவசம் அணிந்து அதன் மேல் மஸ்லின் ஆடைகள் அணிந்து வந்தான். முகலாய தர்பாரில் சிவாஜி எதாவது சாகசம் செய்ய எண்ணி இருந்தானானால் அதை முறியடிக்க அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டே ஔரங்கசீப் சிவாஜியை அழைத்து வரக் கட்டளை பிறப்பித்திருந்தான்.

சிவாஜியும், சாம்பாஜியும், ராம்சிங்கும் வரும் போது தெருக்களின் இருமருங்கிலும் கூடி இருந்த மக்களின் எண்ணிக்கை ராம்சிங்கை வியக்க வைத்தது. சிவாஜி பொதுமக்களிடையே இவ்வளவு பிரபலமாகி இருப்பான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. சிவாஜியை ஆர்வத்துடன் பார்த்த மக்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்.  அவனது கம்பீரமும், வீரநடையும் பார்த்த பின் அவனைப் பற்றிக் கேள்விப்பட்ட தகவல்கள் எல்லாம் பெரும்பாலும் உண்மையாகவே இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டார்கள்.

மூவரும் செல்வச்செழிப்பின் அடையாளமாக மின்னிய அரண்மனையை அடைந்தார்கள். தர்பாருக்குள் நுழையும் முன் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களை வெளியே வைத்து விட்டுப் போக வேண்டும் என்ற விதிமுறை இருந்ததால் ராம்சிங் வெளியே இருந்த காவலர்களிடம் தன் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டுப் பணிவுடன் சிவாஜியைப் பார்த்தான். சிவாஜியும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அமைதியாகத் தன் ஆயுதங்களை அந்தக் காவலர்களிடம் ஒப்படைத்தான். சாம்பாஜியும் அப்படியே செய்தான். மூவரும் உள்ளே நுழைந்தார்கள்.

தங்கத்திலும், வெள்ளியிலும், வெள்ளைப் பளிங்கிலும், சிவப்புக் கம்பளத்திலும், பாரசீக அழகிய வேலைப்பாடுகளிலும் அரண்மனை சிவாஜி இது வரை கண்டிராத அலங்காரத்துடன் மிக அழகாக ஜொலித்தது. கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட மயில் சிம்மாசனத்தில்  ஔரங்கசீப் கம்பீரமாக வீற்றிருந்தான். இந்தத் தர்பாரின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று பல சிற்றரசர்கள் ஆசைப்படுவதன் காரணம் சிவாஜிக்குப் புரிந்தது.

ஔரங்கசீப் உட்பட அனைவருடைய கண்களும் சிவாஜி மேல் தங்கி இருந்தன. சிவாஜி உள்ளே நுழைந்த போது அவனுக்கு முன்னால் இரண்டு முக்கியஸ்தர்கள் சக்கரவர்த்திக்கு அறிமுகம் செய்து வைக்கும் சடங்கில் காத்திருந்தார்கள். அரசவை அதிகாரி பக்‌ஷி ஆசாத்கான் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்க அவர்கள் மிகுந்த பக்தியுடன் அரியணையை நெருங்கினார்கள். இடது கையை மார்பிலும், வலது கையை நெற்றியிலும் வைத்து மூன்று முறை தரை தாழ மிகுந்த பணிவுடனும், பக்தியுடனும் அவர்கள் வணங்கினார்கள். பின் அரியணைக்குக் கீழ் அவர்கள் சக்கரவர்த்திக்குக் கொண்டு வந்திருக்கும் சன்மானங்களைப் பயபக்தியுடன் வைத்து மரியாதை செலுத்தினார்கள். பின் அந்த தர்பாரில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் சென்றமர்ந்தார்கள்.

அவர்கள் அறிமுகப்படுத்தப் பட்டாலும் ஔரங்கசீப்பின் கூர்மையான பார்வை சிவாஜி மீதே இருந்தது. சிவாஜியின் வீரநடையும், கம்பீரமும், கூர்மையான பார்வையும், அரண்மனை அழகில் பிரமித்து நின்ற விதமும், ஆனாலும் தோற்றத்தில் பணிவு தெரியாததும் ஔரங்கசீப்பின் பார்வைக்குத் தப்பவில்லை. மலை எலி என்று பலரால் அழைக்கப்பட்டாலும் வந்திருப்பது சிங்கம் தான் என்பதை அவன் தீர்க்கமாக உணர்ந்தான்.

சிவாஜியின் முறை வந்து பக்‌ஷி ஆசாத் கான் அவனை அறிமுகப் படுத்திய போது போது மற்றவர்கள் பார்வையும் கூர்மையாயின. அவன் முன் மற்றவர்கள் மற்ற அத்தனை பேரும் களையிழந்தது போன்ற உணர்வை ராம்சிங் உணர்ந்தான். அவனுக்கு சிவாஜி எப்படி நடந்து கொள்ளப் போகிறான் என்ற ஆர்வத்துடன், சரியாக ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்ற பதற்றமும் மேலோங்கி இருந்தது.

சிவாஜி இடது கையை மார்பிலும் வலது கையை நெற்றியிலும் வைத்து மூன்று முறை லேசாகத் தலை தாழ்த்தி ஔரங்கசீப்பை வணங்கினான். முதல் முறை வணங்கும் போது மானசீக வணக்கம் சிவனுக்காக இருந்தது. இரண்டாவது வணக்கம் அன்னை பவானிக்காக இருந்தது. மூன்றாவது வணக்கம் தந்தை ஷாஹாஜிக்காக இருந்தது. மனதில் வணக்கம் கடவுள்களுக்காகவும், தந்தைக்காகவும் இருந்ததால் வணக்கத்தில் பணிவு உண்மையாக இருந்தது.

தர்பாரில் சிறிது சலசலப்பு ஏற்பட்டதை ஔரங்கசீப் கவனித்தான். சிவாஜி சிறுவனாக இருந்த போது பீஜாப்பூரில் சுல்தான் முகமது ஆதில்ஷாவுக்கும் இதே போல் தான் வணக்கம் செலுத்தியிருக்கிறான் என்பதை ஔரங்கசீப் கேள்விப்பட்டிருந்தான். வளர்ந்த பின்னும் சிவாஜி மாறவில்லை என்று அவன் நினைத்துக் கொண்டான். ஆனால் பீஜாப்பூர் சுல்தானை விட நூறு மடங்கு சக்தி வாய்ந்த முகலாயச் சக்கரவர்த்திக்கும் அவ்வளவு தான் மரியாதை என்பது அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஓரளவாவது அவனைக் கட்டுப்படுத்தியது சிவாஜி மூன்று முறை தலைதாழ்த்தி வணங்கியதில் உண்மையாகத் தெரிந்த பணிவு தான். ஆனால் மானசீகமாய் சிவாஜி வணங்கியது தன்னையல்ல என்பதை அறிந்திருந்தால் ஔரங்கசீப்பின் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றிருப்பான்.

சிவாஜி சக்கரவர்த்திக்குக் கொண்டு வந்திருந்த தங்கக்காசுகளின் முடிச்சையும், பண முடிச்சையும் மற்றவர்களைப் போலவே அரியணைக்குக் கீழே வைத்து விட்டு நின்ற போது தன்னைச் சுதாரித்துக் கொண்டிருந்த ஔரங்கசீப் வறண்ட குரலில் நலம் தானே என்றும், பயணத்தில் தரப்பட்ட சௌகரியங்களில் குறைவில்லையே என்றும் கேட்டான்.

இரண்டிலும் குறை சொல்ல எதுவுமில்லாத சிவாஜி நலம் என்றும், தரப்பட்ட சௌகரியங்களில் குறைவில்லை என்றும் சொன்னான்.

அடுத்ததாக சாம்பாஜி அறிமுகப்படுத்தப்பட்டான். ஔரங்கசீப் சாம்பாஜிக்கு முக்கியத்துவம் எதுவும் தரவில்லை. சைகையால் ஒரு அதிகாரியை அழைத்து அவன் காதில் எதோ சொல்லிக் கொண்டிருந்தான். சாம்பாஜியும் தந்தை வணங்கியது போலவே வணங்கி நின்றான்.

முறையாக வணங்கத் தெரியாத சிவாஜிக்கும், சாம்பாஜிக்கும் தானும் முறையான மரியாதையைத் தரத்தேவையில்லை என்ற முடிவுக்கு வந்த ஔரங்கசீப் ராம்சிங்கைப் பார்த்து இரண்டாம் நிலை மன்சப்தார்கள், தளபதிகள் அமரக்கூடிய இருக்கைகள் பக்கம் இருவரையும் அழைத்துப் போய் அமர வைக்கும்படி சைகை காட்டினான்.

ராம்சிங் அழைத்துப் போகும் போது சிவாஜியின் இரத்தம் கொதித்தது. வேறு வழியில்லாமல் கோபத்தை அடக்கிக் கொண்டு சிவாஜி அவனைப் பின் தொடர்ந்தான், சாம்பாஜியும் தந்தையைப் பின் தொடர்ந்தான்.

சிவாஜியின் இருக்கைக்கு முன் அவனிடம் போரிட்டு ஒரு முறை தோற்று ஓடிய தளபதி ஒருவன் அமர்ந்திருந்ததைப் பார்த்து அவன் ஏளனமாக ராம்சிங்கிடம் சொன்னான். “இவர் முதுகை நான் ஒரு முறை போரிலேயே பார்த்திருக்கிறேன். மறுபடியும் அங்கேயும் இவர் முதுகைப் பார்க்க வைக்கிறீர்களே!”

அதைக் கேட்டுச் சுற்றியிருந்தவர்கள் சிலர் சிரிக்க, சிலர் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்ள ராம்சிங் தர்மசங்கடத்துடன் சிவாஜியிடம் ”தயவு செய்து பொறுமையுடன் இருங்கள். எல்லாவற்றையும் சரி செய்வோம்” என்று சிவாஜியின் காதுகளில் முணுமுணுத்து விட்டு நகர்ந்தான்.

ஔரங்கசீப்புக்கு சிவாஜி ஏதோ சொல்கிறான். அதற்கு சிலர் சிரிக்கிறார்கள், அங்கே சலசலப்பு நிலவுகிறது என்பது மட்டும் புரிந்தது. அருகில் இருந்த அதிகாரியிடம் “என்ன நடக்கிறது அங்கே?” என்று அவன் கேட்டான். அந்த அதிகாரி விரைந்து சென்று விசாரித்து விட்டு வந்து நடந்ததைத் தெரிவித்த போது ஔரங்கசீப்பின் இரத்தம் கொதித்தது.

முகலாய தர்பாருக்கு இது அவமரியாதை என்று நினைத்தவன் இனி சிவாஜிக்கு அந்த இரண்டாம் நிலை மரியாதையும் தேவையில்லை என்று தீர்மானித்து சிவாஜிக்கு வெற்றிலை பாக்கு தந்து அவனுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த மாளிகைக்கு அழைத்துச் செல்லும்படி  ராம்சிங்குக்கு ஆணையிட்டான்.

வெற்றிலை பாக்கு தருவது தர்பாருக்கு வந்த விருந்தினர் கிளம்பும் போது தான்.  அந்தச் சமயத்தில் விருந்தினர் சக்கரவர்த்திக்குத் தந்திருக்கும் சன்மானத்திற்குப் பதிலாகச் சில பரிசுகளையும் விருந்தினருக்கு சக்கரவர்த்தி தருவது வழக்கம். சிவாஜிக்குத் தர முன்பே பரிசுகளை எடுத்து வைத்திருந்தாலும் அவற்றைத் தர ஔரங்கசீப் ஆணையிடவில்லை. விருந்தினர் வந்து அமர்ந்தவுடன், பதில்பரிசுகளும் தராமல் வெற்றிலை பாக்கு தந்து வெளியே அனுப்பப்படுவது மிகுந்த அவமானம் என்று நினைத்தாலும் ஔரங்கசீப் முகத்தில் தெரிந்த சினத்தைக் கவனித்த ராம்சிங்குக்கு மறுத்து எதுவும் சொல்ல முடியவில்லை.


அவன் வெற்றிலை பாக்குடன் சிவாஜியை நோக்கிச் செல்ல சக்கரவர்த்தியின் கட்டளையை உணர்ந்த சிவாஜி எழுந்து வேகமாக தர்பாரை விட்டு வெளியேறினான். அவனை சாம்பாஜியும் பின் தொடர ராம்சிங் திகைத்து நின்றான். காரணம் முகலாய தர்பாரில் சக்கரவர்த்திக்கு முதுகு காட்டி வெளியேறும் வழக்கமில்லை. சக்கரவர்த்தியை வணங்கியபடியே பின்னுக்குச் சென்று வாசலை அடைந்த பிறகு தான் திரும்புவது வழக்கம். ஆனால் அவரை வணங்காமல் அவருக்கு முதுகு காட்டி வேகமாகச் சென்றது மூலம் சிவாஜி இன்னொரு பெரிய அவமரியாதையையும் செய்து விட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்  


3 comments:

  1. Exciting and very interesting. Good description. Felt as if I am in Aurangazeb's darbar.

    ReplyDelete
  2. இன்றைய பதிவின் முடிவு அடுத்த பதிவின் வரவை ஆவலுடன் எதிர்த்திருக்க வைத்து விட்டது. ஹும்..ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்

    ReplyDelete
  3. இவ்வளவு அவமான விசயங்கள் நடப்பதை பார்க்கும் போது.... சிவாஜி சாதாரண விருந்தினராக அழைக்கவில்லை.... ஏதேனும் சூழ்ச்சி செய்து சிவாஜியை வீழ்த்தவே அழைத்திருக்கிறார்கள்... என்பது தெளிவாக தொரிகிறது..

    ReplyDelete