சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 3, 2020

சத்ரபதி 110


சிவாஜி படை பரிவாரங்களோடு ஆக்ராவை அடைந்த போது அவனை வரவேற்க ராஜா ஜெய்சிங்கின் மகன் ராம்சிங்கும், முகலாய அரசு தரப்பில் வேறு ஒரு அதிகாரியும் சிவாஜிக்கு முன்பே வந்திருந்த ரகுநாத் பந்த் மற்றும் மற்ற மராட்டிய அதிகாரிகளுடன் காத்திருந்தனர். ராம்சிங் கிட்டத்தட்ட சிவாஜியின் வயதினனாக இருந்தான். மலர்ந்த முகத்துடன் சிவாஜியை வரவேற்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட  ராம்சிங் உடன் இருந்த அதிகாரியையும் அறிமுகப்படுத்தி வைத்தான். “அரசே இவர் முக்லிஷ்கான். அரசவை அதிகாரி

சிவாஜியின் முகம் கருத்தது. அவனை வரவேற்க சக்கரவர்த்தியே வந்திருக்க வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சம அந்தஸ்துள்ள ஒரு பெரும்படைத் தளபதியோ, அமைச்சர்களில் ஒருவரோ வந்திருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அவன் முகபாவத்தையே கவனித்துக் கொண்டிருந்த ராம்சிங்குக்கு சிவாஜியின் எண்ணங்களைப் படிக்க முடிந்தது. அவனும் சிவாஜியை வரவேற்க சக்கரவர்த்தி மேல்நிலை அமைச்சர்கள் அல்லது  தளபதிகளில் ஒருவரையாவது அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்று அபிப்பிராயப் பட்டான். சகல மரியாதைகளுடன் வரவேற்கக் காத்திருப்பதாய் ஔரங்கசீப் எழுதியிருந்தது சிவாஜிக்கு நினைவுக்கு வந்தது. சகல மரியாதைகளே இப்படி இருக்குமானால் இங்கு சாதாரண மரியாதை எப்படி இருக்கும் என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.


சிவாஜி அவமானங்களுக்காக தொடர்ந்து என்றுமே வருத்தத்தில் இருந்ததில்லை. எல்லாவற்றிற்கும் பதிலடி தர காலம் ஒரு நாள் சந்தர்ப்பம் தரும் என்று அவன் நினைத்தான். அது வரை அந்த அவமானத்தை நெஞ்சின் ஒரு மூலையில் வைத்து அவன் கண்டிப்பாகப்  பத்திரப்படுத்தி வைப்பான். சிவாஜியின் முகம் விரைவிலேயே மறுபடி மலர்ச்சிக்கு மாறியது.

இமைப்பொழுதில் முகமலர்ச்சிக்கு மாறிய சிவாஜியை ராம்சிங் பிரமிப்புடன் பார்த்தான். சிவாஜி எத்தனை சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறான் என்று அவன் எண்ணிக் கொண்டான். பிரயாண சௌகரியங்கள் எப்படி இருந்தன, வழியில் ஏதாவது குறையிருந்ததா என்று கேட்ட ராம்சிங்கிடம் சிவாஜி  ’ஒரு குறையுமில்லை. பிரயாணம் சௌகரியமாக இருந்ததுஎன்றே பதில் அளித்தான். புலம்பல் ஒரு அரசனுக்கு அழகல்ல என்று அவன்  நினைத்தான்.

ராம்சிங் தன்னுடைய இல்லத்திற்கு சிவாஜியை அழைத்துச் சென்றான். சிவாஜி ஆக்ராவின் அழகை ரசித்தபடியே ராம்சிங் வீட்டுக்குச் சென்றான். வழியெங்கும் ஆடம்பரமான மாளிகைகள் இருந்தன. எல்லா மாளிகைகளும் கலைநயத்துடனும், மிக அழகாகவும் அமைந்திருந்தன. சிவாஜியைப் போலவே சாம்பாஜியும் ஆக்ராவின் அழகை ரசித்துக் கொண்டே வந்தான். மாளிகைகளை சிவாஜி ரசிப்பதைப் பார்த்த ராம்சிங்கிட்டத்தட்ட எல்லா அழகான மாளிகைகளும் சக்கரவர்த்தியின் தந்தையார் காலத்தில் கட்டப்பட்டவை அரசேஎன்று தகவல் தெரிவித்தான். தொலைவில் தெரிந்த தாஜ்மஹால் பூலோக சொர்க்கம் போலத் தெரிந்தது. தாஜ்மஹாலின் அழகைப் பலர் சொல்லி சிவாஜி கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் எந்த வர்ணனையும் அதன் உண்மை அழகைச் சொல்லப் போதுமானதல்ல என்று சிவாஜிக்குத் தோன்றியது.

ராம்சிங் பெருமையுடன் சொன்னான். “அது சக்கரவர்த்தியின் தாயார் அவர்கள் நினைவாகக் கட்டப்பட்டது அரசே. சமயம் கிடைக்கையில் அருகே சென்று பார்க்கலாம்…”

சிவாஜி தலையசைத்தான். நகரமெங்கும் தோரணங்கள், கோலாகலங்கள் தெரிந்தன. சிவாஜி ஆர்வத்துடன் கேட்டான். “விழா எதாவது நடந்து கொண்டிருக்கிறதா என்ன?”

ராம்சிங் சொன்னான். “சக்கரவர்த்தியின் ஐம்பதாவது பிறந்த நாளை நகரம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது அரசே

ராம்சிங் சிவாஜியையும், சாம்பாஜியையும் இளைப்பாற வைத்து, உணவருந்த வைத்து, மிக நன்றாக உபசரித்தான். சக்கரவர்த்தியின் அலட்சியத்தை முடிந்த வரை தன் உபசரிப்பில் ஈடுசெய்ய ராம்சிங் முயற்சிப்பது மிக நன்றாகவே சிவாஜிக்குத் தெரிந்தது. தந்தைக்கேற்ற மகன் என்று அவன் மனம் சிலாகித்தது.

சிவாஜி ராஜா ஜெய்சிங் மகனுக்குத் தந்திருந்த கடிதத்தை ராம்சிங் கையில் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்டு சென்ற ராம்சிங் தனியறையில் படித்தான். சிவாஜியின் உயிருக்கு எந்த ஆபத்தும் யார் மூலமாகவும் வந்துவிடாமல் காப்பதாகத் தான் வாக்கு கொடுத்திருப்பதாகவும், அதனால் உயிரைக் கொடுத்தாவது சிவாஜியின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பெரும்பொறுப்பு ராம்சிங்குக்கு இருப்பதாகவும் ராஜா ஜெய்சிங் மகனுக்கு எழுதியிருந்தார்.

திரும்பி வந்த ராம்சிங் கூடுதல் மரியாதையுடன் நடந்து கொண்டது போல் சிவாஜிக்குத் தோன்றியது. சிவாஜி மனதில் தந்தை மகன் இருவரும் உயர்ந்து போனார்கள். இத்தனை மேன்மைகள் இருக்கும் ராஜபுதன அரசர்கள் முகலாயர்களுக்கு அடிபணிந்து போகிறார்களே என்பது தான் அவன் மனதில் நெருடலாக இருந்தது.

சிவாஜியின் வரவை ஔரங்கசீப்பிடம் அறிவிக்கச் சென்ற முக்லிஷ்கான் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சிவாஜியும் ராம்சிங்கும் காத்திருந்தார்கள். காக்க வைக்கப்படுவது சிவாஜிக்கு அவமானமாகத் தெரிந்தது. ஆனால் உண்மையில் அவன் வரவு முகலாய அரசவையிலும், அந்தப்புரத்திலும், நகர முக்கியஸ்தர்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததை அவன் அறியவில்லை.

சிவாஜிக்கு முன் அவனுடைய வீரம், தந்திரம், பிரதாபங்கள் எல்லாம் முன்பே அங்கே எட்டியிருந்தன. படைத் தளபதிகளாலும், வீரர்களாலும், வணிகர்களாலும், யாத்திரிகர்களாலும் உண்மையும் கலப்புமாக அவர்கள் நிறைய கேள்விப்பட்டிருந்தார்கள். எல்லோருக்கும் சிவாஜியை நேரில் பார்க்கப் பேரார்வமாக இருந்ததுஆக்ராவின் சாதாரணக் குடிமகன்கள் பலரும் கூட பூனா அரண்மனைக்குள் இரவு வேளையில் திடீர்த் தாக்குதல் நடத்தி சக்கரவர்த்தியின் தாய்மாமன் செயிஷ்டகானின் கைவிரல்களை வெட்டியவன் என்கிற அளவில் கேள்விப்பட்டிருந்தனர். அந்தப் பராக்கிரமசாலி யார் என்று பார்க்க ஆசைப்பட்டு ராம்சிங் மாளிகையின் முன்னால் அவர்கள் கூடி இருந்தனர். சிவாஜியை ராம்சிங் அழைத்து வரும் வழியிலேயே சிவாஜியைப் பார்த்திருந்த சிலர் இப்போது பார்க்கக் காத்திருப்பவர்களிடம் சிவாஜியை வர்ணித்துக் கொண்டிருந்தார்கள்.

சாதாரண மக்கள் அளவுக்கு பிரபுக்களும், மேல்நிலை மக்களும் ஜெய்சிங் மாளிகையின் முன் கூட முடியாததால் சிலர் ஏதோ வேலையாகப் போய் வருவது போல் நிதானமாக அவ்வழியே போய் வந்தார்கள். உள்ளே இருந்த சிவாஜி அவர்கள் கண்ணுக்குத் தென்படாதது அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

செயிஷ்டகான் சிவாஜி தலைநகருக்கு வருகிறான் என்றவுடனேயே ஔரங்கசீப்புக்கு மிக நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தான். சிவாஜி அங்கே வந்தால் அவனுக்கு மரியாதை கொடுத்து சலுகைகள் தரக்கூடாது என்றும் அவனைக் கைது செய்து மரண தண்டனை விதித்துக் கொன்று விட வேண்டும் என்றும் அவன் வேண்டுகோள் விதித்திருந்தான். அது தான் விரல்களையும், மகனையும் இழந்து அவமானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அவனுக்குக் கிடைக்கும் நீதியாக இருக்கும் என்றும் அவன் தெரிவித்திருந்தான்.

செயிஷ்டகானின் மனைவி ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக அந்தச் சமயத்தில் ஆக்ராவுக்கு வந்திருந்தாள். அவளும் மகன் இழப்புக்கும், கணவனின் விரல் இழப்புக்கும் பழி வாங்க வேண்டி சிவாஜியைப் பற்றி வேண்டிய அளவு அவதூறுகளை அந்தப்புரத்தில் பரப்பி சக்கரவர்த்தியின் காதுகளில் அவை விழுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்தாள்.

இதனிடையே இது வரை சிவாஜியை நேரில் சந்தித்திராத ஔரங்கசீப்பிடம்   சிவாஜியைப் பார்த்திருக்கும் பலரும் பல விதமாக எச்சரிக்கை விடுத்தார்கள். அவன் பல அடிகளுக்குப் பாயக்கூடியவன், மாயாவி போல் செயல்படக்கூடியவன்பல நூதன தாக்குதல்களை அறிந்தவன் என்றெல்லாம் சொன்னார்கள். பொதுவாகவே மனிதர்களிடம் அவநம்பிக்கையும், தன் பாதுகாப்பில் அதீத எச்சரிக்கையும் கொண்ட  ஔரங்கசீப் சிவாஜியைத் தர்பாரில் சந்திக்கும் முன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ள உத்தேசித்திருந்தான்.

இது போதாதென்று செயிஷ்டகானின் மனைவி மூலம் சிவாஜியைப் பற்றிய அவதூறுகளையும், வேறு சிலர் மூலம் பராக்கிரமக் கதைகளையும் கேட்டிருந்த ஔரங்கசீப்பின் குடும்ப அந்தப்புரத்துப் பெண்கள் சபை நடவடிக்கைகளைக் காண விருப்பப்பட்டனர். பொதுவாக குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் அல்லது நிகழ்வுகள் தர்பாரில் நடக்கும் போது மட்டும் அதைக் காணத் திரைமறைவில் அவர்கள் கூடுவதுண்டு. ஆனால் மிக அபூர்வமாக சிவாஜி வரும் சமயத்தில் அவனைப் பார்க்க அவர்களும் திரைமறைவில் கூடத் தயாரானார்கள்.

சாதாரணமாகத் தினமும் ஒருசிலராவது பல காரணங்களால் தர்பார் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் போவதுண்டு. அவர்களுக்குரிய இருக்கைகள் அப்போது காலியாகவே இருக்கும். ஆனால் ஔரங்கசீப் சிவாஜியை அழைத்து வரச் சொல்லும் சமயத்தில் அங்கு இல்லாமல் போக தர்பாரில் யாரும் விரும்பவில்லை.

இப்படியாக சிவாஜி மனதில் மட்டுமல்லாமல் பலருடைய மனதிலும் சிவாஜி எப்போது முகலாயத் தர்பாருக்கு அழைக்கப்படுவான் என்ற கேள்வியே பிரதானமாக எழுந்திருந்தது.


(தொடரும்)
என்.கணேசன்



3 comments:

  1. Eagerly waiting to read Sivaji's entrance to Moghul Durbar.

    ReplyDelete
  2. நாங்களும் முகலாய தர்பாரில் எப்போது சிவாஜி அழைக்கப் படுவான்? என்று காத்துக் கொண்டிருக்கிறோம்.
    ஔரங்கசீப் என்ன முடிவு எடுப்பான்?
    சிவாஜியை மரியாதை கொடுத்து உபசரித்து அனுப்புவானா?
    இல்லை...
    சிவாஜியை கைது செய்து கொல்ல திட்டமிடுவானா??

    ReplyDelete
  3. சிவாஜியின் தர்பார் ஆரம்பம்...

    ReplyDelete