சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 29, 2018

இருவேறு உலகம் – 112


செந்தில்நாதன் கண்காணிப்புக்குத் தேர்ந்தெடுத்த மூன்று குடோன்களில் ஒன்றில் மாடி ஜன்னல்கள் கண்ணாடி உடைந்தும், திறந்தும் இருந்தன. அப்படிப்பட்ட இடத்தில் யாரையும் கடத்தி வைத்திருக்க வழியில்லை என்பதால் முதல் நாளிலேயே அதைக் கண்காணிப்பில் இருந்து விலக்கினர். மீதமுள்ள இரண்டு குடோன்களையும் மிக ரகசியமாகக் கண்காணித்ததில் ஒன்று சதாசர்வ காலம் திறந்தே இருந்தது. லாரிகள் வேன்கள் வந்து போவதும் சரக்குகள் ஏற்றி இறக்கி வைக்கப்படுவதும் ஒரு நாளுக்கு நான்கைந்து முறையாவது நடந்தது. கடைசியாக மிஞ்சிய குடோன் புறநகர்ப் பகுதியில் இருந்தது. அங்கு ஒரு நாளைக்கு ஒரு முறை கூட சரக்குகள் ஏற்றி இறக்குவது அபூர்வமாக இருந்தது. விசாரித்ததில் அது ஒரு தனியார் கம்பெனியின் குடோன்களில் ஒன்று என்றும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தான் அங்கு சரக்குகள் ஏற்றி இறக்கப்படும் என்று தெரிந்தது. அந்த குடோனுக்கு மேல் மாடி இருந்த போதும் ஒரு ஜன்னல் கூட மாடிப்பகுதியில் இருக்கவில்லை. அந்தக் குடோனுக்குப் பக்கத்தில் வீடுகளோ கடைகளோ இல்லை. இரு பக்கங்களிலும் தோட்டங்கள் மட்டுமே இருந்தன. எதிர்ப்பகுதியில் ஒரு தொழிற்சாலையின் பின் பக்கச்சுவர் தான் இருந்தது.  “ஹரிணியை இது போன்ற ஒரு குடோனில் கடத்தி வைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்” என்று செந்தில்நாதன் நினைத்தார்.

ஸ்கூட்டர், பைக் ஆட்டோ ரிக்‌ஷா, கார் என்று விதவிதமாய் நீண்ட இடைவெளியில் ஓட்டிச் சென்றும், கைவண்டி இழுத்துச் சென்றும், பாதசாரியாகப் போயும் ரகசியமாய் போலீஸார்  அந்தக் குடோனைக் கண்காணித்தனர். ஆனால் சந்தேகப்படுத்துவது போல் அந்தக் கட்டிடத்தையே வெறித்துப் பார்க்காமல், தனி ஆர்வம் காட்டாமல், போகிற போக்கில் மற்ற கட்டிடங்களைப் பார்த்துச் செல்கிற அளவுக்கே அதையும் பார்த்துப் போனார்கள். ஒரே ஒரு மனிதன் மட்டும் காலை அந்தக் குடோனில் இருந்து வெளியேறினான். அப்போது இன்னொருவன் உள்ளே போனான். காலை வெளியேறியவன் மதியம் ஒரு முறை வந்து மறுபடி போனான். பின் இரவு வந்தவன் மறு நாள் காலை வரை தங்கினான். இரவு அவன் வந்தவுடன் காலையில் வந்தவன் வெளியே போனான்.  இரவு முழுவதும் குடோனில் தங்கி காலையில் வெளியேறுபவனைக் காட்டி செந்தில்நாதனிடம் ஒரு போலீஸ்காரர் சொன்னார். “நம்ம சகுனியை இந்த ஆள் அடிக்கடி பார்க்க வர்றதை நான் பார்த்திருக்கேன். முதலமைச்சர் ஆபிசுக்குக் கூட இந்த ஆள் ஒரு தடவை வந்திருக்கார்.”

செந்தில்நாதன் க்ரிஷிடமும், உதயிடமும் இதைத் தெரிவித்து விட்டுச் சொன்னார். “அந்த ஆளைப் புடிச்சாலும் முதலமைச்சர் அந்த ஆளை வெளியே விட்டுட கட்டாயப்படுத்த வாய்ப்பு இருக்கு….”

உதய் அமைதியாகச் சொன்னான். “புடிச்சாலும் அதைத் தெரிவிக்கணும்கிற அவசியம் இல்லையே. அப்படியொரு விஷயம் நடக்கலைங்கற மாதிரியே இருந்துடலாம். அவனை அடைச்சு வைக்க எத்தனையோ இடங்கள் இருக்கு. விசாரிக்கிற விதத்தில் விசாரிச்சா எதிரி பத்தியும் நிறைய விஷயங்களை அவன் கிட்ட இருந்து கறந்துடலாம்”

“ஆனா ஹரிணியை அங்கே இருந்து விடுவிச்சுட்டா அந்த விஷயத்தை மறைக்க முடியாதே. முக்கியமா எதிரி லேசுப்பட்டவன் இல்லை. அவன் விட மாட்டான்…..”

”அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம் சார்.  வேண்ணா நீங்களும் தலைமறைவாயிட்டதா காமிச்சுக்கலாம். உங்களுக்கு என்ன ஆகணும், என்ன வசதிகள் வேணும்கிறதை மட்டும் சொல்லுங்க. நான் செஞ்சு தர்றேன். பத்மாவதி அம்மாவோட சின்ன மருமகள் பாதுகாப்பா வரணும். அவ்வளவு தான். அந்தம்மாவோட நச்சரிப்பு தினசரி தாங்க முடிய மாட்டேங்குது….”

க்ரிஷும் செந்தில்நாதனும் புன்னகைத்தார்கள்.

“அப்ப ரகசியமா நம்ம ஆபரேஷனை ஆரம்பிக்கலாமா? முதலமைச்சருக்குக் கூட விவரங்கள் தெரியக்கூடாதுன்னா நான் என் கூட இப்ப இருக்கிற ரெண்டு போலீஸ் அதிகாரிகளைத் தவிர மத்தவங்கள இதுல சேர்க்க முடியாது……” செந்தில்நாதன் சொன்னார்.

“உங்களுக்கு எந்த மாதிரியான ஆள்கள் வேணும்னு சொல்லுங்க. நான் ஏற்பாடு பண்ணித் தர்றேன்” உதய் உறுதியாகச் சொன்னான்.

அவர்கள் மிகவும் கவனமாகத் திட்டமிட ஆரம்பித்தார்கள். க்ரிஷ் அன்று “போலீஸார் வருகிறார்கள்” என்ற செய்தியை ஹரிணிக்கு அனுப்பினான். அதை அனுப்புவதற்கு முன் முத்தத்தை முதலில் அனுப்பினான்….


ல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றினாலும் ஏதோ ஒரு நெருடல் மனோகருக்கு ஏற்பட ஆரம்பித்தது. ஹரிணி ஒரு முரண்டும் பிடிக்காமல் அமைதியாக இருந்தது அவனுக்கு இயல்பாய் தெரியவில்லை. அவள் பற்றி எல்லாத் தகவலும் அவன் அறிந்திருந்தான். இந்தப் பெண் சிங்கம் சீறாமல் சிணுங்கவும் செய்யாமல் அமைதி காப்பது காரணம் தெரியாத ஒரு ஆபத்து உணர்வை அவனுக்குள் ஏற்படுத்தியது. ரகசியமாய் ஏதாவது திட்டம் வைத்திருப்பாளோ என்ற சந்தேகம் வந்தது. எனவே அன்று அவளிடம் பேச்சுக் கொடுப்பது என்று தீர்மானித்தான்.

அவன் அவளிடம் பேச வருவதற்கு சற்று முன் தான் க்ரிஷ் அனுப்பிய முத்தத்தை ஹரிணி உணர்ந்தாள். சந்தோஷமாய் இருந்தது. ஆனால் முத்தம் கிடைத்த அளவு தெளிவாய் அவன் அனுப்பிய தகவல் தெரியவில்லை. மிகவும் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு புலன்களைக் கூர்மையாக்கினாள். லேசாக காக்கி நிறம் போல வந்து போனது. போலீஸ் என்று சொல்ல வருகிறானோ?

அவளை அதற்கு மேல் யோசிக்க விடாமல் மனோகர் உள்ளே நுழைந்தான். உணவை வைத்து விட்டுப் போகாமல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு அவளைக் கூர்மையாகப் பார்த்தான். “உன்னை எல்லாரும் சிங்கம், புலின்னு எல்லாம் சொன்னாங்க. ஆனா நீ பூனை மாதிரி பதுங்கி இருக்கறதைப் பார்க்கறப்ப கஷ்டமாய் இருக்கு”

அவனுக்கு அவளுடைய அமைதி பயமுறுத்துகிறது என்பதை ஹரிணி புரிந்து கொண்டாள். புன்னகையோடு சொன்னாள். “உனக்கு ஏன் மனுஷங்களை மனுஷங்களாவே மதிக்கத் தெரியலைன்னு புரியல. மிருகங்களோடவே ஒப்பிட்டுப் பார்க்கிற இந்த நீச்ச புத்தி சரியில்லையே. இதெல்லாம் உன் முதலாளி கிட்ட இருந்து வந்த பழக்கமா?”

அவள் முதலாளி என்றதும் அவன் உஷாரானான்.  பேச்சுக் கொடுத்து ‘அவனை’ அறிந்து கொள்ள முயற்சி செய்கிறாளோ? அவன் காட்டமாகச் சொன்னான். “நீச்ச புத்தியாய் இருந்திருந்தா நீ மயக்கமா இருக்கறப்பவே உன் கற்பு பறிபோயிருக்கும். ஞாபகம் வச்சுக்கோ”

ஹரிணி சொன்னாள். “ஒரு பொண்ணை அடைச்சு வச்சு கற்பழிக்கலைங்கறது எல்லாம் ஒரு பெருமையா எக்ஸ். உன் முதலாளிக்கு க்ரிஷ் கிட்ட என்ன பிரச்சன? க்ரிஷ் உன் முதலாளி கிட்ட எந்த வம்புக்கு வந்தான்? அவன் என்ன பண்ணிடுவான்னு தான் பயப்படறீங்க? அதயாவது சொல்லித் தொலையுங்கடா. தெரிஞ்சுக்கிறேன். சரி எதிரின்னே நினைக்கிறீங்கன்னு வெச்சுக்குவோம். எதிரின்னா நேரடியா சந்திக்கணும். அது தான் வீரம். அது தான் சக்தி. உன் முதலாளியப் பத்தி நானும் நிறைய கேள்விப்பட்டேன். ஏகப்பட்ட சக்திகள் வச்சிருக்கான்னு எல்லாம் சொன்னாங்க. அப்படிப்பட்ட ஆள் அதையெல்லாம் நம்பாம என்னை கடத்திட்டு வந்தான் பாரு. அப்பவே தோத்துட்டான்னு அர்த்தம். கற்பழிக்கலைங்கறத பெருமையா சொன்னே பார். இது எந்த அளவுக்கு நீங்க இறங்கிட்டீங்கங்கறதுக்கு அருமையான உதாரணம். கற்புங்கறது உடம்பு சம்பந்தப்பட்ட சமாச்சாரம் அல்ல, மனசு சம்பந்தப்பட்ட சமாச்சாரம்னு நான் உறுதியா நினைக்கிறேன். என் உடம்ப வேண்ணா எந்த நாயும் தொடலாம். ஆனா என் மனச க்ரிஷைத் தவிர யாருமே நெருங்க முடியாது… உனக்கு இதெல்லாம் எந்த அளவு புரியும்னு தெரியாது. ஆனாலும் சொல்றேன்…..”

இவளிடம் பேச்சுக் கொடுத்திருக்க வேண்டாம் என்று மனோகருக்குத் தோன்றியது. நாக்கா…. சவுக்கா! ஆனாலும் ஆரம்பித்து விட்ட பிறகு பின்வாங்க அவன் விரும்பவில்லை. “எல்லாத்தையுமே நேரா சந்திக்கணும்னு அவசியம் இல்லை. தேவையானா மட்டும் தான் அவர் எதையுமே நேரடியா கையாள்வார்….. என் முதலாளியோட சக்திக்கு முன்னாடி உன் க்ரிஷ் ஒரு துரும்பு. அதைப் புரிஞ்சுக்கோ”

“ஒரு பெண்ணைக் கடத்தினவன இதுக்கு மேல புரிஞ்சுக்க என்ன இருக்கு எக்ஸ். ராமாயணம் படிச்சிருக்கியா. ராவணனுக்கு பத்து தலை. அத்தனையும் அறிவு. அத்தனையும் சக்தி. ஆனா அவன் எப்ப சீதையைக் கடத்தினானோ அப்பவே அவனுக்கு அழிவு காலம் ஆரம்பிச்சிடுச்சு. கடைசில அழிஞ்சே போனான். உன் முதலாளியும்  அப்படி தான் ஆரம்பிச்சு இருக்கான். அழிவுல இருந்து காப்பாத்திக்க எந்த சக்தியும் போதாது ஞாபகம் வச்சுக்கோ”

மனோகருக்கு ஓங்கி அவளை அறைய வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ”பொம்பளய அடிக்கறது எல்லாம் ஒரு ஆம்பிளைக்குப் பெருமையாடா” என்கிற வகையில் பேச ஆரம்பித்தாலும் ஆரம்பித்து விடுவாள் என்று பயந்தான். ஆனால் தப்பிக்க திட்டம் போடுகிறவளோ, மறைமுகமாய் எதையாவது செய்ய நினைப்பவளோ அல்ல என்பதை பணியாத அவள் பேச்சு காண்பித்து விட்டது. அந்தத் திருப்தியுடன் அங்கிருந்து போனான்.


ம்யூனிக் நகரில் அரண்மனை போல் இருந்த ஒரு வீட்டின் உள்ளே எர்னெஸ்டோ என்ற பெயருடைய ஒரு முதியவர் பிதோவனின் இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த இசையைக் கிழித்துக் கொண்டு அலறியது தொலைபேசி. லேசான முகச்சுளிப்புடன் அவர் ரிசீவரை எடுத்தார். “ஹலோ”

“சார் நம்ம அக்கவுண்டை இந்தியாவில் இருந்து யாரோ ஆராய்ச்சி செய்திருக்கற மாதிரி தெரியுது….”

வேலையாளைப் பார்த்து அவர் சைகை செய்ய அந்த வேலையாள் ஓடி வந்து பிதோவனின் இசையை நிறுத்தினான்.

“யாரதுன்னு கண்டுபிடி. கண்டுபிடிச்சு தெரிவிக்காம நீ தூங்கப் போகக்கூடாது…” அமைதியாக அவர் சொன்னாலும் கேட்ட செய்தி அவர் அமைதி மனதில் இருந்து விடைபெற்று விட்டது.

“ரெண்டு மணி நேரத்துக்குள்ளே சொல்றேன் சார்….”

(தொடரும்)
என்.கணேசன்



4 comments:

  1. Excellent. Can't stand the suspense.

    ReplyDelete
  2. nice bro.. kindly waiting for Shivaji book release... these are stories we need real Life book of Shivaji soon bro.. please dont delay that one

    ReplyDelete
  3. You have sculpted Harini as a really matured n bold girl!

    ReplyDelete
  4. ஹரிணியின் உறுதியும்...தைரியமும்..சூப்பர்..
    ஹரிணியை தீண்டாமல் கண்ணியம் காக்கும்..வில்லனும் சூப்பர்...

    "இங்கேயும் விஸ்வம் ஆள் வைத்திருக்கிறானா?" என்ற ஆச்சரியத்துடன் இந்த பகுதி முடிந்து விட்டது...

    ReplyDelete