சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, November 6, 2018

இருவேறு உலகம் 108

 (தீபாவளி நல்வாழ்த்துக்கள்)

க்ரிஷ் ரிஷிகேசத்திற்குக் கிளம்புவதற்கு முன் ஹரிணியிடம் இருந்து வந்திருந்த தகவல்களை செந்தில்நாதனிடம் காட்டினான். அவன் காட்டிய படங்களையும், யூகித்த விஷயங்களையும் கேட்டுக் கொண்ட அவர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் ஹரிணியை வைத்திருக்க வாய்ப்புக் குறைவு என்றார். “கடத்தின ஆள யாருமே எல்லாரும் அடிக்கடி போறதும் வர்றதுமாய் இருக்கற ஒரு கட்டிடத்தில் அடைச்சு வெக்க மாட்டாங்க க்ரிஷ்அப்படிச் செய்யறது பல பேர் கவனத்துக்குக் கண்டிப்பா வரும். அதிகமா அவங்களோட முழுக் கட்டுப்பாட்டில இருக்கிற, அதிகம் வெளியாட்கள் போக்குவரத்து இல்லாத எதாவது இடத்தில் தான் அடைச்சு வச்சிருக்க வாய்ப்பு அதிகம். மசூதி ஏதோ பக்கத்துல இருக்குங்கறது சரியா இருக்கலாம்

க்ரிஷுக்கு அவர் சொல்வதும் சரியென்று பட்டது.  க்ரிஷ் கண்களை மூடிக் கொண்டு யோசித்தான். மனதில் அவள் அனுப்பியதாக அவன் எண்ணிய தகவல் மறுபடி வந்தது. அது அடுக்குகளாக இல்லையென்றால் படிகளாகவும் இருக்கலாம் என்று தோன்றியது. படிகளுக்கு ஏதாவது பிரத்தியேக அர்த்தம் இருக்கிறதா என்று யோசிக்கையில் படிகள் இல்லாமல் அவள் ஒன்று என்ற எண்ணை மட்டும் அனுப்பியிருந்தால் முதல் மாடியென்று புரிந்திருக்காது என்று தோன்றியது. செந்தில்நாதனிடம் அதைச் சொன்னான்.

“அப்படின்னா எதாவது ஒரு கட்டிடத்தில் முதல் மாடியா இருக்கலாம். முதல் மாடி, மசூதி இந்த இரண்டு தகவல்களை வெச்சு இடம் கண்டுபிடிக்கறது கஷ்டம். இனியும் ஏதாவது தகவல்கள் கிடைச்சா நல்லா இருக்கும்” என்று செந்தில்நாதன் சொன்னார்.

மேலும் அவளிடமிருந்து தகவல்கள் வரும் என்று க்ரிஷ் நம்பினான். இது போன்ற சின்னச் சின்ன நம்பிக்கைகளை வைத்தல்லவா வாழ்க்கையை நகர்த்துவது சுலபமாக இருக்கிறது!

ரிஷிகேசத்திற்கு அவன் தற்போது போவது உசிதம் தானா என்று செந்தில்நாதன் கேட்டார். போகும் போதோ வரும் போதோ அவனுக்கு ஆபத்து நேரலாம் அல்லவா என்ற கேள்வி அவர் கேட்டதில் மறைந்திருந்தது. “எதிரியைப் பத்தி நிறைய தெரிய வந்திருக்குன்னு மாஸ்டர் சொன்னார். அதை அவர் போன்ல விவரிக்க விரும்பல. அடுத்ததா என்ன செய்யலாம்கிறத தீர்மானிக்கறதுக்கு அந்த விஷயங்கள் உபயோகமா இருக்கும். உதயும் என்னை அனுப்பத் தயங்கினான். நான் இத சொன்னவுடனே தான் ஒத்துகிட்டு ஒரு பட்டாளத்தையே  பாதுகாப்புக்கு என் கூட அனுப்பறான்.”

எதிரியின் சக்தியை வைத்துப் பார்க்கையில் பாதுகாப்புப் பட்டாளமும் பலம் போதாது என்று செந்தில்நாதனுக்குத் தோன்றியது. ராஜதுரைக்கு இல்லாத பாதுகாப்பா? அப்படி இருக்கையில் க்ரிஷ் இங்கேயே கல்லூரிக்குப் போய் வருகிற போதே கூட எதிரியால் எத்தனையோ செய்ய முடியும்? ஆனாலும் செய்யாமல் இருக்கிறான் என்றால் ஏதாவது தகுந்த காரணம் இருக்க வேண்டும். லாரி விஷயத்தில் முயற்சி முறியடிக்கப்பட்டதால் அது போல மறுபடி நேரலாம் என்று கூட நினைத்திருக்கலாம். அல்லது வேறு எதாவது வலுவான காரணம் இருக்கலாம். அதனால் இங்கேயே க்ரிஷுக்கு ஏதும் ஆபத்தை ஏற்படுத்தாத எதிரி பயணத்தின் போதும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.

செந்தில்நாதன் கேட்டார். “நீ இங்கே இல்லைன்னா ஹரிணி தகவல் அனுப்பறதுல சிக்கல் இருக்காதா?”

க்ரிஷ் புன்னகையுடன் சொன்னான். “இந்த வகைத் தகவல் ஆள் எங்கே இருந்தாலும் வந்து சேரும் சார். சக்தி அலைகள் விஷயத்துல வீட்டு விலாசம் கணக்குலயே இல்ல.”

செந்தில்நாதன் ஓய்வு பெற்ற பிறகு இதில் கண்டிப்பாக ஆழமாய் இறங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.


விஸ்வத்துக்கு க்ரிஷ் ரிஷிகேசம் போன தகவல் வந்தது. குருவுக்கு பிரிய சிஷ்யனாக இருந்த மாஸ்டர் இப்போது தன் பிரிய சிஷ்யனை குரு வாழ்ந்த குடிலுக்கே அழைத்துப் பேச ஆசைப்படுவது போல் இருந்தது. அவனுக்கு இணையாக வர முடிந்தவரான   மாஸ்டரின் மிகப் பெரிய பலவீனம் இது போன்ற ‘செண்டிமெண்ட்’கள் தான் என்று விஸ்வம் நம்பினான். அவனைப் பொறுத்த வரை தர்மம், உலக நன்மை, நேர்மை, நியாயம், பக்தி எல்லாமே கூட மனிதனுக்கு ஏதாவது விதங்களில் தடையாகும் செண்டிமெண்ட்களே. இந்த விஷயத்தில் க்ரிஷ் கூட அவரைப் போலத்தான் தெரிந்தான். ஆனால் மாஸ்டரை அவன் அளந்து வைக்க முடிந்த அளவு க்ரிஷை அவனால் சில சமயங்களில் கணிக்க முடியவில்லை. மிகவும் நெருக்கடியான நேரங்களில் எந்தக் கூடுதல் சக்தியையும் பயன்படுத்தாமலேயே க்ரிஷ் சிலவற்றை சாதித்துக் கொள்கிறான். இப்போதும் விஸ்வத்துக்கு க்ரிஷ் மாஸ்டரைத் தன் பக்கம் இழுத்த விதத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை. மாஸ்டர் அவருடைய சக்தியால் அவன் மனதைப் படிக்க முடியாமல் தோல்வியடைந்த நேரத்தில், அவன் எதிரியின் ஆள், அவனிடம் தோற்றிருக்கிறோம் என்று அவமான உணர்வுடன் அவனை எதிரியாகவே பாவிக்க ஆரம்பித்த அந்தக் கணத்தில் அவருக்கு சிஷ்யன் என்ற ஸ்தானத்திற்கு அனாயாசமாய் நகர்ந்து, பின்  நெருக்கமாகியும் விட்டது தலைசிறந்த ராஜதந்திரம் என்று இப்போதும் விஸ்வம் நினைக்கிறான்.

ஹரிணி கடத்தப்பட்டவுடன் க்ரிஷ் செயலற்று முடங்கிப் போவான் என்று விஸ்வம் நினைத்ததும் எண்ணிய அளவுக்கு நடக்கவில்லை. செந்தில்நாதனைத் திரும்ப வரவழைத்து க்ரிஷ் விஸ்வம் பற்றிய கண்டுபிடிப்பு வேலைகளை நிறுத்திக் கொண்டானே ஒழிய முடங்கி விடவில்லை. இப்போது மாஸ்டரைச் சந்திக்க அவன் ரிஷிகேசம் போவதே அதற்கு உதாரணம். ஆனாலும் தன்னைப் பற்றிய இன்னும் அவர்கள் அறிந்திராத மிக முக்கியத் தகவல்கள் சிலவற்றை அவர்கள் அறிந்து கொள்வதற்கு முன் தடுத்து நிறுத்தியதில் விஸ்வத்துக்குத் திருப்தி. அந்த மிக முக்கியத் தகவல்கள் தெரிந்தாலும் கூட அவர்களால் ஒன்றும் செய்து விட முடியாது என்ற போதிலும் அப்படி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாம் என்று நினைத்தான். உலகமே அறியும் போது அவர்கள் அறியட்டும். அது போதும்….

இப்போதைக்கு க்ரிஷ் மனம் முழு வீச்சில் எதிலும் இறங்க முடியாதபடி ஹரிணி பற்றிய கவலைகள் பார்த்துக் கொள்ளும். இப்போது ஓரளவு இயங்கும் க்ரிஷ். மாஸ்டருடன் சேர்ந்து பேசி என்ன முடிவெடுக்கிறான், இனி என்ன செய்யப் போகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டால் ஹரிணியை வைத்து அதையும் நிறுத்தி விடலாம். அதற்காகவே இன்னமும் க்ரிஷிடம் அவன் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறான். எந்தத் தகவலும் கிடைக்காமல் க்ரிஷின் கவலையும், பயமும் அதிகமாகி அவன் மிகவும் பலவீனமாக ஆன பின் வேண்டியபடி அவனை இயக்குவது தான் உத்தமம்….

விஸ்வத்துக்கு சட்டர்ஜியின் மின்னஞ்சல் குறித்து அடுத்த தகவல் வந்து சேர்ந்தது. சட்டர்ஜி கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன் தான் மின்னஞ்சலைத் திறந்தே பார்த்திருக்கிறார். அது வரை தொடர்ச்சியாக அந்த மின்னஞ்சலை அதிகமாக அவர் பயன்படுத்தி வந்தது சூரத் நகர எல்லைக்குள். இரண்டு வருடங்களுக்கு பின் தான் மற்ற இரு மலையேற்ற வீரர்கள் இறந்து போயிருக்கிறார்கள். அந்த சமயம் வரை தான் இந்த ஆளும் அந்த மின்னஞ்சலைப் பயன்படுத்தி இருக்கிறார். அதன் பின் புதிய மின்னஞ்சலை அவர் பயன்படுத்த ஆரம்பித்திருக்க வேண்டும்.  அது ஏன்?


லத்த பாதுகாப்புடன் ரிஷிகேசத்தில் குருவின் குடிலுக்கு வந்து சேர்ந்த க்ரிஷ் மாஸ்டரைப் பார்த்தவுடன் அதிர்ந்து போனான். அவருடைய வழக்கமான கம்பீரம், தேஜஸ் இரண்டும் மங்கி அவர் முகத்தில் கவலையும், வேதனையும் தான் தெரிந்தன. அவன் இது வரை அப்படி அவரைப் பார்த்ததே இல்லை…. “என்ன ஆச்சு மாஸ்டர்?” என்று அவன் பதறிப்போய் கேட்டான்.

பாதுகாப்புக்கு வந்தவர்கள் குடிலைப் பார்க்கும் தொலைவிலேயே இடங்கள் தேர்ந்தெடுத்து நின்று கொண்டதால் மாஸ்டருக்கு அவனிடம் மனம் விட்டுப் பேச முடிந்தது. “சாகலை அவ்வளவு தான். அதுவும் உன் புண்ணியத்துல” என்றார்.

திகைத்து நின்ற அவனிடம் அவர் தான் ஏமாந்த கதையையும் அதன் பின் நடந்தவைகளையும் சொன்னார். ”…ஆனதை மாத்த ஆண்டவனுக்கே சக்தி இல்லைன்னாலும், ஆனதை ஜீரணிக்கிற சக்தி மனுஷனுக்கும் சில சமயங்கள்ல இருக்கிறதில்லை க்ரிஷ். நான் இப்ப அந்த மாதிரி ஜீரணிக்க முடியாம தான் தவிக்கிறேன். ரொம்ப சாதாரணமா ஏமாந்து நிற்கிறமேன்னு உறுத்தலா இருக்கு”

க்ரிஷுக்கு அவர் வேதனை புரிந்தது. அவனுக்குப் புரியாதது ஒன்று தான். எதிரியைப் போல் இத்தனை சக்திகளைச் சேர்த்த ஒருவன் அத்தனையையும் வெறும் பணத்திற்காகச் செய்திருப்பான் என்று அவனால் நம்ப முடியவில்லை. பணம் இலக்கானால் அதற்கு இத்தனை அமானுஷ்ய சக்திகள் தேவையே இல்லையே. அதை எத்தனையோ சுலபமான வழிகளிலேயே அவனைப் போன்ற அறிவாளி கோடிக்கணக்கில் சேர்த்திருக்க முடியுமே? யோசிக்கையில் எங்கேயோ இடித்தது.

 (தொடரும்)

என்.கணேசன்



7 comments:

  1. Amazing writing sir. Superb.

    ReplyDelete
  2. Thank you Sir.
    Wish you and your family happy deepavali.

    ReplyDelete
  3. Thank you for this Deepavali Bonus..!
    Wish you and your Family a Happy and prosperous Deepavali.! :)
    Expecting many similar Series from you.

    ReplyDelete
  4. Thanks bro... Happy Diwali... Now shivaji is captured all attention that is 100 times better than like this story, waiting that book

    ReplyDelete
  5. விஸவத்தின் நோக்கம் என்னவாக இருக்கலாம்
    என்று க்ரிஷ் யோசிக்க ஆரம்பித்து விட்டான் ....
    ஆனால் ,விஸ்வத்தின் கணக்கு வேற மாதிரி இருக்கு.....
    ஆவலுடன்......

    ReplyDelete
  6. "பணி ஓய்வின் போது ஆழ்மன ஆராய்ச்சியில் இறங்க வேண்டும் வேண்டும்" என்ற வார்த்தையை பரமன் ரகசியத்தில் பார்த்த சாரதியும் சொல்லியிருந்தார்...இப்போ செந்தில் நாதனுமா?

    ReplyDelete
  7. கிரிஷ் விஸ்த்தோட நோக்கத்தை கண்டறிந்துவிடுவான் போலிருக்கிறதே..?
    விஸ்வம் தடுத்து நிறுத்திய அந்த முக்கிய விஷயம் என்னவா இருக்கும்??? என்ற ஆவலுடன்...

    ReplyDelete