சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 3, 2018

சத்ரபதி – 49


சிவாஜி ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின் ஒரு முடிவெடுத்தான். ஆதில்ஷாவுக்கு கொண்டானா கோட்டையையும், இன்னொரு கோட்டையையும் திரும்பத் தர முடிவு செய்து உடனடியாக அந்தக் கோட்டைகளிலிருந்து தன் படைகளை விலக்கிக் கொள்ளவும் செய்தான். அது குறித்த தகவல் அந்தக் கோட்டைகளில் முன்பிருந்த பீஜாப்பூர் சுல்தானின் அதிகாரிகள் மூலம் அவரை உடனடியாகச் சென்று சேரும்படி பார்த்துக் கொண்டான்.

பின் முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹானுக்கு ஒரு அவசர மடல் அனுப்பினான். ஒரு காலத்தில் அவருடைய ஊழியத்தில் இருந்த ஷாஹாஜியும், அவனும் மீண்டும் அவருடைய ஊழியர்களாக விருப்பம் தெரிவித்து எழுதியவன் தற்போது ஷாஹாஜியின் உயிருக்கு பீஜாப்பூர் சுல்தான் ஆணையால் ஏற்பட்டிருக்கும் அபாயத்தையும் எழுதினான். தந்தையின் உயிரை சர்வ வல்லமை உள்ள சக்கரவர்த்தியான ஷாஜஹான் காப்பாற்ற முடியும் என்றும் அப்படிக் காப்பாற்றினால் முன்பு ஷாஜஹான் ஷாஹாஜி வசம் ஒப்படைத்த பகுதிகளுடன் மகிழ்ச்சியாக இருவரும் சக்கரவர்த்தியின் சேவகர்களாக வர விருப்பம் கொண்டிருப்பதாக சிவாஜி எழுதினான். பீஜாப்பூர் சுல்தானிடம் இருந்து கைப்பற்றிய இரண்டு கோட்டைகளை அவரிடமே ஒப்படைத்து விட்டிருக்கும் தகவலையும் உபரியாக அந்த மடலில் சேர்த்து வைத்தான்.


ஷாஹாஜியின் உயிருக்கு பீஜாப்பூர் சுல்தான் கெடு வைத்திருப்பதால் சிவாஜியின் மடல் இரண்டே நாட்களில் முகலாயச் சக்கரவர்த்தியிடம் போய்ச் சேர சிவாஜி ஏற்பாடு செய்திருந்தான்.  அப்படியே அந்த மடல் ஷாஜஹானைச் சென்றடைந்தது. சிவாஜியைக் குறித்தும் அவன் செயல்கள் குறித்தும் அவ்வப்போது செய்திகள் அவரைச் சென்றடைந்திருந்தபடியால் இந்த மடலை  ஷாஜஹான் மிகுந்த ஆர்வத்துடன் படித்தார். படித்த பிறகு தக்காணப்பீடபூமி அரசியலில் சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்துக் கேட்டார். “சிவாஜி ஆதில்ஷாவின் கோட்டைகள் எத்தனை கைப்பற்றியிருக்கிறான்?”

“பத்தாவது இருக்கும் சக்கரவர்த்தி”

ஷாஜஹான் வாய்விட்டுச் சிரித்தார். “பத்து கோட்டைகளைப் பிடித்தவன் இரண்டு மட்டும் திருப்பிக் கொடுத்திருக்கிறான். கல்யாண் நிதி பற்றி ஒன்றும் சொல்லவே இல்லை…..” சிவாஜியின் சாமர்த்தியம் ஷாஜஹானுக்குப் பிடித்திருந்தது. “இந்தப் பையன் பத்து ஷாஹாஜிக்கு சமமாய் இருப்பான் போலிருக்கிறதே”

“சக்கரவர்த்தி. அவன் நிர்வாகமும் சிறப்பாக இருப்பதாய்ச் சொல்கிறார்கள். மக்களிடம் மிகநல்ல பெயர் எடுத்திருக்கிறான்”

ஒரு கணம் யோசித்து விட்டு ஷாஜஹான் கேட்டார். ”அவன் நம் எல்லைகளில் எப்படி?”

“இது வரை நம் எல்லைகளில் அவன் எந்தப் பிரச்னையும் ஏற்படுத்தியதில்லை சக்கரவர்த்தி”

திருப்தி அடைந்த ஷாஜஹான் சிந்தனையில் ஆழ்ந்தார். யதாகிக் கொண்டே செல்லும் போது இளம் வயதில் கூட இருந்தவர்கள் மீது அன்பு கூடி விடுகிறது. அவர்கள் பின்னொரு காலத்தில் எதிராகச் செயல்பட்டிருந்தாலும் கூட அந்தத் தவறுகளை மறந்து மன்னித்து விடத் தோன்றுகிறது. முந்தைய நல்ல நினைவுகளே மறுபடி மேலோங்கி நிற்கின்றன. தந்தை அவருக்கு எதிராக இருந்த காலத்தில் தக்காணப்பீடபூமியில் அவர் அடைக்கலம் புகுந்த நாட்களில் பெரும் நட்பு பாராட்டி துணை நின்றவர் ஷாஹாஜி. மாவீரர். பின் எதிராகச் செயல்பட்ட நேரங்களிலும் முழுத்தவறும் அவர் மீது தான் என்று சொல்லி விட முடியாது. எல்லா சமயங்களிலும் விசுவாசமாக இக்காலத்தில் யார் தான் இருக்கிறார்கள். அவரவர் லாபநஷ்டக் கணக்குகள் பார்த்தே அனைவரும் நடந்து கொள்கிறார்கள்.

மேலும், மகன் செயலுக்காக ஷாஹாஜியைக் கொல்வது சரியென்று தோன்றவில்லை. ஷாஜஹான் தன்னுடைய பிள்ளைகளை நினைத்துக் கொண்டார். யாரும் தந்தையின் பேச்சை முழுவதுமாகக் கேட்டு நடப்பவர்கள் அல்ல. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொருவர் முரண்டு பிடிக்கிறார்கள். கூட இருக்கையிலேயே பிள்ளைகளை அடக்க அவர் சிரமப்படுகிறார். அப்படி இருக்கையில் எப்போதுமே தொலைவில் இருக்கும் மகனை ஷாஹாஜி எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? தன்னைப் போலவே ஒரு தந்தையான ஷாஹாஜி மேல் அவருக்கு இரக்கமே தோன்றியது…

அரசியல் லாபம் என்று பார்த்தாலும் இந்தச் சூழ்நிலையில் சிவாஜி பக்கம் சாய்வது லாபம் என்று ஷாஜஹானுக்குத் தோன்றியது. அவனைப் போன்ற பலமான சேவகன் தெற்கில் இருப்பது மிக நல்லதென்றே தோன்றியது. ஆதில்ஷாவின் நஷ்டம் பற்றி அவருக்குக் கவலையில்லை. இப்போது அங்கிருக்கும் குழப்பமான சூழ்நிலையில் அவர் பக்கம் ஷாஹாஜியும் சிவாஜியும் வருவார்களேயானால் அது மிகப்பெரிய லாபம்….. அகமதுநகர் அரசைக் கவிழ்த்து விழுங்கியது போல இவர்கள் துணையுடன் பீஜாப்பூர் அரசையும் இணைத்துக் கொள்ள முடியும்……. !


டுத்தடுத்து இரண்டு கோட்டைகளின் அதிகாரிகள் வந்து சிவாஜி நிர்வாகத்தை ஒப்படைத்து விட்டுத் தன் படைகளை விலக்கிக் கொண்டு சென்று விட்டதாகத் தெரிவித்த போது ஆதில்ஷா மகிழ்ந்தார். சிவாஜி இவ்வளவு சீக்கிரம் பணிந்து விடுவான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. சிவாஜி அவரிடம் எழுத்து மூலம் கூடத் தெரிவிக்காமல் ஒவ்வொரு கோட்டையாக விட்டுக் கொடுக்க ஆரம்பித்திருப்பது பெரும் வெற்றியாகத் தோன்றியது. எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டுக் கடைசியில் தன் செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பான் என்று தோன்றியது. நேரில் வரப் பயப்படுகின்றான். அவன் உயிருக்கு அவர் உத்தரவாதம் கொடுத்தால் கண்டிப்பாக நேரில் வந்தே மன்னிப்புக் கேட்பான்…… கடுமையாகக் கண்டித்து விட்டு எதிர்காலத்தில் இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்று அவன் பெற்றோர் இருவர் மேலும் சத்தியம் செய்து கொடுத்தால் மன்னித்து விடலாம். ஆனால் அதையும் ஆரம்பத்திலேயே சொல்லி விடக்கூடாது. நன்றாகப் பயமுறுத்திய பிறகு தான் ஒப்புக் கொள்ள வேண்டும்…..

ஷாஹாஜியின் நண்பரான மீர் ஜும்லா ஆதில்ஷாவிடம் மெல்லக் கேட்டார். “இனி நாம் ஷாஹாஜியை அந்த சமாதிச்சுவர்களுக்கு வெளியே கொண்டு வந்து விடலாம் அல்லவா?”

ஆதில் ஷா சொன்னார். “முதலில் மற்ற கோட்டைகளும் ஒப்படைக்கப்பட்ட தகவல் வந்து சேரட்டும். கல்யாண் நிதியையும் அவன் ஒப்படைக்கட்டும். பின்பு ஷாஹாஜியை விடுவிப்பது பற்றி யோசிக்கலாம்”

அடுத்த மூன்று நாட்கள் கழிந்து போயின. சிவாஜி கைப்பற்றிய மற்றெந்தக் கோட்டைகளில் இருந்தும் எந்தத் தகவலும் இல்லை. ஆதில்ஷா குழம்பினார். ’சிவாஜியை யூகிக்கவே முடியவில்லையே. ஏன் மற்ற கோட்டைகளை ஒப்படைக்க யோசிக்கிறான். இந்த இரண்டு கோட்டைகளிலேயே நான் திருப்தி அடைந்து விடுவேன் என்று நினைக்கிறானா அந்தத் திமிர் பிடித்தவன்!’ அவருக்குக் கோபம்  அதிகரிக்க ஆரம்பித்தது. அவர் சிவாஜிக்குக் கொடுத்திருந்த கெடு முடிய இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன.

அவருக்கு இப்போது காத்திருப்பது கஷ்டமாகத் தோன்றியது. கொண்டானா கோட்டை வலிமையான கோட்டை. சிவாஜி ஒப்படைத்த இன்னொரு கோட்டை சாதாரணமானது. இரண்டை மட்டும் ஏன் உடனே ஒப்படைத்தான். மற்ற கோட்டைகளை ஒப்படைக்க ஏன் காலதாமதம் செய்கிறான். அவன் திட்டம் தான் என்ன? தெரிந்து கொள்ளாவிடில் மண்டை வெடித்து விடும் போல் இருந்ததால் ஆதில்ஷா மறுபடி தன் ஆலோசகர்களை வரவழைத்து அவர்களது அனுமானங்களைக் கேட்டார்.

“அரசே! இரண்டு கோட்டைகள் கிடைத்தவுடன் ஷாஹாஜியை நீங்கள் விட்டு விடுவீர்கள். பின் பேரம் பேசலாம் என்று சிவாஜி நினைத்திருக்கலாம்”

“மன்னா. இரண்டு கோட்டைகள் கிடைத்தவுடன் சமாதிச்சுவரில் இருந்து வெளியே ஷாஹாஜியை நீங்கள் கொண்டு வந்து விடுவீர்கள் என்று எதிர்பார்த்திருப்பான். முன்பளவுக்கு தீவிரக் காவலில் நீங்கள் வைக்க மாட்டீர்கள் என்று நினைத்திருப்பான். காவல் தளர்ந்திருந்த வேளையில் அவரை இரகசியமாய் தப்பிக்க வைத்து விடலாம் என்று கூட நினைத்திருப்பான் எமகாதகன்”

“உங்கள் எதிர்வினை என்று அறிய அவன் காத்திருக்கலாம் அரசே”

“ஆமாம் அரசே, அவன் ஒற்றர்கள் இங்குள்ள நிலவரத்தை அறியக் காத்திருக்கலாம் . அவர்கள் மூலம் நிலவரம் தெரிந்து கொண்டு அடுத்தது என்ன என்று முடிவு செய்ய நினைத்திருப்பான்”

ஆதில்ஷா அவரை சிவாஜி குறைத்து மதிப்பிடுகிறான் என்று எண்ணி வெகுண்டார். “நான் கொடுத்த கெடுவில் இருந்து ஒரு கணத்தைக் கூட நீட்டிக்க மாட்டேன். என் ஆழத்தை சிவாஜி இனி மேல் தான் புரிந்து கொள்வான். “ என்று கடுமையாகச் சொன்ன அவர் ஷாஹாஜியைச் சுற்றி இருந்த காவலை இருமடங்காக்கினார். சிவாஜி ஏதாவது சாகசம் காட்ட நினைத்தால் கண்டிப்பாக ஏமாந்து போவான்!

மேலும் ஒரு நாள் நகர்ந்தது. நாளை தான் அவர் விடுத்த கெடு முடிவடையப் போகிறது. இன்றாவது கண்டிப்பாக மற்ற கோட்டைகளில் இருந்து தகவல் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவர் சிறிதும் எதிர்பாராத விதமாக முகலாயச் சக்கரவர்த்தியிடம் இருந்து தான் ஒரு தூதன் பீஜாப்பூர் வந்து சேர்ந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்    

5 comments:

 1. not able to wait for this series every week bro... please release book ASAP

  ReplyDelete
 2. ஐயோ சிவாஜி ஷாஜஹானிடம் உதவி கேட்க நேர்ந்து விட்டதே. இனி ஷாஜஹானை எப்படி சமாளிக்கப் போகிறான். ஏன் சார், ஷாஜஹானின் தூதர் என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறான் என்று சொல்லி விட்டுத் தொடரும் போட்டால் குறைந்தா போயிருப்பீர்கள். அடுத்த திங்கட்கிழமை வரை மண்டையைக் குடைந்து கொண்டு இருக்கும்படி வாரா வாரம் செய்கிறீர்களே . நியாயமா?

  ReplyDelete
 3. Sivaji is real genius. Here also he plays with the Moghul emperor and Bijapur sultan tactfully. Your writing makes things more real and interesting. Hats off Ganeshan sir.

  ReplyDelete
 4. சிவாஜி இரண்டு கோட்டைகளை ஒப்படைத்தது ஆதில்ஷாவை குழப்புவதற்க்கு தானோ...
  சிவாஜியின் லட்சியமே தன் பூமியை தானே ஆள்வது தானே... இப்போது ஷாஜஹானிடம் சேகவராக இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

  ReplyDelete