சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 26, 2018

சத்ரபதி – 48


ன்னைச் சுற்றி நாலாபுறமும் எழுப்பப்பட்டு வரும் சுவர்களைப் பணியாளர்கள் கட்டுவதாக ஷாஹாஜி நினைக்கவில்லை. ஒவ்வொரு கல்லாக விதியே எடுத்து வைப்பதாகவே அவர் உணர்ந்தார். மரணம் எத்தனை அருகில் என்று தெரியவில்லை. விரக்தியின் உச்சத்தில் எல்லாவற்றையும் விதி விட்ட வழி என்று கண்களை மூடி உள்ளே அமர்ந்திருந்த அவர் இதயத்தின் ஒரு மூலையில் சிவாஜிக்காக இரத்தம் கசிந்தது. வாழ்ந்த நாட்களில் அவர் சிவாஜிக்காகப் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவன் திறமையால், முயற்சியால் வீரத்தால் தான் பெரும்பாலான வெற்றிகளைப் பெற்றிருக்கிறான். பீஜாப்பூர் சாமராஜ்ஜியத்தையே  அவன் தன்னுடைய  சாமர்த்தியத்தாலேயே வெற்றிகரமாக எதிர்த்தும் சமாளித்தும் வருகிறான். இந்த நேரத்தில் தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை அறிந்த பின் அவன் மனநிலை எப்படி இருக்கும் என்று அவர் யோசித்துப் பார்த்தார்.  கண்டிப்பாக அவர் மகன் துடித்துப் போவான் என்பதை அவர் அறிவார். அவனுடையது என்று அவன் எதை நினைக்கிறானோ அதை உயிருக்கு உயிராக நேசிப்பவன் அவன்.  தன் தந்தைக்குத் தன்னால் இப்படி நேர்ந்ததே என்று கண்டிப்பாக வேதனைப்படுவான். அவன் தந்தையைக் காப்பாற்ற வேண்டுமானால் அவன் கஷ்டப்பட்டுப் பெற்றது அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அப்படி அவன் இழப்பதில் அவருக்கு வருத்தமே. தன்னால் சாதிக்க முடியாததை எல்லாம் அந்த மகன் சாதிக்க இரகசியமாய் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவர் அவர். அவன் அப்படிச் சாதிக்க இப்போது அவரே தடையாக இருப்பது நிறையவே உறுத்தியது. அவன் அப்படி ஒப்படைத்து சரணடையா விட்டாலோ அவர் உயிரை விட வேண்டியிருக்கும். இறப்பதில் அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. ஓரு வீரராக அவர் அதற்கு என்றைக்குமே மரணத்திற்குத் தயாராக இருப்பவர் என்றாலும்  சிறுவனாக இருக்கும் இளைய மகன் வெங்கோஜிக்கு அவர் ஆற்ற வேண்டிய கடமைகளை அவர் செய்து முடிக்காமலேயே இறப்பதில் அவருக்கு வருத்தம் இருந்தது…. ஒரு தந்தையாக இருதலைக்கொள்ளி எறும்பாய் அவர் தவித்தார்.  அவரால் ஒரு பிள்ளை பாதிக்கப்படுவது உறுதி. அது எந்தப்பிள்ளை என்பதை விதி தான் சிவாஜியின் எதிர்வினை மூலம் தீர்மானிக்கப் போகிறது….. சிவாஜி என்ன செய்யப் போகிறான்?


சிவாஜி ஷாஹாஜி எதிர்பார்த்தது போலவே துடித்துப் போனான். 
 கர்னாடகத்தை திறம்பட நிர்வாகம் செய்து வந்த ஷாஹாஜி பீஜாப்பூர் அரசின் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்ததால் ஆதில்ஷா இப்படி ஒரு அதிரடி முடிவை எடுப்பார் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுடைய எல்லாச் செயல்களிலும் ஷாஹாஜியின் பங்கில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தும் ஆதில்ஷா அவரைத் தண்டிக்கத் துணிவார் என்று அவர் நினைக்கவில்லை. சிவாஜியைப் பணிய வைக்க இந்த வழியை அவர் தேர்ந்தெடுத்திருந்தது அவனை அதிர வைத்தது. செய்தி கிடைத்ததும் தலையில் இடிவிழுந்தது போல உணர்ந்த அவன் தாயிடம் தகவலைத் தெரிவிக்கச் சென்ற போது அவன் கண்கள் கலங்கி இருந்தன.

ஜீஜாபாய் மகனைப் பார்த்தவுடனேயே பெரியதொரு அசம்பாவிதம் நடந்து விட்டிருக்கிறது என்பதை உணர்ந்தாள். அவள் மகன் அனாவசியமாய்க் கண்கலங்குபவன் அல்ல. கடைசியாக தாதாஜி கொண்டதேவின் மரணத்தின் போது அவன் கண்கள் கலங்கியதைப் பார்த்திருக்கிறாள். அதற்கு முன் அவன் அழுதது குழந்தையாக இருக்கும் போதாக இருந்திருக்கலாம். அவளுக்குச் சரியாக நினைவில்லை. அவள் கவலையுடன் கேட்டாள். “என்ன ஆயிற்று சிவாஜி?”

“நானே என் தந்தைக்கு எமனாக மாறியிருக்கிறேன் தாயே!” சிவாஜியின் குரல் தளர்ந்திருந்தது.

“என்ன உளறுகிறாய்?” ஜீஜாபாய் மகனைக் கோபித்துக் கொண்டாள்.

சிவாஜி மெல்ல தனக்குக் கிடைத்த தகவலைச் சொன்னான். கேட்ட பிறகு ஜீஜாபாயும் அதிர்ந்து போனாள். அவள் அதிர்ச்சியைக் கவனித்த சிவாஜி அவளாக எதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் ஜீஜாபாய் பேச்சிழந்து அமர்ந்திருந்தாள்.

சிவாஜி தாயிடம் நெருங்கி வந்தான். அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே பெருந்துக்கத்தோடு கேட்டான். “இப்போது என் தந்தை என்னை வெறுத்துக் கொண்டிருப்பாரா தாயே? என்னால் அல்லவா அவருக்கு இத்தனை பிரச்னையும்…..”

ஜீஜாபாய் மகனிடம் நெகிழ்ந்த குரலில் சொன்னாள். “தன் விதியை நொந்து கொண்டிருப்பாரே ஒழிய உன்னை எக்காலத்திலும் உன் தந்தை வெறுக்க மாட்டார் சிவாஜி…”

கண்களில் நீர் பெருக ஆரம்பிக்கவே சிவாஜி தாயின் மடியில் முகம் புதைத்துக் கொண்டான். மகன் தலையைப் பாசத்துடன் கோதியபடியே ஜீஜாபாய் மென்மையாகச் சொன்னாள். ”அவரால் முடியாதது எல்லாம் உனக்கு சாத்தியப்பட வேண்டும், நீயாவது நிறைய சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் அவர் சிவாஜி. இது வரை நீ செய்ததை எல்லாம் அவர் வாய்விட்டுச் சொல்லா விட்டாலும் மனதில் பெருமையாகவே நினைத்திருப்பார்…..”

தாயின் மடியிலிருந்து முகத்தை எடுத்து விட்டால் பேரழுகை அழ வேண்டியிருக்கும் என்பது போல் உணர்ந்த சிவாஜி கஷ்டப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான். “நான் என்ன செய்யட்டும் தாயே?”

ஜீஜாபாய் என்ன சொல்வதென்று அறியாமல் திணறினாள். மகன் படிப்படியாகத் திட்டமிட்டு பெற்ற அனைத்தையும் கொடுக்கச் சொல்வதா? இல்லை கணவரைப் பலி கொடுப்பதா? இரண்டில் எதை அவள் சொல்வது? ஒன்றைச் சொன்னால் இன்னொன்று நஷ்டமாகுமே! மகனுக்குத் தந்தையும், மனைவிக்குக் கணவனும் மிக முக்கியம் தான். அந்த உறவை இழப்பதற்குப் பதில் வேறெதை வேண்டுமானாலும் இழக்கலாம்….. இதில் யோசிக்க ஒன்றும் இல்லை. ஆனால் சிவாஜியின் எதிர்காலத்தையும், அவன் கனவையும் அவளால் அந்தக் கணத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை. பெற்றதனைத்தையும் விட்டுக் கொடுப்பது அவன் கனவு கண்ட வாழ்க்கைக்கு நிரந்தர முற்றுப்புள்ளியை வைப்பது போல் தான். அதனால் அவளுக்கு அப்படி விட்டுக் கொடுக்கச் சொல்லவும் முடியவில்லை.

நீண்டதொரு கனத்த மௌனம் அவர்களுக்கிடையே நிலவியது. அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவாஜியின் முதல் மனைவி சாய்பாய் மெல்ல முன்னால் வந்தாள். “நான் ஒன்று சொல்லலாமா?” என்று மெல்லக் கேட்டாள்.

ஜீஜாபாயும், அவளது மடியிலிருந்து தலையை எடுத்த சிவாஜியும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இதுநாள் வரை சாய்பாய் இது போன்ற அரசியல் பேச்சுக்களிலோ, விவாதங்களிலோ பங்கு கொண்டதுமில்லை. கருத்து தெரிவித்ததும் இல்லை. இருவரும் ஆச்சரியத்துடன் தான் பார்த்தார்கள் என்றாலும் அந்தப் பார்வையால் அதிகப்பிரசங்கித்தனமாகக் கருத்து சொல்ல முன் வந்து விட்டோமோ என்ற சந்தேகம் மனதில் எழ சாய்பாய் இரண்டடி பின் வாங்கினாள்.

சிவாஜி மனைவியின் தயக்கத்தைப் பார்த்துச் சின்னப் புன்னகை பூத்தபடி சொன்னான். “தயக்கம் வேண்டாம். சொல்”

”உங்கள் தாத்தாவை அகமதுநகர் சுல்தான் கொன்ற பிறகு உங்கள் பாட்டி எடுத்த முடிவையே நீங்களும் எடுத்துப் பார்க்கலாமே. முகலாயச் சக்கரவர்த்தியின் உதவியை நாடலாமே….”

ஜீஜாபாய் மருமகள்கள் நாட்டு நடப்பைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குடும்பத்தின் பழைய நிகழ்வுகளை எல்லாம் சாய்பாய், சொய்ராபாய் இருவருக்கும் விரிவாகவே சொல்லி வைத்திருந்தாள். சோதனை மிகுந்த காலங்களில் சமகாலத்து அரசியல் குறித்த சரியான  தகவல்கள் பெண்களுக்குத் தெரியாமல் இருந்தால் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைகள் வரும் போது அது பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி விடும் என்று ஜீஜாபாய் நம்பினாள். அவளுடைய கஷ்டங்கள் அவளுடைய மருமகள்களுக்கு நேர வாய்ப்பில்லை என்றாலும் எதற்கும் தயார்நிலையில் பெண்களும் இருக்க வேண்டியது அவசியம் என்ற எண்ணம் அவளுக்கு எப்போதும் இருந்தது.

அதனால் ஜீஜாபாயின் தாய் மால்ஸாபாய் தன் கணவரும் மகனும் கொல்லப்பட்ட போது சிந்துகேத்தை இழக்காமல் இருக்க முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹானுக்கு எழுதிய கடிதம் எழுதியதை நினைவுகூர்ந்து சாய்பாய் சொன்னதை ஜீஜாபாய் மனதிற்குள் பாராட்டினாள். அவளுக்கும் அது நல்ல திட்டம் தான் என்று தோன்றியது. மகனுக்கு அவள் பார்வையாலேயே அதைத் தெரிவித்தாள்.

தாயும் அதை ஏற்றுக் கொண்டாலும் சிவாஜி அதிலும் சில சிக்கல்களை உணர்ந்தான். மனைவியின் ஆலோசனையைப் பாராட்டி அவளை அனுப்பி விட்டு நிறைய யோசித்தான். பீஜாப்பூர் சுல்தானின் நிபந்தனைகள் முழுவதையும் அவன் ஏற்றுக் கொள்ளாமல் அவன் தந்தையை ஒருவர் காப்பாற்ற முடியும் என்றால் அது முகலாயப் பேரரசராகத் தான் இருக்க முடியும். ஆனால் ஒரு ஆபத்திலிருந்து விலக இன்னொரு பேராபத்தை ஏற்க வேண்டுமா என்று அவனால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. பீஜாப்பூர் சுல்தானை விட முகலாயப் பேரரசர் மேலும் ஆபத்தானவர். வலிமையானவர். அவரிடம் போவது பெரிதல்ல. பின் விலகுவது சுலபமல்ல. மால்ஸாபாய்க்கு சிந்துகேத்தை முகலாயப் பேரரசர் ஷாஜஹான் தலையீட்டினாலேயே காப்பாற்ற முடிந்தது. ஆனால் இப்போதும் சிந்துகேத் படை முகலாயர்களுடன் இணைந்தே இருப்பதால் இன்று வரை அவர்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் சிவாஜி இன்னொருவர் தலைமையை என்றுமே ஏற்க முடியாதவன்…… அதே சமயத்தில் ஷாஹாஜியை அவனால் காப்பாற்ற முடியாவிட்டால் அவனையே அவன் மன்னிக்க முடியாது.  என்ன தான் செய்வது?

(தொடரும்)
என்.கணேசன்

7 comments:

  1. விரைவில் புத்தக வடிவில் வேண்டும் .... வெளியிடுங்கள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. சத்ரபதி ஜனவரியில் வெளியாகவிருக்கிறது.

      Delete
  2. How will be Sivaji's dilemma solved? If he goes to Shahjahan he has to obey the emperor. That is not in Sivaji's blood. Eager to know how he will act.

    ReplyDelete
  3. உணர்ச்சிகரமாக இந்த நாவல் நகர்கிறது. சார் சிவாஜி நாவலை விரைவில் வெளியிடுங்கள். சஸ்பென்ஸ் தாங்க முடிவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. சத்ரபதி நாவல் ஜனவரியில் வெளிவரவுள்ளது.

      Delete
  4. 'சிவாஜியின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்...?
    அடுத்து எவ்வாறு சிவாஜி பயணிப்பான்?' என்பதை அறிய காத்துக் கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete