சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 15, 2018

இருவேறு உலகம் – 110


விஸ்வம் மோசடி செய்து அனுப்பிய பணம் போன பாதையை  அனிருத் விவரித்தான். “பெரும்பாலான மோசடிப்பணம் ஒரே ஒரு அக்கவுண்டுக்குப் போய் அங்கேயே எடுத்து செலவு செய்யப்படறதில்லை.  ஒரு நாள்ல அது பல நாடுகள்ல இருக்கிற பல நிறுவனங்கள், பல ஆட்கள்னு கைமாறிப் போயிட்டே இருக்கும். அந்த நிறுவனங்கள் பெரும்பாலும் லெட்டர்பேட் கம்பெனிகளா பேருக்கு மட்டும் இருக்கும். ஆட்களும் போலியான அடையாளம், விலாசம் எல்லாம் தந்து அக்கவுண்ட் ஓப்பன் பண்ணினவங்களா இருப்பாங்க. கடைசியா தான் அது உத்தேசிச்சிருந்த சரியான அக்கவுண்ட் போய் சேரும். அதைக் கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம். அதுக்குப் பல காரணங்கள் இருக்கு. இந்த இடைப்பட்ட அக்கவுண்ட்கள் இருக்கிற சில நாடுகளோட சட்டதிட்டங்கள், சர்வதேச இண்டர்நெட் நடைமுறைச் சிக்கல்கள்னு உதாரணத்துக்குச் சிலதைச் சொல்லலாம். அதனால நாம் தேடிட்டு போகிற வழித்தடம் அதிகபட்சமாவே மூணாவது அல்லது நாலாவது அக்கவுண்ட்லயே நின்னுடும். அதுக்கும் மேல பணம் பத்து கை மாறி இருக்கும். அதை முறையான வழியில கண்டுபிடிக்க வழி இல்லை. என்னை மாதிரி ஆளுக குறுக்கு வழி, சட்டரீதியல்லாத வழின்னு போய்க் கண்டுபிடிக்கிறோம். ஆனால் அது குறுக்கு வழி, சட்டத்துக்கு புறம்பான வழிங்கறதுனாலயே கண்டுபிடிச்சுச் சொல்ற விஷயங்கள் எந்த நாட்டுக் கோர்ட்லயும் எடுபடாது…. அதனால நான் கண்டுபிடிச்சுச் சொல்றதும் உங்க தனிப்பட்ட தகவலுக்காக தானே ஒழிய இது சம்பந்தப்பட்டவங்களை தண்டிக்கவோ, பணத்தைத் திரும்ப வாங்கவோ உதவாது……”

அனிருத் சொன்ன தகவல்கள் க்ரிஷ் மிக நன்றாக அறிவான் என்றாலும் மாஸ்டருக்கு அந்தத் தகவல்கள் புதிது என்பதால் அவர் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டார்.

அனிருத் சொன்னான். “நம்ம இயக்கத்திலிருந்து திருடப்பட்ட பணமும் அப்படித்தான் போயிருக்கு….”

மாஸ்டர் கேட்டார். “கடைசியா எந்த பேர்ல இருக்கற அக்கவுண்டுக்குப் போயிருக்கு.?”

“போய்ச் சேர்ந்தது ஒரே அக்கவுண்டுக்கு அல்ல. ஆறு அக்கவுண்டுகளுக்குப் போயிருக்கு. அதுல அஞ்சு அக்கவுண்டுகள் தீவிரவாத இயக்கங்கள். அதுவும் ஒரே கொள்கையுள்ள தீவிரவாத இயக்கங்கள் அல்ல. ஒன்னுக்கு ஒன்னு எதிரான, எதிரும் புதிருமான அஞ்சு தீவிரவாத இயக்கங்களுக்குப் போயிருக்கு…”

மாஸ்டரும், க்ரிஷும் அதிர்ந்து போனார்கள். கனத்த சிறு அமைதிக்குப் பின் க்ரிஷ் கேட்டான். ”ஆறாவது அக்கவுண்ட்?”

”அதைத் தான் கண்டுபிடிக்க முடியலை. அந்த அளவு அந்த அக்கவுண்டை பாதுகாத்து வர்றாங்கன்னா அது அந்தத் தீவிரவாத இயக்கங்களையும் விட பயங்கரமானதாகவும், ரகசியமானதாகவும் இருக்க வாய்ப்பு இருக்கு. மத்த இடங்களுக்குப் போன தொகையை விட அந்த ஆறாவது அக்கவுண்டுக்குப் போன தொகை கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு அதிகம்.”

”அதைக் கண்டுபிடிக்க வழியே இல்லையா?” மாஸ்டர் கேட்டார்.

“வழியில்லாம இல்லை. மத்ததை  எல்லாம் விட அதிகமான பாதுகாப்போட அந்த அக்கவுண்ட் இருக்கு அவ்வளவு தான். எனக்கு இன்னும் ரெண்டு மூணு நாள் தந்தீங்கன்னா கண்டுபிடிச்சு சொல்லிடுவேன்.”

அப்படிக் கண்டுபிடிப்பதை க்ரிஷிடம் தெரிவிக்க மாஸ்டர் சொன்னார். அவருக்குச் சில நாட்கள் யோக சாதகங்கள் செய்து தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருந்தது. அதனால் இது போன்ற தகவல்களை க்ரிஷிடமே தரச் சொன்னார். க்ரிஷ் உதயின் அடியாளின் செல்போன் எண்ணை அவனுக்குத் தந்து அந்த எண்ணில் தொடர்பு கொள்ளச் சொன்னான்.

அனிருத் போன பிறகு அவன் தந்து விட்டுப் போன தீவிரவாத இயக்கங்கள் பெயர்களை  மாஸ்டர் ஆழ்ந்த யோசனையுடன் பார்த்தார். ஐந்தில் மூன்று அவர் அறிந்த இயக்கங்கள். மீதி இரண்டை க்ரிஷ் அவருக்கு விவரித்தான். இவனுக்குத் தெரியாத விஷயங்களே மிகவும் குறைவு என்று மாஸ்டருக்குத் தோன்றியது. எல்லாவற்றையும் பற்றியும் அறிந்திருக்கிறான். முக்கியமாக அடிப்படை விஷயங்களைத் தவறில்லாமல் அறிந்திருக்கிறான். அது அவரை ஆச்சரியப்படுத்தியது. இப்போது அவன் சொன்ன இரண்டு இயக்கங்கள் பற்றியும் கூட அவர்கள் கொள்கை என்ன, கோரிக்கை என்ன, அவர்கள் எதிரி யார், அவர்கள் எந்த நாடுகளில் அதிகமாய் இருக்கிறார்கள், அவர்களது முக்கியத் தலைவர்கள் யார் என்பதை யோசிக்காமல், எந்த உதவியும் இல்லாமல் சொன்னான்…

க்ரிஷிடம் மாஸ்டர் சொன்னார். “விஸ்வம் ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு பணம் அனுப்பியிருந்தால் அந்த இயக்கத்தோட கொள்கைல அவனுக்கு நம்பிக்கைன்னு சொல்லலாம். ஆனா  அனிருத் சொல்ற மாதிரி எதிரும் புதிருமாய் தான் இருக்கு. இந்த ஐந்தில் இரண்டுக்கு ஒன்று எதிரி. மீதி இரண்டும் கூட கொள்கை அளவில் மத்த இயக்கங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது. ஒன்னுமே புரியலயே க்ரிஷ்”

க்ரிஷ் சொன்னான். “அஞ்சுக்குமே ஒரு பெரிய ஒற்றுமை இருக்கே மாஸ்டர். தீவிரவாதம். அதை விஸ்வம் ஆதரிக்கிறான்….”

“ஆதரிச்சு இவனுக்கு என்ன லாபம் க்ரிஷ்…”

“எதோ இருக்கு மாஸ்டர். அது தெரிஞ்சுதுன்னா அவனை முழுசா புரிஞ்சுக்கலாம். இது வரைக்கும் அவனைப் புரிஞ்சுகிட்டதில் அவன் எதுவா இருக்கிறானோ அதுக்கு எதிர்மாறாய் தான் தன்னை மத்தவங்க கிட்ட காட்டிகிட்டு வாழ்ந்திருக்கிறான். உதாரணத்துக்கு உங்க கிட்ட அமானுஷ்ய சக்திகள் தனக்கு வராத விஷயம்னும், அதுல ஆர்வம் இல்லைன்னும் காண்பிச்சிருந்தான். அதே மாதிரி தான் அவன் ஸ்டீபன் தாம்சன் கிட்டயும் சொல்லியிருக்கான். ஆனா உண்மைல அவன் அதுல உங்களையும் விட மேலயே சக்தி வாய்ந்தவனா இருந்தான். அதனால அவன் ஒன்னு சொன்னா அதுக்கு எதிர்மாறான ஆள் தான் அவன்னு நாம சுலபமா முடிவுக்கு வரலாம். ஸ்டீபன் தாம்சன் கிட்ட அவன் சொல்லியிருக்கான் ”நான் சாதாரண மனிதன்….. எனக்கு அன்பும், கருணையும், இறை நம்பிக்கையும் நிறைந்ததாய் மனித மனம் இருக்க வேண்டும், இந்த உலகம் சமாதான பூமியாகத் திகழ வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தவிர வேறு எதிலும் ஆர்வமும் இல்லை…..” அப்படின்னா உலகம் சமாதான பூமியாகக் கூடாதுங்கறது தான் அவனோட முக்கிய கொள்கைன்னு புரியிது. அதை நான் ஸ்டீபன் தாம்சன் கிட்ட பேசறப்பவே ஓரளவு உணர்ந்தேன். அதுக்குத் தகுந்த மாதிரி தான் அவன் தீவிரவாத இயக்கங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்பி இருக்கான்…. தப்பான மன ப்ரோகிராம்கள் மூலமா சமூகம் எப்படியெல்லாம் சீர்குலையுதுன்னு ஸ்டீபன் தாம்சன் கிட்ட விவரமா கேட்டுத் தெரிஞ்சிருக்கான்னா அதைத் தனக்கு சாதகமா பயன்படுத்தறதுக்குன்னு தோணுது. இதை எல்லாம் பயன்படுத்தி கடைசியா அவன் என்ன சாதிக்கப் போகிறான்னு மட்டும் புதிரா இருக்கு மாஸ்டர்…. அது அனிருத் சொன்ன ஆறாவது அக்கவுண்ட் மூலமா நமக்குத் தெரிய வந்தாலும் வரலாம்….”

’எல்லா அறிவையும் மனிதன் உயரவும் பயன்படுத்த முடியும், அழிக்கவும் பயன்படுத்த முடியும். அறிவுக்கென்று தனி ஒரு வழிப்பாதை இல்லை. அதனாலேயே ஞானம் சேராத அறிவை அந்தக்கால ரிஷிகள் போதிக்கவில்லை.’  மாஸ்டரின் மனம் கனத்தது. உலக நன்மைக்காக நல்ல உள்ளங்கள் அனுப்பி வைத்த பணம், சேர்த்த செல்வம் எல்லாம் இப்போது அழிக்கும் சக்திகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதில் விளையும் அழிவுகளுக்கெல்லாம் அவரே அல்லவா பொறுப்பு ஏற்க வேண்டும். இதைத் தடுத்து நிறுத்தா விட்டால் அவரை அவரே மன்னிக்க முடியாது. அதைச் சாதிக்க வேண்டுமென்றால் சற்று முன் முடிவெடுத்தபடி யோக சாதகங்களைத் தொடர்ந்து தீவிரமாகச் செய்ய வேண்டும். யோக சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்….. மெல்ல எழுந்த மாஸ்டர் க்ரிஷிடம் சொல்லிக் கொண்டு தனிமையில் தியானத்துக்குச் சென்று விட்டார்.

க்ரிஷுக்கும் ஹரிணி ஏதாவது தகவல் அனுப்பி இருக்கிறாளா என்று பார்க்க இருந்தது. அவனும் அலைவரிசைகளில் ஹரிணியைத் தொடர்பு கொள்ள முயன்றான். ஹரிணியின் உதடுகளின் ஸ்பரிசம் அவன் உதடுகள் உணர்ந்தன. எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும் இவள் குறும்பு போக மாட்டேன்கிறது என்று தோன்றினாலும் மனம் ரசித்தது. மாஸ்டரின் குருவின் குடிலில் உட்கார்ந்து கொண்டு இந்த ரசனை தேவை இல்லை என்று எண்ணியவனாக வெளியே வந்து ஒரு மர நிழலில் அமர்ந்தான்.

மெல்ல பத்மாவதி அவன் நினைவில் வந்தாள். ஏன் இவள் அம்மாவை நினைக்கிறாள். அம்மாவிடம் ஏதாவது தெரிவிக்க விரும்புகிறாளோ?.... ”சே… முட்டாளே அவள் அவளுடைய அம்மாவை நினைத்திருக்க வேண்டும்.” என்று தன்னையே திட்டிக் கொண்டான். அம்மா என்றவுடனே அவனுக்கு அவன் அம்மா நினைவு வந்து விட்டது. அவளுக்கு அவள் அம்மா நினைவு அதிகம் வந்திருக்க வேண்டும். அவளைக் கவனிக்கவும், ஆறுதல் சொல்லவும் சொல்கிறாள் போல் இருக்கிறது…..

அவனும் அவளை மானசீகமாக முத்தமிட்டான். சரி என்ற தகவலை அனுப்பினான். அவளும் அதை ரசித்துப் பெற்றது போல் உணர்ந்தது கற்பனையா இல்லை நிஜமா தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அடுத்ததாக அவள் சொன்னதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.   நேரம் நிறைய போனது. படிகளில் கீழே இறங்குவது போல் கடைசியில் ஒரு காட்சி கண்முன் வந்து நின்றது. இது என்ன சுரங்கப் பாதையா? கீழே போக வேண்டுமா?

(தொடரும்)

என்.கணேசன்

3 comments:

 1. இடையில் வந்த 'அறிவு'பற்றிய தத்துவம் சூப்பர்....
  மாஸ்டர் தன் சக்திகளைக் கூட்டுவதை பார்க்கும் போது.... அவரின் அடுத்த செயல் என்ன? என்பதை அறிய ஆவல் அதிகமாகிறது...

  ReplyDelete
 2. க்ரிஷ், மர்ம மனிதனின் நோக்கம் பற்றி ,புரிந்து கொண்டான்...
  அதை அவன்புரிந்து கொண்ட விதம் சூப்பர்....
  இருமுக மனிதன்....என்று சொல்லலாமா....?

  ReplyDelete