என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, June 15, 2023

சாணக்கியன் 61

 

ம்பி குமாரனுக்கு ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் என்றாலே பிரச்சினை என்று பொருள் கொள்வது பொருத்தமாகத் தோன்றியது. அவர் இங்கே இருந்து மகதம் போய் மகத மன்னனிடம் என்ன பிரச்சினை செய்து கொண்டு வந்திருக்கிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவனுக்கு மகத மன்னன் மீது பெரிய மதிப்பொன்றும் இல்லை என்றாலும் ஆச்சாரியரைப் போன்ற ஒரு சாதாரண ஆசிரியர் மகதம் போன்ற வலிமை வாய்ந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தின் மன்னனிடம் போய் ஏதோ பிரச்சினை செய்து சபதமிட்டும் வருவது அதிகப்பிரசங்கித்தனமாகவே தோன்றியது. ஆம்பி குமாரன் கேட்டான். “என்ன பிரச்சினை? என்ன சபதம்?”

 

ஒற்றர் தலைவர் சொன்னார். “பிரச்சினை என்ன என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் மகத மன்னரை ஆட்சியிலிருந்து இறக்கி மகத மண்ணிலிருந்து துரத்தி விடுவதாகச் சொல்லி தான் ஆச்சாரியர் சபதம் செய்திருப்பதாகக் கேள்வி”

 

ஆம்பி குமாரன் திகைத்தான். அவன் தன் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு பைத்தியக்காரத்தனத்தைக் கேள்விப்பட்டதில்லை. மகதப் படைவலிமையைக் கண்டு ஆனானப்பட்ட அலெக்ஸாண்டரின் வீரர்களே அச்சம் கொண்டு மேற்கொண்டு போரிட மறுத்து அலெக்ஸாண்டரிடம் தாயகம் திரும்ப கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்கிற போது இந்தத் தனிமனிதர் அந்த மகத மன்னனிடமே இப்படிச் சபதமிட்டு வருவது அதிகம் படித்திருப்பதால் ஏற்படும் கர்வத்தினாலேயே இருக்க வேண்டுமென்று தோன்றியது. படிப்பது அதிகமானாலும் இப்படிப் பைத்தியம் பிடிக்கும் என்று அவன் எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறான். எதற்கும் தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஆம்பி குமாரன் ஒற்றர் தலைவரிடம் கேட்டான். “ஒருவேளை ஆச்சாரியருக்குப் புத்தி பேதலித்து விட்டதோ?”

 

ஒற்றர் தலைவர் சொன்னார். “அப்படித் தெரியவில்லை அரசே. பல பேருக்குப் பைத்தியம் பிடிக்க வைக்குமளவு அறிவும் சாமர்த்தியமும் கொண்ட மனிதராகவே நான் அவரைப் பார்க்கிறேன்.”

 

ஆம்பி குமாரன் பெருமூச்சு விட்டான். அதுவும் வாஸ்தவம் தான். எத்தனையோ முறை அந்த மனிதரின் சாமர்த்தியத்தையும், அசாத்திய அறிவு கூர்மையையும் நேரில் கண்டவன் அவன். மனத்தாங்கலுடன் அவன் ஒற்றர் தலைவரிடம் கேட்டான். “சபதமிட்டு வந்திருக்கும் ஆச்சாரியரை எப்படி தனநந்தன் தண்டிக்காமல் விட்டான்?”

 

“குழந்தைகளும், பண்டிதர்களும் என்ன தான் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொண்டாலும் அரசர் போன்ற உயர்நிலையில் இருப்பவர்கள் அப்படி உணர்ச்சி வசப்பட்டு தண்டித்துவிட முடியாது அரசே.  அவர்களைப் போய் தண்டிப்பதா என்றே எல்லோரும் கேட்பார்கள். மேலும் விஷ்ணுகுப்தர் தங்களைப் போன்ற அரச குமாரர்களுக்கும், அமைச்சர்கள், சேனாதிபதிகளின் பிள்ளைகளுக்கும் ஆசிரியராக இருந்திருப்பவர். அதனால் மகத மன்னர் அவச்சொல்லுக்கு ஆளாகாமல் இருக்க எதிர்வினை ஆற்றாமலிருந்திருக்கலாம். மேலும் அவரது பிரதம அமைச்சர் ராக்‌ஷசரும் மிக நிதானமானவர். எல்லாம் யோசித்து அவர்கள் பொறுமை காத்திருக்கலாம்....”

 

“ஆனால் அப்படி எல்லோரும் விட்டு தான் ஆச்சாரியர் இங்கே நமக்கு பிரச்சினை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார். ஆயுதங்களைத் திருட அவர் மாணவர்களை ஊக்குவிக்கிறார் என்பதற்கு நம்மிடம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?”

 

“இல்லை அரசே. ஆனால் இத்தனை காலம் இல்லாமல் இப்போது இரவு நேரங்களில் மாணவர்கள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பதும் கேட்டால் குழப்புவதும் சந்தேகத்தை அதிகரிக்க வைக்கிறது.”

 

“எதனால் இப்படி அவர் செய்கிறார் என்று ஏதேனும் யூகம் இருக்கிறதா?”

 

“இங்கேயோ அல்லது வேறெங்கேயோ புரட்சி செய்ய அவர் திட்டமிட்டு இருப்பதாகத் தோன்றுகிறது….”

 

இங்கே புரட்சி செய்ய என்ன காரணம் அவரிடம் இருக்கக்கூடும்.”

 

“அலெக்ஸாண்டருக்கு நீங்கள் நட்புக்கரம் நீட்டியதை அவர் விரும்பவில்லை என்பதைப் பலரிடம் அவர் பேசியதைக் கேள்விப்பட்ட பின் என்னால் யூகிக்க முடிகிறது அரசே.”

 

ஆம்பி குமாரனுக்குக் கோபம் வந்தது. அரசன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பதற்கும் விரும்புவதற்கும் அந்த ஆளுக்கு என்ன உரிமை இருக்கிறது. ஆசிரியன் தன் வேலையை ஒழுங்காகச் செய்தால் போதாதா? அரசின் முடிவுகளில் தலையிட அவர் யார்?

 

ஆம்பி குமாரன் கோபத்தோடு சொன்னான். “அவர் தான் இதற்குப் பின்னணியில் இருக்கிறார் என்பதை நம்மால் ஏதாவது விதத்தில் நிரூபிக்க முயன்றால் ராஜ துரோகத்திற்கான மரண தண்டனை கூட நாம் விதித்து விட முடியும். நிரூபணம் இருந்தால் யாரும் நம்மை எதுவும் சொல்ல முடியாது… திருடிச் சென்ற ஆயுதங்களை அவர்கள் எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தால் கூட நாம் நடவடிக்கைகள் எடுக்கலாம். அவர்கள் அதைக் கல்விக்கூடத்திலோ, ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் அவர்கள் பயிற்சிக் கூடத்திலோ ஒளித்து வைத்திருந்தால் நமக்கு மிக நல்லது. எதற்கும் நாம் அங்கெல்லாம் சோதனையிட்டுப் பார்த்தால் தான் என்ன?”

 

”அரசே அந்த இரண்டு இடங்களிலும் திருட்டுப் போன ஆயுதங்கள் இருக்க வாய்ப்பே இல்லை. வேறெங்கேயோ தான் அவர்கள் அவற்றை ஒளித்து வைத்திருக்க வேண்டும். ஆச்சாரியர் தந்திரக்காரர். அதனால் நீங்கள் அவரைத் தந்திரமாகத் தான் கையாள வேண்டுமேயொழிய வழக்கமான நடைமுறைகளில் அவரைக் கட்டுப்படுத்த வழியில்லை….”

 

ஆம்பி குமாரன் அந்த அறிவுரையைக் கேட்டு யோசனையில் ஆழ்ந்தான். ஒற்றர் தலைவர் சொல்வது சரியாகத் தான் அவனுக்குப் பட்டது. ஏதாவது சூழ்ச்சி வலை பின்னி தான் ஆச்சாரியரைச் சிக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்வது இப்போதைய தவறுக்கு அவரைத் தண்டித்தது போலவும் இருக்கும். அதே போல் அவர் அவன் இளமைக்காலத்தில் அவனை நடத்திய விதத்திற்குப் பழி வாங்கியது போலவும் இருக்கும். சொந்த வாழ்க்கை அதிருப்திகரமாக இருக்கையில் இது போல் பழி வாங்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதி.  யோசிக்க யோசிக்க அவன் மனம் இனித்தது.

 

யிற்சிக்கூடத்தில் சின்ஹரனை சந்திரகுப்தனும், சாணக்கியரும் சந்தித்த போது சின்ஹரன் சாணக்கியரிடம் சொன்னான். “இப்போது சில நாட்களாக ஒற்றர்கள் நடமாட்டம் இப்பகுதியில் அதிகமாக இருக்கிறது ஆச்சாரியரே…”

 

சாணக்கியர் அமைதியாகச் சொன்னார். “கல்விக்கூடப் பகுதியிலும் அவர்கள் நடமாட்டம் அதிகமாகத் தான் இருக்கிறது.  இது நாம் முன்பே எதிர்பார்த்தது தான். இதனால் நம் வேலைகள் நின்றுவிடப் போவதில்லை. வேலை செய்யும் இடங்கள் தான் மாறப்போகின்றன. நாம் வெளிப்பகுதிகளில் செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்தப் போகிறோம். சின்ஹரன் நீயும் சந்திரகுப்தனும் நாளையே கிளம்பி விடுங்கள்…”

 

எங்கேயெல்லாம் செல்ல வேண்டும், ஒவ்வொரு இடத்திலும் முக்கியமாக யாரைப் பார்க்க வேண்டும், அவர்கள் மூலமாக ஆக வேண்டியதென்ன என்று சாணக்கியர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த போது வழக்கம் போல் சின்ஹரனுக்குப் பிரமிப்பு தோன்றாமல் இல்லை. இந்த அளவுக்கு இவரால் எப்படித் தகவல்கள் சேர்த்து வைத்திருக்கவும், அதை நினைவுபடுத்தி  வைத்திருந்து கச்சிதமாகத் திட்டமிடவும் முடிகிறது என்று அவன் ஆச்சரியப்பட்டான். ஆச்சாரியர் சொன்னதை மிகவும் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்த சந்திரகுப்தனுக்கும் அதை நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கவில்லை. சின்ஹரன் தான் ஓரிரு முறை குழம்பி சந்தேகங்கள் கேட்டான். ஆச்சாரியர் பதில் சொல்வதற்கு முன் சந்திரகுப்தனே அவர் சொன்னதை அதே தெளிவோடு சொன்னது சின்ஹரனுக்குக் கூடுதல் பிரமிப்பாக இருந்தது. எப்படிப்பட்ட ஆசிரியர், எப்படிப்பட்ட மாணவன் என்று பிரமித்தான். இந்தக் கூட்டணி வெற்றி பெற முடியாவிட்டால் தான் ஆச்சரியம் என்று அவனுக்குத் தோன்றியது.

 

சாணக்கியர் அடுத்ததாகத் தான் செல்லவிருக்கும் இடங்களையும் சுருக்கமாகச் சொல்லி விட்டுத் தொடர்ந்தார். “பெரும்பாலான இடங்களில் நான் முக்கியமானவர்களிடம் முன்பே பேசிவிட்டு வந்திருக்கிறேன். நம் வேலைக்கான பிள்ளையார் சுழி முன்பே போட்டிருக்கிறேன். நான் சொன்ன சமயத்தில் அவர்களுக்கு அதன் முக்கியத்துவம் புரிந்திருக்கா விட்டாலும் கூட அலெக்ஸாண்டர் வந்து சென்ற பிறகு அதன் முக்கியத்துவம் கண்டிப்பாகப் புரிந்திருக்கும். பெரும்பாலான மனிதர்கள் அனுபவங்கள், கஷ்டங்கள் மூலமாகவே ஞானம் பெறுகிறார்கள். அதற்கு முன்பே நாம் அவர்களை எச்சரிக்கும் போது அவர்கள் அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். அது வருத்தத்திற்குரியது தான் என்றாலும் அதிலும் ஒரு கூடுதல் நன்மை இருக்கவே செய்கிறது. அடிபட்ட பின் ஞானமடைந்தவர்கள் அதன் பிறகு நாம் சொல்லும் வழிக்கு இரட்டிப்பு துடிப்புடன் வருவார்கள். அதனால் இப்போது நாம் அவர்களிடம் செல்லும் போது ஆதரவு அதிகமாகவே கிடைக்கும்…”

 

அவரது திட்டப்படி சின்ஹரனும், சந்திரகுப்தனும் மறுநாளும், சாணக்கியர் அதற்கடுத்த நாளும் வேறு வேறு திசைகளில் பயணித்தார்கள். சாணக்கியர் தட்சசீலத்தை விட்டு வெளியேறிய செய்தி கிடைத்து ஆம்பி குமாரன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். விட்டது சனியன் என்று தோன்றியது அவர் தட்சசீலத்திற்குத் திரும்பி வருவதற்குள் அவன் அவருக்காகப் போட்டிருக்கும் திட்டம் தயாராகக் காத்திருக்கும்.

 

(தொடரும்)

என்.கணேசன்

 



Monday, June 12, 2023

யாரோ ஒருவன்? 142



ஜீம் அகமது நான்காவது வழித்தடத்தில் செல்ல ஆரம்பித்தவுடனேயே கடைசி நேரத்தில் அவனும் அன்வரும் சேர்ந்து ரா தலைவரிடம் மறைமுக அனுமதி பெற்று மாற்றியிருந்த திட்டத்தை அந்த வழித்தடத்தில் சற்று தொலைவில் நின்றிருந்த காரில் ஒளிந்திருப்பவர்களிடம் நரேந்திரன் தெரிவித்தான். அந்த வழித்தடத்தில் மட்டும் தான் அந்த வசதியும், வாய்ப்பும் இருப்பதோடு அன்வரும் காத்திருக்கிறான் என்பதனால் அவர்கள் திட்டத்தில் செய்திருந்த சிறிய மாற்றத்தை நரேந்திரன் சொன்னவுடன் அவர்கள் சரியென்றார்கள்.

அஜீம் அகமதின் கார் அந்தக் காரைத் தாண்டியவுடன் அந்தக் காரும் கிளம்பியது. அதைக் கண்ட அஜீம் அகமது அதிர்ந்தான். அந்தக் கார்க்காரன் எதாவது முக்கியமான போன் பேச வேண்டியிருந்து காரை நிறுத்திப் பேசி விட்டு அவன் காரைக் கிளப்பியுமிருக்கலாம் என்றும் அவனுக்குத் தோன்றியதுதேவையில்லாமல் அதிர்ச்சி அடைகிறோமா என்ன என்று அவன் தன்னையே கேட்டுக் கொண்டான். ஆனாலும் அவன் தயாராகக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டை வீச ஒரு கை தயாராகி ஜன்னல் கண்ணாடியைக் கீழே இறக்கவும் இன்னொரு கை தயாராகியது. ஆனால் சிறிது தூரம் வரை சற்று தொலைவிலேயே வந்து கொண்டிருந்த அந்தக் கார் பின் நின்று விட்டது

அஜீம் அகமதின் சகா நிம்மதியடைந்தவனாய் சொன்னான். “அந்தக் கார்ல எதோ பிரச்சன போல இருக்கு பாஸ். நான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன்...”

அஜீம் அகமது முழுவதுமாக நிம்மதியடைந்து விடவில்லை. அவன் உள்ளுணர்வு மறுபடி எச்சரித்தது. அதனால் திரும்பிப் பார்த்தபடியே இருந்தான். அந்தக் காரின் உள்ளே விளக்கு எதுவும் எரியவில்லை. திடீரென்று வேகமாக அந்தக் கார்க்காரன் ஹாரன் அடித்தான். அந்த நேரத்தில் அஜீம் அகமதின் கார் ஒரு தெருக்கோடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. தெருக்கோடியில் ஒரு பெரிய இரும்புக் குப்பைத்தொட்டி தெரிந்தது. தெருக்கோடி வந்து கார் வலது பக்கம் திரும்ப வேண்டும்அந்தப் பகுதியில் கட்டிடங்கள் எதுவும் இல்லை. வலது பக்கம் திரும்பும் தெருவும் வெறிச்சோடிக் கிடந்தது.

கார் ஹாரன் சிக்னல் கிடைத்தவுடன் தெருக்கோடியில்  இருந்த குப்பைத் தொட்டியிலிருந்து ஒரு உருவம் திடீரென்று எழுந்து நிற்க காரை ஓட்டி வந்து கொண்டிருந்த அஜீம் அகமதின் சகா திகைத்தபடிபாஸ்என்றழைத்தான். அவன் அழைக்கும் வரை பின்னால் திரும்பி தூரத்தில் நின்று விட்டிருந்த காரையே பார்த்துக் கொண்டிருந்த  அஜீம் அகமதுஎன்னஎன்று கேட்டபடி திரும்பவும், குப்பைத் தொட்டியில் நின்று கொண்டிருந்த உருவம் எதையோ குறி பார்த்து எரியவும் சரியாக இருந்தது. அவன் எறிவது வெடிகுண்டு என்று அஜீம் அகமதுவும், சகாவும் உணர்ந்த நேரத்தில் அவர்களுக்குத் தற்காத்துக் கொள்ள எதுவும் செய்ய முடியவில்லை.  ஏனென்றால் அந்த உண்மை உறைத்த அந்த நேரத்தில் அந்த வெடிகுண்டும் அவர்கள் கார் மேல் விழுந்தது. பயங்கரச் சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து கார் தீப்பிடித்து எரிந்த போது அஜீம் அகமது உள்ளே வைத்திருந்த வெடிகுண்டும் சேர்ந்து வெடித்துச் சிதறியது. அஜீம் அகமதுவும் அவன் சகாவும் கூடச் சேர்ந்து சிதறினார்கள்     

குப்பைத் தொட்டியிலிருந்து அன்வர் வெற்றிப் புன்னகையுடன் வெளியே வர கண்காணிப்பறையில் நரேந்திரனும் மற்றவர்களும் வெற்றி கோஷமிட்டார்கள்.

அஜீம் அகமது நரேந்திரனின் தாயை வெடிகுண்டு வைத்துக் கொல்ல முயற்சி செய்தவுடன் அன்வர் நரேந்திரனிடம் சொல்லியிருந்தான். “அவங்க வழியிலயே அவங்கள கொன்னா என்ன? துப்பாக்கிச் சூட்டுல அவன் எப்படியாவது தப்பிக்கவும் வழியிருக்கு. ஆனா வெடிகுண்டு வீசினா அந்த இடத்துலயே ஆள் காலியாயிடுவான்.”

சட்டபூர்வமாக அது சரியல்ல என்றாலும் நரேந்திரனுக்கும் அது நல்ல வழியாகவும் சரியான நீதியாகவும் தோன்றியது. அவன் தலைவரிடம் சொன்ன போது அவரும் அப்படியே நினைப்பதாகச் சொன்னார்அங்குள்ள போக்குவரத்து குறைவையும், ஒளிந்து கொள்ள ஒதுக்குப்புறமான வீடுகளும் அதிகமுள்ள பகுதி அருகில் இருப்பதையும் அன்வர் சுட்டிக் காட்டி, அஜீம் அகமது போகும் வழித்தடம் இதுவாக இருக்கும் என்று அனுமானித்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பை தனக்கே தரும்படியும் கேட்டுக் கொண்டிருந்தான்.

கண்காணிப்பு அறையில் அத்தனை பதிவுகளும் கவனமாக உடனடியாக அழிக்கப்பட்டன. எதிர்காலத்தில் இந்தப் பதிவுகள் கசிந்து பிரச்னையாவதை அவர்கள் யாரும் விரும்பவில்லை.

அதிகாலையில் டெல்லி உயர் போலீஸ் அதிகாரி பத்திரிக்கையாளர்களிடம் சொன்னார். “உலக நாடுகள் பலவும் தேடி வந்த சர்வதேசத் தீவிரவாதி அஜீம் அகமது இந்தியாவிற்கு வந்திருக்கும் செய்தி உளவுத்துறைக்கு சில நாட்களுக்கு முன் எட்டியது. உடனே அவனைப் பிடிக்கஆபரேஷன் ஏஸ்கொயர்என்ற ரகசியத் திட்டத்தை உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கியது. மிகவும் இரகசியமாகச் செயல்பட்டு அவன் தங்கியிருக்கும் இடத்தை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அதை எப்படியோ அறிந்து விட்ட அஜீம் அகமது அங்கிருந்து தன்னுடைய கூட்டாளியுடன் ஒரு கருப்புக் காரில் தப்பியோடினான். அப்படித் தப்பி ஓடுகையில் நோய்டாவின் புறநகர்ப்பகுதியில் ஆபரேஷன் ஏஸ்கொயர் செயல்திட்ட வீரர்கள் அவன் காரைச் சுற்றி வளைத்தார்கள். போலீஸில் பிடிபட விரும்பாத அஜீம் அகமதுவும், அவன் சகாவும் தங்களிடமிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துக் கொண்டு பலியானார்கள். நரேந்திரன் ஐபிஎஸ் தலைமையில் நடந்த இந்த ஆபரேஷனில் துணிச்சலாகச் செயல்பட்ட செயல்வீரர் அன்வரின் பங்கு மகத்தானது…. பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அஜீம் அகமதை வீழ்த்திய இந்தியச் செயல்வீரர்களுக்கு உலக நாடுகளிலிருந்து பாராட்டு குவிந்து வருகிறது…”

டிவியில் இந்தச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனார்தன் த்ரிவேதி பதறிப்போய் காளிங்க சுவாமியின் சீடர்களுக்குப் போன் செய்தார். இரண்டு மணி நேரம் கழித்து தான் தொடர்பு கிடைத்தது. காளிங்க சுவாமியின் சீடன் அந்த ரத்தினக்கல் விஷயத்தில் சுவாமிஜி ஏமாந்து விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகச் சொன்னான். அவன் குரலிலும் உண்மையாகவே வருத்தம் தெரிந்தது. ஜனார்தன் த்ரிவேதி தன் காதுகளை நம்ப முடியாமல் திகைத்தார்.

அஜீம் அகமது இப்படி தற்கொலை செய்து கொள்வான் என்பதையும் அவரால் நம்ப முடியவில்லை. ஆனால் பிறகு சம்பவ இடத்தை ஆராய்ந்த நிபுணர்கள் வெடித்த இரண்டு வெடிகுண்டுகளில் ஒன்றில் அஜீம் அகமதின் தனி முத்திரைகள் இருப்பதைச் சுட்டிக் காட்டி அந்த வெடிகுண்டு அவனே தயாரித்திருக்கக்கூடிய வெடிகுண்டு என்று ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டிய போது அவர் சந்தேகம் தெளிந்தார். மிகவும் வருத்தமாக இருந்தாலும், மரணத்தைக் கூடத் தன் வழியிலேயே  தேடிக் கொண்ட அவனை எண்ணிப் பிரமிக்காமல் அவருக்கு இருக்க முடியவில்லை.


முடிவில்...

·         நரேந்திரன் மற்றும் அன்வர் இருவருக்கும் பதவி உயர்வு கிடைத்தது. உலகநாடுகள் அஜீம் அகமதுக்காக அறிவித்திருந்த பரிசுத் தொகைகள் ஆபரேஷன் ஏஸ்கொயர் செயல்வீரர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டதுதான் தயாரித்த வெடிகுண்டுகளால் ஏராளமானவர்களை மரணமடையச் செய்த அஜீம் அகமதின் மரணமும் அதே வழியில் நடந்ததைஇயற்கையின் நீதிஎன்று பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வர்ணித்தன.

·         நாகராஜ் அவனுடைய குருஜி குறித்துக் கொடுத்திருந்த நாளில் துறவியாக மாறி அந்த ஆசிரமத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். அவனுடைய நற்பணிகள் தொடர்ந்தன.

·         ரஞ்சனி சத்தியமங்கலத்திலிருக்கும் பரந்தாமன்-அலமேலு தம்பதியரிடம் தன் மகனை அழைத்துக் கொண்டு போய் அவன் உண்மையிலேயே மாதவனுடைய மகன் என்பதைத் தெரிவித்தாள். திருமணத்திற்கு முன்பு கருத்தரித்ததால் அதை வெளிப்படையாக அவளால் சொல்லியிருக்க முடியவில்லை என்றும், உண்மை தெரிந்தும் அவளைத் திருமணம் செய்து கொண்ட சரத் அதை வெளியே சொல்ல வேண்டாமென்றும் சொன்னதால் இத்தனை காலம் மௌனம் சாதித்ததாகவும், சமீபத்தில் ஒருநாள் திடீரென்று மாதவன் கனவில் வந்துஎன் பெற்றோரிடம் நம் மகனை அறிமுகப்படுத்துஎன்று கட்டளையிட்டதால் இப்போது வந்து சொல்வதாகவும் அவள் ஒரு கதை சொன்னாள்.

முதியவர்கள் இருவரும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்கள். அலமேலு ஆனந்தக் கண்ணீர் விட்டாள். சில நாட்களுக்கு முன் தன் கனவிலும் மாதவன் வந்ததைத் தெரிவித்த அவள் தீபக்கை முதல் முறை பார்த்த போதே மாதவனுக்கு ஒரு மகன் இருந்தால் இப்படி இருப்பான் என்று அவர்கள் இருவரும் நினைத்ததைச் சொன்னாள். விடுமுறை நாட்களில் ரஞ்சனியும் தீபக்கும் அவர்கள் வீட்டுக்கு வர பரந்தாமனும், அலமேலுவும் பேரனின் அன்பிலும் புத்திசாலித்தனத்திலும் பூரித்துப் போனார்கள்.

ஒருமுறை தீபக் தர்ஷினியையும் அழைத்து வந்து எதிர்கால மனைவியாக அறிமுகப்படுத்த அவளையும் அவர்களுக்குப் பிடித்து விட்டது.    22 வருட துக்கத்திற்கு நஷ்ட ஈடு தருவது போல் கடவுள் கடைசி காலத்தில் இப்படியொரு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருப்பதாக உணர்ந்தார்கள். அவர்கள் ஆனந்தத்தில் நாதமுனியும் இணைந்தார். அவருக்கும் தீபக்கை மிகவும் பிடித்திருந்தது.

சரத்தும், கல்யாணும் ஏன் வருவதில்லை என்று ஒரு முறை அலமேலு வருத்தத்துடன் கேட்ட போது மாதவனின் நினைவுகள் அவர்கள் மனதை இப்போதும் வேதனைப்படுத்துவதால் தான் வருவதில்லை என்று ரஞ்சனி சமாளித்தாள். என்னவொரு அன்பு என்று அலமேலு கண்கலங்கினாள். சில சமயங்களில் உண்மையை விடப் பொய்யே ஆறுதல், பொய்யே நிம்மதி, பொய்யே வாழ்க்கையைச் சுலபமாக்குகிறது!

·         வாரநாட்களில் தீபக் தினமும் வழக்கமான நேரத்தில் அந்த ரேஸ்கோர்ஸில் தவறாமல் வாக்கிங் செல்கிறான். கூடவே அவன் தந்தையும் வருவதாக உணர்கிறான். தந்தையிடம் சொல்லத் தோன்றுவதை எல்லாம் அவன் மனதுக்குள் சொல்கிறான். தந்தை கேட்பதாகவும் உணர்கிறான். அவன் தந்தையின் கைவிரல்களின் ஸ்பரிசமும் கூட அவன் உணர்கிறான். எல்லாம் அவன் கற்பனையா இல்லை நாகராஜ் தன் சக்தியின் மூலம் அந்த உணர்வை ஏற்படுத்துகிறானா என்பது தெரியவில்லை.

·         சரத் வாழ்க்கையில் இருந்த ஒரே பிடிப்பு தீபக்கின் அன்பாய் தான் இருந்தது. தீபக் மட்டும் முன்பு போலவே அவனிடம் பாசமாய் இருந்தான். ரஞ்சனி அதே வீட்டில் அவனுடன் வாழ்ந்தாலும் அன்னியமாகவே இருந்தாள்.

·         கல்யாணின் தொழில் பிரச்னைகள் தீரவில்லை. பல கோடி நஷ்டத்தைச் சந்தித்த அவனுடைய நிதி நிலைமை முன்பிருந்ததில் கால் பாகமாகக் குறைந்தது. கடனை அடைக்க அவன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸையும், கோத்தகிரி எஸ்டேட்டையும் விற்க வேண்டி வந்தது. அவன் கெஞ்சிக் கூத்தாடி மனைவி மகளை ஒரு மாதம் கழித்து வீட்டுக்கு வரவழைத்தாலும் அவர்களுக்கு அவன் மீது பழைய அன்பும், மரியாதையும் இல்லாமலேயே போயிற்று. வேலாயுதம் எந்தப் பாம்பாட்டியைப் பார்த்தாலும் ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து விட்டு, பின் ஏமாற்றத்துடன்   நகர்கிறார்.

·         சஞ்சய் ஷர்மாவும், மதன்லாலும் அரைப்பைத்தியங்களாகவே இருக்கிறார்கள். அவர்களைக் குணமாக்க முடியாமல் ஜனார்தன் த்ரிவேதி அவர்களை அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். அவர்கள் மனைவிகள் அவர்களைச் சமாளிக்க முடியாமல் வீட்டில் கயிற்றால் கட்டிப் போடுவதாகப் பின்பு கேள்விப்பட்டார். நரேந்திரன் அவர்களைக் கட்டிப்போட்ட நேரம் அவர்களுடைய மீதி வாழ்க்கையையும் அப்படியே செய்து விட்டதே என்று மனம் புழுங்குவார். இப்போதெல்லாம் அவர் காளிங்க சுவாமியைத் தரிசிக்கவும் போவதில்லை. இனி அவர் கட்சி ஆட்சிக்கு வரும் அறிகுறியே இல்லை என்பதால் விரக்தியுடன் வாழ்கிறார்.

· மதன்லாலையும், சஞ்சய் ஷர்மாவையும் அந்த ஃபேக்டரியில் கண்டுபிடித்தவுடனேயே அஜீம் அகமது தான் கடத்தி வைத்திருந்த க்யான் சந்தை கொன்றிருந்தான். மகேந்திரன் கொலையான விதத்தை அவன் சொல்லி விடக்கூடும் என்பதோடு, சஞ்சய் ஷர்மாவையும், மதன்லாலையும் கடத்திய பழியோடு இந்தப் பழியையும் நரேந்திரன் மீது சுமத்த அஜீம் அகமது எண்ணியிருந்தான். கொலைப்பழியும் சேர்ந்தால் நரேந்திரனுக்குத் தூக்கு தண்டனை நிச்சயம் என்று அவன் குறுக்கு மூளை கணக்குப் போட்டிருந்தது. மதன்லால், சஞ்சய் ஷர்மா இருவரும் பகிரங்கமாக நரேந்திரன் மீது குற்றச்சாட்டு சொன்ன மறுநாளே க்யான் சந்த் உடல் புதைக்கப்பட்ட இடத்தைப் போலீஸுக்குத் தெரிவிக்க எண்ணியிருந்தான். ஆனால் நரேந்திரன் மீது குற்றம் சாட்டும் நிலைமைக்கு மதன்லால், சஞ்சய் வராததால் இவன் இறந்த தகவலும் வெளிவராமலேயே தங்கி விட்டது. இப்போதும் போலீஸார் க்யான் சந்தைத் தேடி வருகிறார்கள்.   

·         பாம்பாட்டியும், பீம்சிங்கும் தங்கள் பழைய வழிகளை மாற்றிக் கொண்டு வியாபாரிகளாக மாறி விட்டார்கள். செல்வம் நல்ல முறையில் அவர்களிடம் சேர்ந்து கொண்டே போனது. பாம்பாட்டி அதற்கு நாகரத்தினக்கல்லைக் காரணமாக நினைக்கிறான். பீம்சிங் அனுமாரின் அனுக்கிரகத்தைக் காரணமாக நினைக்கிறான்.

·         காளிங்க சுவாமியின் ஒரு சீடன் அவரோடிருப்பதில் இனி பெரிய எதிர்காலம் இல்லை என்று எண்ணி அவரை விட்டுப் போய் விட்டான். ஒரு வேளை விசேஷ நாகரத்தினம் அவரிடம் வந்திருந்தால் அதை எடுத்துக் கொண்டு போகிறவன் அவனாகத் தான் இருந்திருப்பானோ என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. நாகசக்தியால் மற்றவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது போல் விசேஷ நாகரத்தினம் ஏற்படுத்த முடிந்த விளைவுகளை அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. விசேஷ நாகரத்தினத்தை முதலில் அடைந்த நாகராஜ் மட்டுமே அதன் விசேஷத் தன்மைகளையும், ரகசியங்களையும் அறிந்தவன். ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை உருவாக முடிந்த விசேஷ நாகரத்தினத்தின் மீதிப்பயணத்தில் தனக்கு இடமில்லை என்று உணர்ந்து அவன் அனுப்பி விட்டான் என்பதை மட்டுமே அவரால் யூகிக்க முடிந்தது. மற்றதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. காளிங்க சுவாமி மாகாளியிடம் கேட்ட போதும் அது இப்போது சேர வேண்டிய இடமாக கங்கையைக் காட்டியதோடு நிறுத்திக் கொண்டாள். மீதியை அவளும் சொல்லவில்லை. இனி அது எப்போது யார் கைக்குப் போகும், அதன் பின் என்ன ஆகும் என்பதையாவது அறிந்து கொள்ள அவ்வப்போது அவருக்கு ஆர்வம் ஏற்படுவதுண்டு. ஆனால் காலம் தன் ரகசியங்களை ஒரே சமயத்தில் வெளிப்படுத்தி விடுவதில்லை. அப்படி வெளிப்படுத்தி விட்டால் அதன் பின் வரப்போவதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?


முற்றும்.

என்.கணேசன்




(அடுத்த திங்கள் முதல் யோகி நாவல் வாரா வாரம் வெளியாகும்)

Thursday, June 8, 2023

சாணக்கியன் 60

ம்பி குமாரனுக்கு அலெக்ஸாண்டர் விஷயத்தில் தன் நிலைப்பாடுகள் சரியா தவறா என்று தெளிவான அபிப்பிராயத்தை எட்ட முடியவில்லை. ஒவ்வொரு முறை ஒவ்வொன்று அவனுக்குத் தோன்றியது. அலெக்ஸாண்டரை எதிர்த்துப் போரிட்டு மகன்களையும், படைகளில் ஒரு கணிசமான பகுதியையும் இழந்து பின் கடைசியில் ஆம்பி குமாரனைப் போலவே அலெக்ஸாண்டரின் தலைமையை ஏற்றுக் கொண்ட கேகய மன்னன் புருஷோத்தமனை எண்ணிப் பார்க்கையில் இந்தச் சேதாரங்கள் இல்லாமல் முதலிலேயே நட்புக்கரம் நீட்டி ஏற்றுக் கொண்டது நல்ல புத்திசாலித்தனமாகத் தோன்றியது. ஆனால் இன்னொரு விதமாகப் பார்த்தால் அலெக்ஸாண்டரின் பார்வையில் புருஷோத்தமன் உயர்ந்து, ஆம்பி குமாரன் தாழ்ந்து விட்டபடியும் தோன்றியது. அதை உணர்த்தும் விதமாக அலெக்ஸாண்டர் புருஷோத்தமனை அழைத்துக் கொண்டு போகத் தீர்மானித்து ஆம்பி குமாரனைக் கழற்றி விட்டதும் அவமானமாக இருந்தது.  

 

நட்புக்கரம் நீட்டியதாலேயே அலெக்ஸாண்டரின் நண்பனாகவும் பிரதிநிதியாகவும் அந்தப் பிராந்தியத்தில் ஆட்சி செலுத்தலாம் என்று அவன் ஆரம்பத்தில் நினைத்தது தப்புக்கணக்கு என்பது பிறகு புரிந்தது. அலெக்ஸாண்டர் ஒவ்வொரு இடத்திலும் மேற்பார்வைக்கு ஒரு பிரதிநிதியை நியமிப்பான் என்றெல்லாம் அவன் எதிர்பார்க்கவில்லை என்பதால் பிலிப் காந்தாரத்திற்கு நியமிக்கப்பட்ட போது பெரியதொரு ஏமாற்றத்தை ஆம்பி குமாரன் உணர்ந்தான். ஆனாலும் பிறகு அது பழகி விட்டது. மேலும் பெயருக்கு இப்போதும் அவன் தான் காந்தாரத்தின் அரசனாக இருக்கிறான். பிலிப் அவனுடைய சிம்மாசனத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளவில்லை. அரண்மனையில் பங்கு கேட்கவில்லை. குடிமக்கள் முன்னிலையில் ஆம்பி குமாரனைத் தர்மசங்கடப்படுத்தவில்லை. அதனால் எல்லாம் ஆம்பி குமாரன் ஓரளவு திருப்தியை உணர்ந்தான். அதேசமயத்தில் திடீர் திடீர் என்று படையினரை அலெக்ஸாண்டர் சொல்லும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கு முன் பிலிப் அவனிடம் சம்பிரதாயத்துக்குக் கூட அனுமதி கேட்கவில்லை. அவன் கேட்டால் இவன் மறுக்கப் போவதில்லை என்றாலும் கூட பிலிப் அனுமதி கேட்காதது ஆம்பி குமாரனுக்கு அதிருப்தியை அளித்தது.

 

இரவு நேரங்களில் தூங்க முடியாமல் இப்படி மாறி மாறித் தன்னுடைய நிலைமை பற்றிய எண்ணங்களில் ஆம்பி குமாரன் ஆழ்ந்திருப்பான். இன்றும் அவன் அப்படிப் படுக்கையில் புரண்டபடி யோசனைகளில் ஆழ்ந்திருந்த போது ஒரு காவலன் உள்ளே நுழைந்தான்.  “அமைச்சர் ஏதோ அவசர செய்தியோடு வந்திருப்பதாகச் சொல்கிறார் அரசே,. தங்களை உடனே காண விரும்புகிறார்.”

 

ஆம்பி குமாரன் உடனே எழுந்து வெளியே வந்தான்.   ”என்ன செய்தி அமைச்சரே?”

 

அமைச்சர் சொன்னார். “இன்றிரவில் நமது ஆயுதக்கிடங்கில் கொள்ளையர் புகுந்து ஆயுதங்களைக் கடத்த முற்பட்டிருக்கிறார்கள் அரசே. நம் காவலாளிகள் அதைக் கவனித்து அவர்களைப் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால்  அவர்கள் நம் காவலர்களைத் தாக்கி விட்டுத் தப்பித்துச் சென்று விட்டார்கள்”

 

ஆம்பி குமாரன் திகைத்தான். “ராஜ்ஜியத்தின் தலைநகருக்கே வந்து ஆயுதக் கிடங்கில் நுழைந்து ஆயுதங்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்றால் எத்தனை துணிச்சல் அந்தக் கொள்ளையருக்கு இருக்க வேண்டும். அந்தக் கொள்ளையர்களின் அடையாளம் எதாவது தெரிந்ததா?”  

     

 

“முகமெல்லாம் கரிபூசிக் கொண்டு வந்திருந்தார்கள். ஆகவே அவர்களைக் காவலாளிகளால் அடையாளம் காண முடியவில்லை. பெரும்பாலும் இப்படிச் செய்பவர்களில் நாம் அறிந்தவர்களும் இருக்கக்கூடும். அதனால் தான் அடையாளம் தெரியாதிருக்க அவர்கள் இப்படி கரிபூசிக் கொண்டு வந்திருக்கக்கூடும்...”

 

“எத்தனை ஆயுதங்கள் திருட்டுப் போயிருக்கின்றன என்பது தெரிந்ததா?”

 

“எனக்குத் தகவல் தெரிந்ததும் நான் அங்கே போய் அதைத் தான் பரிசோதித்துப் பார்த்து கணக்கெடுக்கச் சொன்னேன். அப்படிக் கணக்கெடுக்கையில் ஏராளமான ஆயுதங்கள் திருட்டுப் போயிருப்பது தெரிந்தது. உண்மையில் இன்று மட்டுமே அத்தனை ஆயுதங்களும் காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை; இது சில காலமாகவே நடந்து வந்திருக்கிறது என்பது எனது சந்தேகம். இன்று தான் இது தெரிய வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.”

 

ஆம்பி குமாரன் அதிர்ந்து போனான். “உடனடியாக விசாரணைக்கு ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே. குற்றவாளிகளையும், அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும் கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்”

 

”தங்கள் ஆணைப்படியே செய்கிறேன் அரசே” என்று சொல்லி விட்டு அமைச்சர் வெளியேறினார். ஆம்பி குமாரன் சிறிது யோசித்து விட்டுக் காவலனை அழைத்துச் சொன்னான். “உடனடியாக ஒற்றர் தலைவரை இங்கே வரச்சொல்”

 

ஒற்றர் தலைவர் வந்து சேரும் வரை ஆம்பி குமாரன் ஆசனத்தில் அமர்ந்து பல யோசனைகளில் ஆழ்ந்திருந்தான். ’இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அது எவ்வளவு கேவலம்,   முக்கியமாக பிலிப் இந்தத் தகவலை அறிந்தால் என்ன செய்வான், எப்படி நடந்து கொள்வான்? என்ன நிர்வாகம் செய்கிறாய் என்று என்னைக் குற்றம் சாட்டுவானா?’ என்பது போன்ற கவலைகள் அவன் மனதில் ஓடின. இப்போது பிலிப் இங்கே இல்லை.  அவன் அலெக்ஸாண்டரைப் பார்க்கப் போயிருக்கிறான்.  அலெக்ஸாண்டர் கடைசியாக என்ன ஆணைகளை அவனிடம் பிறப்பித்து விட்டு போகப் போகிறானோ தெரியவில்லை....

 

ஒற்றர் தலைவர் வந்து முன்னால் நின்றதும் ஆம்பி குமாரன் ஏளனமாகக் கேட்டான். “என்ன ஒற்றர் தலைவரே. சௌக்கியமா? இங்கே ஆயுதக்கிடங்கில் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் தெரியுமா? இல்லை நான் சொல்லித் தான் இப்போது தெரிந்து கொள்கிறீர்களா?”

 

ஒற்றர் தலைவர் கண்கள் தரையை நோக்கித் தாழ்ந்தன. “தெரியும் அரசே?”

 

“ஆயுதக்கிடங்கில் முன்பிருந்தே களவு போய்க் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் அபிப்பிராயப்படுகிறார். ஆனால் அது குறித்து உங்களிடம் இருந்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லையே. ஒற்றர்கள் எல்லோரும் உல்லாசப் பயணம் சென்று விட்டார்களா என்ன?”

 

ஒற்றர் தலைவர் தாழ்ந்த குரலில் சொன்னார். ”ஒற்றர்களில் பாதியளவு ஆட்கள் யவன அதிகாரி பிலிப் அவர்களால் வேறுசில பகுதிகளுக்கு பல வேலைகளுக்காக அனுப்பப்பட்டிருக்கிறார்கள் அரசே. குறைந்த அளவு ஆட்களே தற்போது நம் வேலைக்கு இருக்கிறார்கள்”

 

ஆம்பி குமாரன் திகைத்தான். இது குறித்தும் பிலிப் அவனிடம் எதுவும் சொல்லியிருக்கவில்லை... ஆனாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஆம்பி குமாரன் கேட்டான். “இருக்கும் ஆட்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாமல் இருப்பது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் யாராக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

 

ஒற்றர் தலைவர் சொன்னார். “தட்சசீலத்தில் சில வித்தியாசமான நடவடிக்கைகள் நடப்பது எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. நாங்கள் அந்த நபர்களை அவ்வப்போது  கண்காணித்தும் வருகிறோம். எதோ நடக்கிறது என்ற சந்தேகம் இருந்தாலும் அவர்களையே தொடர்ந்து கண்காணித்து அவர்கள் குற்றம் என்னவென்று முடிவாகக் கண்டுபிடித்து குற்றவாளிகளைக் கையும் களவுமாய் பிடிக்க எங்களிடம் போதுமான ஆட்கள் இல்லை அரசே. ஏனென்றால் மற்ற பகுதிகளையும் மற்ற இடங்களிலும் வழக்கமான கண்காணிப்புகளை நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது”

 

ஆம்பி குமாரன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான். “நீங்கள் சந்தேகப்படும் ஆட்கள் யார்?”

 

“தட்சசீலத்து கல்விக்கூட மாணவர்கள்”

 

ஆம்பி குமாரன் திடுக்கிட்டான். அவன் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. “அவர்கள் என்ன செய்கிறார்கள்?”

 

“அவர்கள் இரவு நேரங்களிலும் நகர வீதிகளில் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவனை ஒரு முறை அழைத்து ”ஏன் இரவு வேளைகளில் வெளியே திரிகிறீர்கள்” என்று நான் கேட்டேன். அவர்களுடைய ஆசிரியர் அவர்களுக்கு ஏதோ வேதாந்தப் பயிற்சி செய்ய இப்படி இரவு நேரங்களில் வீதியில் நடந்து கொண்டே மனனம் செய்வது நல்லது என்று சொன்னாராம். சற்று விரிவாகச் சொல்லும் படி கேட்டேன். அவன் ஏதேதோ சொல்ல ஆரம்பித்தான். ஒன்றுமே புரியவில்லை. புரிந்து கொள்ள முயற்சி செய்து எனக்குத் தலைவலியே வந்து விட்டது. “நீ சொல்வது ஒன்றுமே புரியவில்லையே” என்று கேட்டேன். “எங்கள் ஆசிரியர் சாணக்கியரிடம் வந்து கேளுங்கள். அவர் சொன்னால் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்” என்று சொன்னான்.”

 

ஆம்பி குமாரன் குழப்பத்தோடு யோசித்து விட்டுச் சொன்னான். “எனக்குத் தெரிந்து சாணக்கியர் என்ற பெயரில் அங்கே ஆசிரியர்கள் யாரும் இல்லையே”

 

“ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரைத் தான் அவர்கள் சாணக்கியர் என்று தற்போது அழைக்கிறார்கள் அரசே. சாணக் என்பது அவர் தந்தை பெயராம். சாணக்கின் மகன் சாணக்கியன் என்ற பொருளில் அப்படி அழைக்கிறார்கள்?”

 

ஆம்பி குமாரன் சந்தேகத்துடன் கேட்டான். “ஏன் திடீரென்று இந்தப் பெயர் மாற்றம்?”

 

”அவர் அந்தப் பெயரில் தான் மகத மன்னரிடம் ஏதோ சபதம் போட்டிருக்கிறாராம். அந்தச் சபதம் நிறைவேறும் வரை தன்னுடைய குடுமியை முடிவதில்லை என்றும் முடிவெடுத்திருக்கிறார் போல் இருக்கிறது... அவர் சொல்லித் தான் இந்த மாணவர்கள் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அடியவனின் சந்தேகம்”

 

ஆம்பி குமாரன் பிரச்னை பெரிதாவதை உணர்ந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

Monday, June 5, 2023

யாரோ ஒருவன்? 141

ரேந்திரன் இல்லாத சமயத்தில் அந்த அபார்ட்மெண்ட்ஸில் ரா பாதுகாப்பு தீவிரமாக இல்லாத காரணத்தால் அஜீம் அகமது அனுப்பிய கொலையாளி அபார்ட்மெண்ட்ஸின் பின்புற காம்பவுண்டு சுவர் ஏறிக் குதிப்பதில் பிரச்னை இருக்கவில்லை. அவன் நீல நிற சீருடையில் யாரும் சந்தேகப்பட முடியாத தோற்றத்தில் இருந்தான். நரேந்திரனின் ஃபளாட் ஏ 7 என்பதும் பொதுவாக இந்த நேரத்தில் அவன் தாய் சமையலறையில் இரவுச் சமையலில் மும்முரமாக இருப்பாள் என்பதும் அந்தக் கொலையாளி ஏற்கெனவே சேகரித்து வைத்திருந்த தகவல். அஜீம் அகமதின் போன்கால் வந்து அரை மணி நேரத்தில் அங்கே வந்து சேர்ந்திருந்த அவன் ஏ ப்ளாக் கட்டிடத்துக்குள் போகாமல்  பி ப்ளாக் கட்டிடத்திற்குள் நுழைந்தான். லிப்ஃடைப் பயன்படுத்தாமல் அவன் மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தான். இரண்டாம் மாடியைக் கடந்து மூன்றாம் மாடியை நோக்கிப் போகும் படிகளில் ஒரு பக்கத்துச் சுவரைத் தாவிக் குதித்து எம்பி மேலே இருந்த கண்ணாடி ஜன்னல் கதவைச் சிறிது சிரமப்பட்டு இழுத்தான். அங்கிருந்து பார்க்கையில் ஏ 7ன் சமையலறையின் பின்னால் இருந்த துணி உலர வைக்குமிடம் தெரிந்தது. சமையலறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கொலையாளி தான் கொண்டு வந்திருந்த கையெறி வெடிகுண்டைக் குறி பார்த்து ஏ 7 ன் துணி உலர வைக்கும் இடத்தை நோக்கி வீசினான். அடுத்த வினாடி வெடிகுண்டு வெடிக்கும் ஓசையில் எல்லாக் கட்டிடங்களும் சில வினாடிகள் நடுங்கி ஓய்ந்தன. அவன் அமைதியாகப் படியில் இறங்க ஆரம்பித்தான். லிஃப்ட் இருக்கையில் யாருமே படிகளில் ஏறுவதோ இறங்குவதோ கிடையாது என்பதால் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.

வெளியே வந்தவன் ஏ 7லிருந்தும் 8லிருந்தும் கிளம்பியிருந்த புகைமண்டலங்களைப் பார்த்தான். திகைப்பிலும் அதிர்ச்சியிலும் அங்கிருந்த எல்லோர் கவனமும் அங்கேயே நிலைத்திருக்க மேலும் பலர் அக்கம்பக்கத்திலிருந்து ஓடிவந்து கொண்டிருந்தார்கள்.  அந்தக்  களேபரத்தில் அவன் அமைதியாக வெளியேறினான். கண்டிப்பாக சிசிடிவி கேமராக்களை ஆராயும் போது அவன் தெரிவான் என்றாலும் பலத்த ஒப்பனையோடு வந்திருந்த அவன் யாரென்று கண்டுபிடிப்பது அவர்களால் முடியாத காரியம்...    


ரேந்திரன் நாகராஜுக்குப் போன் செய்த போது அவன் கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. கண்கள் ஈரமாகி இருந்தன. நரேந்திரன் குரல் தழுதழுக்கச் சொன்னான். “மகராஜ் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, இனி வரும் ஜென்மங்களிலும் கூட நீங்கள் செய்திருக்கும் உதவிகளுக்கு என்னால் கைம்மாறு செய்ய முடியாது...”

அரை மணி நேரத்திற்கு முன்பு தான் நாகராஜ் நரேந்திரனுக்குப் போன் செய்திருந்தான். அதிசயமாய் இந்த மனிதர் ஏன் அழைக்கிறார் என்று யோசித்தபடி பேசிய நரேந்திரனிடம் நாகராஜ் சொன்னான். “உங்கம்மாவை உடனடியாக சி அல்லது டி ப்ளாகில் ஏதாவது ஒரு வீட்டிற்குப் போய்ப் பேசிக் கொண்டிருக்கச் சொல். சீக்கிரம்

இத்தனை மட்டும் சொல்லி விட்டு இணைப்பை நாகராஜ் துண்டித்து விட்டான். ஆபத்தின் எச்சரிக்கையை உணர்ந்த நரேந்திரன் உடனடியாகத் தாயிற்குப் போன் செய்தான். “அம்மா உடனடியா வீட்டை விட்டு வெளியே போங்க. சி அல்லது டி ப்ளாக்ல எதாவது வீட்டுல பேசிகிட்டிருங்க. கேள்வி எதுவும் கேட்காதீங்க. சீக்கிரம் போங்க ப்ளீஸ்...”

மகன் குரலை வைத்தே நிலைமையை உணர்ந்த அவன் தாய் சுமித்ராவும் வேறெதுவும் பேசாமல் உடனடியாக அவன் சொன்னபடியே தங்கள் ஃப்ளாட்டை விட்டு வெளியேறியிருந்தாள். டி ப்ளாகில் இருக்கும் அவளுக்குப் பழக்கமான வயதான தம்பதிகளைப் பார்த்து நலம் விசாரித்துக் கொண்டிருக்கையில் தான் அந்த வெடிகுண்டு வெடித்த சத்தம் அவள் காதை அறைந்தது.  

நன்றி சொன்ன நரேந்திரனிடம் நாகராஜ் சொன்னான். “காப்பாற்றுபவன் இறைவன். நான் வெறும் கருவி தான். ஆனால் கருவிக்கும் நல்லவர்களுக்கு உதவ முடிவதில் ஒரு ஆத்மதிருப்தி இருக்கிறது...”

அதோடு அவன் இணைப்பைத் துண்டித்து விட்டான். நரேந்திரன் இருந்த இடத்திலிருந்தே கண்கலங்க இறைவனுக்கும் நாகராஜுக்குமாய் சேர்த்து கைகூப்பினான்.


ஜீம் அகமதுக்கு அந்தக் கொலையாளி போன் செய்தான். ”வேலை முடிந்தது தலைவா

அஜீம் அகமது திருப்தியுடன் டிவி ரிமோட்டை எடுத்தான். டெல்லியில்அடுக்குமாடிக் குடியிருப்பில் வெடிகுண்டு வெடித்ததுஎன்ற தலைப்பில் அந்தச் செய்தி எல்லா செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒரு அறிவிப்பாளர் பரபரப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார். “வெடிகுண்டு வெடித்த ஃப்ளாட் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்குச் சொந்தமானது. அந்த ஃப்ளாட்டும் அதற்கடுத்த ஃப்ளாட்டும் பாதிக்கும் மேல் எரிந்து சாம்பலாயிருக்கிறது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்த விவரங்கள் தீயணைப்பு முடிந்தவுடன் தான் தெரியவரும்....”

பாவம் மகேந்திரன் மகன்.... அப்பனைப் போலவே நிஜமாகவே துரதிர்ஷ்டசாலி தான். அஜீம் அகமதைப் பகைத்துக் கொண்டவர்கள் யாரும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வழியில்லைஎன்று மனதினுள் சொல்லிக் கொண்டு டிவியை அணைத்து விட்ட அஜீம் அகமது இங்கிருந்து தப்பித்துப் போகும் இடத்திலும் ஒரு நாளுக்கு மேல் தங்கப் பிரியப்படவில்லை. கண்டிப்பாக ரா வீறு கொண்டு எழும். கூடுதல் வேகத்தோடு அவனைத் தேடும். அதனால் நாளை மறுநாள் காலை இந்தியாவிலிருந்து வெளியேற ஏற்பாடுகள் இப்போதே செய்ய ஆரம்பித்தான். அதை அவன் இன்னும் ஜனார்தன் த்ரிவேதியிடம் கூடச் சொல்லவில்லை. வெளிநாட்டில் அவன் இருப்பிடத்துக்குப்  போய்ச் சேர்ந்தபின் சொன்னால் போதும்....

ஜீம் அகமதின் சகா ஒருவன் தன் இருப்பிடத்திலிருந்து  இரவு 11.26க்குக் கருப்புக் காரில் கிளம்பிய தகவல் நரேந்திரனுக்கு வந்தது. அந்தத் தகவலைஆபரேஷன் ஏஸ்கொயர்செயல்வீரர்களுக்கு உடனடியாக அவன் அனுப்பி வைத்தான். அந்த சகா நேரடியாக அஜீம் அகமதை அழைத்துப் போக வந்தால் இரவு 12.10க்குள் வந்து விடலாம். வேறெங்காவது போய் வேறெவனையாவது அழைத்து வருவதாய் இருந்தால் மேலும் தாமதமாகலாம்....

அஜீம் அகமதின் சகா வேறெங்கும் போகாமல் நேராக அஜீம் அகமது தங்கி இருக்கும் இடத்துக்கே வந்தான் என்றாலும் குறைந்த வேகத்திலேயே வந்தான். யாராவது பின் தொடர்கிறார்கள என்று அடிக்கடி அவன் பார்த்துக் கொண்டான். யாரும் அவனைப் பின் தொடரவில்லை. எங்கே போகிறான் என்பது தெரிந்தவர்கள் பின் தொடரும் அவசியமில்லை என்பதை அறியாத அவன் நிம்மதியாக 12.22 மணிக்கு அஜீம் அகமது இருக்கும் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான்.

தொழிற்சாலையின் அலுவலகத்தில் இருந்து வேவு பார்த்துக் கொண்டிருப்பவன் பரபரப்புடன் பார்க்க ஆரம்பித்தான்.  அஜீம் அகமதை ஒரு முறை நேரில் பார்க்கும் ஆர்வம் அவனுக்குள் இந்த இரண்டு நாட்களில் அதிகமாயிருந்தது. அந்தப் பகுதியின் மிக முக்கிய பகுதிகளில் ரகசியக் கேமிராக்கள் வைத்து கண்காணிப்பு அறையிலிருந்து கண்காணித்துக் கொண்டிருந்த நரேந்திரனும் தன் எதிரியை நேரில் பார்க்க மிக ஆர்வமாக இருந்தான். அவர்கள் மனநிலையிலேயே மற்றவர்களும் இருந்தார்கள்.

அஜீம் அகமதின் சகா வெளியிலேயே காரை நிறுத்தினான்.  அவன் காரின் கண்ணாடிக் கதவுகளை மேலேற்றியே இருந்தான். அவன் காரிலிருந்து கீழே இறங்கவில்லை. கூர்க்கா எழுந்து வந்து காரின் பின் கதவைத் திறந்து வைத்தபடி நின்றான். அடுத்த நிமிடம் மின்னல் வேகத்தில் சத்தமில்லாமல் அஜீம் அகமது ஓடி வருவது தெரிந்தது. அவன் பெரிய தொப்பி ஒன்றை அணிந்திருந்தான். அவன் தலை குனிந்தபடியே ஓடி வந்ததால் முகம் சரியாகத் தெரியவில்லை.

லாவகமாக அவன் காரின் பின்சீட்டில் ஏறிக் கொண்டு கதவைச் சாத்திக் கொள்ள கார் வேகமாக அங்கிருந்து கிளம்பியது. வரும் போது குறைவான வேகத்தில் ஓட்டி வந்த சகா இப்போது மிக வேகமாகக் காரை ஓட்ட ஆரம்பித்தான்.  

கண்காணிப்பு அறையில் பரபரப்புடன் அவன் எந்த வழித்தடத்தில் போவான் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அந்தக் கார் நாலாவது வழித்தடத்தில் இருந்த கேமிராவில் தென்பட்டது.

நாலாவது வழித்தடம் என்ற தகவல் உடனடியாக எல்லாருக்கும் அனுப்பப்பட்டது. நரேந்திரனுக்கு அன்வரை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. காரணம் அவன் முன்பே அஜீம் அகமது நான்காவது வழித்தடத்தில் தான் போவான் என்று அனுமானித்து வைத்திருந்தான். அதனால் தான் அவன் தன்னை அந்த வழித்தடத்திலேயே இருத்தும்படி நரேந்திரனிடம் கோரிக்கையும் வைத்திருந்தான்.

(அடுத்த வாரம் முடியும்) 
என்.கணேசன்