என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, April 10, 2017

இறைவனின் கருவியா நீங்கள்?




கீதை காட்டும் பாதை 46

இறைவனின் விஸ்வரூபத்தைத் தரிசித்த பின் அர்ஜுனன் மெய்சிலிர்க்க, தலைவணங்கிக் கைகூப்பிச் சொல்ல ஆரம்பித்தான்.

“லோகநாதா! விஸ்வரூபா! எண்ணிலடங்காத புஜங்கள், வயிறுகள், முகங்கள், கண்களுடன் கூடியவனாய், முடிவில்லாத உன் உருவத்தை எங்கும் காண்கிறேன். உன் உருவத்தின் முடிவையோ, நடுவையோ, அடியையோ எனக்குக் காண முடியவில்லை.

அறிய வேண்டிய பொருளாகக் கூறப்பட்ட அழிவில்லாத பரம்பொருள் நீ. இந்த உலகத்திற்கு உயர்ந்த ஆதாரம் நீ. அழிவில்லாதவன் நீ. நிலையான தர்மத்தை ரட்சிப்பவன் நீ. சனாதன புருஷன் நீயே என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

மகாத்மாவே! நீ ஒருவனே ஆகாயம் பூமிகளின் இடைவெளியிலும்,  சகல திக்குகளிலும் பரவியிருக்கிறாய். அற்புதமாகவும், உக்கிரமாகவும் உள்ள உன்னுடைய இந்த உருவத்தைக் கண்டு மூவுலகும் அச்சத்தால் நடுங்குகின்றன. நானும் நடுங்குகின்றேன். உன்னைக்கண்டு நான் மனம் கலங்கி  தைரியத்தையோ, அமைதியையோ அடைய முடியாமல் இருக்கிறேன்.

தேவர்களின் அரசனே! உலகின் உறைவிடமே! கோரைப்பற்களால் பயங்கரமானதும், பிரளய காலத்து அக்கினி போன்றதுமான உன் முகத்தைப் பார்த்ததுமே எனக்குத் திக்குத் தெரியவில்லை. அமைதியும் ஏற்படவில்லை. இந்த அரசர்களின் கூட்டங்கள், திருதராஷ்டிரனின் புத்திரர்கள், பீஷ்மர், துரோணர், கர்ணன் இவர்கள் மட்டுமல்லாமல் நம் சேனைத்தலைவர்கள் எல்லோருமே கூட கோரைப்பற்களுடன் கூடிய பயங்கரமான உன்னுடைய வாய்களில் வெகுவேகமாய் நுழைகிறார்கள். சில தலைகள் பொடியாக்கப்பட்டு பற்களுக்கிடையில் சிக்கியிருப்பதைக் காண்கிறேன்.

நதிகளின் பல வெள்ளங்கள் சமுத்திரத்தை நோக்கி எப்படி ஓடுகின்றனவோ அப்படியே இந்த மானிட வீரர்கள் சுடர் விட்டெறியும் உன் வாய்களில் பிரவேசிக்கிறார்கள்.

தேவ சிரேஷ்டனே! உக்கிர ரூபம் கொண்ட நீ யார்? எனக்குச் சொல். உனக்கு நமஸ்காரம். அருள் புரிவாயாக!ஆதிமூலமான உன்னைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். உன்னுடைய செய்கை என்னவென்று எனக்குப் புரியவில்லை.”

இறைவனுடைய விஸ்வரூப தரிசனம் ஆரம்பத்தில் சஞ்சயன் சொன்னது போல் ஆயிரம் சூரியன்கள் ஒருசேரத் தோன்றியது போல் ஒளிமயமாக இருந்தாலும் உற்று உள்ளே பார்த்த போது அர்ஜுனனுக்கு வேறுபல உணர்வுகளையும் ஏற்படுத்தி விட்டது. இறைவனின் முடியையோ, அடியையோ, நடுவையோ காண முடியாமல் போன போது அவன் பிரமிப்பை உணர்ந்தான். வேதங்களில் அறிய வேண்டிய அழிவில்லாத பரம்பொருள் இவன் என்றே உணர்ந்தான். தர்மத்தைக் காப்பவனாகவும் அறிந்தான். ஆனால் அற்புதமாகத் தோன்றிய தோற்றம், இறைவனின் அழிக்கும் சக்தியை அறிய ஆரம்பித்த போது அச்சம் தருவதாகவும் மாற ஆரம்பித்தது.

பிரளய காலத்து அக்கினியாய் பகவானின் முகம் தெரிய ஆரம்பித்தது. பகவானின் வாயில் பயங்கரமான கோரைப்பற்களை அர்ஜுனன் பார்க்கிறான். அப்படி ஒரு வாயல்ல பல்லாயிரம் வாய்களை அவன் பார்க்கிறான். தற்போது உயிருடன் இருக்கும் அவன் உறவுகளும், அரசர்களும், வீரர்களும் வேகமாக அந்த வாய்களில் பிரவேசித்து மடிவதைக் காண்கிறான். அது அழகான காட்சி அல்ல. அதிபயங்கரமான காட்சி. நதி வெள்ளங்கள் கடலில் சங்கமிப்பது போல குருக்ஷேத்திர வீரர்கள் அந்த வாய்களில் சென்று மடிவதைப் பார்க்கையில் அச்சத்தை உணர்ந்து அர்ஜுனன் நடுங்கினான்.

இது அவன் அறிந்த உருவம் அல்லவே. அழகுக்குப் பெயர் போன ஸ்ரீகிருஷ்ணரின் உருவத்திற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையே என்று குழம்பியவன் ”நீ யார்? இது என்ன தோற்றம்?” என்று வணங்கிக் கேட்கிறான்.  
  
அதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

“உலகத்தை அழிக்கும் காலன் நான். உலகத்தை அழிப்பதற்காகத் தொடங்கி இருக்கிறேன். யுத்தபூமியில் நிற்கும் இந்த வீரர்கள் நீ இல்லா விட்டாலும் அழியப் போகிறார்கள்

ஆகவே நீ எழுந்திரு. எதிரிகளை வென்று புகழை அடைவாயாக. செல்வம் நிறைந்த ராஜ்ஜியத்தை அனுபவி. இவர்களெல்லாம் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்கள். நீ நிமித்தமென்ற ஒரு கருவியாக மட்டும் இரு”

குருக்‌ஷேத்திர யுத்த பூமியில் காலனாகவே நின்று கொண்டிருப்பதை பகவான் தெரிவிக்கிறார். அந்த வீரர்கள் எல்லாம் முன்னமே மரணத்தின் பிடியில் சிக்கியாகி விட்டார்கள் என்றும் அர்ஜுனன் இல்லா விட்டாலும் அவர்கள் மாண்டு போவது உறுதி என்றும் கூறிய பகவான் அவர்கள் எல்லாம் தன்னால் ஏற்கெனவே கொல்லப்பட்டவர்கள் என்பதைத் தெரிவிக்கிறார். அதனால் அர்ஜுனன் யுத்தம் புரிந்து அவனாகக் கொல்லப்போவதில்லை என்றும் பகவானின் கருவியாகவே இருக்கப் போகிறான் என்றும் தெரிவித்து அவன் மனதில் எழுந்திருந்த குற்ற உணர்வைக் கலைகிறார்.

இறைவனின் கருவியாக இரு என்று சொல்வதைப் பலரும் பல விதங்களில் தங்கள் தவறுகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை இன்று நம்மால் பார்க்க முடிகிறது. இறைவனின் கட்டளைக்கிணங்கி இறைவனின் கருவியாகச் செயல்பட்டு வருவதாகச் சொல்லிப் பலரும் தங்கள் பாவச்செயல்களுக்கும் இறைவனைக் கேடயமாக வைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் கருவிக்கு விருப்பு வெறுப்பு இருக்காது. கரண்டியால் பரிமாறுவது தேன் ஆனாலும் சரி, கசப்பான மருந்தானாலும் சரி, வேறெந்த சுவை கொண்ட பதார்த்தமானாலும் சரி கரண்டி என்னும் கருவிக்கு அதில் எந்த அபிப்பிராயமும் இல்லை, விருப்பு வெறுப்பும் இல்லை. அதற்கென்று அதில் தனிப்பட்ட இலாப நஷ்டங்கள் இல்லை.  எதைப் பரிமாற வேண்டும் என்று பரிமாறும் கை விரும்புகிறதோ அதைப் பரிமாறும் கருவியாக கரண்டி இருந்து விடுகிறது.  அப்படியே ஒரு செயலில் எந்த விருப்பும், வெறுப்பும் இல்லாத ஒரு கருவியாக நாம் இருக்கிறோமா, இல்லையா என்பதை வைத்தே நம்மை இயக்குவது இறைவனா, ஈகோவா என்பதை நாம் பிரித்தறிய முடியும்.

பாதை நீளும்.....       

என்.கணேசன்

Thursday, April 6, 2017

இருவேறு உலகம் – 24

தலையில் இடி விழுந்தது போல மாணிக்கமும், மணீஷும் உணர்ந்தார்கள். அங்கு சில வினாடிகள் அமைதி நிலவியது. கேள்விப்பட்டது பிரமையாக இருக்க வேண்டும் என்ற நப்பாசை அவர்கள் இருவருக்கும் தானாக வந்து பரிதாபமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கமலக்கண்ணனுக்கும் பத்மாவதிக்கும் அது உண்மை தான் என்று நம்ப, இது கனவில்லை நிஜம் தான் என்று உணர அந்த வினாடிகள் தேவைப்பட்டன.

கண்கள் ஈரமாக கமலக்கண்ணன் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வைத்து கண்மூடி, கடவுளை வணங்கினார். கண்களிலிருந்து அருவியாய் கண்ணீர் வழிய குரலடைக்க பத்மாவதி சொன்னாள். “மணீஷ் வாயில சக்கரை தான் போடணும். அவன் ”திடீர்னு நல்ல செய்தி வரும் ஆண்ட்டி, கவலைப்படாதீங்க”ன்னு சொல்லி வாய் மூடல அந்த மெசேஜ் வந்திருக்கு...”

மணீஷுக்குத் தன் வாயில் மண்ணைத் தான் அள்ளிப் போட வேண்டும் என்று ஆத்திரம் வந்தது. மாணிக்கம் அந்தச் செய்தியை நம்பவில்லை. மகனிடம் பார்வையாலேயே பதற்றப்படாதே என்று அறிவுரை சொன்னார். கமலக்கண்ணன் பக்கம் திரும்பி போலியாய் புன்னகைத்து விட்டுச் சொன்னார். “ஏதோ நாங்கள் கவலையிலே வந்ததுக்கு நல்ல செய்தி கேட்டுட்டுத் திரும்பற மாதிரி பாக்கியம் கிடைச்சுது. நம்ம பிரார்த்தனை வீண் போகலை...”

உதய் க்ரிஷுக்குப் போன் செய்தான். மறுபடி க்ரிஷின் போன் ஸ்விட்ச்ட் ஆஃப் ஆகியிருந்தது. உதய் சொன்னான். “பேசவோ, வரவோ முடியாத சூழலா இருக்கும். அதனால மெசேஜ் பண்ணியிருக்கான்.....”

திரும்பவும் க்ரிஷின் மொபைலுடன் தொடர்பு கொள்ள முடியாதது சின்ன ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், வீட்டாரின் நம்பிக்கையை அது சிறிதும் சிதைத்து விடவில்லை. க்ரிஷின் குடும்பத்தினர் நம்பிக்கை ஏற்படுத்துவதைத் தவிர வேறு எதையும் எண்ணிப் பார்க்கும் மனநிலையில் தற்போது இல்லை என்பது மாணிக்கத்திற்கும், மணீஷுக்கும் புரிந்தது. அதன் பின் சம்பிரதாயத்திற்கு இருவரும் ஏதோ பேசினார்களேயொழிய அங்கு இருப்பது அனல் மேல் இருப்பது போன்ற தாங்க முடியாத தவிப்பை அவர்களுக்கு ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பி விட்டார்கள். “க்ரிஷ் வந்த பிறகு வர்றோம்” என்று கடைசியாக கஷ்டப்பட்டு முகத்தில் மகிழ்ச்சியைக் காட்டிச் சொல்லி விட்டு இருவரும் வெளியேறினார்கள்.

காரில் போகும் போது மாணிக்கம் மகனிடம் கேட்டார். “க்ரிஷ் வந்துடுவான்னு பயந்துட்டியா?”

மணீஷ் ‘அதிலென்ன சந்தேகம்’ என்பது போலத்  தந்தையைப் பார்த்தான்.

மாணிக்கம் சொன்னார். “வாடகைக் கொலையாளியிடம் செல்போன்ல இருந்து உன் தாத்தாக்கு அழைப்பு வந்ததே அது வாடகைக் கொலையாளி செஞ்சதா? வாடகைக் கொலையாளி பிணத்தை பார்த்துட்டோம்கிறதால அந்த மொபைல்ல இருந்து கூப்டறது அவன் இல்லைன்னு நமக்குத் தெரிஞ்சுது. அவன் பிணத்தைப் பார்க்கலைன்னு வெச்சுக்கோ, நாம ஒவ்வொரு தடவை கால் வர்றப்பவும் அவன் தான் எங்கிருந்தோ கூப்டறான்னு நினைப்போம். இல்லையா?”

மணீஷ் புதிதாக நம்பிக்கை பிறக்க கேட்டான். “அப்படின்னா மெசேஜ் அனுப்பிச்சது க்ரிஷ்ஷா இருக்காதுன்னு சொல்றீங்களாப்பா?”

”ஆமா. அவன் உயிரோட இருந்தான்னா, நேர்ல வந்திருப்பானே ஒழிய மெசேஜ் அனுப்பிச்சிருக்க மாட்டான். அவனோட மொபைல் எவன் கிட்டயோ கிடச்சிருக்கு. அவன் இந்த விசாரணை நடக்கிறதுல ஏதாவது பாதிக்கப்படற நிலைமை வந்திருக்கலாம். இப்படியொரு மெசேஜ் அனுப்பிச்சா விசாரணைய கைவிட்டுடுவாங்கன்னு நினைச்சிருக்கலாம்....”

மணீஷுக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது. ஆனால் இன்னொரு சந்தேகமும் வந்து அந்த நிம்மதியைக் குலைத்தது. “வாடகைக் கொலையாளி மொபைலும், க்ரிஷோட மொபைலும் ஒரே ஆள் கிட்ட கிடைச்சிருக்கும்னு நினைக்கிறீங்களா?”

“அப்படித் தான் தோணுது” மாணிக்கம் வறண்ட குரலில் சொன்னார்.

இருவர் மனங்களிலும் “அந்த ஆள் யாராக இருக்கும்? ஏன் இப்படி நடந்து கொள்கிறான். அவன் உத்தேசம் என்ன?” என்ற கேள்விகள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தன.

க்ரிஷிடமிருந்து தகவல் வந்ததை செந்தில்நாதனிடம் உதய் போனில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான். அவன் அளவு மகிழ்ச்சி அடையாத செந்தில்நாதன் அந்தக் குறுந்தகவலைத் தனக்கு அனுப்பி வைக்கும்படி சொன்னார். அப்படியே அவருக்கு அனுப்பி வைத்து விட்டு பத்மாவதியிடம் உதய் சொன்னான்.

“க்ரிஷ் கிட்ட இருந்து மெசேஜ் வந்ததை நீயே உன் சின்ன மருமகளுக்கும் சொல்லிடு. பாவம் சந்தோஷப்படுவாள்”

பத்மாவதி தனக்கு சின்ன மருமகள் உறவில் யார் இருக்கிறார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தவுடன் உதய் “நீ ஒரு ட்யூப்லைட்டும்மா. ஹரிணிக்குப் போன் செஞ்சு சொல்லுன்னு சொன்னேன்....”

பத்மாவதி திகைப்பிலிருந்து சந்தோஷத்திற்கு மாறினாள். “இது எப்போ?”

“கொஞ்ச நாளாவே..”

“உன் கிட்ட சொன்னவன் எங்கிட்ட சொல்லவே இல்லை பார்”  பத்மாவதிக்கு அது பெரும் குறையாகப் பட்டது. 

“உன் மகன் அழுத்தமானவன். அவனா எங்கே வாயத் திறந்தான்? நானா..” பார்த்தது என்று சொல்ல வந்தவன் சுதாரித்துக் கொண்டு “தெரிஞ்சுகிட்டது” என்று சொல்லி முடித்தான்.

“அவ நம்பர் என் கிட்ட இல்ல. நீ அடிச்சுக் குடு பேசறேன்...”

தன் மொபைலில் ஹரிணியின் எண்ணைத் தேடியபடியே தாயிற்கு உதய் அறிவுரை சொன்னான். “இங்க பேசற மாதிரி சும்மா வள வளன்னு என்னென்னவோ பேசக் கூடாது. மாமியாரா கம்பீரமா பேசணும்....”

“ஆமா இவன் ரொம்ப பேசத் தெரிஞ்சவன் எனக்கு புத்திமதி சொல்ல வந்துட்டான்....”

“என்ன அப்படி சொல்லிட்டே. நான் பாராளுமன்றத்திலேயே பேசினவன் மறந்துடாதே. என் முதல் பேச்ச வடநாட்டு பத்திரிக்கைல கூடப் புகழ்ந்திருக்காங்க தெரியுமா?”

“அது நீயாகவாடா பேசினே. உன் தம்பி எழுதிக் கொடுத்து நீ அங்க போய்ப் படிச்சது தாண்டா”

பத்மாவதி சொல்லிக் காட்டிய போது அவனுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. இதை அம்மாவிடம் சொல்லி ஏன் கேவலப்பட்டோம் என்று யோசித்தவன் அப்போது தான் அங்கே வந்த தந்தையிடம் கேட்டான். “ஏம்ப்பா நீ இந்த அம்மாவைக் கல்யாணம் செஞ்சுகிட்டே. உனக்கு வேற ஆளே கிடைக்கலையா?”

கமலக்கண்ணன் முகத்தை மிக வருத்தமாக வைத்துக் கொண்டு சொன்னார். “அப்ப தெரியாம ஏமாந்துட்டேண்டா”

பத்மாவதி இருவரையும் முறைத்தாள். “பாவிகளா?”

”ஏம்ப்பா. உனக்கே இங்க மரியாதை இவ்வளவு தானா?” என்று கேட்ட உதய் மீது பத்மாவதி வீசிய ஆனந்த விகடன் பத்திரிக்கை பாய்ந்து வர, அவன் அவசரமாக விலகினான்.

                                                                                          
புதுடெல்லி உயரதிகாரி அந்த சர்ச் முன்னால் மதியம் 12.50க்குப் போய் நின்றான். சர்ச்சில் வழிபாட்டிற்கு வந்திருந்த அனைவரும் வழிபாடெல்லாம் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள். தான் சந்திக்க வேண்டியிருக்கும் ஆள் இவர்களில் யாராவது ஒருவராக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டான். யாராவது தன்னருகே வந்து அறிமுகப்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தான். தனக்குப் பணம் அனுப்பும் ஆள் பெரிய செல்வந்தனாக இருக்க வேண்டும் என்று அனுமானித்ததால் பணக்காரத் தோற்றம் உள்ள ஆட்களைக் கூர்ந்து பார்த்தபடி நின்றான். ஆனால் எல்லோரும் அவனைக் கடந்து போனார்கள். மணி ஒன்றான போது ஒருவரும் வாசலில் இருக்கவில்லை. சந்திக்க வேண்டிய ஆள் சர்ச்சுக்குள் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. மெள்ள சர்ச்சுக்குள்ளே போனான். உள்ளே ஒருவரும் இருக்கவில்லை.

அவன் செல்போனில் ஒரு குறுந்தகவல் வந்த சத்தம் கேட்டது. ’தாமதமாகி விட்டது. தயவு செய்து ஐந்து நிமிடம் காத்திருங்கள்’ என்று நம் ஆள் சொல்கிறானோ என்ற எண்ணத்துடன் செல்போனை எடுத்துப் பார்த்தான். தகவல் அனுப்பியிருந்தது அந்த ஆள் தான். ஆனால் தகவல் அவன் எதிர்பார்த்தது இல்லை. ’பாவ மன்னிப்புக் கூண்டில் சென்று அமரவும்’ என்பதாக தகவல் இருந்தது.

அவனுக்குக் கோபம் வந்தது. ’இந்த ஆள் என்னை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்.  பாவமன்னிப்புக் கூண்டில் உட்கார வைத்து என்னை அவமானப்படுத்த நினைக்கிறான்’.  ஆனால் பணம் அந்தக் கோபத்தை அப்படியே விழுங்க வைத்தது. அவன் பாவமன்னிப்புக் கூண்டை நெருங்கினான். அந்த ஆள் அவனுக்கு முன்பே வந்து பாதிரியார் உட்காரும் பக்கத்துக் கூண்டில் அமர்ந்திருந்தது, பாவமன்னிப்புக் கூண்டின் கதவைத் திறந்த போது இடையே இருந்த தடுப்பின் சிறுதுளைகள் மூலம் தெரிந்தது....

ஏனோ மனதில் இனம் புரியாத ஒரு பயம் சூழ்வதை அவனால் தடுக்க முடியவில்லை....


செந்தில்நாதன் முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு இனி என்ன செய்வது என்று கேட்டார். முதலமைச்சர் கேட்டார். “நீங்க என்ன நினைக்கிறீங்க? அந்த மெசேஜ் க்ரிஷ் அனுப்பினதா தான் இருக்குமா?”

“இருக்கலாம். ஆனா அப்படி நிச்சயமாவும் நம்மால சொல்ல முடியாது. மெசேஜ் அனுப்ப முடிஞ்சவர் போன்ல பேசியே இருக்கலாமே. இல்லை உடனடியாக வந்துவிடலாமே. இரண்டையும் ஏன் செய்யலைன்னு புரியல. க்ரிஷ் ஒருவேளை கடத்தப்பட்டிருந்தா கடத்தின ஆள்கள் அவரோட மொபைல்ல இருந்து மெசேஜ் தாராளாம அனுப்பலாமே? அதுவும் மெசேஜ் அனுப்பின அடுத்த நொடியே அது ஸ்விட்சுடு ஆஃப் வேற ஆயிருக்கு”

”அப்படின்னா க்ரிஷ் வீடு வந்து சேர்ற வரைக்கும் உங்களோட வேலைய தொடர்ந்து செய்யறது தான் நல்லது. நாம இதை அதிகமா இப்போதைக்குத் தோண்டிப்பார்க்க வேண்டாம்னு நினைச்சு கூட குற்றவாளி இப்படி செஞ்சிருக்கலாம்.... சரி அடுத்ததா என்ன செய்யப் போறீங்க?”

“க்ரிஷோட மொபைல் போன் எந்த ஏரியால ஆன் ஆகி மறுபடி ஆஃப் ஆகியிருக்குன்னு பாத்துட்டு அதுக்குத் தகுந்த மாதிரி நடவடிக்கை எடுக்கலாம்னு பார்க்கறேன் சார்”

“அப்படியே செய்ங்க”

செந்தில்நாதன் முதல்வரிடம் சொன்னது போலவே  க்ரிஷின் மொபைல் போன் எந்த இடத்தில் ‘ஆன்’ ஆகியிருக்கிறது எந்த இடத்தில் ”ஆஃப்” ஆகி இருக்கிறது, அந்த மொபைல் போனிலிருந்து எந்த எண்களுக்கெல்லாம் தகவல்கள் சென்றிருக்கின்றன, எந்த எண்களிடம் எல்லாம் பேசி இருக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிய ஏற்பாடு செய்து விட்டு அங்கிருந்து வரும் தகவல்களுக்காகப் பரபரப்புடன் காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் தகவல் வந்தது. கேள்விப்பட்ட தகவல் அவரைத் தலைசுற்ற வைத்தது.

(தொடரும்)

என்.கணேசன்


Monday, April 3, 2017

வூடூவின் தேவதைகளும், சக்திகளும்!

அமானுஷ்ய ஆன்மிகம்-3

வூடூவைப் பின்பற்றிய மக்கள் இரு வகை உலகங்கள் இருப்பதாக நம்பினார்கள். காண முடிந்த உலகம், காண முடியாத சூட்சும உலகம். காண முடியாததாக சூட்சும உலகம் இருந்த போதிலும், அந்த உலகம் காண முடிந்த உலகத்தைப் போலவே நிஜமானது என்றும் நம்பினார்கள். இரண்டு உலகங்களும் எப்போதும் ஒன்றோடு ஒன்று பின்னி இணைந்தே இருக்கிறது என்பதிலும், இணைந்தே இயங்குகிறது என்பதிலும் அவர்களுக்கு ஆணித்தரமான நம்பிக்கை இருந்தது. அவர்களைப் பொருத்த வரை பொதுவாக மனிதன் இறந்த பின்னர் சூட்சும உலகிற்கு பிரவேசிக்கிறான். ஆவியாக அந்த உலகில் இருக்கிறான்.  அதனால் இறந்து போன மூதாதையர் அந்த உலகில் இருந்து கொண்டு தமது சந்ததியினரைக் கண்காணிக்கிறார்கள் என்று நம்பினார்கள்.

சர்வ வல்லமையுள்ள இறைவன் ஒருவனே என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. அந்த இறைவன் பாரபட்சமில்லாதவன், அறிய முடியாதவன், நேரடியாக அணுக முடியாதவன் என்று அவர்கள் நம்பினார்கள். மேலும் இறைவனுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த பல தேவதைகள் இருப்பதாக நம்பினார்கள். அந்தத் தேவதைகள் இறைவனுக்கு அடிபணிந்தவை, தங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளைத் திறம்பட செய்பவை. அந்தத் தேவதைகளை முறைப்படி வேண்டினால் மனிதன் எந்த உதவியும் பெற முடியும் என்பதும் அவர்களது நம்பிக்கையாக இருந்தது.

கிறிஸ்துவத்தில் பரமபிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்றுநிலை இருப்பதைப் போலவே வூடூவிலும் சர்வவல்லமை உடைய கடவுள், தேவதைகள், மூதாதையர் என்ற மூன்றுநிலை இருப்பதாக முன்னரே பார்த்தோம். இந்த முக்கோண நிலையில் மேலாக, உச்சநிலையில் இருப்பவனான இறைவன் பாரபட்சமில்லாதவனும், நெருங்க முடியாதவனாகவும் இருப்பதால் தங்களுக்கு உதவ அதற்கு அடுத்தபடியாக கீழ் இரு கோணங்களில் இருக்கும் தேவதைகளையும், தங்கள் மூதாதையர்களையும் வூடூ மக்கள் நாடினார்கள்.

வூடூ மக்கள் கணிப்பு இப்படியாக இருந்தது. சுலபமாக அணுக முடிந்த சக்தி மூதாதையர்களின் ஆவி. தேவதைகள் அளவு சக்தி படைத்தவையாக அந்த ஆவிகள் இருக்க முடியாத போதும், மனிதர்களை விட அதிகம் அறிய முடிந்த நிலையில் அந்த ஆவிகள் இருக்கின்றன. அந்த மூதாதையர் ஆவிகளும் வாழ்ந்த காலத்தில், வாழ்ந்த விதத்தில் சம்பாதித்துக் கொண்டதற்கு ஏற்ப பலதரப்பட்ட சக்திகளுடன் சூட்சும உலகில் இருக்கின்றன. அந்த ஆவிகள் மூலமாகவும், முறைப்படியான வழிபாடுகள், சடங்குகள் மூலமாகவும் தேவதைகளை அணுகினால் ஒரு மனிதன் அந்த மேலான உலகில் இருந்து எல்லா விதமான உதவிகளும் பெற முடியும். இந்த அடிப்படைக் களத்தில் இருந்து தான் வூடூ மக்கள் உயர்சக்திகளை அணுகினார்கள்.

வீரமான மூதாதையர்கள் இருந்தால் ஆபத்துக் காலத்தில் அவர்களை வணங்கி பாதுகாப்பு கேட்டார்கள். ஞானிகளான முன்னோர் இருந்தால் குழப்ப காலத்திலும், கஷ்டகாலத்திலும் சரியாக வழிகாட்டும்படி வணங்கிக் கேட்டார்கள். திறமையான வைத்தியரான முன்னோர் இருந்தால் நோய்வாய்ப்பட்ட காலத்தில் அவர்களை வணங்கி நோயிலிருந்து விடுதலை கேட்டார்கள். இப்படி மூதாதையர்களை மட்டும் வணங்கி அணுக பெரியதான சடங்குகள் இருக்கவில்லை. அவர்களது சிலைகளோ, சின்னங்களோ மட்டும் வணக்கம் செலுத்தப் போதுமானதாக இருந்தன. பலபகுதி மக்களுக்கும் மூதாதையர்கள் வேறு வேறாகவே இருப்பதால் இந்த வழிப்பாட்டு சின்னங்களும், சிலைகளும் அந்தந்தப் பகுதி மக்களுக்கும், குடும்பத்திற்கும் மட்டுமே சம்பந்தப்பட்டதாக, வேறு வேறாகவே இருந்தன. அந்த மூதாதையரை வணங்கும் இடங்களும் பொது இடங்களாக இல்லாமல் அந்தக் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட இடங்களாகவே இருந்தன.

ஆனால் தேவதைகள் வூடூவைப் பின்பற்றும் அனைவருக்கும் பெரும்பாலும் பொதுவாகவே இருந்தன. தேவதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு துறை இருந்தது. மூதாதையர்களை வணங்கிக் கேட்கும் போது எந்தெந்த வேண்டுகோளுக்கு எந்தெந்த மூதாதையர் என்று இருந்ததோ அதே போல, வேண்டுகோளின் தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட தேவதையை வணங்கும் வழக்கமும் வூடூ மக்களிடம் இருந்தது. ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு தனி சின்னம் இருந்தது. அதற்கான மந்திரங்களும் இருந்தன. சில வூடூ தேவதைகளைப் பார்ப்போம்.

லெக்பா தேவதை (Legba)
இந்த தேவதை தான் சூட்சும, ஆவி உலகத்திற்கான வாயிற்காவலாளி. இந்த தேவதை அனுமதி இல்லாமல் யாரும் மேலுலகத்தில் உள்ள சக்திகளை அணுகவோ, உதவி பெறவோ முடியாது. தோற்றத்தில் சிறுவனாகவோ, தடியூன்றிய கிழவனாகவோ சித்தரிக்கப்படும் லெக்பா மேலுலக இரகசியங்களை அங்கிருந்து எடுத்து மனிதர்களுக்குத் தர முடிந்ததாக இருக்கிறது. 

எல்லா வூடூ சடங்குகளும் லெக்பாவை வணங்கியே ஆரம்பிக்கின்றன. லெக்பாவிற்கு நன்றி தெரிவித்தே முடிகின்றன. எல்லா சடங்குகளின் போதும் மனிதர்களின் கோரிக்கையை மற்ற கடவுளர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வதும், அந்தக் கடவுளர்களின் ஆணைகளையும், ஆலோசனைகளையும் மனிதர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வதும் இந்த லெக்பா தேவதை தான். இந்த தேவதை தயவு இல்லா விட்டால் இருவழிச் செய்தியும் எட்டாது என்பதால் முதல் முக்கியத்துவம் இந்த லெக்பா தேவதைக்குத் தரப்படுகிறது.

உலகம் இயங்க முக்கியமான சக்தியாய் உள்ள சூரியனாகவும் லெக்பா கருதப்படுகிறது.


ஓஷுன் அல்லது எர்சுலி தேவதை (Oshun, Erzulie)

அன்பு மற்றும் காதலின் தேவதை இது. அழகுக்கும் இதுவே தேவதை. சுபிட்சத்திற்கும், உணர்ச்சிகளுக்கும் கூட இதுவே அதிபதி. மகிழ்ச்சியை உலகில் பரப்புவதும், பசித்த வயிறுகளுக்கு தாராளமாக சோறிடுவதும் இந்த தேவதை தான்.

லெக்பா தேவதையின் மனைவியாகவும், சந்திரனாகவும் இந்த தேவதை கருதப்படுகிறது.

ஓயா தேவதை (Oya)

காற்று, நெருப்பு, நீர் போன்ற இயற்கை சக்திகளின் அதிபதி இந்த ஓயா தேவதை. தைரியத்திற்கும், சண்டைக்கும் இது தான் அதிபதி. உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தரவும், இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், நிலநடுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தவும் வல்லது. அதிவேகம் இதன் தனித்தன்மை.

அக்வீ தேவதை (Agwe)
சமுத்திரங்களுக்கும், மற்ற நீர்நிலைகளுக்கும் அதிபதி இந்த தேவதை. விலங்குகளுக்கும் தேவதை இது தான். கடற்பயணங்களில் பாதுகாப்புக்கும், மீன்பிடிப்பதற்கும் இந்த தேவதையை அதிகமாக வணங்குகிறார்கள். இந்த தேவதையை வணங்குபவர்களுக்குத் தண்ணீரில் கண்டம் வராது.

லோகோ தேவதை (Loco)
இது விவசாயத்திற்கு அதிபதியான தேவதை. தாவர உலகம் இந்த தேவதை அருளாலேயே செழிக்கிறது. இது ஆரம்பத்தில் மனிதனாக இருந்து பின் தேவதை ஸ்தானத்திற்கு உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

தம்பல்லா தேவதை (Damballa)

லெக்பா தேவதைக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் பெற்றது இந்த தம்பல்லா என்னும் நாக தேவதை. மனித மனம், அறிவு இரண்டுக்கும் இதுவே அதிபதி. ஞானத்தைப் பெற உதவுவதும் இந்த தேவதையே. சிறு குழந்தைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கும் ஆதரவு அளிக்கும் தேவதை இது. இறந்து போனவர்களின் ஆத்மாக்களுக்கு அடுத்த கட்டத்தை அடைய உதவும் தேவதை இது.   



பேரன் சமேடி (Baron Samedi)

பேரன் சமேடி இறந்தவர்களின் தேவதை. தோற்றத்தில் நீண்ட தொப்பியுடனும், கருப்புக் கோட்டுடனும், கருப்புக் கண்ணாடியுடனும், மூக்கில் பஞ்சுடனும் சித்தரிக்கப்படும் இந்த தேவதை மரண விளிம்பில் உள்ளவர்களைக் காப்பாற்றவும், இறந்தவர்களை உயிர்த்தெழவும் செய்ய முடிந்த தேவதை. புகை பிடிப்பதும், மது அருந்துவதும் இந்த தேவதையின் குணங்களாக சித்தரிக்கப்படுகிறது. பேசுவது மூக்கில் பேசுவது போல இருக்கும். எந்த கொடிய நோயாக இருப்பினும் குணப்படுத்தும் சக்தி பெற்ற இந்த தேவதையின் அனுமதியின்றி யாரும் இறக்க முடியாது. பேரன் சமேடி சம்பந்தப்பட்ட சடங்குகள் பெரும்பாலும் மயானங்களில் இரவு நேரங்களில் தான் நடக்கும்.


இது போல இன்னும் பல சிறிய தேவதைகள் உண்டு. இந்த வூடூ தேவதைகளில் வூடூ அல்லாத மக்களின் கவனத்தையும் கவர்ந்த தேவதை பேரன் சமேடி தான். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான லிவ் அண்ட் லெட் டை (Live and Let die)யில் வில்லன் பேரன் சமேடி வேடத்தில் தான் வந்து எல்லோரையும் பயமுறுத்துவான். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் எடுக்கப்பட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் பேரன் சமேடியைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் இருக்கின்றன.


எல்லா தேவதைகளுக்கும் வரைபடச்சின்னங்கள் இருக்கின்றன. தகுந்த இடத்தைத் தேர்வு செய்து, பின் அதை சுத்தம் செய்து, அங்கு தரையில் எந்த தேவதையை வேண்டுகிறார்களோ அந்த தேவதைக்கான சின்னத்தை வரைந்து சடங்கை ஆரம்பிப்பார்கள். இப்படி ஆரம்பிக்கும் வூடு சடங்கில் ஒரு கட்டத்தில் ஒரு உடலில் ஆவி குடியேறி குறிப்பிட்ட காலம் தங்கி கேள்விகளுக்குப் பதில் சொல்லும், வழிகாட்டும் என்பது தான் சுவாரசியமான செய்தி. ஒரு நேரடி அனுபவத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.


- என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – 21.3.2017

Thursday, March 30, 2017

இருவேறு உலகம் – 23

செந்தில்நாதன் பொதுப்பணித் துறையை விசாரித்தார். அவர்கள் அந்த மலைக்குப் போகும் பாதையைச் சரி செய்யும் திட்டம் ஒன்றும் தங்கள் கைவசம் இல்லை என்றும் தாங்கள் அங்கே ”சாலைப்பணி நடைபெறுகிறது” என்ற தடுப்புகள் வைக்கவில்லை என்றும் சொல்லி விட்டார்கள். அது போன்ற தடுப்புகள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன என்றும் அது நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவற்றை யாரும் கண்காணிப்பதில்லை என்றும் சொன்னார்கள். அதனால் அவற்றை இரவு நேரத்தில் எங்கிருந்தாவது அப்புறப்படுத்திக் கொண்டு வந்து அந்தச்சாலையில் வைத்து விட்டு, மறுபடி காலையில் எடுத்த பழைய இடத்திலேயே வைத்து விட்டிருந்தால் அது யார் கவனத்திற்கும் வந்திருக்காது... மறு நாள் காலையில் அந்தப் பக்கம் போனவர்கள் யாரும் அந்தத் தடுப்புகளைப் பார்க்கவில்லை.... 

க்ரிஷைக் கடத்தவோ, கொல்லவோ யாராவது திட்டம் இட்டிருந்தால் அந்த நேரத்தில் வேறெந்த வாகனமும் அந்தப் பாதையில் வழிமாறிக்கூடப் போய் விட வேண்டாம் என்று ஜாக்கிரதை உணர்வுடன் அந்தத் தடுப்புகளை அங்கே வைத்திருந்திருக்கலாம். வேலை முடிந்தவுடன் அப்புறப்படுத்தி இருக்கலாம்... அப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது. கடத்திப் பணம் பறிப்பது உத்தேசமாக இருந்தால் கடத்தல்காரர்கள் இன்னேரம் கமலக்கண்ணனைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். கொலை தான் உத்தேசம் என்றால் பிணம் இன்னேரம் கிடைத்திருக்க வேண்டும். இரண்டுமில்லாத குழப்ப நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையை செந்தில்நாதன் யோசித்துக் கொண்டிருந்தார்.

நேற்று இரவு காரில் வந்தவர்கள் திரும்பவும் இன்று வந்தாலும் வரலாம் என்று தோன்றியதால் மலையடிவாரத்தில் இரண்டு கான்ஸ்டபிள்களை நிறுத்தியிருந்தார் அவர்.   அதை அறிந்தால் அவர்கள் வர மாட்டார்கள் என்ற போதும் நேற்றிரவு அவர்கள் வந்த உத்தேசம் இனியும் நிறைவேற வேண்டாம் என்று அவர் நினைத்தார். அந்த உத்தேசம் என்னவாக இருக்கும் என்று எத்தனையோ விதங்களில் யோசித்துப் பார்த்தார். எதையுமே யூகிக்க முடியவில்லை. இது வரை தன் சர்வீஸில் எத்தனையோ கேஸ்களை அவர் கையாண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கேஸ் போல எந்தக் கேஸும் பிடிகொடுக்காத கேஸாக இருக்கவில்லை.


புதுடெல்லி மனிதனுக்கு இது வரை தகவல்களைக் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்குக் கூப்பிட்டுச் சொல்லும் வேலை மட்டுமே இருந்தது. அவன் அந்த வினோத ஆராய்ச்சியில் கிடைக்கும் எல்லா ரகசியத் தகவல்களையும் சொல்வான். மறுநாளே அவனுடைய மனைவியின் ரகசிய அக்கவுண்டில் பணம் போய்ச் சேர்ந்து விடும். முதல் முறையாக இந்த தடவை அந்தச் செல்போன் எண்ணிற்கு அவன் பேச முயற்சித்த போது போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. எதிர் முனை போனை எடுத்துப் பேசவில்லை.  அவன் பல முறை முயற்சி செய்த பிறகு அந்த எண்ணிலிருந்து ஒரு குறுந்தகவல் மட்டும் வந்தது. நகரின் ஒதுக்குப் புறத்தில் இருக்கும் சர்ச்சிற்கு, நாளை மதியம் ஒரு மணிக்கு நேரில் வர உத்தரவாகியிருந்தது. 

தகவலைப் படித்தவுடன் முதலில் கோபம் வந்தது. ”நேரில் எல்லாம் வந்து சொல்ல மாட்டேன். விருப்பப்பட்டால் போனில் சொல்வதைக் கேட்டுக் கொள். இல்லாவிட்டால் ஆளைவிடு” என்று கறாராகச் சொல்ல அவனுக்கு ஒரு கணம் ஆசை இருந்தது.

ஆனால் கிடைக்கின்ற  பணம் சிறிய தொகை அல்ல. அவன் மாதம் முழுவதும் வேலை பார்த்துச் சம்பாதிக்கும் தொகையை, தெரிவிக்கும் ஒவ்வொரு தகவலுக்கும் பெற்று வருகிறான். சில தகவல்கள் அவனுக்கே தலைகால் புரியாது. அதற்குப் பெரிய முக்கியத்துவம் இருப்பது போலவும் அவனுக்குத் தெரியவில்லை. அவன் சொல்வதெல்லாம் அப்படி ராணுவ ரகசியமும் கிடையாது. அப்படி இருக்கையில் பெரிய தொகையை விடவும் அவனுக்கு மனமில்லை. அதனால் கோபம் தணிந்து நாளை மதியம் ஒரு மணிக்குள் அந்த சர்ச்சிற்குப் போய்ச் சேர உத்தேசித்தான். அப்படியே பணம் தரும் அந்த ஆளைப் பார்த்தது போலவும் ஆயிற்று.....


மாஸ்டருக்கு அந்தப் பெண் விஞ்ஞானி போன் செய்தாள். “சார், எங்க டெக்னிகல் இஞ்சீனியர்ஸ் ரிப்போர்ட் அனுப்பியிருக்காங்க. சாடிலைட்ல எந்த டெக்னிக்கல் ப்ரச்னயும் இல்லையாம். என்ன இருந்துச்சோ அதை தான் படம் எடுத்து அனுப்பிச்சிருக்கு. கருப்பா அந்த ஏரியா படம் வந்துருக்குன்னா, அந்த இடத்துல அப்படி ஏதாவது இருந்துருக்கணும்னு சொல்றாங்க.....”

மாஸ்டர் கேட்டார். “சரி உங்க டிபார்ட்மெண்ட்ல என்ன முடிவு பண்ணினீங்க?”

“அந்தக் கருப்புப் பறவை மேல தான் இப்போ முழு ஆராய்ச்சியும் திரும்பப் போகுது”

மாஸ்டர் புன்னகைத்தார். விஞ்ஞானம் வளர வளர சந்தேகங்களும் வளர்ந்து கொண்டே போகின்றன. நிரூபிக்கப்பட்டால் தான் நம்புவேன் என்கிறது விஞ்ஞானம். உள்ளுணர்வை நம்பு, உட்கருவைப் புரிந்து கொள் மீதி எல்லாம் தானே நிரூபணமாகும் என்கிறது மெய்ஞானம். மெய்ஞானம் கண்டதை விஞ்ஞானம் எப்போதுமே தாமதமாகத் தான் கண்டுபிடிக்கும்....

அந்த மலைக்குப் போய் க்ரிஷ் இருந்த இடத்தையும் மலையுச்சியின் அமைப்பையும் நேரிலேயே ஒரு முறை பார்க்க வேண்டும் என்றெண்ணி நேற்றிரவு போனது அந்தப் போலீஸ் அதிகாரி அங்கிருந்ததால் முடியாமல் போயிற்று. நல்லவேளையாக அந்தப் போலீஸ் அதிகாரி அடிவாரத்தில் இருக்கவில்லை. இருந்திருந்தால் சந்திப்பைத் தவிர்ப்பது முடியாமல் போயிருக்கும்....

தாடிக்கார இளைஞன் வந்து அவர் முன் வந்து நின்றான். “ஐயா நீங்க ’அவங்கள’ சந்திக்க வேண்டிய ஏற்பாடு எதாவது நான் செய்யட்டுமா?”

”பொறு. அவங்க நிலைமை இன்னும் கொஞ்சம் மோசமாகும். அப்ப    சொல்றேன்” என்றார் மாஸ்டர். தூண்டில் போட  இன்னும் சமயம் வரவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு. அந்தக் காலம் வராமல் இயங்குவது வீண்.

அவன் தலையசைத்து விட்டுச் சொன்னான். “இப்ப மாணிக்கமும், அவர் மகன் மணீஷும் க்ரிஷ் வீட்டுக்குக் கிளம்பியிருக்கறதா தகவல் வந்துருக்கு....”



க்ரிஷ் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கையில் மணீஷ் மனம் பலவிதமான உணர்ச்சிகளால் பந்தாடப்பட்டுக் கொண்டிருந்தது. க்ரிஷ் பிணம் கிடைக்காததும், வாடகைக் கொலையாளி இறந்ததும், வாடகைக் கொலையாளியின் போனில் இருந்து அழைப்புகள் வந்து திகில் மூட்டிக் கொண்டிருந்ததும் முன்பே அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. இப்போது ஹரிணி அவன் வீட்டுக்குப் போய் வந்திருப்பது கூடுதல் வேதனையாக இருந்தது. போய் விட்டு வந்தவள் அவனுக்குப் போன் செய்தாள்.

“க்ரிஷோட அம்மா என்னைப் பாத்தவுடனயே அழுதுட்டாங்கடா. அதப் பாத்து எனக்கும் அழுகைய கட்டுப்படுத்த கஷ்டமா இருந்துச்சு.... அவங்க கிட்ட சொல்லியிருக்கேன்.... உங்க பையன் சூப்பர் மேனா திரும்பி வருவான்னு.... அவங்களைத் தைரியப்படுத்த சொல்லிட்டேன்.... அவங்க வீட்டுல இருந்து வர்றப்ப ’நான் சொன்னபடியே அவன் நல்லபடியா வந்துரட்டும் கடவுளே’ன்னு கடவுளை வேண்டிகிட்டே வந்தேன். டேய் ப்ளீஸ் நீயும் கடவுள வேண்டிக்கோடா”

அவள் வார்த்தைகள் அவனை வெட்டிப் போட்டன. கஷ்டப்பட்டு “கண்டிப்பா” என்றான்.

“ஆமா நீ ஏன் இது வரைக்கும் அவன் வீட்டுக்குப் போகல.... உன்னை அவங்கம்மா கேட்டாங்க”

”எனக்கு அவங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு புரியல. அதனால நான் அப்பா வந்தவுடனே போலாம்னு காத்திருந்தேன் ஹரிணி. இப்ப கிளம்பிகிட்டிருக்கோம்”

அவளிடம் பேசி முடித்தவுடன் அவன் முகத்தில் தெரிந்த துக்கத்தைப் பார்த்து மாணிக்கம் மனமுருகினார். ‘திட்டப்படியே க்ரிஷ் செத்து அவன் பிணம்  இத்தனை பிரச்னை இல்லாம இருந்திருக்கும். பிணம் எப்போது கிடைக்குமோ?’

க்ரிஷ் வீட்டுக்குப் போகும் வழி நெடுக தந்தையும் மகனும் மௌனமாகவே இருந்தார்கள். அங்கு அவர்கள் போன போது க்ரிஷ் வீடே மயான அமைதியில் மூழ்கியிருந்தது. எப்போதுமே கலகலவென்று இருக்கும் வீடு அது. இப்போது அங்கும் நிம்மதியில்லை, இங்கும் நிம்மதியில்லை, நிலவரம் என்ன என்று தெரியவில்லை என்று மனம் நொந்தார் மாணிக்கம்.

கமலக்கண்ணன் தன் நண்பர் மாணிக்கத்தைப் பார்த்தவுடன் கண்கலங்கினார். பத்மாவதி மணீஷைப் பார்த்தவுடன் கண்கலங்கினாள். உதய்க்கும் மணீஷைப் பார்த்தவுடன் தம்பியின் நினைவு அதிகமாவதைத் தவிர்க்க முடியவில்லை. மணீஷின் முகத்தில் தெரிந்த வேதனை க்ரிஷின் மேல் இருந்த அன்பினால் வந்தது என்று அவன் நினைத்துக் கொண்டான். மணீஷைத் தட்டிக் கொடுத்தான்.

மாணிக்கம் கமலக்கண்ணனிடம் எல்லாவற்றையும் பொறுமையாக முகத்தில் வருத்தம் காட்டிக் கேட்டுக் கொண்டார். கடைசியில் சொன்னார். “கவலைப்படாதே கண்ணன். செந்தில்நாதன் திமிர் பிடிச்ச ஆளாயிருந்தாலும் திறமையானவர். யாராவது கடத்தியிருந்தாலும் கண்டுபிடிச்சு மீட்டுக்  கொடுத்துடுவார்”  

கமலக்கண்ணன் கண்கள் ஈரமாகச் சொன்னார். “வேண்டாத தெய்வமில்லை. என் பையன் தர்மம் காப்பாத்தும்னான். நாங்களாவது முன்னபின்ன இருந்திருக்கோம். அவன் சரியாவே இருந்தவன். அவனை அந்த தர்மம் காப்பாத்தும்னு நம்பறேன்....”

”உனக்கு யார் மேலயாவது சந்தேகமிருக்கா கண்ணன்?” என்று மாணிக்கம் கேட்டார்.

”அப்படி சந்தேகம் யார் மேலயும் வரலையே மாணிக்கம்...”

பத்மாவதி கண்களைத் துடைத்துக் கொண்டே மாணிக்கத்திடம் சொன்னாள். “அண்ணா அந்த மலைப்பகுதில பேய் நடமாட்டம் இருக்கறதா பேசிகிட்டாங்க ஞாபகம் இருக்கா? எனக்கென்னவோ அது மேல தான் சந்தேகம்?”

உதய் மெல்ல தந்தையைக் கேட்டான். “ஏம்ப்பா பேய் மேல நடவடிக்கை எடுக்க முடியுமா?”

கமலக்கண்ணனுக்கு புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. இவன் மட்டும் இல்லை என்றால் இந்த வீடே சுடுகாடு போல் ஆயிருக்கும்!

பத்மாவதி தன்னையும் மீறி புன்னகை செய்து விட்டு மகன் மேல் கோபப்பட்டாள். “இவனுக்கு ஜோக் அடிக்க நேரம் காலமே கிடையாது. நானே என் பிள்ளையைக் காணோம்னு தவிச்சுகிட்டிருக்கேன்...”

உதய் தாய் அருகே போய் அமர்ந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான். “சும்மா அழுதுகிட்டே இருந்தா உன் முகத்த பார்க்க சகிக்கல. ஹரிணி சொன்ன மாதிரி உன் பையன் சூப்பர் மேனாட்டம் வருவான் பாரு”.

”திடீர்னு நல்ல செய்தி வரும் ஆண்ட்டி, கவலைப்படாதீங்க” என்று தன் பங்குக்கு மணீஷும் சொல்லி வைத்தான். அப்படிச் சொன்னதாக அவனும் ஹரிணியிடம் சொல்லலாம்....

அவன் சொல்லி முடித்த போது உதய் செல்போனில் ஏதோ தகவல் வந்த மணிச்சத்தம் கேட்டது. சுரத்தே இல்லாமல் செல்போனை எடுத்து, வந்த தகவலைப் படித்த உதய் முகத்தில் திகைப்பும் பிரமிப்பும் கலந்து தெரிந்தது.

கமலக்கண்ணன் மனம் நடுங்கக் கேட்டார். “என்னடா?”

“தம்பி அனுப்பியிருக்கான். ’நலமா இருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு வர்றேன். அப்பா அம்மா கிட்ட கவலைப்பட வேண்டாம்’னு சொல்லுன்னு அனுப்பி இருக்கான்.”

மாணிக்கம் சந்தேகத்தோடு கேட்டார். “அவன் தான் அனுப்பிச்சிருக்கான்னு எப்படித் தெரியும்?”

“அவன் மொபைல்ல இருந்து தான் மெசேஜ் வந்திருக்கு”

(தொடரும்)      

என்.கணேசன்   

Wednesday, March 29, 2017

முந்தைய சிந்தனைகள்- 11

வாசக அன்பர்களுக்கு யுகாதி நல்வாழ்த்துக்கள்! எல்லா நலன்களும் பெற்று நிறைவான வாழ்வு அமைய இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

அன்புடன்
என்.கணேசன்

சில சிந்தனை அட்டைகள்!









என்.கணேசன்

Monday, March 27, 2017

எதிர்ப்பில் உருமாறிய வூடூ

அமானுஷ்ய ஆன்மிகம்- 2

கிலியை ஏற்படுத்தும் படியாக விசித்திரமான சடங்குகள் செய்து அமானுஷ்ய சக்திகளை வரவழைத்து அந்த சக்திகளின் உதவியுடன் தொடர் போராட்டங்கள் நடத்தி ஹைத்தி விடுதலை அடைந்தது, மேலை நாடுகளின் அதிகார வர்க்கத்தையும், அவர்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த மதகுருமார்களையும் ஆபத்தை உணர வைத்தது. எந்த விதத்திலும் தங்கள் அறிவுக்கோ, அதிகாரத்திற்கோ இணையாக உயர முடியாதவர்கள் அந்த அடிமைகள் என்ற எண்ணம் கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் இந்த அளவுக்கு வளர வூடூவும், அதன் சடங்குகளும் தான் காரணம் என்று உறுதியாகத் தோன்ற ஆரம்பித்தது.

அதற்கு வலுவான காரணம் அந்த அடிமைகளின் மூதாதையர்கள் எகிப்தில் பிரமிடுகளைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட அடிமைகள் என்பதாக இருந்தது. பழங்காலத்தில் எகிப்தின் பிரமிடுகள் தங்களுக்குள் எத்தனையோ, ரகசியங்களையும், சாபங்களையும் அடக்கி வைத்திருந்ததாக உலகத்தின் மற்றபகுதி மக்களும் நம்பினார்கள். பெரும்பாலான சமாதிகளில் அந்த சமாதிகளை மாசுபடுத்தவோ, தோண்டவோ முனைபவர்களுக்கு உடனடி மரணம், கடுமையான வியாதிகள், தாங்கொணாத துன்பங்கள் வழங்கப்படும் என்கிற வகையில் சாபங்கள் எழுத்து வடிவிலேயே செதுக்கப்பட்டிருந்தன.  அப்படித் துணிந்து யாராவது ஏதாவது செய்வதும், அவர்கள் பல துரதிர்ஷ்டங்களைச் சந்திக்க நேர்வதும் குறித்து கதைகள் அக்காலத்திலேயே நிறைய உலா வந்த வண்ணம் இருந்தன.

(பிற்காலத்தில், சரியாகச் சொல்வதென்றால் 1922ல், எகிப்தில் டுட்டன்காமுன் என்ற சக்கரவர்த்தியின் சமாதியைத் தோண்டி எடுத்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கண்டுபிடிக்க முடியாத வியாதியோ, எதிர்பாராத விபத்தோ, அகால கோர மரணமோ அடைய ஆரம்பித்தது வரலாற்றுச் செய்தி. ஒவ்வொரு மரணச்செய்தியுடனும் பத்திரிக்கைகள் டுட்டன்காமுன் சாபத்தை நினைவுபடுத்திய வண்ணம் இருந்தன. இந்த அளவு ஆதாரபூர்வமாக இல்லா விட்டாலும் முந்தைய காலத்தில் உண்மைகளும், கட்டுக்கதைகளுமாகக் கலந்து  பயமுறுத்தும் விதமாக நிறையவே பரவி வந்தன)

அப்படிப்பட்ட பிரமிடுகளின் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த அடிமைகள் கட்டும் போது என்ன எல்லாம் கண்டார்களோ, எதை எல்லாம் அறிந்தார்களோ, தீயசக்திகளுடன் எப்படியெல்லாம் சம்பந்தப்பட்டார்களோ என்ற பலத்த சந்தேகம் மேலை நாட்டு அதிகார வர்க்கத்திற்கு வந்தது. அறிந்ததை அந்த அடிமைகள் ஒழுங்குபடுத்தி அமைத்து தங்கள் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றிருக்க வேண்டும், அதனாலேயே ஹைத்தி சுதந்திரம் சாத்தியமாகி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர்கள் சில இடங்களில் இருந்து அந்த அடிமைகளை நாடு கடத்தியே விட்டார்கள். சில இடங்களில் அடிமட்ட வேலைகள் செய்ய அந்த அடிமைகளை விட்டால் வேறு கதி இல்லை என்பதால் அந்த அடிமைகளின் சடங்குகளை முடக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தார்கள்.

உலகின் பல பகுதிகளிலும் குடியேறியிருந்த கருப்பின மக்களின் வூடூ வழிபாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.  ஹைத்தியிலேயே கூட ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டதால் பிற்காலத்தில் வூடூவிற்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 1896, 1913 மற்றும் 1941 ஆம் ஆண்டுகளில் ஹைத்தியில் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அமெரிக்காவிலும், மற்ற சில பகுதிகளிலும் வூடூ சம்பந்தப்பட்ட பொருள்களோ, சின்னங்களோ, சிலைகளோ வைத்திருப்பவர்களுக்கு கசையடி, சிறைத்தண்டனை, தூக்குத்தண்டனை வரை தரப்பட்டது. சில இடங்களில் வூடூவைப் பின்பற்றுபவர்களை சூனியக்காரர்கள் என்ற முத்திரை குத்தி உயிரோடு எரிக்கவும் செய்தார்கள். இந்த வகைகளில் ஹைத்தியில் ஆரம்பங்களில் நடந்தது போன்ற வூடூ நிகழ்வுகள் முறைப்படி நடக்காமல் பார்த்துக்கொண்டார்கள். வூடூவைப் பின்பற்றிய கருப்பின மக்களில் பலர் பல இடங்களில் தாங்களாகவே அந்தந்த இடங்களை விட்டு தப்பி ஓடினார்கள்.

அவர்கள் சென்றடைந்த இடங்களிலும் நிலைமை பெரிய விதத்தில் வேறுபட்டு இருக்கவில்லை. இப்படி எல்லாம் ஆதிக்க வர்க்கத்தின் கடுமையான நடவடிக்கைகள் வூடூவைப் பின்பற்றும் மக்களை அதிகமாக பாதித்தன. அவர்களின் நம்பிக்கைகளின்படி வெளிப்படையாக வழிபடும் சுதந்திரத்தை இழந்து விட்ட அவர்கள் மனதளவில் மாறிவிடத் தயாராக இருக்கவில்லை. எல்லாம் இழந்த போதும் தங்கள் கடவுள்களையும், நம்பிக்கைகளையும் மிக உறுதியாக அவர்கள் தங்கள் மன ஆழத்தில் பற்றிக் கொண்டிருந்தார்கள். நடனங்கள், மத்தள சத்தங்கள், மிகப்பெரிய வரைமண்டலங்கள் வரைதல் ஆகியவற்றுடன் செய்யும் அவர்களுடைய மிக நீண்ட சடங்குகள் அதிகார வர்க்கத்தின் கவனத்தைக் கவரும் என்பதால் மிக ரகசியமாக சத்தமில்லாத வகையில் வழிபாடுகளை அவர்கள் நடத்தி வாழ்ந்தார்கள். ஆனால் அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இந்த வழிபாட்டுப் பிரச்னையில் இருந்து மீள வழி என்ன என்று தீவிரமாக யோசித்தார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு பல்லாயிரம் வருடங்கள் முன்பே பிறந்திருந்த அவர்கள் மதத்தை வூடூ மக்கள் கைவிட்டு விடத் தயாராக இருக்கவில்லை.  மோசஸ் கூட அவர்களுடைய அமானுஷ்யக் கலைகளை அவர்களுடைய பழங்கால குரு ரா-கு-எல் பெத்ரோ (அல்லது ஜேத்ரோ) Ra-Gu-El Pethro (Jethro) விடமிருந்து கற்றுக் கொண்டு சென்றதாக அவர்கள் நம்பினார்கள். அப்படிக் கற்றுக் கொண்டு போன மோசஸ் மூலமாகக் கூட அவர்களுடைய கோட்பாடுகள் சில கிறிஸ்துவத்தில் வேரூன்றி இருக்க வேண்டும் என்று நம்பினார்கள். 

யோசித்துப் பார்க்கையில் ஆட்சியாளர்களின் மதமாக இருந்த கிறிஸ்துவத்திற்கும், வூடூ மதத்திற்கும் பொதுவான முக்கிய அம்சங்கள் சில இருந்தன. கிறிஸ்துவத்தைப் போலவே வூடூ மக்களும் இறைவன் ஒருவனே என்பதை நம்பினார்கள். கிறிஸ்துவத்தில்  பரம பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று நிலை வழிபாடு இருப்பது போலவே வூடூவிலும் சர்வ வல்லமை உள்ள இறைவன், தேவதைகள், இறந்து போன முன்னோர்கள் என்ற மூன்று நிலை வழிபாடு இருந்தது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தங்கள் வழிபாட்டையே கிறிஸ்துவ வழிபாடு போல வூடூ மக்கள் செய்ய ஆரம்பித்தார்கள்.

வெளிப்படையாக அவர்கள் வணங்கியது வேறு, உட்புறமாக அவர்கள் பாவித்துக் கொண்டது வேறு என்கிற விதத்தில் வழிபாடுகள் நடக்க ஆரம்பித்தன. சில கிறிஸ்துவ  புனிதத்துறவிகளை தங்கள் தேவதைகளில் சிலராக வரித்துக் கொண்டார்கள். அப்படி வரித்துக் கொண்டவர்களை வெளிப்படையாகவே வழிபட்டார்கள்.  புனிதர் பேட்ரிக் (St. Patrick) துறவியை இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்லலாம். புனிதர் பேட்ரிக் அயர்லாந்தில் இருந்து பாம்புகளை ஒழித்தவர். வூடூ மக்கள் பாம்புகளை வணங்குபவர்கள். பண்டைய இந்தியர்களைப் போலவே பாம்புகளிடம் விசேஷ சக்திகள் இருப்பதாக நம்புபவர்கள் அவர்கள்.

அவர்கள் புனிதர் பேட்ரிக் சிலையை தங்கள் பாம்புக் கடவுளான தன்பல்லாவாக வணங்க ஆரம்பித்தார்கள். அப்படி வணங்கும் போது தங்கள் கையில் பாம்பு பொம்மைகளையோ, சின்னங்களையோ, விஷமற்ற சிறு பாம்புகளையோ கூட வைத்துக் கொண்டு புனிதர் பேட்ரிக் சிலையை வணங்க ஆரம்பித்தனர். அப்படி வணங்கும் போது கிறிஸ்துவ முறைப்படி மெழுகுத் திரிகள் கொளுத்தியே வணங்கினார்கள். பாம்பு பொம்மைகளையோ, சின்னங்களையோ வைத்துக் கொண்டு வணங்கும் வழக்கம் கிறிஸ்துவத்தில் இல்லா விட்டாலும் கூட அவர்களுடைய பாரம்பரிய முறைப்படி வணங்குவது புனிதர் பேட்ரிக்கை என்பதும், மெழுகுத்திரி கொளுத்தி வணங்குவது கிறிஸ்துவ முறைப்படி தான் என்பதும் ஆட்சியாளர்களையும், மதகுருமார்களையும் அதை பொறுத்துக் கொள்ள வைத்தது. அதே நேரத்தில் தங்கள் தேவதையை சிறிய அளவிலாவது தங்கள் முறையில் வணங்கிய திருப்தி வூடுவைப் பின்பற்றும் மக்கள் அடைந்தார்கள்.

இப்படி கிறிஸ்துவத்தில் சிலவற்றையும் தங்கள் நம்பிக்கைகள் சிலவற்றையும் இணைத்துக் கொண்டு வூடூ மக்கள் தாங்கள் சேர்ந்த இடங்களில் ஓரளவு அமைதியாக வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்கள். அதனால் மற்றவர்களுக்கு அவர்கள் மீதிருந்த ஆரம்ப கால சந்தேகக் கண்ணோட்டம் விலக ஆரம்பித்தது. காலப்போக்கில் வூடூ மக்களும் மற்ற வெள்ளை இன மக்களும் ஓரளவு நட்பு பாராட்டியே வாழ ஆரம்பித்தனர். சில வெள்ளை இன மக்களின் வியாதிகளை வூடூ முறைப்படி அதைப் பின்பற்றி வந்த சில கருப்பின மக்கள் குணப்படுத்திக் காட்டும் அளவு நிலைமை முன்னேறியது. வெள்ளை இன மக்களும் வூடூ சாத்தான் வழிபாட்டுச் சமாச்சாரம் அல்ல, இதில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன என்று நம்ப ஆரம்பித்தார்கள். அதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டவும் ஆரம்பித்தார்கள்.

இருதரப்பினரும் எத்தனையோ மாற்றங்களை அடைந்து இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வூடூ வழிபாட்டு நிகழ்வுகளில் கிறிஸ்துவப் பாதிரிகள் கலந்து கொள்வதும், கிறிஸ்துவ வழிபாடுகளில் வூடூ குருக்கள் கலந்து கொள்வதும் சகஜமாக ஆரம்பித்தன. வூடூவையும் அதன் அடிப்படை நன்மைகளையும்  புகழ்ந்து போப் இரண்டாம் ஜான் பால் அவர்களே பேசினார் என்பது வூடூவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.  அது மட்டுமல்லாமல் 1993 ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் ஒரூ வூடூ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

1996 ஆம் ஆண்டு பெனின் நாடு வூடூவைத் தங்கள் நாட்டு மதமாக அறிவித்தது. 2003ல் ஹைத்தி தங்கள் தேச மதமாக வூடூவை அதிகார பூர்வமாக அறிவித்தது.  

அடக்குமுறையில் இருந்து இப்படி மீண்டு வந்த வூடூவின் இரகசிய வழிபாட்டு முறைகளை இனி அடுத்த வாரம் பார்ப்போமா?

-என்.கணேசன்
நன்றி-தினத்தந்தி 14.3.2017