என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Tuesday, August 10, 2021

ஆழ்மனசக்தி அடையும் வழிகள் மூன்றாம் பதிப்பு வெளியீடு!


 


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


தங்களுடைய பேராதரவின் காரணமாக ”ஆழ்மனசக்தி அடையும் வழிகள்” நூலின் மூன்றாம் பதிப்பு வெற்றிகரமாக  வெளியாகியுள்ளது. விலை ரூ.250/-


ஆழ்மனசக்தி நூல்கள் இரண்டுமே என் அதிக உழைப்பையும், படிப்பையும் எடுத்துக் கொண்டவை. வெறுமனே அறிவுரைகள், வழிமுறைகள் கூறுவதை விட உலக அளவில் ஆழ்மனசக்தி குறித்து நடக்கும் ஆராய்ச்சிகள், இன்றைய மருத்துவம் அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடித்திருக்கும் உண்மைகள் ஆகியவற்றை ஆதாரபூர்வமாக எழுதி பின் அந்த உண்மைகளின் அடிப்படையில் வழிமுறைகளைக் கூறுவது சரியாக இருக்கும் என்று நான் எண்ணி எழுதிய நூல்கள் தான் எட்டாவது பதிப்பைச் சந்தித்திருக்கும் “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நூலும், தற்போது மூன்றாம் பதிப்பைச் சந்தித்திருக்கும் “ஆழ்மனசக்தி அடையும் வழிகள்” நூலும். 


பயன்படுத்தும் சரியான மனநிலையில் இருப்பவர்களுக்கு இந்த இரண்டு நூல்களுமே பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம். விளம்பரமே இல்லாமல் வேகமாக அடுத்தடுத்த பதிப்புகளை இந்த நூல்கள் சந்தித்து வருவது வாசகர்கள் தரும் அமோக வரவேற்பினால் என்றே நான் நம்புகிறேன்.  வாங்கிப் படித்தும், மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்தும், இந்த நூல்களைப் பரிசாக அளித்தும் இந்த நூல்களின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.


இந்த நூலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

அன்புடன்,

என்.கணேசன் 

Monday, August 9, 2021

யாரோ ஒருவன்? 44


தேவ்நாத்பூர் கிராமத்தில் புழுதியை வாரியிறைத்துக் கொண்டே அந்தக் கார் நுழைந்தது. சுவாமி முக்தானந்தாவின் ஆசிரமத்தைத் தவிர அந்தக் கிராமம் வேறு எதற்கும் பிரபலமானதல்ல என்பதால் அங்கே வெளியாட்கள் யார் வந்தாலும் அந்த ஆசிரமத்திற்கு வந்தவர்களாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் காரோட்டி வந்த மூக்குக் கண்ணாடியணிந்திருந்த ஆசாமி ஜன்னல் வழியாகத் தலையை வெளியே நீட்டியதும் அவன் எந்தக் கேள்வியும் கேட்கலாமலேயே ஒரு கிராமத்தான்  “இன்னும் ஒரு கிலோமீட்டர் போய் வலது பக்கம் திரும்பினால் ஆசிரமம்என்று சொன்னான்.

காரோட்டி வந்த ஆசாமி பைஜாமா ஜிப்பா உடையில் இருந்தான். அழுத்தி வாரிய தலைமுடியும், கூர்மையான பார்வையும் கொண்ட அவன் ஒரு கணம் இந்தக் கிராமத்தானிடமே ஆசிரமம் பற்றிய கேள்விகளைக் கேட்டு விட்டுப் பின் ஆசிரமத்திற்குப் போகலாமா என்று நினைத்துப் பின் அந்த நினைப்பை மாற்றிக் கொண்டான். ஆசிரமத்தில் கேள்விப்பட்டவைகளில் ஏதாவது சந்தேகம் எழுந்தால் நிவர்த்தி செய்து கொள்ளவும், அங்கே கேள்விப்பட்ட விஷயங்களைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்து கொள்ளவும் பிற்பாடு கிராமத்தினரை விசாரிப்பது தான் சரி என்ற முடிவுக்கு வந்ததால், வழி சொன்ன கிராமத்தானிடம்நன்றிமட்டும் தெரிவித்துக் கொண்டு முன்னேறினான்.

சுவாமி முக்தானந்தாவின் ஆசிரமம் ஏழு ஏக்கர் நிலப்பரப்பின் மத்தியில் பெரிதாகக் கட்டப்பட்டிருந்தது. ஆசிரமத்தின் முன்னால் ஒரு விலையுயர்ந்த காரும் ஒரு ஜீப்பும் நிறுத்தப்பட்டிருந்தன. ஜீப்பில் ஆசிரமத்தின் பெயர் எழுதப்பட்டு இருந்தது. அதனால் அது ஆசிரமத்தினுடையதாகவே இருக்க வேண்டும் என்று நினைத்த பைஜாமா ஜிப்பா ஆசாமி அந்த விலையுயர்ந்த காரை ஆராய்ந்தான். காரின் எண்ணைப் பார்க்கையில் அது டெல்லி ரிஜிஸ்டிரேஷன் காராக இருந்தது.    

காரிலிருந்து இறங்கி ஆசிரமத்தின் உள்ளே போன போது முன்னால் ரிசப்ஷனில் இருந்த இளைஞன்யார் நீங்கள்? என்ன வேண்டும்?” என்று ஹிந்தியில் கேட்டான்.

நான் ஜெய்ராம். ஒரு எழுத்தாளர். ஆசிரமத் தலைவரைப் பார்க்க வேண்டும்என்று சொன்னபடி பைஜாமா ஜிப்பா ஆசாமி தன் விசிட்டிங் கார்டை அவனிடம் நீட்டினான். அதை வாங்கி அந்த இளைஞன் பார்த்தான். பின் சொன்னான். “உட்காருங்கள். இப்போது தலைவர் வேறிரண்டு பேரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்.”

தலையசைத்து விட்டு ஜெய்ராம் உட்கார்ந்தான். அவன் கண்கள் அந்த வரவேற்பறையில் இருந்த படங்களை கவனிக்க ஆரம்பித்தன. முன்னால் சுவாமி முக்தானந்தாவின் பெரிய படம் ஒன்றிருந்தது. பின் அங்கு பல காலக் கட்டங்களில் வந்திருந்த தலைவர்கள், நடிகர் நடிகைகள், படங்கள் இருந்தன. ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே வந்த ஜெய்ராமின் பார்வை ஒரு படத்தில் நிலைத்தது. அதில் முக்தானந்தாவும், நாகராஜும் இருந்தார்கள். சுவாமி முக்தானந்தா நாகராஜின் தோளில் சினேகத்துடன் கையை வைத்தபடி புன்னகைத்துக் கொண்டிருந்தார்.  நாகராஜ் எந்த விதமான உணர்ச்சியுமே காட்டாமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். காமிராவுக்காகச் சிரிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவனுக்கில்லை போலிருந்தது….

ஜெய்ராம் (உண்மையான பெயர் வேறு. அவன் அந்த ஆசிரமத்திற்காகத் தேர்ந்தெடுத்திருந்த தற்காலிகப் பெயர் அது) பொறுமையாகக் காத்திருந்தான்.  அவன் கையில் இரண்டு ஆன்மிகப் புத்தகங்கள் இருந்தன. அந்த இரண்டு புத்தகங்களையும் எழுதியதாக அவன் பெயர் போடப்பட்டிருந்ததுபின்னட்டையில் அவன் புகைப்படம் இருந்ததுஆனால் இரண்டையும் எழுதிய எழுத்தாளர்கள் வேறு வேறு ஆட்கள். நவீனத் தொழில்நுட்ப உதவியுடன்  அந்தப் புத்தகங்களின் நிஜ அட்டைகளை எடுத்து விட்டு அவன் போலிப் பெயர், புகைப்படம் இருக்கும்படியாக அட்டைகள் போட்டு உள்ளேயும் எழுத்தாளர் பெயரை மட்டும் ஒவ்வொரு பக்கத்திலும் மாற்றித் தன் புத்தகமாக உருவாக்கிக் கொண்டு வந்திருந்தான் அவன்

ஆசிரமத்தலைவர் அறையிலிருந்து ஒரு அமெரிக்கரும், ஒரு சீக்கியரும் வெளியே வந்தார்கள். இவர்கள் தான் அந்த டெல்லி ரிஜிஸ்டிரேஷன் காரில் வந்தவர்களாக இருக்க வேண்டும்...

ரிசப்ஷன் இளைஞன் ஜெய்ராமிடம் சொன்னான். “நீங்கள் போய்த் தலைவரைச் சந்திக்கலாம்...”

ஜெய்ராம் உள்ளே போனான். ஒரு நீண்ட மேசையின் பின் பருமனான துறவி அமர்ந்திருந்தார். அவருக்கு வயது முப்பது இருக்கலாம்... அவன் கைகூப்ப அவரும் கைகூப்பினார். பயபக்தியுடன் அவன் தன்னை ஒரு எழுத்தாளனாக அறிமுகப்படுத்திக் கொண்டான்.  தான் எழுதியதாகக் கொண்டு வந்திருந்த  புத்தகங்களைப் பணிவுடன் அவரிடம் நீட்ட அவர் ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டார், ஜெய்ராமை அமரச் சொல்லி விட்டு அந்த நூல்களைப் பிரித்து மேலோட்டமாகப் பார்த்தார். பின் அவற்றை மேசை மீது வைத்து விட்டு மிகுந்த மரியாதையுடன் கேட்டார். “சந்தோஷம். நீங்கள் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?”

ஜெய்ராம் தான் தயாரித்து வந்திருந்த பொய்யைச் சொன்னான். “சுவாமிஜி. நான் என் அடுத்த நூலாக சுவாமி முக்தானந்தாவைப் பற்றி எழுதலாம் என்று ஆசைப்படுகிறேன்…. அதற்காக அவர் குறித்து விவரங்களைக் கேட்க வந்திருக்கிறேன்…”

அவன் எதிர்பார்த்தது போல உடனடியாக எதையும் சொல்ல ஆரம்பிக்காமல் அவர் அவனைக் கூர்ந்து பார்த்தபடிச் சொன்னார். “உங்களை நான் இதற்கு முன்பு இந்த ஆசிரமத்தில் பார்த்ததாக நினைவில்லையே. இது உங்கள் முதல் வரவா?”

ஜெய்ராம் பணிவுடன் சொன்னான். “ஆம் சுவாமிஜி. சுவாமி முக்தானந்தா இருக்கும் போது இங்கே வரும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைக்கவில்லை. உண்மையில் அவரைப் பற்றி நான் அறிய ஆரம்பித்ததே மூன்று மாதங்களுக்கு முன் அவருடைய தீவிர பக்தர் ஒருவர் மூலமாகத் தான்.  ஆனால் நான் கேள்விப்பட்டதெல்லாம் என் அந்தராத்மாவைத் தொட்டு அவர் சரிதையை எழுதத் தூண்டி விட்டது. அதனால் தான் இங்கே வந்திருக்கிறேன்.”

அவர் மகிழ்ச்சியோடு சொன்னார். “சந்தோஷம். நானே பல சமயங்களில் சுவாமி பற்றிய ஒரு நல்ல நூல் வெளிவர வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்எத்தனையோ அரைகுறைகள் பற்றியெல்லாம் நூல்கள் வந்திருக்கின்றன. சுவாமியைப் பற்றி ஊடகங்களில் செய்திகளாகவும், கட்டுரைகளாகவும் வந்திருக்கின்றன. ஆனால் தனிநூலாக எதுவும் வெளியே வரவில்லை என்ற ஆதங்கம் எனக்கு நிறைய உண்டு…. அதைப் பல முறை மகராஜிடம் சொல்லியிருக்கிறேன். ”

ஜெய்ராம் மகராஜ் என்ற சொல்லைக் கேட்டவுடன் குழப்பத்துடன் பார்த்துச் சொன்னான். “மகராஜ்?”

எல்லோரையும் விட சுவாமியுடன் அதிக காலம் இருந்தவர் மகராஜ் தான்இந்த ஆசிரமம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே மகராஜ் நாகராஜ், சுவாமியுடன் இருந்திருக்கிறார்.”

அப்போதும் முகம் தெளிந்தவனாக ஜெய்ராம் காட்டாமல் போகவே அவர் அவனிடம் சொன்னார். “சுவாமியின் பக்தர்கள் எவரும் மகராஜைத் தெரியாதவர்கள் இல்லையே. சுவாமியைப் பற்றி அவர் உங்களிடம் சொல்லி இருந்தால் அவர் மகராஜைப் பற்றியும் உங்களிடம் சொல்லியிருக்க வேண்டுமே.?”

இனியும் தெரியாதது போல் காட்டிக் கொண்டால் சாயம் வெளுத்து விடலாம் என்று பயந்த ஜெய்ராம்மகராஜ் என்றால் நாகசக்தி கொண்ட....” என்று சொல்லி நிறுத்த அவர்அவரே தான்என்றார்.

ஜெய்ராம் முகம் தெளிந்தவனாகச் சொன்னான். “அவரைப் பற்றியும் என் நண்பர் சொல்லியிருக்கிறார்மகராஜுக்கு நாகசக்தி கிடைக்கவே சுவாமி முக்தானந்தா தான் காரணம் என்றும் சொல்லி இருக்கிறார்.  அதெல்லாம் சேர்ந்து தான் என் ஆவலைத் தூண்டி விட்டது என்று சொல்லலாம். உண்மையைச் சொல்லப் போனால் நீங்கள் தான் மகராஜ் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்...”

அவர் புன்னகைத்தார். “நான் அவரல்ல. மகராஜ் தென்னிந்தியா போயிருக்கிறார்....”

ஜெய்ராம் சிறிது மவுனமாக இருந்து அவர் நாகராஜின் தென்னிந்தியப் பயணம் ஏன் என்று எதாவது சொல்வாரா என்று எதிர்பார்த்தான். ஆனால் அவரும் மவுனம் சாதித்தார்.

ஜெய்ராம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சொன்னான். “சுவாமிஜியுடன் அதிக காலம் இருந்தவர் மகராஜ் என்கிறீர்கள். அப்படியானால் மகராஜ் தான் அவருடைய முதல் சீடரா?”

அவர் லேசாகச் சிரித்து விட்டுச் சொன்னார். “நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். மகராஜ் இன்னும் சன்னியாசம் வாங்கிக் கொள்ளவில்லை. ஒரு வகையில் நீங்கள் சொன்னது போல் அவர் தான் ஆரம்பச் சீடர் என்று எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் சன்னியாசம் வாங்காததால் நீங்கள் நினைக்கிற மாதிரி துறவறம் பூண்ட சீடர் அல்ல அவர்

தலைசுற்றுவது போல் தோன்றியதை ஜெய்ராம் நடிக்க வேண்டியிருக்கவில்லை. நிஜமாகவே குழப்பத்தில் அவனுக்குத் தலைசுற்றியது.



(தொடரும்)
என்.கணேசன்  

Thursday, August 5, 2021

இல்லுமினாட்டி 114



வாஷிங்டன் செல்ல ஏற்பாடு செய்து தருவதாக சாலமன் சொன்ன பிறகு திருப்தி அடைந்த விஸ்வம்இந்த உதவி வீண் போகாதுஎன்று சாலமனிடம் உறுதியளித்தான். இனி அவசியமான போது நேரடியாகப் பேச வாங் வேயிடமிருந்து ரகசிய அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டான். சாலமனுக்கு மட்டுமே தந்திருந்த அலைபேசி எண்ணை வாங் வே அவனுக்கும் தந்தார். ஆனால் வாங் வே அவனைத் தொடர்பு கொள்ள அவனுடைய அலைபேசி எண்ணைக் கேட்ட போது அவனிடம் அலைபேசி எதுவும் இல்லை என்று விஸ்வம் சொல்லி விட்டான். அது வாங் வேக்கு ஏமாற்றமாக இருந்தது.

அவனிடம் இல்லா விட்டாலும் அவன் கூட்டாளியிடமாவது கண்டிப்பாக அலைபேசி இல்லாமல் போகாது என்று வாங் வே நினைத்தார். ஆனால் அவன் கூட்டாளி ஒருவன் இருப்பதாகவே விஸ்வம் காட்டிக் கொள்ளவில்லை. சர்ச்சில் அந்தக் கூட்டாளி தென்படவும் இல்லை.

நான் அவசரமாக உங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால் என்ன செய்வது?” என்று வாங் வே கேட்டார்.

விஸ்வம் சொன்னான். “எனக்கு நீங்களாக ஒரு அலைபேசி ஏற்பாடு செய்து தந்தால் அதற்கு உதவியாக இருக்கும்

சாலமனுக்கு அந்த வேலையும் வந்து சேர்ந்தது.

விஸ்வம் வாங் வேயிடம் சொன்னான். “ஒருவேளை தலைவர் ஒரு விபத்தில் இறந்து விட்டால் தலைவர் பதவிக்குப் போட்டி வரும். அந்தச் சமயத்தில் எனக்கு ஆதரவு தருவதற்குப் பதிலாக நீங்களும் போட்டியில் நின்றால் என்ன என்று உங்களுக்கு தோன்றி விடாதே?”

வாங் வே அவன் கேள்வியில் அதிர்ந்து போனார். பின் மெல்ல சுதாரித்துக் கொண்டு சொன்னார். “கண்டிப்பாக நீங்கள் என்னை நம்பலாம். சாதாரணமாக ஒரு போட்டி வருமானால் நானும் நிற்கவே முயற்சிப்பேன் என்பதே உண்மை. ஆனால் உங்களால் தான் போட்டிக்கான சூழலே வருகிறது என்றால் நான் அதில் காண விரும்பும் பலன் நீங்கள் எனக்கு வாக்களித்திருக்கும் உங்களுக்கு அடுத்த இடமாகவே இருக்கும். தலைவர் பதவிக்கு உங்களையே நான் ஆதரிப்பேன். என்னை நீங்கள் பரிபூரணமாக நம்பலாம்.”

விஸ்வம் அவர் கவனமாகச் சொன்ன பதிலை ரசித்தான். தலைவரை அவன் தீர்த்துக் கட்டி அந்தப் பதவிக்குத் தேர்தல் வந்தால் அவன் தலைவராக அவர் உதவுவார். அவர் உபதலைவராக அவன் உதவ வேண்டும். அப்படியில்லாமல் இயல்பாகவே ஒரு போட்டி வருமானால் அவரும் போட்டியிடத் தயங்க மாட்டார்,  அவர் எடுத்த நிலைப்பாடு நியாயமாகத் தான் தெரிந்தது. இந்த ஒப்பந்தம் சரியாகத் தான் அவனுக்குத் தோன்றியது. சிறு புன்னகை அவன் உதடுகளில் வந்து போனது.  அதோடு அவர்கள் பேச்சை முடித்துக் கொண்டார்கள்.

சாலமன் கிளம்புவதற்கு முன் சொன்னார். “பாஸ்போர்ட்டுக்கு உங்கள் இப்போதைய ஃபோட்டோ ஒன்று வேண்டும்.”

“உங்களிடம் தான் என் ஃபோட்டோ இருக்கிறதே. தாடியை மட்டும் சேர்த்து விட்டால் போதுமே”

“எங்களிடம் இருக்கும் ஃபோட்டோவுக்கும், இப்போதைய உங்கள் தோற்றத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது” என்று சாலமன் சொன்னார். அவர் சொன்னது உண்மையாகவே இருந்தது. போதையிலிருந்து மீள ஆரம்பித்திருந்த உடல் இப்போது ஓரளவு முறுக்கேறி ஆளே வித்தியாசமாக இருப்பது போல் தெரிந்தது. 

“அப்படியானால் நீங்கள் தான் என்னை ஃபோட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும்”

சாலமன் யோசித்தார். புகைப்படம் எடுக்க வெளிச்சம் வேண்டும். இந்த மெழுகுவர்த்தி ஒளியில் எடுக்க முடியாது. மின்விளக்குகள் போட்டாலோ தெருவில் போகிறவர்களுக்குத் தெரிந்து விடும் அபாயம் இருக்கிறது. ஆனாலும் வேறு வழி தெரியவில்லை. அவர் ஆலோசித்தார். மேடையில் உடைந்த யேசி கிறிஸ்து  சிலை பக்கம் இருக்கும் விளக்குகளைப் போட்டு புகைப்படம் எடுத்தால் அந்தப் பகுதி வெளிச்சம் தெரு வரை தெரியாது. அந்த முடிவெடுத்து அவர் அவனிடம் சொன்னார். அவன் சரியென்றான்.

அப்படி மேடைப்பகுதியில் இரண்டு விளக்குகளைப் போட்டு சாலமன் விஸ்வத்தை இரண்டு மூன்று புகைப்படம் எடுத்தார். அப்போதும் கூட்டாளி அந்த வெளிச்சத்திலாவது எங்காவது ஒரு ஓரத்தில் தெரிகிறானா என்று சாலமன் பார்த்தார். ஆனால் அவன் தெரியவில்லை.

பிறகு சாலமன் விஸ்வம் எப்போது வாஷிங்டன் கிளம்ப உத்தேசித்துள்ளான் என்று கேட்டார். ஏனென்றால் அவன் போகின்ற நாள் நேரம் தெரிந்தால் தான் அதற்கேற்ற ஆட்களை விமானநிலையத்தில் அவர் முன்கூட்டியே ஏற்பாடு செய்ய முடியும்.

விஸ்வம் கேட்டான். “தலைவர் வரும் வாரம் எந்த விமானத்தில் போகிறார்?”

சாலமன் இது என்ன கேள்வி என்பது போலப் பார்த்தார். “அவர் எப்போதுமே தனி விமானத்தில் தான் போவார். வரும் வாரம் செவ்வாய்க்கிழமை இங்கிருந்து கிளம்புவார்

நினைத்த நேரத்தில் தனி விமானத்தில் பறக்கக்கூடிய நிலையில் இருக்கும் எர்னெஸ்டோவை நினைத்துப் பார்க்கையில் விஸ்வத்துக்குப் பொறாமையாக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதி கூட நான்கு அல்லது எட்டு வருடங்களில் பதவி இழந்து சாதாரண மனிதராக வேண்டி வரும். இந்த மனிதர் முடிசூடா மன்னராக 25 ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்து வருகிறார். உலக நாடுகளின் முக்கிய முடிவுகளுக்குப் பின்னால் இவர் பங்கும் இருக்கிறது. இல்லுமினாட்டியின் தலைமைப்பதவி உண்மையில் உலக ஜனாதிபதி பதவி போன்றது.... ’ஒரு நாள் அந்தப் பதவியில் நான் அமர்வேன்என்று அவன் மனதினுள் உறுதியாகச் சொல்லிக் கொண்டான்.

விஸ்வம் சாலமனிடம் சொன்னான். “நான் இரண்டு நாட்கள் முன்கூட்டியே அங்கே போய் விட நினைக்கிறேன். ஞாயிற்றுக்கிழமையே போக முடிந்தால் நல்லது....”

தலையசைத்த சாலமன்சனிக்கிழமை உங்களுக்கு பாஸ்போர்ட், விசா, டிக்கெட் மூன்றும் கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன்.... அதோடு உங்களுக்கு ஒரு அலைபேசியும் கொண்டு வருகிறேன்...” என்று சொல்லிக் கிளம்பினார். கிளம்புவதற்கு முன்பு அவருடைய அனுபவம் வாய்ந்த கண்கள் சர்ச்சை மறுபடி ஒருமுறை ஊடுருவிப் பார்த்தன. கூட்டாளி அப்போதும் எங்கேயும் தென்படவில்லை. அவர் வெளியே கால் வைத்தவுடன் சர்ச்சில் எரிந்து கொண்டிருந்த ஒரே மெழுகுவர்த்தியும் அணைக்கப்பட்டு சர்ச் காரிருளில் மூழ்கியதைக் கவனித்தார்.

அவர் காரில் போய்க் கொண்டிருக்கையில் வாங் வேயின் அழைப்பு அவருடைய அலைபேசிக்கு வந்தது. “உங்கள் கண்ணுக்கு அந்தக் கூட்டாளி அகப்பட்டானா?”

இல்லை. ஒருவேளை அவன் கீழ்தளத்தில் மறைவாக இருந்திருக்கலாம்....”

இந்தப் பேச்சுவார்த்தை போன விதம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” வாங் வே சாலமனைக் கேட்டார்.  

“நீங்கள் சரியாகத் தான் பேசினீர்கள். அவனும் தவறாகப் பேசினான் என்று சொல்லிவிட முடியாது... “

வாங் வே சொன்னார். “ஆபத்தானாலும் நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. என்ன செய்வது?.... நீங்கள் நாளையே வாஷிங்டன் போக வேண்டும் என்று சொன்னீர்களே. அப்படியானால் பாஸ்போர்ட் விசா எப்படி ஏற்பாடு செய்யப் போகிறீர்கள்?”

“ஏதாவது காரணம் சொல்லி இரண்டு நாள் இங்கேயே இருக்க முடிவு செய்திருக்கிறேன். நீங்களும் சொன்னதால் தான் இந்த ஆபத்தை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் சார்”

“நன்றி சாலமன். இதற்காக நீங்கள் கண்டிப்பாக பின்னால் வருத்தப்பட மாட்டீர்கள்.  இப்போதும் நாம் பாதுகாப்பையே பார்த்து ஒதுங்கி இருந்தோமானால் மாற்றத்தைப் பார்க்க முடியாது. அதனால் தான் நான் புதியவன் என்றும் பார்க்காமல் விஸ்வத்தைக் கூடத் தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று இறங்கி வந்திருக்கிறேன்.”

“புரிகிறது சார்” என்றார் சாலமன்.

வாங் வேயிடம் பேசி முடித்த பிறகு கடிகாரத்தைப் பார்த்தார். நேரம் 11.10. அவசரமாக அலைபேசியில் ஒருவனை அழைத்தார். ஐந்தாறு முறை அடித்த பின் தான் அவன் உறக்கக் கலக்கத்தோடு பேசினான். “ஹலோ”

“ஒரு வேலை இருக்கிறது. அரை மணி நேரத்தில் வந்து விடுவேன். காத்திரு” என்று சொல்லிப் பதிலுக்குக் காத்திராமல் இணைப்பைத் துண்டித்தார். அந்த ஆளிடம் தான் போலி பாஸ்போர்ட் விசா வேலையைத் தரப் போகிறார். அவன் பழைய குற்றவாளி. இந்த விஷயத்தில்  அவன் கில்லாடி.  யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி கச்சிதமாக அவன் செய்து தருவான்....

(தொடரும்)
என்.கணேசன்

Monday, August 2, 2021

யாரோ ஒருவன்? 43


ரவு பத்து மணியானதும் ஒரு தோழி, இரண்டு உறவினர்கள் தவிர மற்றவர்கள் எல்லாரும் இனியும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்து கிளம்பிப் போனார்கள். போலீஸ் மேலதிகாரி போவதற்கு முன் மதன்லாலின் மனைவியிடம் ஒரு தொலைபேசி எண்ணைத் தந்து ஏதாவது பிரச்சினை அல்லது புதிய தகவல் என்றால் அந்த எண்ணுக்கு அழைத்துச் சொல்லச் சொன்னார். “ஒரு வேளை பேசக்கூடிய சூழ்நிலை இல்லாட்டி மிஸ்டு கால் தந்தாலும் போதும். ஆபத்து, அவசரம்னா நாங்க யாராவது உடனடியாய் வருவோம்என்று சொன்னார். அவள் தலையாட்டினாள்.

அவளுக்கு அவர் தைரியம் சொல்லத் தேவையிருக்கவில்லை. ஏனென்றால் அவள் லேசான பதற்றத்தில் இருந்தாளேயொழிய பெருங்கவலையிலோ, துக்கத்திலோ இல்லை. அவள் பிள்ளைகள் போன் செய்து பேசிய போது கூடலட்சக்கணக்கில் எல்லாம் தர வேண்டியது இல்லை, சும்மாயிருங்க. நீங்க அவரைப் பத்திக் கவலைப்படாதீங்க. அவர் எப்படியாவது வந்து சேர்ந்துடுவாருஎன்று அவள்  அவர்களுக்குத் தைரியம் சொன்னது அவர் காதில் விழுந்திருந்தது.

பணமா கணவனா என்ற கேள்வி வருமானால் பெரிதாகக் கவலைப்படாமல் கணவனைத் தியாகம் செய்யக்கூடியவள் என்று அந்த ஒருநாளிலேயே அவர் கண்டுபிடித்து வைத்திருந்தார். இத்தனைக்கும் மதன்லால் லஞ்சம் வாங்கிய பணத்தில் ஏகப்பட்ட சொத்துக்கள், நகைகள் அவளுக்கும், குடும்பத்துக்கும் வாங்கித் தந்திருந்தான். சொத்துக்களில் இரண்டை விற்றால் ஐம்பது லட்சம் தாராளமாய் அவள் திரட்டி விட முடியும் என்றாலும் அவள் அதைப் பற்றியே யோசிக்கவில்லை.

மதன்லால் நண்பர்களை விட எதிரிகளை அதிகம் சம்பாதித்து வைத்திருந்ததால் எதிரி எவனாவது ஒருவனே இதைச் செய்துவிட்டிருக்க வேண்டும் என்று அவருடைய போலீஸ்துறை ஆட்கள் சந்தேகப்பட்டார்கள். இந்தக் கடத்தலைக் கேள்விப்பட்ட அவனுடன் வேலை பார்த்த போலீஸ்காரர்கள் பலரும் சந்தோஷப்பட்டார்கள் என்ற தகவலும் அவருக்கு வந்து சேர்ந்தது. சிலர் அவனுக்குக் கீழ் வேலை பார்த்து மனம் நொந்திருந்த ஆள் எவனாவது இதைச் செய்திருக்கலாம் என்று கூடச் சொன்னார்கள். அந்த அளவு கூட வேலை பார்ப்பவர்களின் நல்லெண்ணத்தை  அவன் சம்பாதித்திருந்தான்.

மதன்லாலின் பைக் சிம்லாவுக்கு வெளியே நாற்பது கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு எஸ்டேட் வாசலில் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்திருந்தார்கள். அதிலிருந்தும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அந்த எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு அவனைத் தெரிந்திருக்கவில்லை. அவன் உள்ளே வரவில்லை, அவனை யாரும் சந்திக்கவில்லை என்று தெரிவித்தார்கள்.

அவன் மனைவிக்கு வந்திருந்த கடத்தல்காரனின் முதல் அழைப்பு எண்ணைப் பரிசோதித்த போது போலி ஆவணங்களைத் தந்து வாங்கப்பட்ட சிம்கார்டு என்பது தெரிய வந்தது. அந்த எண்ணிலிருந்து பேசிய ஒரே கால் மதன்லால் மனைவியிடமாகத் தானிருந்தது. அதை சண்டிகரிலிருந்து அவன் அழைத்துப் பேசியதாகவும் தொழில்நுட்ப உதவியால் கண்டுபிடித்திருந்தார்கள். மதன்லாலின் வீட்டின் முன்னால் வீசியிருந்த கடிதம் கடத்தல்காரனுக்கு உள்ளூரிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்ததை விட அதிகமாக எதையும் தெரிவிக்கவில்லை. சைத்தான் என்று பலராலும் அழைக்கப்பட்ட மதன்லால் இப்போது எங்கே இருக்கிறானோ என்று யோசித்தபடியே அந்த மேலதிகாரியும் கிளம்பிப் போனார்.

இரவு பன்னிரண்டரைக்கு மதன்லாலின் மனைவிக்கு அழைப்பு வந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவள் கஷ்டப்பட்டு கண்விழித்தாள்யாரென்று பார்த்தாள். மதன்லால் பெயர் தெரிந்தது. ‘ஓ தப்பித்து விட்டான் போலிருக்கிறதுஎன்று மகிழ்ந்தவளாய் அலைபேசியை எடுத்துஹலோசொன்னாள்.

கடத்தல்காரன் தான் பேசினான். “அவ்வளவு தூரம் சொல்லியும் போலீஸுக்குச் சொல்லிட்டியேம்மா.”

அதே சனியன் தானா என்று மனதிற்குள் சலித்தவள் குரலைக் குழைத்துச் சொன்னாள். “தப்பா நினைச்சுக்காதீங்க. அவர் ட்யூட்டிக்குப் போகலன்னவுடனே ஸ்டேஷன்ல இருந்தே போன் பண்ணினாங்க. எனக்குச் சொல்ல வேண்டியதாய் போச்சு. ஆனா உங்களுக்கு ஐம்பது லட்சம் தர நான் தயார். ஆனா உடனடியா தர கைவசம் அந்த அளவு ரொக்கம் இல்லை. கொஞ்சம் டைம் குடுங்க ப்ளீஸ்...”

சரி அடுத்த வாரம் வியாழக்கிழமை போன் பண்றேன். அதுக்குள்ளே தயார் பண்ணி வை. ஏமாத்த நினைச்சா அவனோட பிணம் கூட உனக்குக் கிடைக்காது ஜாக்கிரதை.” அதற்கு மேல் பேச்சை வளர்த்தாமல் அவன் இணைப்பைத் துண்டித்தான்.

அவள் உடனடியாக அந்த மேலதிகாரிக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னாள். போலீசார் அந்த அழைப்பு ஹைதராபாத்திலிருந்து வந்திருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதற்கு மேல் எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை.

மேலதிகாரி மறு நாள் அழைத்துச் சொன்னார். “இனி கடத்தல்காரன் வியாழக்கிழமை போன் பண்ணினா பணம் ரெடி, எப்படி எங்கே தரணும்னு கேளுங்க. பணம் கொடுக்கிற மாதிரி நடிச்சு தான் அவனைப் பிடிக்க முடியும். பேசறப்ப நீங்க துக்கத்துல இருக்கற மாதிரியும், கவலைப்படற மாதிரியும் காட்டிக்கோங்க. இல்லாட்டி நம்ப மாட்டான்.” அவளிடம் எந்தக் கவலையையும், துக்கத்தையும் அவரால் காண முடியாததால் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அவள் சரியென்றாள். நிஜமாக துக்கப்பட முடியாவிட்டாலும் துக்கப்படுவது போல் அவளால் நடிக்க முடியும்!


நாகராஜிடம் சுதர்ஷன் தீபக்குடன் பேசியதை எல்லாம் தெரிவித்து விட்டுச் சொன்னான். “அந்தப் பையன் உங்களை விடற மாதிரி இல்லை...”

தீபக்கின் துடிப்பும், கலகலப்பும், சுறுசுறுப்பும் நாகராஜுக்கு இன்னொருவனை நினைவுபடுத்தின. அவன் முகம் மென்மையாகியது. அந்த இன்னொருவனும் எதையும் அரைகுறையாக விட முடிந்தவனல்ல. ஈடுபாடு காட்டிய விஷயங்களை இறுதி வரை அறிந்து கொள்ளும் வரை அவனால் சும்மா இருக்க முடிந்ததில்லை.

நாகராஜ் எதாவது கருத்துத் தெரிவிப்பான் என்று சுதர்ஷன் எதிர்பார்த்தான். ஆனால் தன் மனதில் இருப்பதை என்றுமே அனாவசியமாக வெளிப்படுத்தி இருக்காத நாகராஜ் மவுனமாகவே இருந்தான். முகத்தில் தெரிந்த அந்த மென்மை மட்டும் அவன் மனநிலையைக் காட்டியது.

சுதர்ஷனுக்குத் தெரிந்து நாகராஜிடம் அவனுடைய குரு ஸ்வாமி முக்தானந்தாவைத் தவிர வேறு யாருமே உரிமை எடுத்துக் கொண்டு பழக முடிந்ததில்லை. தலைக்கனமோ, தான் உயர்ந்தவன் என்ற பாவனையோ அவன் என்றும் காட்டியதில்லை என்றாலும் நெருங்கி விட முடிந்தவன் அல்ல அவன். குருவைத் தவிர, மற்ற எல்லோரிடமும் ஒரு இடைவெளியை அவன் தக்க வைத்துக் கொண்டிருந்தான். பல வருடங்களாக அவனுடன் இருக்கும் சுதர்ஷனே கூட அந்த இடைவெளியைக் குறைக்க முடிந்ததில்லை. ஆனால் அந்த இடைவெளியை இரண்டே நாளில் தீபக் தாண்டி விட்டிருந்தான். இன்று காலையில் தீபக் நாகராஜின் விரல்கள் பிடித்து நடந்ததையும், நாகராஜ் அதை அனுமதித்ததையும் சுதர்ஷன் நினைத்துப் பார்க்கிறான். இரண்டே நாட்களில் இது இராட்சசத் தாவல் தான்...

அவன் எத்தனையோ வருடங்களாக நாகராஜைப் பார்த்து வருகிறான். பல பிரமிக்கத் தக்க மாற்றங்களை அவனிடம் ஒவ்வொரு முறையும் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறான். ஒருசில வருடங்களில் அவன் மாறியிருக்கும் விதங்கள் சாதாரணமானவை அல்ல. இனி எப்படி மாறப்போகிறான், தான் இங்கு வந்த வேலையை எப்படி முடிக்கப் போகிறான் என்பது தெரியவில்லை. இதெல்லாம் இன்னும் எத்தனை காலம் நீடிக்கும், அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதையும் சுதர்ஷனால் யூகிக்க முடியவில்லை. தீபக்கை அவனுக்கும் மிகவும் பிடித்திருந்தது. எல்லாம் முடிகையில் அந்த நல்ல இளைஞன் மகிழ்ச்சியோடிருக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை... பாவம் தீபக்! முன்பு நடந்திருப்பதையும் அவன் அறிய மாட்டான். இனி நடக்கப் போவதையும் அவன் அறிய மாட்டான். பல நேரங்களில் எதுவும் அறியாமலிருப்பதே நிம்மதி. எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ளும் போது நிம்மதியும், மகிழ்ச்சியும் மனிதனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு விடுகின்றன. நிஜங்கள் சகிக்க முடிந்தவை அல்ல!


(தொடரும்)
என்.கணேசன்