கீதை காட்டும் பாதை 34
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Saturday, July 10, 2021
Thursday, July 8, 2021
இல்லுமினாட்டி 110
க்ரிஷ் சிறிது யோசனைக்குப் பின் சொன்னான். “அந்த அலைவரிசைகளை வைத்து, இருக்கும்
இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று அந்த ஏலியன்
செய்திருக்கிற ஏதாவது உபாயமாக இருக்கலாம்... என் வேற்றுக்கிரகவாசி
நண்பன் கண்களுக்குத் தெரியா விட்டாலும் அவன் வந்த விதம் தெரிந்து கொண்டு தானிருந்தது. அவன் வந்த
வாகனம் ஒரு பெரிய கருப்புப் பறவை போல இருந்தது. அதிவேகமாக
அது பறந்தது. அது போல் ஏதாவது
விஸ்வத்துக்கு உதவும் சக்தியின் போக்குவரத்து வாகனமாவது தென்பட்டிருக்கிறதா?”
இம்மானுவல் சொன்னான். “முதல் தடவையாக
அந்த அலைவரிசைகள் தெரிய ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு வட்ட வடிவமான தட்டு மிதந்து வருவது
போன்ற ஒரு காட்சியை தென்னிந்தியப் பகுதியில் பார்த்திருக்கிறார்கள். ஒருவர்
அதை வீடியோவும் எடுத்திருக்கிறார்...”
இம்மானுவல் தன் லாப்டாப்பில் அந்த வீடியோவைக்
காண்பித்தான். ஒரு புள்ளியாக ஆரம்பித்து பெரிதாகிக் கொண்டே தெரிய வந்த அந்தப்
பறக்கும் தட்டை அவர்கள் ஆர்வத்துடன் பார்த்தார்கள். பெரிதாகத்
தெரிந்த போது கூடவே அதனுள்ளிருந்து கருஞ்சிவப்பு நிறத்தில் ஒளி தெரிந்தது. பின் புகை
மண்டலம் தோன்றி பறக்கும் தட்டு முழுமையாய் மறைந்து போனது. மறைவதற்கு
முன்னால் ஒரு வினாடி ஒரு நட்சத்திரம் போல் புகைமண்டலத்திற்கு நடுவே ஏதோ மின்னியது. அதன் பிறகு
அது சுத்தமாய் மறைந்து போனது. எல்லாமே
இருபது வினாடிகளுக்குள் முடிந்து விட்டது...
இம்மானுவல் லாப்டாப்பைத் தள்ளி வைத்து
விட்டுச் சொன்னான். “இந்த வீடியோவை எடுத்தது இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில்
ஒருவர். இரண்டாவதாக அந்த அலைவரிசைகள் தெரிய ஆரம்பிப்பதற்கு முன் இதே
பறக்கும் தட்டு இஸ்ரோவின் ஒரு புகைப்படத்தில் சிக்கியிருக்கிறது..”
அவன் கொண்டு வந்திருந்த ஃபைலில் அந்தப்
புகைப்படத்தைக் காட்டினான். அதே பறக்கும் தட்டு தான். விளக்குகள்
எதுவும் இல்லை. மங்கலாகத் தெரிந்தது. “இதைத் தோராயமாக
மைசூர் பகுதியில் எடுக்கப்பட்ட படமாக இஸ்ரோ சொல்கிறது. இந்த இரண்டு
நிகழ்வுகளுக்கும், க்ரிஷின் ஏலியன் நண்பன் வரவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. எல்லாமே
அமாவாசை தினம் தான் நடந்திருக்கிறது... மூன்றாவதாக அந்த
அலைவரிசைகள் பூமியில் தெரிய ஆரம்பித்தது இந்த ம்யூனிக் பகுதியில். இந்த முறை
எந்த வீடியோவும், படமும் நமக்கு அகப்படவில்லை. மாறாக ம்யூனிக்கில்
இருந்து நூறு கிலோ மீட்டர் தள்ளி உள்ள கிராமத்தில் ஒரு விவசாயி இந்தப் பறக்கும் தட்டை
இரண்டே வினாடிகள் பார்த்திருக்கிறான். அதை ஜெர்மனி வானிலை
மையத்துக்குத் தெரிவித்திருக்கிறான். ஆனால் அவன் சொன்னதுடன்
சேர்ந்து படமோ, வீடியோவோ அனுப்பாததால் அவர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம்
தரவில்லை. இது போல் அடிக்கடி யாராவது ஒருவர் ”நான் அங்கே
பார்த்தேன்”, “இங்கே பார்த்தேன்” என்று போன்
செய்து சொல்கிறார்கள், ஆனால் அதற்கான ஆதாரங்கள் அனுப்புவதில்லை என்பதால் இதைப் பெரிதாக
அந்த வானிலை மையம் எடுத்துக் கொள்வதில்லை. இது சமீபத்திய
நிகழ்வானதால் அவர்கள் அந்த விவசாயியின் போன் நம்பரை மட்டும் குறித்து
வைத்திருந்தார்கள். நான் போய்
அந்த ஆளிடம் பேசிக் கடைசியில் இந்தப்
புகைப்படத்தைக் காட்டினேன். அவன் பார்த்ததும் இதையே தான் என்று சொன்னான்...”
அவன் சொல்லி முடித்தவுடன் நீண்டதொரு
மௌனம் அங்கே நிலவியது. ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனைகளில் இருந்தார்கள்.
க்ரிஷ் தான் முதலில் மௌனத்தைக் கலைத்தான். “என் மாஸ்டரின்
ரகசிய ஆன்மீக இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்பே இந்தக் காலக்கட்டத்தைக் குறிப்பிட்டு
ஒரு தீயசக்தி இந்த உலகத்திற்குப் படையெடுத்து வரப்போகிறது என்ற எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை வைத்து
மாஸ்டர் என் வேற்றுக்கிரகவாசி நண்பன் தான் அந்தத் தீயசக்தி என்று ஆரம்பத்தில் சந்தேகப்பட்டிருந்தார். பிறகு தான்
அவனல்ல அது என்று தெரிந்தது. ஆனால் இப்போது பார்த்தால் விஸ்வத்தின் கூட்டாளியாக இருக்கும்
இந்த சக்தி தான் தீயசக்தி என்று தோன்றுகிறது....”
இம்மானுவல் தன் மிகப்பெரிய சந்தேகத்தைக்
கேட்டான். “அந்தக் கூட்டாளியின் உண்மையான உத்தேசம் என்னவாக இருக்கும்?”
அதற்குப் பதில் அவர்கள் யாருக்குமே
தெரிந்திருக்கவில்லை.
சாலமன் சரியாக இரவு மணி 8.55 க்கு சர்ச்சைத்
தாண்டி ஒரு பெரிய மரத்தின் பின் ஓரமாகக் காரை நிறுத்தி விட்டு இறங்கினார். இன்று அவர்
ஓட்டி வந்திருந்த கார் வாடகைக்கு எடுத்த கார். அதிலிருந்து
இறங்கும் போது அவர் மனம் படபடத்துக் கொண்டிருந்தது. அமைதியாக
இருக்க முயற்சி செய்தும் அப்படி இருக்க முடியவில்லை. இன்று காலை
இம்மானுவல் ம்யூனிக்
வந்து விட்டான். க்ரிஷும் வந்து சேர்ந்த செய்தி அவருக்குக் கிடைத்தது. எர்னெஸ்டோவின்
வீட்டில் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அங்கே அவர்கள்
என்ன பேசுகிறார்கள், என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இங்கே வாங்
வேயும், விஸ்வமும் பேசப்போகிறார்கள். இங்கும்
எந்த அளவு இவர்கள் பேச்சில் உடன்பாடு ஏற்படும் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த
இரண்டு பக்கங்களிலும் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் இல்லுமினாட்டியின் விதி மட்டுமல்ல, அவருடைய
விதியும் நிர்ணயிக்கப்படும் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை.
அவர் நாளையே வாஷிங்டன் போக வேண்டியிருக்கிறது. அதை அவர்
வாங் வேயிடமும் தெரிவித்திருக்கிறார். “என்ன பேசுவதானாலும்
இன்றே பேசி முடித்து விடுங்கள். ஏனென்றால் நான் நாளை இங்கேயிருக்க முடியாது” என்று சொல்லியிருக்கிறார். அவர் போய்
விட்டால் வேறு யாரையும் நம்பி இந்த வேலையை அவர்கள் ஒப்படைக்க முடியாது....
லாப்டாப்பை எடுத்துக் கொண்டு அவர் மெல்ல
சர்ச்சை நோக்கி நடந்தார். டார்ச் விளக்கை அவர் பயன்படுத்தவில்லை. இரண்டு முறை வந்து போயிருந்ததால் அந்த இருட்டிலும் உத்தேசமாக
நடக்க அவர் சிரமப்படவில்லை. விஸ்வத்தைச் சந்திக்கப் போவதில் தான் அவர் படபடப்பு அதிகமாக
ஆரம்பித்தது.
முன்பு வந்த இரு முறையும் சர்ச்சின்
பக்கவாட்டில் இருந்த உடைந்த கண்ணாடி ஜன்னல் பகுதிக்குத் தான் சாலமன் சென்றிருக்கிறார். இப்போது
சர்ச்சின் வாசல் முன் போய் நின்றார். கதவு திறந்து தான்
இருந்தது. உள்ளே ஒரே ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அது அந்தப்
பெரிய சர்ச்சின் முழு விஸ்தீரணத்திற்கும் போதுமானதாக இல்லை...
ஒரு சிறு பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் எல்லாம் இருளே சூழ்ந்திருந்தது.
உள்ளே நுழைவதா, அல்லது
அனுமதிக்குக் காத்திருப்பதா என்று சாலமன் யோசித்த போது குரல் கேட்டது. ”உள்ளே வரலாம்”
விஸ்வத்தின் குரலை சாலமன் முன்பே கேட்டிருக்கிறார். அது கம்பீரமான
குரல். இந்தக் குரலில் அந்தக் கம்பீரம் இல்லை. ஆனால் அந்த
உறுதி மட்டும் இப்போதைய குரலிலும் தெரிந்தது. சாலமன்
மெல்ல உள்ளே நுழைந்தார்.
கண்களைச் சற்றுச் சுருக்கிப் பார்த்த
போது தான் விஸ்வம் ஒரு மர பெஞ்சில் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஆறடி உயரம், ஒடிசலான
உடல்வாகு இரண்டும் அவர் டேனியலின் புகைப்படத்தில் முன்பே பார்த்திருந்தது. கூடுதலாக
குறுந்தாடி வளர்ந்திருந்தது. அது முகவாய்க்கட்டையில் இருந்த ஆழமான கீறலை மறைப்பதற்காக
இருக்கலாம் என்று சாலமன் நினைத்துக் கொண்டார். அவர் சர்ச்சுக்குள்
பார்வையைச் சுற்ற விட்டு விஸ்வத்தின் கூட்டாளியைத் தேடினார். காணவில்லை. ஒருவேளை
இந்த இருட்டுக்குள் எங்காவது மறைந்து நின்றிருக்கலாம்...
“வாருங்கள். உட்காருங்கள்” என்று விஸ்வம்
தன் எதிரே மர பெஞ்சில் காலியாக இருந்த இடத்தைக் காட்டினான்.
சாலமன் அவன் காட்டிய இடத்தில் அவன்
எதிரே உட்கார்ந்தார். மிக அருகில் விஸ்வத்தை அவர் பார்த்த போது அவன் கண்கள் மெழுகுவர்த்தி
ஒளியில் ஜொலித்தன. முக்கியமாக அந்தக் கண்களில் தெரிந்த தீட்சண்யம் அவரை ஊடுருவிப்
பார்த்தது.
டேனியலின் கண்கள் சாதாரணக் கண்கள். அவற்றில்
இந்த தீட்சண்யம் இருக்கவில்லை. விஸ்வத்தின் சக்திகளால் அந்தக் கண்கள் அந்த ஊடுருவும் தீட்சண்யத்தைப்
பெற்றிருக்க வேண்டும். இல்லுமினாட்டியையே கலக்கிக் கொண்டிருக்கும் அந்த மனிதனை வியப்புடன்
சாலமன் பார்த்தார்.
அதைச் சட்டை செய்யாத விஸ்வம் சாலமனிடம்
சொன்னான். “இந்தப் பேச்சு ரெகார்ட் செய்யப்படுவதை நான் விரும்பவில்லை. என்ன பேசினோம்
என்பது எனக்கும் அவருக்கும் நினைவில் இருந்தால் போதும் என்று நினைக்கிறேன்.”
சாலமன் சொன்னார். “இரண்டு
பக்கத்துக்குமே அது ஆபத்து என்பதால் அவரும் அதையே தான் சொன்னார்...”
அந்தப் பேச்சைப் பதிவு செய்வது உண்மையில்
விஸ்வத்தை விட வாங் வேக்குத் தான் அதிக ஆபத்து என்று அறிந்திருந்த விஸ்வம் அதைச் சுட்டிக்
காட்ட முயற்சிக்காமல் தலையை மட்டும் அசைத்தான்.
சாலமன் லாப்டாப்பைத் திறந்து வாங் வேயை
ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டார்.
(தொடரும்)
என்.கணேசன்
Monday, July 5, 2021
யாரோ ஒருவன்? 39
மில் அதிபர் பயபக்தியுடன் சொல்ல ஆரம்பித்தார். ”பத்து வருஷத்துக்கு
முன்னாடி தான் மகராஜோட குரு ஸ்வாமி முக்தானந்தாவைப் பத்திக் கேள்விப்பட்டேன். முக்காலமும்
அறிஞ்சவர், இரும்பைத் தங்கமாக்கும் சக்தி படைச்சவர், கடவுளை
நேர்ல சந்திக்க முடிஞ்சவர் அப்படி இப்படின்னு பலர் சொன்னாங்க. இந்த மாதிரி
கேள்விப்பட்டுப் போய் பல பேர் கிட்ட நான் ஏமாந்திருக்கேன்கிறதால நான் அவரைச் சந்திக்கிறதுல
ஆரம்பத்துல அவ்வளவா ஆர்வம் காட்டலை. ஒரு மனுஷன் எத்தனை
ஆள் கிட்ட தான் ஏமாறுறது சொல்லுங்க. நெருங்கிய நண்பர்
ஒருத்தர் நேர்ல போய் அவரைச் சந்திச்சுட்டு வந்து அவரைப் பத்திச் சொல்ற அபூர்வசக்திகள்ல
எல்லாம் துளியூண்டு பொய்யும் இல்லைன்னு மனப்பூர்வமாய் சொன்னார். அந்த நண்பர்
யாரையும் சீக்கிரத்துல நம்பாதவர். சந்தேகப்பேர்வழி. அப்படிப்பட்டவரே
இப்படிச் சொல்றாரேன்னு பிறகு தான் போய்ப் பார்க்கலாம்னு எனக்குத் தோணுச்சு. அந்த நண்பர்
கிட்டயே விலாசம் வாங்கிட்டு ஸ்வாமிஜியைப் பார்க்கப் போனேன்....”
வேலாயுதத்துக்கு நாகராஜின் குரு பற்றியெல்லாம்
தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை. நாகராஜிலிருந்தே இந்த ஆள் ஆரம்பித்திருந்தால் நன்றாய் இருக்கும்
என்று அவர் நினைத்துக் கொண்டாலும் அவன் குருவிலிருந்தே தெரிந்து கொள்வதும்
நல்லது தான் என்றும் அவர் உள்மனம் சொன்னது.
அந்தக் குரு இரும்பைத் தங்கமாக்கும் சக்தி படைத்தவர் என்ற செய்தியும்
அவரைக் கவர்ந்ததால் சுவாரசியத்தை இழக்காமல் கேட்க ஆரம்பித்தார்.
”ஹிமாச்சலப் பிரதேசத்துல தேவ்நாத்பூர்னு ஒரு கிராமத்துல தான் அந்த ஸ்வாமிஜியோட
ஆசிரமம் இருந்துச்சு. போகிறப்ப எல்லாம் அவரோட தரிசனம் ஒருத்தருக்குக்
கிடைச்சுடாது. அவர் அப்பப்ப பக்கத்துல இருக்கிற மலைக்காடுகளுக்குள்ளே தவமிருக்கப் போயிடுவார். சில சமயங்கள்ல ஆசிரமத்துலயே இருந்தாலும் மௌன
விரதத்துல இருப்பார். அப்பவெல்லாம் யாரும்
அவரைப் பார்க்க முடியாது. கொடுப்பினை
இருந்தால் தான் பார்க்க முடியும். நான்
நாலாவது தடவையா போறப்ப தான் அவர் தரிசனம் கிடைச்சுது. அப்ப என் மில் நஷ்டத்துல இருந்த காலம். அவர் கிட்ட என் கஷ்டத்தைச் சொல்லி அழுதேன். “உலகத்துல எத்தனையோ பேர்
கஷ்டத்துலயும், நஷ்டத்துலயும் இருக்கான். உன்னோடதை மட்டும் தீர்க்கறதுல சமூகத்துக்கு என்ன லாபம்”னு அவர் கேட்டார். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.
“என்னை என்ன செய்யச் சொல்றீங்களோ அதைச் செய்யறேன்”னு சொன்னேன். அவரோட ஆசிரமம் நிறைய தர்ம காரியங்களைச்
செய்துட்டிருக்கு. அதுக்கு ரெண்டு லட்ச ரூபாய் தரச் சொன்னார்.
கஷ்ட நஷ்டத்தைத் தீர்த்துட்டா கொடுக்கறேன்னு சொல்ல நினைச்சேன்.
ஆனால் நல்ல வேளையா சொல்லலை. சொல்லியிருந்தால் அவர்
எதுவும் பண்ணியிருக்க மாட்டார். நான் இப்ப பிச்சைக்காரனா தான்
இருந்திருப்பேன். நான் ஏற்கெனவே வாங்கியிருந்த கடனோட சேர்த்து
ரெண்டு லட்சம் ரூபாய் கூடுதலாய் கடன் வாங்கி அந்த ஆசிரமத்துக்கு நன்கொடை கொடுத்தேன்.
சரி போய்ட்டு வான்னு சொன்னார். பகீர்ன்னுது.
என்னடா இது காசை வாங்கிட்டு போய்ட்டு வாங்கறாரேன்னு நினைச்சாலும் ஒன்னு
சொல்லாமல் வந்துட்டேன். பத்தே நாள்ல என் கஷ்டங்கள் ஒவ்வொன்னாய்
விலகிடுச்சு. மில்லோட எல்லா பிரச்சினையும் தீர்ந்துடுச்சு….”
வேலாயுதத்துக்கு அந்தக் கதை ரசிக்கவில்லை. அந்த சுவாமிஜியையும் அவருக்குப்
பிடிக்கவில்லை. நாகராஜின் கதை மட்டும் தெரிந்தால் போதும் என்று
அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. ”இந்த நாகராஜ் அப்பவே அந்த ஸ்வாமிஜியோட
சீடரா அங்கே இருந்தாரா?” என்று விஷயத்துக்கு வந்தார்.
மில் அதிபர் சொன்னார்.
“ஆமா. எல்லாரும் அவரை மகராஜ்னு தான் கூப்பிடுவாங்க.
அவர் வாயே திறக்க மாட்டார். ஸ்வாமிஜி சாகற வரைக்கும்
நான் அவரை ஊமைன்னு தான் நினைச்சேன்னா பார்த்துக்கோங்களேன். யாரைப்
பார்த்தாலும் அவர் சிரிக்கக்கூட மாட்டார். ஒரு தடவை நான் அந்த ஆசிரமத்துக்குப்
போயிருக்கிறப்ப அங்கே திடீர்னு ராஜநாகம் ஒன்னு உள்ளே வந்துடுச்சு. பத்தடிக்கும் மேல இருக்கும் அது. எல்லாரும் அலறியடிச்சுட்டு
ஓடினோம். அசராம இருந்தது ஸ்வாமிஜியும், மகராஜும் தான். ஸ்வாமிஜி மகராஜ் கிட்ட அந்த ராஜநாகத்தை
எடுத்துட்டு போய் காட்டுல விட்டுட்டு வரச் சொன்னார். அப்ப தான்
முதல் முதலா மகராஜ் புன்னகை செஞ்சதைப் பார்த்தேன். அவர் ஏதோ கைக்குழந்தையைத்
தூக்கற மாதிரி அந்த ராஜ நாகத்தைத் தூக்கிட்டுப் போனார். போனவர் திரும்பி வருவாரான்னு எனக்கு
சந்தேகம் வந்துடுச்சு. நான் அதை ஸ்வாமிஜியிடம் சொன்னேன்.
அவர் சொன்னார். “அவன் நாகங்களை வசப்படுத்தினவன்.
அவனுக்கு நாகங்கள் எத்தனையோ குடுத்திருக்கு. கெடுத்ததில்லை.
அதனால கவலை வேண்டாம்.”
“என்ன தான் அவர் சொன்னாலும் எனக்கு என்னவோ மகராஜ் திரும்பி வருவார்ங்கற நம்பிக்கை
இருக்கலை. ஆனால் சில மணி நேரங்கள்ல அவர் சர்வ சாதாரணமாய் திரும்பி
வந்தார். எனக்கு ஆச்சரியம்
தாங்கல. பிறகு ஆசிரமத்துல இருக்கற ஒரு வயசானவர் “மகராஜ்
எத்தனையோ நாள் இப்படி காட்டுக்குள்ளே போய் நாகங்களோடவே இருந்துட்டு வர்றதும் உண்டு”ன்னு சொன்னார்....”
வேலாயுதம் திகைத்துப் போனார். நாகராஜ்
ராஜநாகத்தைக் கைக்குழந்தை போல தூக்கிக் கொண்டு போனதைச் சொன்ன போது மில் அதிபருக்கு
மயிர்க்கூச்செறிந்ததை கண்கூடாகப் பார்த்ததால் அதை அவரால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அவரும்
கூட ஒரு பெரிய பாம்பைப் பக்கத்து வீட்டில் நள்ளிரவில் ரகசியமாய் பார்த்தவர். மறுநாள்
நாகராஜ் வெளியே தெரியும் வரை அவன் உயிரோடு வருவான் என்ற நம்பிக்கை அவருக்கும் இருக்கவில்லை. ஆனாலும்
அவன் எந்தப் பாதிப்புமில்லாமல் வெளியே வந்தான். இப்போதும்
உயிரோடு தான் இருக்கிறான்.
வேலாயுதம் சந்தேகத்தோடு கேட்டார். “மகராஜ்
தமிழ்நாட்டுக் காரரோ? கொஞ்சம் வட இந்திய வாடை பேச்சில் தெரிஞ்சாலும் கூட தமிழ்ல
நல்லா பேசறாரே”
“சரியாய் தெரியலை. அதான் சொன்னேனே. ஸ்வாமிஜி
சாகற வரைக்கும் இவர் பேசி நான் கேட்டதில்லை. ஊமைன்னு
தான் நெனச்சிட்டு இருந்தேன்.”
“ஸ்வாமிஜி
எப்ப செத்துப் போனார்?”
“அவர் சமாதியாகி
ஒரு வருஷம் ஆயிருக்கும். விஷயம் கேள்விப்பட்டு நானும் சில நண்பர்களும் உடனே போனோம். அப்ப தான்
முதல் முறையா எங்க கிட்ட மகராஜ் தமிழ்ல பேசினார். எப்படி
தமிழ் தெரியும்னு கேட்டோம். சிரிச்சுகிட்டார். பதில் சொல்லலை...”
வேலாயுதம் இதில் ஏதோ மர்மம் இருப்பதாய்
உணர்ந்தார். குறைவாகப் பேசுவது வேறு. மற்றவர்கள்
ஊமை என்று நினைக்கும் அளவுக்கு எதையும் பேசாமல் மவுனம் காத்த ஒரு மனிதன் திடீரென்று
பேச ஆரம்பிப்பது வேறு. அது இயல்பாகத் தெரியவில்லை.
“அவர் ஏன்
கோயமுத்தூர் வந்திருக்கார்?”
“தெரியலை
எதோ வேலையாக வந்ததாய் சொன்னார். அது என்ன வேலைன்னு நான் கேட்கலை. அப்படிக்
கேட்பது இங்கிதமாய் இருக்காதில்லையா?”
எந்த இங்கிதத்தைப் பற்றியும் என்றுமே
கவலைப்படாத வேலாயுதம் தலையசைத்து விட்டு அடுத்த கேள்வியைக் கேட்டார் “அவர் இதுக்கும் முன்னாடியும் இந்தப்
பக்கம் வந்திருக்காரோ?”
அதுவும் தனக்குத் தெரியாதென்று மில்
அதிபர் சொன்னார். இன்னும் எத்தனை காலம் நாகராஜ் கோயமுத்தூரில் இருப்பான் என்ற
கேள்விக்கும் அவருக்குப் பதில் தெரிந்திருக்கவில்லை.
மில் அதிபரைப் பார்க்க வேறொரு வாடிக்கையாளர்
உள்ளே வர வேறு வழியில்லாமல் வேலாயுதம் கிளம்ப வேண்டியதாயிற்று. அங்கிருந்து
கிளம்பியவர் வீடு வந்து சேர்வதற்கு முன் எத்தனையோ கேள்விகள் கூடுதலாக மனதில் எழுந்தன. எதற்கும்
யூகத்தில் பதில் கிடைக்கிற மாதிரி தெரியவில்லை. வீட்டுக்கு
வந்தவுடன் அதே கேள்விகளை கல்யாணும் கேட்டான்.
வேலாயுதம் சொன்னார். “அதை எல்லாம் கேட்கறதுக்கு
முன்னாடி அந்த ஆள் வந்துட்டான். அதனால கேட்க முடியலை.
அதை எல்லாம் கேட்க இன்னொரு தடவை போக வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்...”
கல்யாண் யோசனையுடன் சொன்னான். “வேண்டாம். நமக்கு அந்த
ஆசிரமம் இருக்கிற ஊர் தெரியும். அங்கேயே ஆளனுப்பி விசாரிச்சா முழு விவரமும்
கிடைச்சுடும். இந்த ஆள் என்னைக்காவது
ஒரு தடவை போறவர். அதனால இவர் கிட்ட கேட்கறதை
விட அங்கேயே இருக்கிறவங்க கிட்ட கேட்டால் தான் சரியாய் எல்லாம் தெரிய வரும்....”
சொன்னதோடு நிற்காமல் உடனடியாக ஒரு துப்பறியும்
நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு எல்லா உண்மைகளையும் தெரிந்து வர கல்யாண் ஏற்பாடும் செய்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
Sunday, July 4, 2021
Saturday, July 3, 2021
Thursday, July 1, 2021
இல்லுமினாட்டி 109
க்ரிஷ் வரவுக்காக எர்னெஸ்டோவும், அக்ஷயும் காத்திருந்தார்கள். விஸ்வத்தின்
கூட்டாளி பற்றி ஒரு முடிவுக்கு வரவும் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கவும் தான்
க்ரிஷை வரவழைப்பதாக எர்னெஸ்டோ அக்ஷயிடம் சொல்லியிருந்தார். அக்ஷய்க்கு
இங்கு வந்த பிறகு தான் க்ரிஷ் முன்பு இந்தியாவில் அவனிடம் சொன்னதில் விட்டுப் போயிருந்த
கூடுதல் தகவல்கள் தெரிய வந்தன. அவனும்
விஸ்வத்தையும் விட மிகவும் ரகசியமாயிருந்த அந்த கூட்டாளி பற்றி அறிந்து கொள்ள ஆவலாய்
இருந்தான்.
இம்மானுவல் ஆரம்பத்தில் சில தகவல்களைச்
சொல்லித் தன் யூகங்களை எர்னெஸ்டோவிடம் பகிர்ந்து கொண்டிருந்தாலும் அதற்குப் பிறகு அவனுக்குத் தெரிய வந்த தகவல்களை அவரிடம் தெரிவித்திருக்கவில்லை. அரைகுறையாய்
பகுதி பகுதியாய் சொல்வதை விட க்ரிஷ் வந்தவுடன் ஒரேயடியாகத் தகவல்களைச் சொல்லி அதுபற்றி
அலசினால் தான் சில முடிவுகளுக்கு வர முடியும் என்று இம்மானுவல் சொல்லி இருந்ததை எர்னெஸ்டோவும்
ஏற்றுக் கொண்டிருந்தார். இல்லுமினாட்டியின் தலைவராக இருந்தாலும் அவரிடம் தேவையில்லாத ‘ஈகோ’ இல்லாதது
பல சமயங்களில் உபகாரமாக இருப்பதை இம்மானுவல் உணர்ந்திருக்கிறான்.
இம்மானுவல் க்ரிஷை அழைத்து வந்தவுடன்
எர்னெஸ்டோ அவனைப் புன்னகையுடன் வரவேற்றார். “க்ரிஷ்
உன் நண்பனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என்று நீ சொல்லவேயில்லை. அவனைப்
பற்றி எந்தத் தகவலும் கண்டுபிடித்துச் சொல்லவுமில்லை.. இம்மானுவல்
கவலைப்படுவதைப் பார்த்தால் இப்போது அவன் தான் பெரிய தலைவலி ஆவான் போலத் தெரிகிறது...”
க்ரிஷ் புன்னகைத்தான். இல்லுமினாட்டி கூட்டத்தில் நண்பர் நண்பர் என்றே விஸ்வத்தை
அழைத்து அவன் பேசியதிலிருந்து எர்னெஸ்டோ அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்
என்று எண்ணிக் கொண்டான். உண்மையில் எர்னெஸ்டோ அந்தப் பேச்சை விட அதிகமாக ம்யூனிக்
மின் மயானத்தில் விஸ்வத்துக்காக உண்மையாகவே மனவருத்தப்பட்டு க்ரிஷ் நின்றதைப் பார்த்த
பிறகு தான் அன்பும் கிண்டலுமாகக் கலந்து அப்படிச் சொல்ல ஆரம்பித்திருந்தார். எதிரிக்காகவும்
இரங்கி அவன் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்து க்ரிஷ் நின்ற அந்த சில நிமிட காலம்
அவர் மனதில் ஏனோ பசுமையாகப் பதிந்து விட்டிருந்தது.
இம்மானுவல் தான் கொண்டு வந்திருந்த
ஃபைலை அங்கே மேசை மீது வைத்து விட்டு க்ரிஷிடம் சொல்ல ஆரம்பித்தான். “விஸ்வம்
பற்றி நவீன்சந்திரா ஷா இல்லுமினாட்டியிடம் தெரிவித்ததிலிருந்து அவன் எங்கள் உளவுத்துறையின்
பார்வையில் தான் இருந்து வருகிறான். அவன் கனவு ஒன்றைச்
சொல்லி அவன் தான் இல்லுமினாட்டியைக் காப்பாற்ற வந்தவன் என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்த
முனைந்ததால் நாங்கள் அவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில்
இருந்து அவனை அப்போதிருந்து கண்காணித்து வருகிறோம். அவன் சில
இடங்களுக்கு ஏன் செல்கிறான், சில காரியங்களை ஏன் செய்கிறான் என்றெல்லாம் எங்களுக்குத்
தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் அவனைக் கண்காணித்ததில் அவனுக்கு நண்பர்களோ, கூட்டாளிகளோ
இல்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்திருந்தது. அதே போல
கடைசியாக அவன் இல்லுமினாட்டி கூட்டத்தில் பேச வந்தது வரையில் கூட அவனை யாரும் பின்
தொடர்ந்து வரவில்லை என்பதில் எங்களுக்குச் சந்தேகமே இல்லை...”
”அவன் இறந்து
போனது அவன் அருகில் இருந்த இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கே கூடத் தெரியாமல் இருந்த
போதும் எங்கேயோ இருந்த ஒருவனுக்குத் தெரிந்து அவன் ஆவியை வரவழைக்கும் இசையை கிடாரில்
வாசித்ததும், விஸ்வம் இறந்து கொண்டிருந்த ஒரு உடலில் புகுந்து கொண்டதும்
எங்களுக்கு உண்மையாகவே அதிர்ச்சி தான். இதில் விஞ்ஞானத்திற்கு
இடமே இல்லை. விஞ்ஞான ரீதியாக விளக்கம் இல்லை. அப்போது
தான் உங்கள் தேசத்தின் கூடுவிட்டுக் கூடு பாயும் கலையை நாங்கள் சீரியஸாக எடுத்துக்
கொள்ள வேண்டியிருந்தது. அதற்கேற்ற மாதிரி டேனியலின் மூளைப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண
மாற்றங்களும் இருந்தன. அவனை அங்கிருந்து ஒரு காரில் யாரோ அழைத்துப் போயிருப்பது
தான் கூட்டாளி ஒருவனோ, பலரோ இருப்பதற்கு மேலும் அசைக்க முடியாத ஆதாரமாகப் போய் விட்டது. கடைசியில்
பலர் அல்ல ஒருவன் என்ற அனுமானத்திற்கு வந்தோம்... ஆனால் யாரென்று
கண்டுபிடிக்க வழியில்லை.”
“அந்தக்
கூட்டாளி விஸ்வத்தைப் பின் தொடர்ந்து ம்யூனிக் வரவில்லை. அவன் இல்லுமினாட்டி
கூட்டத்திற்கும் வரவில்லை. ஆனாலும் விஸ்வம் இறக்க ஆரம்பித்த கணம் அந்தக் கூட்டாளிக்குத்
தெரிந்திருக்கிறது, அந்த நேரத்தில் இறந்து கொண்டிருக்கும் இன்னொரு உடல் பற்றித்
தெரிந்திருக்கிறது, அந்த உடல் இருக்கும் இடத்தில் அந்த ஆவி வரவழைக்கும் இசையை
யார் பார்வைக்கும் படாமல் இசைக்க முடிந்திருக்கிறது, அவனை நேரில்
சந்திக்காமல், போனிலோ, நமக்குத் தெரிந்த மற்ற விதங்களிலோ தொடர்பு கொள்ளாமல் அதிகாலை
நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வரவழைத்து அழைத்துச் செல்லவும் முடிந்திருக்கிறது
என்பதை எல்லாம் பார்க்கையில் கூட்டாளி ஒரு மனிதனோ, மனித சக்தியோ
அல்ல என்பது நிச்சயமாகத் தெரிந்தது...”
க்ரிஷ் திகைப்புடன்
இம்மானுவலைப் பார்த்தான். ஆனால் இந்த அனுமானம் வரை ஏற்கெனவே அறிந்திருந்ததால் எர்னெஸ்டோவும்,
அக்ஷயும் அமைதியாக அடுத்தது என்ன என்று இம்மானுவலை ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இம்மானுவல் தொடர்ந்தான். ”இன்னொன்றும்
நிச்சயமாகத் தெரிந்தது. அந்தக் கூட்டாளி ஏற்கெனவே விஸ்வத்துக்குப் பரிச்சயமானதாக
இருக்க வேண்டும். இல்லா விட்டால் ஆஸ்பத்திரியிலிருந்து விஸ்வம் நம்பி, கூடப் போயிருக்க
வழியில்லை. அப்படியானால் எங்கள் கண்காணிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால்
ஒருசில முறையாவது ஏதாவது வகையில் இருவரும் தொடர்பில் இருந்திருக்கலாம் என்று புரிந்தது.”
“க்ரிஷ்
பற்றி நாங்கள் முன்பே அறிந்திருந்ததும், க்ரிஷ் வெளிப்படையாகவே
ஏலியன் ஒன்றின் தொடர்பு பற்றிச் சொல்லியிருந்ததும் நினைவுக்கு வர நான் அந்த வகைத் தொடர்பே
ஏன் விஸ்வத்துக்கும் ஏற்பட்டிருக்கக்கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தேன். க்ரிஷை
ஏலியன் சந்தித்தது முதல் க்ரிஷிடமிருந்து ஏலியன் விடைபெற்றது வரை க்ரிஷ் சொன்ன நேர
காலத்தில் எல்லாம் இந்தப் பூமியில் க்ரிஷ் சொன்ன பகுதிகளில் விசேஷ சக்தி அலைவரிசைகளை
இஸ்ரோவும், நாசாவும் பதிவு செய்திருந்தன. அப்படியானால்
அதே அலைவரிசைகள் பிறகு எங்கேயாவது பதிவு ஆகியிருக்கிறதா என்று இஸ்ரோ, நாசா இரண்டையும்
விசாரித்தேன்... இல்லை என்றார்கள். அது ஏமாற்றமாக
இருந்தது.”
“பின் இஸ்ரோவில்
விஞ்ஞானியாக இருக்கும் நம் உறுப்பினர் விஸ்வேஸ்வரய்யாவிடம் இது பற்றிப் பேசினேன். அவர்
சொன்னார். “க்ரிஷின் ஏலியன் நண்பன் வெளிப்படுத்திய அலைவரிசைகளையே விஸ்வத்தின் ஏலியன்
நண்பனும் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லையே. இது வேறு கிரகத்திலிருந்து வந்திருக்கலாம்.
வேறு விதமான அலைவரிசைகளை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். அதனால் அப்படி ஏதாவது அடையாளப்படுத்த
முடியாத புதிய வேறு அலைவரிசைகள் ஏதாவது பூமியில் தென்பட்டிருக்கிறதா என்று பார்ப்பது
தான் சரி என்றார். உடனே அந்த வகையிலும் பார்த்துச் சொல்ல நான் நாசா, இஸ்ரோ இரண்டையும்
கேட்டுக் கொண்டேன். அப்படி இருப்பதாகத் தெரிந்ததும் உடனே அந்த அலைவரிசைகளை
ஆராய்ந்து சொல்லச் சொன்னேன்....”
மூவருமே பரபரப்புடன்
அதை அறிய ஆவலானார்கள். இம்மானுவல் தொடர்ந்தான். “அந்த விசேஷ அலைவரிசைகள்
பூமியில் தெரிய ஆரம்பித்தது பல வருடங்களுக்கு முன்பிருந்தே என்பது தான் ஆச்சரியம். அந்த சமயத்தில்
விஸ்வமும் சாதாரணமான ஆளாக இருந்திருக்கிறான். அந்தக்
காலக் கட்டத்தில் சில நாட்கள் மட்டும் அந்த அலைவரிசைகள் தென்பட்டிருக்கின்றன. பிறகு சில
காலம் அந்தச் சுவடே இல்லை. மறுபடியும் சில வருடங்கள் கழித்துச் சில நாட்கள் தெரிந்து
மறுபடியும் மறைந்து போயிருக்கின்றன. அத்தனையும் தென்னிந்தியாவில்
தான் தென்பட்டிருக்கின்றன. மூன்றாவது
முறை அந்த அலைவரிசைகள் தென்பட்டது தென்னிந்தியாவில் இல்லை, ஜெர்மனியில்
குறிப்பாக ம்யூனிக்கில். சரியாகச் சொன்னால் விஸ்வம் இறந்து போன அன்று தான். நேரமும்
மதியம் கழிந்து நாலரை மணி. இல்லுமினாட்டிக் கூட்டம் ஆரம்பித்த நேரம் அது. விஸ்வம்
இறப்பான் என்று முன்கூட்டியே அறிந்து அந்த சக்தி வந்திருந்ததா, என்ன வேண்டுமானாலும்
நடக்கலாம் என்று சந்தேகத்தில் வந்து, விஸ்வத்துக்கு ஏதாவது
ஆபத்து நேர்ந்தால் காப்பாற்றலாம் என்று வந்திருந்ததா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் வந்திருக்கிறது. இன்று வரை
அந்த அலைவரிசை ம்யூனிக் பகுதியில் தொடர்ந்து வருகிறது.”
க்ரிஷ் கேட்டான். “அந்த அலைவரிசையை
வைத்துக் குறிப்பாக இந்த இடம் என்று கண்டுபிடிக்க முடியவில்லையா?”
இம்மானுவல் சொன்னான். “இல்லை. அது தான்
நமக்குப் பிரச்னையாக இருக்கிறது. உன் ஏலியன் நண்பன் சென்ற இடங்கள் எல்லாம் மிகத் தெளிவாக இருந்தன. விஸ்வத்தின்
இந்த நட்பு சக்தி தன் சக்தி அலைவரிசைகளைக் கலைத்தும் விடுகிறது போலிருக்கிறது. இதன் அலைவரிசைகள்
நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களில் படர்ந்து
மங்கலாகத் தெரிவதாகச் சொல்கிறார்கள்...”
மூவரும் இது என்ன
வினோதம் என்று திகைத்தார்கள்.
(தொடரும்)
என்.கணேசன்
Subscribe to:
Posts (Atom)


