சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 5, 2021

யாரோ ஒருவன்? 39


மில் அதிபர் பயபக்தியுடன் சொல்ல ஆரம்பித்தார். ”பத்து வருஷத்துக்கு முன்னாடி தான் மகராஜோட குரு ஸ்வாமி முக்தானந்தாவைப் பத்திக் கேள்விப்பட்டேன். முக்காலமும் அறிஞ்சவர், இரும்பைத் தங்கமாக்கும் சக்தி படைச்சவர், கடவுளை நேர்ல சந்திக்க முடிஞ்சவர் அப்படி இப்படின்னு பலர் சொன்னாங்க. இந்த மாதிரி கேள்விப்பட்டுப் போய் பல பேர் கிட்ட நான் ஏமாந்திருக்கேன்கிறதால நான் அவரைச் சந்திக்கிறதுல ஆரம்பத்துல அவ்வளவா ஆர்வம் காட்டலை. ஒரு மனுஷன் எத்தனை ஆள் கிட்ட தான் ஏமாறுறது சொல்லுங்க. நெருங்கிய நண்பர் ஒருத்தர் நேர்ல போய் அவரைச் சந்திச்சுட்டு வந்து அவரைப் பத்திச் சொல்ற அபூர்வசக்திகள்ல எல்லாம் துளியூண்டு பொய்யும் இல்லைன்னு மனப்பூர்வமாய் சொன்னார். அந்த நண்பர் யாரையும் சீக்கிரத்துல நம்பாதவர். சந்தேகப்பேர்வழி. அப்படிப்பட்டவரே இப்படிச் சொல்றாரேன்னு பிறகு தான் போய்ப் பார்க்கலாம்னு எனக்குத் தோணுச்சு. அந்த நண்பர் கிட்டயே விலாசம் வாங்கிட்டு ஸ்வாமிஜியைப் பார்க்கப் போனேன்....”

வேலாயுதத்துக்கு நாகராஜின் குரு பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை. நாகராஜிலிருந்தே இந்த ஆள் ஆரம்பித்திருந்தால் நன்றாய் இருக்கும் என்று அவர் நினைத்துக் கொண்டாலும் அவன் குருவிலிருந்தே தெரிந்து கொள்வதும் நல்லது தான் என்றும் அவர் உள்மனம் சொன்னது. அந்தக் குரு இரும்பைத் தங்கமாக்கும் சக்தி படைத்தவர் என்ற செய்தியும் அவரைக் கவர்ந்ததால் சுவாரசியத்தை இழக்காமல் கேட்க ஆரம்பித்தார்.

ஹிமாச்சலப் பிரதேசத்துல தேவ்நாத்பூர்னு ஒரு கிராமத்துல தான் அந்த ஸ்வாமிஜியோட ஆசிரமம் இருந்துச்சு. போகிறப்ப எல்லாம் அவரோட தரிசனம் ஒருத்தருக்குக் கிடைச்சுடாது. அவர் அப்பப்ப பக்கத்துல இருக்கிற மலைக்காடுகளுக்குள்ளே தவமிருக்கப் போயிடுவார். சில சமயங்கள்ல ஆசிரமத்துலயே இருந்தாலும் மௌன விரதத்துல இருப்பார். அப்பவெல்லாம் யாரும் அவரைப் பார்க்க முடியாது. கொடுப்பினை இருந்தால் தான் பார்க்க முடியும். நான் நாலாவது தடவையா போறப்ப தான் அவர் தரிசனம் கிடைச்சுது. அப்ப என் மில் நஷ்டத்துல இருந்த காலம். அவர் கிட்ட என்  கஷ்டத்தைச் சொல்லி அழுதேன். “உலகத்துல எத்தனையோ பேர் கஷ்டத்துலயும், நஷ்டத்துலயும் இருக்கான். உன்னோடதை மட்டும் தீர்க்கறதுல சமூகத்துக்கு என்ன லாபம்னு அவர் கேட்டார். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. “என்னை என்ன செய்யச் சொல்றீங்களோ அதைச் செய்யறேன்னு சொன்னேன். அவரோட ஆசிரமம் நிறைய தர்ம காரியங்களைச் செய்துட்டிருக்கு. அதுக்கு ரெண்டு லட்ச ரூபாய் தரச் சொன்னார். கஷ்ட நஷ்டத்தைத் தீர்த்துட்டா கொடுக்கறேன்னு சொல்ல நினைச்சேன். ஆனால் நல்ல வேளையா சொல்லலை. சொல்லியிருந்தால் அவர் எதுவும் பண்ணியிருக்க மாட்டார். நான் இப்ப பிச்சைக்காரனா தான் இருந்திருப்பேன். நான் ஏற்கெனவே வாங்கியிருந்த கடனோட சேர்த்து ரெண்டு லட்சம் ரூபாய் கூடுதலாய் கடன் வாங்கி அந்த ஆசிரமத்துக்கு நன்கொடை கொடுத்தேன். சரி போய்ட்டு வான்னு சொன்னார். பகீர்ன்னுது. என்னடா இது காசை வாங்கிட்டு போய்ட்டு வாங்கறாரேன்னு நினைச்சாலும் ஒன்னு சொல்லாமல் வந்துட்டேன். பத்தே நாள்ல என் கஷ்டங்கள் ஒவ்வொன்னாய் விலகிடுச்சு. மில்லோட எல்லா பிரச்சினையும் தீர்ந்துடுச்சு….”

வேலாயுதத்துக்கு அந்தக் கதை ரசிக்கவில்லை. அந்த சுவாமிஜியையும் அவருக்குப் பிடிக்கவில்லை. நாகராஜின் கதை மட்டும் தெரிந்தால் போதும் என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. ”இந்த நாகராஜ் அப்பவே அந்த ஸ்வாமிஜியோட சீடரா அங்கே இருந்தாரா?” என்று விஷயத்துக்கு வந்தார்.

மில் அதிபர் சொன்னார். “ஆமா. எல்லாரும் அவரை மகராஜ்னு தான் கூப்பிடுவாங்க. அவர் வாயே திறக்க மாட்டார். ஸ்வாமிஜி சாகற வரைக்கும் நான் அவரை ஊமைன்னு தான் நினைச்சேன்னா பார்த்துக்கோங்களேன். யாரைப் பார்த்தாலும் அவர் சிரிக்கக்கூட மாட்டார்.  ஒரு தடவை நான் அந்த ஆசிரமத்துக்குப் போயிருக்கிறப்ப அங்கே திடீர்னு ராஜநாகம் ஒன்னு உள்ளே வந்துடுச்சு. பத்தடிக்கும் மேல இருக்கும் அது. எல்லாரும் அலறியடிச்சுட்டு ஓடினோம். அசராம இருந்தது ஸ்வாமிஜியும், மகராஜும் தான். ஸ்வாமிஜி மகராஜ் கிட்ட அந்த ராஜநாகத்தை எடுத்துட்டு போய் காட்டுல விட்டுட்டு வரச் சொன்னார். அப்ப தான் முதல் முதலா மகராஜ் புன்னகை செஞ்சதைப் பார்த்தேன். அவர் ஏதோ கைக்குழந்தையைத் தூக்கற மாதிரி அந்த ராஜ நாகத்தைத் தூக்கிட்டுப் போனார்.  போனவர் திரும்பி வருவாரான்னு எனக்கு சந்தேகம் வந்துடுச்சு. நான் அதை ஸ்வாமிஜியிடம் சொன்னேன். அவர் சொன்னார். “அவன் நாகங்களை வசப்படுத்தினவன். அவனுக்கு நாகங்கள் எத்தனையோ குடுத்திருக்கு. கெடுத்ததில்லை. அதனால கவலை வேண்டாம்.”

என்ன தான் அவர் சொன்னாலும் எனக்கு என்னவோ மகராஜ் திரும்பி வருவார்ங்கற நம்பிக்கை இருக்கலை. ஆனால் சில மணி நேரங்கள்ல அவர் சர்வ சாதாரணமாய் திரும்பி வந்தார்.  எனக்கு ஆச்சரியம் தாங்கல. பிறகு ஆசிரமத்துல இருக்கற ஒரு வயசானவர்மகராஜ் எத்தனையோ நாள் இப்படி காட்டுக்குள்ளே போய் நாகங்களோடவே இருந்துட்டு வர்றதும் உண்டுன்னு சொன்னார்....”

வேலாயுதம் திகைத்துப் போனார். நாகராஜ் ராஜநாகத்தைக் கைக்குழந்தை போல தூக்கிக் கொண்டு போனதைச் சொன்ன போது மில் அதிபருக்கு மயிர்க்கூச்செறிந்ததை கண்கூடாகப் பார்த்ததால் அதை அவரால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அவரும் கூட ஒரு பெரிய பாம்பைப் பக்கத்து வீட்டில் நள்ளிரவில் ரகசியமாய் பார்த்தவர். மறுநாள் நாகராஜ் வெளியே தெரியும் வரை அவன் உயிரோடு வருவான் என்ற நம்பிக்கை அவருக்கும் இருக்கவில்லை. ஆனாலும் அவன் எந்தப் பாதிப்புமில்லாமல் வெளியே வந்தான். இப்போதும் உயிரோடு தான் இருக்கிறான்.

வேலாயுதம் சந்தேகத்தோடு கேட்டார். “மகராஜ் தமிழ்நாட்டுக் காரரோ? கொஞ்சம் வட இந்திய வாடை பேச்சில் தெரிஞ்சாலும் கூட தமிழ்ல நல்லா பேசறாரே

“சரியாய் தெரியலை. அதான் சொன்னேனே. ஸ்வாமிஜி சாகற வரைக்கும் இவர் பேசி நான் கேட்டதில்லை. ஊமைன்னு தான் நெனச்சிட்டு இருந்தேன்.”

ஸ்வாமிஜி எப்ப செத்துப் போனார்?”

அவர் சமாதியாகி ஒரு வருஷம் ஆயிருக்கும். விஷயம் கேள்விப்பட்டு நானும் சில நண்பர்களும் உடனே போனோம். அப்ப தான் முதல் முறையா எங்க கிட்ட மகராஜ் தமிழ்ல பேசினார். எப்படி தமிழ் தெரியும்னு கேட்டோம். சிரிச்சுகிட்டார். பதில் சொல்லலை...”

வேலாயுதம் இதில் ஏதோ மர்மம் இருப்பதாய் உணர்ந்தார். குறைவாகப் பேசுவது வேறு. மற்றவர்கள் ஊமை என்று நினைக்கும் அளவுக்கு எதையும் பேசாமல் மவுனம் காத்த ஒரு மனிதன் திடீரென்று பேச ஆரம்பிப்பது வேறு. அது இயல்பாகத் தெரியவில்லை.  

அவர் ஏன் கோயமுத்தூர் வந்திருக்கார்?”

தெரியலை எதோ வேலையாக வந்ததாய் சொன்னார். அது என்ன வேலைன்னு நான் கேட்கலை. அப்படிக் கேட்பது இங்கிதமாய் இருக்காதில்லையா?”

எந்த இங்கிதத்தைப் பற்றியும் என்றுமே கவலைப்படாத வேலாயுதம் தலையசைத்து விட்டு அடுத்த கேள்வியைக் கேட்டார்  “அவர் இதுக்கும் முன்னாடியும் இந்தப் பக்கம் வந்திருக்காரோ?”

அதுவும் தனக்குத் தெரியாதென்று மில் அதிபர் சொன்னார். இன்னும் எத்தனை காலம் நாகராஜ் கோயமுத்தூரில் இருப்பான் என்ற கேள்விக்கும் அவருக்குப் பதில் தெரிந்திருக்கவில்லை.

மில் அதிபரைப் பார்க்க வேறொரு வாடிக்கையாளர் உள்ளே வர வேறு வழியில்லாமல் வேலாயுதம் கிளம்ப வேண்டியதாயிற்று. அங்கிருந்து கிளம்பியவர் வீடு வந்து சேர்வதற்கு முன் எத்தனையோ கேள்விகள் கூடுதலாக மனதில் எழுந்தன. எதற்கும் யூகத்தில் பதில் கிடைக்கிற மாதிரி தெரியவில்லை.  வீட்டுக்கு வந்தவுடன் அதே கேள்விகளை கல்யாணும் கேட்டான். வேலாயுதம் சொன்னார். “அதை எல்லாம் கேட்கறதுக்கு முன்னாடி அந்த ஆள் வந்துட்டான். அதனால கேட்க முடியலை. அதை எல்லாம் கேட்க இன்னொரு தடவை போக வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்...”

கல்யாண் யோசனையுடன் சொன்னான். “வேண்டாம். நமக்கு அந்த ஆசிரமம் இருக்கிற ஊர் தெரியும். அங்கேயே ஆளனுப்பி விசாரிச்சா முழு விவரமும் கிடைச்சுடும். இந்த ஆள் என்னைக்காவது ஒரு தடவை போறவர். அதனால இவர் கிட்ட கேட்கறதை விட அங்கேயே இருக்கிறவங்க கிட்ட கேட்டால் தான் சரியாய் எல்லாம் தெரிய வரும்....”

சொன்னதோடு நிற்காமல் உடனடியாக ஒரு துப்பறியும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு எல்லா உண்மைகளையும் தெரிந்து வர கல்யாண் ஏற்பாடும் செய்தான்.


(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Very interesting. The suspense is growing.

    ReplyDelete
  2. உண்மையிலே மகாராஜ் ரொம்ப மர்மமாக தான் இருக்கிறார்... ஒரு இடத்தில் இவரே பேசி கணக்கில் பணமும் போட்டு விடுகிறார்.... இன்னொரு இடத்தில் வாயே திறக்க மாட்டேன்ங்குறார்...

    ReplyDelete