என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, November 5, 2018

சத்ரபதி – 45


ல கூடைகளில் பழங்களும் பரிசுப் பொருள்களும் கொண்டு வந்து தன்னைச் சந்தித்த பாஜி கோர்படேயை ஷாஹாஜி சந்தேகிக்கவில்லை. புதிதாக ஒரு மேல்நிலையை எட்டியவர்கள் முன்பே மேல் நிலையில் இருந்த மனிதர்களை மரியாதை கொடுத்துச் சந்திப்பதும் அவர்கள் நட்பை வளர்த்துக் கொள்ள விரும்புவதும் அக்காலத்திலும் இயல்பாகவே இருந்தது. பக்கத்தில் உள்ள முதோல் பிரதேசத்துப் புதிய தலைவன் அந்த எண்ணத்திலேயே தன்னைச் சந்திக்க வந்திருப்பதாய் எண்ணி அவனை அவர் வரவேற்றார். 

பாஜி கோர்படே அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து அன்பின் வடிவமாக எழுந்து நின்று ”இந்த அடியவனை ஆசிர்வதிக்க வேண்டும் தலைவரே” என்று பணிவாகக் கேட்டுக் கொண்டான். அவனுக்கு ஆசி வழங்கி அமர வைத்து உபசரித்த ஷாஹாஜி நலம் விசாரித்தார்.

“தங்களைப் போன்ற பெரியோரின் ஆசியால் நலத்திற்குக் குறைவில்லை தலைவரே. சமீபத்தில் தான் என் மாளிகையைப் புதுப்பித்தேன். சில ஹோமங்களும் செய்து முடித்தேன். தங்களை அந்தச் சமயத்திலேயே அழைக்க எண்ணியிருந்தேன். ஆனால் பணிச்சுமைகளால் தங்களை அப்போது அழைக்க முடியவில்லை. தாங்கள் அருள்கூர்ந்து என் வீட்டிற்கு வந்து கௌரவிக்கும்படி கேட்டுக் கொள்ளவே இங்கே வந்துள்ளேன்….”  பேசும் போது இருக்கையில் முழுமையாகச் சாய்ந்து கொள்வது கூட பெரியவர்கள் முன் கௌரவக்குறைவு என்று எண்ணியவன் போலக் காட்டிக் கொண்ட பாஜி கோர்படே அவர் பார்வைக்குப் பணிவின் உதாரணமாகத் தன்னைக் காட்டிக் கொண்டான்.

ஷாஹாஜி சொன்னார். “பீஜாப்பூர் செல்லும் சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக உன்னுடைய இல்லத்தில் தங்கி இளைப்பாறிச் செல்கிறேன் பாஜி கோர்படே.”

“ஐயா அப்படி வழித்தடத்தில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் என் இல்லத்திற்கு வந்து செல்லலாம். அது எனக்கு மகிழ்ச்சியே. நான் என் இல்லத்தில் நாளை மறுநாள் ஒரு சிறு விருந்தைத் தங்களுக்காக ஏற்பாடு செய்திருக்கிறேன். முதலில் அதற்கு வந்து செல்லும்படி அன்புடன் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்….”

ஷாஹாஜி என்ன சொல்வதென்று யோசித்தார். அந்த நேரத்தில் முகத்தை வாட்டத்துடன் வைத்துக் கொண்டு பாஜி கோர்படே சொன்னான். “ஐயா அரசர்களுடனும், அவர்களுக்கு இணையானவர்களுடனும் பழகும் உங்களுக்கு என்னைப் போன்ற எளியவன் இல்லத்திற்கு வரத் தயக்கமாக இருக்கலாம். மிக உயர்ந்த நிலையில் இருக்கும் தங்களை அழைக்கவும் எனக்கு அருகதை உள்ளதா என்ற கேள்வி என் உள்ளத்திலும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அன்பின் காரணமாக வந்திருக்கும் இந்த அடியவனின் அழைப்பை அலட்சியப்படுத்தி நிராகரித்து விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்…..”

மிக உருக்கமாக அவன் கேட்டுக் கொண்ட போது ஷாஹாஜிக்கு மறுக்க முடியவில்லை. அவர் சொன்னார். “நான் என்னை உயர்ந்தவனாகவும், மற்றவர்களைத் தாழ்ந்தவர்களாகவும் என்றைக்கும் நினைத்ததில்லை. எல்லாமே விதி ஏற்படுத்தித் தருபவை. நான் எல்லா நிலைகளிலும் சிறிது காலமாகவாவது இருந்திருக்கிறேன். அதனால் நான் வர யோசிக்கவில்லை. ஆனால் நாளை மறுநாளே வர வேண்டுமா என்று தான் யோசித்தேன். நீ இவ்வளவு தூரம் கேட்டுக் கொண்டதால் அந்தத் தயக்கத்தையும் விட்டேன். நீ கேட்டுக் கொண்டபடியே வருகிறேன். திருப்தி தானே….”

தன் இல்லத்திற்கு வரவழைக்க எண்ணிய திட்டம் பலித்ததில் பாஜி கோர்படேயின் முகத்தில் நிம்மதியும் ஆனந்தமும் தெரிந்தது. அந்த ஆனந்தத்தைக் கண்ட ஷாஹாஜி அதன் பின்னணி தெரியாததால் நெகிழ்ந்து போனார். பாஜி கோர்படே கைகளைக் கூப்பி குரல் தழுதழுக்கச் சொன்னான். “வருவதாகச் சொல்லி என்னைப் பெருமைப்படுத்தியதற்கு மிக்க நன்றி தலைவரே.”

அதன் பின்னும் சிறிது நேரம் அங்கு இருந்து நிர்வாகம் குறித்து சில ஆலோசனைகள் கேட்டு, சிறிது நேரம் அளவளாவிக் கொண்டிருந்த பாஜி கோர்படே கிளம்புவதற்கு முன் அவருக்குப் பிடித்தமான உணவுகள் குறித்துக் கேட்டான்.

’இதென்ன அன்புத் தொல்லை’ என்று எண்ணிய ஷாஹாஜி தனக்குப் பிடிக்காத உணவுகள் இல்லை என்பதால் எந்த வகை உணவானாலும் தனக்குப் பிரச்னையில்லை என்றார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத பாஜி கோர்படே வற்புறுத்தி அவருக்குப் பிடித்தமான உணவு வகைகளின் பட்டியல் அறிந்து விட்டே விடை பெற்றான்.

பாஜி கோர்படே மீது ஷாஹாஜிக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. பீஜாப்பூர் சுல்தான் அழைத்திருந்தாலும், சுல்தானுக்கு நெருங்கிய யாராவது அழைத்திருந்தாலும், அல்லது வேறு யாராவது பீஜாப்பூரில் இருந்து அழைத்திருந்தாலும் ஷாஹாஜி தற்போதைய நிலவரம் காரணமாக உஷாராகியிருப்பார். ஆனால் எந்த விதத்திலும் அவருக்கு இணையில்லாத ஒருவன், அடுத்த பகுதியின் தலைவன் தன்னைச் சிறைப்படுத்தக்கூடும் என்ற சிந்தனை அவருக்கு ஏற்படக் காரணம் எதுவும் இருக்கவில்லை. அப்படிச் சிறிய சந்தேகம் எதுவும் ஏற்பட்டுவிட முடியாதபடியே பாஜி கோர்படே நடந்து கொண்டான்.

குறிப்பிட்ட தினத்தில் சில பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களை மட்டும் அழைத்துக் கொண்டு ஷாஹாஜி முதோல் பகுதியில் உள்ள பாஜி கோர்படேயின் மாளிகையை அடைந்தார். மாளிகையின் வெளியே இருந்த காவலர்கள் ஷாஹாஜியிடம் அவரது வாளை வெளியிலேயே விட்டு விட்டு உள்ளே செல்லச் சொன்னார்கள். மேலும் அவரது பணியாளர்களை வெளியிலேயே நிற்கச் சொன்னார்கள்.

ஷாஹாஜியின் முகம் கோபத்தில் சிவந்தது. அவர் வாளில் கை வைத்த போது பாஜி கோர்படே ஓடி வந்தான். “வாருங்கள் தலைவரே. ஏன் இங்கேயே நின்று விட்டீர்கள்?’

பாஜி கோர்படே அந்த நேரத்தில் அங்கு வராமல் இருந்திருந்தால் அவன் காவலர்கள் சிலர் மரணத்தை நிச்சயமாகத் தழுவியிருப்பார்கள் என்று அவன் புரிந்து கொண்டான். அவர் காலைத் தொட்டு அங்கேயே வணங்கினான்.

அவனை ஆசிர்வதித்த ஷாஹாஜி சினம் குறையாதவராகச் சொன்னார். “வாளைக் கழற்றி வைத்து விட்டு உள்ளே செல்லச் சொல்கிறார்கள். என் ஆட்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.”

பாஜி கோர்படே தன் காவலர்களைக் கோபித்துக் கொண்டான். “மூடர்களே. பொதுவாக மற்றவர்களை நடத்துவது போலவா தலைவரை நடத்துவது. அவர் யார் என்று உங்களுக்குத் தெரியாதா? விலகி நில்லுங்கள்….”

பாஜி கோர்படேயின் காவலர்கள் தலைகுனிந்து விலகி நின்றார்கள். “தராதரம் தெரியாத இந்த மூடர்களை மன்னியுங்கள் தலைவரே. வாருங்கள் தலைவரே…. உங்கள் ஆட்களையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்…. இந்த எளியவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டு வந்ததற்கு நன்றி…. வாருங்கள்…”

பாஜி கோர்படேயின் பணிவான வார்த்தைகளால் ஷாஹாஜியின் கோபம் முழுவதுமாக மறைந்தது. பொதுவாக அனைவரிடத்திலும் காண்பிக்கச் சொன்ன வழிமுறைகளைக் காவலர்கள் பின்பற்றி இருக்கிறார்கள். அவ்வளவு தான். இது எல்லா இடங்களிலும் நடப்பது தான் என்று சமாதானம் அடைந்த அவர் பாஜி கோர்படேயின் மாளிகையினுள் தன் ஆட்களுடன் நுழைந்தார்.

உள்ளே பாஜி கோர்படேயின் மனைவியும், இரு பிள்ளைகளும் கைகூப்பி அவரை வரவேற்று காலில் விழுந்து வணங்கினார்கள். வெளியே காலைத் தொட்டு மட்டுமே வணங்கியிருந்த பாஜி கோர்படே குடும்பத்தினர் வணங்குகையில் தானும் அவர்களைப் போலவே தரையில் விழுந்து அவரை வணங்கினான். ஏதாவது சிறிய சந்தேகம் வெளியே ஏற்பட்டு அவரிடம் தங்கியிருந்தாலும் இந்த வணக்கத்தில் முழுவதுமாக நீங்கியிருக்கும் என்று பாஜி கோர்படே சரியாகவே கணக்குப் போட்டான்.

அமர்ந்து சிறிது நேரம் அளவளாவிய பின் விருந்துக்கு முன் பாஜி கோர்படே புதுப்பித்திருந்த தன் மாளிகையின் ஒவ்வொரு பகுதியாக ஷாஹாஜிக்கு காட்டினான். ஷாஹாஜி எத்தனையோ பெரிய பெரிய மாளிகைகளையும், அரண்மனைகளையும் பார்த்தவர். இந்தச் சிறிய மாளிகையில் சிலாகிக்க அவருக்குப் பெரிதாக இருக்கவில்லை என்றாலும் அவரவருக்கு அவரவர் வீடுகள் பெரிய அரண்மனைகள் தான் என்று உள்ளுக்குள் எண்ணியவராக பாஜி கோர்படேயின் பின்னால் சென்று அந்த மாளிகையைப் பார்வையிட்டார். சில அடிகள் தள்ளி அவருடைய ஆட்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.

மாளிகையின் கடைக்கோடி அறைக்கு முன் வந்த போது அறைக்கு வெளியே தண்ணீர் கொட்டியிருந்தது. அதைப் பார்த்து முகம் சுளித்த பாஜி கோர்படே “பணியாளர்களுக்கு எத்தனையோ முறை தெரிவித்தாகி விட்டது. ஆனாலும் கவனக்குறைவாகவே இருக்கிறார்கள்” என்று சலித்துக் கொண்டு “நீங்கள் இந்த அறைக்குள் சென்று பாருங்கள் தலைவரே” என்று சொல்லி வெளியிலேயே நின்று கொண்டு கத்தினான். “யாரங்கே. விரைந்து வாருங்கள்”

ஷாஹாஜி அறைக்குள் நுழைந்தார். அறைக்கு வெளியே பாஜி கோர்படே நின்றிருந்தான். ஷாஹாஜியின் ஆட்கள் தண்ணீரையும், பாஜி கோர்படேயையும் தாண்டி பணியாளர்கள் வந்து தரையைத் துடைப்பதற்காகக் காத்து நின்றிருந்தார்கள். ஆனால் ஷாஹாஜிக்கும், ஷாஹாஜியின் ஆட்களுக்கும் “யாரங்கே விரைந்து வாருங்கள்” என்பது சமிக்ஞை என்று தெரிந்திருக்கவில்லை.

அந்த வாசகத்தைக் கேட்டவுடன் சிறிதும் எதிர்பாராத விதமாய் அறைக்குள் ஒளிந்திருந்த பாஜி கோர்படேயின் வீரர்கள் ஷாஹாஜி மேல் பாய பாஜி கோர்படே மின்னல் வேகத்தில் அறைக்கதவை மூடி வெளியே தாளிட்டான். அதே நேரத்தில் வெளியே இருந்த ஷாஹாஜியின் ஆட்கள் மீதும் மறைந்திருந்த வீரர்கள் பாய்ந்தார்கள்.

இரண்டே நிமிடங்களில் ஷாஹாஜியும் அவரது ஆட்களும் செயலற்று சிறைப்பிடிக்கப்பட்டார்கள். பாஜி கோர்படேயின் திட்டம் நிறைவேறி விட்டது.

(தொடரும்)
என்.கணேசன்

(தீபாவளி போனசாக நாளை (6.11.2018)  மாலை இருவேறு உலகத்தின் அடுத்த அத்தியாயம் அப்டேட் ஆகும்.)

Friday, November 2, 2018

நீங்கள் காந்தம்! எதை ஈர்க்கிறீர்கள்?

ரு விதத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தமாகவே இருக்கிறான். அந்தக் காந்தத் தன்மைக்கு ஏற்ற வகையிலேயே தன் வாழ்க்கையில் சூழ்நிலைகளையும் மனிதர்களையும் ஈர்த்துக் கொள்கிறான். அந்தக் காந்தத் தன்மையை நிர்ணயிப்பது எது? அந்தக் காந்தத்தன்மை எப்படி அமைகிறது? அதை மாற்ற முடியுமா? மாற்றுவதானால் எப்படி மாற்றுவது? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் இந்தக் காணொளியில் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய மகத்தான உண்மைகள் இருக்கின்றன.  கண்டு, மனதில் பதித்து, பலன் அடையுங்கள்....




என்.கணேசன்

Thursday, November 1, 2018

இருவேறு உலகம் – 107



செந்தில்நாதன் ஹரிணி எப்படிக் கடத்தப்பட்டிருக்கலாம் என்பதை க்ரிஷிடம் விவரித்தார். அவனுக்கும் அவர் சொன்னபடி தான் நடந்திருக்கும் என்று தோன்றியது.

“அந்த ஏரியால ஆள்நடமாட்டம் குறைவு. கடத்தின ஆள்களும் வேகமாவே கடத்திட்டு போயிருக்கணும். அவங்க ஆளே யாராவது அவளோட ஸ்கூட்டியை ஓட்டிகிட்டும் போயிருப்பாங்க. அதனால தான் யார் கவனத்துக்கும் அது வரலன்னு நினைக்கிறேன். எந்த வண்டில கடத்துனாங்க, ஆளுக எப்படி இருந்தாங்கங்கற விவரம் எதுவுமே நமக்குத் தெரியல. அது தெரிஞ்சா அத வச்சு நாம அடுத்ததா என்ன செய்யறதுங்கறத தீர்மானிக்கலாம். அதில்லாததால இனிமே நமக்கு இருக்கற ஒரே வழி கடத்தல்காரங்க உங்களைத் தொடர்பு கொள்றத வச்சு தான்….”

க்ரிஷ் மெல்லச் சொன்னான். “இன்னொரு வழி இருக்கு. ஹரிணி அங்க இருந்து ஏதாவது தகவல் அனுப்பினா அதை வெச்சு நீங்க ஏதாவது கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கு”

செந்தில்நாதன் கேள்விக்குறியோடு பார்த்தார். ஹரிணியாக தகவல் அனுப்ப கடத்தல்காரர்கள் விடுவார்களா என்ன?

க்ரிஷ் தானும் அவளும் இதற்கு முன் செய்த தகவல் அனுப்பும் ஆராய்ச்சிகள் பற்றிச் சொன்னான். செந்தில்நாதனுக்குப் பிரமிப்பாக இருந்தது. எதிரியின் சக்திகளைப் பற்றி மவுண்ட் அபுவில் இருந்து இமயமலை வரை போய் அறிந்து கொண்டதெல்லாம் அவருக்கு இந்த அமானுஷ்ய சக்திகள் பற்றி ஒரு பெரும் பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போது இவனும் அது பற்றிச் சொல்கிறான். அது ஒரு தனி உலகம் போல் இருக்கிறது. அப்படி ஒரு உலகம் இருப்பது தெரியாமலேயே பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…..

க்ரிஷ் குரல் கரகரக்கச் சொன்னான். “ஹரிணியப் பொருத்த வரைக்கும் அவ தைரியமானவ. முடிஞ்ச வரைக்கும் அவ சமாளிப்பா. ஆனா அவ அம்மா ரொம்பவே உடைஞ்சு போயிருக்காங்க. நானும் அம்மாவும் இன்னிக்கு காலைல கூடப் போய் தைரியம் சொல்லிட்டு வந்தோம். ஆனா சொல்ற அளவுக்கு தைரியமா இருக்கறது சுலபம் இல்லை….. என்னால அவங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துடுச்சேன்னு எனக்கு ரொம்பவெ வருத்தமாய் இருக்கு….”

செந்தில்நாதன் புரிதலுடன் தலையசைத்தார். க்ரிஷ் காணாமல் போனதற்கு விசாரிக்க வந்த போது பத்மாவதி அழுத அழுகை அவருக்கு இன்னமும் நினைவிருக்கிறது. அவளோடு சேர்ந்து உதயும், கமலக்கண்ணனும் கூட கண்கலங்கினார்கள்…. அன்பான குடும்பத்தின் இயல்பான வெளிப்பாடு அது. ஹரிணியின் தாய் விதிவிலக்காகி விட முடியாது.

“ஹரிணி மயக்க நிலைல இல்லாம இருந்தா போதும். அவ ஏதாவது கண்டுபிடிச்சு எப்படியாவது தகவல் அனுப்புவான்னு நம்பறேன். ஆனா அவளுக்கு மயக்க மருந்து குடுத்திருந்தாலோ சித்திரவதை செஞ்சாலோ அவளால ஒன்னும் பண்ண முடியாது. நான் கடவுள் கிட்ட அப்படி எதுவும் ஆயிடக்கூடாதுன்னு வேண்டிகிட்டிருக்கேன்…..”

சொல்லும் போதே அவன் குரலில் எல்லையில்லாத வலி தெரிந்தது. வெளியே கட்டுப்பாட்டுடன் தெரிந்தாலும் உள்ளே இவனும் உருகிக் கொண்டு தான் இருக்கிறான் என்பதை செந்தில்நாதனுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.

“அப்படி எல்லாம் ஆகாது. உன் கிட்ட அவங்க பேசி நீ அதுக்கு என்ன சொல்றே, எப்படி நடந்துக்கறேன்னு  தெரிகிற வரைக்கும் அவங்க அவளுக்கு எந்தத் தொந்திரவும் தரமாட்டாங்கன்னு நினைக்கிறேன். அவங்க போன் செஞ்சா என்ன செய்யச் சொன்னாலும் ஒத்துக்கோ. ஒத்துக்கறதை எல்லாம் நாம் செஞ்சாகணும்னு கட்டாயம் இல்லை. அதுக்குள்ள அவ இருக்கற இடத்தைக் கண்டுபிடிச்சுட்டா நல்லது.  ஏதாவது தகவல் கிடைச்சா உடனே எனக்குத் தெரிவி”.

செந்தில்நாதன் போய் விட்டார். க்ரிஷின் மனம் கதறியது. “ஹரிணி…. ஹரிணி….. நீ எங்கே இருக்கே….. ஏதாவது தகவல் அனுப்பு ஹரிணி…. ப்ளீஸ்”  க்ரிஷ் மனதை கஷ்டப்பட்டு ஒருநிலைப்படுத்தினான். மனம் எல்லாம் நிறைந்திருந்த அவள் மீது கவனத்தைக் குவித்து அவள் அனுப்பும் தகவலுக்காக நம்பிக்கையுடன் காத்திருந்தான்.


ரிணி தங்கியிருந்த அறையில் ஜன்னல் இல்லை. கூரைச்சுவர் பத்தடிக்கும் மேல் இருந்தது. அந்தக் கூரைச்சுவரை ஒட்டியபடி மேலே சின்னதாய் ஒரு வெண்டிலேட்டர் இருந்தது. பாத்ரூமிலும் அப்படித்தான் இருந்தது. கடத்தி வருபவர்களைத் தங்க வைக்கவே கட்டியது போல் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டாள். அறையில் ஒரு இரும்புக்கட்டில், தலையணை, போர்வை இருந்தது. நாற்காலி கூட இல்லை. ஒருபக்கச் சுவற்றில் ஒரு அலமாரி இருந்தது. அதில் சில ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன. அலமாரிக்கு மேலே நல்ல உயரத்தில் ஒரு சிசிடிவி கேமரா….

எந்த இடத்தில் இருக்கிறோம் என்று அவளால் யூகிக்க முடியவில்லை. அதைத் தெரிந்து கொண்டு க்ரிஷுக்கு அத்தகவலை அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைத்தாள். கண்டிப்பாக அவன் அதற்காகக் காத்துக் கொண்டிருப்பான். துடித்துப் போய் விட்டான் என்று எக்ஸ் சொன்னது நினைவுக்கு வர அவனுக்காக அவள் வருத்தப்பட்டாள். பாவம் அவனால் தான் அவளைக் கடத்தியிருக்கிறார்கள் என்று யூகித்து மனம் நொந்திருப்பான்….. பரவாயில்லைடா…. கவலைப்படாதே…. என்று மானசீகமாகச் சொன்னாள்.

சிறிது நேரம் கழித்து அறைக்குள் மனோகர் வந்தான். உணவு கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனான்.  அவளிடம் அவன் எதுவும் பேசவில்லை. அவளாகவும் அவனிடம் பேசப் போகவில்லை. சாப்பிட்டு விட்டு, கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தாள். வெளியே இருந்து கேட்கும் சத்தங்களைக் கவனமாகக் கேட்டாள். வாகனங்கள் செல்லும் ஓசை, ஹாரன் சத்தம் கேட்டது. ஆட்கள் நடமாட்டமோ, பேச்சு சத்தமோ கேட்கவில்லை. வாகன சத்தங்களை வைத்துப் பார்த்தால் அவள் முதல் மாடியில் இருப்பது போல் இருந்தது. கீழேயும் மேலேயும் யாரோ ஒரு நபர் நடமாடுவது போல் மட்டும் கேட்டது. வேறு எந்தச் சத்தமும் இல்லை. சாயங்காலம் மசூதியில் இருந்து தொழுகைச் சத்தம் கேட்டது. பக்கத்தில் எங்கேயோ மசூதி இருக்கிறது.

ஹரிணி அமைதியாக அமர்ந்து க்ரிஷுக்கு இந்த இரண்டு தகவல்களையும் அனுப்பத் தீர்மானித்தாள். முத்தத்திலிருந்து ஆரம்பித்தாள். முத்தம் மூலமாக அவனை நெருங்குவது சுலபமாக இருக்கிறது. இதற்கு அவன் திட்டுவான்…. இல்லையில்லை கடத்தப்பட்டிருப்பதால் திட்ட மாட்டான்….. என்று நினைத்தபடி புன்னகைத்தாள். முதல் மாடியில் இருக்கும் தகவலை எப்படி அனுப்புவது என்று அவளுக்குத் தெரியவில்லை. யோசித்து விட்டு படிகளை நினைத்தாள். படியேறுவது போல் நினைத்தாள். பின் மனதில் பெரிதாக எண் ஒன்றை நினைத்தாள். படியேறுவதும் ஒன்றும் முதல் மாடியாக அவனை நினைக்க வைக்கலாம். அடுத்ததாக மசூதியை நினைத்தாள். மனதிற்குள் முடிந்த வரை தத்ரூபமாக நினைத்தாள். பின் மசூதி மேல் ஒரு ஒலிப்பெருக்கி இருப்பது போல் நினைத்தாள். மசூதியும் ஒலிப்பெருக்கியும் சேர்த்துப் பார்க்கும் போது மசூதி தொழுகைச் சத்தம் கேட்கிற இடம் என்று அவனுக்குப் புரிய வைக்கலாம்…..

அடுத்த அறையில் இருந்து கொண்டு சிசிடிவி கேமரா ஒளிப்பதிவை மனோகர் பார்த்துக் கொண்டிருந்தான். சிலர் அடுத்தவர் முன்னால் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு தனியாக இருக்கையில் அழுது விடுவார்கள். இவள் தனியாக இருக்கையிலும் கலங்குவது போல் தெரியவில்லை. இவள் கண்களை மூடித் தியானத்தில் இருக்கிறாளா இல்லை ஏதாவது கற்பனையில் இருக்கிறாளா என்று தெரியவில்லை. புன்னகைப்பதைப் பார்த்தால் கற்பனையில் இருப்பது போலத்தான் இருக்கிறாள். இந்தப் பெண் பைத்தியம் போல் இருக்கிறதே!

க்ரிஷ் திடீரென்று தன் உதடுகளில் அவள் உதடுகளின் ஸ்பரிசத்தை உணர்ந்தான். க்ரிஷ் உதடுகள் புன்னகைத்தன. கண்கள் கலங்கின. ஹரிணி தொடர்பு கொள்கிறாள்….

அடுக்கடுக்காக இருப்பது போல் ஏதோ செய்தி அனுப்புகிறாள்…. ஒரு சின்னக் கோடும் தெரிகிறது. இரண்டையும் அவன் கிடைத்தபடியே ஒரு தாளில் வரைந்து கொண்டான். ஆனால் ஒன்றும் புரியவில்லை.

அடுத்ததாக தாஜ்மஹால் போல் எதோ தெரிந்தது. இதற்கு எதாவது அர்த்தம் இருக்கிறதா இல்லை காதலின் சின்னமாக இதை அனுப்புகிறாளா என்று தெரியவில்லை. அதோடு கூடுதலாக எதையோ அனுப்புகிறாள் என்று தெரிந்தது. ஆனால் என்ன என்று தெரியவில்லை. அதையும் தாளில் வரைந்து கொண்டான். வரைந்து பின் அதைப் பார்க்கும் போது அது மசூதியாகவும் இருக்கலாம் என்று தோன்றியது. அருகே ஏதோ மசூதி இருக்கிறது என்று சொல்கிறாள் போலத் தெரிந்தது.

முதலில் அனுப்பியது அடுக்கு மாடியாகக் கூட இருக்கலாம். அந்தச் சிறு கோடு ஒன்று ஆகவும் இருக்கலாம். அப்படியானால் அடுக்குமாடியில் முதல் மாடியாக இருக்கலாமோ?

(தொடரும்)
என்.கணேசன்

(தீபாவளி போனஸாக அடுத்த அத்தியாயம் 6.11.2018 அன்றே பதிவிடப்படவுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்)


Monday, October 29, 2018

சத்ரபதி- 44



ஷாஹாஜியை கைது செய்து தான் சிவாஜியைப் பயமுறுத்தி நிறுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்த ஆதில்ஷா எப்படி அதை நடமுறைப்படுத்துவது என்று ஆலோசிக்க தனக்கு மிக நெருங்கிய ஆலோசகர் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் ஷாஹாஜியின் ஆதரவாளர்களும், அனுதாபிகளும் இல்லாமல் அவர் பார்த்துக் கொண்டார்.  ஆலோசனைக்கூட்டத்தில் பலரும் கர்னாடகத்தில் ஷாஹாஜியைக் கைது செய்வது அவ்வளவு சுலபமல்ல என்பதைச் சுட்டிக் காட்டினார்கள்.

கூர்மதி படைத்த ஒருவர் சொன்னார். “அரசே! ஷாஹாஜி அதிர்ஷ்டக்குறைவால் இப்போது இந்த நிலையில் இருக்கிறாரேயொழிய திறமைக்குறைவால் வீரக்குறைவாலோ அல்ல. கர்னாடகத்தில் ஷாஹாஜி படை ஆதரவுடனும், மக்கள் ஆதரவுடனும் இருக்கிறார். அவருக்கு எதிராக அவர்களை இயங்க வைப்பது நடவாத காரியம். பலம் பிரயோகித்தால் கூட நமக்கு எதிராகப் பலர் திரும்பும் சாத்தியமும் உள்ளது. அதனால் வழக்கமான முறையில் ஷாஹாஜியை அங்கு கைது செய்து இங்கு கொணர்வது முடியாத காரியம் என்றே நான் சொல்வேன்…..”

ஆதில்ஷா ஆலோசித்தார். இந்தக் கருத்து உண்மை என்றே அவருக்கும் புரிந்திருந்தது. அவர் யோசனையுடன் சொன்னார். “அப்படியானால் ஷாஹாஜியை இங்கு வரவழைத்து தான் கைது செய்ய வேண்டும்….”

இன்னொருவர் சொன்னார். “வரவழைப்பதும் சுலபம் என்று தோன்றவில்லை மன்னா. சூழ்நிலை சரியில்லை என்பதை அறிய முடியாத முட்டாள் அல்ல அவர். அதனால் அழைத்தாலும் உடல்நிலை சரியில்லை என்பது போன்ற ஏதாவது காரணம் சொல்லி அவர் தவிர்க்கவே பார்ப்பார்….”

“அப்படியானால் என்ன வழி?” ஆதில்ஷா கேட்டார்.

ஷாஹாஜியின் மேல் அளவு கடந்த பொறாமை வைத்திருந்தவனும், இதுவரை ஆதில்ஷாவுக்கு ஷாஹாஜியைப் பற்றி எதிரான அபிப்பிராயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தவனுமானவன் இந்த ஒரு கேள்விக்காகவே காத்திருந்தான். அவன் அதற்குப் பதிலை முன்பே யோசித்து வைத்திருந்தான். “அரசே தந்திரமாக அங்கேயே கைது செய்து பின் இங்கே அவரைத் தருவிப்பது தான் புத்திசாலித்தனமான வழி”

ஆதில்ஷா அவனைக் கேள்விக்குறியுடன் பார்த்தார். அவன் சொன்னான். “மன்னா, ஷாஹாஜி சிறிதும் சந்தேகப்படாத ஒரு ஆள் மூலமாக திடீரென்று அவரைக் கைது செய்து இங்கு கொணர்வது தான் புத்திசாலித்தனம். அந்த ஆள் தந்திரசாலியாக இருந்தால் தான் இது சாத்தியம்…..”

அப்படிப்பட்ட ஆள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று யோசித்த ஆதில்ஷாவுக்கு பாஜி கோர்படே என்ற ஆள் நினைவுக்கு வந்தான். அவன் முதோல் என்ற பகுதிக்குச் சமீபத்தில் தான் தலைவனாக உயர்ந்திருக்கிறான். கர்னாநாடகத்திற்கு சமீபத்தில் உள்ள பகுதி அது. பாஜி கோர்படே சூட்டிப்பானவன் மட்டுமல்ல. அறிவாளியும் கூட. சொல்கிற வழியில் சொன்னால் அவன் கண்டிப்பாக சாதித்துக் காட்ட முடிந்தவன். அவன் நிர்வாக விஷயமாக அவர் அனுமதி கேட்டு நேற்று தான் பீஜாப்பூர் வந்திருக்கிறான்…… ஆதில்ஷா அவனை ரகசியமாகத் தருவித்தார்.

பாஜி கோர்படே நிர்வாக விஷயத்தில் அவன் கேட்டிருந்த விஷயமாகத் தான் பேச சுல்தான் அழைக்கிறார் என்ற அபிப்பிராயத்துடன் தான் அங்கு வந்தான். ஆனால் ஆதில்ஷா அந்த விஷயமாக அவனிடம் பேசாமல் ஷாஹாஜியைப் பற்றிப் பேசினார். “பாஜி கோர்படே நீ ஷாஹாஜியை நன்றாக அறிவாயா?”

குழப்பத்துடன் ஆதில்ஷாவைப் பார்த்த பாஜி கோர்படே “ஓரளவு பரிச்சயம் இருக்கிறது அரசே” என்றான்.

“அவரை நீ கைது செய்து இங்கே கொண்டு வர வேண்டும். முடியுமா உன்னால்?”

குழப்பம் திகைப்பாக மாறி அதிர்ச்சியாக முடிந்து அப்படியே தங்கியது. சுல்தானின் நன்மதிப்பு பெற்ற மேலிடத்து மனிதராகவே ஷாஹாஜியை பாஜி கோர்படே கருதி வந்திருக்கிறான். திடீரென்று சுல்தான் இப்படிக் கேட்பது ஆழம் பார்க்கவா, நிஜமாகவே ஷாஹாஜி மேல் கோபம் கொண்டிருக்கிறாரா என்று புரியாமல் யோசனையுடன் சுல்தானைப் பார்த்தான்.

ஆதில்ஷா அமைதியாகச் சொன்னார். “நான் திறமையானவர்களைத் தான் எந்தப் பகுதிக்கும் தலைவராக நியமிப்பது வழக்கம். என் அரசவையில் வேறு இரண்டு பேர் முதோல் பகுதிக்குத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் விருப்பம் அறிந்த பின்னும் நான் உன்னை நியமனம் செய்ததில் அவர்கள் இருவருக்கும் என் மேல் வருத்தமும், உன் மேல் பொறாமையும் கூட உண்டு. உன்  தகுதியையும்  திறமையையும் நீ நிரூபிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். முடியுமா உன்னால்?”

பாஜி கோர்படே புத்திசாலி. முடியாது என்ற பதிலில் தன் இப்போதைய பதவியே பறிக்கப்படும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்தான். பதவிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த அவனிடம் வேறு பதில் இருக்கவில்லை. “முடியும்” என்று உடனே உறுதியாகச் சொன்னான். வழிகளைப் பின்பு ஆலோசிப்போம்….

ஆதில்ஷா புன்னகைத்தார். ஆனால் அந்தப் புன்னகை வந்த வேகத்திலேயே மறைந்தது. அவர் எச்சரிக்கும் தொனியில் சொன்னார். “ஷாஹாஜி அறிவாளி. வீரர். அதனால் தகுந்த திட்டத்துடன் போய் இதைக் கச்சிதமாகச் சாதிக்க வேண்டும். இல்லா விட்டால் நீ சிறைப்படுத்தப்படலாம். அல்லது கொல்லவும் படலாம். அதனால் நீ மிக மிக எச்சரிக்கையுடன் சிறிய சந்தேகமும் ஏற்படாதபடி கச்சிதமாகத் திட்டமிட்டால் ஒழிய வெற்றி காண முடியாது. அதனால் தான் மீண்டும் கேட்கிறேன். உண்மையாகவே இதில் வெற்றி பெற முடியுமா? நன்றாக யோசித்துச் சொல்”

பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யத் துணிந்த பாஜி கோர்படே “உங்கள் ஆணை என் பாக்கியம் அரசே! யோசித்து விட்டே நான் சொல்கிறேன். விரைவில் உங்கள் ஷாஹாஜியைக் கைது செய்து உங்கள் எதிரில் கொண்டு வந்து நிறுத்துகிறேன்….” சிறிதும் தயங்காமல் சொன்னான்.

ஆதில்ஷா சொன்னார். “நல்லது. இனி ஷாஹாஜியோடு வந்து நீ என்னைச் சந்தித்தால் போதும். சென்று வா”

பாஜி கோர்படே சுல்தானை வணங்கி விட்டுக் கிளம்பினான். அவன் கர்நாடக எல்லையிலேயே அதிகம் இருந்ததால் சிவாஜி அடுத்தடுத்து கோட்டைகளைக் கைப்பற்றிய தகவல் அவனை எட்டியிருக்கவில்லை. பீஜாப்பூரில் அவன் நண்பர்களை விசாரித்ததில் தற்போதைய நிலவரங்களை முழுமையாக அறிந்தான். சுல்தானுக்கு இப்போது ஷாஹாஜி எதிரியாக ஆனது எப்படி என்று புரிந்த அவனுக்கு அந்த எதிரியைக் கைது செய்து சுல்தானிடம் ஒப்படைத்தால் மேலும் பெற முடிந்த ஆதாயங்களும் ஏராளமாக இருக்கும் என்பதும் புரிந்தது. அவன் மனம் அதை எல்லாம் எண்ணுகையில் படபடத்தது.

ஆனால் சுல்தான் அவனிடம் எச்சரித்த வார்த்தைகளும் நூறு சதவீதம் உண்மை என்பதை அவன் அறிவான். “தகுந்த திட்டத்துடன் போய் இதைக் கச்சிதமாகச் சாதிக்க வேண்டும். இல்லா விட்டால் நீ சிறைப்படுத்தப்படலாம். அல்லது கொல்லவும் படலாம்.” அதை நினைக்கையில் மனதில் பதட்டத்தையும் உணர்ந்தான்.

தன்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பி வருகையில்  வழியெல்லாம் அவன் மனம் பல திட்டங்களைப் போட்டு அவற்றின் சாதக பாதகங்களையும், அலசிக் கொண்டே வந்தது. ஷாஹாஜியின் பலம் பலவீனங்களையும் அவரது  கடந்த கால சரித்திரத்தை வைத்து யோசித்துப் பார்த்தான்.. அவர் பிரபலமானவர் என்பதால் அவரைப் பற்றிப் பலர் மூலம் நன்றாக அவன் அறிவான். மனிதர் வீரர், அறிவாளி என்பதில் எல்லாம் சந்தேகம் இல்லை… ஆனால் அவருக்கு பாஜி கோர்படேயைப் பற்றி அந்த அளவு ஆழமாகத் தெரியாது. அவன் அவரளவு பிரபலமில்லாதவன், பழக்கப்படாதவன் என்பதால் அவனைப் பற்றி முழுமையாக அறியும் வாய்ப்பு அவருக்கு இல்லை. அதுவே தன் பலம் என்று அவனுக்குத் தோன்றியது. ஒரு சாதாரண பிரதேசத்தின் சாதாரணத் தலைவனாகிய அவன் மூலம் அவருக்கு ஆபத்து வர முடியும் என்ற எண்ணமே அவருக்குத்  தோன்ற வாய்ப்பில்லை….. அந்த எண்ணமே அவனுக்குப் பெரிய மனபலத்தை ஏற்படுத்தியது.

நன்றாக யோசித்து ஒரு திட்டத்தைப் போட்டு அதற்கு இரகசியமாய் சில ஏற்பாடுகள் செய்ய அவனுக்கு பத்து நாட்கள் தேவைப்பட்டன. கச்சிதமாய் அந்த ஏற்பாடுகளைச் செய்து விட்டு என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்று பல கோணங்களில் ஆராய்ந்து விட்டு அத்தனைக்கும் வழி ஏற்படுத்திக் கொண்டு விட்ட பின்பே திருப்தியுடன் அவன் பெங்களூருக்கு ஷாஹாஜியைச் சந்திக்கச் சென்றான்.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, October 25, 2018

இருவேறு உலகம் – 106


விஸ்வத்தின் சக்திகளுக்கான பயணம் இனிமையாய் இருக்கவில்லை. ஆரம்பத்தில் தேடிப் போன குருவே அவனை சீடனாக ஏற்றுக் கொள்ளவில்லை. மவுண்ட் அபுவில் சதானந்தகிரி சுவாமிஜியிடம் ஆர்வத்துடன் வேண்டி நின்ற தருணம் இப்போதும் அவன் மனதில் பசுமையாகவே இருக்கிறது. அவர் மறுத்து விட்டார். அவரது மறுப்பு ஏமாற்றமாக இருந்தாலும் கூட அவன் தேடலைத் தடுத்து நிறுத்தி விடவில்லை. வாழ்க்கையில் ஒரு கதவு மூடியவுடன் எல்லாமே முடிந்து விட்டது என்று ஓய்ந்து போகும் ரகம் அல்ல அவன். அடுத்தடுத்த கதவுகளைத் தட்டிப் பார்ப்பதில் அவனுக்குச் சலிப்போ தயக்கமோ இருக்கவில்லை. சில கதவுகள் திறந்தன. ஒவ்வொரு இடத்திலும் உள்ளே நுழைந்தவன் தனக்குச் சொல்லிக் கொடுத்தவரை விட ஒரு படி உயராமல் வெளியே வந்ததில்லை.

ஒரு நாளுக்கு அவன் மூன்று மணி நேரங்களுக்கு மேல் உறங்கியதில்லை. காலத்தை அவனுக்குப் பயனில்லாத விஷயங்களில் வீணாக்கியதில்லை. தேவைக்கு அதிகம் பேசியதில்லை. தேவைக்கு அதிகமாகப் பேசியதைக் கேட்டதும் இல்லை. சிந்தித்தான். பேரறிவாளர்களின் சிந்தனைகளைப் படித்தான். அந்த சிந்தனையைத் தன் சிந்தனையாகப் பதியவைத்துக் கொண்டு மறுபடி அதிகம் சிந்தித்தான். அந்த சிந்தனை தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் வரை அந்த சிந்தனையாகவே வாழ்ந்தான். அந்த ஜிப்ஸி பற்ற வைத்து விட்டுப் போன அக்னி எரிமலை ஜுவாலையாய் எரிந்து கொண்டிருக்கும் இந்தக் கணம் வரை கூடிக் கொண்டே வந்ததே ஒழிய தணிந்ததோ குறைந்ததோ இல்லை.

ஓரளவு உயர்சக்திகளைத் தன் வசமாக்கிக் கொண்ட பின் மவுண்ட் அபுவுக்கு மறுபடி போனான். சதானந்தகிரி சுவாமிஜியின் ஆசிரமத்தில் அவரையே அவன் சக்திகளால் கட்டிப்போட்டான். மனிதர் பிரம்மப் பிரயத்தனம் செய்தும் அவரை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. முடிவில் முடியாமல் தோல்வியை ஒப்புக் கொண்டு முயற்சியை நிறுத்திக் கொண்ட பின் தான் அவரைக் கட்டவிழ்த்து விட்டு வந்தான். தன் சக்தியை அடுத்தவர்களுக்கு நிரூபிக்க அவன் அதன்பின் எப்போதும் விளையாட்டாய் முயற்சி எடுத்ததில்லை.


அவன் இப்படி  வளர்ந்து வரும் சமயத்தில் பலரும் இன்னொரு மனிதரைப் பற்றிப் பேசினார்கள். ‘மாஸ்டர்’ என்றே அவரை அழைத்தார்கள். அவர் இருந்த சக்தி வாய்ந்த ரகசிய ஆன்மிக இயக்கத்தைப் பற்றிப் பேசினார்கள். அந்த இயக்கத்தின் அங்கத்தினர்கள் பெரிய பெரிய பதவிகளிலும், பெரிய பெரிய நிலைகளிலும் இருப்பதைச் சொன்னார்கள். அறிவுஜீவிகள் இருக்கும் இயக்கம் என்றும் இந்த உலகத்தின் நன்மைக்காகவே இயங்கும் இயக்கம் என்று சொன்னார்கள். ஏகப்பட்ட சொத்துக்கள் அந்த இயக்கத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். முக்கியமாய் அறிவு, அதிகாரம் என்ற இரு வார்த்தைகள் அவனை மிகவும் ஈர்த்தன.

விஸ்வத்தின் அடுத்த இலக்காக அந்த இயக்கம் அமைந்தது. ஒரு மாத காலம் அந்த இயக்கத்தைப் பற்றியும் மாஸ்டரைப் பற்றியும் அறிய வேண்டிய தகவல்கள் எல்லாவற்றையும் அறிந்தான். பின் ஒரு நாள் மாஸ்டரை தூரத்தில் இருந்து கவனிக்கப் போனான். மாஸ்டர் அப்போது ரிஷிகேசத்தில் தன் குருவுடன் தங்கியிருந்தார். அந்தக் குடிலுக்கு அருகில் ஒரு அழகான தோட்டத்தை மாஸ்டர் அமைத்திருந்தார். அந்தச் செடிகளுக்கு அவர் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கையில் தான் விஸ்வம் மாஸ்டரை முதல் முதலில் பார்த்தான். அவன் பார்த்த அடுத்த கணமே மாஸ்டர் அவன் இருந்த பக்கம் திரும்பினார். மின்னல் வேகத்தில் ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து கொண்ட விஸ்வம் மாஸ்டரின் உணர்வுகளின் நுட்ப நிலையை முதல் பார்வையிலேயே உணர்ந்து கொண்டான். சாதாரணமாய் பார்த்த முதல் கணத்திலேயே தான் பார்க்கப் படுவதை அறிய முடிந்த அவர், அவன் தன் சக்தி அலைகளைப் பிரயோகப்படுத்தி இருந்தால் கண்டிப்பாக அவனை அந்த சக்தி அலைகளிலேயே ஊடுருவி முழுவதுமாய் அறிந்திருப்பார். வாழ்க்கையில் முதல் முறையாகத் தனக்கு இணையான ஒரு மனிதரை விஸ்வம் சந்தித்திருப்பதாய் உணர்ந்தான்.

அந்த இயக்கத்தில் சேர்வதற்கு முன் தன்னை முழுமையாகத் தயார்ப்படுத்திக் கொண்டு தான் வந்தான். இயக்கத்தின் ஒரு ஆன்மிக உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு ஆன்மிகத்தில் மிக ஈடுபாடு இருப்பதாகவும், உலக நன்மைக்கே ஆன்மிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நம்புவதாகவும் அவரிடம் சொன்னான். அவன் சொன்னதெல்லாம் தங்கள் இயக்கத்தின் நிலைப்பாடுகளாகவே இருப்பதை உணர்ந்த அந்த உறுப்பினர் தங்கள் இயக்கத்தில் அவனைச் சேர்த்து விட்டார். முதல் முறை மாஸ்டர் இல்லாத சமயமாகத் தான் அந்த உறுப்பினருடன் குருவைச் சந்திக்கப் போனான். அங்கு போவதற்கு முன் தன் எண்ண அலைகளையும், சக்தி அலைகளையும் மறைத்துக் கொண்டு போனான்.

தாமிரத் தாம்பாளத்தில் பழங்கள், பூக்கள், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை எல்லாம் எடுத்துக் கொண்டு, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு பரமசாதுவாய் வந்த விஸ்வத்தை குரு சந்தேகப்படவில்லை. அதற்குக் காரணமும் இருக்கவில்லை. அவரும் ஓரளவு சக்தி அலைகளில் தேர்ச்சி பெற்றவர் தான் என்றாலும் அவனைச் சந்தேகப்படாததால் அவனை அலசப் போகவில்லை. அப்படி அலசியிருந்தாலும் கண்டுபிடித்திருக்க முடியாதபடி விஸ்வம் மறைத்து தான் வைத்திருந்தான். அவனுக்கு ஆசி வழங்கி இயக்கத்தில் சேர்த்துக் கொண்டார்.  

இந்த அலைகளைப் படிக்கும் சக்தி படைத்தவர்கள் கூட, கவனத்தோடு அதற்கு முயன்றால் தான் படிக்க முடியும். இல்லாவிட்டால் அவற்றை அறிந்து கொள்ள முடியாது. எதிரே ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருந்தாலும், அது எழுதப்பட்டிருக்கும் மொழியில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அதைத் திறந்து படித்தால் மட்டுமே ஒருவர் அதில் எழுதியிருப்பதை அறிய முடியும் அல்லவா? அதே போல் தான் அடுத்தவரை அறிய முடிவதும். எத்தனை தான் யோகசக்திகளே பெற்றிருந்தாலும் கவனத்தை அதன் பக்கம் திருப்பாத வரை அதன் முழுத்தன்மையை அறிய முடியாது. இதை விஸ்வம் மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டான். முக்கியமாய் மாஸ்டரை நெருங்கி வரும் போதெல்லாம் அவர் கவனம் முழுமையாய் தன் பக்கம் வராதபடி பார்த்துக் கொண்டான். ஓரளவாவது வந்தே தீரும் என்ற முக்கியமான சூழ்நிலைகளில் மேலான சக்தி கவசம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டே வந்தான். இயல்பிலேயே நுட்பமான உணர்வுகள் கொண்ட அவர் அவன் விஷயத்தில் சந்தேகமோ, ஆர்வமோ கொள்ளாதபடி விஸ்வம் மிகவும் கவனமாக இருந்தான். அவனுடன் இருக்கும் சந்தர்ப்பங்களில் ஒரு முறையாவது அவர் முழுமையான கவனத்தோடு சக்தி அலைப் பிரயோகத்தை அவன் மீது ஏற்படுத்தியிருந்தால் அது அந்தக் கவசத்துடன் மோதித் திரும்புவதை அவர் கண்டிருப்பார். மிக மிகக் கவனத்துடன் அப்படி நடந்து விடாதபடி விஸ்வம் பார்த்துக் கொண்டான்.

பெரும்பாலும் மாஸ்டரின் கவனம் எல்லாம் ஆன்மிகத்திலும், தத்துவத்திலும், இயற்கையின் ரகசியங்களை அறிவதிலுமேயே இருக்கும். குருவிடம் அவர் இருக்கும் போது அதிகமாய் அவர் பேசுவதும் ஆர்வம் காட்டுவதும் அவற்றில் தான். தவறியும் அது சம்பந்தமாக அவரிடம் அவன் பேசியதில்லை. அந்த ஆர்வம் மூலமாகத் தன் மீது அவர் கவனம் திரும்புவதை அவன் விரும்பவில்லை. சில நாட்கள் பலரோடு ஒருவனாகவே அந்த இயக்கத்தில் இருந்து வந்த விஸ்வம் மெல்ல அவர்கள் இயக்கத்தின் கணக்கெழுதும் போது சேர்ந்து கொண்டான். காலப் போக்கில் தன்னிடமே முழுக்கணக்கு எழுதும் வேலையும் வருமாறு பார்த்துக் கொண்டான்.

மிகச்சில சந்தர்ப்பங்களில் மாஸ்டருடன் நெருங்கி இருக்க வேண்டிய சூழல்களில் அவன் தன் அலைகளை அவருக்கு அடையாளம் காட்டி விடாமல் இருக்க தீவிர சக்தி சாதகம் செய்து விட்டு பின்னரே அவரிடம் வருவான். பின் அடுத்த கட்டமாக மாஸ்டர் ஏதாவது ஒன்றில் ஆழமாக இருக்கையில் அவர் அறியாமல் அவர் எண்ண அலைகளை சில வினாடிகள் படிக்க ஆரம்பித்தான். வினாடிகள் நிமிடங்களின் அளவில் நீண்டால் அவர் அதை உணர்ந்து விடுவார். அந்த அளவு அவர் உணர்வுகள் சூட்சுமமானவை. எனவே மிக கவனமாக அவரிடம் வினாடிகளின் அளவில் மட்டுமே அவன் பரிசோதனைகளை நடத்தியிருக்கிறான். அவன் தன் வாழ்க்கையில் மிக அதிகமாக சக்திகளை செலவிட்டது மாஸ்டர் விஷயத்தில் தான்.

ஒவ்வொரு சக்தியையும் செலவிடுவது பெரிதல்ல. அதை மீண்டும் நிரப்பிக் கொள்ள வேண்டும். அதற்கு சாதகம் செய்ய வேண்டும். அதனாலேயே அனாவசியமாய் தன் சக்திகளை அவன் விரயம் செய்ததில்லை. சாதாரண வழியிலேயே ஒன்றைச் செய்ய முடியுமானால் அதை அந்த சாதாரண வழியிலேயே செய்வான். ஒருபோதும் சக்திப் பிரயோகம் செய்து சக்தியை வீணாக்கியதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே, தேவைப்படும் அளவில் மட்டுமே சக்தியைச் செலவு செய்தவன் மீண்டும் சாதகம் செய்து சக்தியைத் தன்னில் நிரப்பிக் கொள்ளாமல் உறங்கச் சென்றதில்லை.  அதைச் செய்வதில் அவன் களைத்துப் போனதில்லை.   

இந்த சக்திகளை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்வதாய் உத்தேசம், உன் கடைசி இலக்கு தான் என்ன என்று எத்தனையோ ஆசிரியர்கள் அவனிடம் கேட்டிருக்கிறார்கள். அவன் தன் கடைசி இலக்கை அவர்களிடம் சொன்னதில்லை. அவர்களிடம் மட்டுமல்ல அவன் யாரிடமும் சொன்னதில்லை. அவன் மட்டுமே அதை அறிவான். அவன் இலக்கு நிறைவேறும் போது இந்த உலகமும் அதை அறியும். அவன் விதியை எழுதிக் கொண்டிருக்கும் அவன் ஒரு நாள் இந்த உலகத்தின் விதியையும் எழுத ஆரம்பிப்பான்.

(தொடரும்)
என்.கணேசன் 

Monday, October 22, 2018

சத்ரபதி – 43


“நம் கோட்டைக்கு அருகே சிவாஜி தங்கியிருக்கிறான் தலைவரே” என்று தலைமை அதிகாரி வந்து சொன்ன போது கோவல்கர் சாவந்த் நெஞ்சை ஏதோ அடைப்பது போல உணர்ந்தான். சிவாஜி என்ற பெயர் அந்த அளவு அச்சத்தை அவன் மனதில் உண்டாக்கி இருந்தது…..

“அவன் பிடித்த கோட்டைகள் அளவு நம் கோட்டை பெரியதோ, முக்கியத்துவம் வாய்ந்ததோ இல்லையே…” என்று பலவீனமாகச் சொன்னான். அவன் குரல் அவனுக்கே கிணற்றிலிருந்து கேட்பது போலத் தான் இருந்தது.

“அவன் நம் கோட்டையைப் பிடிக்க வரவில்லை தலைவரே. ஹரிஹரேஸ்வரர் கோயில் வந்து வணங்கியவன் போகும் வழியில் இளைப்பாறுகிறான் அவ்வளவு தான்…”

கோவல்கர் சாவந்தின் இதயத்தில் ஏறியிருந்த இமயம் இறங்கியது. நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

தலைமை அதிகாரி தொடர்ந்து சொன்னார். “நானும் அந்தச் சமயத்தில் தான் அந்தக் கோயிலிற்குச் சென்றிருந்தேன். அப்போது சிவாஜியின் நண்பன் யேசாஜி கங்க் அறிமுகம் ஆனான். அவன் உங்களிடம் உள்ள பவானியின் வீரவாள் பற்றிக் கேட்டான். சிவாஜி அன்னை பவானியின் பரம பக்தன் என்று சொன்னான்…..”

மறுபடி கோவல்கர் சாவந்தின் மனதில் கவலை புகுந்தது. ”அந்த வாளுக்காக அவன் கோட்டையை ஆக்கிரமிக்க வருவானோ?” என்று தலைமை அதிகாரியிடம் கேட்டான்.

”நானும் அப்படியே சிறிது பயப்பட்டேன். ஆனால் சிவாஜி அப்படி வரமாட்டான். வற்புறுத்தவும் மாட்டான் என்று யேசாஜி கங்க் சொன்னான்.”

மறுபடி நிம்மதியடைந்த கோவல்கர் சாவந்திடம் தலைமை அதிகாரி சொன்னார். “தலைவரே. இப்போது இந்தப் பிராந்தியத்தில் சிவாஜியே தலையாய சக்தியாக இருக்கிறான். மக்களின் ஆதரவும் அவனுக்குப் பெருக ஆரம்பித்திருக்கிறது. அவனுக்கு நாமும் நம் கோட்டையும் ஒரு பொருட்டே அல்லாமல் இருக்கலாம். ஆனால் நமக்கு அவனைப் போன்ற ஒரு வீரனுடன் நட்பும், இணக்கமும் இருப்பது மிகச் சிறந்த பலமாக இருக்கும். அவன் ஆதரவு நமக்கு இருக்கிறது என்றால் நம்மிடம் யாரும் வம்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்…..”

கோவல்கர் சாவந்த் கேட்டான். “என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“உங்களுக்கு அந்த வீரவாள் விலை உயர்ந்த ஒரு குடும்பச் சொத்து அவ்வளவு தான். சிவாஜிக்கு அது அவன் வணங்கும் தெய்வத்தின் ஆயுதம். அவனுக்கு அதை நீங்களாகவே சென்று பரிசளித்தால் வாழ்நாள் முழுவதும் அவன் அதை மறக்க மாட்டான். அவனுக்குத் தற்போது கல்யாண் நிதியும் கிடைத்திருக்கிறது. உங்களுக்கு அதன் மதிப்பை விட அதிகமாகவே அவன் திரும்பப் பரிசளிக்கும் வாய்ப்பும் இருக்கிறது…”

கோவல்கர் சாவந்த் யோசித்தான். சிவாஜியைப் போன்ற மாவீரனின் நட்பு நிரந்தரமாகவே கிடைக்கும் என்றால், அவனிடம் பல உதவிகளை அதன் மூலம் பெற முடியும் என்றால் அந்த வீரவாளைத் தந்து விடுவது அவனுக்குப் பெரிய இழப்பாகத் தெரியவில்லை…..

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் சிவாஜி முன் இருந்தான். பெரும் மரியாதையுடன் வணக்கம் தெரிவித்து விட்டு அந்த வீரவாளை வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து சிவாஜியிடம் நீட்டியபடி சொன்னான். “தாங்கள் பவானி மாதாவின் பக்தன் என்று கேள்விப்பட்டேன். அதனால் எங்கள் குடும்பச் சொத்தாக பல தலைமுறைகள் பாதுகாத்து வந்த பவானி மாதாவின் வீரவாளைத் தங்களுக்குப் பரிசாகத் தர விரும்புகிறேன். தயவு செய்து இதைப் பெற்றுக் கொண்டு அடியேனை கௌரவிக்க வேண்டும்….”

கைப்பிடியில் நவரத்தினங்கள் பதித்த அந்த நீண்ட வீரவாளைப் பார்க்கையில் இனம் புரியாத சிலிர்ப்பை சிவாஜி உணர்ந்தான். அன்னை பவானியே அந்த வீரவாளை அவனுக்குத் தர கோவல்கர் சாவந்திற்கு உத்தரவிட்டிருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. உணர்ச்சிப் பெருக்கில் கண்களில் நீர் திரையிட சிவாஜி அந்த வாளைத் தொட்டு வணங்கி விட்டு அதை வாங்கிக் கொண்டு சொன்னான். “சகோதரரே. கோட்டைகள் பல அடைந்த போதும் அடையாத ஒரு பேரானந்தத்தை அன்னையின் இந்த வீரவாளைப் பெறுகையில் நான் உணர்கிறேன். என் வாழ்நாள் உள்ள வரை உங்களது இந்தப் பெருந்தன்மையை நான் மறக்க மாட்டேன்……”

யேசாஜி கங்க் நண்பனின் உணர்ச்சிப் பெருக்கைக் கண்டு மனம் நெகிழ்ந்தான். நண்பனுக்குத் தெரியாமல் அந்த அதிகாரியின் காதில் சில வார்த்தைகளைப் போட்டு வைத்தது மிக நல்லதாகவே போயிற்று என்று மகிழ்ந்தான்.

சிவாஜி கோவல்கர் சாவந்துக்கு அந்த வீர வாளின் இருமடங்கு மதிப்பிற்குப் பொன்னும் பொருளும் பரிசளித்தான். “இந்த வீரவாளுக்கு என் அத்தனை செல்வத்தையும் நான் தந்தாலும் அது ஈடாகாது சகோதரரே. ஆனால் என் அன்பின் அடையாளமாக நான் தரும் இந்தச் சிறுபரிசுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.”

கோவல்கர் சாவந்த் பெருமகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்து விட்டு சிறிது அளவளாவி விட்டு மகிழ்ச்சியுடன் திரும்பினான். சிவாஜியோ அந்த வீரவாளுடன் அன்னை பவானியின் பரிபூரண ஆசிர்வாதம் வந்து சேர்ந்தது போல் பேரானந்தத்தில் மூழ்கினான்.



தில்ஷா சிவாஜியின் பதிலில் கடுங்கோபம் கொண்டார். இது வரை அவன் கடிதங்களில் தெரிந்த தொனி வேறு இப்போது தெரியும் தொனி வேறு. பெயருக்குத் தான் பெருவணக்கத்துடன் சிவாஜி கடிதத்தை ஆரம்பித்திருந்தானேயொழிய மீதியில் சமமானவர்களிடம் பேசுவது போலவே தன் பக்கத்து நியாயத்தைத் தெரிவித்திருந்ததை அவர் கவனிக்கத் தவறவில்லை. பீஜாப்பூருக்கு நேரில் வரச் சொன்னால் ‘நான் கைப்பற்றிய பகுதிகளுக்கு நானே தலைவன் என்று அறிவித்தால் தான் வருவேன்’ என்று நிபந்தனை விதிக்கிறானே இந்தப் பொடியன் என்று அவருக்கு ஆத்திரம் வந்தது.

அடுத்ததாக வந்த ஷாஹாஜியின் கடிதமும் அவர் ஆத்திரத்தைக் குறைக்கவில்லை. ஷாஹாஜியும் முதல் பத்து வரிகளில் அவருக்கு பெருவணக்கம் தெரிவித்து விட்டு சிவாஜி அவருக்கு எழுதிய பதிலையும் தெரிவித்து விட்டு எழுதியிருந்தார். “அரசே. அவன் என் பிள்ளையாக இருந்தாலும் என் சொற்படி நடக்க மறுக்கிறான். அவனை விட்டு நான் தொலைவிலேயே இருந்தது தவறு என்று நான் இப்போது உணர்கிறேன். ஆனாலும் கடந்த காலத்தைச் சரிசெய்யும் வல்லமையோ, இப்போது அவனைத் திருத்தும் வழியோ அறியாமல் நான் தவிக்கின்றேன். வேறு வழி தெரியாததால், ஒரு படையை அனுப்பி என் மகனை அடக்கிப் பணிய வைக்கும்படி தங்களிடம் விண்ணப்பித்துக் கொள்கின்றேன்….”

ஷாஹாஜியின் கடிதம் மகனை அடக்க முடியாத ஒரு தந்தையின் யதார்த்த நிலையாக ஆதில்ஷா உணர்வதற்கு முன் ஷாஹாஜியின் எதிரியாக ஆதில்ஷா மனதில் முன்பு நஞ்சை விதைத்தவன் கடகடவென்று சிரித்தான்.

“மன்னா ஷாஹாஜியும் அவர் மகனும் சேர்ந்து நன்றாக நாடகம் ஆடுகிறார்கள்.  மகனை மறைமுகமாக இயக்கி விட்டு நம்மிடம் ஷாஹாஜி முடிந்தால் அவனை அடக்கு என்று விண்ணப்பம் என்கிற பெயரில் சவாலைத்தான் முன் வைக்கிறார். சகாயாத்ரி மலைத்தொடரில் என்னேரமும் சென்று ஒளிந்து கொள்ளும் சௌகரியத்தில் தான் சிவாஜி இருக்கிறான். சகாயாத்ரி மலைத்தொடர் அவர்களுக்கு வீட்டைப் போல். அதன் மூலை முடுக்குகளை அவர்கள் நன்றாக அறிவார்கள். ஷாஹாஜி அங்கு பதுங்கியிருந்த போது முகலாயச் சக்கரவர்த்தியால் கூட ஷாஹாஜியைக் கைது செய்ய முடியவில்லை என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படி பாதுகாப்பான சூழலில் மகன் உள்ளதால் தான் ஷாஹாஜிக்கு உங்களுக்கே சவால் விடும் துணிச்சல் வந்திருக்கிறது……”

ஆத்திரத்தில் இருந்த ஆதில்ஷா இதைக்கேட்டு மேலும் ஆத்திரமானார். “நான் என் நண்பனைப் போலத் தான் ஷாஹாஜியை நினைத்திருந்தேன். அந்த மரியாதையையே அவருக்கு என்றும் தந்துமிருக்கிறேன். அப்படி இருக்கையில் அவர் இப்படி துரோகம் செய்வார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை…. இனி என்ன செய்யலாம்?

“ஷாஹாஜி சொன்னது போல் அவனிருக்கும் இடம் சென்று சிவாஜியைக் கைது செய்ய முடியாது மன்னா. சிவாஜி பீஜாப்பூர் வந்தால் மட்டுமே நம்மால் அவனைக் கைது செய்ய முடியும். அவனை அடக்க ஒரே வழி ஷாஹாஜியைக் கைது செய்வது தான். அவரைப் பணயக்கைதியாக வைத்தால் சிவாஜி பிடித்த கோட்டைகளை ஒப்படைக்கவும் செய்வான். தந்தையைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் இங்கு வந்து சரணடையவும் செய்வான்”

ஆதில்ஷாவுக்கு அந்த ஆலோசனை சரியென்றே தோன்றியது.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, October 18, 2018

இருவேறு உலகம் – 105


ர்ம மனிதனாகிய விஸ்வம் ஹரிணியின் வார்த்தைகளைச் சலனமே இல்லாமல் கேட்டான். ‘எனக்காக என் காதலன் என்ன வேண்டுமானாலும் செய்வான்’ என்று பெருமை பேசும் காதலியாக இல்லாமல், “எனக்காகக் கூட என் காதலன் சரியானதைச் செய்யாமல் இருக்க மாட்டான்” என்று வித்தியாசமாக பெருமைப்பட்ட ஹரிணியைப் பார்த்து அவன் மனோகரைப் போல் அசந்து விடவில்லை. பல வகை கிறுக்குகளில் இதுவும் ஒரு வகை என்று எண்ணியவன் அதையும் தான் பார்ப்போம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கவனத்தை அடுத்த விஷயத்திற்குத் திருப்பினான். சட்டர்ஜியிடம் இருந்து மின்னஞ்சலில் பதில் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்த்தான். வரவில்லை.

ஒரு எண்ணிற்குப் போன் செய்து சட்டர்ஜியின் மெயில் ஐடி தந்து இதைக் கடைசியாக எப்போது எங்கே திறந்து படித்திருக்கிறார்கள் என்றும் வழக்கமாக இந்த மெயில் எந்த ஊரில், எந்த இடத்திலிருந்து திறந்து பார்க்கப்படுகிறது என்றும் கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னான். நவீன விஞ்ஞான வளர்ச்சி அதைக் கண்டுபிடித்துச் சொல்லி விடும்….

அடுத்ததாக ஒரு எண்ணில் இருந்து போன்கால் வந்தது. உறுப்பினர் கூட்டத்தில் மாஸ்டர் பேசிய உணர்ச்சிகரமான பேச்சை அப்படியே பதிவு செய்திருந்த ஒலிபரப்பு வந்தது. அதை உணர்ச்சியே இல்லாமல் விஸ்வம் கேட்டான். தொடர்ந்து மூத்த துறவியும், கிருஷ்ணவேணியும் பேசியதும், பல உறுப்பினர்கள் ஆதரித்ததையும் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டான். இத்தனை காலம் அவரைக் கூர்ந்து கவனித்து வந்திருந்ததால் மாஸ்டர் கிட்டத்தட்ட இதைத் தான் செய்வார் என்று முன்பே கணித்திருந்தான். இந்தக் கட்டத்திலாவது அவர் ராஜினாமாவை வேறு வழியில்லாமல் ஏற்பார்கள், ஏதாவது ஒரு கிழத்திடம் தலைமைப் பதவி ஒப்படைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்த்தான். அது நடக்கவில்லை. ஒரு கிழவனும், கிழவியும் சேர்த்து அதைத் தடுத்து விட்டார்கள். க்ரிஷைப் போலவே மாஸ்டரும் அவன் வழியில் இருந்து விலகுவதாக இல்லை.     

யோசித்துப் பார்த்தால் மாஸ்டரின் வாழ்க்கையும், அவனுடைய வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருந்திருக்கிறது. மாஸ்டர் தன் பெற்றோரைப் பற்றி அதிகம் பேசியதில்லை. விஸ்வத்தின் பெற்றோரும் அவனைப் பெற்றதைத் தவிர வேறு பெரிதாகப் பேசும் அளவு எதையும் செய்து விடவில்லை. மாஸ்டரைப் போலவே விஸ்வமும் இளமையில் இலக்கில்லாமல் தான் சுற்றியிருக்கிறான். மாஸ்டர் குருவைச் சந்தித்த பிறகு வாழ்க்கை முற்றிலுமாக மாறி விட்டது. விஸ்வமும் தன் இளமைக்காலத்தில் ஒரு ஜிப்ஸியைப் பார்த்த பிறகு வாழ்க்கை ஒரேயடியாக மாறி விட்டது.

அந்த ஜிப்ஸி இளைஞனை அவன் சந்தித்தது ஒரு பெருமழைக்கால ஞாயிற்றுக்கிழமையில். தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த இருவரும் மழையில் இருந்து தப்பிக்க வேண்டி ஒரு பெரிய கட்டிட வாசலுக்கு ஓடி வந்தார்கள். ஞாயிறு அந்தக் கடைக்கு விடுமுறை என்பதால் கடை பூட்டி இருந்தது. இவர்கள் இருவரையும் தவிர அங்கு வேறு யாருமில்லை. அந்த ஜிப்ஸியின் கையில் கிதார் இருந்தது. மழை நிற்பதாகத் தெரியவில்லை. மெல்ல அந்த ஜிப்ஸி கிதாரை வாசிக்க ஆரம்பித்தான். இசை இனிமையாக இருந்தது. விஸ்வம் அந்த ஜிப்ஸியைப் பார்த்தபடி இசையைக் கேட்டுக் கொண்டு நின்றான்.

ஜிப்ஸியும் அவனைப் பார்த்துக் கொண்டே கிதார் வாசித்தான். ஆனால் அவன் பார்வை நிமிடத்துக்கு நிமிடம் கூர்மையாகியது. அவன் முகத்தில் ஆச்சரியம் அதிகமாக ஆரம்பித்தது. விஸ்வத்துக்குத் தன் தோற்றத்தில் என்ன வித்தியாசத்தைப் பார்த்து இந்த ஆள் ஆச்சரியப்படுகிறாரன் என்பது புரியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த ஜிப்ஸி கிதார் வாசிப்பதைக்கூட நிறுத்தி விட்டு அவனைப் பார்த்தான். விஸ்வத்துக்கு அந்த ஜிப்ஸி பைத்தியமாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. மழை தீவிரம் குறைந்திருந்தால் கூட அங்கிருந்து வேறு இடம் பார்த்து ஓடியிருப்பான்….
திடீரென்று அந்த ஆள் விஸ்வத்தின் பெயர், அம்மா, அப்பா பெயர் எல்லாம் சொல்ல ஆரம்பித்தான். சொல்ல ஆரம்பித்தான் என்பதை விட அவன் மேல் எழுதி இருந்ததைப் படிக்க ஆரம்பித்தான் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். பார்த்துப் படிப்பது போலத் தான் படித்தான். ஆனால் அவன் சொல்வது எல்லாம் சரியாக இருந்தது. பின் கடந்த கால நிகழ்வுகள் இரண்டைச் சொன்னான். அந்த இரண்டு நிகழ்வுகளும் அவன் மட்டுமே அறிந்திருந்த நிகழ்வுகள். அதுவும் சரியாக இருந்தது. பின் எதிர்காலம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.

“நீ எதிர்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவனாய் ஆகப் போகிறாய். பல அமானுஷ்ய சக்திகள் உன் வசமாகப் போகின்றன….. சக்திகளைப் பொறுத்த வரை நீ நிறுத்திக் கொள்வது தான் எல்லை…… “

விஸ்வம் நம்பவில்லை. உண்மையில் அவனுக்கு சிறு வயதில் இருந்தே மாயா ஜாலக்கதைகள் மிகவும் பிடிக்கும். அந்தக் கதைகளில் மந்திரவாதி சொன்னபடி எல்லாமே மாறுவது படிக்கப் பிடிக்கும். இது போல் நாமும் ஒரு மந்திரவாதியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று அவன் பலமுறை கற்பனைக்குதிரையைத் தட்டி விட்டிருக்கிறான்.  அப்படி இருக்கையில் கடந்த காலத்தில் நடந்ததையெல்லாம் சரியாகச் சொன்ன இந்த ஆள் எதிர்காலத்தில் பல அமானுஷ்ய சக்திகள் நம் வசமாகும் என்று சொல்கிறாரே என்ற எண்ணம் எதிர்பார்ப்பும், சந்தேகமும் கலந்த சிரிப்பை விஸ்வத்திடமிருந்து வரவழைத்தது. “எனக்கா? அமானுஷ்ய சக்தியா?” என்று சொல்லிச் சிரித்தான்.

“எதாவது வித்தியாசமாய் நடக்க ஆசைப்பட்டுச் சொல்லேன்” என்றான் அந்த ஜிப்ஸி.

விஸ்வத்துக்கு உடனே என்ன நினைப்பது என்று தெரியவில்லை. “இந்த மழை நிற்கட்டும்” என்றான். தீவிரமாய் பெய்து கொண்டிருந்த மழை வேகமாகக் குறைய ஆரம்பித்து ஒரு நிமிடத்தில் நின்றே விட்டது. விஸ்வத்திற்கே நம்ப முடியவில்லை. திகைத்து நின்றான்.

ஜிப்ஸி சொன்னான். “இது உனக்கு நிரூபிக்க மட்டும் நடந்த விஷயம். இனி நீ முறைப்படி அமானுஷ்ய சக்திகளைக் கற்றுக் கொண்டால் தான் ஒவ்வொன்றாய் உனக்குக் கிடைக்கும். ஆனால் நீ அதைச் சாதிப்பாய். உன் விதியில் அது தெரிகிறது..”

“என் விதியில் வேறென்ன தெரிகிறது?” விஸ்வம் ஆர்வத்துடன் கேட்டான்.

“நீ இது வரை கற்பனை செய்து வைத்திருந்த சக்திகள் எல்லாம் உனக்குக் கிடைக்கப் போக்கின்றன. பல பேரைப் பிரமிக்க வைக்கப் போகிறாய். பல பேர் உன்னைப் பார்த்துப் பயப்படப் போகிறார்கள். கணக்கில்லாத செல்வம் உன்னிடம் சேரப்போகிறது. உன் கனவுகளை நோக்கி வேகமாக முன்னேறப் போகிறாய்…..” பார்த்து சொல்லிக் கொண்டே வந்தவன் திடீரென்று நிறுத்திக் கொண்டான்.

“ஏன் நிறுத்தி விட்டாய்?” என்று விஸ்வம் கேட்டான்.

“உனக்கு எதிராக சில சக்திகளும் உருவாகி வருவதும் தெரிகிறது. ஆனால் பார்வைக்கு உன் சக்திகளுக்கு இணையான சக்தியாகத் தெரியவில்லை. அதற்கு மேல் முடிவில் என்ன ஆகும் என்பது தெளிவாய் தெரியவில்லை”

“ஏனப்படி?”

“விதியே அதை இன்னமும் தீர்மானிக்கவில்லை போல இருக்கிறது. எல்லாம் மங்கலாய் இருக்கிறது”

மிகச் சுவாரசியமான துப்பறியும் கதை ஒன்றின் கடைசி அத்தியாயம் படிக்கக் கிடைக்காமல் போன அதிருப்தி விஸ்வத்தின் முகத்தில் தெரிந்தது. “முடிவைக் கொஞ்சம் கூர்மையாய் பார்த்து விட்டு தான் சொல்லேன்?”

“அது தான் மங்கலாய் இருக்கிறது என்றேனே. கவலைப்படாதே. எல்லாமே ஒரு மாறாத விதியின்படியே நடக்கிறது. அந்த விதி என்ன தெரியுமா? இரண்டு சக்திகளுக்குள் மோதல் வருமானால், இரண்டில் எது கூடுதல் சக்தியோ, எது அதிக சக்தியோ அது தான் எப்போதும் ஜெயிக்கும்….”

விஸ்வத்திற்கு அவனிடம் கேட்க நிறைய இருந்தது. ஆனால் அந்த ஜிப்ஸி போய் விட்டான். அதன் பின் விஸ்வம் அவனைப் பல இடங்களில் தேடினான். ஆனால் அவனைப் பார்க்க முடியவில்லை. ஆனால் விஸ்வம் அன்றிலிருந்து அடியோடு மாறிவிட்டான். ஜிப்ஸி சொன்ன வெற்றியின் மாறாத விதியை அவன் ஒரு கணம் கூட அதன் பின் மறந்ததில்லை. “இரண்டு சக்திகளுக்குள் மோதல் வருமானால், இரண்டில் எது கூடுதல் சக்தியோ, எது அதிக சக்தியோ எப்போதும் அது தான் ஜெயிக்கும்”

அதன் பின் சக்தி என்ற வார்த்தையே அவன் வாழ்க்கையின் தாரக மந்திரமாக இருந்தது. அதையே தேடினான். அதற்காகவே வாழ்ந்தான். அதைப் பெற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்தான். மனம், வாக்கு, செயல் எல்லாமே அந்த சக்திக்காகவே செயல்பட்டன. ஒரு சக்தியை  அடைந்த பின் அடுத்த சக்தியைத் தேடினான், அதற்காகவே வாழ்ந்தான்….. இப்படி ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு சக்தியாக அவன் சேர்த்து வைத்துக் கொண்டே முன்னேறினான்…..

(தொடரும்)
என்.கணேசன்