சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 18, 2018

இருவேறு உலகம் – 105


ர்ம மனிதனாகிய விஸ்வம் ஹரிணியின் வார்த்தைகளைச் சலனமே இல்லாமல் கேட்டான். ‘எனக்காக என் காதலன் என்ன வேண்டுமானாலும் செய்வான்’ என்று பெருமை பேசும் காதலியாக இல்லாமல், “எனக்காகக் கூட என் காதலன் சரியானதைச் செய்யாமல் இருக்க மாட்டான்” என்று வித்தியாசமாக பெருமைப்பட்ட ஹரிணியைப் பார்த்து அவன் மனோகரைப் போல் அசந்து விடவில்லை. பல வகை கிறுக்குகளில் இதுவும் ஒரு வகை என்று எண்ணியவன் அதையும் தான் பார்ப்போம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கவனத்தை அடுத்த விஷயத்திற்குத் திருப்பினான். சட்டர்ஜியிடம் இருந்து மின்னஞ்சலில் பதில் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்த்தான். வரவில்லை.

ஒரு எண்ணிற்குப் போன் செய்து சட்டர்ஜியின் மெயில் ஐடி தந்து இதைக் கடைசியாக எப்போது எங்கே திறந்து படித்திருக்கிறார்கள் என்றும் வழக்கமாக இந்த மெயில் எந்த ஊரில், எந்த இடத்திலிருந்து திறந்து பார்க்கப்படுகிறது என்றும் கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னான். நவீன விஞ்ஞான வளர்ச்சி அதைக் கண்டுபிடித்துச் சொல்லி விடும்….

அடுத்ததாக ஒரு எண்ணில் இருந்து போன்கால் வந்தது. உறுப்பினர் கூட்டத்தில் மாஸ்டர் பேசிய உணர்ச்சிகரமான பேச்சை அப்படியே பதிவு செய்திருந்த ஒலிபரப்பு வந்தது. அதை உணர்ச்சியே இல்லாமல் விஸ்வம் கேட்டான். தொடர்ந்து மூத்த துறவியும், கிருஷ்ணவேணியும் பேசியதும், பல உறுப்பினர்கள் ஆதரித்ததையும் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டான். இத்தனை காலம் அவரைக் கூர்ந்து கவனித்து வந்திருந்ததால் மாஸ்டர் கிட்டத்தட்ட இதைத் தான் செய்வார் என்று முன்பே கணித்திருந்தான். இந்தக் கட்டத்திலாவது அவர் ராஜினாமாவை வேறு வழியில்லாமல் ஏற்பார்கள், ஏதாவது ஒரு கிழத்திடம் தலைமைப் பதவி ஒப்படைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்த்தான். அது நடக்கவில்லை. ஒரு கிழவனும், கிழவியும் சேர்த்து அதைத் தடுத்து விட்டார்கள். க்ரிஷைப் போலவே மாஸ்டரும் அவன் வழியில் இருந்து விலகுவதாக இல்லை.     

யோசித்துப் பார்த்தால் மாஸ்டரின் வாழ்க்கையும், அவனுடைய வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருந்திருக்கிறது. மாஸ்டர் தன் பெற்றோரைப் பற்றி அதிகம் பேசியதில்லை. விஸ்வத்தின் பெற்றோரும் அவனைப் பெற்றதைத் தவிர வேறு பெரிதாகப் பேசும் அளவு எதையும் செய்து விடவில்லை. மாஸ்டரைப் போலவே விஸ்வமும் இளமையில் இலக்கில்லாமல் தான் சுற்றியிருக்கிறான். மாஸ்டர் குருவைச் சந்தித்த பிறகு வாழ்க்கை முற்றிலுமாக மாறி விட்டது. விஸ்வமும் தன் இளமைக்காலத்தில் ஒரு ஜிப்ஸியைப் பார்த்த பிறகு வாழ்க்கை ஒரேயடியாக மாறி விட்டது.

அந்த ஜிப்ஸி இளைஞனை அவன் சந்தித்தது ஒரு பெருமழைக்கால ஞாயிற்றுக்கிழமையில். தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த இருவரும் மழையில் இருந்து தப்பிக்க வேண்டி ஒரு பெரிய கட்டிட வாசலுக்கு ஓடி வந்தார்கள். ஞாயிறு அந்தக் கடைக்கு விடுமுறை என்பதால் கடை பூட்டி இருந்தது. இவர்கள் இருவரையும் தவிர அங்கு வேறு யாருமில்லை. அந்த ஜிப்ஸியின் கையில் கிதார் இருந்தது. மழை நிற்பதாகத் தெரியவில்லை. மெல்ல அந்த ஜிப்ஸி கிதாரை வாசிக்க ஆரம்பித்தான். இசை இனிமையாக இருந்தது. விஸ்வம் அந்த ஜிப்ஸியைப் பார்த்தபடி இசையைக் கேட்டுக் கொண்டு நின்றான்.

ஜிப்ஸியும் அவனைப் பார்த்துக் கொண்டே கிதார் வாசித்தான். ஆனால் அவன் பார்வை நிமிடத்துக்கு நிமிடம் கூர்மையாகியது. அவன் முகத்தில் ஆச்சரியம் அதிகமாக ஆரம்பித்தது. விஸ்வத்துக்குத் தன் தோற்றத்தில் என்ன வித்தியாசத்தைப் பார்த்து இந்த ஆள் ஆச்சரியப்படுகிறாரன் என்பது புரியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த ஜிப்ஸி கிதார் வாசிப்பதைக்கூட நிறுத்தி விட்டு அவனைப் பார்த்தான். விஸ்வத்துக்கு அந்த ஜிப்ஸி பைத்தியமாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. மழை தீவிரம் குறைந்திருந்தால் கூட அங்கிருந்து வேறு இடம் பார்த்து ஓடியிருப்பான்….
திடீரென்று அந்த ஆள் விஸ்வத்தின் பெயர், அம்மா, அப்பா பெயர் எல்லாம் சொல்ல ஆரம்பித்தான். சொல்ல ஆரம்பித்தான் என்பதை விட அவன் மேல் எழுதி இருந்ததைப் படிக்க ஆரம்பித்தான் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். பார்த்துப் படிப்பது போலத் தான் படித்தான். ஆனால் அவன் சொல்வது எல்லாம் சரியாக இருந்தது. பின் கடந்த கால நிகழ்வுகள் இரண்டைச் சொன்னான். அந்த இரண்டு நிகழ்வுகளும் அவன் மட்டுமே அறிந்திருந்த நிகழ்வுகள். அதுவும் சரியாக இருந்தது. பின் எதிர்காலம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.

“நீ எதிர்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவனாய் ஆகப் போகிறாய். பல அமானுஷ்ய சக்திகள் உன் வசமாகப் போகின்றன….. சக்திகளைப் பொறுத்த வரை நீ நிறுத்திக் கொள்வது தான் எல்லை…… “

விஸ்வம் நம்பவில்லை. உண்மையில் அவனுக்கு சிறு வயதில் இருந்தே மாயா ஜாலக்கதைகள் மிகவும் பிடிக்கும். அந்தக் கதைகளில் மந்திரவாதி சொன்னபடி எல்லாமே மாறுவது படிக்கப் பிடிக்கும். இது போல் நாமும் ஒரு மந்திரவாதியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று அவன் பலமுறை கற்பனைக்குதிரையைத் தட்டி விட்டிருக்கிறான்.  அப்படி இருக்கையில் கடந்த காலத்தில் நடந்ததையெல்லாம் சரியாகச் சொன்ன இந்த ஆள் எதிர்காலத்தில் பல அமானுஷ்ய சக்திகள் நம் வசமாகும் என்று சொல்கிறாரே என்ற எண்ணம் எதிர்பார்ப்பும், சந்தேகமும் கலந்த சிரிப்பை விஸ்வத்திடமிருந்து வரவழைத்தது. “எனக்கா? அமானுஷ்ய சக்தியா?” என்று சொல்லிச் சிரித்தான்.

“எதாவது வித்தியாசமாய் நடக்க ஆசைப்பட்டுச் சொல்லேன்” என்றான் அந்த ஜிப்ஸி.

விஸ்வத்துக்கு உடனே என்ன நினைப்பது என்று தெரியவில்லை. “இந்த மழை நிற்கட்டும்” என்றான். தீவிரமாய் பெய்து கொண்டிருந்த மழை வேகமாகக் குறைய ஆரம்பித்து ஒரு நிமிடத்தில் நின்றே விட்டது. விஸ்வத்திற்கே நம்ப முடியவில்லை. திகைத்து நின்றான்.

ஜிப்ஸி சொன்னான். “இது உனக்கு நிரூபிக்க மட்டும் நடந்த விஷயம். இனி நீ முறைப்படி அமானுஷ்ய சக்திகளைக் கற்றுக் கொண்டால் தான் ஒவ்வொன்றாய் உனக்குக் கிடைக்கும். ஆனால் நீ அதைச் சாதிப்பாய். உன் விதியில் அது தெரிகிறது..”

“என் விதியில் வேறென்ன தெரிகிறது?” விஸ்வம் ஆர்வத்துடன் கேட்டான்.

“நீ இது வரை கற்பனை செய்து வைத்திருந்த சக்திகள் எல்லாம் உனக்குக் கிடைக்கப் போக்கின்றன. பல பேரைப் பிரமிக்க வைக்கப் போகிறாய். பல பேர் உன்னைப் பார்த்துப் பயப்படப் போகிறார்கள். கணக்கில்லாத செல்வம் உன்னிடம் சேரப்போகிறது. உன் கனவுகளை நோக்கி வேகமாக முன்னேறப் போகிறாய்…..” பார்த்து சொல்லிக் கொண்டே வந்தவன் திடீரென்று நிறுத்திக் கொண்டான்.

“ஏன் நிறுத்தி விட்டாய்?” என்று விஸ்வம் கேட்டான்.

“உனக்கு எதிராக சில சக்திகளும் உருவாகி வருவதும் தெரிகிறது. ஆனால் பார்வைக்கு உன் சக்திகளுக்கு இணையான சக்தியாகத் தெரியவில்லை. அதற்கு மேல் முடிவில் என்ன ஆகும் என்பது தெளிவாய் தெரியவில்லை”

“ஏனப்படி?”

“விதியே அதை இன்னமும் தீர்மானிக்கவில்லை போல இருக்கிறது. எல்லாம் மங்கலாய் இருக்கிறது”

மிகச் சுவாரசியமான துப்பறியும் கதை ஒன்றின் கடைசி அத்தியாயம் படிக்கக் கிடைக்காமல் போன அதிருப்தி விஸ்வத்தின் முகத்தில் தெரிந்தது. “முடிவைக் கொஞ்சம் கூர்மையாய் பார்த்து விட்டு தான் சொல்லேன்?”

“அது தான் மங்கலாய் இருக்கிறது என்றேனே. கவலைப்படாதே. எல்லாமே ஒரு மாறாத விதியின்படியே நடக்கிறது. அந்த விதி என்ன தெரியுமா? இரண்டு சக்திகளுக்குள் மோதல் வருமானால், இரண்டில் எது கூடுதல் சக்தியோ, எது அதிக சக்தியோ அது தான் எப்போதும் ஜெயிக்கும்….”

விஸ்வத்திற்கு அவனிடம் கேட்க நிறைய இருந்தது. ஆனால் அந்த ஜிப்ஸி போய் விட்டான். அதன் பின் விஸ்வம் அவனைப் பல இடங்களில் தேடினான். ஆனால் அவனைப் பார்க்க முடியவில்லை. ஆனால் விஸ்வம் அன்றிலிருந்து அடியோடு மாறிவிட்டான். ஜிப்ஸி சொன்ன வெற்றியின் மாறாத விதியை அவன் ஒரு கணம் கூட அதன் பின் மறந்ததில்லை. “இரண்டு சக்திகளுக்குள் மோதல் வருமானால், இரண்டில் எது கூடுதல் சக்தியோ, எது அதிக சக்தியோ எப்போதும் அது தான் ஜெயிக்கும்”

அதன் பின் சக்தி என்ற வார்த்தையே அவன் வாழ்க்கையின் தாரக மந்திரமாக இருந்தது. அதையே தேடினான். அதற்காகவே வாழ்ந்தான். அதைப் பெற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்தான். மனம், வாக்கு, செயல் எல்லாமே அந்த சக்திக்காகவே செயல்பட்டன. ஒரு சக்தியை  அடைந்த பின் அடுத்த சக்தியைத் தேடினான், அதற்காகவே வாழ்ந்தான்….. இப்படி ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு சக்தியாக அவன் சேர்த்து வைத்துக் கொண்டே முன்னேறினான்…..

(தொடரும்)
என்.கணேசன் 

4 comments:

  1. I am beginning to admire the villain in the same way I admire Krish and Master. A classic novel sir.

    ReplyDelete
  2. அப்பாடா...!! ஒரு வழியாக 105வது பகுதியில் மர்ம மனிதன் வெளியே வந்துட்டான்...
    இதுவரை மர்ம மனிதன் என்றே படித்து பழகிப் போன ஒரு சக்திசாலியை... இப்போது கணக்குகளை பார்க்கும் விஸ்வம் என்று படிக்கும் போது...ஆச்சரியமாகவும்... நம்ப கடினமானதாகவும் உள்ளது...

    ReplyDelete
  3. “ மர்ம மனிதனாகிய விஸ்வம் ....”
    ஒரு வழியா மர்மம் விலகிவிட்டது.....
    நம்பூத்திரியாலும் கணிக்க முடியவில்லை....
    ஜிப்ஸியாலும் சொல்ல முடியவில்லை...
    அது எதனால் என்று யோசிக்கவும் தவறிவிட்டான்...
    தன் அதீத சக்தியில் நம்பிக்கை கொண்டு....
    க்ரிஷின் வருகைக்காக வெயிட் டிங் .....

    ReplyDelete
  4. அந்த ஜிப்ஸி தான் பூமியை ஆக்கிரமிக்க நினைக்கும் வேற்று கிரக சக்தியோ???

    ReplyDelete